🤎 நேசம் நீயாகிறாய்! 🤎
நேசம் 17
“யாரோ ஒரு தனுஜா சொன்னதுக்காக அவ்ளோ யோசிக்கிற நீ, உனக்கு தாலி கட்டுன நான் சொன்னதை துளியும் யோசிக்க மாட்ட?”
அவன் கேட்ட கேள்வி செவிப்பறையில் மோதி உள்நுழைந்தது எனில், இதயப்பறையில் பெருத்ததொரு அதிர்வை ஏற்படுத்தியது.
என்ன சொன்னான்? தனுஜாவா?
அப்படியென்றால் அவள் பேசியது இவனுக்குத் தெரியுமா? பேசும் போது கேட்டிருப்பானா?
மனம் கேள்விக் கணைகளை காற்று வேகத்தில் எய்தது.
“த..தனுஜா சொன்னது உங்களுக்குத் தெரியுமா?” தட்டுத் தடுமாறிக் கேட்க, “தெரியும். அவ சொன்னது எல்லாமே தெரியும். ஆனால் இப்போ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. அவ செட்டாக மாட்டானு சொன்னத பிடிச்சுக்கிட்டு தொங்குற. ஆனால் செட்டாகும்னு நான் சொன்னத காதுல கூட வாங்கல. எனக்கு உன் மனசுல அவ்ளோ தானே மரியாதை” விரக்தியோடு இதழ் விரித்தான் வேங்கை.
“இல்லங்க. அவ சொன்னது விஷயமில்லை. ஆனால் அது உண்மை தானே? நீங்க எவ்ளோ படிச்சு இருக்கீங்க, பெரிய டாக்டர் வேற. ஆனால் என்னைப் பாருங்க. எனக்கு படிப்புன்னாலே ஆகாது” என்று சொல்ல,
“எங்கம்மா எம்.ஏ பிடிச்சிருக்காங்க. உங்கம்மா பிஹெச்டி முடிச்சிருக்காங்க. அதனால தான் நம்மளை பெத்து வளர்த்து ஆளாக்கி இருக்காங்கள்ல?” நக்கலும் வன்மையுமாக அவன் கேட்ட போது பதில் சொல்ல முடியாமல் நின்றாள் தேனு.
“உனக்கு என்னைப் பிடிக்கல. அதனால தனு சொன்ன விஷயத்தை பிடிச்சுக்கிட்டு சீன் போடுற இல்லையா?”
“உங்களுக்கு தான் வேற யாரையோ பிடிச்சு இருந்துச்சு”
“இருந்துச்சுனு பாஸ்ட் டென்ஸ்ல சொல்லிட்டு, ப்ரசென்டல சண்டை போட்டு பியூச்சரையும் சேர்த்து கெடுக்கலாமா?” அவளுக்கு உண்மை நிலை உணர்த்த முயன்றான் ராகவ்.
“எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. உங்களுக்கு லவ் இருந்திருக்கு. அதுவும் கல்யாணத்தால தடைப்பட்டு போயிருக்கு. இப்போ ப்ரசென்ட் பியூச்சர்னு சொன்னா பாஸ்ட் இல்லேனு ஆகிடுமா? உடனே எப்படி ஏத்துக்க முடியும்?”
“உடனே ஏத்துக்க முடியாதுனு தான் டைம் தந்தேன். ஆனா நீ ஏத்துக்கிறதை விட்டு நினைச்சும் பார்த்ததில்லனு புரியுது. நீ மாறுவேனு நெனச்சது வீணாப் போச்சு”
அவன் சொன்னதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அந்தக் காதல் அவளைத் தடுத்தது, அத்தோடு தனுஜாவால் விதைக்கப்பட்ட எண்ணமும் கூட.
சாப்பிடச் செல்லும் போது மரகதம் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார். தேனு பரிமாற, அமைதியாக சாப்பிட்டவன் தாயின் அருகில் சென்றமர்ந்தான்.
அவன் முகத்தில் தெரிந்த சோகம் தாயானவளுக்குப் புரியாமல் போகுமா?
“என்னடா ஆச்சு?” அன்போடு அவர் வினவ, “ஒரே யோசனையா இருக்குமா. ஹாஸ்பிடல்ல ஒரு டீம் இன்னும் ரெண்டு நாள்ல யூ.எஸ்ல நடக்கிற மெடிக்கல் கேம்ப்கு போறாங்க. எனக்கு அதோட லீடர்ஷிப்பை ஏத்துக்க சொல்லி கேட்கிறாங்க” என்றான் மைந்தன்.
“உனக்கு இப்போ தானே கல்யாணம் ஆச்சு. அதுக்குள்ளே தூரமா போகனுமா ராகவ்?” மரகதத்தின் முகத்தில் கவலை குடி கொண்டது.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த மனைவிக்கு திக்கென்றது. சென்று விடுவானா? மனம் அலை கடலென கொந்தளித்தது.
“அதான் மாம் யோசிக்கிறேன். அவங்க போகனும்னு சொல்லுறாங்க. நான் நாளைக்கு சொல்லுறதா சொன்னேன். பார்ப்போம்” உணர்வுகள் மரத்துப் போன குரலில் வந்தன வார்த்தைகள்.
“யோசிச்சு பார் டா. எனக்கென்னவோ சரியா படல. ஆனா இதுல நீ தான் முடிவெடுக்கனும்” என்றவருக்கு அவன் செல்வதில் விருப்பம் இல்லை.
என்ன தான் இருவரும் சகஜமாக இருந்தாலும், அவர்களுள் ஒட்டுதல் இல்லை என்பதை மரகதம் உணர்ந்திருந்தார். புதுமணத் தம்பதியருக்கே உரிய சிரிப்பும், சீண்டலும், பிணைப்பும் அவர்களுள் கொஞ்சமும் இல்லை அல்லவா?
நிலமை இவ்வாறிருக்க, பிரிவு நேர்ந்தால் எவ்வாறிருக்கும் என அஞ்சியவருக்கு, இந்தப் பயணம் தேவை தானா என்று தோன்றியது.
“ஓகேமா. நான் பார்க்கிறேன். நீங்க தூங்குங்க” என தனது அறைக்குச் செல்ல, அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த தேனுவின் முகமே சொல்லியது அவளுக்கு இந்த விடயம் தெரியாது என்று.
அவளைப் பார்த்து புன்னகையொன்றைச் சிந்தி விட்டு மரகதம் சென்று விட, யோசனையில் ஆழ்ந்திருந்தவள் தானும் சாப்பிட்டு விட்டு அறையினுட் சென்றாள்.
அவள் வருகையை உணர்ந்து தலை தூக்கியவனது மனமோ, போக வேண்டாமென்று சொல்லி விடு என எதிர்பார்க்க, “யூ.எஸ்ல எத்தனை நாள் தங்கனும்?” என்று கேட்டிருந்தாள் நிலா.
“டென் டேய்ஸ் ஆகும். ஏன் கேட்கிற?”
“தெரிஞ்சுக்க தான்” என்றாள் மொட்டையாக.
“போக வேண்டாம்னு சொல்ல மாட்டியா?” மனதில் தோன்றியதை அடக்க முடியாமல் வெளிப்படையாகவே கேட்டு விட்டான் ராகவ்.
அவனது கேள்வியில் புருவம் சுருக்கியவள், “ஏன் வேணாம்னு சொல்லனும்? உங்களுக்கு இஷ்டம்னா போங்க” என்றவளின் மனமோ போக மாட்டேன் என்று சொல்’ என துடித்தது.
“நான் போறதுல உனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லைனு சொல்லுறியா?”
அவன் ஒரு மாதிரியாக வினவ, “உங்களுக்கு போக தேவைன்னா போங்க. நான் அதற்குக் குறுக்கா நிற்க மாட்டேன்” என பதிலுரைத்தவளுக்கு, அவன் அங்கு செல்ல ஆசைப்படுவதால் தான் தன்னிடம் அப்படிக் கேட்கிறான் எனும் எண்ணம்.
அவனது பயணத்தை கெடுப்பானேன் என்று நினைத்து அவ்வாறு சொல்ல, அவனோ அவளுக்குத் தன்னை அனுப்புவது தான் எண்ணம் என்று நினைத்துக் கொண்டான்.
“அப்போ நான் போறேன். அம்மா கேட்டா நீ ஓகே சொன்னேன்னு சொல்லுவேன். அவங்க கிட்ட மாற்றி பேசக் கூடாது”
“நான் எதுவும் சொல்ல மாட்டேன். போக நினைக்கிறவர் என் கிட்ட எதுக்கு பர்மிஷன் கேட்கனும்?” சற்றே காரமாக வினவினாள்.
“பர்மிஷன் கேட்டுத் தான் ஆகனும். ஏன்னா நீ என் வைஃப்” இறுதிச் சொல்லில் அழுத்தம் கொடுத்து மொழிந்தான்.
“ஆனா நான் உங்களுக்கு செட்..” என அவள் சொல்ல வர, “இனாஃப் தேன் நிலா” அவளது பெயரை உரைக்க, ஏதோவொரு உணர்வு அவளுக்கு.
“எவ்ளோ சொல்லிப் பார்த்தும் நீ திருந்துற மாதிரி தெரியல. பேசி பேசி இருந்தா வாக்குவாதம் முற்றுமே தவிர வேறு எதுவும் நடக்கல. நான் முடிவெடுத்துட்டேன்” என்றவன் தூங்கிப் போக, அவனையே பார்த்திருந்தவளும் என்ன முடிவு என்ற யோசனையோடு உறங்கினாள்.
மறுநாள் எதுவும் பேசாமல் ஹாஸ்பிடல் சென்று விட்டு சீக்கிரமே திரும்பி வந்தவனை மரகதம் புரியாமல் பார்க்க, “நாளைக்கு யூ.எஸ் போறேன்மா. மார்னிங் ஃப்ளைட். அதுக்கான வேலைகள் இருக்கு. நான் வர லேட் ஆகும்” என பொதுவாக அறிவித்து விட்டுச் சென்றான்.
அவன் கூறிய முடிவு இது தான் என்று புரிந்து கொண்ட தேனுவுக்கு ஒரு கணம் கைகள் வேலை நிறுத்தம் செய்தன. மறு கணமே தன்னை மீட்டுக் கொண்டு காய்கறி வெட்ட, “உன் கிட்ட சொன்னாளா தேனு?” கவலையோடு கேட்டார் மரகதம்.
“ஆமா அத்தை! நேற்று நைட் சொன்னார். என் கிட்ட போகவானு கேட்டார். அவரோட வேலை அது. அதனால போயிட்டு வாங்கனு சொன்னேன்” முகபாவனையை மாற்றிக் கொண்டு கூறினாள்.
“அப்படினா சரிமா. ஆனாலும் மனசு உறுத்துது. கல்யாணமான புதுசுல இப்படி விட்டுப் போகனுமானு. ஆனா என்ன செய்யுறது. கடவுள் என்ன எழுதி இருக்காரோ அதான் நடக்கும்” தன் மகனது வாழ்வு நல்லபடியாக இருக்க வேண்டும் என வேண்டுதல் வைத்தவாறு சமையலைக் கவனிக்கலானார்.
சமைத்து முடித்து அறையினுள் வந்த தேன் நிலாவுக்கு யோசனையாக இருந்தது. செல்ல வேண்டுமா என்று கேட்ட போது வேண்டாமென சொல்லி இருக்கலாமோ?
ஆனால் அவ்வாறு சொல்லுமளவு அவனிடம் தனக்கு உரிமை உண்டா என வேறு விதமாக யோசித்தாள்.
நேரங்கள் உருண்டோடி, இரவானது. ராகவ் வந்தவன் தனது லக்கேஜில் உடைகள் அடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு புருவம் சுருக்கினான்.
தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்ததும், “விட்டது தொல்லைனு சந்தோஷமா வழியனுப்பப் போறியா? அவ்ளோ சிரத்தை எடுத்து என் ட்ரெஸ்ஸை எடுத்து வெச்சிருக்க?” எனக் கேட்டான்.
“நைட் லேட்டாகி வந்தா காலையில் போகனுமே. டயர்ட்ல இதையும் செய்ய வேண்டாம்னு தான் நான் எல்லாமே எடுத்து வெச்சேன். செக் பண்ணிக்கோங்க” அவனது பேச்சில் பற்றிக் கொண்டு வந்தது அவளுக்கு.
“ஓகே ஓகே மேடம்” அதனை சரிபார்த்து, வேறு சில பொருட்களையும் எடுத்து வைத்தான்.
“ஓகேயாம் ஓகே” அவள் வேக மூச்சுகளை எடுத்து விட, “எதுக்கு இவ்ளோ கோபம்?” புருவம் உயர்த்தினான்.
“உங்க இஷ்டத்து பேசினா நாங்க கேட்டுட்டு இருக்கனுமா? புரிஞ்சுக்காம பேச வேண்டியது”
“என்ன சொன்ன? புரிஞ்சுக்காதது.. எக்ஸாட்லி! அந்த புரிதல் ரொம்ப ரொம்ப அவசியம். அது இல்லனா இப்படி தான் காரமும் கசப்புமா வாழ்க்கை போகும்” எதையோ நினைத்தவனாகச் சொல்ல,
“எதையோ பூடகமா பேசுற மாதிரி விளங்குது”
‘தெளிவா பேசுறதே விளங்காம இருக்கு. இதுல பூடகமா பேசுறேனாம். சுத்தம்’ மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான் அவன்.
“என்ன என்ன மைண்ட் வாய்ஸ்?”
“சேர்க்கை சரியில்லை. உன் கூட இருந்து இருந்து மைண்ட் வாய்ஸ்ல பேசுற பழக்கம் எனக்கும் தொத்திக்கிச்சு” என்று அவன் கூற,
“அதான் என் பழக்கத்தை கட் பண்ணிட்டு போறீங்களே சந்தோஷமா இருங்க” முறைப்பை அள்ளி வீச, “ஆமா கட் பண்ண தான் போறேன். பழக்கத்தை இல்ல, உன் வாயை” அவனும் முறைத்துப் பார்த்தான்.
“என் வாய் மேல அப்படி என்ன கண்ணு உங்களுக்கு?”
“உன் வாய் மேல நான் எதுக்கு கண்ணு வைக்கனும். பேசாம தூங்கு”
“ஆமா! எனக்கு மட்டும் ஆசை பாரு. இந்த ரஷ்யாக்காரனோட ராத்திரி பூரா ராக்கெட் விடனும்னு” மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.
“தேற மாட்ட டி தேன் நிலா” என்றவாறு அவனும் தூங்கிப் போனான்.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி
2024-11-20