தேன் – 19.
“நிவேதா… அது நீ தானா? நீ… உயிரோடு இருக்கிறாயா..?” என்ற ஒரு அசைக்க முடியாத கேள்வி, அவரது நெஞ்சை உரசியது. அந்த உருவம் தான் நிவேதாவா என்ற சந்தேகம் மட்டுமல்ல, ஒரு பைத்தியக்காரன் போல ஓர் எதிர்பார்ப்பு.
அவரது உதடுகளில் அந்த பெயர் உச்சாடனமாக மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.
“நிவேதா… நிவேதா..” என்று மீண்டும் மீண்டும் அப்பெயரை சொல்ல,
“சார் வழி விடுங்க சார்..” என்று அந்தத் தாதி மிகக் கோபமாக பேசினாள்.
அப்போதுதான் உணர்வு வரப்பெற்ற கருணாகரன்,
“சிஸ்டர் இந்தப் பொண்ணு..” என்று இழுக்க,
“ஏதோ ஆக்சிடென்ட் கேஸ் சார் நேற்றுதான் கொண்டுவந்து அட்மிட் பண்ணினாங்க சீக்கிரமா வழியை விடுங்க சார் எதுன்னாலும் பிறகு வந்து கேட்டுக்கோங்க..” என்று கத்த வழிவிட்டு நின்றார்.
அவரது கால்கள் இயங்க மறந்தன. கண்கள் மட்டும் உயிரோடு நின்றன. ஸ்ட்ரெச்சர் மெதுவாக ICU-வின் பக்கம் நகர்ந்தது. கருணாகரனும் அதைத் தொடர்ந்து நிழல்போல நகர்ந்தார்.
அவரை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. அவர் முகத்தில் இருந்த வேதனையும், கண்களில் கூடிய நீரும் பிரிவுத் துயரை பொழிந்து தள்ளின.
காயத்ரி இருந்த அறைக்கு அருகில்தான் ICU வும் இருந்தது.
‘அப்படின்னா என்னோட பெண் என்னோட பொண்ணு உயிரோட தான் இருக்காளா கடவுளே நீதான் என் பொண்ண காப்பாற்றினதுக்கு ஆயிரம் கோடி நன்றிப்பா..’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு, அந்த அறையின் வாசலில் இருந்து கதவின் கண்ணாடியின் ஊடாக அந்த நிவேதாவைப் பார்க்க அவசர சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அனைத்தும் முடிந்த பின்பு உள்ளிருந்து டாக்டர் வெளியே வர, மிகவும் பதற்றத்துடன்,
“டாக்டர் நிவேதாவுக்கு என்ன ஆச்சு..?”
“பேஷண்ட்டுக்கு நீங்க..?” என கேட்டதும்,
“நான்… நிவேதா..வின்… நான் அவளுடைய அப்பா…” என்றார் கருணாகரன்,
முதன்முறையாக, அச்சொல்லை முழுமையாக உணர்ந்து சொன்னார்.
டாக்டர் இரு கண்களால் அவரை ஆராய்ந்தார். உண்மையிலேயே அவர் தந்தைதான் என்ற உணர்வு, அந்த நொடியிலேயே அவருக்குப் புரிந்தது.
“வாங்க சார்… நிவேதா உயிரோட தான் இருக்காங்க. ஆனா…” எனக் கூறியபடி அவர் முன்னே சென்றார்.
கருணாகரன் உள்ளே நுழைந்த நொடியே, அங்கிருந்த ஒலி, மெதுவான ஹார்ட்டுமானிட்டரின் “பீப்…பீப்” ஒலியைத் தவிர, உலகம் முழுக்க அமைதியே..!
அந்தக் கட்டிலில் சிறிது சுருங்கிய அவள் முகம். முன்னைய அழகை மங்கச் செய்திருக்கும் சோர்வு, ஆனால் அவளது மூச்சு ஓர் உயிரின் துடிப்பு அவளது உயிர் இன்னும் இங்கே இருக்கிறது என்பதை உறுதி செய்யும் ஒரே அடையாளம்.
“நிவேதா…” என அவர் அழைக்க,
மிக மெதுவாக அவளது விழிகள் அசைந்தன. அவள் விழித்துப் பார்த்த முதல் பார்வை குழப்பம், அடுத்த பார்வை எச்சரிக்கை, மூன்றாவது பார்வை புரியாத உணர்வு.
அவன் இதயம் நின்று போனதுபோல் உணர்ந்தாலும், உண்மையில் அது தான் மீண்டும் துடிக்கத் தொடங்கிய தருணம்.
நிவேதா எதுவும் பேசாமல் இருக்க டாக்டர் அவரது விழிகளை நன்றாகப் பார்த்து,
“நிவேதா இங்க பாருங்கம்மா இவர உங்களுக்கு யாருன்னு தெரியுதா..”
நிவேதாவின் தலையில் பெரிய பேண்டேஜ் சுற்றி கை கால்களில் கட்டுக்களும் கட்டப்பட்டு காணப்பட்டன.
விபத்து நடந்த இடத்தில் பலமான அடி ஏற்பட்டிருக்க வேண்டுமென அந்த நேரம் கருணாகரனின் மனது அவளது வேதனையை எண்ணி மனம் வருந்தியது. தலையில் பலமான அடி என்பதினால் அவள் சிந்திக்க சிந்திக்க தலை விறைப்பது போல் இருந்தது.
வலது கையால் தனது தலையை அழுத்திப் பிடித்தபடி “ஆஹ்..” என்று வலி எடுக்க முனகினாள்.
“ஸ்ரெயின் பண்ணிக் கொள்ளாதீங்கம்மா உங்களுக்கு தெரியலன்னா தெரியலன்னு சொல்லுங்க தெரியுமுன்னா தெரியும்னு சொல்லுங்க அவ்வளவுதான்..” என டாக்டர் கூறியதும்,
“டாக்டர்.. இவர்.. இவர்..”
“சொல்லுங்க.. சொல்லுங்க..”
“யாருன்னா.. யாருன்..னு தெரியல டாக்டர்..” என்று இயலாமையுடன் கூறினாள் நிவேதா.
அந்த வார்த்தைகள் கருணாகரனின் இதயத்தில் ஆயிரம் கத்திகளால் குத்தியது போன்று தீராத வேதனையை ஏற்படுத்தியது.
“யாருன்னு தெரியல…”
அந்த நொடியிலேயே அவரது கண்களில் மகளை கண்ட சந்தோஷம் துடைத்தே எறிந்தார் போல் மறைந்து போய் மீண்டும் வேதனை குடி கொண்டது.
தன் முன்னால் இருப்பவள் உயிரோடு இருப்பது என்பது ஒரு புறம், ஆனால், அவள் தான் நிவேதா என்பதைத் தானாக உணரவில்லை என்ற உண்மை. அது அவருக்குள் மொத்தமாக பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
“நான்… உனக்கு அப்பா மா… உனக்கு ஞாபகம் வரலையா?… நிவேதா… நீ என் பொண்ணு மா…” எனக் குழம்பித்துடன் பேச, நிவேதா மெதுவாக தலையை அசைத்தாள்.
அது ‘இல்லை’ எனும் பதிலே..!
அவளது கண்களில் இருந்த குழப்பம், ஒருவேளை தன்னால் நம்ப முடியாத உணர்வுகளும் இருந்திருக்கலாம்.
ஆனால், கருணாகரனுக்கு அது வெறும் மறுப்பு போலவே தோன்றியது.
“சார்,” என்று மெதுவாக அருகே வந்த டாக்டர்,
“இது சாதாரணம் தான். ஹெட்இஞ்சுரி உண்டானதால நியூராலாஜிக்கல் ஸ்டிரெஸ்ஸா இருக்கும்.
டெம்பரரி மெமரி லாஸ் வந்திருக்கலாம். சில டெஸ்ட் எடுத்து ரிப்போர்ட் வந்த பிறகே நிச்சயமா என்னன்னு சொல்ல முடியும். மனஅழுத்தமும் காரணமா இருக்கலாம்..”
அந்த வார்த்தைகள் சிறிது நம்பிக்கையை விதைத்தாலும், கருணாகரன் மனதிற்குள் வந்த இருள் விலகவில்லை.
“நிவேதா… நான் யாருன்னு தெரியாம இருக்கலாம் ஆனா நீ யார்ன்னு ஞாபகம் இருக்கா உன்னோட பேரு நிவேதாதான்னு தெரியுமா..?” என்று ஒரு எதிர்பார்ப்புடன் கருணாகரன் கேட்க,
அவளது கண்களில் பனிக்கட்டிகள் போல சில கண்ணீர் துளிகள் துளிர்த்தன.
அது வலியினாலா, பதட்டத்தினாலா, அல்லது நெஞ்சுக்குள் எங்கோ ஒரு ஓரத்தில் உறைந்திருந்த ஒரு சிறிய நினைவின் மின்னலா எதையும் உறுதியாக சொல்ல முடியாமல் தவித்தாள் நிவேதா.
அவளது கரம் மெதுவாக நகர்ந்தது.
மெதுவாக விரல்கள் குளிர்ந்த அந்த கைபிடியைத் தேடிச் சென்றன.
கருணாகரன் உடனே அவளது கையைத் தாங்கிப் பிடித்தார்.
“நான் இருக்கேன் மா… உனக்காக… பயப்படாதே..!” என்று அவளது குழப்பத்தை போக்க முயற்சித்தார் கருணாகரன்.
அந்த இடத்தில் அமைதியாக ஒரு சூரியனின் ஒளி ஜன்னல் வழியே அவள் வதனத்தில் விழுந்தது.
அவளது விழிகளில் ஓர் பரிதாபம் கலந்த நம்பிக்கையும், அவள் மனதுக்குள் ஏதோ புதுவிதமான உணர்வுகள் எழுவது போல் தோன்றியது.
அந்த நொடியே கருணாகரனுக்கான இரண்டாவது பிறவியாக இருந்தது.
மறைந்துவிட்ட உறவைக் காண, உணர, தன் அன்பை மீண்டும் உணர்த்திட அவர் தயாராக இருந்தார்.
அவளது மௌனம் சத்தமாக ஒலிக்கத் தொடங்கியது.
நிவேதாவின் கண்கள் ஓய்வினை யாசிக்க அதை உணர்ந்த கருணாகரன்,
“ரொம்ப டயர்டா இருக்க கொஞ்சம் தூங்கி எழுந்திரு எல்லாமே பழையபடி சரியாகிடும் ஒன்னும் யோசிக்காதமா..” என்று கூறியதும்,
அவரது ஆழமான அன்பான வார்த்தைகளை கேட்டு நிவேதா சரி என தலையை அசைத்து விட்டு மிக மெதுவாக கண்களை மூடி உறக்கத்திற்குச் சென்றாள்.
அவளது ஒவ்வொரு அசைவுகளையும் நன்றாக கவனித்த டாக்டர் வெளியே கருணாகரனை அழைத்து வந்து,
“அவங்களுக்கு மெமரி லாஸ்ஸாத் தான் இருக்கணும் சீக்கிரமா டெஸ்ட் எடுத்துட்டு என்னன்னு கன்பார்ம் பண்ணிடுவோம் எதுக்கும் நீங்க பழைய விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு ஞாபகப்படுத்த ட்ரை பண்ணுங்க சீக்கிரமா பழைய நினைவு திரும்பிடும் ஒன்னும் யோசிக்காதீங்க டேக் கேர்..” என்று கூறிவிட்டு வைத்தியர் விடை பெற்றுச் செல்ல,
அப்போதுதான் கருணாகரனுக்கு கார்த்தி ஞாபகம் வந்தது. உடனே தனது அலைபேசியை தேடினார். அது காயத்ரியின் அறையினுள் விழுந்து கிடப்பது ஞாபகத்துக்கு வர ஓடிச் சென்று அலைபேசியை எடுத்து கார்த்திக்கு அழைப்பு எடுத்தார்.
“ஹலோ கார்த்தி உடனே நீ ஹாஸ்பிடலுக்கு வா ரொம்ப அவசரம்..”
“என்ன சார் என்ன ஆச்சு நீங்க இங்க வருவீங்கன்னு நான் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்தா நீங்க என்ன அங்க வர சொல்றீங்க காயத்ரி மேடத்துக்கு எதுவும் ஆகிடுச்சா..?” என்று பதட்டத்துடன் கேட்க,
“இல்ல கார்த்தி எல்லாம் குட் நியூஸ் தான் நிவேதா கிடைச்சுட்டா..”
கருணாகரன் கூறுவதை கார்த்திகேயனால் நம்ப முடியவில்லை. உண்மையிலேயே இது அவனுக்கு பெரும் இன்ப அதிர்ச்சி தான்.
“என்ன சார் சொல்றீங்க உண்மையிலேயே என்னால நம்ப முடியல..”
“என்னாலயும் தான் கார்த்தி கண்ணால பார்த்த என்னாலேயே நம்ப முடியல..”
“எனிவே சார் நீங்களும் மேடமும் செய்த புண்ணியம் தான் உங்க மகளை உங்ககிட்ட சீக்கிரமா கூட்டி வந்து சேர்த்து இருக்கு ஆனா இங்க போஸ்ட்மார்ட்டம் செய்த..” என்று யோசனையுடன் பேச்சை இழுக்க,
“நம்மளுக்கு நிறைய வேலை இருக்கு கார்த்தி இங்க நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு முதல் நாம தெரிஞ்சுக்கணும் நான் அந்த பாடிய பார்க்கணும் அதோட போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டரை முதல் அரெஸ்ட் பண்ணுங்க நம்மள சுத்தி யாரோ வலை பின்றாங்க அது மட்டும் எனக்கு நல்லா புரியுது..”
“சார் நாம இத கொஞ்சம் சீக்கிரட்டா தான் ஹேண்டில் பண்ணனும் நான் எதுக்கும் கமிஷனர் சார் கூட இதை பத்தி பேசுறன்..” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
ஏதோ ஆசுவாசமாக இப்போதுதான் மூச்சு விடுவது போல கார்த்திகேயனுக்கு இருந்தது.
இதுவரைக்கும் கழுத்தை ஏதோ இறுக்கி பிடித்து இருப்பது போல இருந்தது. நிவேதா கிடைத்த விடயம் தெரிந்த பின்பு அந்த உணர்வு நீங்கி சுதந்திரக் காற்றை சுவாசிப்பது போலவே இருந்தது.
அவனிடம் இருந்த வேதனைகள், குற்ற உணர்ச்சிகள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல மறைந்து போயின.
அந்த கருகிய நிலையில் இருந்த சடலம் யாருடையதாக இருக்கும்…
அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்…