தன்னை கோபமும் வருத்தமும் பொங்க பார்த்துக் கொண்டிருந்த கணவனின் விழிகளை சந்திக்க முடியாது தன் பார்வையைத் தரையை நோக்கித் தழைத்துக் கொண்டாள் அவள்.
“ப்ச்… என்ன பாரு பாப்பா…” அதட்டினான் அவன்.
நான் என்ன பார்க்க மாட்டேன் என்றா சொல்கிறேன்.. என்னுடைய கண்கள்தான் உங்களைப் பார்க்கவே மாட்டேன் என்கிறது என்பது போல அவள் அசையாமல் தரையைப் பார்த்த வண்ணமே நிற்க,
அருகில் இருந்த பிரம்பைத் தன் கரத்தில் எடுத்துக் கொண்டவன் “இப்போ பாக்குறியா இல்லனா அடி வெளுத்துடவா..?” என மிரட்ட அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
இவன் என்ன என்னை குழந்தை என்றே நினைத்து விட்டானா..?
விட்டால் பிரம்பால் அடித்து தியா பாப்பா குடிக்கும் பால் புட்டியையும் என் வாயில் வைத்து விடுவான் போலிருக்கிறதே.
உள்ளே ‘ஆத்தீஈஈ..’ அலறியது அவள் மனம்.
பதறியவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“எதுக்கு பொய் சொன்ன..? உன்ன தான் கேட்கிறேன் எதுக்கு பாப்பா என்கிட்ட பொய் சொன்ன..? உன்னோட பாய் ஃப்ரெண்ட் எங்க இருக்கான்னு உண்மைய சொல்லு.. இன்னைக்கு நான் அவன பாத்தாகணும்..” என்றான் யாஷ்வின்.
இல்லாத பாய் ஃபிரண்டை எங்கே சென்று தேடுவது..?
அவளோ தன்னுடைய மௌன யுத்தத்தை தொடர்ந்தாள்.
“நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலை.. எதுக்கு என்கிட்ட பொய் சொன்ன..? என்னைப் பாத்தா எப்படி பாப்பா தெரியுது உனக்கு..? இவன ஈஸியா ஏமாத்திடலாம் இவன் நம்மள என்ன பண்ணிட போறான்.. இளிச்சவாயன்தானேன்னு தோணுதா..?” என அவன் வருத்தத்துடன் கேட்க,
இவளுக்கு அவனுடைய வார்த்தைகளில் கண்ணீரே வந்துவிட்டது.
“ஐயோ அப்படியெல்லாம் நான் உங்கள நினைப்பேனா..?”
“அப்போ..?”
“சாரி நான் பொய் சொன்னது தப்புதான்.. என்னை மன்னிச்சிடுங்க…” அவனுடைய வலியை பொறுக்க முடியாது உடனடியாக சரணடைந்து விட்டாள் அவள்.
தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரிடமிருந்தும் அவனுக்கு பொய் மட்டும்தானே கிடைக்கிறது என பெருமூச்சோடு எண்ணிக் கொண்டவன் தன் நெற்றியை நீவி விட்டான்.
“நான் ரொம்பவே நொந்து போயிட்டேன் பாப்பா.. இதுக்கு மேலயும் என்னால சுத்தமா முடியல.. எதுவா இருந்தாலும் என்கிட்ட உண்மைய சொல்லு.. நான் பாத்துக்குறேன்.. இன்னொரு தடவை போய் பேசாதே ப்ளீஸ்..” என உடைந்த குரலில் கூறியவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து விட,
விழிகளில் நிறைந்த கண்ணீரோடு அவன் முன்பு தரையில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டவள்
“நான் உங்கள கஷ்டப்படுத்தணும்னு சத்தியமா அப்படி பொய் சொல்லல.. வேற என்ன காரணம் சொல்லிருந்தாலும் நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டீங்கன்னு தோணுச்சு.. அதனாலதான் இப்படி பொய் சொன்னேன்..” என தயக்கத்துடன் கூறினாள்.
“என்னோட வாழ்க்கை வீணா போனாலும் பரவாயில்லைங்க.. எனக்கு பாப்பாவும் நீங்களும் நல்லா இருக்கணும்.. அது போதும்..”
“ஏய்… இது என்ன பேச்சு..? இன்னும் எத்தனை நாளைக்கு உன்னால எங்கள பாத்துக்க முடியும்..? நாங்க தனியா இருக்கறதுதான் எங்களுக்கு நல்லது.. நீ உன்னோட வாழ்க்கையை பார்த்துக்கோ..”
“நான் சாகும் வரைக்கும் என்னால உங்கள பாத்துக்க முடியும்பா.. என்ன ஏன் விரட்டுறதுலையே குறியா இருக்கீங்க..?”
“உன்னோட பாய் ஃப்ரெண்ட் வந்ததும் அவன் கூட போயிருவேன்னு நீ தானேம்மா சொன்ன..? அதனால தானே உன்னை கல்யாணம் பண்ணினேன்..”
“எல்லாமே பொய்.. நான் ஒருத்தர காதலிச்சது உண்மைதான்.. ஆனா அவருக்கு எப்போவோ கல்யாணம் ஆயிடுச்சு.. அன்னையோட என் காதல புதைச்சு வச்சுட்டேன்.. இனி அந்த காதல் மீள கிடைக்குமான்னுல்லாம் எனக்குத் தெரியாதுங்க.. அது கிடைக்கவும் வேணாம்.. அவர் அவரோட குடும்பத்தை மட்டும் நேசிக்கட்டும்.. ஆனா அவர நேசிச்ச என்னால வேற எந்த பையனையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது..” உறுதியாக வெளிவந்தன அவளுடைய வார்த்தைகள்.
“என்னமா சொல்ற..?” அதிர்ந்து எழுந்து விட்டான் அவன்.
உடைந்து போனாள் அவள்.
“அவர்கிட்ட நீ உன்னோட காதலை சொல்லலையா..?”
“ம்ஹூம்… அப்போ சொல்ல பயமா இருந்துச்சு.. கூடிய சீக்கிரமே எக்ஸாம் முடிஞ்சதும் சொல்லலாம்னு இருந்தேன்.. ஆனா அதுக்குள்ள அவர் கல்யாணம் பண்ணி போயிட்டாரு..” என்றதும் இவனுக்கோ அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.
“நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணலையே.. இது ஒன் சைடு லவ் தானே..? அதுவும் ஸ்கூல் டைம்ல இது சாதாரணம்தான் பாப்பா.. ஜஸ்ட் பப்பி லவ்.. இத நினைச்சு உன்னோட வாழ்க்கையை எதுக்கு நீ ஸ்பாயில் பண்ற..? வேற நல்ல பையனா பார்த்து நானே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்..” என்றதும் அப்படியே எட்டி அவனுடைய மூக்கில் குத்த வேண்டும் போல இருந்தது அவளுக்கு.
“அதெல்லாம் முடியாது.. நான் வேற எந்த பையனையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.. எனக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆயிடுச்சு…” என அவள் தன் தாலியைத் தூக்கி அவனுக்குக் காட்ட அவளை அழுத்தமாகப் பார்த்தான் அவன்.
“முட்டாளா நீ..? என்ன மாதிரி ஒருத்தன் கூட வாழ்க்கைய கொண்டு போகணும்னு நினைச்சீன்னா அது உன்னோட முட்டாள்தனம் சாஹித்யா. நான் வாழ்க்கையை தொலைச்சவன்.. என்னால இன்னொரு வாழ்க்கையை ஏத்துக்க முடியாது.. இப்போ எங்க மேல உனக்கு எவ்வளவு பாசம் இருந்தாலும் நானும் பாப்பாவும் உனக்கு ஒரு காலத்துல சுமையா மாறிடுவோம்.. உனக்குன்னு ஒரு வாழ்க்கை இல்லையேன்னு நீ அதுக்கு அப்புறமா வருத்தப்பட்டு எந்தப் பயனும் இல்ல.. புரிஞ்சி நடந்துக்கோ..”
“நீங்க சொல்றதைத்தான் நானும் சொல்றேன்.. அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது.. உங்களுக்கு மனைவி இறந்ததால வாழ்க்கை முடிஞ்சு போச்சுன்னு சொல்றீங்கல்ல..? அதே மாதிரி என்னோட காதலன் என்னை விட்டுப் போனதால என்னோட வாழ்க்கையும் முடிஞ்சு போச்சு.. இன்னொருத்தரை கல்யாணம் பண்ணி அவர் கூட வாழ்க்கையை தொடங்குற அளவுக்கு என்னோட மனசோ உடம்போ தயாரா இல்லை..
கடைசி வரைக்கும் நம்ம பாப்பாக்காக வாழ்த்திடலாம்னு முடிவு பண்ணிதான் இப்படி பண்ணினேன்… ஆமாங்க நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கிறதுக்காகத்தான் பொய் சொன்னேன்.. அப்படி பொய் சொன்னாதான் நீங்க என்ன கல்யாணம் பண்ணிப்பீங்கன்னு தெரியும்… அதனாலதான் அப்படி நடந்துகிட்டேன்..
எனக்கு இந்த வாழ்க்கை போதும்பா.. வேற எதுவும் வேணாம்.. கடைசி வரைக்கும் உங்க கூடவும் பாப்பா கூடவும் இருந்துடுறேன்..” என்றவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“என்ன பாப்பா என்ன பாத்து பரிதாபப்படுறியா..? வாழ்க்கைல எல்லாத்தையும் தொலைச்சிட்டான்னு வாழ்க்கை பிச்சை போடுறியா..?” என அவன் கலங்கிய குரலில் கேட்க, இவளுக்கு உள்ளம் இரண்டாகப் பிளந்து விட்டது.
கண்ணீர் அருவியாய் கண்களில் வழிய “ஐயோ.. அப்படியெல்லாம் நான் நினைக்கவே இல்ல.. ஏன் தப்புத் தப்பா யோசிக்கிறீங்க..?” எனக் கேட்டாள்.
“எங்களுக்காக இன்னும் வாழவே ஆரம்பிக்காத நீ உன்னோட வாழ்க்கைய ஸ்பாயில் பண்ண வேணாம் பாப்பா.. உன்னோட ஸ்டடி முடிஞ்சதும் நல்ல பையனா நானே பார்க்கிறேன்.. அந்தப் பப்பி லவ் எல்லாம் நினைச்சுக்கிட்டு கல்யாணம் பண்ண மாட்டேன்னு பேசாத.. எல்லா உண்மையையும் சொல்லி உன்ன நல்ல இடத்துல கட்டிக் கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு..” என அவன் பொறுமையாக எடுத்துக் கூற இவளுக்கோ பொறுமை பறந்தே போனது.
“ஏங்க… என்னப் பாத்தா உங்களுக்கு எப்படித் தெரியுது..? யார்கிட்ட வேணும்னாலும் தாலிய வாங்குறவ மாதிரி தெரியுதா..? என்னால வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது… என் கழுத்துல தாலி ஏறணும்னா அது ஒரு தடவைதான்… இதோ அந்த ஒரு தடவையும் நடந்து முடிஞ்சு போயிடுச்சு.. இதுக்கு மேல இதுதான் என்னோட வாழ்க்கை.. நீங்களும் பாப்பாவும் மட்டும்தான் எனக்கு எல்லாமே.. தயவு செஞ்சு அதப் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க..” என்றாள் அவள்.
“அப்படியே ஓங்கி அடிச்சேன்னா பாரு.. என்ன பேச்சு பேசுற நீ..? உன் மேல தப்பு இல்ல நீ சொன்னதெல்லாம் நம்பி உன்னை கல்யாணம் பண்ண சம்மதிச்சேன் பாரு என் மேல தான் தப்பு.. தயவு செஞ்சு எதுவா இருந்தாலும் இனி என்கிட்ட உண்மையா இரு சாஹித்யா பொய் மட்டும் பேசாத..” என்றவன் கோபத்தோடு எழுந்து குழந்தையின் அருகே சென்று அமர்ந்து விட இவளுக்கு மனம் பாரமாகிப் போனது.
ஏனென்று தெரியவில்லை அழுகை அழுகையாக வந்தது.
அழுது கொண்டே வெளியே வந்து அந்த வீட்டிற்கு பின்னே இருந்த மாமரத்தின் கீழே அமர்ந்து கொண்டவளுக்கு தலை வலித்தது.
அவளைத் திட்டிவிட்டு குழந்தையோடு வந்து அமர்ந்தவனுக்கும் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.
அவளுடைய வாழ்க்கை தன்னால் பாதிக்கப்பட்டு விடுமோ என பயந்தான் அவன்.
அவளை நினைக்கையில் அவனுக்கோ உள்ளம் உருகியது.
என்னையும் பாப்பாவையும் நினைத்து தன்னுடைய வாழ்க்கையை பணயம் வைக்க முயன்றிருக்கிறாளே..
பாவம்..!
எப்படியாவது அவளுடைய வாழ்க்கையை சரி செய்து விட வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தவன் சற்று நேரம் மனதை அமைதிப் படுத்தியவாறு அங்கேயே அமர்ந்து விட்டான்.
வெகு நேரத்தின் பின்பே அவள் வீட்டிற்குள் இல்லை என்பதை உணர்ந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்றான்.
அங்கே பிழியப் பிழிய மரத்தின் கீழே அமர்ந்திருந்தவாறு அழுது கொண்டிருந்தவளை நெருங்கியவன்,
தானாகத் தேடி வந்தேன் என்று கூறாமல் “பாப்பா உன்ன தேடினா..” என குழந்தையை அவளிடம் கொடுக்க,
சட்டென தன்னுடைய கண்ணீரைத் துடைத்து விட்டு குழந்தையைத் தன் கரங்களில் வாங்கிக் கொண்டாள் அவள்.
குழந்தையோ “ம்மா நா இல..” என தன் மழலையில் நான் உன்னைத் தேடவே இல்லை என்ற உண்மையைக் கூறி விட இப்போது அதிர்ந்து போனான் அவன்.
அதிர்ந்து விழித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து “இப்போ நீங்க பொய் சொன்னீங்களாக்கும்..?” என புருவம் உயர்த்தி அவனைப் பார்த்து கேட்க அசட்டுச் சிரிப்பை சிரித்தவன் பாக்கெட்டில் இருந்த ஃபோனை பார்த்துக்கொண்டு அப்படியே நகர்ந்துவிட அவளுக்கு அழுகை நின்று சிரிப்பு வந்துவிட்டது.
“சமத்து பாப்பா நீ.. அப்பா பொய் சொன்னதும் என்கிட்ட காட்டிக்கொடுத்த பாத்தியா வெரிகுட்.. இப்படித்தான் இருக்கணும்… என் தங்க மயிலு..” எனக் குழந்தையின் குண்டுக் கன்னத்தில் முத்தத்தை பதித்தவள் தியாவோடு உரையாடத் தொடங்கினாள்.
தன்னுடைய அலைபேசியை எடுத்துக்கொண்டு கிட்டத்தட்ட மீண்டும் வீட்டுக்குள் வந்தவனுக்கு இதயத் துடிப்பு ஓசை அதிகமாய் கேட்டது.
“இந்தக் குட்டிப் பாப்பா நம்மளை இப்படி மாட்டி விட்டுடுச்சே.. மத்த நேரம் எவ்வளவு பேசினாலும் ம்மா ப்பா என்ற வார்த்தையை தவிர வேற எதையுமே சொல்ல மாட்டா.. இப்போ என்ன எவ்வளவு நேக்கா கோர்த்து விட்டுட்டா..” என தன் குழந்தையை எண்ணி சிரித்தவனுக்கு நீண்ட நாட்களில் பின்னர் முகத்தில் சிரிப்பு முகிழ்த்தது.