17. சிறையிடாதே கருடா

4.9
(18)

கருடா 17

காலை எழுந்ததுமே அன்னையை நோக்கி ஓடினாள் ரிது. அவளுக்கு முன்னதாக அவள் கணவன் அங்கு இருக்க, சின்னப் புன்னகையோடு அவன் தோள் மீது கை வைத்தாள். திரும்பி முகம் பார்த்தவனும், அந்தச் சிரிப்பைக் கொடுத்து,

“கிளம்பலாமா?” கேட்டான்.

“கொஞ்ச நேரம் பேசிட்டு வரவா…”

“பர்மிஷன் கேட்கணுமா?”

கனிவாகச் சிரித்தவள் ராதாவின் பக்கத்தில் அமர, கட்டியவளின் முகத்தில் தோன்றும் நிம்மதியில் மனம் நிறைந்தவன் காத்திருந்தான். அரை மணி நேரம் பேசிவிட்டுக் கிளம்பினாள்.

“நம்ம ஃபேக்டரிக்குப் போகணும்.”

“போகலாமே!” என்றவன் கார் கதவைத் திறந்து, “உட்காரு!” என்க, ஓட்டுநர் இருக்கையில் அமரச் சொல்வதால் குழம்பிப் பார்த்தாள்.

“இன்னைக்கு நீதான் டிரைவ் பண்ணப் போற.”

“விளையாடுறியா?”

“நிஜமாதான் சொல்றேன். இன்னைக்கு மட்டுமில்ல, இனிமே நீதான் ஓட்டப் போற.”

“என்னால முடியாதுன்னு தெரிஞ்சும் எதுக்கு இதெல்லாம் பண்ற?” என்றவளின் தோள் மீது கை போட்டவன், “உன்னால முடியாதுன்னு யார் சொன்னது? உன் இடத்துல நான் இருந்திருந்தா இந்த அளவுக்கு மீண்டு வந்து, இவ்ளோ சொத்துக்களையும் ஒத்த ஆளாய் பாதுகாத்து இருக்க மாட்டேன். உன் தைரியத்துக்கு முன்னாடி இது ஒண்ணுமே இல்ல.” என்றான்.

“இந்த சீட்ல உட்கார்ந்தா இருக்கற தைரியம் போயிடும்.”

“போகாது!”

“ப்ளீஸ்!” என நகரப் பார்க்கும் ரிதுவை இறுக்கமாகப் பிடித்தவன், “நிறையத் தடவை இவளுக்குப் பயமே இருக்காதான்னு தேடி இருக்கேன். அந்தத் தேடுதலுக்கான விடையை எனக்கு மட்டும் இல்ல, யாருக்கும் நீ கொடுக்கக் கூடாது. உன்னோட பலவீனத்தை மத்தவங்களோட பலமா மாத்திடாத. என் முதலாளி, எல்லாத்துலயும் கம்பீரமா இருக்கணும்னு ஆசைப்படுறேன். எனக்காக ஒரே ஒரு தடவை ட்ரை பண்ணு.” என்றவனுக்காக முயற்சி செய்ய நினைத்தாலும், பயம் ஆட்கொல்லி மருந்தாய் அவளை ஆக்கிரமித்தது.

அவள் நிலை புரிந்து ஆதரவாகத் தட்டிக் கொடுத்தவன், “என் மேல நம்பிக்கை இருக்குல்ல.” கேட்க, அவனைப் பார்த்துக் கொண்டே மெதுவாகத் தலையசைத்தாள்.

“நான் கூட இருக்க வரைக்கும் உனக்கு எதுவும் ஆகாது.”

“பயமா இருக்கு!”

சின்னதாகச் சிரித்தவன், அவள் தாடையில் கை வைத்து, “அந்தப் பயத்தை இன்னையோட விரட்டி அடிக்கணும்.” என ஓட்டுநர் இருக்கையில் அமர வைத்துப் பக்கத்தில் அவனும் அமர்ந்து கொண்டான்.

மனம் வராது நடுக்கத்தோடு அமர்ந்திருக்க, “இப்ப நான் உன் பக்கத்துல இருக்கேன். என்னை நல்லபடியா ஃபேக்டரிக்குக் கொண்டு போக வேண்டியது உன்னோட கடமை!” என்றவன் அவள் முகத்தை நெருங்கி, “நல்லா ஞாபகம் வச்சுக்கோ ரிது‌. நீ உனக்காக ஓட்டல, எனக்காக…” என்றதும் கண்மூடி நிதானத்தைக் கொண்டு வந்து காரை இயக்கினாள்.

தளர்வாக இருக்கையில் சாய்ந்து கொண்டவன், அவள் இருக்கும் பக்கம் தலையைத் திருப்பிக்கொண்டு புன்னகையோடு அமர்ந்து வர, தன்னவன் தன் மீது வைத்த நம்பிக்கைக்கும், அவன் நலனுக்கும், பயத்தை விரட்டி அடித்துத் தைரியத்தைப் பரிசாகக் கொடுத்தாள்.

காரை நிறுத்தியவள், தன்னைத்தானே அதிசயமாகப் பார்த்துக் கொண்டு தன்னவனைப் பார்க்க, “அவ்ளோதான்! இனி டெய்லி நீதான் டிரைவ் பண்ணனும். நாளைக்குக் காலைல டான்னு டிரைவர் சீட்ல உட்காரனும்.” என்றவனை எவ்வளவு நேரம் ரசித்தாளோ!

***

“ஹலோ!”

“ரவி, இப்ப எங்க கஸ்டடில.”

“ஓகே சார். லொகேஷன் ஷேர் பண்ணுங்க, நான் வந்துடறேன்.”

கைபேசியைத் துண்டித்தவள் முன் அமர்ந்த பொன்வண்ணன், “எதுக்குமா வரச் சொல்லி இருந்த?” கேட்டார்.

“நம்ம இன்ஸ்டிடியூட் பத்திக் கொஞ்சம் பேசணும்பா…”

மகளின் வார்த்தைக்கு அமைதியாக அமர்ந்திருக்க, “அங்க படிக்கிற ஸ்டூடென்ட்ஸ்க்கு நிறையப் பிராப்ளம் இருக்கு. டீச்சர்ஸ் ரொம்பக் கடுமையா நடந்துக்கிறாங்கன்னு சொல்றாங்க. ரவி நிறையப் பேர்கிட்டக் காசு வாங்கி இருக்கான். அதைப் பத்தின டீடெயில்ஸ் அங்க இருக்க ப்ரொபசர்ஸ்க்கு கூடத் தெரியல. ஆனா, ஸ்டூடென்ட்ஸ்க்குத் தெரிஞ்சிருக்கு. எல்லாத்தையும் விட, அன்னன்னைக்கு எடுக்க வேண்டிய சிலபஸை எடுக்காமல் ரொம்ப இழுக்குறாங்கன்னு கம்ப்ளைன்ட் பண்றாங்க.” சுருக்கமாக, டிடெக்டிவ் ஏஜென்ட் சொல்லியது முதல் கொண்டு அனைத்தையும் தெரிவிக்க,

“இவ்ளோ பிரச்சினை நடக்கிற வரைக்கும் என்னம்மா பண்ணிட்டு இருந்த.” கேட்டார்.

“சாரிப்பா. இது முழுக்க முழுக்க என்னோட தப்பு தான். கடைசியா ஒரு வாய்ப்புக் கொடுங்க. இந்த மாதிரி எதுவும் நடக்காம பார்த்துக்கிறேன்.”

“இனிமே நடக்காமல் பார்த்துப்ப. நடந்ததை எப்படி மாத்தப் போற? உன்னோட அலட்சியத்தால ஒருத்தன் உயிருக்குப் போராடி மீண்டு வந்திருக்கான். ஒருத்தன் செத்தே போயிருக்கான். இதுதான் நீ பார்த்துக்கிற லட்சணமா?”

“என்னமோ, நான்தான் எல்லாமே பண்ண மாதிரிப் பேசுறீங்க. இது ஒன்னு மட்டும் நம்ம பிசினஸ் கிடையாது. இதுல வர லாபம் ரொம்பக் கம்மி. அதிக லாபம் வரதைப் பார்க்குறதை விட்டுட்டு, இது பின்னாடி சுத்திட்டு இருக்க முடியுமா?”

“இதை நான் லாபத்துக்காகப் பண்ணல, என் மனைவியோட ஆசைக்காக உருவாக்குனது.”

“இப்ப என்ன ஆகிப்போச்சு? வேற ஒரு ஆளை அப்பாயிண்ட் பண்ணி எல்லாத்தையும் சரி பண்ணிட்டால் போச்சு. செத்தவனுக்கும், மீண்டவனுக்கும் காசு கொடுத்துச் செட்டில் பண்ணிடறேன். அந்த ரவியை எப்படி டீல் பண்ணனுமோ அப்படி டீல் பண்ணிக்கிறேன்.”

இவ்வளவு தவறு நடந்தும், சிறிதும் உணராது மிதப்பாகப் பேசும் மகளைக் கண்டு எரிச்சல் உற்றவர், “இனியும் உன்னை நம்பி இந்த இன்ஸ்டிட்யூட்டை குடுக்க நான் தயாரா இல்லை. இதை எப்படிப் பார்த்துக்கணுமோ, அப்படிப் பார்த்துக்கிறேன்.” என அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே,

“நினைச்சேன். இதைத் தூக்கி உங்க மருமகன் கையில கொடுக்கப் போறீங்க, அதான…” பொன்வண்ணனின் வாயை அடைத்தாள்.

அதுவரை, இப்படியான யோசனைப் பக்கம் திரும்பாதவர், நேர்மையான மருமகன் கையில் இதைக் கொடுத்தால் எப்படி இருக்கும் எனச் ‌சிந்தித்துக் கொண்டிருக்க, இப்படிச் சிந்திப்பதற்காகவே விஷயத்தைக் கூறி வார்த்தையால் தூண்டில் போட்டவள்,

“இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். இது என்னோட சொத்து! எவனோ ஒரு பரதேசிய அனுபவிக்க விடமாட்டேன். அவன் கையில மட்டும் இதைக் குடுத்தீங்க, என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.”

“என் மருமகன் கையில தான் கொடுக்கப் போறேன். இத்தனை நாள் உன்னை நம்பி இந்தப் பக்கம் வராமல் இருந்தது பெரிய தப்பு. அந்தத் தப்பை இனியும் பண்ண மாட்டேன். இதுல மட்டும்தான் இந்த லட்சணமா? இல்ல மத்த எல்லாத்துலயும் இதே தானான்னு தெரியல. எல்லாத்தையும் என் மருமகன் கையில கொடுக்கிறதுக்கு முன்னாடி நீயே சரி பண்ணப் பாரு.” என்றதும்,

“அவன் இங்க வரக்கூடாது. வந்தா, சும்மா விடமாட்டேன்.” எனக் கத்த, காதில் வாங்காமல் அவர் பாட்டுக்குச் சென்று விட்டார்.

அவர் உருவம் மறையும் வரை புலம்பிக் கொண்டிருந்தவள், சின்னச் சிரிப்போடு பேனாவைக் கையில் சுழற்றிக் கொண்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள். விறுவிறுவெனக் கார் பார்க்கிங் நடந்து வந்தவர், “உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.” என்றார்.

அவர் முகத்தில் தெரியும் கோபத்தைக் கண்டு, அமைதியாகப் பின்னால் சென்றவனைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றவர் விருப்பத்தைக் கூற, மறுத்து விட்டான்.

“பல பேரோட எதிர்காலம் இதை நம்பித்தான் இருக்கு. இதுவரைக்கும், இங்க படிச்ச எத்தனையோ பேர் நல்ல இடத்துல வேலை பார்க்கிறாங்க. அப்படிக் கட்டிக் காப்பாத்தின பேரைக் காத்துல விடத் தெம்பு இல்ல. உன்னைத் தவிர இதை யாரு நிர்வாகம் பண்ணாலும் சரியா நடக்காது. எனக்காக இதை எடுத்து நடத்து.”

“இது உங்களோட பிரச்சினை சார். உங்க பொண்ணு என்னை டிரைவரா உட்கார வச்சு, இங்க இருக்குறவங்க முன்னாடி எல்லாம் ரொம்ப அவமானப்படுத்தி இருக்கா. இதே இடத்துல எப்படி வேலை பார்க்க முடியும்? அதுவுமில்லாம, ஏற்கெனவே மட்டமாப் பேசிட்டு இருக்க உங்க பொண்ணு, இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்ப மட்டமாப் பேசுவா…”

“இதை என் மருமகன் கையில கொடுக்கணுமா? மகள் கையில கொடுக்கணுமான்னு நான் தான் முடிவு பண்ணனும். அவளைப் பத்தி யோசிக்காமல் சம்மதம் சொல்லுப்பா…” என்ற பின்னும் அவன் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்க,

“உன் தம்பிக்காகத் தான இவ்ளோ போராட்டம் பண்ணிட்டு இருக்க. இங்க படிக்கிற பசங்களும் அப்படித்தான் உனக்கு. தம்பியக் காப்பாத்துன மாதிரி இவங்களையும் காப்பாத்து.” கோரிக்கை வைத்தார்.

“இங்க இருந்து போற வரைக்கும் பார்த்துக்கிறேன் சார்…” அரை மனதோடு சம்மதிக்க, மன நிம்மதி அடைந்தவர் மருமகனின் கை குலுக்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

***

மாமனார் சொல்லிவிட்டுச் சென்றதை யோசித்தவாறு நீச்சல் குளம் அருகில் நடந்து கொண்டிருந்தான் கருடேந்திரன். அவனைத் தன் அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ரிது. நேரடியாகச் சொன்னால் மறுப்பான் என்பதற்காகத்தான் மாமனாரைத் தூது விட்டாள். அதுவும் இல்லாமல், தந்தை முன் தன்னவனுக்காக இறங்கிப் போவது போல் காட்ட விருப்பமில்லை அவளுக்கு. விருப்பமில்லை என்பதைத் தாண்டித் தந்தையானவருக்கு, தங்களுக்குள் நடக்கும் எதுவும் தெரியக்கூடாது என நினைக்கிறாள்.

இதில் இவளுக்கு இரட்டை லாபம். பல மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஆணிவேராக இருக்கும் பயிலகத்திற்கு, இவன் போன்ற ஒருவன் தான் சரி. மெல்ல அவனை நேசிப்பதை உணர்ந்தவள், மேலே உயர்த்தி வைக்க ஆசை கொள்கிறாள்.‌ இரண்டிற்கும் நடுவில், அவனின் விருப்பம் முக்கியம் என்பதால் அவனிடமே அதைக் கொடுத்திருக்கிறாள். எப்படியாவது இதற்குள் அவனை அழைத்து வந்து விட்டால், கொஞ்சம் கொஞ்சமாக அனைத்திலும் ஈடுபட வைத்துவிடலாம் என்ற எண்ணம்.

மாமனாருக்காகச் சம்மதம் சொன்னானே தவிரச் சிறிதும் பிடித்தம் இல்லை. அதுவும் இல்லாமல், படித்த படிப்பிற்கான வேலை இல்லை என்றாலும், கன்னியப்பனை விட மனமில்லை. போதாக் குறைக்கு இந்த வாழ்க்கை இன்னும் எத்தனை நாளைக்கோ, அப்படி இருக்க ஏன் இந்த வேண்டாத சுமை என்று எண்ணிக் கொண்டிருக்கிறான்.

எத்தனை முறை யோசித்தாலும், இந்தப் பொறுப்பு வேண்டாம் என்றுதான் மனம் சொல்லியது. நேராக மாமனாரிடம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவிக்க, அவன் கைப்பிடித்த பொன்வண்ணன்,

“உன்னை என் மருமகனாய் பார்க்கல. என் குடும்பத்தைக் காப்பாத்த வந்த சாமியாப் பார்க்கிறேன். ஸ்டூடென்ட்ஸ் எழுதிக் கொடுத்த லெட்டரைப் படிக்கப் படிக்க பக்குனு இருக்கு. நீ அங்க சும்மா வேலை பார்க்க வேண்டாம். உழைப்புக்கேத்த ஊதியத்தை வாங்கிக்க. ஆனா வேண்டான்னு மட்டும் சொல்லிடாத. நாளைக்கே என் பொண்ணுக்கும், உனக்கும் எதுவும் இல்லன்னு ஆகிட்டால் கூட நீதான் அதைப் பார்த்துக்கணும். நம்பிக்கை இல்லன்னா சொல்லு, இப்பவே அதை உன் பேருக்கு மாத்தித் தரேன்.” என்றதும்,

“நான் போறேன் சார்…” என்றான்.

“மாமான்னு சொன்னா நல்லா இருக்கும்!”

வெளிவராத புன்னகையோடு, “சரிங்க மாமா…” என்றிட, தன் புன்னகையை வெளிச்சம் போட்டுக் காட்டினார் ரிதுவின் தந்தை.

***

யாருக்கும் தெரியாமல் ரவியை அடைத்து வைத்திருக்கும் இடத்திற்குச் சென்றவள், அங்கங்கே இரத்தக் காயங்களோடு முகம் வீங்கி அமர்ந்திருக்கும் அவன் முன்பு நின்றாள். இதுவரை, தன்னைக் கடத்தியது ரிது என்று அறியாதவன் கத்திக் கூச்சலிட்டான். அந்தக் கூச்சலுக்கு எந்தப் பிரதிபலிப்பையும் கொடுக்காதவள்,

“ஈவு, இரக்கம் பார்க்காதீங்க சார். எப்படிப் பண்ணா, உண்மையச் சொல்லுவானோ, அப்படிப் பண்ணுங்க. ஒருவேளை, இவன் செத்துட்டால் கூடப் பிரச்சினை இல்லை. இதனால உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராம நான் பார்த்துக்கிறேன்.” என்றாள்.

ரிதுவின் வார்த்தையைக் கேட்ட ரவி, “அப்படி எதுவும் பண்ணிடாதீங்க மேடம். எனக்கும் குடும்பம் இருக்கு. எதுவா இருந்தாலும் சட்டப்படி பார்க்குறது தான் சரி. இந்த விஷயம் மட்டும் வெளிய தெரிஞ்சா உங்க வாழ்க்கையே போயிடும்.” என்றிட, இப்போதும் எந்த முகபாவனையும் கொடுக்காதவள்,

“பார்த்துக்கலாம்!” என்று விட்டு நகர, மரண பயத்தில் கத்திக் கொண்டிருந்தான் ரவி.

அங்கிருந்து வெளியில் வந்தவள் ஒருவரை அழைத்து, “நான் சொன்னதை ரெடி பண்ணிட்டீங்களா?” விசாரிக்க,

“எல்லாம் ரெடியா இருக்கு மேடம்!” என்றார்.

“ம்ம். கொஞ்சம் கூட மிஸ் ஆகிடக் கூடாது. அவனுக்கு என்ன நடந்துச்சுன்னு கண்டு பிடிக்கவே பல வருஷம் ஆகணும். உலகத்துல எந்த மூலைக்குக் கூட்டிட்டுப் போனாலும் சரியாகக் கூடாது.”

“அதெல்லாம் கனகச்சிதமா பண்ணிடலாம் மேடம். நீங்க யாருன்னு மட்டும் சொல்லுங்க.”

“ரெண்டு நாள் கழிச்சு நானே கால் பண்றேன்.” என்றவளை ஒரு உருவம் சற்றுத் தொலைவாக நின்று கண்காணித்துக் கொண்டிருந்தது.

***

இன்று, மாமியாருக்காக உருவாக்கப்பட்ட பயிலகத்தின் பொறுப்பை ஏற்கப் போகிறான் மருமகன். எதுவும் அறியாதது போல், ரிது தன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்க, அவளிடம் எப்படிச் சொல்வது என்று தடுமாறிக் கொண்டிருந்தான். அவன் தடுமாற்றத்தை அலங்காரக் கண்ணாடி வழியாகப் பார்த்துச் சிரித்தவள் சத்தம் இல்லாமல் வெளியேறினாள்.

‘நடப்பது நடக்கட்டும்’ என்ற சிந்தனையோடு மாமியார் முன்பு நின்றவன், “எங்கயோ ஆரம்பிச்ச இந்தப் பயணம், இப்ப இங்க வந்து நிற்குது. உங்க பொண்ணு சொல்ற மாதிரி உங்க சொத்து மேல எனக்கு எந்த ஆசையும் இல்லை. மாமாவோட வார்த்தைக்காக மட்டும்தான் நான் போகப்போறேன். என்னால முடிஞ்ச வரைக்கும் உண்மையா இருக்கேன். எனக்கு உங்க ஆசீர்வாதம் வேணும்.” எனப் பேசிக் கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்த பொன்வண்ணன்,

“எங்க ஆசீர்வாதம் எப்பவுமே இருக்கும்!” என்றார்.

மனம் நிறைந்த புன்னகையோடு அந்த ஏழு அடுக்கு மாளிகையின் பெரிய கதவைத் திறந்தவன் வாயடைத்து நின்றான். தன் கண்ணைத் தன்னால் நம்ப முடியவில்லை. கன்னியப்பன், ஆயுத பூஜைக்குச் செய்யப்படும் அலங்காரத்தோடு பளிச்சென்று நின்றிருந்தது. உடன்பிறவா சகோதரனைப் பார்த்ததும் அவசரமாக ஓட, “என்னப்பா… ஆட்டோ வேணுமா?” என எட்டிப் பார்த்தாள் அவனின் கட்டியவள்.

மீண்டும் வாயடைத்து நின்றான். அவன் அதிர்ச்சியைக் கண்டும் காணாமலும், கண்ணில் போட்டிருந்த கருப்புக் கண்ணாடியைக் கழற்றிக் காக்கிக் சட்டையில் மாட்டியவள், “எங்கப்பா போகணும்?” கேட்க, வாய் வரவில்லை அவனுக்கு.

“அட என்னப்பா நீ… காலங்காத்தால முதல் சவாரி வருதுன்னு ஆர்வமா வந்தா கல்லு மாதிரி நிக்கிற.”

“ஏ..ஏய்! என்னடி இது?”

“அடப் பேமானி! யாரடா டி போட்டுப் பேசுற. அப்படியே பக்குனு ஒன்னு வெச்ச, வாய் டொக்கு விட்டிரும். மூஞ்சப் பாத்தியா அதுக்கு… வடச்சட்டில முக்கி எடுத்த பழைய குண்டா மாதிரி…”

அதுவரை மீளாத அதிர்ச்சியில் இருந்தவன் சட்டெனச் சத்தமிட்டுச் சிரித்து, “பக்காவா இருக்கு பாஷை!” கை உயர்த்திப் பாராட்டினான்.

“அட, நேரத்தக் கடத்தாம உட்காரு.”

“நம்பவே முடியல. இது எப்போ எப்படி நடந்துச்சு?”

“எப்படியோ நடந்துச்சு, உனக்கு என்னாத்துக்கு? வளவளன்னு பேசாம உள்ள வந்து உக்காரு. நிறையச் சவாரி பிடிக்க வேண்டியது கிடக்கு.”

“இறங்கு முதல்ல.”

“கஸ்மாலம்! காலைலயே வம்பு பண்ணுது பாரு.

“அடிங்கு!” என அவன் அடிக்கக் கை உயர்த்த, கீழே இறங்கியவள் சட்டைக் காலரை மடித்து விட்டு, “இன்னாடா இன்னா… ஒன்னு வுட்டேன், செவுலு அவுலு ஆகிடும்.” என்றிடக் காதைப் பிடித்துத் திருகினான்.

வலி பொறுக்க முடியாது துள்ள, “எங்க, விடு பார்க்கலாம்.” என இஷ்டத்திற்குத் திருகினான். வலியின் அளவைத் தாங்க முடியாது, அவன் காலை ஓங்கி மிதித்துத் தன் காதைக் காப்பாற்றிக் கொண்டாள்.

“இந்த சர்ப்ரைஸ் எதிர்பார்க்கல.”

“ரொம்பச் சந்தோஷப்படாத. இதுவரைக்கும் ஆட்டோல போனதே இல்லை. திடீர்னு போகணும்னு ஆசை வந்துடுச்சு. என் ஸ்டேட்டஸ்க்குத் தெருவுல நின்னு ஆட்டோ புடிச்சா கேவலமா இருக்கும். அதான், உன் தம்பியக் கூட்டிட்டு வந்தேன்.”

“ம்ம்!” என்றவன் அறியாத உண்மையா!

கேலியோடு தன்னைப் பார்ப்பதை அறிந்தும், “ரெண்டே ரெண்டு ரவுண்டு தான். முடிச்ச கையோட இவனத் தூக்கிட்டுப் போயிடுவேன்.” எனத் தீவிரமாக முகத்தை வைத்தாள்.

“நம்பிட்டேன்!”

“ஓவராப் பேசினா தூக்கிட்டுப் போயிடுவேன்.” ஆட்டோ சாவியைக் கையில் எடுத்தாள்.

“அய்யய்யோ…” என அலறியவன் டிப்டாப்பாக அலங்கரித்து வந்த சட்டை பட்டனை அவிழ்த்து, முட்டி வரை ஏற்றி விட்டான். ஒருமுறை கன்னியப்பனைச் சுற்றி வந்தவன், ஆசை தீரத் தொட்டுத் தடவி இருக்கையில் அமர்ந்தான். பிரிந்த உயிரை அவனோடு சேர்த்தது போல் இருந்தது. கண்கள் சற்றென்று கலங்க, தன்னவள் பார்க்காது உள் இழுத்துக் கொண்டவன், “உட்காருங்க முதலாளி!” என்றான்.

கணவனின் சொந்த உழைப்பில் வாங்கிய ஆட்டோவில் பந்தாவாக ஏறி அமர்ந்தாள்.

“எங்க போலாம்?”

“உனக்கு எங்க போகணும்?” என்றதும், அவன் தலை பின்னால் திரும்ப, புன்னகை முகமாகப் புருவம் உயர்த்தினாள்.

கண்ணால் தின்று தீர்க்கும் ஆசையோடு, “நம்ம ஏரியாக்குப் போவோமா?” என அவளைப்போல் புருவம் உயர்த்த, சம்மதமாகத் தலையசைத்தாள்.

“நிஜமாவா?”

“ம்ம்!”

“கொஞ்சம் லோக்கலா இருக்கும், பரவாயில்லையா?”

“ம்ம்!”

“எனக்காகவா?”

“ம்ஹூம்… சத்தியமா இல்ல.”

“இல்ல. அந்த இடம் உனக்கு செட் ஆகாது. நம்ம வேற எங்கயாவது போகலாம்.”

“அங்கயே போகலாம்!”

“அங்க வந்தா உனக்கு கம்ஃபர்டபிளா இருக்காது.”

“நீ இருக்கல்ல!”

“போலாம்னு சொல்றியா?”

“உனக்குப் போகணுமா? வேண்டாமா?”

“போகணும். ஆனா, உனக்குப் பிடிக்காது.”

“பிடிக்காதுன்னு நீ சொல்லக் கூடாது, நான் சொல்லணும்.”

வாய் கொள்ளா புன்னகையுடன், “அங்க ஒரு டீக்கடை இருக்கு. ரெண்டு பேரும் அங்கப் போய் டீ குடிச்சிட்டு வரலாம்.” என்றவன் தன் பிறந்தகம் நோக்கிப் பயணப்பட்டான்.

முற்றிலும், புது அனுபவத்தை அனுபவித்தாள் ரிது சதிகா. பாதுகாப்பாகக் கண்ணாடி மூடப்பட்டு, அதிகமான குளிரில் போக்குவரத்து நெரிசலை அறியாது, புகை மண்டலங்களை உணராது பயணப்பட்டவள், குலுங்கிக் கொண்டே செல்கிறாள். கண்ணாடி வழியாக அவளைக் கவனித்தவன் வேகத்தைக் குறைத்தான்.

ஏரியாவிற்குள் வந்ததும், ஒவ்வொரு இடத்தையும் காட்டித் தன் வரலாற்றைக் கூறிக் கொண்டு வந்தான். அனைத்தையும் கேட்டவள் ஆட்டோவை விட்டு இறங்க, “அந்த டீக்கடை தான்!” கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.

எத்தனை முறை சுற்றிப் பார்த்தாலும், பயம் அடங்குவதாக இல்லை ரிது சதிகாவிற்கு. ஒரு மாதிரித் திகில் அனுபவமாக இருந்தது. அதிலும், அங்கிருக்கும் ஆள்கள் அவளையே வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, “இந்த டீயக் குடிச்சுப் பாரு. ஒரு தடவை டேஸ்ட் பண்ணிட்டா அவ்ளோதான். எங்க இருந்தாலும் இந்த டீக்காக ஓடி வந்துடுவோம்.” அவளிடம் அந்தக் கண்ணாடி டம்ளரை நீட்டினான்.

நீண்ட நாள்களாக உபயோகித்துக் கொண்டிருக்கும் அந்தக் கண்ணாடி டம்ளர் மங்கலாகத் தெரிந்தது. போதாக்குறைக்கு, உள்ளே இருக்க வேண்டிய தேநீர், அந்த டம்ளர் முழுவதும் சுற்றி இருந்தது. இனிப்பிற்காகச் சேர்க்கப்பட்ட சர்க்கரைத் துகள்களும் அங்கங்கே ஒட்டி இருக்க, அருவருப்பாக இருந்தது அவளுக்கு. ஆசையாக வாங்கி வந்தவன், தன்னவளின் முகம் கண்டு மன சங்கடத்திற்கு ஆளானான்.

அதைக் கவனிக்காதவள், ‘இதை எப்படி வாங்கிக் குடிப்பது?’ என்ற பெரும் ஆராய்ச்சியில் இருக்க, “உனக்குப் பிடிக்கலைன்னா வேண்டாம்.” தயங்கிக் கொண்டு கூற, எண்ணங்களைக் கலைத்தவள் அவன் முகம் பார்த்து, “அதெல்லாம் ஒன்னும் இல்ல.” புன்னகையோடு வாங்கிக் கொண்டாள்.

“நான்தான் சொன்னேன்ல, உனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு.”

“இதுவரைக்கும் சாப்பிட்டது இல்ல. அதனால சின்னத் தயக்கம்!”

“வேற ஒன்னும் இல்லையே?”

“ம்ஹூம்!” என வாங்கி மெல்ல உதட்டில் வைத்து எடுத்தவளுக்குக் குமட்டுவது போல் இருந்தது. தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் கருடனின் மகிழ்விற்காக, அதைத் தொண்டைக் குழியில் அடக்கியவள், “பரவால்ல, உன் டேஸ்ட் சூப்பரா தான் இருக்கு.” என்றாள்.

‘என்ன சொல்வாளோ’ என்ற பெரும் சங்கடத்தில் அமர்ந்திருந்தவன் மனமகிழ்வாக, “என்ன டென்ஷனா இருந்தாலும் சரி, இங்க வந்து ஒரு டீ குடிச்சால் போதும். எல்லாம் பஞ்சாப் பறந்து போயிடும்.” என்றான்‌.

“பாருடா!”

“முன்னாடி பிரெண்ட்ஸ் கூடச் சேர்ந்து மணிக்கணக்கா இங்கதான் உட்கார்ந்துட்டு இருப்பேன். இப்பத்தான், ஆளாளுக்கு பியூச்சரைப் பார்க்குறேன்னு பிசி ஆகிட்டானுங்க.”

அவன் சொல்வதைக் கேட்பதைத் தாண்டி ரசிக்க ஆரம்பித்தாள். பேச்சுக்களுக்கு இடையே கீழ் இதழோடு டம்ளரை ஒட்டி எடுத்தான். கடந்த காலக் கதை அளக்கும் மகிழ்வில் கண்கள் உற்சாகத்தில் உருண்டு திரண்டது. கருடேந்திரனின் சிரிப்பை இன்றுதான் முழுதாகக் காண்கிறாள். அதில் இருக்கும் நிம்மதியைக் கண்டு பொறாமை கொண்டவள், எந்நேரமும் தன்னை வசைபாடிக் கொண்டிருக்கும் கருடேந்திரனைத் தேடினாள்.

அவன் கோபம் தெரியும். குடும்பத்தின் மீதுள்ள பாசம் தெரியும். அன்னையின் பிரிவில் சிந்தும் கண்ணீரைக் கூட அறிவாள். இன்றுதான் இத்தனை மகிழ்வாக இருப்பதைப் பார்க்கிறாள். அவன் சிரிக்கும் பொழுது கீழ்த்தாடையில் குழி உண்டாகி அவளை இழுத்துக் கொள்ளப் பார்த்தது. அதுவரை, அருவருப்பாகக் குமட்டிக் கொண்டிருந்த தேநீர் சுவையாகத் தெரிந்தது. அவனை ரசித்துக்கொண்டே அவனோடு சேர்ந்து குடித்தாள்.

“வேற ஏதாச்சும் வேணுமா?”

“ம்ஹூம்!”

“அந்த மசால் போண்டா சாப்பிட்டுப் பார்க்குறியா? டேஸ்ட் சூப்பரா இருக்கும். சின்ன வயசுல எங்க அப்பாகிட்ட இதைக் கேட்டு அடம் பிடிச்சிருக்கேன். டெய்லி ஒன்னாது சாப்பிடுவேன்.”

‘அப்படி என்ன அவன் நாக்கு இதில் சுவை கண்டு இருக்கிறது?’ என்ற ஆர்வத்தில் தலையாட்டியவள் முன்பு, இரண்டு மசால் போண்டாவை வைத்தவன் சிறிது சட்னியை ஊற்றி, “சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லு.” எனப் பரவசமாகினான்.

அவனுக்காகச் சாப்பிட்டவளுக்கு, அதன் சுவை பிடித்திருந்தது. கண் விரித்துத் தலையாட்டும் அவள் அழகில் உள்ளம் மகிழ்ந்தவன், “அண்ணா, இன்னும் ரெண்டு!” எனச் சொல்லிக் கொண்டே தலையைத் திருப்ப, அங்கிருந்த சில ஆண்கள் இவள் மீது வைத்த கண்ணை அகற்றாமல் ரசித்துக் கொண்டிருந்தனர்.

பார்த்ததும், பொறாமைத் தீ பற்றிக் கொண்டது. பார்வையைச் சுருக்கிக் கீழ்க் கண்ணால் முறைத்தவன், அவர்கள் ரசிக்காதபடி தன்னவளை மறைத்துக் கொண்டு அமர்ந்தான். அதை அறியாதவள் முழுதாகச் சாப்பிட்டு முடித்து வேறு ஒன்றைக் கை காட்ட,

“அ…அது நல்லா இருக்காது. உனக்கு நேரமாச்சுல, இன்னொரு நாள் வரலாம். வா…” வேகமாக இழுத்துக்கொண்டு ஓடினான்.

இருவரும் அந்தச் சின்னச் சந்தில் பேசியபடி நடந்து வந்தனர். தன்னுடைய குழந்தைப் பருவம் முதல் கொண்டு, இவள் வாழ்வில் வரும் வரை இருந்த அத்தனைப் பசுமையான நினைவுகளையும் முடிந்தவரை பகிர்ந்து கொண்டு வந்தான். சுற்றி இருக்கும் இடத்தை மறந்து அவன் முகத்தையே பார்த்து வந்தவள், சற்றென்று அவன் பேச்சு நின்றதும் முகம் சுருக்க, தலையைக் கீழ் இறக்கி அப்படியே நின்றான்.

ரிது உசுப்பியும், தன் நிலை மாறாதவன் முன் நின்றார் சரளா. மாமியாரைச் சற்றும் எதிர்பார்க்காதவள் கட்டியவனின் முகம் பார்க்க, அவரின் பார்வை இருவரின் மீதும் ஊர்ந்தது. மாமியாரையும், அவர் பெற்ற புதல்வனையும், மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள். இவளின் பார்வை தான் மாறிக் கொண்டிருந்ததே தவிர, அவ்விருவரின் பார்வையும் அழுத்தமாக அப்படியே இருந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!