19. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

4.6
(65)

நெருக்கம் – 19

மிகப்பெரிய ஹோட்டலில் பார்ட்டி நடக்கும் என அபர்ணா எண்ணி இருக்க அவளை கடற்கரையில் கூட்டி வந்து நிறுத்தியிருந்தான் குருஷேத்திரன்.

“பார்ட்டின்னு சொன்னீங்க..”

“ஆமா.. இப்பவும் பார்ட்டின்னுதான் சொல்றேன்..”

“அப்போ இங்க வந்திருக்கோம்..”

“பார்ட்டி இங்கன்னா.. இங்க தானே வரணும்..”

“ஆனா, யாரையுமே காணோமே..!”

“வருவாங்க..”

“ஓ..! நாம ரொம்ப முன்னாடியே வந்துட்டோமா..”

“இல்ல கரெக்டான டைமுக்கு தான் வந்திருக்கோம்..”

“அப்போ ஏன் இன்னும் யாரும் வரல..”

“நோ ஐடியா…”

“நோ ஐடியான்னா…?”

அவனோ அவளைப் பார்த்து முறைத்தவன்,
“வாயை மூடலன்னா தூக்கி கடல்ல போட்டுருவேன்..” என்றான்.

கப்பென தன் வாயை மூடிக்கொண்டாள் அவள்.

அதே கணம் அழகிய விரைவுப்ப் படகு ஒன்று அவர்களின் அருகே வந்து நிற்க, அவளைத் திரும்பிப் பார்த்தவன், ஏறு என்ற ஒற்றை வார்த்தையோடு படகில் ஏறிக்கொள்ள விழிகளை விரித்து,

“வாவ் போட்ல போகப் போறோமா..?” என்ற குதூகலக் குரலோடு அந்த விரைவுப் படகின் அருகே சென்று நின்று கொண்டாள்.

“ஏதாவது ஸ்டூல் கிடைக்குமா..? எனக்கு எட்ட மாட்டேங்குது..” என படகில் ஏற முடியாமல் கூறியவளை ஒரே இழுவையில் தூக்கி படகுக்குள் நிறுத்தினான் குருஷேத்திரன்.
அதில் ஆடிப் போனாள் அவள்.

“அம்மாடியோவ்..! நீங்க ரொம்ப ஸ்ட்ராங்..” என்றவள் கடல் அலைகளை கிழித்துக்கொண்டு படகு செல்லத் தொடங்கியதும் கடலை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.

சற்று நேரத்தில் மிகப்பெரிய பிரம்மாண்டமான கப்பல் வந்து விட படகிலிருந்து கப்பலுக்கு மாறத் தொடங்கிய குருஷேத்திரனை பிரமிப்பு விலகாத பார்வை பார்த்தவாறு, தானும் பின்தொடர்ந்தவள்,

“அப்போ பார்ட்டி கப்பல்லதான் நடக்கப் போகுதா..? வாவ் செமையா இருக்கும்..” என்றிட,

“நாம என்ஜாய் பண்ணினா நல்லாத் தான் இருக்கும்..” என்றவன் கப்பலில் கூடி இருந்தவர்களைப் பார்த்து சிறு தலையசைப்பைக் கொடுத்து விட்டு அவளுடைய கரத்தைப் பற்றிக் கொண்டு நடக்கத் தொடங்க, அங்கே வந்திருந்த அனைவரையும் திரும்பித் திரும்பி பார்த்தவள்,

“எல்லாருமே ரொம்ப அழகா இருக்காங்க..” என்றாள்.

“இங்கே உன்னை விட யாருமே அழகா இல்லைன்னுதான் எனக்குத் தோணுது..” என்றான் அவன்.

நொடியில் அவளுக்கோ முகம் சிவந்து போனது.
கிட்டத்தட்ட 70 பேருக்கு மேல் அங்கே விருந்துக்கு வந்திருந்தனர்.

“இது என்ன பார்ட்டி..?”

“என் பிசினஸ் பார்ட்னரோட பொண்ணுக்கு பர்த்டே..”

“ஓஹ்.. நீங்களும் நேர காலத்துக்கு கல்யாணம் பண்ணி இருந்தீங்கன்னா உங்களுக்கும் ஒரு பொண்ணோ பையனோ  பிறந்து இருக்கும், அதுக்கும் இப்படி ஒரு பர்த்டே பார்ட்டி கொண்டாடி இருக்கலாம்ல..” என்றவளை நெருப்பாய் முறைத்தான் அவன்.

“அச்சச்சோ அவசரப்பட்டு உளறிட்டோமே..” என அவனை பார்த்து இழித்து வைத்தவள்,

“சாரி..” என்று விட்டு சட்டென அவனை விட்டு நகர்ந்து செல்லத் தொடங்க மீண்டும் அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்து தன்னருகே நிறுத்திக் கொண்டவன்,

“என்கூடவே இரு தனியா எங்கேயும் போகாதே..” என எச்சரித்தான்.

சரி எனத் தலையசைத்து விட்டு சுற்றிவரப் பார்த்தவளுக்கு அனைத்தும் கோடீஸ்வரர்கள் எனப் புரிந்தது.

முதல்முறையாக கப்பலில் செல்லும் உணர்வு அவளை குதூகல மனநிலையிலேயே வைத்திருக்க அங்கே அவர்களுக்கு என தனிஅறை கூட வழங்கப்பட்டிருப்பதை கண்டு பிரமித்துப் போனாள் அபர்ணா.

“நீ ஏதாவது ஃப்ரஷப் ஆகணும்னா ஆகிட்டுவா.. நான் வெயிட் பண்றேன்..” என்றவனைப் பார்த்து இல்லை என தலையசைத்தவள், மீண்டும் கப்பலின் மேற்புறத்திற்கு அவனோடு வந்து சேர்ந்தாள்.

அடுத்த சில நொடிகளில் அங்கே திரண்டிருந்த ஒட்டு மொத்த கோடீஸ்வரக் கூட்டமும் ஒன்றாக இணைந்து பிறந்தநாள் விழாவை கொண்டாடத் தொடங்கினர்.

பாடல் மிகுந்த சத்தமாக அங்கே ஒலிக்கத் தொடங்க சிலரோ மதுவை கையில் ஏந்தியவாறு தங்களுடைய இணையோடு ஆடத் தொடங்கினர்.

ஆண்கள் பெண்கள் பாரபட்சம் இன்றி மதுவை அருந்துவதையும் அவர்களுடைய அதி நவீன நாகரிக ஆடையும் கண்டு சற்றே முகம் சுளித்தவள், தன்னுடைய கரம் குருஷேத்திரனின் கரத்திற்குள் நெறிப்படுவதை உணர்ந்து திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

அங்கே அவனுடைய முகமோ இறுகிக் கண்கள் சிவந்து வித்தியாசமாக அவன் யாரையோ வெறித்துப் பார்ப்பதை உணர்ந்தவள் அவன் பார்த்த பக்கம் தானும் பார்த்தாள்.

அங்கே ஒரு அழகிய பெண் தன்னுடைய கரத்தில் குழந்தையையும் மற்றைய கையில் ஒரு சிறுவனையும் வைத்துவாறு தன்னுடைய கணவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த காட்சி அவளுடைய கண்களுக்குத் தென்பட, அவர்களைப் பார்த்து எதற்காக இவன் இப்படி முறைத்துக் கொண்டிருக்கிறான் என குழம்பிப் போனாள் அபர்ணா.

கொஞ்சம் கொஞ்சமாக அவன் பிடித்திருந்த கையின் அழுத்தம் கூடிக் கொண்டே போக இவளுக்கு விரல்கள் நசுக்கப்பட்டன.

தாங்க முடியாமல் பற்களைக் கடித்தவள்,
“அய்யோ என்ன பண்றீங்க..? எனக்கு ரொம்ப வலிக்குது..” எனச் சன்னமாக அலறியவுடன் சட்டென சுயமடைந்து அவளுடைய கரத்தை விடுவித்தான் குருஷேத்திரன்.

“யார் அவங்க..? எதுக்காக அவங்கள நீங்க இப்படி முறைச்சுப் பார்த்துகிட்டு இருக்கீங்க..? ஏன் என்னோட கையை இப்படி நெரிச்சீங்க..?” எனக்  கேள்விகளை அடுக்கடுக்காக அவள் கேட்டுக் கொண்டே போக

“ஷட் அப்..” எனச் சத்தமாக கர்ஜிசித்தான் அவன்.

விக்கித்துப் போனாள் அபர்ணா.

பலர் நிற்கும் இடத்தில் சற்றும் மரியாதை இன்றி அவன் கத்திய விதத்தில் அவளுக்கு விழிகள் கலங்கிப் போயின.

நல்ல வேளையாக அங்கே சத்தமாக ஒலித்த பாடலின் சத்தத்தில் அவனுடைய கர்ஜனை குரல் யாருக்கும் கேட்காது போனது.

“கிளம்பு போகலாம்..” என்றான் அவன்.
இவளுக்கு எதுவும் புரியவில்லை.

‘எதற்கு அழைத்து வந்தான்..?

எதற்காக தன்னைக் காயப்படுத்தினான்?

எதற்கு என்னைப் பார்த்து கத்தினான்..?

இப்போது எதற்கு மீண்டும் கிளம்பலாம் என்கிறான்..?’ என எதுவுமே அவளுக்குப் புரியவில்லை.

‘நான் என்ன இவனுக்கு பொம்மையா அவனுடைய இஷ்டத்துக்கு ஆட்டி வைப்பதற்கு..?
எனக்கும் உணர்ச்சிகள் இருக்குன்னு இவன் புரிந்து கொள்வானா இல்லையா..?’ என வேதனையோடு எண்ணியவள், அவன் இழுத்த இழுப்புக்கு அவள் செல்ல முயன்ற நேரம் அவர்களின் முன்பு வந்து நின்றாள் ஒரு பெண்.

அவளைக் கண்டதும் சற்றே விழிகளை விரித்தவள்,
‘இவங்கள பார்த்து தானே இவர் இவ்வளவு நேரமா முறைச்சுக்கிட்டு நின்னாரு.. இவங்க இப்போ எதுக்கு வந்திருக்காங்கன்னு தெரியலையே..!’ எனச் சற்றே பதறியவாறு குருஷேத்திரனின் முகத்தை அவள் பார்க்க,

அவனோ அந்தப் பெண்ணைத்தான் அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஹாய் குரு.. பைனலி கல்யாணம் பண்ணிட்ட போல..” என்று அந்தப் பெண் கேட்க,

“ஏன்..? கடைசி வரைக்கும் உன்னை நினைச்சுட்டு இப்படியே இருந்திடுவேன்னு நினைச்சியா..?” என அவளை விட இகழ்ச்சியாகக் கேட்டான் அவன்.

அவளுடைய முகத்திலோ ஏளனமாக முகிழ்த்தது புன்னகை.

தன்னுடைய கரத்திலிருந்து குழந்தையை அவனிடம் காட்டியவள், “இதோ..! என்னோட ரெண்டாவது பொண்ணு அழகா இருக்கால்ல..” எனக் கூற,

தன்னருகே நின்று தன்னுடைய வாயை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அபர்ணாவின் கரத்தைப் பற்றி தன் அருகே இழுத்தவன், அவளைத் தோளோடு அணைத்து,

“மீட் மை பியூட்டிஃபுல் வைப் அபர்ணா..” என அந்தப் பெண்ணிற்கு அறிமுகப்படுத்தினான்.

“வைஃபை இன்ட்ரோ கொடுத்ததெல்லாம் ஓகே தான்.. எப்போ உன்னோட பசங்கள இன்ட்ரோ கொடுக்கப் போற..?” என்றதும் மீண்டும் அவனது உடல் இறுகியது.

அவனுடைய கோபத்தை உடல் மொழியின் மூலம் உணர்ந்து கொண்ட அபர்ணாவோ திகைத்துப் போனாள்.

“இட்ஸ்.. நன் ஆப் யுவர் பிசினஸ்..” என அவன் அழுத்தமாகக் கூற,

“இப்போ எதுக்காக கோவப்படுற.. கோபப்பட்டா மட்டும் உண்மை இல்லைன்னு ஆயிடுமா..?”
“வாய மூடு தாரா…”

“நல்லவேளை நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கல… எப்படியோ எஸ்கேப் ஆயிட்டேன்..  திருப்தி இல்லாத வாழ்க்கையை என்னால வாழ முடியாது..” என்றவளின் கழுத்தைப் பிடிக்க தன் கரத்தை உயர்த்தியவன், அவளுடைய கரத்தில் இருந்த குழந்தையைப் பார்த்ததும் தன் கரத்தை இறக்கினான்.

“இன்னும் ஒரு நிமிஷம் நீ இங்க இருந்தா கூட சத்தியமா உன்ன தூக்கி கடல்ல வீசிடுவேன்டி..” என அவன் உறுதியான குரலில் அழுத்திக் கூற மிரண்டு போன தாராவோ அவனை முறைத்து விட்டு தன் குழந்தையோடு அங்கிருந்து சென்றுவிட அவனுடைய இறுகிய தோரணையில் மிரண்டு போய் நின்று இருந்தாள் அபர்ணா.

“எ.. என்ன என்னாச்சு..?”

“……”

“யார் அவங்க..?”

“……”

“ஏன் உங்கள இப்படி எல்லாம் பேசிட்டுப் போறாங்க..?” எனத் திணறியபடி கேள்விகளை அடுக்கிக்கொண்டு போனவளை, இழுத்துக் கொண்டு அந்தக் கப்பலில் இருந்து வேகமாக தன்னுடைய போட்டை நோக்கிச் செல்லத் தொடங்கினான் குருஷேத்திரன்.

“ஸ்ஸ்ஆஆஆ… வலிக்குது குருஷேத்திரன்.. என் கையை விடுங்க…” என சிரமப்பட்டு தன்னுடைய கரத்தை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டவள் அவனை வேகமாக பின் தொடர்ந்தாள்.

அவனுடைய விரைவுப் படகில் அவளோடு ஏறியவன் அடுத்த கணம் கரைக்குச் சென்று தன்னுடைய காரில் ஏறிக்கொள்ள இவளுக்கு வியர்க்கவே தொடங்கிவிட்டது.

எதுவும் புரியாமல் தலை வெடித்து விடும் போல இருக்க தன் தலையை அழுத்தமாக பிடித்துக்கொண்டு அமைதியாக காரில் அமர்ந்திருந்தாள் அவள்.

அவனுடைய காரோ விமானத்தின் வேகத்தில் செல்லத் தொடங்க மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது அவளுக்கு.

“ஐயோ ப்ளீஸ்… நீங்க எதுக்காக இப்படி நடந்துக்கிறீங்க… கொஞ்சம் காம்டௌன் ஆகுங்க குருஷேத்திரன்.. என்னால சமாளிக்க முடியல.. பயமா இருக்கு… ஐயோ முன்னாடி வண்டி வருது பாத்து போங்க…” என அவள் அச்சத்தில் அலறியவாறே வர அவளுடைய அந்த நிலையையோ பயத்தையோ சிறிதும் கணக்கில் கொள்ளாது அதிவேகமாகக் காரை செலுத்தியவன் தன்னுடைய வீட்டு வாயிலேயே அந்தக் காரின் வேகத்தை குறைத்து இருந்தான்.

“இன்னும் ரெண்டு நிமிஷத்துல நீ நம்ம பெட் ரூம்ல இருக்கணும்..” எனக் கட்டளையை பிறப்பித்து விட்டு அவன் காரில் இருந்து இறங்கி வேகமாகச் சென்று விட இவளுக்கு இப்படியே காரில் இருந்து இறங்கி தன்னுடைய வீட்டிற்கு ஓடிவிடலாமா என்பது போல இருந்தது.

இதுவரை இவனை இப்படி ஒரு கோபத்தில் பார்த்திராதவளுக்கு இதயம் கூட தாளம் தப்பித் துடிக்க என்ன செய்வது எனத் தயங்கியவாறு காரிலேயே அமர்ந்திருந்தாள் அபர்ணா.

🔥🔥🔥🔥

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 65

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!