17. நேசம் கூடிய நெஞ்சம்

4.9
(28)

நெஞ்சம் – 17

அர்விந்த் தன்னிடம் பேசாமல் முகம்  திருப்பியதை கண்டு மனம் வருந்தினாலும், அவனை வாக்கிங் ஸ்டிக்குடன் கண்டதும் மனம் தவித்து போனது மலருக்கு. ஆனால் அதை பற்றி பேசினால் அவனுக்கு நிச்சயம் பிடிக்காது என்று தெரிந்தவளாக,

“எப்படி இருக்கீங்க சார்?” என்றாள். என்ன முயன்றும் அவள் குரல் தழுதழுப்பதை அவளால் மறைக்க முடியவில்லை.

“இங்க தான் நிற்கிறேன், நீயே பார்த்துக்கோ…!” சொல்லிக்கொண்டே மெதுவாக திரும்பினான் அர்விந்த்.

“பார்க்கிறது எல்லாம் இருக்கட்டும், நீங்க சொல்லுங்க, உங்க வார்த்தை தான் வேணும்!” பிடிவாதமாக கேட்டாள் மலர்.

“இனிமே தான் நல்லா ஆவேன்…” அவள் வந்ததை மறைமுகமாக குறிப்பிட்டு, அவனை உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை, அவன் நலத்தை பார்வையிட்டு கொண்டு இருந்தவள், அவன் பார்வையை கவனிக்க மாட்டாள் என்ற உறுதியில் அவளை முழுங்கி விடுவது போல் பார்த்தான் அர்விந்த். காதலை உணர்ந்த பின், அவன் எண்ணத்தில் மட்டுமே இருந்தவள் அல்லவா! இன்று அவளை நேரில் கண்டதும், மனம் துள்ளியது. மிகுந்த சந்தோஷமாக இருந்தது அவனுக்கு. அத்தனை நாள் அவனுக்கு இருந்த இறுக்கம் நொடியில் காணாமல் போனது. அந்த இடத்தை எல்லாம் உற்சாகம் வந்து நிரப்பியது.

இது எதுவும் புரியாமல், அவன் சொன்ன வார்த்தையில் இருந்து, “இதுவரை ரொம்ப கஷ்டப்பட்டீங்களா சார்? கவலைப்படாதீங்க சார், கண்டிப்பா இனிமே நல்லா ஆய்டுவீங்க!” என்றாள் அக்கறை பொங்க.

பேசியபடி உள்ளே வந்திருந்தார்கள். அவர்கள் மேலே பேசும் முன், தியாகு எழுந்து வந்து விட்டார். மலரை கண்டதும் அவருக்கும் மகிழ்ச்சி. சென்று அருணாவை அழைத்து வந்தார். அவளுக்கு விஷயம் எப்படி தெரிந்து  வந்தாள் என்று கேட்க, நேற்று காலை தான் தெரியும் என்று அவள் சொல்ல, உடனே கிளம்பி வந்த அவளின் அன்பை நினைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நெகிழ்ந்து போனார்கள்.

“சின்ன சாரை பார்க்க தைரியமா தனியா கிளம்பி வீடு வரை வந்துட்டே! சபாஷ்” என்றார் தியாகு.

அவள் வந்ததில் வேறு எதை பற்றியும் யோசிக்காதவன்,

அட ஆமால என்று நினைத்துக் கொண்டு, “வளர்ந்துட்டியா விழி?” என்றான் சிரிப்புடன்.

“நான் இப்போ தனியா சென்னை போயி என் வேலைக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் வாங்குறேன் சார்!” என்றாள் பெருமையாக. அவளின் திறமை வளர்ந்ததில், அவளின் தன்னம்பிக்கை வளர்ந்ததில் அவனுக்கு மகிழ்ச்சி தான், ஆனால் முன்பு போல் அவனை இப்போதும், அல்லது இனிமேல் நேசிப்பாளா என்ற சந்தேகம் சட்டென்று தோன்றியது அவனுக்கு. அவனுக்கு திருமணம் ஆகி விட்டது என்று அவனை மறந்திருப்பாளா? அந்த எண்ணம் தோன்றிய உடனேயே அது தந்த தாக்கத்தில் அவன் எழுந்து விட்டான். நான் ரூமுக்கு போறேன் என்றபடி மெதுவாக நடக்க ஆரம்பித்தான் அர்விந்த்.

அவன் சென்றதும், “என் பிள்ளைக்கு ஏன் தான் இப்படி எல்லாம் நடந்துச்சோ?” என்றபடி கண் கலங்கினார் அருணா.

“ஏம்மா, சாருக்கு ஒரு குறையும் வராது, கால் சீக்கிரம் சரி ஆயிடும், அடுத்த வருஷம் குட்டி சார் வந்துருவார் பாருங்க” என்றாள் மலர் வெகுளியாக.

“உனக்கு முழு விவரம் தெரியாது மலர்…” என்றபடி நிவேதா பிரிந்து சென்றதை கூறினார்கள்.

என்ன பெண் அவள் என்று மிகுந்த ஆத்திரம் கொண்டாள் மலர். “சார் மாதிரி ஒரு ஆளை விட்டு போனது அவங்களுக்கு பெரிய நஷ்டம் மா, இப்போ தெரியலைனாலும் நிச்சயம் ஒரு நாள் உணருவாங்க, சார் நல்லா இருப்பாங்க, நீங்க கவலைப்படாதீங்க” என்று பெரியவர்களை தேற்றினாள்.

அதன் பின், அவள் வீடு போல், வேலைகளை அவள் கையில் எடுத்துக் கொண்டு அனைவரிடமும் பேச்சும் சிரிப்புமுமாக இருந்தாள் மலர். வெகு நாட்கள் கழித்து அவர்கள் மனது லேசாக ஆனது.

காலை டிபனிற்கு அறையை விட்டு வந்தவன், அனைவர் முகமும் மலர்ச்சியாக இருப்பதை கண்டான். அதற்கு காரணத்தை அவன் தேட வேண்டாமே, அவள் தான் வீட்டையே வலம் வந்தாளே… அவனும் சின்ன புன்னகையுடன் உண்ண அமர்ந்தான்.

அனைவருக்கும் பூரியை பரிமாறியவள், இருங்க தோசை கொண்டு வரேன் என்று கொண்டு வந்தாள். அர்விந்த் மட்டும், “எனக்கு வேண்டாம், ஏற்கனவே உடற்பயிற்சி எதுவும் செய்ய முடியாம வெயிட் ஏறிடுச்சு, இதில ரெண்டு ஐட்டமா?” என்றான்.

“சாதா தோசை தான் சார், ஒன்னே ஒன்னு, ப்ளீஸ் இருங்க….” அவள் கெஞ்ச,

“ஏன் ஜிகினா எல்லாம் வைச்சு ஸ்பெஷல் தோசை சுடத் தெரியாதா? டிரஸ்ல மட்டும் தான் பண்ணுவியா?” அவளை கிண்டல் அடித்துக் கொண்டு எழுந்து போகாமல் அவன் அங்கேயே அமர்ந்திருக்க, வெகு நாட்கள் கழித்து மகன் முகத்தில் இருந்த சந்தோஷம், பழையபடி வந்த குறும்பு பேச்சை ரசித்தனர் பெற்றோர் இருவரும். வீடும் மலரின் வருகைக்கு பிறகு உயிர் பெற்றதை போல் இருந்தது அவர்களுக்கு.

அவள், அவனுக்கு சிரிக்கும் ஸ்மைலி தோசை கொண்டு வர, அதை பார்த்த அனைவருக்கும் சிரிப்பு. வாய் போன்ற இடத்தில் கெட்ச்அப் போட்டு லிப்ஸ் போல் ஆக்கி இருந்தாள்.

“இதையெல்லாம் போட்டு காட்ட தான் என்னை கெஞ்சினியா? நான் என்ன குழந்தை யா?” என்றாலும் அந்த தோசையை உண்டான் அர்விந்த்.

சிரிப்பும் பேச்சுமாக உணவு நேரம் முடிய, ஆண்கள் இருவரும் அகன்றதும்,

“நீ அரவிந்தை பார்க்க தான் வந்தேனு தெரியும், உனக்கு வேலை இருக்கும்னு புரியுது, ஆனா நீ வந்த உடனே நம்ம வீடு பழையபடி ஆன மாதிரி இருக்கு எனக்கு. எல்லார் முகத்திலும் சந்தோஷம். எனக்காக ஒரு வாரம் இருந்துட்டு போறியா மலர்? உன்னை இப்போ விருந்தாளியா தான் கேட்கிறேன்” என்றார் அருணா.

மலருக்கே அர்விந்தை விட்டு செல்வது என்பது கொஞ்சம் கடினமாக தான் இருந்தது. அருணா இப்படி கேட்டதும், யோசிக்காமல் சரிம்மா என்று சொல்லிவிட்டாள். தான் கூறிக் கொள்கிறேன் என்பதையும் மீறி அருணாவே கண்ணகியிடம் பேசி அவர் சம்மதத்தையும் வாங்கினார்.

பதினொன்றை மணி அளவில் ஜூஸ் எடுத்துக் கொண்டு அர்விந்தின் அறைக்கு சென்றாள் மலர்.

“சார் ஜூஸ்!”

“நான் என்ன பேஷண்ட்டா? யார் கேட்டா இப்போ ஜூஸ்?”

“ஒரு ஜூஸுக்கு இவ்ளோ கோவமா?”

“நான் உன்னை கேட்டேனா?”

“சரி இப்போ கேளுங்க! என்ன வேணும்?”

அவளை இத்தனை நாள் மிஸ் செய்த மனது, இன்று அவளை கண்டவுடன் அவளை தன்னுடனே வைத்துக் கொள்ள துடித்தது. அவள் கிளம்பி விடுவாளே என்று அவன் விருப்பத்தை சொல்ல முடியாமல் தவித்தது. அந்த கடுப்பில் இருந்தவனை அவளின் இந்த கேள்வி உசுப்பேத்தியது.

“என்ன கேட்டாலும் செய்வியா?” அவன் குரலில் இருந்த விளங்க முடியாம உணர்வு அவளை ஒரு நிமிடம் அமைதி ஆக்கியது.

அவனின் மனம் தெரியாதவள், அவனை பழைய அர்விந்தனாக நினைத்துக் கொண்டு,

“என்னை ஊருக்கு மட்டும் போக சொல்லாதீங்க, நான் ஒரு வாரம் கழிச்சு தான் போவேன்” என்றாள் வேகமாக.

“ஓ!!” சோர்ந்து கிடந்த அவன் மனம் சட்டென்று உயிர் பெற்றது. அமர்ந்திருந்தவன் மெதுவாக எழுந்தான். வேண்டுமென்றே ஊன்றுகோலை எடுக்காமல் அவன் தடுமாற, ஓடி வந்து அவனை தாங்கி கொண்டாள் மலர்.

அவனை தாங்க வந்த அவளின் இடுப்பில் வேண்டுமென்றே கைவைத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டான் அர்விந்த். (டேய், எடுத்தவுடனே நாலாவது கியரில் போகாதே டா, ஏண்டா என்னை இப்படி படுத்துற, மன்மதன் அவனின் வேகத்தில் மிரண்டார்)

அவருக்கு என்ன தெரியும் அவனின் ஏக்கம்? அவள் இடுப்பில் அவன் கரம் பட, கூச்சத்தில் நெளிந்தாள் மலர். அவள் முகம் சடுதியில் ரத்தமென சிவந்தது. அவன் வேண்டுமென்றே செய்கிறானா அல்லது பிடிமானத்திற்காக பிடித்து விட்டானா என்று புரியாமல் அவனை ஏறிட்டும் பார்க்காமல் அவன் சட்டையை பார்த்துக் கொண்டு இருந்தவளை ரசித்தான் அர்விந்த். அவன் தொட்டதும், அவள் முகத்தில் வந்த உணர்வுகள் அவனுக்கு திருப்தியாக இருந்தது. அவள் அவனை மறக்கவில்லை என்று தெரிந்துக் கொண்டான். (அடேய், ராஸ்கல், கையை எடுடா, பர்ஸ்ட் லவ்வை சொல்லுடா… மனசாட்சி கூவியது)

விட்ட பேச்சை தொடர்ந்தான் அர்விந்தன்.

“என்ன கேட்டாலும் தருவியா விழி?” அவர்கள் நின்ற நெருக்கத்தில் தவித்துக் கொண்டு இருந்தவள், அவனின் அழைப்பில் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் முகம் அவளையே நோக்க, தடுமாறியவளாக,

“என் லெவலுக்கு, என்னால என்ன முடியுமோ அதை கேளுங்க சார், கண்டிப்பா தருவேன்.” என்றாள். சொல்லிவிட்டு குனிந்து கொண்டாள்.

“அதென்ன உன் லெவல்? உன் அளவு? அதெல்லாம் ஏதுமில்லை…. நீ பெரிய ஆள், உனக்கு தெரியலை உன்னோட ஒர்த்!”

மீண்டும் அந்த விழி அவனை ஏறிட்டது. நீ என்ன சொல்கிறாய்? கொஞ்சம் விளக்கி சொல்லேன் என்றது. கள்வன் அவன், சொல்வானா என்ன? அவளுடன் அவன் மனதை சொல்லாமல், வம்பு செய்வது அவனுக்கு பிடித்து இருக்க, பிடிவாதமாக மறுத்தான். அவன் கண்கள் குறும்பில் சிரிக்க, பெண்ணவள் அவன் அருகாமையிலும் குறும்பிலும் தவித்தாள்.

“நீங்க ஜூஸ் குடிங்க சார், நான் போறேன், வேலை இருக்கு!” மெதுவாக அவனிடம் இருந்து விலக பார்க்க,

“ஊரில இருந்து எதுக்கு வந்தே?” என்றான் சம்பந்தம் இல்லாமல்.

“உங்களை பார்க்கத் தான்!”

“அப்போ இப்போ எங்க போறே? இங்கேயே இரு!”

அவன் உடல் மொழியும், விழியும் அவளிடம் பல கதை சொன்னாலும், அவன் வாயில் இருந்து வார்த்தை எதுவும் எதையும் தெளிவாக சொல்லவில்லையே, அதனால்,

“உங்களுக்கு ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க சார், வரேன்!” என்றாள்.

“எனக்கு நிறைய வேணும், அதுக்கு தான் உன்னை இங்கேயே இருக்க சொல்றேன்….”

“நிறையவா? அப்படினா….?”

அவன் பதில் சொல்வதற்குள் அருணா மலரை அழைக்கும் சத்தம் கேட்க, அவனிடம் இருந்து நன்றாக விலகினாள் மலர். ஆனால் அவளின் கரங்களை விடவில்லை அவன்.

“அம்மா கூப்பிடுறாங்க சார்…” அவள் போக துடிக்க,

அவள் கரங்களை மெதுவாக தன்னிடம் இழுத்தான் அர்விந்த். அவனின் பேலன்ஸ் தடுமாறி விடக் கூடாது என்பதால் அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள் மலர்.

அவளை அவன் அருகில் இழுத்தவன், அவள் முகத்தை அவன் கைகளில் தாங்கி, அவளின் இரண்டு கன்னங்களிலும் அழுத்தமாக சில முத்தங்கள் வைத்து,

“தேங்க்ஸ் விழி!” என்றான்.

அவனின் முத்தத்தில் அதிர்ந்து நின்றவளை கண்ட அர்விந்த், கொஞ்சமாக சிரிக்க, அவன் சிரிப்பில் சுரணை பெற்றவள்,

“என்ன …. ஏன்…. எதுக்கு…. சார்…. இப்படி….?” என்று அவனின் முத்தத்திற்கு நேரடியாக காரணம் கேட்க முடியாமல் திக்கினாள்.

“ஏன் நிறுத்திட்டீங்கனு கேட்கிறியா?”

“ஐயோ சார்… வேணும்னே பண்றீங்க….”

“என்ன வேணும்னு பண்றேன்….? அதையும் நீயே சொல்லு!”

“நீங்க…. என்னை இப்படி…. ம்ப்ச்….?” ஏன் எனக்கு முத்தம் கொடுத்தாய் என்று கேட்க வாய் வரவில்லை அவளுக்கு.

அருணா அரவிந்தின் அறைக்கே வந்து விட, அவர் வரும் அரவம் கேட்டு, ஜூசை கடகடவென்று வாயில் ஊற்றிக் கொண்டவன், “இந்தா கிளாஸ், எடுத்திட்டு கிளம்பு. இனிமே என்னை பேஷண்ட் மாதிரி ட்ரீட் பண்ணாதே!” என்றான்.

“இவனுக்கு ஜூஸ் எடுத்திட்டு வந்தியா? உன்னை காணுமேனு தேடினேன்… எப்படி பேசுறான் பாரு! எவ்ளோ அக்கறையா இருக்கா? இப்படி எல்லாம் அன்பு கிடைக்கிறது கஷ்டம் டா, அனுபவி, நீ வாம்மா போலாம்” என்று அவளை அழைத்து சென்று விட்டார் அருணா. போகும் முன், அவனை திரும்பி அவள் பார்க்க, உதட்டை குவித்து காட்டினான் அர்விந்த். திகைத்து திரும்பிக் கொண்டாள் மலர்.

அவன் அறையில் உல்லாசமாக சிரித்துக்கொண்டு இருக்க, அவனின் நடத்தைக்கு காரணம் புரியாமல் இங்கே அவள் தன்னை குழப்பிக் கொண்டாள்.

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 28

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “17. நேசம் கூடிய நெஞ்சம்”

Leave a Reply to ArundathiPosalan Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!