காலையில் நேரத்திற்கே வேலைக்கு வந்த அர்ச்சனாவின் விழிகளோ ஆவலாக தேடியதென்னவோ யாழவனை மட்டும்தான்.
அவன் இன்னும் மருத்துவமனைக்கு வரவில்லை என்பது புரிய தன் தலையில் தானே தட்டிக் கொண்டவள்,
‘ரொம்ப அலையிறோமோ..?’ என எண்ணிச் சிரித்தபடியே தன் வேலையைத் தொடங்கி விட சற்று நேரத்தில்,
“அர்ச்சனா சார் உன்னை வந்து மீட் பண்ணச் சொன்னாரு..” என டாக்டர் ஒருவர் வந்து கூற அவளுக்கோ இதழ்களுக்குள் புன்னகை.
வந்துவிட்டான் என மனதிற்குள் எண்ணிக் குதூகலித்தவள்
“ஓகே டாக்டர் நான் போய் என்னன்னு கேட்கிறேன்..” எனக் கூறிவிட்டு வேகமாக யாழவனுடைய அறையை நோக்கி செல்லத் தொடங்கினாள்.
அவனுடைய அறைக் கதவின் வாயிலில் நின்று கதவை இருமுறை தட்டியவள் “சார் மே ஐ கம் இன் ..” என கேட்க,
சட்டென விரியத் திறந்தது கதவு.
“இளவரசி அவர்களே தாங்கள் கதவைத் தட்டலாமா..? இது தங்களுடைய வருங்காலக் கணவரின் அறையல்லவா…?” என அவன் அரச பாணியில் பேச இவளுக்கோ உதடுகள் சிரிப்பில் துடித்தன.
“நன்றி இளவரசே..” என்றவள் புன்னகையோடு உள்ளே நுழைய அவளையே இமைக்காது பார்த்தவன்,
“பேபி ரொம்ப க்யூட்டா இருக்க..” என்றான்.
இதழை மடித்துக் கடித்துக் கொண்டவள் அமைதியாகிவிட அவளுடைய வெட்கத்தை உணர்ந்தவனுக்கு உற்சாகமாக இருந்தது.
“அச்சு எதுக்கு லிப்ஸைக் கடிக்கிற…? அதெல்லாம் என்னோட வேலை நீ பண்ணக் கூடாது..” என அவன் அவளுடைய உதடுகளைப் பார்த்தவாறே கூற அவளுக்கு முகம் செங்கொழுந்தாக மாறிவிட்டது.
“ச்சீ.. நீங்க மோசம் யாழன்..” என்றவளின் சிவந்த கன்னங்களைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தவன் “ஒரே ஒரு ஹக் பண்ணிக்கட்டுமா…” என ஆழ்ந்த குரலில் கேட்டான்.
“நோ..”
“அடியே ஏன்டி இப்படி பண்ற..?”
“எப்படி பண்றேன்..?”
“ஜஸ்ட் ஹக்தானே கேட்டேன் அதுக்கு கூட நோ சொன்னா எப்படி..?”
“நோ மீன்ஸ் நோ..”
“போடி நீதான் இப்படி பண்ற.. அன்னைக்கு பொண்ணு பாக்க போன இடத்துல ஆர்த்தி கூட என்ன ஹக் பண்ணி செல்பி எடுத்தா..” என யாழவன் கூற நொடியில் அர்ச்சனாவின் முகமோ மாறிப்போனது.
“ஹக் பண்ணாங்களா..?” என அவள் அதிர்ந்து கேட்க,
“ம்ம் போட்டோக்கு போஸ் கொடுக்கிறதுக்காக ஹக் பண்ணா..” என சாதாரணமாகக் கூறினான் அவன்.
“ஓஹ்..?” என்றதோடு அமைதியாகி விட்டாள் அவள்.
“அந்த போட்டோவ எனக்கு அனுப்பி இருந்தாளே..” என்றவன் தன்னுடைய ஃபோனை எடுத்து ஆர்த்தியுடன் எடுத்த புகைப்படத்தை சிரித்தவாறே அவளிடம் காட்ட,
இருவரின் நெருக்கத்தையும் அலைபேசியின் திரையில் பார்த்தவளுக்கு ஒரு கணம் உள்ளம் உடைந்து போனது.
“நா.. நான் போறேன்..” என்றவள் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேற முயற்சி செய்ய சட்டென அவளுடைய ஒற்றைக் கரத்தைப் பற்றி நிறுத்தியவன்.
“ஏய் என்ன ஆச்சு..? இப்போ தானே வந்த.. அதுக்குள்ள எதுக்கு கிளம்புற..?” என அவன் புரியாமல் கேட்க,
“என்னைத் தானே புடிச்சிருக்குன்னு சொன்னீங்க என்னைப் பிடிச்சிருக்கும்போது இன்னொரு பொண்ண உங்களால எப்படி ஹக் பண்ண முடிஞ்சது..?”
“ப்ச் நான்தான் சொன்னேன்ல.. ஹக் சின்ன விஷயம்டி..”
“ரெண்டு பேரோட உடம்பும் இப்படி உரசிக்கிட்டு இருக்குறது சின்ன விஷயமா..?”
“அச்சு ஸ்டாப் இட்.. இது ஜஸ்ட் அ நார்மல் ஹக்டி..”
அவளுக்கோ அவன் கூறுவதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மனம் வெகுவாக வலித்தது.
உயிருக்கு உயிராக நேசிக்கும் ஒருவனுடைய அணைப்பில் இன்னொரு பெண் இருப்பதைக் கண்டால் அதை எந்தக் காதலியால்தான் தாங்கிக் கொள்ள முடியும்..?
அவளுக்கோ விழிகள் கலங்கிவிட்டன.
ஆர்த்தி அவனுடைய கைகளுக்குள் நின்று நெஞ்சில் சாய்ந்தவாறு எடுத்த புகைப்படம் அவளுடைய விழிகளுக்குள் மீண்டும் மீண்டும் தோன்ற சட்டென விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது.
அவள் அழுகின்றாள் என்றதும் யாழவனுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.
“பேபி லிசின்.. நீ நினைக்கிற மாதிரி எதுவுமே இல்லைடி ஜஸ்ட் அவ அஃபீசியல் ஹக்னு நினைச்சுக்கோ..”
“யாழன் ப்ளீஸ் ஹக் பண்ணதே தப்பு.. இதுல ஜஸ்ட் ஹக்தானே அஃபீஸியல் ஹக்குன்னு நினைச்சுக்கோன்னு என்கிட்ட தயவு செஞ்சு சொல்லாதீங்க.. இதே மாதிரி நான் இன்னொருத்தனை ஹக் பண்ணி போட்டோ எடுத்து உங்களுக்குக் காட்டினா உங்களுக்கு எப்படி இருக்கும்..?”
“எனக்கு உன்னைப் பத்தி நல்லா தெரியும் அர்ச்சனா.. அப்படி போட்டோ பார்த்தாலும் நான் புரிஞ்சுப்பேன்.. இப்படி சண்டை போட மாட்டேன்..” என்றான் அவன்.
அதிர்ந்து விட்டாள் அவள்.
அவளுடைய அதிர்ந்த பார்வையில் தன் நெற்றியை அழுத்தமாக தேய்த்துக் கொண்டவன் அவளை நிதானமாகப் பார்த்தான்.
“நா.. நான் அவளை ஹக் பண்ணவே இல்லடி.. அவதான் என்னை..” என அவன் கூறி முடிக்க முதலில் தன் காதுகளைப் பொத்தியவள் “போதும்…” என்றிருந்தாள்.
பேசிக் கொண்டிருக்கும்போது இடையிட்டு அவள் நிறுத்தியதும் யாழவனின் பொறுமையோ பறந்து போனது.
“ஆமாடி ஹக் பண்ணிட்டேன் இப்போ என்ன..?” என அவன் சத்தமாக கத்திவிட அவளுக்கோ உடல் விதிர்விதிர்த்துப் போனது.
அந்தப் புகைப்படத்தைப் பார்த்து மனம் உடைந்து போய் இருந்தவள் அவனுடைய கோபமான வார்த்தைகளில் நொறுங்கிப் போனாள்.
விழிகளில் பொல பொலவென கண்ணீர் நில்லாமல் வழிய அந்த அறையை விட்டு வேகமாக வெளியேற முயன்றவளின் எதிரே வந்து நின்றான் யாழவன்.
“அச்சு ஸ்டாப்… என்கிட்ட எதுவுமே பேசாம போனா என்ன அர்த்தம்..?”
“நான் கோபமா இருக்கேன் யாழன்.. இப்போ என்னை என்ன பண்ணச் சொல்றீங்க..? கோபத்தை மறந்துட்டு எதுவுமே நடக்காத மாதிரி உங்ககிட்ட பேசச் சொல்றீங்களா..?”
“அர்ச்சனா ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற..? லிசன் நான் உன்னதான் லவ் பண்றேன்.. உன்ன தவிர இப்போ உலக அழகியே வந்து என்ன ஹக் பண்ணா கூட எனக்கு எந்த ஃபீலிங்ஸ்ஸுமே வராதுடி.. எங்க அம்மா மேல சத்தியமா உன் மேல வந்த லவ் இதுவரைக்கும் வேறு எந்த பொண்ணும் மேலயும் எனக்கு வந்ததே கிடையாது.. நான் உன்னை மட்டும்தான் லவ் பண்றேன்..
அன்னைக்கு கூட நான் அவளை ஹக் பண்ணவே இல்லடி.. செல்பி எடுக்கணும்னு கேட்டா அதனால போஸ் கொடுத்தேன்.. அவ ஹக் பண்ணதுக்கு நான் என்ன பண்றது..? ஹக் பண்ணதும் தள்ளிவிட்டுப் போற அளவுக்கு மேனர்ஸ் கிடையாதவன் நான் இல்லை.. நான் வளர்ந்த சூழலும் அப்படிப்பட்டதில்ல..
இதுக்கு மேலயும் நான் பண்ணது உனக்கு தப்புன்னு தோணுச்சுன்னா ஐ அம் ரியலி சாரி.. இதைவிட வேற என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியலடி..” என இறுக்கமான குரலில் அவன் கூறி முடிக்க அவளோ இன்னும் உடைந்தவளாக கண்ணீரை சிந்த,
அவளுடைய விழி நீரை தாங்க முடியாது அவளுடைய ஒற்றைக் கரத்தைப் பற்றி இழுத்து அவளை இறுக அணைத்துக் கொண்டவன்,
“சரிடி உனக்கு இன்னும் கோபம் போகலைன்னா என்ன அடிச்சிடு.. இப்படி பேசாம அழுதுகிட்டே போகாத பேபி.. எனக்கு ஒரு மாதிரி ஹர்ட் ஆகுது… இப்படிப்பட்ட வர்ஸ்ட் ஃபீலை நான் இதுவரைக்கும் அனுபவிச்சதே இல்ல.. எனக்கு வலிக்குது பேபி.. நீ என்ன அவாய்ட் பண்ணாத..” என்றான்.
அவனுடைய கலங்கிய வார்த்தைகளில் அதற்கு மேல் கோபத்தைக் காட்ட முடியாது அவனுடைய மார்பில் தன் முகத்தை நன்றாக புதைத்துக் கொண்டவள்,
“எனக்கும் வலிக்குது யாழன்… என்னால உங்களை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது.. உங்க பக்கத்துல இன்னொரு பொண்ணு இருக்கறத பார்த்தாலே எனக்கு தாங்க முடியல.. உங்க மேல கோபப்படணும் அவாய்ட் பண்ணனும்னு எனக்கு என்ன ஆசையா..? கஷ்டமா இருக்கு யாழன்..
என்னோட புருஷன் என்கிட்ட மட்டும்தான் நெருக்கமா இருக்கணும்னு நான் நினைக்கிறதுல என்ன தப்பு..? நீங்க லண்டன்ல வளந்திருக்கலாம் ஆனா உங்களுக்கு இந்திய கலாச்சாரம் தெரியும்தானே..? இதுக்கப்புறமும் என்னோட மனச எப்படி உங்களுக்கு புரிய வைக்கிறதுன்னு சத்தியமா எனக்குத் தெரியல..”
அவளுடைய வார்த்தைகளில் அவனுடைய உடலில் ஒரு விதமான அதிர்வு.
சாதாரண அணைப்பு கூட அவளை காயப்படுத்துகின்றது என்றால் இனி அவன் தன்னுடைய நடைமுறையை மாற்றிக் கொள்ள வேண்டுமோ..?
இனி ஒரு முறை அவளுடைய விழிகளில் கண்ணீர் வந்தால் நிச்சயமாக அவனால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது.
யாராக இருந்தாலும் சிறு பார்வையோடு அவர்களுடன் பேசி முடித்து விட வேண்டும்.
இன்னொரு முறை என் பழக்கவழக்கங்களால் அர்ச்சனா காயப்பட்டு விடக்கூடாது என உறுதியான முடிவை எடுத்துக் கொண்டவன் தன் மார்பில் சாய்ந்து இருந்த தேவதைப் பெண்ணின் உச்சியில் முத்தம் பதித்தான்.
அந்த முத்தத்தை உணர்ந்து மெல்ல விழிகளை மூடித் திறந்தவள் அவனுடைய மார்பை தன்னுடைய ஒற்றை விரலால் தொட்டுக்காட்டி “இது எனக்கு மட்டும்தான் சொந்தம்..” எனக் கூற அப்படியே அவளுடைய இடையில் கரத்தை பதித்து அவளைத் தன்னுடைய கரங்களில் ஏந்திக் கொண்டவன் அதிர்ந்து விழித்தவளின் இதழ்களை அதிரடியாகக் கவ்விக் கொண்டான்.
ஆழமான அழுத்தமான முத்தம் அது.
அவளோ துவண்டு அவன் அணிந்திருந்த ஷர்ட் காலரை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள,
வற்றாத தேன் குடுவையில் தேனை இடைவிடாமல் எடுப்பதை போல அவளுடைய உதடுகளில் தேனை உறிஞ்சி எடுத்தான் யாழவன்.
ஒரு கட்டத்தில் அவளுக்கும் மூச்சு எடுக்க முடியாமல் போக விருப்பமே இன்றி அவளுடைய உதடுகளை அவன் விடுவித்த கணம் அவளுடைய விழிகளோ சட்டென வெட்கத்தில் மூடிக்கொண்டன.
அவளுடைய கன்னத்தில் வழிந்து இருந்த கண்ணீர்த் துளிகளை தன்னுடைய உதடுகளால் துடைத்து விட்டவன்
பூமாலை போல தன்னுடைய கரங்களில் தூக்கி வைத்திருந்தவளை மெல்ல கீழே இறக்கி விட்டான்.
தடுமாறி நிதானம் இல்லாமல் சரிய முயன்றவளை சட்டென அவன் பிடித்து நிறுத்திக்கொள்ள,
“ஏ.. ஏன் இப்படி பண்றீங்க..?” என பலவீனமான குரலில் வெட்கம் ததும்ப கேட்டவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“என் கூட சண்ட போட்டதுக்கு பனிஷ்மென்ட் கொடுத்தேன்.. இனி எப்போ எல்லாம் நீ என்கூட சண்டை போடுறியோ அப்போலாம் இதுதான் உனக்கு பனிஷ்மென்ட்..” எனக் கூறி அவன் இமை சிமிட்ட அவனுடைய மார்பில் தன் கரத்தால் குத்தியவள்,
“பேட் பாய்..” என்ற முணுமுணுப்போடு தானாகவே அவனுடைய மார்பில் சாய்ந்து கொண்டாள்.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.👌👌👌👌👏👏👏👏😍😍😍🥰🥰🥰🤩🤩🤩❤️❤️❤️❤️❤️