முள் – 17
ஒரே படுக்கையில் படுத்திருந்த இருவரின் மனநிலையும் வெவ்வேறாக இருந்தது.
தன் வாழ்க்கையை முற்றிலும் வெறுத்தவனாக அவன் தன் விழிகளை மூடிக்கொண்டு உறங்க முயற்சிக்க,
குழந்தைக்கு மறுபக்கம் படுத்து இருந்தவளுக்கோ விழிகளில் கண்ணீர் கசிந்தது.
எங்கே தான் அழுவது தெரிந்து விடுமோ என அடக்கிக் கொண்டு மௌனமாக தேம்பியவளின் மனம் முழுவதும் ரணமாகி இருந்தது.
அதே கணம் தியா எழுந்து அழத் தொடங்கி விட ஒரே நேரத்தில் இருவரும் பதறி எழுந்தனர்.
அவள் குழந்தையைத் தூக்குவதற்கு முதல் அவன் தூக்கிக் கொண்டவன் தன் மார்பின் மீது சாய்த்தவாறு அவளைப் பார்த்தான்.
அவளுடைய வீங்கிச் சிவந்த கண்ணீர் முகத்தைக் கண்டதும் ஒரு கணம் திகைத்துப் போனவனுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.
தன்னுடைய காதலனை நினைத்துதான் அழுகின்றாள் போலும் என எண்ணிக்கொண்டவன் குழந்தையைத் தட்டிக் கொடுக்க, குழந்தையோ அப்படியே அவன் மார்பின் மீது படுத்துக் கொண்டது.
“தொட்டில்ல போட்டு ஆட்டினா சீக்கிரமா தூங்கிடுவா..” என தன் கண்ணீர் நிறைந்த விழிகளை அவசர அவசரமாக துடைத்துக் கொண்டு கூறினாள் அவள்.
‘இல்ல நீ தூங்குமா.. நான் பாத்துக்குறேன்..” என்றவன் அவளைப் படுக்கச் சொல்லிவிட்டு குழந்தையை மெல்லத் தட்டிக் கொடுக்க அவன் மார்பின் மீது படுத்து உறங்கி விட்டாள் தியா.
இருவருக்கும் நடுவில் சிறிய சுவர் போல இருந்த குழந்தையோ அவனுடைய மார்புக்கு இடம்பெயர்ந்து விட அவனுடைய அருகாமையில் திணறிப் போனாள் சாஹித்யா.
பதற்றமாக இருந்தது.
அவன் அருகே படுக்க முடியாது சட்டென எழுந்து கொண்டவள் அந்த அறைக்குள் இருந்த சோபாவில் சென்று அமர்ந்து கொள்ள அவளைக் கேள்வியாகப் பார்த்தான் அவன்.
“என்ன ஆச்சு தூங்கலையா..?”
“இல்லங்க.. இப்போ ஸ்டடி லீவு விட்டுருக்காங்க.. இன்னும் நாலு நாள்ல எக்ஸாம் இருக்கு.. இந்த பிரச்சனைல நான் படிக்கவே மறந்துட்டேன்..”
“அப்படியா..? பரவால்ல.. இப்பவே ரொம்ப லேட் ஆயிடுச்சு.. இப்போ தூங்கு.. நாளைக்கு நீ படிக்கிறதுக்கு நான் ஹெல்ப் பண்றேன்..”
“அச்சச்சோ மறுபடியும் உங்ககிட்ட படிக்கணுமா..? என்னால முடியாதுடா சாமி.. நானே படிக்கிறேன்..” என்றவள் வேகமாக தலையை அசைத்து மறுக்க அதிர்ந்து போனவன்,
“வாட்..? நீ எப்போ என்கிட்ட படிச்ச..?” என புருவம் உயர்த்திக் கேட்டான் அவன்.
அவன் கேட்டதன் பின்னர்தான் உளறி விட்டோம் என்பதை உணர்ந்து தன் முட்டைக் கண்கள் வெளியே வந்து விழுந்து விடும் அளவிற்கு விழிகளை விரித்தவள் “அதானே நான் எப்போ உங்ககிட்ட படிச்சேன்..? நான் சும்மா சொன்னேன்… வாய் தவறி வந்துடுச்சு..” என சமாளித்தவள் புத்தகத்தை மூடிவிட்டு ஓடிவந்து படுக்கையின் ஓரத்தில் சுருண்டு படுத்துக்கொள்ள இவனுக்கோ சந்தேகமாக இருந்தது.
“பாப்பா.. நீ எந்த ஸ்கூல் படிச்ச..?”
“ஏங்க.. என்ன பாத்தா உங்களுக்கு பாப்பா மாதிரியா இருக்கு..? இன்னும் கொஞ்சம் வெயிட் போட்டேன்னா பீப்பா மாதிரி ஆயிடுவேன்.. இப்பவும் பாப்பா பாப்பான்னு கூப்பிடுறீங்களே..”
“நீ பீப்பாக மாறினாலும் எனக்கு பாப்பாதான்..” என சிரித்தான் அவன்.
“ஹி.. ஹி.. எனக்கு தூக்கம் வருது.. குட் நைட்…” என்றவள் அவனுடைய கேள்வியை திசை திருப்பிவிட்டு படுத்துக்கொள்ள,
“ஹேய் நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்லையே.. நீ எந்த ஸ்கூல்ல படிச்ச..?” என அவன் கேட்க, படபடத்துப் போனாள் அவள்.
“எதுக்கு கேக்குறீங்க..?”
“நீ எங்க ஸ்கூல் படிச்ச..? எந்த ஸ்கூல்ல படிச்சேன்னு முதல்ல சொல்லு..”
“பாட்டி தாத்தா இங்க தானே இருந்தாங்க.. அதனால இந்த ஊர்ல இருந்த ஸ்கூல்லதான் படிச்சேன்..”
“பைரவி லேடிஸ் ஸ்கூலா..?”
“ம்ம் ஆமா..”
“ஓ மை காட் என்ன முன்னாடியே உனக்குத் தெரியுமா..? என்னோட கிளாஸ்ல நீ இருந்திருக்கியா..?” என அதிர்ச்சியாகக் கேட்டான் அவன்.
ஆம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பு வரை அவன் பைரவி எனும் பாடசாலையில்தான் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தான்.
அதன் பின்னர்தான் நல்ல சம்பளத்தில் கப்பலில் வேலை கிடைத்துவிட அந்த வேலையை விட்டுவிட்டு கப்பல் வேலைக்குச் சென்று சேர்ந்திருந்தான் யாஷ்வின்.
அவனைப் பார்த்து சிரித்து வைத்தவள்,
“உங்களைல் தெரியாம இருக்குமா..? நல்லாவே தெரியும்.. நீங்க செய்யுள் எல்லாம் சூப்பரா சொல்லிக் கொடுப்பீங்களே..”
“ஹேய் நீ என்னோட ஸ்டூடண்ட்டுன்னு எனக்கு இப்போதான் தெரியும் பாப்பா.. நிறைய பேர் படிச்சதால என்னால உன்னோட முகத்தை ஞாபகம் வச்சுக்க முடியல.. உங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்க வந்தப்போவே என்கிட்டே இதை சொல்லி இருக்கலாமே..?”
“எப்போ பாத்தாலும் ஸ்கூல்ல விறைப்பா பிரம்போட சுத்துவீங்க.. உங்கள பாத்தாலே பயமா இருக்கும் அதனாலதான் உங்ககிட்ட நான் உங்க ஸ்டூடண்ட்டுன்னு சொல்லவே இல்ல.. 40 பேர்ல ஒருத்தரா இருந்துட்டு போயிடுவோம்னு நினைச்சேன்.. ஆனா நீங்கதான் அதுக்கப்புறம் ஸ்கூலுக்கு வர்றதையே நிறுத்திட்டிங்களே..”
“ஆமா பாப்பா… அதுக்கப்புறம்தான் கப்பல்ல வேலை கிடைச்சுது.. உங்க அக்காவ கல்யாணம் பண்ணி குடும்பத்துக்காக ஓட ஆரம்பிச்சிட்டேன்.. ஆனா என்னோட வாழ்க்கையும் இப்படி என்னை விட்டு தூரமா போயிடும்னு கனவுல கூட நினைக்கல.. அடுத்து என்ன நடக்கும்னு நமக்கு தெரியாதுல்ல.. மது இப்படி பண்ணுவானு நான் நினைச்சே பாக்கல.. இப்போ நினைச்சா கூட நெஞ்செல்லாம் வலிக்குது..” என்றவனை வேதனையுடன் பார்த்தவள்,
“சரி தூங்குங்க.. எனக்கு தூக்கம் வருது..” என தன் பேச்சை முடித்துக் கொண்டாள்.
அவளுக்கு தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது.
இதய பகுதிக்குள் சுளீர் என்ற வலி அவளைத் தாக்க எங்கே அழுது விடுவோமோ எனப் பயந்து விழிகளை இறுக மூடிக்கொண்டவள் அவனுடைய பக்கம் திரும்பாமல் மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
***
இரவு வெகு நேரத்தின் பின்னர் உறங்கியதாலோ என்னவோ காலையில் தாமதமாகவே துயில் நீங்கி எழுந்தாள் சாஹித்யா.
நேரமோ காலை எட்டைத் தொட்டிருக்க பதறி எழுந்தவள் அவிழ்ந்து கிடந்த கூந்தலை அப்படியே அள்ளி தன் மார்பின் மீது முன் பக்கமாக போட்டவாறு ஹாலுக்கு வந்தாள்.
அங்கே தியா பாப்பாவுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்த யாஷ்வினைக் கண்டதும் அவள் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
“ப்பா.. ப்ப்பாஆஆ.. ங்கே நா.. வா..” என அவளுக்குத் தெரிந்த வார்த்தைகளைப் பேச முயன்று கொண்டிருந்த தியாவை அள்ளிக் கொஞ்ச வேண்டும் எனத் தோன்றிய ஆசையை அடக்கிக்கொண்டவள்,
“டீ போட்டு தரட்டுமா..?” எனக் கேட்டாள்.
“நான் ஆல்ரெடி போட்டு குடிச்சிட்டேன்மா.. பாப்பாக்கு பால் கொடுத்துட்டேன்.. உனக்கு எடுத்து வந்து கொடுக்கட்டுமா..?” எனக் கேட்டவனைப் பார்த்து அவளுக்கு வியக்காமல் இருக்க முடியவில்லை.
இந்த காலத்தில் இப்படி ஒரு ஆணா..?
மிகவும் நல்லவனாக இருந்தாலும் பிரச்சனைதான் போலும் என எண்ணிக்கொண்டள்,
“இல்லங்க நானே போட்டு எடுத்துக்கிறேன்..” எனக் கூறிவிட்டு ப்ரஷ் செய்வதற்காக வெளியே சென்றுவிட அவனோ மீண்டும் குழந்தையுடன் விளையாடத் தொடங்கிவிட்டான்.
காலைக்கடன்கள் எல்லாம் முடித்துவிட்டு ஈரக் கூந்தலை கோதியவாறு உள்ளே வந்தவள் பெரிய பிரம்பும் அவளுடைய புத்தகங்களும் மேஜையின் மீது இருப்பதைக் கண்டு திகைத்து விட்டாள்.
“ஐயோ என்ன இது..?”
“இன்னும் பத்து நிமிஷம்தான் உனக்கு டைம்.. சீக்கிரமா தலையை துவட்டிட்டு வா படிக்கலாம்…”
“அ.. அடிப்பீங்களா..?”
“ஒழுங்கா படிக்கலைன்னா கண்டிப்பா அடிப்பேன்..” என்றவனைப் பார்த்து அவள் மார்பில் கை வைத்து பதற,
அவளுடைய விழிகளில் தெரிந்த சில நொடி பயத்தில் அவனுக்கோ சட்டென சிரிப்பு வந்துவிட்டது.
“என்ன பாப்பா இது? சின்ன பிள்ளை மாதிரி பிரம்பைப் பார்த்து பயப்படுற.. வா ஏதாவது டவுட்ஸ் இருந்தா கேளு.. கிளியர் பண்றேன்..” என்றான் அவன்.
“இல்ல பரவால்ல உங்களுக்கு எதுக்கு சிரமம்..?” என இழுத்தாள் அவள்.
“இதுல என்ன சிரமம் இருக்கு..?”
“ஒன்னு ரெண்டு டவுட்ஸ்னா கேட்கலாம்.. புத்தகம் முழுக்க டவுட்ஸாக இருந்தா எப்படி கேட்கிறது..?” என இழுத்தவளை அடிப்பாவி என்பதைப் போல பார்த்து வைத்தவன்,
“ஏதாவது அரியர்ஸ் வச்சிருக்கியா..?” எனக் கேட்டான்.
அத்தனை பற்களையும் காட்டி சிரித்தவள் “மூணு இருக்கு..” என்றதும்
“எல்லா அரியர்ஸையும் எப்படியாவது கிளியர் பண்ணிடு..” என அவன் உத்தரவிட,
என்னைக் கல்யாணம் பண்ணதும் புருஷன் கொடுமை பண்றீங்களா..? அவ்ளோ சீக்கிரமா எல்லாம் மூணு அரியர்ஸ் கிளியர் பண்ண முடியாது.. எனக்கு டைம் வேணும்..” என தலையை திருப்பிக் கொண்டாள் அவள்.
அதே கணம் அவனுடைய அலைபேசி சிணுங்க அதனை ஏற்று காதில் வைத்தவன்,
“சொல்லு ரமேஷ்.. நான் கேட்ட டீடெயில்ஸ் எல்லாம் செக் பண்ணி பாத்தியா..?” எனக் கேட்டான்.
மறுபுறம் அவனுடைய நண்பன் கூறிய பதில் அவனை மிகவும் திகைக்க வைத்தது.
“சரி ஓகே தேங்க்ஸ் டா.. நான் பாத்துக்குறேன்..” எனக் கூறிவிட்டு சாஹித்யாவைப் பார்த்தவன்
“கடந்த மூணு இல்ல இல்ல அஞ்சு வருஷத்துல எந்த பிளைட்டும் ஸ்ரீலங்கால இருந்து கனடா போற நேரத்துல ஆக்சிடென்ட் ஆகவே இல்லை.. நீ சொன்ன மாதிரி நடந்ததுக்கு எந்த சாட்சியும் இதுவரைக்கும் இல்லை.. என்கிட்ட பொய் சொல்றியா பாப்பா நீ?” என அவன் அழுத்தமான குரலில் கேட்க பிடிபட்டு விட்டோமோ எனப் பதறியவளுக்கு நெஞ்சம் பதைபதைத்தது.
வான்மதியைப் போல இவளும் தன்னை பொய் கூறி ஏமாற்றிவிட்டாளா என எண்ணி நொறுங்கிப் போனான் அவன்.
💜💜💜