16. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜

4.7
(92)

முள் – 16

எவ்வளவு நேரம்தான் ஒருவரின் முகத்தை மற்றையவர் பார்க்காது ஆளுக்கு ஒரு திசையில் அமர்ந்திருப்பது..?

இரு நாடுகளின் எல்லையில் வேறு வேறு நாட்டின் போர் வீரர்கள் அமர்ந்திருப்பதைப் போலத்தான் இருந்தது அவர்கள் அமர்ந்திருந்த நிலை.

அவர்கள் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தால் காலமும் அசையாமல் நின்று விடுமா என்ன..?

நேரம் மணித்துளிகளாக கரைந்து கொண்டே இருக்க இரவும்தான் நெருங்கியது.

இனி அமைதியாக இருந்தால் இன்று இரவு முழுவதும் இப்படியேதான் அமர்ந்திருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டவள் மெல்ல எழுந்து அவன் முன்பு வந்து நின்றாள்.

“மா…” மாமா என அழைக்க வந்தவள் சட்டென அப்படியே அந்த வார்த்தையை விழுங்கிக் கொண்டாள்.

“நைட் டின்னருக்கு என்ன சாப்பாடு செய்யட்டும்..?” என அவள் தயக்கமான மெல்லிய குரலில் கேட்க,

எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் என்ன கேட்டாள் என்றே புரியவில்லை.

அவளை நிமிர்ந்து பார்த்தவன்,

“என்னமா கேட்ட..? சாரி நான் கவனிக்கல..” என அவன் மீண்டும் அவள் கூறிய வார்த்தைகளை செவிமடுக்கும் பொருட்டு கேட்க,

“இல்லங்க.. அது நைட் டின்னருக்கு என்ன செய்யட்டும்னு கேட்டேன்..?” என்றாள் அவள்.

அவளுடைய மாமா என்று அழைப்பு மறைந்து போனதை உணர்ந்து கொண்டான் அவன்.

ஏன் எதற்கு என்றெல்லாம் அவனுக்குக் கேட்கத் தோன்றவில்லை.

“உன்னால பண்ண முடியுமா..? இல்லனா ஹோட்டல்ல ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா..?” எனக் கேட்டான் அவன்.

“இல்லங்க ஹோட்டல் சாப்பாடு எல்லாம் வேணாம்.. என்னால வீட்லையே பண்ண முடியும்.. உங்களுக்கு சப்பாத்தியும் கிழங்கு பிரட்டலும் பிடிக்கும்ல..? அதையே பண்ணிடுறேன்..” என்றவள் எங்கே அவன் மறுத்து விடுவானோ என வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்து கொள்ள அவனுக்குத்தான் அதிர்ச்சியாக இருந்தது.

தனக்கு சப்பாத்தியும் கிழங்கு பிரட்டலும் பிடிக்கும் என்று இவளுக்கு எப்படித் தெரியும் என ஒரு நொடி சிந்தித்தவன் பின் மதி கூறியிருப்பாள் என்ற முடிவை எடுத்துக் கொண்டான்.

சாஹித்யாவுடன் சில விடயங்களைப் பற்றி பேசி தெளிவான முடிவை எடுத்துக் கொள்ள வேண்டும் என அவனுடைய மனம் அறிவுறுத்தியது.

அவளோ சப்பாத்தியை பிசைந்து சிறியதாக உருட்டி எடுத்துக் கொண்டிருக்க சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டவன் “எதுக்காக இன்னைக்கு எதுவும் பேசாம இந்தத் தாலியை வாங்கிக்கிட்ட..? நீயே தாலி வேணாம்னு உங்க அம்மாகிட்ட சொல்லி இருக்கலாமே..?” எனக் கேட்டான்.

“நான் சொன்னா மட்டும் அம்மா சரின்னு சொல்லிடவா போறாங்க..? நீங்க சொன்னதால நிதானமா இருந்தாங்க.. இதையே நான் சொல்லி இருந்தா அவ்வளவுதான் அடி வெளுத்து இருப்பாங்க.. அதனாலதான் பயத்துல அமைதியா இருந்துட்டேன்…” என்றாள் அவள்.

“எனக்கு என்னவோ இதெல்லாம் சரியா படல சாஹிம்மா.. இதெல்லாம் உன்னோட எதிர்காலத்துக்கு தடைக்கல்லா மாறிடக் கூடாது..”

“எல்லாமே இப்போதான் சரியா போய்கிட்டு இருக்கு. நீங்க எத நினைச்சும் கவலைப்படாதீங்க.. இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.. எல்லாத்தையும் நான் சரி பண்ணிடுவேன்.. ப்ராமிஸ்..” என உறுதியாகக் கூறியவளின் விழிகளை ஆழ்ந்து பார்த்தவன்,

“எதுக்கு இப்போ மாமான்னு கூப்பிடுறத நிறுத்திட்ட..?” எனக் கேட்டான்.

“அப்படிக் கூப்பிடணும்னு எனக்குத் தோணலைங்க.. அப்படி கூப்பிடும் போதெல்லாம் எங்க அக்காவோட ஞாபகம்தான் அதிகமா வருது.. கஷ்டமா இருக்கு.. அதனால இனி மாமான்னு கூப்பிடக் கூடாதுன்னு நானே முடிவு பண்ணிகிட்டேன்..” என சுருக்கமாக முடித்துக் கொண்டாள் அவள்.

“ஓஹ்…”

“ம்ம்…”

“இவ்வளவு நாளும் உன்னைச் சின்ன பொண்ணுன்னு நினைச்சேன்.. பட் இப்போ நீ நடந்துக்கிறத பார்த்தா அப்படி தெரியவே இல்லை..” என்றான் அவன்.

அவனைப் பார்த்து வேதனையுடன் சிரித்தாள் அவள்.

“நான் ஒருத்தர லவ் பண்ணுறேன்னு சொன்னதால என்ன தப்பா நினைக்கிறீங்களா..?”

“நோ… அப்படி எல்லாம் இல்ல.. நான் ஒன்னும் காதலுக்கு எதிரி கிடையாது…” என்றான் அவன்.

“ம்ம்… நான் மட்டும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லி இருந்தா போன வருஷமே என்ன ஒருத்தன் கையில பிடிச்சு கொடுத்துருப்பாங்க… நான்தான் இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லி தடுத்துக்கிட்டிருந்தேன்.

“ஓஹ்..? உன்னோட பாய் ஃப்ரெண்ட் பேர் என்ன…?” என அவனிடமிருந்து அடுத்த கேள்வி வந்தது‌

சப்பாத்தியை உருட்டிக் கொண்டிருந்த அவளுடைய கரங்களோ அப்படியே அசைவற்று நின்றுவிட்டன.

திணறிப் போனாள் அவள்.

“இப்போ எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுறம்மா..? பேருதானே கேட்டேன்.. என்கிட்ட சொல்லக் கூடாதுன்னு நினைக்கிறியா..?”

“ஆ.. ஆமா.. ஐயோ.. இ… இல்ல… இல்லையே.. அப்படி எல்லாம் இல்லையே.. அவர் பேரு… ஹாங் ஆகாஷ்..”

“ஆகாஷ்… நைஸ் நேம்..”

“தே… தேங்க்ஸ்…” அவளுக்கோ வியர்க்கத் தொடங்கி விட்டது.

“சாஹிம்மா..?”

“சொ.. சொல்லுங்க..”

“அவர் உயிரோடு இருக்காரா இல்லையான்னு தெரியலையேனு சொன்னியே.. இத்தனை வருஷமா உனக்கு ஒரு கால் கூட பண்ணலையா..?”

“இ…இல்லையே.. ஒருவேளை ஆக்சிடென்ட்ல அவருக்கு மெமரி லாஸ் ஆகி இருக்குமோ..?” என அவனைப் பார்த்து கேள்வி கேட்டாள் அவள்.

“எனக்கு எப்படித் தெரியும்..?” என்றான் அவன்.

“ஆமால்ல..? எனக்கும் தெரியாதுங்க.. இனித்தான் கண்டு பிடிக்கணும்..”

“ம்ம்.. நீ சொன்ன பிளைட் ஆக்சிடென்ட் பத்தி நான் கேள்விப்படவே இல்லையே..

கனடாவுக்கு போற எந்த பிளைட்..? எப்போ ஆக்சிடென்ட் ஆச்சு..?” என அவன் அடுத்த கேள்வியைக் கேட்டதும்

“அது.. அது வந்து அதெல்லாம் மறந்து போச்சுங்க.. மூணு வருஷம் ஆச்சுல்ல..?” தடுமாறினாள் அவள்.

“சரி அவனோட வீட்டு அட்ரஸ் தெரியுமா..?”

“ம்ஹூம்…. தெரியாது..”

“உன்னோட பாய்ஃப்ரண்ட்டோட பேரன்ட்ஸ் இல்லைன்னா பிரண்ட்ஸ் யாரையாவது தெரியுமா..?”

மீண்டும் கேள்விகளால் அவளைக் குடைந்தான் அவன்.

அவ்வளவுதான் தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டாள் அவள்.

அவனோ பதறிப் போனான்.

“ஹேய் என்ன ஆச்சு பாப்பா..? எதுக்கு இப்போ அழுற..?”

“நானே எவ்ளோ கஷ்டத்துல இருக்கேன்.. நீங்க என்னடான்னா ஒவ்வொரு கேள்வியா கேட்டு என்னை இன்னும் இன்னும் கஷ்டப்படுத்திக்கிட்டே இருக்கீங்களே.. பழசு எல்லாம் நினைக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. இப்படி திடீர்னு கேள்வி கேட்டா நான் எப்படி பதில் சொல்லுவேன்.. எனக்கு யோசிக்கவாவது டைம் கொடுக்கலாமே..?”

“வாட்…?”

“அது.. அது ஹாங்… என்னால தாங்கிக்கவே முடியல.. இப்படி எல்லாம் கேள்வி கேட்டா என்னால எப்படி பதில் சொல்ல முடியும்..?” என்றவள் சப்பாத்தி பிசைந்த கையால் தன் முகத்தைத் துடைத்து விட,

அவளுடைய ஒரு பக்க கன்னம் முழுவதும் சப்பாத்தி அப்படிக் கொண்டது.

“ப்ச்.. இதுக்கெல்லாம் அழலாமா..? உன் பாய்பிரண்டை பத்தி தெரிஞ்சாதானே அவர் கூட உன்னை சேர்த்து வைக்க முடியும்.. எதுவுமே தெரியாம என்னால எப்படி அவரைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும்..? அதனாலதான் உன்கிட்ட அவரைப் பத்தி கேட்டுட்டு இருக்கேன்.. உன் மனசு திப்படுத்திக்கோ சாஹி.. நாம எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும்..” என்றவன் தன் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்து அவளுடைய கன்னத்தைத் துடைக்க வந்தவன் பின் தயங்கி நின்று அவளுடைய கரத்தில் கைகுட்டையைத் திணித்தான்.

“கன்னம் முழுக்க மாவு அப்பிக் கிடக்கு.. முதல்ல நல்லா துடைச்சுக்கோ..” என்றவன் அவள் கையில் இருந்த பூரிக்கட்டையை வாங்கி இவன் சப்பாத்தியை உருட்டத் தொடங்க விலகி நின்று கண்களைத் துடைத்துக் கொண்டவளுக்கு அப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு வெளியேறியது.

அதன் பின்னர் இருவரும் உணவை உண்டு முடித்துவிட்டு மீண்டும் அமைதியாக ஹாலில் அமர்ந்து கொண்டனர்.

சாஹித்யாவின் மடியில் இருந்த குழந்தையோ தன்னுடைய பிஞ்சு விரல்களால் அவளுடைய முகத்தில் கோலம் போடுவதும் அவளுடைய முகத்தைப் பார்த்து சிரிப்பதும் அம்மா என்று சிணுங்குவதுமாக விளையாடிக் கொண்டிருக்க இவனுக்கோ மனம் பிசைந்தது.

குழந்தையை இவளின்றி வளர்க்கப் பழக வேண்டும் என்ற முடிவோடு அவளுடைய கரத்தில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டவன்,

“சாஹி பாப்பா நீ அந்த ரூம்ல படுத்துக்கோ.. நானும் பாப்பாவும் இந்த ரூம்ல படுத்துக்கிறோம்..” என்றான்.

“உங்களுக்கு நானும் பாப்பா.. அவளும் பாப்பாவா..?” என ஆழ்ந்து பார்த்தவாறு கேட்டாள் சாஹித்யா.

என்ன கேள்வி இது என்பது போல சற்றே சீற்றமாக அவளைப் பார்த்தவன் பின்பு தன்னை நிதானப்படுத்திக் கொண்டவனாய் “போய் தூங்கு..” என்றான்.

அவன் காட்டிய வான்மதியின் அறைக் கதவை நோக்கிச் சென்றவள் கதவைத் திறந்ததும் அங்கு இறந்த கிடந்த தன் அக்காவின் உருவம் மீண்டும் தெரிவது போல கற்பனை தோன்ற அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்துவிட்டாள்.

அவளுடைய சத்தத்தில் என்னவோ ஏதோ எனப் பதறி அவளை நெருங்கி வந்தவன்,

“என்னம்மா என்ன ஆச்சு..?” என குறையாத பதற்றத்தோடு கேட்க,

“என்னால அக்கா ரூம்ல தூங்க முடியாது.. நான் இதுவரைக்கும் தனியா தூங்கினதே கிடையாது.. அக்கா கூடதான் தூங்குவேன்… எங்க வீட்ல இருந்தா அம்மா கூட தூங்குவேன்.. அந்த ரூமுக்குள்ள போனாலே அக்கா கயித்துல தொங்கிக்கிட்டு இருந்ததுதான் மைண்ட்ல வருது.. என்னால அங்க தூங்க முடியாது..” என விழிகளில் பயத்தோடு அவள் உறுதியாக மறுத்து விட,

அவளுக்கு நீரை எடுத்துப் பருகக் கொடுத்தவன்,

“சரி வா.. நீ தனியா தூங்க வேணாம்… நீயும் பாப்பாவும் இந்த ரூம் பெட்ல படுத்துக்கோங்க.. நான் சோபால படுத்துக்கிறேன்..” என்றதும் அவளுக்கு குற்ற உணர்ச்சியாகிப் போனது.

“இல்லங்க.. பாப்பா நடுவுல படுத்துக்கட்டும்.. நீங்க பாப்பாக்கு அந்தப் பக்கம் படுத்துக்கோங்க.. நான் இந்தப் பக்கம் படுத்துக்கிறேன்.. எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது..”

“இல்ல அது சரியா இருக்காது..” என தயங்கியவனின் மீது அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.

“என்னால தனியா தூங்க முடியாது புரிஞ்சுக்கோங்க..” என அவள் மீண்டும் கெஞ்ச வேற வழி இன்றி குழந்தையை இருவருக்கும் நடுவில் கிடத்தி விட்டு மறுபக்கம் படுத்துக் கொண்டவனுக்கு உறக்கம் தொலைந்து போனது.

💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 92

No votes so far! Be the first to rate this post.

1 thought on “16. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!