18. சிறையிடாதே கருடா

4.6
(19)

கருடா 18

கம்பீரமாகப் பார்த்த மகனை, இப்படித் தலை குனிந்து பார்ப்பது வருத்தமாக இருந்தாலும், மருமகளோடு சேர்ந்திருப்பதைப் பார்க்க மகிழ்வாக இருந்தது. அதில் சற்று நிம்மதி அடைந்தவர் அவர்களைத் தாண்டிச் சென்றார். அன்னை நகர்வதை உணர்ந்தவன் குற்ற உணர்வோடு தலையை நிமிர்த்தினான்.

“போய்ப் பேசு!”

அவளுக்குப் பதிலளிக்காதவன் ஊமையாக நடந்து வந்தான். அவனிடம் இருந்த சிரிப்பு ஓடியது. கவலை படிந்த முகத்தோடு நடந்து வரும் தன்னவனை, எப்படிச் சரி செய்வதென்று தெரியாமல் சென்ற மாமியாரைத் திரும்பிப் பார்க்க, இவர்களைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தார்.

“உங்க அம்மா வராங்க.” என்றதும் அவன் திரும்ப, அவர்கள் முன்பு நின்றவர் மகனை ஏறெடுத்தும் பார்க்காமல், “இன்னைக்கு வரலட்சுமி விரதம். முடிஞ்சா பக்கத்துல இருக்க எந்தக் கோவிலுக்காவது போயிட்டு வாங்க.” என்றவர் கையில் இருந்த குங்குமத்தை உரிமையோடு மருமகள் நெற்றியில் வைத்து, “இது கோவில் பிரசாதம்!” கையில் சர்க்கரைப் பொங்கலைத் திணித்தார்.

ரிது சதிகா மாமியாரையே பார்த்துக் கொண்டிருக்க, “இப்படி ரெண்டு பேரும் ஜோடியா நடந்து வராதீங்க. ஒரு கண்ணுப் போல, ஒரு கண்ணு இருக்காது. வீட்டுக்குப் போனதும் சுத்திப் போடுங்க.” என மகனை ஒரு நொடி பார்த்துவிட்டு நகர, புன்னகை அரும்பியது மருமகளுக்கு.

அன்னையின் அன்பான வார்த்தையைக் கேட்டுச் சற்றுக் கவலையை ஒதுக்கி வைத்தான். செல்லும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கையைப் பிடித்தவன் நடக்க, தன்னைச் சிறைப்படுத்திய அவன் கை மீது பார்வையைப் பதித்தாள். எத்தனையோ முறை ஆறுதலுக்காகவும், சண்டைக்காகவும் தொட்டிருக்கிறான். இன்று அதில் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்கிறாள். பிடித்தவனுக்கு அதுபோன்ற எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அவனாக ஆசை கொண்டு பிடித்ததால், அந்த ஆராய்ச்சியில் இறங்காதவன் கைப்பிடித்ததை எண்ணிச் சிரித்தான்.

கன்னியப்பனோடு பயிலகம் சென்றனர். அங்கிருந்த காவலாளி முதல் கொண்டு அனைவரும், இவ்விருவரையும் வாய் பிளந்து பார்க்க, எதையும் பார்க்காதது போல் தன்னறைக்குச் சென்று விட்டாள். சில நொடிகள் யோசனையில் நின்றவன் அவனுக்காக உருவாக்கப்பட்ட அறைக்குச் சென்று விட்டான். மதியம் வரை என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே இருந்தவன் அறைக்குள் நுழைந்தவள்,

“எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. முடிச்சுட்டு நேரா வீட்டுக்கு வந்துடறேன்.” என்று விட்டு நகர,

“ஒரு நிமிஷம்!” என்றான்.

திரும்பியவள் முகம் பார்க்க, “ஏன் என்னை எதுவும் கேட்கல?” கேட்க, “இது என்னோட அப்பா சொத்து! இதை யாருக்குக் கொடுக்கணும், கொடுக்கக் கூடாதுன்னு அவர்தான் முடிவு பண்ணனும். இதுல தலையிட எனக்கு எந்த உரிமையும் இல்லை.” என்று விட்டுச் சென்றவளை எண்ணியே மீதி நேரத்தையும் கடந்து விட்டான் கருடேந்திரன்.

***

இன்று பெருமகிழ்வில் இருந்ததால் சீக்கிரமாக உறங்கி விட்டான் கருடேந்திரன். அவன் உறக்கத்தை உறுதி செய்தவள், சிறு சத்தம் வராது வீட்டை விட்டு வெளியேறினாள். சத்தம் இல்லாது காரை இயக்க வண்டியில் அமர்ந்தவள், தன்னவன் கொடுத்த தைரியத்தை எண்ணிச் சிரித்துக் கொண்டே கிளம்பினாள்.

வீட்டில் இருக்கும் இரு ஆண்களுக்கும் தெரியாமல், ரவியை அடைத்து வைத்திருக்கும் இடத்திற்கு வந்தாள். ரத்தக் காயங்களோடு கட்டிப்போட்ட நிலையில் அமர்ந்திருந்தவன், முன்னில் நின்றவளைத் தலை உயர்த்திப் பார்த்தான்.

“இதை எதிர்பார்த்து இருக்க மாட்டல்ல. சட்டத்துக்கு முன்னாடி உன்னை நிறுத்திப் பல வருஷம் போராட எனக்கு விருப்பமில்லை. என்னைச் சீண்டுனவனைப் புழு மாதிரி நசுக்கிப் போடத்தான் எனக்குப் பிடிக்கும்.”

காயம் பட்ட இடத்தில், தன் நகத்தை வைத்துக் கீறியவள் அவன் அலறலைப் பொருட்படுத்தாமல், “ஞாயமா தரவேண்டிய சம்பளத்தையும் தாண்டி, கொட்டிக் கொடுத்துமாடா நம்பிக்கைத் துரோகம் பண்ண. நீ பண்ணது கூடப் பெருசில்ல, அதை என் பேரைச் சொல்லிப் பண்ண பாரு… அதைத் தான்டா ஏத்துக்க முடியல. உன்னோட அல்ப புத்தியால எனக்கு எவ்ளோ அவமானம் தெரியுமா?” எனக் கத்தியால் கன்னத்தைக் கீறினாள்.

“ஆஆஆ அம்மா… வலிக்குது.”

“வலிக்கத் தான்டா பண்ணிட்டு இருக்கேன்… அன்னைக்கு எவ்ளோ தெனாவட்டா என்கிட்டத் தான் பணத்தைக் கொடுத்தேன்னு சொன்ன, இப்பச் சொல்லு பார்ப்போம்!”

“தெரியாமப் பண்ணிட்டேன் மேடம், என்னை விட்டுடுங்க.”

“விடத்தான் போறேன்.” அவனைக் கண்டு குரோதமாகச் சிரித்து, “எமதர்மன் கிட்ட!” என்றாள்.

உயிர் பயத்தில் அலறித் துள்ளியவன், “ப்ளீஸ் மேடம், என்னை விட்டுடுங்க. எனக்கு ரெண்டு பொம்பளப் பசங்க இருக்காங்க. அவங்களோட எதிர்காலத்துக்காகத் தான் இப்படி ஒரு தப்பைப் பண்ணிட்டேன். இனி இந்த மாதிரிப் பண்ண மாட்டேன்.” கெஞ்சத் தொடங்கினான்.

“உன் வீட்டுப் பொண்ணுங்க நல்லா இருக்கணும்னு அடுத்த வீட்டுக் குடும்பத்தைக் கெடுப்பியா? உன்ன மாதிரித் தானடா தன் பிள்ளைங்க நல்லபடியா படிச்சுப் பெரிய ஆள் ஆகணும்னு கஷ்டப்பட்டுப் பணத்தக் கட்டிச் சேர்க்குறாங்க. இப்படி ஒரு பாவத்துல உன் பிள்ளைங்களை வளர்த்தா அதுங்க எப்படி நல்லா வாழும்?”

“என் பொண்ணுங்களுக்காக என்னை விட்டிடுங்க மேடம். எடுத்த பணம் எல்லாத்தையும் கொடுத்திடறேன். இனி உங்க பேச்சுக்கே வரமாட்டேன்.”

“நடந்த எல்லாத்தையும் நான் உன் வாயால கேட்கணும். எதையாவது மறைச்ச, இந்தக் கத்தி அப்படியே உன் கழுத்துக்குப் பாயும்.”

“சீட்டு விளையாட்டுல அடிமையாகி, சம்பளம் எல்லாத்தையும் தொலைக்க ஆரம்பிச்சிட்டேன். பொண்டாட்டி பிள்ளைங்க செலவுக்குக் காசு இல்ல. குடும்பத்தைச் சமாளிக்க முடியாம கவர்மெண்ட் வேலை வாங்கித் தரேன்னு சொல்லிப் பசங்ககிட்டக் காசு வாங்கினேன். உங்க பேர் சொன்னதால ஈஸியா நம்பிக் கொடுத்தாங்க. அதே மாதிரி, உங்க பேரச் சொல்லி அத்தனைப் பேரையும் விரட்டி விட்டேன். பெரிய இடத்துகிட்ட மோதி, மீண்டு வர முடியாதுன்னு அமைதியாப் போக ஆரம்பிச்சாங்க. அப்படித்தான் மூர்த்தி கிட்டயும் வாங்கினேன். அவன் உங்ககிட்ட நேரடியாக் கேட்கப் போறன்னு சொன்னான். இன்ஸ்டியூட்டை விட்டு விரட்டி அடிச்சேன். அத்தோட அவன் பிரச்சினை முடிஞ்சிடுச்சுன்னு நினைக்கும் போது தான் அவன் அண்ணன் வந்தான்.

மாட்டிக்கக் கூடாதுன்னு, ஆளுங்களை வச்சு எந்திரிக்க முடியாத மாதிரி மூர்த்திய அடிச்சுப் போட்டேன். அதுக்கப்புறம் நடந்த எல்லாமே உங்களுக்கே தெரியும் மேடம்.”

தான் செய்த அயோக்கியத்தனத்தை ஒன்று விடாமல் சொல்லி முடித்தவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தவள், “பொறுக்கி நாயே! எவ்ளோ பெரிய வேலையப் பண்ணிட்டுச் சாதாரணமா சொல்ற. இப்படி ஒரு துரோகத்தை ஏன் இவளுக்குப் பண்ணோம்னு துடிச்சுத் துடிச்சே நீயே தூக்குப் போட்டுச் சாகுற அளவுக்குத் தண்டனை கொடுக்கப் போறேன்.” என்றவள் காலில் இருக்கையோடு விழுந்து கெஞ்ச ஆரம்பித்தான்.

சிறிதும் மனம் இறங்காமல், “உன்னோட எல்லா பிராப்பர்ட்டியும் இப்போ என் கையில. உன்கிட்டப் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவங்க பேருக்கு நீயே மாத்திக் குடுத்துடு.” என்றதும் மறுத்தவன் கையை வெடுக்கென்று கிழித்தவள்,

“உன்னோட தலையீடு இல்லாமலே இதை என்னால பண்ண முடியும். நீயா பண்ணனும். அதுதான் எனக்கு வேணும்.” எனக் கத்தியை நெஞ்சில் வைத்து லேசாக அழுத்த, வலி தாங்க முடியாமல் அவள் கேட்டதைச் செய்து கொடுத்தான்.

அத்தோடு விட்டுவிடும்படி சேர்த்துக் கெஞ்ச, “இனித்தான்டா உனக்குத் தண்டனையே இருக்கு.” நெஞ்சில் கால் வைத்து எட்டி உதைத்தாள்.

“தேங்க்யூ சோ மச் சார்! அன் அபீஷியலா எனக்காக இவ்ளோ பெரிய உதவி பண்ணிருக்கீங்க.”

“இட்ஸ் ஓகே மேடம், இவனை மாதிரி ஆளுங்களுக்கு அபீஷியல் டீலிங் ஒத்து வராது.”

“ம்ம், இவனப் பத்தின எந்த நியூசும் யாருக்கும் கிடைக்கக் கூடாது. இவன் என்னைக்கும் ஒரு மர்மமாவே இருக்கணும்.”

“இவன்தான் ஒத்துக்கிட்டானே மேடம். போலீஸ்கிட்டச் சொல்லி ஸ்டெப்ஸ் எடுக்கலாமே.”

“தெரிஞ்சோ, தெரியாமலோ இவன் எனக்கு ரொம்பப் பெரிய உதவி பண்ணிருக்கான் சார்… அந்த உதவி வாழ்க்கை முழுக்க என்கூட இருக்கணும்னா, இவன் என் மேல போட்ட பழி பழியாவே இருக்கணும்.” என்றவளின் வார்த்தை புரியாமல் பேசியவர் குழம்ப, சின்னச் சிரிப்போடு,

“இன்னும் கொஞ்ச நேரத்துல ரெண்டு பேரு வருவாங்க. அவங்ககிட்ட இவன ஒப்படைச்சிடுங்க சார். சுயநலமா இவன் செஞ்ச வேலைக்கு, சுயநினைவே இல்லாமல் பைத்தியக்காரனா அலைய என்ன பண்ணனுமோ அதைப் பண்ணிடுவாங்க. எந்தக் குடும்பத்துக்காக இவ்ளோ பெரிய பாவத்தைப் பண்ணானோ, அந்தக் குடும்பத்து கூட வாழாம ரோடு ரோடா சுத்துறது மட்டும்தான் இவனுக்கான தண்டனை!” என்றாள்.

அங்கிருந்த அதிகாரிக்கு இதில் விருப்பமில்லை என்றாலும் ரிதுவிற்காகத் தலையாட்ட, உயிர் பயத்தில் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவன் பக்கம் திரும்பியவள், “தேங்க்ஸ்!” சின்னச் சிரிப்போடு விடை கொடுத்தாள்.

வந்த வேலை முடிந்த திருப்தியில் வெளியே வந்தவள் காரில் ஏறி அமர்ந்தாள். இருக்கையில் அமர்ந்ததுமே, அவன் கொடுத்த தைரியத்தை எண்ணி மூச்சை இழுத்து விட்டவள் காரை எடுக்க, மறைந்திருந்தவன் வெளியே வந்தான்.

கொதியாய் கொதித்துக் கொண்டிருந்தது மனம். அதன் அழுத்தம் தாங்க முடியாது தலைவலி உயிரை எடுக்க, நடுரோட்டில் நின்று கொண்டிருந்தவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ரிது சதிகா என்றவள் தலைக்கு மேல் ஏறி அமர்ந்து நடுமண்டையில் எட்டி உதைப்பது போல் இருந்தது. வாய் விட்டுக் கத்த முடியாமல், கண் மூடி நின்றவன் நினைவெல்லாம் அவளே. கட்டியவளை மட்டுமே மனத்தில் நினைத்தவன் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான்.

கதவைத் திறந்தவள், அவன் இல்லாததைக் கண்டு முகத்தைச் சுருக்கினாள். அவன் இருக்கும் நிலை தெரியாது, தான் மாட்டிக் கொள்ளாமல் இருந்தால் போதும் என்ற மனநிலையில் படுத்து விட்டாள். நள்ளிரவு தாண்டியதால் படுத்ததும் உறக்கம் வந்துவிட்டது. நல்ல நித்திரையோடு விளையாடிவிட்டுக் காலை எட்டு மணிக்கு எழுந்தவள், அவன் இல்லாததைக் கண்டு குழம்பினாள்.

‘நேத்து நம்ம போகும்போது தூங்கிட்டுத்தான இருந்தான். எங்க போயிருப்பான்.’ பலத்த சிந்தனையோடு எழுந்தவள், ராதாவின் அறையை நோட்டம் விட்ட கையோடு அந்த வீட்டைச் சுற்றி வந்தாள். அவன் இருப்பதற்கான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. எப்படியும் வந்துவிடுவான் என்று நம்பிக்கையில் இருந்தவள், மாலை ஆன பின்பும் வராததால் குழம்பினாள்.

மெல்ல விஷயம் பொன்வண்ணன் காதிற்குச் சென்றது. மகளைத் தேடி வந்தவர், “இது உன் வேலையா?” கேட்க, அமைதியாக இருந்தாள்.

“நீ ஏன் இப்படி இருக்க? உனக்கு என்னதான் பிரச்சினை? இது ஒன்னும் நீ சம்பாதிச்ச சொத்து இல்ல, முழுக்க முழுக்க என்னோட உழைப்பு. இதை யார் கையில கொடுக்கணும்னு நான்தான் முடிவு பண்ணனும். அவனைத் துரத்திட்டோம்னு சந்தோஷம் மட்டும் படாத. என் மருமகனைத் திரும்பக் கூட்டிட்டு வந்து எல்லாத்தையும் நிர்வாகம் பண்ண வைப்பேன். அவன் சொன்ன மாதிரி, நீ ஒரு பணப்பேய் தான்…” என மகளின் மனம் புரியாது வார்த்தையை விட்டவர் மருமகனைத் தேடி அலைந்தார்.

அண்ணனைக் காலையிலிருந்து அழைத்த நதியா, சோர்ந்து போய் பெற்றோர்களிடம் விஷயத்தைக் கூறினாள். முதலில் பதட்டம் இல்லாமல், “வேலையா இருப்பான்.” என்றார்கள்.

மாலை ஆனபின் மீண்டும் அண்ணனை அழைத்தாள். இந்த முறை, அவனது எண் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக வர தீவிரத்தை உணர்ந்தார்கள் அங்கு இருந்த நால்வரும்.

ஆளாளுக்கு அவனைத் தொடர்பு கொண்டு பதற்றத்தை அதிகரிக்க, எங்குத் தேடியும் கிடைக்காத மருமகனின் சிந்தனையோடு வீட்டிற்கு வந்தார் பொன்வண்ணன்.

அவர் எண்ணிற்கு அழைத்த சத்யராஜ் மகனைப் பற்றி விசாரிக்க, “நானும் போன் பண்ணிப் பார்த்துட்டேன், சுவிட்ச் ஆஃப் தான் வருது.” வருத்தமாகக் கூறினார்.

“என்னமோ வீட்டுல இருந்த பொருளைத் தொலைச்ச மாதிரி அசால்டா சொல்றீங்க. என் புள்ளய என்ன பண்ணிங்க? ஒழுங்கா உண்மையச் சொல்லிடுங்க. மத்த விஷயத்துல அமைதியா இருந்த மாதிரி இதுலயும் அமைதியா இருக்க மாட்டேன். என் புள்ளைக்கு மட்டும் ஏதாச்சும் ஒன்னு ஆச்சு, உங்களையும் உங்க பொண்ணையும் எரிச்சிடுவேன்.” கத்தத் தொடங்கினார் சத்யராஜ்.

***

வெப்ப நாயகன் மறைந்து குளிர் நாயகன் வந்துவிட்டான். நேற்று இரவு அனலாக இருந்த இதயம், மெல்ல இயல்புக்குத் திரும்பி நிலவரத்தைப் புரிய வைத்தது. நினைவுகள் கட்டியவளைத் தேடியது. ரிதுவைத் தேடி கருடன் வந்தான். கதவைத் திறந்த காவலாளி, தன்னைப் பார்க்கும் பார்வையை வைத்துத் தீவிரத்தை உணர்ந்தவன் தன் வீட்டு ஆள்களின் சத்தம் கேட்பதால் வேகமாக உள்ளே ஓட,

“என் அண்ணனை உங்க பொண்ணு தான் ஏதோ பண்ணிட்டாங்க. எங்க அண்ணன் எங்க இருக்கான்னு தெரிஞ்சே ஆகணும்.” நடுவீட்டில் நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்தான் மூர்த்தி.

கூடவே சத்யராஜும், அடிக்கடி நதியாவும் கருடேந்திரன் மீதுள்ள பாசத்தில் ரிது சதிகாவைக் குற்றம் சாற்றிக் கொண்டிருக்க, என்ன செய்வதென்று தெரியாமல் கைகளைப் பிசைந்தவாறு நின்று கொண்டிருந்தார் சரளா.

“கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதைக் கேளுங்க.”

“என்ன சார் கேக்கணும்? என் புள்ள ஜெயில்ல இருந்திருந்தால் கூட நல்லபடியா இருந்திருப்பான். உங்க பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டீங்க.”

“இது சரிப்பட்டு வராதுப்பா… இத்தனைக்கும் காரணம், மேல இருக்காளே அவதான்! அவளை என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க…”

கோபத்தோடு அண்ணன் மனைவியை நோக்கி இரண்டு அடி எடுத்து வைக்க, “டேய்!” நிதானமாக அழைத்தாலும் அழுத்தமாக அழைத்தான் கருடேந்திரன்.

பிள்ளையைக் கண்ட சரளா ஓடிச் சென்று கட்டிக் கொள்ள, போன உயிர் வந்தது மற்ற மூவருக்கும். தலை மேல் இருந்த பெரிய பாரத்தை இறக்கி வைத்ததாக, நிம்மதிப் பெருமூச்சு விட்டார் பொன்வண்ணன்.

“அவ உன் அண்ணி! இன்னொரு தடவை மரியாதை இல்லாமப் பேசாத.” என்றுவிட்டுத் தன்னை அரவணைத்துக் கொண்டு நின்ற தாயை விலக்கியவன், அங்கிருந்த யாரையும் பார்க்காது தன்னவளை நோக்கி நடந்தான்.

கருடன் வீட்டு உறவுகள் அவனை அழைத்துக் கொண்டிருக்க, மருமகனின் செயலை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியாமல் குழம்பி நின்றிருந்தார் மாமனார். சரளாவிற்கு மட்டும்தான் மகனின் செயலில் வித்தியாசம் புரிந்தது. அந்தப் புரிதலோடு அவனே வரும் வரை காத்திருக்க முடிவு செய்தார்.

கதவிற்கு முன் நின்றவன், திறக்க உயர்த்திய கையைத் தயக்கத்தில் அப்படியே நிறுத்தினான். எப்படி அவளை எதிர்கொள்வது என்று ஒரு நொடி தடுமாறியவன், மனத்தில் இருக்கும் அனைத்தையும் இன்றே பேசித் தீர்த்துவிடும் முடிவோடு கதவைத் திறந்தான். அறை முழுதும் இருட்டில் மிதந்து கொண்டிருந்தது. கதவிற்கு நேராக இருக்கும் பால்கனியில் எப்போதும் நிற்கும்படி நிலவைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் ரிது சதிகா.

ஒவ்வொரு அடியும் ஆமை வேகத்தில் இருந்தது. தன் வரவை அறிந்து கொண்டுதான் அசையாது நிற்கிறாள் என்பதை உணர்ந்தவன் தன்னைத் தானே சட்டையால் அடித்துக் கொண்டான்.‌ நான்கே அடியில் எட்ட வேண்டிய தன்னவளைப் பெரும் நேரச் செலவிற்குப் பின் நெருங்கி நின்றவன், அவள் பெயரை உச்சரிக்க முயன்று தோற்றுப் போனான்.

பிறந்ததிலிருந்தே பேச்சு வராத ஊமை போல் இருந்தது அவன் நிலை. கை இரண்டையும் கட்டிக்கொண்டு, தலை உயர்த்தி நின்றிருந்தவள் தோளைத் தொட நினைத்தவன், கை உயர்த்த நினைக்கவில்லை.‌ உடலுக்குள் உலாவிக் கொண்டிருந்த மூச்சு அவன் பேச்சைக் கேட்காமல் முரண்டு பிடித்தது. எதுவோ ஒன்று தன்னைக் கட்டிப் போட்டு வைத்திருப்பது போல் உணர்ந்தவன் அசையாத கையைக் கடினப்பட்டு உயர்த்தினான். அவள் தோள்பட்டைக்கும், இவன் கை விரல்களுக்கும் இடைப்பட்ட தூரம் ஒரு இஞ்சுக்கும் குறைவு. சிறிது அசைத்தால் கூடத் தொட்டு விடலாம். அப்படி இருந்தும் அவனால் முடியவில்லை.

கண்களை மூடி ஆழமாக மூச்சை இழுத்து விட்டவன், விழி திறந்து அவள் தோள்பட்டை தொட, மேல் இருக்கும் ஆடையை உரசிய விரல் வெடுக்கென்று அவனிடமே வந்துவிட்டது. அதற்கு மேல் துணியத் தைரியம் இல்லாது மெத்தைக்கு வந்து அமர்ந்து விட்டான். இவ்வளவு நடந்தும் கூட அவளிடம் சிறு அசைவு இல்லை.

கருடேந்திரனின் வீட்டு ஆள்கள் பேசிய அனைத்தையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். பெரிதாக எந்த வலியும் அதில் உண்டாகவில்லை. ஏனென்றால், பெற்றவரே அதைவிட அதிகமாகப் பேசி விட்டார். அவர் கொடுத்த வலியையும் தாண்டி, அவளுக்குள் பெரும் வலி இவன் கொடுத்த பிரிவுதான். எப்போது அவன் பக்கம் மனம் சாய்ந்தது என்று கூட அறியவில்லை ரிது.

அவள் வாழ்வில், இல்லாத ஒன்றை முரட்டுத்தனமாகத் திணித்தான் கருடேந்திரன். தனிமை என்ற ஒன்று அவனால் தான் அவளை விட்டுத் தொலைந்து போனது. பிடிக்கவில்லை என்றவன், அவளுக்கு ஒன்று சரியில்லை என்றதும் காட்டிய அன்பு சற்று அசைத்துப் பார்த்தது கருடனின் மனைவியை.

தொலைந்த வாழ்வில் வெளிச்சம் அவன்!

கிடைக்காது என்றிருந்த துணை அவன்!

வேண்டாம் என விலக்கி வைத்த விருப்பம் அவன்!‌

நிலைக்காது என்றறிந்த சொந்தம் அவன்!

அடக்கி வைத்த உணர்வுகளை

ஆட வைத்த தந்திரம் அவன்!

பயத்திற்குள் ஒளித்து வைத்த புன்னகை அவன்!

கோபத்திற்குப் பின்னான தைரியம் அவன்!

வெறுக்கும் நேசம் அவன்!

அன்பில்லாதவளை அன்பு செய்ய பிறந்தவன்

அவளவன் இந்தக் கருடேந்திரன்!

சொல்லிவிட்டுச் சென்றிருந்தாலோ, பிடிக்கவில்லை என்று விலகி இருந்தாலோ, இந்த அளவிற்கு வலி உண்டாகி இருக்காது. இருட்டான அறையில், ‘வெளிச்சம் நானிருக்கிறேன்’ என்று அவளை மெழுகாக்கி அதில் திரியாக ஒளிர்ந்து கொண்டிருந்தவன், திடீரென்று அணைந்து விட்டதால் தான் இவ்வளவு பெரிய மனப்பாரம்.

அவள் அசையாமல், தன் பிடிவாதத்தைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றிருக்க, மெத்தையில் அமர்ந்தவன் கைவிரல்கள் பத்தையும், ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு தலை குனிந்து அமர்ந்திருந்தான். கருடனால் புரிந்து கொள்ள முடிந்தது அவள் உணர்வை. எங்கிருந்து இருவருக்குள்ளும் இந்தப் பரிவும், புரிதலும் வந்தது என்று இருவரும் அறியவில்லை. அறிந்து கொண்டு வருவதா காதல்!

அறிந்திருந்தால், பல காதல் கதைகள் தோல்வியுற்றும் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்காது. கடவுள், முடிச்சுப் போட்ட இந்த உறவை அவர்களே அறியாமல் அழகாக வாழத் தொடங்கி விட்டதற்கான சாட்சி தான் அங்கு நடந்தேறிக் கொண்டிருக்கிறது. தலை உயர்த்தி அவளைப் பார்ப்பதும், மீண்டும் தலை குனிந்து கொள்வதுமாக அரை மணி நேரத்தைக் கடந்து விட்டான் கருடேந்திரன்.

கட்டியவளிடம் இருக்கும் திடம், என்றும் தனக்கு வராது என்று விட்டுக் கொடுக்க எழுந்து நின்றான். அவனுக்குள் உலா வந்து வெளிவரும் மூச்சுச் சத்தத்தை வைத்தே அவன் நடவடிக்கைகளை அறிந்து கொண்டவள் திடத்தோடு நின்றிருக்க, இந்த முறை ஆமை போல் நடந்தாலும் அழுத்தமாக நடந்தான்.

“ரிது!”

மனைவியின் பக்கத்தில் நின்றவன் அவள் பெயரை உச்சரித்தான். சற்றென்று மாற்றம் நிகழ்ந்து விடாத கடும் பாறை அவள் அல்லவா? தொண்டையைச் செருமிக் கொண்டு, மீண்டும் ஒருமுறை அழைத்தவன் தோல்வியுற்றுக் கைப்பிடிக்க அவள் விரல் நுனியைத் தொட்ட நேரம், “பளார்!” என்ற சத்தம் அங்கு நிகழும் இருட்டைக் கிழித்தது.

கட்டியவளின் ஐவிரல் மந்திரத்தில், தானாக அவன் கைகள் கன்னத்தைப் பிடித்துக் கொள்ள, “கெட் அவுட்!” எனப் பல்லைக் கடித்தாள்.

“சாரி…”

இரு வார்த்தை உச்சரித்தவள் தன் வாய்க்குப் பூட்டுப் போட்டுப் பழைய நிலையில் நின்றுகொள்ள, எரிந்து கொண்டிருந்த கன்னத்தின் தணல் தணியும் வரை துணைக்கு வைத்திருந்த கையைக் கீழ் இறக்கி மீண்டும் அவள் விரல் பற்றத் துணிந்தான். இந்த முறை அடிக்க விரும்பாது விலகப் பார்த்தாள் ரிது சதிகா.

அழுத்தமாகக் கையைப் பிடித்தவன், “ஒரு நிமிஷம் என்னைப் பாரு…” எனக் கூற, கையை உதற முயன்றாள்.

அவள் இழுப்பிற்கு அசைந்து செல்லாதவன் திடமாகப் பிடித்தான். திரும்பி அவனை ஒரே ஒரு பார்வை பார்த்தாள். தன்னால் அவன் கைகள் அவளை விட்டுப் பிரிந்தது.

ஒரு நொடி அந்த விலகலை ஏற்க முடியாது நின்றவள் நகர விரும்பி அசைய, அழுத்தமாக அவள் கைப்பற்றி இழுத்தவன் தன்னோடு சேர்த்தணைத்தான் வேகமாக. அதிவேகக் கிலோமீட்டரில் அச்சுறுத்தப் பாய்ந்து வந்த புயல் போல் அவன் நெஞ்சோடு மோதி நின்றவளிடம் இருந்த அனைத்துப் பிடிவாதமும் விலகியது.

முட்டி மோதி நிற்கும் முகத்தை நெஞ்சோடு சேர்த்தவள் கட்டியணைக்க விரும்பாது ஐக்கியமாக, எவ்வளவு நெருக்கத்தைக் காட்ட முடியுமோ, அவ்வளவு நெருக்கத்தைக் காட்டித் தனக்குள் அவளைப் புதைத்துக் கொண்டான் கருடேந்திரன்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!