சற்று நேரத்தில் தியாவைத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்த சாஹித்யாவோ காலை உணவை தயாரித்து விடலாம் என சமையல் அறைக்குள் செல்ல,
“பக்கத்து கடைல சாப்பாடு வாங்கி வந்துட்டேன்.. நீ இன்னைக்கு எந்த வேலையும் பார்க்க வேண்டாம்.. படிச்சா போதும்..” என்றவன் அவளுடைய கரங்களில் இருந்து தன் மகளை தன் கரத்தில் வாங்கிக் கொண்டவன் புத்தகங்களை அவளுடைய கரத்தில் கொடுக்க அவளுக்கு எட்டிக்காயாய் கசந்தது.
“நான் ஈவ்னிங் படிக்கிறேனே…” இழுத்தாள் அவள்.
“ஏன் பாப்பா நல்ல நேரம் பார்த்துதான் படிக்க ஆரம்பிப்பியோ..?”
“அ.. அப்படி எல்லாம் இல்ல..”
“அப்போ போய் படி..”
“ஆ.. ஆனா இப்போ..”
“ப்ச் போய் படின்னு சொன்னேன்..”
“சரி.. போறேன்..” கோபத்தில் கூறினாள் அவள்.
“இதுவரைக்கும் எத்தனை சாப்டர் படிச்சு முடிச்சு இருக்க பாப்பா..?”
அவளோ கைகளை விரித்து பத்து என்பதைப் போலக் காட்ட அவனுடைய விழிகளோ விரிந்தன.
“வாவ் பத்து சாப்டரும் படிச்சு முடிச்சிட்டியா..?” எனக் கேட்டான் அவன்.
அவளோ கைகளை விரித்த வேகத்தில் அத்தனையையும் மடக்கிவிட அவனுடைய புருவங்களோ சுருங்கின.
“அடக்கொடுமையே.. அப்போ ஒரு சாப்டர் கூட படிக்கலையா நீ..?” என அவன் அதிர்ந்து கேட்க, இல்லை என்பது போல தலையசைத்து உதடுகளைப் பிதுக்கினாள் அவள்.
“இன்னும் மூணு நாள்ல எக்ஸாம் வச்சிட்டு எப்படி இவ்வளவு ஃப்ரீயா டென்ஷன் இல்லாம இருக்க..?”
“ஷார்ட் நோட்ஸ் எடுத்து படிச்சுக்கலாம்னு இருக்கேன்..”
“சரி ஷார்ட் நோட்ஸ் எடுக்க நான் ஹெல்ப் பண்ணவா..?”
“ஓகே நான் எடுத்ததுக்கு அப்புறமா அதை எல்லாம் குட்டிக் குட்டி பேப்பர்ல மடிச்சு என்கிட்ட கொடுத்துடுங்க..” எனக் கூறிக்கொண்டே போனவள் சட்டென தன் வாயைக் கரத்தால் பொத்திக்கொண்டு அமைதியாகி விட,
‘ஷார்ட் நோட்ஸை எதுக்கு குட்டிக் குட்டி பேப்பர்ல மடிக்கணும்..?’ என சிந்தித்தவன் அடுத்த நொடியே “அடிப்பாவி பிட் அடிக்கப் போறியா..? உன்ன கொன்னுடுவேன் பாப்பா.. ஒழுங்கா படிச்சு நேர்மையா எக்ஸாம் எழுது..” என்றவன் திருதிருவென விழித்தவளின் காதை திருகிவிடுவேன் என்பது போல சைகையால் செய்ய,
அவனை முறைத்து விட்டு புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்து படுக்கையில் அமர்ந்தவளுக்கு புத்தகத்தை விரித்ததும் கொட்டாவிதான் வந்தது.
“ஐயோ ஸ்கூல்லதான் படின்னு சொல்லி சாவடிச்சாரு.. இப்போ கல்யாணம் பண்ணதுக்கு அப்புறமும் படி படின்னு சாவடிக்கிறாரே.. நேத்து தெரியாம இவரோட ஸ்டூடண்ட்டுன்னு உளறிட்டோம்..” என தன்னையே நொந்து கொண்டவள் சற்று நேரம் புத்தகத்தை உற்று உற்றுப் பார்த்துவிட்டு அப்படியே புத்தகத்தின் மீது கவிழ்ந்து தூங்கி விட்டிருந்தாள்.
தியாவைக் குளிப்பாட்டித் துடைத்து தொட்டிலில் உறங்க வைத்திருந்தவன் சாஹித்யா எத்தனை சாப்டர் படித்து முடித்து இருப்பாளோ என எண்ணியவாறு அறைக் கதவைத் தட்டி விட்டு அந்த அறைக்குள் நுழைய,
அங்கே அத்தனை புத்தகங்களையும் விரித்து விட்டு அதன் மேலேயே கவிழ்ந்து படுத்துக் கிடந்தவள்தான் அவனுடைய விழிகளுக்கு தென்படலானாள்.
அவளைப் பார்த்ததும் கோபத்திற்கு பதில் சிரிப்புதான் வந்தது.
இனி இவளும் என் பொறுப்பல்லவா..?
நன்றாக இவளைப் படிக்க வைக்க வேண்டும்.
வாழ்க்கை தரத்தில் இவளை நன்கு உயர்த்த வேண்டும்.
நல்ல ஒரு பையனாக பார்த்து கூடிய சீக்கிரமே இவளுக்கு திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும்.
அவன் இத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த பணம் அவளுடைய திருமணத்திற்கு நன்றாகவே போதும் என எண்ணி திருப்திப்பட்டுக் கொண்டது அவனுடைய மனம்.
பட்ட மரமான என்னுடன் இருந்து இவளுடைய வாழ்க்கை உதிரும் சருகாக மாறிவிடக்கூடாது.
இவள் தளைக்கப் போகும் எதிர்கால விருட்சம்.
அவளுடைய வளர்ச்சிக்கு ஒரு போதும் தடைக்கல்லாக நான் இருக்கக் கூடாது என எண்ணியவன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்ப மனமின்றி அப்படியே அவளுடைய தலையை அருகே இருந்த தலையணையில் தூக்கி வைத்துவிட்டு அவளுடைய பாடப் புத்தகங்களை மூடி அருகே இருந்த மேஜை மீது வைத்து விட்டு வெளியே சென்று விட்டான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் தூக்கம் நீங்கி தன் விழிகளைத் திறந்தவள் தலையணையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு இது யாஷ்வினின் வேலை எனப் புரிந்து கொண்டாள்.
மனதிற்கு இதமாக இருந்தது.
அந்தந் தலையணையில் விழிகளை மூடி இன்னும் சற்று நேரம் அப்படியே படுத்துக் கிடந்தாள் அவள்.
உள்ளம் அமைதி அடைந்தது.
புத்தகங்கள் மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு உதடுகளில் முல்லை சிரிப்பு மலர வெளியே வந்தவள் சோபாவில் படுத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்தவாறு கிடந்தவனைக் கண்டதும் அப்படியே விக்கித்து நின்று விட்டாள்.
அவனுடைய விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
பதறிப் போனவள் “ஐயோ.. என்னாச்சுங்க..?” எனக் கேட்டவாறு வேகமாக அவனை நெருங்க அவளுடைய குரல் கேட்டதும் சட்டென தன்னுடைய விழிகளைத் துடைத்துவிட்டு அவளைப் பார்த்தவன்,
“நத்திங் பாப்பா..” என முடித்துக் கொண்டான்.
“அக்காவை நினைச்சு ஃபீல் பண்றீங்களா..?”
“தெ.. தெரியலம்மா.. சில ஏமாற்றங்கள தாங்கிக்க முடியல.. அதுல இருந்து வெளியே வரவும் முடியல..”
அவள் மனம் கனத்துப் போனது.
“அக்கா பண்ணது தப்புதான்..” என்றவளைப் பார்த்து மறுப்பாகத் தலை அசைத்தவன் கதறி விட்டான்.
அவனுடைய மனம் முழுவதும் ஆறாத ரணங்கள் நிறைந்திருந்தன.
“இல்… இல்ல பாப்பா… நான்தான் தப்பு… நான்தான் தப்பு…” என தலையில் அடித்துக் கொண்டு அழுதான் அவன்.
“அவளோட தேவைகளை நான் பூர்த்தி பண்ணி இருக்கணும்.. அவள விட்டுட்டு பணம் சம்பாதிக்கிறதுக்காக ஆறு மாசம் கப்பலே தஞ்சம்னு இருந்திருக்கக் கூடாது.. என் மேலதான் பிழை.. த.. தப்பு பண்ணிட்டேன் பாப்பா… நெஞ்செல்லாம் வலிக்குது.. என்ன பண்றதுன்னே தெரியல.. இந்த உண்மை எல்லாம் எனக்கு தெரியாமலேயே இருந்திருக்கலாம்னு தோணுது..
இந்த உண்மை எனக்குத் தெரியலன்னா அவ உயிரோட இருந்திருப்பாள்ல..? என்னாலதான் சூசைட் பண்ணி போய்ட்டாளா..? ஐயோ… என்னால அந்த வலியை தாங்கிக்க முடியலையேம்மா.. கண்ண மூடினாலே யாரோ ஒருத்தன் என்னோட ரூமுக்குள்ள மறைஞ்சு இருந்ததும் அவ தூக்குல தொங்கினதும்தான் கண்ணுக்குள்ள வருது.. நெஞ்சு வெடிச்சு செத்துருவேனோன்னு பயமா இருக்கு சாஹிம்மா..” என துடித்தான் அவன்.
அவனுடைய வார்த்தைகளில் அதிர்ந்து விட்டாள் அவள்.
தவறே செய்யாத உள்ளம் இப்படித் தவித்துத் துடிக்கின்றதே என அவள் உள்ளம் மருகியது.
தன்னை நிலைப்படுத்த முடியாது வேதனையில் போராடிக் கொண்டிருந்தவனின் கரங்களை மெல்லப் பற்றிக் கொண்டாள் அவள்.
“உங்க மேல என்ன பிழை இருக்கு..? இதுல பாதிக்கப்பட்டது நீங்கதான்.. உங்க மேல எந்தத் தப்பும் கிடையாது.. முதல்ல இப்படி திங்க் பண்றத ப்ளீஸ் நிறுத்துங்க..”
“இல்லம்மா நான் அந்த வேலைய விட்ருக்கலாம்..”
“ஏங்க, நான் ஒன்னு கேக்கவா..?”
“கேளு..” என்றான் அவன்.
“இத பத்தி உங்ககிட்ட பேச எனக்கு சங்கடமாதான் இருக்கு.. ஆனா பரவால்ல.. இப்பவே பேசிடலாம்.. மறுபடியும் நான் பாப்பா சின்ன பொண்ணுன்னு ஆரம்பிச்சிடாதீங்க.. எனக்கு 22 வயசு ஆகப் போகுது நான் ஒன்னும் பாப்பா இல்லை..” என்றவள்,
“நீங்களும் அக்காவ விட்டுட்டு ஆறு மாசம் தனியே அங்க கப்பல்ல தானே இருந்தீங்க…? உங்களுக்கும் எவ்வளவோ பாடி நீட்ஸ் இருந்திருக்குமே.. அதுக்காக வேறொரு பொண்ணு கூட ஒன்னா இருந்தீங்களா என்ன..?” என அவள் கேட்டு விட,
“நோ வே… அது எப்படி முடியும்..?” என உடனே மறுத்து விட்டான் அவன்.
“அவ்வளவுதான்பா.. ஒரு ரிலேஷன்ஷிப்ல நாம இருக்கோம்னா கமிட்மெண்ட் கட்டாயம் இருக்கும்.. அவருக்காக நானும் எனக்காக அவரும்னு காத்துகிட்டு வாழ்க்கையை வாழ்றதுதான் நல்லது.. காமத்தை விட காதல் பெருசா இருக்கும் போது இப்படி துரோகம் பண்ணத் தோணாதுங்க..
அதனால இதுக்கெல்லாம் நீங்கதான் காரணம்னு எல்லா பழியையும் உங்க மேல தூக்கிப் போட்டு உங்களையே வருத்திக்காதீங்க.. நடந்தது நடந்து முடிஞ்சு போச்சு.. அத மறந்துடுங்க ப்ளீஸ்..” என்றவள் அவனுடைய கரங்களைப் பற்றியதால் நடுங்கிய தன்னுடைய கரங்களைத் தூக்கி அவனுடைய கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரைத் துடைத்து விட சட்டென அவளுடைய கரத்தை விலக்கி விட்டான் யாஷ்வின்.
அவன் விலக்கிய வேகத்தில் அவளுக்கு முகத்தில் அறைந்தாற் போல இருந்தது.
“சாரி…” என்ற ஒற்றை வார்த்தையோடு அவள் எழுந்து வெளியே சென்று விட,
விழிகளை இறுக மூடிக் கொண்டவனுக்கு மனம் நிலை பெற முடியாமற் தவித்தது.
விழிகளை அழுத்தமாகத் துடைத்துக் கொண்டான் அவன்.
சாஹித்யா கூறிய வார்த்தைகள் அவனை சற்றே பலப்படுத்தின.
இத்தனை நாட்களும் தான்தான் தவறு செய்து விட்டோமோ என தடுமாறிக் கொண்டிருந்தவனுக்கு அவளுடைய விளக்க உரை சற்றே சித்தத்தை தெளிய வைத்தது.
அவன் ஒன்றும் உடற் தேவைக்காக வேறு யாரையும் நாடிச் செல்லவில்லையே.
தன்னை நாடி வந்தவர்களைக் கூட ஒரு எல்லைக்காட்டோடு நிறுத்திவிட்டு விலகித்தானே வந்திருக்கிறான்.
காதலை விட காமம் வெல்ல வேண்டுமா என்ன..?
காதல் தானே தம்பதிகளுக்கு இடையே வெல்ல வேண்டும்.
சற்று நேரத்தில் தன்னைத் திடப்படுத்திக் கொண்டவனுக்கு அப்போதுதான் அவன் நினைத்ததைப் போல சாஹித்யா ஒன்றும் சிறு பெண் இல்லை என்றே தோன்றியது.
மிகவும் தெளிவாக சிந்திக்கின்றாள்.
எனக்கு வாழ்க்கைப் பாடத்தை பற்றிப் பாடம் எடுத்துவிட்டு சென்று விட்டாளே.
‘இதெல்லாம் வக்கனையா பேசுவா.. எக்ஸாமுக்கு படின்னு சொன்னா மட்டும் அதை பண்ண மாட்டா…” என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவன் “சாஹிம்மா.. படி…” எனக் குரல் கொடுக்க,
“முடியாது.. நான் சோகமா இருக்கேன்..” என பதில் வந்தது அவளிடம் இருந்து.
“இன்னைக்கு நீ ரெண்டு சாப்டர் படிச்சு முடிச்சா உனக்கு பிடிச்ச சாக்லேட் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுப்பேன்…” என அவன் குரல் கொடுத்ததும் மூச்சு வாங்க வேகமாக அவனை நோக்கி ஓடி வந்தவள்,
தன்னுடைய உள்ளங்கையை அவன் முன்னே நீட்டி “பிங்கி ப்ராமிஸ்..?” எனக் கேட்க,
“ஹா ஹா..” சிரித்து விட்டான் அவன்.
“ப்ச் ப்ராமிஸ்..?” என மீண்டும் கேட்டாள் அவள்.
“ப்ராமிஸ் மா.. படிச்சு முடிச்சா நீ என்ன கேட்டாலும் வாங்கித் தரேன்..” என்றான் அவன்.
“அப்போ என்ன வெளியே ரெஸ்டாரன்ட் எங்கேயும் கூட்டிட்டுப் போறீங்களா..? அங்க போய் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்.. ப்ளீஸ்..” என அவள் ஆசையாய் கேட்க அவனுக்கோ மறுக்கத் தோன்றவில்லை.
சரி என அவன் ஒத்துக் கொண்டதும் அதற்காகவே பாடப் புத்தகத்தை நோக்கி ஓடிச் சென்றாள் அவள்.
இவ்வளவு நேரமும் வாழ்க்கைப் பாடத்தைப் பற்றி பெரிய மனுஷி போல பேசியவள் குளிர்களியைப் பற்றிப் பேசியதும் சிறுமி ஆகிப்போனதன் மாயம்தான் அவனுக்குப் புரியவில்லை.
Super and intresting sis