🤎 நேசம் நீயாகிறாய்! 🤎
நேசம் 18
ராகவேந்திரனை வழியனுப்பும் ஆவலுடன் கிழக்கில் குதித்து வந்தான் கதிரவன்.
கோர்ட் சூட் அணிந்து கண்ணாடி முன் வந்து நின்று முகம் பார்த்தவனை முறைப்போடு பார்த்திருந்தாள் தேனு.
காலையில் எழுந்த நிமிடமே கல்லும் கல்லும் உரசிக் கொள்ள, சண்டைத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. காதருகே கேட்ட அலாரம் ஓசையில் இருவரும் ஒரே நேரத்தில் விழித்தெழ, தாமிருந்த நிலை கண்டு திகைத்துப் போயினர்.
தலையணை அணையைத் தகர்த்து ஒருவர் அணைப்பில் ஒருவர் இருக்க, “எழுந்திருங்க” என முறைத்தவளை அவனும் முறைத்தான்.
“முறைக்கச் சொல்லல. எழுந்திருக்க சொன்னேன்”
“அடியே முட்டக்கோசு! முட்டக்கண்ண விரிச்சு பார். நீ தான் என் மேல ஹாயா படுத்திருக்க. அப்போ எழும்ப வேண்டியது நானா? நீயா?” என்று கேட்க, இளித்து வைத்தவளோ மெதுவாக எழும்ப,
“எதையும் பார்க்காம படபடனு வெடிக்க வேண்டியது” அவன் சொன்னதும், “போதும் போதும். கிடைச்ச சாக்குன்னு திட்டாம போய் ரெடியாகுற வேலையைப் பாருங்க” என்று முறைத்தவள் தான், இன்னும் முறைப்பை நிறுத்தினாள் இல்லை.
“எவ்ளோ நேரமா முறைச்சிட்டு இருக்கப் போற? உன் ஆசைப்படி போறேன். சந்தோஷமா வழியனுப்பி வைக்க வேண்டியது தானே?” அவளைக் கூர்ந்து பார்த்தவாறு வினவ,
“என் ஆசைன்னு சொல்லாதீங்க. போக வேண்டியது உங்களுக்கு. ஆனால் பழி என் மேலயா? நல்லாருக்கே உங்க நியாயம்” என்று முறைப்பு மாறாமல் பதில் சொன்னாலும் உள்ளுக்குள் சுருக்கென்றது.
சென்று விடுவானா? சென்று விடுவானா? மனம் ஒரே கேள்வியை ஓராயிரம் முறை கேட்டுக் கொண்டது.
அதனை மறைத்துக் கொண்டு “சரிங்க. சந்தோஷமா போயிட்டு வாங்க” என்றவளோ அவன் முகம் பார்க்கும் சக்தியை இழந்திருந்தாள்.
“அதை என் முகத்தைப் பார்த்து சந்தோஷமா சொன்னா நானும் சந்தோஷமா போவேன்” நீ முகம் பார்க்காமல் நான் செல்லப் போவதில்லை என்பதை மறைமுகமாக உணர்த்த,
‘ரோஸ் மில்க்கு! இந்த நேரத்தில் கூட பிடிவாதம் பிடிக்கிறியே டா’ உள்ளுக்குள் அவனை வசை பாடியவள், தலை தூக்கி அவன் முகத்தை நோக்கினாள்.
அவனது விழிகள் அவள் விழிகளுள் ஊடுறுவிச் சென்று உயிர் வரை தாக்கின.
“போ..போயிட்டு வாங்க” என்றாள், வார்த்தைகளோடு பார்வையும் தடுமாற.
“ம்ம் போறேன். இந்தப் பிரிவு நம்ம உறவுக்கு ஒரு அர்த்தத்தை தேடித் தரும்னு நம்புறேன். சீ யூ சூன்” என்றவன் அவளை நெருங்கி, “பை ஹனி மூன்” என நெற்றியில் இதழ் பதித்து விலகினான்.
அம்முத்தத்தில் விக்கித்து நின்றாள் தேன் நிலா. நெற்றி முத்தத்திலும் பார்க்க, ஆழ்ந்த உணர்வுள்ள முத்தம் வேறுண்டோ? அவன் தந்த முத்தம் எதுவோ சொல்ல வந்தது போலிருந்தது.
அவன் அறையை விட்டு வெளியேற, அவளும் மந்திரித்து விட்ட கோழி போல் பின்னாலேயே சென்றாள்.
“டேய் போயே ஆகனுமா?” என்று மரகதம் கேட்க, “சீக்கிரம் வந்துருவேன் மா. டேக் கேர்” அவரை அணைத்து விடுவித்த மகனின் பார்வை மனையாளைத் தான் பார்த்தது.
“கவனமா போயிட்டு வா ராகவ்” பாஸ்கரனும் அவனை அணைத்துக் கொள்ள, “ஓகேப்பா” என்று விடைபெற, தேனுவின் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.
அவர்களிடமும் சொல்லிக் கொண்டு காரை நோக்கிச் செல்ல, அவனையே விழி மூடாமல் பார்த்தாள் அவள்.
அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவளுள் அழுத்தமானதொரு தடத்தைப் பதித்தது. காரில் ஏறும் முன் திரும்பி ஒரு பார்வை பார்க்க அது அவளை வேரோடு சாய்த்தது போல் இருந்தது.
கார் மறையும் வரை நின்றாள். அனைவரும் சென்றது கூட விளங்காமல் அப்படியே நின்றாள். அவன் நின்ற இடத்தையும் கார் சென்ற வழியையும் விழியெடுக்காமல் நோக்கினாள் பெண்.
மரகதத்திற்கு சமையலில் உதவினாலும், அவள் மனம் ராகவ்வைச் சுற்றியே வலம் வந்தது.
“எனக்கு ஏன் இப்படி இருக்கு? மனசே வெறுத்துப் போன மாதிரி” தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள், ஆர்டர் ஒன்று இருந்ததால் தைப்பதில் நேரத்தைச் செலுத்தினாள்.
ராகவ் அவளுக்கு அழைத்து அங்கு சென்று சேர்ந்ததை அறிவித்து வீட்டில் கூறி விடுமாறு சொல்லி வைத்தான். அவன் குரலே பிசியாக இருப்பதை எடுத்துரைக்க, “சரி” எனும் வார்த்தையோடு அழைப்பைத் துண்டித்தாள்.
அறையெங்கும் அவனது வாசனை. பார்க்கும் இடமெல்லாம் ராகவ் இருப்பது போல் தோன்றியது. மாலை நேரம் அத்தனை சோர்வாக உணர்ந்தாள் தேனு.
அவளது முக வாட்டத்தைக் கண்டு “தேனு! நீ கொஞ்சம் வீட்டுக்கு போயிட்டு வாம்மா” என அனுப்பி வைத்தார் மரகதம்.
தளர்ந்து போன நடையோடு அவள் செல்ல, “வா தேனு. மாப்பிள்ளை பேசினாரா? போய் சேர்ந்துட்டாராமா?” வாசலில் நின்ற சுசீலா விசாரிக்க,
“ஆமா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கால் பண்ணார். நான் துரு கூட இருக்கேன்” அமைதியாக சொல்லி விட்டுப் போனவளை அவர் வியந்து பார்த்தார்.
முன்னைய தேனுவாக இருந்தால் “எப்போவும் மாப்பிள்ளையைப் பற்றியே விசாரிங்க. வீட்டுக்கு வந்த மகளை என்னனு கேட்க வேணாம்” என்று சண்டை போட்டிருப்பாள்.
ஆனால் கணவனின் நினைவில் தன்னை மறந்திருப்பவள் தன் இயல்பையே தொலைத்திருந்தாள். அவள் நிலை உணர்ந்த சுசீலா அமைதியாக இருந்து விட்டார்.
மீராவோடு கால் பேசிக் கொண்டிருந்த துருவன் அக்காவைக் கண்டதும் அழைப்பைத் துண்டித்து விட்டு, “வாங்கக்கா! ராகவ் அண்ணா போனதும் தான் இந்த தம்பியை நினைவு வந்திருக்கு போல” எனக் கேட்க,
“போனதும் தான் அவர் ஞாபகமாவே இருக்கு. என்னால முடியல டா” கவலையோடு அவன் தோள் சாய்ந்தாள்.
“பார்டா. அவன் எப்போ அவர் ஆனார்? காதல் சுவர்ல மோதிட்ட போல” என்று கேட்டதும், அவள் அதிர்ந்து போனாள்.
“காதலா?”
“ஏன் இவ்ளோ ஷாக் ஆகுற? லவ் பண்ணுறவங்களுக்குத் தான் அவங்க ஆளோட ஒரு நாள் பிரிவே இப்படி ஒரு கஷ்டத்தைக் கொடுக்கும். சங்ககாலத் தலைவிகளை விட நீ ஸ்பீடா இருக்கே. அவங்க தலைவனைப் பிரிஞ்ச ஒரு நாள்ல பசலை நோயால் பீடிக்கப்பட மாட்டாங்க”
துருவனின் வார்தைகளைக் கேட்டு பேச்சற்றுப் போனாள் பாவை. காதலா? எனக்கு அவன் மீது? காதல் வருமளவு ஒரு உறவு நம் மத்தியில் இருந்ததா?
சிந்தனையில் ஆழ்ந்தது அவள் மனம்.
“பேசுறோமேனு ஏதோ பேசாத. எனக்கு ஏதோ டயர்டா இருக்கு. அதான் சோகமா இருக்கேன்” அவன் சொன்னதை ஏற்க முடியாமல் நிற்க,
“மத்தவங்க வேணா நம்புவாங்க. ஆனால் இந்தக் கதையை நான் நம்ப மாட்டேன். அவர் போறப்போ நீ பார்த்த பார்வையை நான் கவனிக்கலனு நெனக்கிறியா?” அவளது தலையில் செல்லமாகக் கொட்டினான் உடன் பிறந்தவன்.
“நீ கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுற நிலமையில் நான் இல்லடா. என் கூட கொஞ்சம் ஜாலியா பேசிட்டு இரு துருவா” அவள் குரலில் அத்தனை வெறுமை.
“என் ஜாலியை நீ ஆஃப் பண்ணிட்டு இப்படி சொல்லுறியா ராட்சசி” என்று சொல்லவும், “போடா பிசாசு” முறைத்துப் பார்த்தவளோடு ஏதேதோ பேசி கவலையைத் தணிக்க முயன்றான் அவன்.
சிறிது நேரம் இருந்து விட்டு வீடு சென்று அறையினுள் நுழைந்த போது மீண்டும் அவன் நினைவு சூழ்ந்து கொண்டது.
“ரஷ்யாக்காரா! போகும் போது என்ன மாயம் செஞ்சுட்டு போன? சத்தியமா முடியல டா” என வாய் விட்டே புலம்பினாள்.
அவனது அழைப்பு வரவே அதை ஏற்றவள், “ஹலோ நிலா” என்று குரலில் உருகிப் போனாள்.
“ஹலோ. என்ன பண்ணுறீங்க? வேலை முடிஞ்சாச்சா? சாப்பிட்டீங்களா?” அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைக்க, “வேலை முடிச்சுட்டு சாப்பிட்டு இப்போ தான் ரூம் வந்தேன். நான் இல்லாம ஒரே ஜாலியா இருக்கியா?” என்று அவன் கேட்க,
“ஆமாமா ஜாலியா ஜிம்கானா பாட்டு போட்டு ஜங்கு புங்குனு டான்ஸ் பண்ணிட்டு ஜாலி மூட்ல இருக்கேன்” படபடத்தவளுக்கு தனது மனதில் தோன்றிய உணர்வுகளை வெளிக்காட்டத் தெரியவில்லை.
“நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் ஹனி மூன், உன் சண்டையையும் உன்னையும் கூட. நீயும் என்னை மிஸ் பண்ணுனா எனக்குப் பதில் பில்லோவை ஹக் பண்ணிட்டு தூங்கு” என புன்னகைக்க,
“நான் ஆசை ஆசையா உங்களை ஹக் பண்ணிட்டு தூங்குறேன்னு நெனப்பா? எனக்கு ஒன்னும் உங்க பில்லோ தேவையில்லை” கடுகாகப் பொரிந்து தள்ளினாள்.
“எனக்கு டயர்டா இருக்கு. தூங்கட்டுமா டா? நாளையில் இருந்து ரொம்ப பிசி ஆகிருவேன் போல. டைம் இருந்தா கால் பண்ணுறேன். அம்மா கிட்டவும் சொல்லிரு” என்றவாறு அழைப்பைத் துண்டித்தான் ராகவேந்திரன்.
தேனு வெறுமையோடு கூடிய தனிமையை உணர்ந்தாள். அவன் உறங்கும் இடத்தைப் பார்த்ததும் கண்கள் கலங்கத் துவங்கின.
“ரொம்ப நாள்லாம் இல்லை, ஏழே ஏழு நாள் தான் ஒன்னா ரூம்ல இருந்திருக்கோம். ஒழுங்கா பேசிக்கிட்டது கூட இல்லை. ஆனால் ரொம்ப மிஸ் பண்ணுறேனே” என்று கட்டிலில் சாய்ந்தவளுக்கு தூக்கம் வரவில்லை.
புரண்டு புரண்டு படுத்தவள் பாட்டு கேட்கலாம் என நினைத்து ஹேன்ட் ப்ரீயை ஹேங்கரில் மாட்டி வைத்தது ஞாபகம் வரவே, அதை எடுக்கச் சென்றவளுக்கு கண்கள் பெரிதாக விரிந்தன.
அங்கு பெரிய சூடு பட்ட அடையாளத்தோடு இருந்தது ராகவ்வின் நீல நிற ஷர்ட். முதல் முறை அவன் பக்கத்தில் இருந்து யோசிக்கலானாள்.
“இருக்கிறது ஒரே ப்ளூ ஷர்ட். நான் ப்ளூ சாரி போட்டதைக் கண்டு இதை அயர்ன் பண்ணும் போது சூடு பட்டிருக்கும். அதனால தான் அன்னிக்கு என்னை மாதிரி மேட்சா ட்ரெஸ் பண்ணல” என சரியாகவே கணித்தவளுக்கு தன்னை நினைத்து அவமானமாக இருந்தது.
“இது தெரியாம ஏதேதோ பேசிட்டேன். அவர் வாங்கித் தந்த சாரியைக் கூட போட்டுக்காம அதுக்கு வேறயா கோபப்பட வெச்சுட்டேன். சும்மா கோபப்படலயே. என்னால தான் எல்லாம். உனக்கு அறிவு இருக்கா டி தேனு?” தன்னைத் தானே கடிந்து கொண்டாள் காரிகை.
அவன் உறங்கும் இடத்திற்குச் சென்றவள் அங்கு சாய்ந்து ஷர்ட்டை எடுத்து அருகில் வைத்துக் கொண்டாள்.
“அவருக்கும் என் ஞாபகம் வந்தா கட்டிப் பிடிச்சுக்கனும்னு என் ட்ரெஸ்ஸை எடுத்துக்கிட்டு போயிருப்பாரோ?” அவளது மூளை அப்படி யோசிக்க, லைட்டைப் போட்டு தனது உடைகள் ஒவ்வொன்றாக ஆராய்ந்தாள்.
அனைத்துமே இருந்தன. தனக்குத் தோன்றுவதே அவனுக்கும் தோன்ற வேண்டிய அவசியம் இல்லையே? அதை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்று தோன்றவே மீண்டும் சாய்ந்து கொண்டாள்.
“துரு என்னென்னவோ சொல்லுறான். ஆனால் காதல் வரலாமா எனக்கு அவர் மேல?” என்று யோசிக்க,
“ஏன் வர முடியாது? அவர் உன் புருஷன் தானே? அவர் மேல வராம யார் மேல வரும்?” எனக் கேட்டது மனசாட்சி.
தனுஜா சொன்ன விடயமெல்லாம் அவள் மனதை விட்டு மறைந்து போயிருந்தது. இப்போது அவள் மனமெங்கும் நிறைந்திருப்பது ராகவ் ஒருவனே.
“ரொம்ப குழம்பிப் போயிட்டோம். பேசாம தூங்கினா நல்லது” என்று நினைத்தவளோ, அவனது ஷர்ட்டை இறுகிப் பிடித்து நெஞ்சோடு அணைத்தவாறு உறங்கிப் போனாள்.
தொடரும்…….!!
ஷம்லா பஸ்லி
2024-11-21