18. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

4.7
(57)

நெருக்கம் – 18

கேள்விக்குப் பதில் கூறாது விழிகளை மூடிப் படுத்துக்கொண்ட குருஷேத்திரனை வெறித்துப் பார்த்தவள்,

“நீங்க என்ன டேப்லெட்னு சொல்லலைன்னா நான் இதைப் போடவே மாட்டேன்..” என்றாள்.

மீண்டும் விழிகளைத் திறந்து அவளைப் பார்த்தவன், “விட்டமின்ஸ் டேப்லெட்தான் போட்டுட்டு தூங்கு மணி ஒன்னு ஆகுது..” எனக் கூற நேரத்தைப் பார்த்தவளுக்கோ ஐயோ வென்றிருந்தது.

“நேத்தும் உங்களாலதான் நான் காலேஜ் போகல.. இன்னைக்கும் இவ்வளவு லேட்டா தூங்க விட்டா நான் எப்படி காலைல சீக்கிரமா எழுந்து காலேஜுக்குப் போறது..” எனப் புலம்பியவளை அழுத்தமாகப் பார்த்தவன்,

“நீ இனி காலேஜ்கு போக வேண்டாம்..” என்றான்.

அவளுக்கோ பகீர் என்றிருந்தது.

“என்ன விளையாடுறீங்களா..? நான் படிச்சே ஆகணும்… காலேஜுக்கு போகத்தான் போறேன்… தயவு செஞ்சு இதுலயும் எனக்கு ரூல்ஸ் போடாதீங்க..”

“தாராளமா படி மேலே படிக்கிறதுன்னா கூட நான் படிக்க வைக்கிறேன்… லெக்சர்ஸ்ச வீட்டுக்கே வர வைக்கிறேன்.. ஆனா, நீ காலேஜ் போகக்கூடாது.. யார் வேணும்னு சொல்லு அவங்க இங்கே வந்து உனக்கு கிளாஸ் எடுப்பாங்க..” என்றவனை அதிர்ந்து பார்த்தவள்,

“இதெல்லாம் எதுக்கு..? மத்தவங்களோட சேர்ந்து நாமளும் இயல்பாவே வாழ்ந்துட்டு போயிடலாமே..! எனக்கு இந்த பகட்டு ஆடம்பரம் எல்லாம் பிடிக்கல குருஷேத்திரன்..” என்றாள் அவள்.

“சாதாரண அபர்ணாக்கு இது பிடிக்காம இருக்கலாம்.. ஆனா, என்னோட மனைவி அபர்ணா இப்படித்தான் இருக்கணும்.. எனக்கு எது பிடிக்குதோ அதுதான் அவளுக்கும் பிடிச்சி இருக்கணும்..” என்றான் அவன்.

‘சுத்தப் பைத்தியக்காரத்தனம்..’ என முனங்கியவள், தன்னுடைய போர்வையை இழுத்து தலைவரை போர்த்திக் கொண்டாள்.

இவனோடு உரையாடுவதும் தன்னுடைய வார்த்தையை சரி என நினைவுபடுத்தும் சுவற்றோடு தன் தலையை மோதுவதற்கு சமானம் என எண்ணிக்கொண்டவள் தன்னுடைய பேச்சுவார்த்தையை அப்படியே நிறுத்திக் கொண்டாள்.

“குட்.. கொஞ்ச நாள் போகட்டும் நானே உன்னோட ஸ்டடீஸ் சம்பந்தமான விஷயத்தை பாத்துக்குறேன்.. குட் நைட்..” என்றவன் அதன் பின்னர் உறங்கிவிட இவள்தான் வெகுநேரம் விழித்துக் கிடந்தாள்.

‘என்ன வாழ்க்கை இது..?’ என வெறுப்பாக இருந்தது அவளுக்கு.

கலங்கி விடுவேன் என விழிகள் எரிந்து அவளை எச்சரிக்கத் தொடங்கின.

சட்டெனத் தன் விழிகளை மூடிக்கொண்டவள், ஒன்றிலிருந்து நூறு வரை மீண்டும் எண்ணத் தொடங்கினாள்.

பிறந்த வீட்டில் படுத்தவுடன் வந்து ஒட்டிக் கொள்ளும் உறக்கம் இங்கு வந்ததும் தொலைதூரமாகிப் போனது.

******

இப்படியே நாட்கள் எந்தவித மாற்றமும் இன்றி நகரத் தொடங்கின.

இரவில் அவனும் ஒரு நாள் கூட அவளை நாடாது தூங்கியதே இல்லை எனலாம்..

அதேபோல பகலில் அவனுடைய விதிமுறைகளும் வரைமுறைகளும் அவள் மீது அதிகரித்துக் கொண்டுதான் இருந்தன.

கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய பணக்கார வாழ்க்கைக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொண்டாள் அபர்ணா.

அன்றும் அப்படித்தான் திடீரென பார்ட்டி ஒன்றுக்குச் செல்ல வேண்டுமென அவன் கட்டளையாகக் கூறி விட்டுச் செல்ல என்னதான் மறுத்தாலும் தன்னுடைய பேச்சு எப்போதும் போல எடுபடாது என்பதை புரிந்து கொண்டவள் தயாராகத் தொடங்கினாள்.

கிட்டத்தட்ட ஒரு மாதமாக வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பவளுக்கு வெளியே சென்றால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்றே தோன்றியது.

அடர்ந்த மெரூன் கலரில் வெள்ளைக் கற்கள் பதிக்கப்பட்ட அழகிய பார்ட்டி ப்ராக் ஒன்றை எடுத்து அதை அணியும்படி கூறிவிட்டுச் சென்றிருந்தான் குருஷேத்திரன்.

நிஜமாகவே அந்த ஃப்ராக் மிகவும் அழகாக இருக்க மறுக்காமல் எடுத்து அணிந்து கொண்டவள் கூந்தலை மட்டும் விரித்து விட்டாள்.

சற்று நேரத்தில் மெரூன் கலர் ஷர்ட் உடன் உள்ளே வந்த குருஷேத்திரனின் விழிகள் ஒரு கணம் அவளைக் கண்டு இமைக்க மறந்தன.

சட்டெனத் தன்னுடைய தலையைக் குலுக்கி தன்னுடைய இரசனை என்னும் உணர்வை அப்படியே அகற்றியவன் அவளுடைய வெற்றுக் கழுத்தைப் பார்த்தான்.

அவளுடைய வெண்மை நிற சங்கு போன்ற கழுத்துக்கு ஆபரணங்கள் தேவையில்லை போலும்.

அவ்வளவு அழகாக இருந்தவளை மேலும் அழகு சேர்க்கும் பொருட்டு மெல்லிய வைர அட்டியல் ஒன்றை எடுத்தவன் மெல்ல அவளை நெருங்கி அவளுடைய கழுத்தில் அணிவிக்க முயன்றான்.

“இ.. இல்ல நானே போட்டுக்கிறேன்..” என்றவாறு அவள் மறுத்துவிட,

அவளை நெருங்கி நின்று அவளுடைய கழுத்தில் அந்த நகையை வைத்தவன் பின்னால் நகையை போடுவதற்காக அவளுடைய கூந்தலை அள்ளி முன் பக்கமாகப் போட்டான்.

பளிரென தெரிந்தது அவளுடைய வெண் முதுகு.

நகையை மெல்ல அணிவித்து விட்டு அவளுடைய வெற்று முதுகில் தன்னுடைய கரத்தால் வருடி விட்டவன், அவள் சிலிர்த்து விலக தன்னுடைய கரத்தை அவளுடைய வயிற்றில் பதித்து தன் முன் உடலோடு அவளை இறுக்க அணைத்துக் கொண்டான்.

திணறிப் போனாள் அபர்ணா.

எப்போதும் இரவில் எல்லை மீறி தன்னை எடுத்துக் கொள்ளும் குருஷேத்திரன் ஒருபோதும் பகலில் அவளை நெருங்கியதே இல்லை.

இன்று ஏனோ தெரியவில்லை கரங்களால் வருடுவதும், அவளை அனைப்பதுமாக இருக்க அவளுக்கோ உள்ளம் படபடத்துப் போனது.

அவனுடைய இறுகிய அனைப்பில் அசைய முடியாது நின்றவளது வெண் முதுகில் அழுத்தமாக முத்தம் பதித்தவன், அவளைத் தன்னை நோக்கித் திரும்பச் செய்தான்.

அவளது கன்னங்கள் சிவந்து, உடல் படபடத்து, விழிகள் தானாகவே மூடிக் கொண்டன.

“நிஜமாவே நீ ரொம்ப ரொம்ப அழகு..” என அவன் கூற அவளுக்கு மேலும் கன்னங்கள் சூடேறிச் சிவந்தன.

“மேக்கப் போட மாட்டியா அபர்ணா..?” என அவன் கேட்க மெல்ல விழிகளைத் திறந்து அவனைப் பாராது அவனுடைய மார்பில் தன்னுடைய விழிகளை பதித்துக் கொண்டவள், இல்லை என மறுப்பாக தலை அசைத்தாள்.

“உன்னோட ஃபேஸ் மேக்கப் இல்லாமயே ரொம்ப நல்லா இருக்கு… பட் லைட்டா இந்த ரோஸ் லிப்ஸ்க்கு லிப்ஸ்டிக்கும், கண்ணுக்கு காஜலும் போட்டா இன்னும் ரொம்ப அழகா இருப்ப.. அது மட்டும் போட்டுக்கோ..” என்றவன் அந்த மெல்லிய வைர அட்டியலுக்கு ஏற்ற காதணிகளையும் அவளுக்கு அணிவித்து விட்டு விலகி நிற்க பெருமூச்சோடு கண்ணாடியின் முன்பு வந்து நின்றவளுக்கு விரல்களோ நடுங்கத் தொடங்கி இருந்தன.

“ஐயோ..! இது வேற அவன் தொட்டாலே இந்த உடம்பு இப்படி நடுங்கி வைக்குதே..! இப்போ எப்படி நான் காஜல் போடுவேன்..” எனத் தனக்குள் புலம்பிக் கொண்டவள், மெதுவாகத் தன்னுடைய கண்களுக்குக் காஜல் இட்டு முடித்தாள்.

சற்றே இள நிறத்தில் உதட்டு சாயத்தையும் மெல்ல பூசிக் கொண்டவள், இந்திரலோகத்து ரம்பை போலத்தான் குருஷேத்திரனின் கண்களுக்குத் தெரியலானாள்.

அவளை இரசிக்கத் தோன்றிய மனதை அடக்க முடியாது அவனுடைய விழிகள் அவளை மொய்த்துக் கொண்டே இருக்க, அவளோ ஓடிச்சென்று தன்னுடைய அலைபேசியை எடுத்து வந்தவள் தன்னுடைய அன்னைக்கு வீடியோ அழைப்பு எடுத்தாள்.

அவளுடைய அன்னை அழைப்பை ஏற்றதும் ஓடி வந்து குருஷேத்திரனின் கரத்தில் தன் அலைபேசியைக் கொடுத்தவள்.

“ப்ளீஸ்… ப்ளீஸ்.. என்னை எங்க அம்மாக்கு காமிங்க…” என அவனை ஸ்டாண்ட் போல நிற்க வைத்தவள், அவனுடைய கரத்தில் ஃபோனைக் கொடுத்துவிட்டு சற்றே தள்ளி நின்று தன்னை முழுமையாக தன்னுடைய அன்னைக்கு வீடியோ அழைப்பில் காட்டியவள் டொட்டடொய்ங்.. என்றவாறு ஒரு முறை சுற்றி நின்றாள்.

“ஹேய் பாப்பா ரொம்ப ரொம்ப அழகா இருக்கம்மா… என்னோட கண்ணே பட்டுரும் போல இருக்கு…” எனத் தன்னுடைய மகளை பேரழகியாகக் கண்ட அன்னையின் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கியது.

“அழகா இருக்கேன்ல.. குருஷேத்திரனும் அப்படித்தான் சொன்னார்மா..” எனப் பூரிப்புடன் கூறினாள் அவள்.

“பாப்பா என்ன பழக்கம் இது இப்படியா மாப்பிள்ளையை பெயர் சொல்லி கூப்பிடுறது..? அம்மா உனக்கு மரியாதை சொல்லிக் கொடுத்து இருக்கேன் தானே… நீ என்னடான்னா இப்படி கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம அவர் பெயர் சொல்லி கூப்பிட்டுகிட்டு இருக்க..” என பத்மாவோ அலைபேசியில் பொறியத் தொடங்க சட்டென தன் கரத்தில் இருந்த அலைபேசியை தன்னை நோக்கித் திருப்பியவன்,

“இட்ஸ் ஓகே ஆன்ட்டி.. அவளுக்கு பிடிச்ச மாதிரியே கூப்பிடட்டும் நீங்க திட்டாதீங்க..” என்றதும் மாப்பிள்ளையின் கரத்தில்தான் அலைபேசியை இருக்கிறதா என எண்ணி அதிர்ந்து போன பத்மாவும் சரியென தலையை வேகமாக அசைத்தார்.

“இப்போ என்ன காமிங்க..” என அவள் சிணுங்கத் தொடங்க மீண்டும் அவளை நோக்கி தன்னுடைய அலைபேசியைத் திருப்பியவனுக்கு தன்னை நினைத்து வியப்பாக இருந்தது.

இவளுக்கு சேவகம் செய்கின்றோமோ என சித்தித்தவன், இப்போது அவளைப் பார்த்தான்.

“சரிமா.. நீங்க எங்கேயோ கிளம்பிட்டீங்க போல இரண்டு பேரும் போய்ட்டு வாங்க.. அப்புறமா வந்து அம்மாக்கு கால் பண்ணு..” என்ற அன்னையைப் பார்த்து,

“வெயிட் வெயிட்மா கட் பண்ணிடாதீங்க.. நான் எங்கேயாவது போறதுக்கு ரெடியானா எனக்கு நீங்க சுத்தி போடுவீங்கல்ல… இப்பவும் சுத்தி போடுங்க… இல்லன்னா கண்ணு பட்டுரும்.. அப்புறம் எனக்கு தான் ஃபீவர், இல்லனா ஏதாவது வந்துரும் இப்பவே சுத்திப் போடுங்க..” எனச் சிறுமி போல சினுங்கத் தொடங்கியவளை பெருமூச்சோடு பார்த்த பத்மாவோ,

“சரி கொஞ்ச நேரம் இரு வரேன்..” எனக் கூறிவிட்டு உப்பு மிளகாய் போன்றவற்றை எடுக்கச் சென்று விட அலைபேசியை வைத்துக்கொண்டு அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த குருஷேத்திரனை பார்த்து,

“கொஞ்ச நேரம் பொறுத்துக்கோங்க ப்ளீஸ்..” என முணுமுணுத்தாள் அபர்ணா.

சில நொடிகளில் மீண்டும் வந்த அவளுடைய அன்னையோ அவளைப் பார்த்து கண்ணூறு சுற்றத் தொடங்க,

“ம்மா ஒரு நிமிஷம்மா.. அவருக்கும் சேர்த்து சுத்துங்க அவருக்கும் கண்ணுபடும் தானே…!” என்றவள் சட்டென அவனுடைய கரத்தில் இருந்து அலைபேசியை வாங்கி அங்கிருந்த மேசையின் முன்பு ஒரு ஸ்டாண்டில் நிற்க வைத்துவிட்டு அவனை இழுத்து வந்து தன் அருகே நிற்க வைத்தவள்,

“இப்போ சுத்துங்கம்மா..” என்றதும் அவளை விளங்கா பார்வை பார்த்தான் அவன்.

சிலீரென உள்ளோடியது ஓர் உணர்வு.

“ஊரு கண்ணு..

உறவுக் கண்ணு..

நாய் கண்ணு..

நரிக் கண்ணு..

நோய் கண்ணு..

நொல்ல கண்ணு..

நல்ல கண்ணு..

கொல்லிக் கண்ணு..

கண்ட கண்ணு..

கரிச்சி கொட்டும்..

எல்லா கண்ணும் பட்டுப் போக..

கண்ட பிணி தொலையட்டும்..

கடுகு போல வெடிக்கட்டும்..!” என பத்மா திருஷ்டி சுற்றிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட அவளோ அவனைப் பார்த்து,

“இப்போ எல்லா கண்ணும் பட்டுப் போயிரும்..” எனக் கூற,

“தேங்க்ஸ்..” என்றான் அவன்.

“ஏன்…? உங்களுக்கு திருஷ்டி கழிச்சதுக்கா…?”

“இல்ல.. எங்க அம்மாவ ஞாபகப்படுத்தினதுக்கு..” என்றவன் அவளைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தான்.

‘பரவாயில்லையே..! இந்த அரைக்கிழவன் சிரிச்சா அழகாத்தான் இருக்கான்..’ என மனதிற்குள் எண்ணிக் கொண்டவள் மாஅவனோடு விருந்துக்குக் கிளம்பத் தொடங்கினாள்.

💜💜🔥💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 57

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “18. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!