18. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

5
(13)

வரம் – 18

தன்னுடைய தந்தையின் உடல்நிலை இன்னும் இன்னும் மோசமாகிக் கொண்டிருப்பதை அலைபேசியின் வாயிலாக அறிந்து கொண்டவள் துடித்துப் போனாள்.

எவ்வளவு சீக்கிரமாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு கிளம்ப முடியுமோ அதற்கான ஆயத்தங்களை வேகமாகச் செய்யத் தொடங்கினாள் மோஹஸ்திரா.

அப்பாவின் உடல்நிலை பற்றிய தவிப்பிலும் தனிமையின் அழுத்தத்திலும் அவள் அதிகமாய் தடுமாற அவளுடைய பாதி வேலைகளை இலகுவாக்கிக் கொடுத்தான் ஷர்வா.

அமெரிக்காவிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை அவனே செய்து முடித்திருக்க அடுத்த நாள் காலையிலேயே அவர்கள் கிளம்புவது உறுதியாகிருந்தது.

விமான நிலையத்திற்கு அவர்களோடு வந்திருந்த அரவிந்தனின் முகமோ தீவிர சிந்தனையில் மூழ்கி இருந்தது.

“அர்வி..?”

“சொல்லு பேபி டால்..”

“அப்பா உன்னையும் என் கூட கூட்டிட்டு வரச் சொன்னாங்க.. உன்னோட வேலை முடிஞ்சா சீக்கிரமா அங்க கிளம்பி வரப் பாருங்க.. அப்பா உன்னை கேட்டாருன்னு ராம் அங்கிள் வேற என்கிட்ட சொன்னாரு.. அப்பாக்கு மைல்ட் அட்டாக்னுதான் சொன்னாங்க பட் அப்பாவோட குரலே சரியில்ல அர்வி.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு ப்ளீஸ் சீக்கிரமா வந்துரு..”

“ஹேய் நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இருக்காது.. சீக்கிரமா வேலைய முடிச்சுட்டு வரேன்… நாலு நாளைக்குள்ள இதெல்லாம் முடியலைன்னா நிச்சயமா வேறொரு அதிகாரிகிட்ட என்னோட பொறுப்பை ஒப்படைச்சிட்டு அங்க வந்துருவேன்… நீ ஒன்னும் பயப்படாத… எதை நினைச்சும் கவலைப்படாத.. நான் எங்கே இருந்தாலும் என்னோட நினைப்பு எல்லாம் உன் மேல மட்டும்தான் இருக்கும்…” என்றவன் அவளுடைய நெற்றியில் படிந்த கூந்தலை ஒதுக்கிவிட,

“நேரமாச்சு கிளம்பலாமா..?” என இறுகிய குரலில் கேட்டான் ஷர்வா.
என்னதான் அவர்கள் காதலர்களாக இருந்தாலும் கூட அவனுடைய கண் முன்பு இருவரும் கொஞ்சிக் குழவுவதை அவனால் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.

தன் காதல் முறையானது அல்ல என அவன் விலகி விட்டான்தான் ஆனால் கண் முன்பு அவர்கள் இருவருடைய காதலையும் கண்டு அவனுக்கு சற்று கலக்கமாகத்தான் இருந்தது.

அரவிந்தனின் மீது அவள் காட்டும் காதல் தன் மீதும் சிறு துளி அளவு திரும்பாதா என அவனுடைய மனம் ஏக்கம் கொள்ளத் தொடங்க இப்படியான உணர்வுகளை தவிர்ப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தவன்,

“கிளம்பலாமா..?” என சற்றே அழுத்தமான குரலில் கேட்டிருந்தான்.
“ஓகே… டைம் ஆச்சு… நீங்க கிளம்புங்க… நீங்க அங்க போய் ரீச் ஆனதும் எனக்கு கால் பண்ணுங்க… இங்கே ஏதாவது விஷயம் தெரிஞ்சுதுன்னா நான் உங்களுக்கு இன்பார்ம் பண்றேன்… அப்பாவ பாத்துக்கோ டேக் கேர்… உன்னையும் பாத்துக்கோ..” என்றவன் அவர்களை அனுப்பி வைக்க ஷர்வாவோ சிறு தலையசைப்பை அவனுக்குக் கொடுத்துவிட்டு மோஹஸ்திராவை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
அவர்களின் பயணம் முழுவதும் அமைதியாகவே கழிந்தது.

இரண்டொரு முறை பேச முயன்றவனை தன் பார்வையாலேயே தடுத்து நிறுத்தி இருந்தாள் மோஹஸ்திரா.

எவ்வளவு முயன்றும் அன்று அவன் தன்மீது அத்துமீறி நடந்து கொண்டதை அவளால் மன்னிக்கவே முடியவில்லை.
அடிக்கடி அவனை மனதுக்குள் திட்டிக் கொள்ளவும் அவள் மறக்கவில்லை.

சில மணி நேரங்களின் பின்பு அமெரிக்காவின் விமான நிலையத்தை வந்தடைந்தது அந்த விமானம்.

அங்கே வந்ததும் அவளுடைய தந்தையை எண்ணி அவளுக்கோ அதீத சோகம் அகத்திலும் முகத்திலும் அப்படியே அப்பிக் கொண்டது.

நன்றாக இருந்த மனிதர் மனைவி இறந்ததும் உடலளவிலும் மனதளவிலும் மிகவும் சோர்ந்து போனார்.

மனைவியின் இறப்பிலேயே உடல் பாதியாக மெலிந்து நலிந்து போனவர் பிஸ்னஸ் திடீரென லாஸ் ஆகியதும் இன்னும் உடைந்து போக அவருடைய உடல் நிலையோ மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

இரண்டு முறை மாரடைப்பு வேறு வந்திருக்க தன் தந்தையை எண்ணி வேதனை கொண்டாள் மோஹஸ்திரா.
என்ன இருந்தாலும் தன் தந்தையை தனிமையில் விட்டு விட்டு இந்தியா வந்திருக்கக் கூடாதோ என அவளுடைய மனம் கவலை கொள்ளத் தொடங்க அவளையும் மீறி அவளுடைய விழிகளில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.

“என்னாச்சு மோஹி..? ஆர் யூ ஓகே..?” என அவளுக்கு அருகே நடந்து வந்தவன் அவளுடைய விழிகளில் இருந்து வழிந்த கண்ணீரைப் பார்த்து புருவங்களை சுருக்கிவாறு கேட்க சட்டென தன்னுடைய ஒற்றை விரலால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள்,

“எஸ் ஐ அம் ஓகே..” என பதிலளித்து போலியான ஒரு புன்னகையையும் அவன் முன்பு சிந்தினாள்.

“டோன்ட் வொர்ரி…” என்றான் அவன்.
அவர்களுக்காக கார் அங்கே வந்து காத்திருக்க தங்களுடைய ட்ரைவரை அடையாளம் கண்டு கொண்டவள்,

“கம் வித் மீ…” என ஷர்வாவிடம் கூறிவிட்டு அந்தக் காரை நோக்கி நடக்க,

அவள் தன் தந்தையை எண்ணித்தான் கவலையில் ஆழ்ந்திருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன் அதற்கு மேல் அவளிடம் எந்த கேள்வியும் கேட்காது அவளைப் பின்தொடர்ந்து அந்தக் காரில் சென்று ஏறி அமர்ந்து கொண்டான்.

“ஹாய் பாஸ்கர் அண்ணா எப்படி இருக்கீங்க..?” என அவள் ட்ரைவரைப் பார்த்துக் கேட்க,

“எனக்கு என்னமா குறை.. உங்க புண்ணியத்துல ரொம்ப நல்லா இருக்கேன்… நீங்க இல்லாமதான் நம்ம வீடு வெறிச்சோடிப் போயிருச்சு..’

“அதான் வந்துட்டேன்ல… அப்பா எப்படி இருக்காங்க..?”

“பிஸ்னஸ் லாஸ் ஆனதுல ரொம்பவே உடைஞ்சு போயிட்டாரு பாப்பா… நீங்க அவர் கூட இருந்தீங்கன்னா அவர் சரியாகிடுவாரு..”

“ம்ம்…” என்றாள் அவள்.

ஷர்வாவுக்கோ வியப்பாக இருந்தது.
ட்ரைவருடன் அவள் சாதாரணமாக உரையாடுவது அவனை அதீதமாய் வியக்கச் செய்தது.

இதுதான் அவளுடைய உண்மையான இயல்பா…? அவனுக்குப் புரியவில்லை.
தன்னை மறந்து அவளையே இமைக்காது அவன் பார்த்துக் கொண்டிருக்க அவனுடைய பார்வையை சந்தித்தவள் தன்னுடைய புருவத்தை உயர்த்தி என்னவென விழிகளால் கேள்வியை எழுப்ப அந்த புருவ அசைவில் அவனுக்குள்ளோ மொத்தமும் தடம் புரண்டது.

சட்டென நிதானித்து அவளுடைய விழிகளில் கலக்க முயன்ற தன் பார்வையை வீதியில் பதித்தவன்
“எது உன்னோட நிஜமான கேரக்டர்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்… இதுவரைக்கும் உன்கிட்ட நான் பேசியதை விட சண்டை போட்டதுதான் அதிகம்.. ரொம்ப போல்ட்டான லேடியாதான் உன்னை பார்த்திருக்கேன்… சண்டை போடுறது எதிர்த்து பேசுறதுன்னு அப்படியே பார்த்து பழகிட்டேனா திடீர்னு நீ ரொம்ப சாஃப்டா நடந்துக்கிட்டதும் ஷாக்கா இருக்கு….” என்றான் அவன்.

“ஹலோ நான் ஒன்னும் அவ்வளவு அரொகன்ட் கேரக்டரெல்லாம் கிடையாது… உங்க கூட சண்டை போட்டு திருடனை என் பக்கம் இழுக்கிறதுதானே நம்ம பிளான்… அதுக்காக என்ன ரொம்ப போல்டா காமிச்சேன்.. குருதான் பாவம்.. கைநீட்டி கூட அவனுக்கு அடிச்சு இருக்கேன்… அதுக்கெல்லாம் ரொம்ப பீல் பண்ணினேன் தெரியுமா…?

எனக்கு எப்பவுமே அடுத்தவங்களை காயப்படுத்த பிடிக்காது… நம்ம பிளானுக்காக இப்படி எல்லாம் நடிச்சேன்.. அது ஒன்னும் என்னோட உண்மையான கேரக்டர் இல்ல… கோபம் வந்தா கொஞ்சம் அதிகமாக கத்துவேன் அவ்வளவுதான்…” என அவனைப் பார்த்து சிரித்து விட்டு மீண்டும் அவள் தன்னுடைய அலைபேசியில் மூழ்கிப் போக அவனுக்கு இன்னும் அவளில் தொலைவது போன்ற பிரம்மை எழுந்தது.

மனம் அப்படியே அவள் முன்பு மண்டியிட்டு கதறி விடுமோ என்ற அச்சம் எழ மீண்டும் வேகமாக தன்னுடைய பார்வையை திருப்பிக் கொண்டான் அவன்.

ஊரில் உள்ள அத்தனை வேலைகளையும் அப்படியே அம்போவென விட்டுவிட்டு இவளுக்காக இங்கே வந்தது அதிகப்படியோ என்று அவனுக்குத் தோன்றியது.

காதல் கொள்ளக்கூடாது இவளிடம் இருந்து விலகிச் செல்ல வேண்டும் என முடிவு எடுத்துவிட்டு இவளோடு இந்தப் பயணத்திற்கு வந்தது தவறோ என சிந்தை மருகியது.

‘நோ இப்படி நினைக்கக் கூடாது… எனக்காக தன்னோட கேரக்டரை மாத்தி நடிச்சு அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கா.. அவளுக்காக நான் இதைக்கூட செய்யலன்னா நல்லா இருக்காது… என்னால முடிஞ்ச வரைக்கும் அவளோட பிஸ்னஸ்ஸ பழைய மாதிரி காப்பாத்திக் கொடுப்பேன்… அவ செஞ்ச உதவிக்கு இதுதான் கைமாறா இருக்கும்…” என எண்ணியவன் அவளைப் பார்ப்பதை மட்டும் தவிர்த்துக் கொண்டான்.

சற்று நேரத்தில் அவர்களுடைய வீடு வந்ததும் காரை விட்டு இறங்கியவன் அதீத பிரம்மாண்டமும் இல்லாமல் அளவான பணச்செழிப்பில் எழில் செழிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்த அவளுடைய வீட்டைக் கண்டு பிரமித்துப் போனான்.

“உள்ளே வாங்க…” என அவனை அழைத்தவள் முன்னே நடக்க இம்முறை அவனுடைய பார்வையோ மையலுடன் அவளை மோதியது.

💜💜💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

1 thought on “18. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!