17. தொடட்டுமா தொல்லை நீக்க..!

4.8
(103)

தொல்லை – 17

கதிரின் நெற்றி முத்தத்தில் சிவந்து போனாள் அஞ்சலி.

அவளுடைய மனதில் இருந்த குற்ற உணர்ச்சி சுமையெல்லாம் அக்கணமே மடிந்து போனது.

“மாமா…?”

“என்னடி..?”

“நாளைக்கு எல்லா உண்மையும் பெரியவங்ககிட்ட சொல்லிடுவீங்களா?” என அவள் கேட்க மறுப்பாக தலையை அசைத்தவன் “நாளைக்கு இல்ல… இப்போவே சொல்லப் போறேன்…” என்றான்.

“என்னது இப்போவா..? இந்த நேரத்துலையா..?” என அவள் அதிர்ச்சியாகக் கேட்க,

“சில உண்மைகளை தள்ளிப் போடவே கூடாது அம்மு…” என்றவன் அவளுடைய அச்சம் கவிழ்ந்த முகத்தைப் பார்த்து சிறு புன்னகையை அவளுக்கு வழங்கினான்.

“நான் உன் கூட இருக்கேன்… பயப்படாத…” என்றான்.

“மாமா… என் மேல உங்களுக்கு கோபமே இல்லையா..? நானும் தானே உங்களை ஏமாத்திருக்கேன்..? என்னை ஏன் ஏத்துக்கிட்டீங்க?” என தன் மனதில் இருந்த கேள்வியை அவள் கேட்டு விட,

கதிரோ அவளைக் காதல் ததும்பும் பார்த்தவன் “கோபம் வந்துச்சுதான்… அதனாலதான் உன்னை அடிச்சிட்டு சாரி கேட்டேன்… எப்படி இருந்தாலும் கை நீட்டி அடிச்சிருக்கக் கூடாது…” என வருத்தப்பட்டவன்,

“கோபத்தை விட உன் மேல அதிகமா அன்பு வச்சுட்டேன்டி… உன்னை இழக்க வேண்டி வந்துருமோன்னு எனக்கு பயமா இருந்துச்சு… ஒருவேளை மதுரா இந்த கல்யாண வாழ்க்கை வேணும்னு சொன்னா என்ன பண்றதுன்னு ரொம்பவே பயந்தேன்… ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையும் என்னால அழிஞ்ச மாதிரி போயிருமேன்னு நினைச்சேன்… ஆனா அவ விலகின பிறகுதான் நிம்மதியா இருக்கு…” என்றான்.

“ம்ம்…” என மௌனமாக தலையசைத்தாள் அஞ்சலி.

“இதோ பாரு… நீதான் என்னோட பொண்டாட்டி… நான் உன் கழுத்துல தாலி கட்டணும்னு விதி இருந்திருக்கு போல… அதனாலதான் பர்ஸ்ட் நைட் அன்னைக்கு தாலி கழண்டு விழுந்திருக்கு…” என்றவன் அவளுடைய கன்னத்தை மென்மையாக வருடிவிட்டான்.

பின் தன் தந்தைக்கு அழைப்பு விடுத்தான்.

சற்று நேரத்தில் அவனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டார் துரை.

“அப்பா… உங்ககூடவும் அம்மாகூடவும் கொஞ்சம் பேசணும்… ரெண்டு பேரும் ஹாலுக்கு வர்றீங்களா?” எனக் கேட்டான் அவன்.

“……”

“தேங்க்ஸ்பா… நீங்க வாங்க.. நாங்களும் வந்துர்றோம்…” எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் அஞ்சலியின் கரத்தைப் பிடித்துக்கொண்டான்.

“பயமா இருக்கு மாமா…” பதறினாள் அவள்.

“பயப்படாத… வா…” என அவளையும் அழைத்துக்கொண்டு கீழே செல்ல அவளுக்கோ நெஞ்சம் படபடத்துப் போனது.

இவர்களுக்காக ஹாலில் சுதாலட்சுமியும் துரையும் காத்திருந்தனர்.

“என்னாச்சுப்பா..? நீ தூங்கலையா? இந்த நேரத்துல ஏதோ பேசணும்னு சொல்லி இருக்கியே… என்ன விஷயம்?” எனக் கேட்டார் அவனுடைய தந்தை.

சுதாலட்சுமி வாய் திறந்து கேட்கவில்லை. ஆனால் அவருடைய பார்வையும் அதே கேள்வியைக் கேட்பதை உணர்ந்தவன்,

“ஒரு பிரச்சனை நடந்துருச்சும்மா…” என்றான்.

“என்னப்பா சொல்ற? என்ன நடந்துச்சு?” எனப் பதறியவாறு சுதாலட்சுமி கேட்க,

“நான் சொல்றதைக் கேட்டு நீங்க டென்ஷன் ஆகக் கூடாது… அமைதியா எல்லாத்தையும் கேளுங்க…” என்றவன் நடந்த அனைத்தையும் கூறத் தொடங்க பெற்றவர்களின் முகமோ அப்படியே மாறிப் போனது.

தலை கவிழ்ந்து நின்ற அஞ்சலியின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

“என்னடா சொல்ற? நீ சொல்றதெல்லாம் உண்மையா? இப்போ உன் கூட இருக்கிறது அஞ்சலியா?” என சுதாலட்சுமி அதிர்ந்து கேட்க,

“ஆமாம்மா…” என்றான் அவன்.

“ஐயோ கடவுளே… என்ன கொடுமை இது..?” என அழத் தொடங்கி விட்டார் சுதா.

“எவ்வளவு தைரியம் இருந்தா நம்மளையே ஏமாத்துவாங்க?” என இருக்கையில் இருந்து கோபத்துடன் எழுந்தார் துரை.

“எங்களை ஏமாத்த உனக்கு எப்படி மனசு வந்துச்சு? உன்னை என் பொண்ணு மாதிரிதானே பார்த்தேன்? என்கிட்டயாவது உண்மையைச் சொல்லி இருக்கலாமில்லையா?” என கோபத்துடன் சுதாலட்சுமி கேட்க,

“த… தப்பு பண்ணிட்டேன் அத்தை… என்னை மன்னிச்சிடுங்க…” என அழுதாள் அவள்.

“இப்போ ‘மன்னிச்சிடுங்க’ன்னு சொன்னா எப்படி? சின்ன விஷயமா இது? அக்காவும் தங்கச்சியும் இப்படி மாறி மாறி என் பையனோட வாழ்க்கைல விளையாடிட்டீங்களே… கல்யாணம்னா உங்களுக்கு விளையாட்டா தெரியுதா? தாலி கட்டினது ஒருத்திக்கு… வீட்ல இருந்தது இன்னொருத்தியா? இதை எப்படி சாதாரணமா எடுத்துக்க முடியும்?” என அவர் புலம்ப, அஞ்சலிக்கோ அவர்களை எதிர்கொள்ள முடியவில்லை.

அவளுடைய அழுகை கூடியது.

“அம்மா… போதும்… அவளே ரொம்ப குற்ற உணர்ச்சில இருக்கா… இந்த உண்மையை அவதானே சொன்னா… அவ சொல்லலைன்னா எனக்கு எப்படி தெரிஞ்சிருக்கும்..? மதுரா தற்கொலை பண்ணிக்குவேன்னு சொன்னதால வேற வழி இல்லாம சம்மதிச்சிருக்கா… அவ பண்ணதும் தப்புதான் இல்லைன்னு சொல்லல… ஆனா உண்மையை சொல்லி மன்னிப்புக் கேட்ட பிறகு கோபப்படுறது சரி இல்லமா… நடந்து முடிஞ்சதைப் பத்தி கவலைப்படாம இனி என்ன பண்ணலாம்னு யோசிப்போம்…” என்றான் கதிர்.

“நீ சொல்ற மாதிரி விடுறதுக்கு இது சின்ன விஷயமாடா..? வெளியே தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம் தெரியுமா..? நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு… நம்மளைப் பத்தி வெளியே என்ன பேசுவாங்க?” எனக் கேட்டார் அவனுடைய அன்னை.

“அம்மா… ப்ளீஸ்… நம்மளைப் பத்தி பேசுறதுக்கு இதுல என்ன இருக்கு? நாம எந்த தப்பும் பண்ணவே இல்லையே… எனக்கு அஞ்சலியைத்தான் பிடிச்சிருக்கு… இவ்வளவு நாளும் என்கூட இருந்த அஞ்சலிதான் எனக்கு வேணும்… நான் மதுராக்கிட்ட பேசிட்டேன்… அவ இங்க வரவே மாட்டேன்னு சொல்லிட்டா… அதனால அவளைச் சம்பந்தப்படுத்தி என்கிட்ட எதுவுமே பேசாதீங்க… அவ தாலியை கழட்டி கொடுத்துட்டு போன அன்னைக்கே எங்க பந்தம் அறுந்து போச்சு… அதே நாள்லதான் பூஜை ரூம்ல வச்சு நான் இவளுக்கு தாலி கட்டினேன்… எனக்கு அஞ்சலிதான் வேணும்… நீங்க புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கிறேன்…” என்றான் கதிர்.

அவனுடைய பெற்றோரோ மௌனத்தில் உறைந்து போயினர்.

சுதாலட்சுமிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“சுதா…‌ பையன் சொல்றதுதான் சரி… நம்ம பையன வேணாம்னு விட்டுட்டு போனவ நமக்கு வேணாம் சுதா… அஞ்சலிக்கு கதிரைப் பிடிச்சிருந்தா இவங்க ரெண்டு பேருக்குமே கல்யாணம் பண்ணி வச்சிடலாம்…” என்றார் துரை.

சுதாலட்சுமிக்கும் வேறு வழி தெரியவில்லை.

மகனின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால் அவனுக்குப் பிடித்த பெண்ணைத்தானே திருமணம் செய்து வைக்க வேண்டும் என எண்ணியவர் “இதால பின்னாடி பிரச்சினை வராதாங்க?” எனக் கேட்டார்.

“நம்ம பையன்தான் மதுராக்கிட்ட தெளிவா பேசிட்டானே… இனி பதில் சொல்ல வேண்டியது அஞ்சலிதான்…” என்றவர் அஞ்சலியைப் பார்க்க அவளோ மௌனமாக இருந்தாள்.

“சொல்லு அஞ்சலி… என்னைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதம்தானே?” எனக் கதிர் கேட்க அவளுக்கு உடல் வியர்த்துப் போனது.

“தயவு செஞ்சு உண்மைய சொல்லும்மா… கதிர் கேக்கிறான்னோ இல்ல நாங்க ஏதாவது சொல்லுவோம்னோ நீ பயப்படாத… உனக்கு எங்க பையனைப் பிடிச்சிருந்தா மட்டும் சொல்லு… இல்லன்னா பரவால்ல… உனக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சுக் கொடுக்கிறது என்னோட பொறுப்பு…” என்றார் துரை.

எங்கே குற்ற உணர்ச்சியில் தன்னைப் பிடிக்கவில்லை எனக் கூறி விடுவாளோ என கதிர் பதற்றமாகினான்.

அவனுடைய கரங்கள் மெல்ல அஞ்சலியின் கரத்தைப் பற்றிக்கொண்டன.

அவன் கொடுத்த அழுத்தத்தில் அவர்களை நிமிர்ந்து பார்த்தவள் “எனக்கு மாமாவைப் பிடிச்சிருக்கு…” எனக் கூற அப்போதுதான் கதிரின் முகம் மலர்ந்தது.

“சரி… இனி ஆக வேண்டியதைப் பார்க்கலாம்… இது முத்துவுக்கு தெரியுமா?” எனக் கேட்டார் துரை.

“உடனே தெரியாதுப்பா… ஆனா அப்புறமா உண்மை தெரிஞ்சுடுச்சு… உங்களுக்கு பயந்துதான் உண்மையைச் சொல்ல முடியாம போயிருக்காங்க… முடிஞ்சதை விட்டுருங்க அப்பா… இதை வச்சு அவங்ககிட்ட எதுவுமே பேச வேணாம்… இனி நடக்கப் போறதை மட்டும் பார்க்கலாம்… ப்ளீஸ்… எனக்காக விட்ருங்க…” என்றான் கதிர்.

அவரோ மௌனமாக தலையசைத்தார்.

“சுதா… கோயில்ல சிம்பிளா கல்யாணத்தை வச்சுக்கலாமா?” எனக் கேட்டார் துரை.

“இல்லைங்க… இப்போ இவ கழுத்துல இருக்குற தாலியும் நம்ம பையன் கட்டினதுதானே? அது அப்படியே இருக்கட்டும்… பூஜை ரூம்ல நம்ம ஆசீர்வாதத்தோட நடந்ததும் கல்யாணம்தான்… நாளைக்கு நம்ம குலதெய்வ கோயிலுக்கு போய் தாலியைப் பிரிச்சு தங்கத்துல கோர்த்துடலாம்… அங்க வச்சு எல்லா சடங்கையும் முறைப்படி செய்வோம்… அதுதான் சரியா இருக்கும்…” என்றார் சுதாலட்சுமி.

“நல்லதும்மா… அப்போ அப்படியே செய்யலாம்… நாளைக்கு விடிஞ்சதும் நான் முத்துகிட்ட பேசுறேன்…” என்றார் துரை.

அஞ்சலியோ அதுவரை மௌனமாக நின்றவள்,

“என்ன இருந்தாலும் நான் உண்மையை மறைச்சது தப்புதான்… என்னை மன்னிச்சிடுங்க அத்தை… மன்னிச்சிடுங்க மாமா…” என கைகூப்பி அவர்களிடம் மன்னிப்பை யாசித்தாள்.

“பரவால்ல… விடும்மா… இப்பவாவது உண்மையைச் சொன்னியே… அதுவே போதும்… சரி… நீங்க ரெண்டு பேரும் போய் தூங்குங்க… இப்பவே ரொம்ப நேரம் ஆயிடுச்சு… மீதியை நாளைக்கு பார்த்துக்கலாம்…” என்றவர் தன் அறைக்குச் சென்று விட

சுதாலட்சுமி “அம்மாடி அஞ்சலி தப்பா எடுத்துக்காத… இப்போ நீயும் கதிரும் ஒரே அறைல இருக்க வேணாம்… கதிரோட ரூமுக்கு பக்கத்துல இருக்க ரூம்ல தங்கிக்கோ… தாலி பிரிச்சு போட்டு முறைப்படி எல்லாம் செஞ்சதுக்கு அப்புறம் ஒரே ரூம்ல தங்கிக்கோங்க…” எனக் கூற சரியென தலையசைத்தாள் அஞ்சலி.

கதிரின் மனமோ ‘சொதப்பிட்டியேம்மா…’ என அலறியது.

“சரி… போய் தூங்குங்க…” என்றார் சுதாலட்சுமி.

“அம்மா… எதுக்கு இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம்? இத்தனை நாளா அஞ்சலி என்கூடதானே தங்கினா? இன்னைக்கு மட்டும் என்ன புதுசா?” என அவன் கேட்க அஞ்சலியின் முகம் சிவந்து போனது.

“டேய்… அதெல்லாம் எனக்குத் தெரியாது… எப்படி இருந்தாலும் எல்லாம் முறைப்படிதான் நடக்கணும்… நான் சொல்றதைச் செய்… நீ உன் ரூம்ல தூங்கு… அஞ்சலி பக்கத்து ரூம்ல தூங்கட்டும்… போடா…” என்றவர் அவனைத் திட்டிவிட்டு தன் அறைக்குச் சென்று விட,

அஞ்சலிக்கோ சட்டென சிரிப்பு வந்தது.

அதை அடக்கிக் கொண்டவள் கதிரின் முகத்தைப் பார்க்காமல் வேகமாகப் படி ஏறத் தொடங்கினாள்.

“ஏய் அம்மு… நிஜமாவே பக்கத்து ரூம்லதான் படுக்கப் போறியா?” எனக் கேட்டான் அவன்.

“அத்தை சொன்னதுக்கு அப்புறம் எப்படி மீற முடியும்? அங்கேயே தங்கிக்கிறேன்…” என்றாள் அவள்.

“அதெல்லாம் தேவலை… நீ என்கூடவே தூங்குடி… அம்மா கேட்டா பக்கத்து ரூம்ல தூங்கினேன்னு சொல்லு…” என அவன் இமை சிமிட்டிக் கூற,

“போங்க மாமா…” என வெட்கச் சிரிப்புடன் பக்கத்து அறைக்குள் நுழைந்து கொண்டாள் அவள்.

‘நமக்கு ஃபர்ஸ்ட் நைட் ராசியே இல்லையோ..?’ என எண்ணினான் அவன்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 103

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “17. தொடட்டுமா தொல்லை நீக்க..!”

  1. அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!