நெஞ்சம் – 19
அன்று இரவு அனைவரும் உறங்க சென்றதும், மெதுவாக அர்விந்தின் அறைக்கு சென்றாள் மலர். மாலுக்கு சென்று திரும்பியதில் இருந்து அறைக்குள் முடங்கியவன் தான், இரவு உணவு கூட வேண்டாம் என்று கூறி விட்டான்.
“கொஞ்சம் சந்தோஷமா இருக்கானேனு சந்தோஷப்பட்டேன், மறுபடி அந்த சிரிப்பு போய்டுச்சே….” அருணா தியாகுவிடம் வருத்தப்பட்டார். மலராலும் அர்விந்தின் இறுக்கத்தை அப்படியே விட முடியவில்லை. அவனின் மனநிலை அவளை எப்படி பாதிக்காமல் இருக்கும்? அவனை கொஞ்சமேனும் சரி செய்ய வேண்டும் என்று துடித்தது அவள் மனம்.
யாரோ கதவை மெல்லமாக தட்டுவது தெரிந்தும் திறக்காமல் படுத்தே இருந்தான் அர்விந்த். அவன் குடித்து இருந்தான். அம்மாவோ அப்பாவோ பார்த்தால் வருத்தபடுவார்கள் என்று அமைதியாக படுத்தே இருந்தான். தூங்கி விட்டான் என்று நினைத்து போய் விடுவார்கள் என்று நினைத்தான். அப்போது மலரிடம் இருந்து ப்ளீஸ் கதவை திறங்க என்று மெசேஜ் வர, இந்நேரத்தில் அவளுக்கு என்னவோ என்று மெதுவாக எழுந்து கதவை திறந்தான். அவளை அப்படியே கண்டுக்கொள்ளாமல் விட அவன் மனது ஒத்துக்கொள்ளாதே!
“என்ன மலர்? நான் தூங்க போறேன்….” என்று கொஞ்சமாக திறந்த கதவிற்கு பின்னால் நின்று பேசினான் அர்விந்த். அவன் குடித்து இருக்கிறான் என்று உடனே கண்டுக் கொண்டாள் மலர்.
“ஏன் சார் இப்படி? உங்க உடம்பை நீங்களே கெடுக்கிறீங்க?” என்று அவள் ஆதங்கமாக கேட்க,
“அக்கறை காட்டியாச்சுல்ல, கிளம்பு” என்று கதவை அடைக்க போனான் அர்விந்த்.
“உங்ககிட்ட பேசணும்….” எங்கே கதவை சாற்றி விட போகிறானோ என்று வேகமாக கூறினாள் மலர்.
“இப்போ நான் பேசுற நிலைமையில இல்லை மலர், நாளைக்கு பேசலாம்.” அவளை தவிர்க்கவே பார்த்தான் அர்விந்த்.
அவன் மனம் தவிக்கும் தவிப்பில் என்ன பேசுவனோ அவனுக்கே தெரியாது, அதை விட மோசம் அவள் அருகாமை! அவள் அருகில் இருந்தால், அவனால் அவனை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதே!
“ப்ளீஸ் சார்! திரும்ப எப்போ டைம் கிடைக்குமோ தெரியாது….” அவள் அவனிடம் சாதாரணமாக கேட்டாலே அவளுக்கு செய்து விடுவான் என்று தெரியாதவள், ப்ளீஸ் போட்டாள். ப்ளீஸ் எல்லாம் மலர் கூறினால், அவன் மனம் தாங்குமா? கதவை விரிய திறந்தான் அர்விந்த். அவள் உள்ளே வரவும், உஷாராக அவளிடம் இருந்து சற்று தள்ளி மெத்தையில் அமர்ந்து கொண்டான்.
“தேங்க்ஸ் சார்! எனக்கு தூக்கமே வரலை சார், நல்லா பேசிட்டு இருந்த நீங்க ஏன் அப்படி டல் ஆனீங்க? யார் என்ன சொன்னா? ஏன் இப்படி குடிச்சீங்க? உங்களை நினைச்சு எனக்கு கவலையா இருக்கு சார்!”
“ஒரு வாரம் கழிச்சு எப்படி இருப்பியோ அப்படி இரு! தேவையில்லாத கவலை எல்லாம் உனக்கு வேண்டாம்” என்றான் அர்விந்த் விட்டேத்தியாக.
“ஏன் சார் இப்படி பேசுறீங்க? தூரம் போனா நான் உங்களை நினைக்க மாட்டேனா?” வருத்தமாக கேட்டாள் மலர்.
“நினைச்சு என்ன யூஸ்? அதனால சொன்னேன்.”
“அப்போ நான் ஊருக்கு போன அப்பறம் நீங்க என்னை நினைக்க மாட்டீங்கனு சொல்றீங்க, அப்படியா?”
அடிப்பாவி உன்னை என் பொண்டாட்டியா நினைச்சுகிட்டு இருக்கேன், நீ வேற மாதிரி சொல்ற! மனதினில் அவளை திட்டியவன்,
“நான் நினைச்சது எல்லாம் சொன்னா, நீ அவ்ளோதான்!” சீண்டினான் அர்விந்த்.
“சொல்லுங்க சார், சொன்னா நான் சந்தொஷப்படுவேன்லே….”
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், இப்போ நீ எதுக்கு வந்தே? போய் தூங்கு போ….” சொல்லி விட்டு அவள் முகத்தை பார்க்காமல் வேறு புறம் திரும்பிக் கொண்டான். அவன் அப்படி செய்யவும், அவன் அருகில் சென்றவள்,
“உங்களை இப்படி வருத்தமா எல்லாம் என்னால பார்க்கவே முடியலை சார், அதான் வந்தேன். நான் உங்க வீட்டுக்கு வந்தப்போ எப்படி இருப்பீங்களோ அப்படி இருங்க சார்! அதான் சூப்பரா இருக்கும்!” என்றாள்.
“அப்போ உன்னை திட்டிக்கிட்டே தான் இருக்கணும்! பரவாயில்லையா? அப்பறம் நீங்க மோசம் சார்னு சொல்லுவே!”
இன்னுமும் தன் முகம் பார்க்காமல் எங்கோ பார்க்கும் அவனிடம்,
“என்னை பாருங்க சார்!” என்றவள் வலுக்கட்டாயமாக அவன் முகத்தை பிடித்து அவள் பக்கம் திருப்பி தன்னை பார்க்க வைத்தாள். பின் அவன் கண்களுக்குள் நோக்கி, “அப்படி மட்டுமா சார் சொன்னேன்?” காதல் சொன்னேன் அல்லவா என்பது போல் அவள் அவனை ஒரு மார்க்கமாக பார்த்துக்கொண்டு கேட்க, சட்டென்று கிளர்ந்து போனான் அர்விந்தன்.
தன் தாடையை பிடித்துக் கொண்டு இருந்த அவள் கைகளில் அவன் முத்தமிட, சட்டென்று கையை எடுத்துக் கொண்டாள் மலர்.
நேற்று போல் அவளை தன் இஷ்டத்திற்கு வளைக்காமல், அவளை புரிந்துக் கொள்ள நினைத்தான் அர்விந்த். அதனால் அவள் கையை எடுத்துக் கொண்டதும்,
“பிடிக்கலையா?” என்றான் மெல்லிய குரலில்.
“நேத்து என்ன நினைச்சீங்க சார்?” என்றாள் மலர். அவள் நேற்றைய விஷயத்தை பற்றி பேச சரியான நேரம் என்று எண்ணி ஆரம்பிக்க, அவன் அவளின் நேற்றைய அணுக்கத்தை குறுப்பிடுகிறாள் என்று நினைத்துக் கொண்டு அதை இன்றைய அவளுக்கான சம்மதமாக எடுத்துக் கொண்டு, வேகமாக அவளை அவனிடம் இழுத்தான். இதை சற்றும் எதிர்பாராமல் சாதாரணமாக நின்றிருந்தவள், மெத்தையில் அமர்ந்திருந்த அவன் மேல் மொத்தமாக சரிந்தாள்.அத்தனை நேரம் மிகவும் ப்ரயத்தனப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தவன், அவளை தன்னுடன் சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான். கொஞ்சம் தனிமை கிடைத்தாலே சந்தோஷப்படும் இந்த காதலன், இன்று அவன் அறையில், மொத்த தனிமையில் அவளை கொண்டாடினான். இறுக்கி அணைத்தவனின் அணைப்பும், அழுத்தமான முத்தங்களும் அவளை மூச்சிரைக்க வைத்தன. எப்படி அவனுக்கு கீழே வந்தாள் என்று அவளை அறியாமலேயே அவனின் தழுவலில் கட்டுண்டு இருந்தாள் மலர்.
குற்றால சாரல் போல் ஆரம்பித்த அவனின் ஆலிங்கனம் அருவியில் வெள்ளம் வந்தது போல மாற, அவனின் கூடல் இல்லாத கூடலில் மிரண்டவளாக அவனிடம் இருந்து விலகினாள் மலர். வேகமாக எழுந்து அவள் தன்னை சரி செய்ய, ஏமாற்றமாக இருந்தாலும் இது தவறு என்பதால் ஏதும் பேசாமல் அவனும் அமைதியாக எழுந்து அமர்ந்து கொண்டான். அவள் தன்னை சரி செய்துக் கொண்டு, தன்னை நிதானப்படுத்திக் கொண்ட பின்,
“எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் சார், ஆனா இது இப்படி எல்லாமே நமக்கு வேண்டாம் சார்! முக்கியமா உங்க வாழ்க்கைக்கு நல்லதில்லை” என்றாள் மெதுவாக.
“அதென்ன என் வாழ்க்கை மட்டும்?”
“ஆமா நீங்க இப்போ தனி ஆள் ஆனா அப்பறம் கல்யாணம் ஆகும்ல….!” அவள் சொன்னதை கேட்டவுடன் கோபம் மூண்டது அவனுக்கு.
“ஓ!!! எனக்கு மட்டும் தான் அப்பறம் கல்யாணம் ஆகுமா? மேடம் உங்களுக்கு கல்யாணம் ஆகாதா?”
“நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லை சார்!”
“ஏன்?”
“எனக்கு லவ் பெயிலர் சார்!” அவ்வளவு கோபமாக அவளிடம் பேச ஆரம்பித்தவன், அவள் இப்படி சொன்னவுடன் சட்டென்று சிரித்து விட்டான். சிரித்தவன், குறும்பாக,
“நேத்து இன்னைக்கு எல்லாம் நடக்கிறது பார்த்தா உன் லவ் பெயிலர் ஆன மாதிரி தெரியலையே….” மெதுவாக அவன் மனசை திறக்க முயற்சித்தான் அர்விந்த்.
“அப்போ என் லவ் சக்சஸா சார்?” ஆர்வமாக கேட்டாள் மலர் அர்விந்திடம்.
அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல், “நீ பர்ஸ்ட் ஏன் என் கல்யாணம் பத்தி பேசினே அதை சொல்லு?” என்று தொடங்கிய இடத்திற்கு வந்து நின்றான்.
“இப்போ இருக்க உங்க நிலைமை மாறும் தானே? அதை தான் சொல்றேன் சார்.”
“அப்போ நீ எதுக்குமே அமைதியா இருந்திருக்கக் கூடாது” என்றான் கோபமாக அர்விந்த்.
“உண்மை தான் சார். ஆனா நான் என்னைக்கும் எனக்கு உண்மையா தான் இருப்பேன். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், நீங்க இப்படி நெருங்கி வரும் போது நான் எப்படி விலகி போவேன்? இந்த ஒரு வாரத்தை விட்டா, இதுக்கு அப்பறம் நான் இப்படி உங்ககிட்ட பேசி பழக முடியுமானு கூட தெரியலை…. நான் வருத்தப்படுவேன் சார்…. அதனால தான்….” அவள் சொல்லி முடிக்கவில்லை, அவமானத்தில் முகம் கன்றி போனவனாக,
“இதுக்கு நீ என்னை நாலு அறை விட்ருக்கலாம் மலர். என்னை எவ்ளோ கேவலமா நினைச்சுட்டே? முன்னாடி நான் செஞ்சது தப்பு தான். ஆனா இப்போவும் நான் உன்னை தொட்டதற்கு காரணமே இல்லைங்கிற மாதிரி சொல்றியே? எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு!” உண்மையில் மிகவும் வருத்தப்பட்டான் அர்விந்த். மனதை சொல்லி இருக்க வேண்டும் என்று தாமதமாக உணர்ந்தான்.
“நீங்க என்ன என்னை விரும்பலையே சார்? நமக்குள்ள சில விஷயம் நடந்த அப்பறம், நான் எதாவது உங்களை பாதிச்சு இருந்தா உங்க கல்யாணம் நடந்தே இருக்காதே சார்! ஆனா நீங்க உங்க வாழ்க்கையை உங்க விருப்பபடி தானே கொண்டு போனீங்க! கல்யாணம் நடந்தது. எதிர்பாராத வகையில் உங்களுக்கு அடிபட்டு, டைவர்சும் ஆய்டுச்சு. இல்லைனா நான் எங்க சார் திரும்ப உங்க வாழ்க்கையில் வந்தேன்? எனக்கு நீங்க ஒரு போன் கூட பண்ணலையே சார். எனக்கு விஷயம் தெரிஞ்சு நானா தானே ஓடி வந்தேன்!”
என்ன பேசுவது என்று தெரியாமல் ஸ்தம்பிச்சு நின்றான் அர்விந்த். தன் மனதை தெளிவாக உரைக்காமல் இருந்தது எவ்வளவு தவறு என்று வருந்தினான். ஆனாலும் பேச வேண்டுமே, அதனால்
“சரி, நீ என் மேல இருக்க காதலால் என்கிட்ட நெருங்கி வந்தே, அப்போ நான்? நான் ஏன் உன்கிட்ட நெருங்கி வந்தேன்? யோசிச்சியா?”
அவள் அமைதியாக இருக்க, “உன் அமைதியை பார்த்தாலே தெரியுது,
சத்தியமா நீ என்னை பத்தி நல்ல விதமா யோசிக்கலைனு தெரியுது…. சொல்லு” என்றான் அர்விந்த்.
“நீங்க இப்போ கொஞ்சம் பலவீனமா இருக்கீங்க மனசளவில் அதனால் இருக்கலாம்னு நினைச்சேன் சார்” என்றாள் தயக்கமாக.
“சபாஷ்! நீங்க தியாக செம்மலா என்னை ஆறுதல் படுத்த நினைச்சீங்க…. இதுக்கு என்ன பேர் தெரியுமா? சே… இதுக்கு மேலே என்னை கேவலப்படுத்தவே முடியாது! ரொம்ப சந்தோஷம்!” அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நாம் அதிக பிரியம் வைத்திருக்கும் ஒருவர் நம்மை நாம் எதிர்பார்க்காத கோணத்தில் இருந்து குறை சொன்னால், நம்மை போய் எப்படி இப்படி சொன்னார்கள் என்று உள்ளம் தவிக்குமே அப்படி தவித்தது அர்விந்தின் உள்ளம். இந்நேரத்தில் அவன் காதலை சொல்லவும் அவன் பிரியப்படவில்லை.
இரண்டு நிமிடம் அமைதியாக இருந்தவன், “நீ கிளம்பு, என் ரூமில இருந்து மட்டுமில்லை, நாளைக்கே நீ ஊருக்கு கிளம்பு. நீங்க என்னை ஆறுதல் படுத்தினது எல்லாம் போதும்” என்றான். அவள் இங்கே இருந்தால், சூழ்நிலை ஒரே மாதிரி இருக்கும், கொஞ்சம் நாட்கள் கழித்து திருமணம் குறித்து நேரடியாக அவள் வீட்டினரிடம் பேசிவிடலாம் என்று யோசித்தான் அர்விந்தன். ஆனால் அவன் அவளை ஊருக்கு போ என்றதில் அவளுக்கும் கோவம் வர,
“உங்களால என்னை கல்யாணம் பண்ணிக்க முடியுமா சார்? இந்த நிலைமையில கூட நான் உங்களை விரும்புறேன்னு தெரிஞ்சும், என்னை ஏத்துக்க முடியாது உங்களால். இன்னைக்கு ஒருத்தரை பார்த்தோமே, அவர் கூட நம்மை வித்தியாசமா தான் பார்த்தார். நான் இருந்ததால தானே நீங்க அவர்கிட்ட ஒழுங்கா கூட பேசலை…. உங்க கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு நாள் நிவேதா அவங்களை அழைச்சிட்டு வந்தப்போ என்கிட்ட சாதாரணமா கூட பேசலை நீங்க! அப்படி எல்லாம் இருக்கும் போது காலமெல்லாம் என்கூட வருவீங்கனு நான் எப்படி நினைப்பேன்?
அவள் பேச பேச, அவள் மனதில் இவ்வளவு இருந்ததா என்று அவளை வெறித்து பார்த்தான் அர்விந்தன்.
அவன் அவளை உணர்வில்லாமல் பார்க்க, வேகமாக கதவை திறந்து வெளியே செல்லப் போனாள் மலர்.
திறந்த கதவின் வெளியே, இவர்கள் வருகையை எதிர்நோக்கி காத்திருந்த அருணா மற்றும் தியாகுவை கண்டு இருவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். அர்விந்திற்கு அதிர்ச்சி என்றாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று நின்றான். ஆனால் மலருக்கு, தான் நிற்கும் நிலைமை புரிய, சட்டென்று கண் குளம் கட்ட, தலையை குனிந்து கொண்டாள் மலர். அந்த நல்லவர்களின் குற்றம் சாட்டும் பார்வையை நிச்சயம் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது!