2. இது ஒருநாள் உறவா தலைவா..?

4.7
(20)

உறவு – 02

மாமல்லபுர கடற்கரையில் பதறிய மனதோடும் கழுத்தில் கட்டிய புத்தம் புது தாலிச் சரடு மார்பில் வந்து மோத, தன் தந்தையின் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டு விக்கித்துப் போய் நின்றாள் தன்ஷிகா.

அவள் மனமோ கடல் அலைகளை விட வேகமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. நேற்றைய தினம் தன் கழுத்தில் ஏறிய தாலியை அச்சத்தோடு இறுகப் பற்றிக் கொண்டவள் தாங்க இயலாத மன அழுத்தத்தில் தன் தந்தையின் தோளில் முகம் புதைத்து விம்மி அழுதாள்.

“மாப்பிள்ளைக்கு ஒன்னும் ஆகிருக்காதுமா. அது வேறு யாரோ ஒருத்தரோட உடலா இருக்கும்.” என சமாதானம் கூறிய தந்தையை பார்த்து அவளும் தன் உள்ளத்தே உதித்த சிறு நம்பிக்கையோடு ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.

அதே நேரம் அந்த நம்பிக்கையை சல்லி சல்லியாய் நொறுக்கும் வண்ணம் அவர்களுடைய செவிகளில் வந்து விழுந்தன அந்த வார்த்தைகள்.

“ஐயோஓஓஓ வருஉஉஉஉண்….”என அலறினார் வருணின் அன்னை.

“இது நம்ம வருண் சார் பாடிதான்.”

“ஐயோ பாவம்.. உடம்புலாம் ஊதிப்போயிருச்சே…”

அவளது செவிப் பறையில் மோதிய வார்த்தைகளின் வீரியத்தை தாங்க முடியாது அலறியவாறு படுக்கையில் இருந்து எழுந்தாள் தன்ஷிகா.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த காட்சிகள் கனவாக மீண்டும் வந்து அவளை அச்சுறுத்தியது.

தலையை கல்லில் மோதினாற் போன்ற தலை வலியில் “ஆ…ஆ…” என முனகியவாறு இடது கண்ணை விரலால் அழுத்திவிட்டவள்., “நான் எங்கே இருக்கேன்” என்று சிந்தை மயங்கிய நிலையில் கேட்டாள்.

“தன்ஷிகா ரிலாக்ஸ் நத்திங் டு சீரியஸ். நீங்க உங்க ரூம்லதான் இருக்கீங்க” என்றாள் சரிதா.

“நான் ரூம்லயா….? எப்படி இங்கே வந்தேன்….?” என அதிர்ச்சி குறையாதபடி கேள்விகளை அடுக்கியவள் சட்டென “நான் உங்களுக்கு ஏதும் சிரமம் கொடுத்திட்டேனா….?” என சங்கோச்சமாக கேட்டாள்.

“நோ தன்ஷிகா….! இதுல எந்த சிரமமும் இல்ல. நீங்க ஸ்ட்ரெய்ன்  பண்ணிக்காதீங்க. மார்னிங் நீங்க பாஸ் ரூம்ல மயங்கி விழுந்துட்டீங்க.
அப்புறம் மேனேஜர் சார் ஹெல்ப்போட இங்கே கொண்டு வந்தோம்.” என்றாள் பரிவாக,
“அந்த சிட்டுவேஷன்ல எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்  சரிதா” எனக் கூறியவளின் கண்களில் இருந்து நீர் கசிந்தது.

“ஹேய் என்னாச்சு.? ஏன் இப்போ இப்படி வர்றி பண்ணிக்கிறீங்க….?”

“இல்ல சரிதா நான் ரொம்ப ஹார்ட் ஒர்க் பண்ணித்தான் இந்த பைனல் இன்டர்வியூக்கு வந்தேன். பட் இப்படி ஆகிருச்சு, நான் ஏதேதோ யோசிச்சு கோவா வந்தேன் பட் எல்லாம் மண்ணாகிப் போச்சு.” என கவலை தேய கூறினாள் அவள்.

“உங்க திறமைக்கு கண்டிப்பா வேலை கிடைக்கும். நாளைக்கு மார்னிங் நீங்க ஆபிஸ் வாங்க. மேனேஜர் உங்களை வரச் சொன்னார்.” என்ற  சரிதாவோ மீண்டும் தொடர்ந்தாள்.

“கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க தன்ஷிகா….”

“இல்ல கேளுங்க..”

“என்னாச்சு தன்ஷிகா காலையில நீங்க நல்லாத்தானே இருந்தீங்க. என்ஜாய் பண்ணிட்டு இருந்ததையும் நான் பார்த்தேன். பாஸ் வந்ததும் உங்க நடவடிக்கை அப்படியே மாறிப்போயிருச்சு.” என தனது மனதிலிருந்த அச்சந்தேகத்தை மெதுவாக உடைத்தாள் அவள்.

தன்னுடைய உணர்வுகளை அப்படியே கண்ணாடி போல காட்டியுள்ளோம் என்பதை உணர்ந்து தன்னைத் தானே நொந்து கொண்டவள்,  “அப்படிலாம் ஒன்னும் இல்ல. அது…. வந்து…. எம்டியோட உண்மையான பெயர் விதார்த் தானா….?” எனக் கேட்டாள்.

அவளுடைய மனமோ அவள் வருண் எனக் கூறி விடமாட்டாளா என ஏங்கத் தொடங்கியது.

“எஸ். அவரோட பேரு விதார்த் ஆர்யன்.”
“அப்போ வ…. வருண் அவரோட பேரு இல்லையா.?” எனக் கேட்டவளின் வதனத்தில் வெளிப்படையாக வேதனை தென்பட்டது. சட்டென ஏமாற்றம் சூழ, இதழ்களை மடித்து கடித்துக் கொண்டாள் அவள்.

“இல்லையே…. ஏன் அப்படி கேட்குறீங்க?”
“நான் இன்னைக்கு என்னோட கன்ட்ரோல் இழந்து நிலைகுலைஞ்சு போனதுக்கு காரணமே உங்க எம்டி தான்.” என்றாள் நம் நாயகி.

“வாட்….?”

“எஸ் இறந்து போன என்னோட புருஷன் எதிர்ல வந்து நின்னது போல இருந்திச்சு. இல்ல இல்ல இவர் என் புருஷனே  தான்.” என தன்னுடைய உள்ளக்கிடப்பை வெளியே கொட்டினாள் அவள்.
தன்ஷிகாவின் வார்த்தைகளில் சரிதாவின் முகமே மாறிப் போனது.

அடுத்த நொடியே “ஹா….ஹா….” என கொஞ்சம் பெரிய சத்தமாக சிரிக்கத் தொடங்கினாள் அவள்.

“ப்ச்…. கொஞ்சமாவது நம்புற மாதிரி சொல்லுங்க….! ஐ கான்ட் பிலீவ் திஸ். நம்ம பாஸ்ஸாவது…. கல்யாணம் பண்ணுறதாவது…. போங்க தன்ஷிகா….! எத்தனை உள்ளூர்,  வெளியூர் அழகிங்க எல்லாம் போட்டி போட்டாங்க தெரியுமா.? இதுல நீங்க வேற…. அவரே பெண்ணைக் கண்டா நூறடி தள்ளிப் போய்றாரு…. அப்புறம் எப்படி….? இந்த கட்டை பிரம்மச்சாரியப் பார்த்து இப்படி சொல்றீங்களே….!” என சரிதா கிண்டலாகக் கேட்டாள்.

அவளுடைய எள்ளலில் தன்ஷிகாவின் மனமோ காயப்பட்டுப் போனது.

“ப்ச் யாராச்சும் திடீர்னு பார்க்கிற ஒருத்தனை புருஷன்னு சொல்லுவாங்களா.?” என கொஞ்சம் அழுத்தமாக கேட்டாள் அவள்.

“அதைத்தான் நானும் கேக்குறேன். பாஸ் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.” என்றவள் தன்ஷிகாவின் சீற்றப் பார்வையில் தன் பேச்சின் போக்கை மாற்றினாள்.

“ஓகே ஓகே… கூல்… கோபப்படாதீங்க. பட் நீங்களே அவர் விதார்த்தா.? வருணான்னு டவுட்டாதானே கேட்கிறீங்க. எங்க எம்டியோட முகத்திலையோ, செயல்லையோ உங்களை அதாவது  அவரோட மனைவியை பார்த்த மாதிரி எந்தவித  மாற்றமோ சலனமோ இல்லையே….! அவர் உங்களை எல்லோரப்போலயும் தானே ட்ரீட் பண்ணிருந்தாரு….. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவர் கல்யாணம் பண்ணிக்கல தன்ஷிகா.
நீங்களே உங்க புருஷன் இறந்துட்டார்னு சொல்றீங்க…. அப்புறம் எப்படி அவர் இங்க இருக்க முடியும்….? நீங்க ரொம்ப குழம்பிப் போய் இருக்கீங்க தன்ஷிகா.” என்று பாவமாக கூறி முடித்தாள் சரிதா.

சரிதாவின் பேச்சு அவளுக்கு எரிச்சலைத் தந்தாலும் அவள் மூளையில் அப்போதுதான் ‘சுள்’ என உரைத்தது.

‘நான் தானே இவ்வளவு அவஸ்தையும் துயரத்தையும் அனுபவிக்கிறேன். அவர் முகத்தில் எவ்வித மாற்றமோ சலனமோ இல்லையே ஏன்….?’

ஒருவேளை சரிதா சொல்வதைப் போல இவர் என் வருண் இல்லையா….? விதார்த்தா….?
உண்மையில் இது வேறு ஒரு ஆள் தானா….!’
என  இரு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்று கோர்த்து தலையில் வைத்தவாறு சிந்திக்கும் தோரணையில் தரையில் உட்கார்ந்தாள் தன்ஷிகா.

அவள் மனம், மூளை எல்லாம் ஆடிப்போய் இருந்தது.

“ஓகே நீங்க ரெஸ்ட் எடுங்க.  ஐ ஹேவ் டு கோ.” எனக் கூறியவள் வெளியே வேகமாக செல்லத் தொடங்கினாள்.

விதார்த்தை நேசிக்கும் சரிதாவிற்கு தன்ஷிகாவின் பேச்சு பிடிக்காமலேயே போனது. சரிதா சென்றதும் தான் இருக்கும் அறையை தன் பார்வையால் அலசியவள் தன் தலையை தன் கரங்களில் தாங்கிக் கொண்டாள்.

அவளுக்கோ  இன்னும் சாதாரண நிலைமைக்கு திரும்ப முடியவில்லை. அவளின் ரணம் அளவிட முடியாதது அல்லவா.?

அவள் ஒரு நாள் கூட அவனுடன் வாழவில்லையே…. அத்தினம் முடியும் முன்னரே அவள் வாழ்க்கை இருண்டல்லவா போயிருந்தது.
வருணை நேரில் கண்ட போது “தன்னவன் இறக்கவில்லை அவன் உயிரோடு தான் இருக்கிறான். கடவுள் என்னைக் கைவிட வில்லை”.என எண்ணியவளின் மனம் சரிதாவின் பேச்சால் சற்று கலக்கமடையத்தான் செய்தது.

‘உண்மையில் அவன் அந்நியனா..?? என் என் புருசனைப் போலவே இருக்கும் இவன் யார்…?’ என அவளுள்ளே ஓடிக் கொண்டிருந்த சிந்தனைக் குதிரையை கடிவாளம் போட்டு தடுப்பதைப் போன்று அவளின் கைபேசி அலறியது.

“ஹாய் அக்கா. என்னக்கா நீ கோவா போனாலும் போன எங்க எல்லாரையும் மறந்ததுட்டியே….” என்றாள் அவளுடைய தங்கை ஹேமா.

“இல்லடி ஹேமி”

“என்ன இல்ல…. நொல்ல….? அப்ப ஏனாம் இன்னைக்கு முழுக்க ஃபோன் பண்ணலயாம்….ம்ம்.”

அவளுடைய குறும்பு நிறைந்த கேள்விகளுக்கு உடனே பதில் கொடுப்பவள் இன்று அமைதியாக இருக்கவும் பதறிப் போனாள்.

“ஹேய் அக்கா. என்னாச்சு.?” என கேட்க,
ஹேமிக்கு மறு பக்கத்தில் இருந்து அழும் குரல் மட்டும் தான் பதிலாக கேட்டது.

இது வரையில் கிண்டலும் கேலியுமாக பேசிய ஹேமிக்கு அக்காவின் அழுகுரல் கேட்டதும் பதற்றம் ஏகத்துக்கும் அதிகரித்தது.

“அக்கா என்னனாச்சு ஏன் அழுகுற.? வேலை ஏதும் ஓகே ஆகலையா.? சொல்லுக்கா….!”

“அது…  வந்து…. டி….”

“ப்ச் ஒழுங்கா சொல்லுக்கா.”

“இ…. இன்னைக்கு கம்பனியில் அவரைப் பார்த்தேன் டி. இது கனவா….? இல்லை நனவான்னு எதுவும் புரியலைடி பட் நம்பாமலும் இருக்க முடியலை.” என்றாள் தன்ஷிகா.

“என்னக்கா  சொல்லுற…. புரியுற மாதிரி சொல்லு. எவரைப் பார்த்த.?” என்க,
தன்ஷிகாவோ காலையில் நடந்த சம்பவத்தை சுருக்கமாகக் கூறினாள்.

“இங்க ஆபீஸ் எம்டியாக இருக்கிறவரு என் வருண் டி….!”

“ப்ச்.. என்னக்கா…. நீ உளர்ற.? மாமாவா….!? அக்கா உனக்கென்ன பைத்தியமா.? மாமா இறந்து போய் மூணு வருஷமாச்சு. இப்போ திடீர்னு என்னக்கா.? அங்க மாமா இருக்கிறார்னு உளறிகிட்டு இருக்க.?”

“இல்லடி இது அவர்தான். எனக்குத் தெரியும்.”

“என்னக்கா நீ குழந்தை மாதிரி பேசுற…. மாமாவோட உடம்பை தகனமும் செஞ்சு முடிச்சாச்சு. அது உனக்கு, எனக்கு ஏன் நம்ம ஊருக்கே தெரியும். நீ என்னடான்னா யாரையோ ஒருத்தனை மாமான்னு சொல்லி அழுதுகிட்டு இருக்க..”

“ஹேமி உனக்கு எப்படி புரிய வைப்பேன்…” ‘கடவுளே…. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலை.’ என மனதில் எண்ணியவள் வேதனையில் தவித்தாள்.

மறு பக்கத்திலிருந்து ஹேமியோ “அக்கா….அக்கா..” என அழைத்தாள்.
“ம்ம் சொல்லு ஹேமி…”
“அக்கா நீ மாமாவை எப்போவும் நினைச்சிகிட்டே இருக்க. அதுதான் உனக்கு இப்படித் தோணுது.  நான் சொல்றதை நல்லா கேளுக்கா. அது மாமா இல்ல. மாமாவா இருக்கவும் முடியாது. அதை முதல்ல நீ புரிஞ்சுக்கோ…. இந்த உலகத்துல ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கன்னு சொல்றாங்கதானே அப்படித் தான் அங்க இருப்பவரும் மாமா மாதிரி இருக்கிற வேற ஆளுக்கா. நீ எதைப் பத்தியும் நினைச்சு கவலைப் படாம உன்னோட வேலையைப் பாரு.”
“இல்ல ஹேமி என்னால இங்க இருக்க முடியாதுடி”

“அக்கா நீயே நல்லா திங் பண்ணிப் பாரு. மாமா உயிரோடு இருந்தா தான் தாலி கட்டிய மனைவிய வந்து பார்க்காமல் இருப்பாரா…..? சொல்லு. சரி வருண் மாமாவோட அம்மா அப்பாவைப் பத்தி கொஞ்சம் நினைச்சுப் பார். அவங்க நம்ம ஊர்ல தானே இருக்காங்க மாமா உயிரோடு இருந்தா அவரோட அம்மா அப்பாவை பார்க்காம பேசாமா இருந்திருப்பாரா??….”

“நீ என்ன சொன்னாலும் என்னால சமாதானமாக முடியலைடி”

“அக்கா நீ இல்லாத விசயத்தை போட்டு உன் மூளையை குழப்பிக்காத…. மாமா முடிஞ்சு போன விஷயம்கா. முடிஞ்சு போனதை நினைச்சு எந்தப் பயனும் இல்லக்கா புரிஞ்சுகோ. பாஸ்ட் இட் பாஸ்ட் அக்கா. இதை விடு ”

தன்ஷிகா தன்னைக் கொஞ்சம் சுதாகரித்துக் கொண்டு,
“ம்….ம் ஹேமி… அம்மாகிட்ட இதை சொல்லிட்டு இருக்காத. அம்மா ஏற்கனவே ஹாட் பேசன்ட் வேற…. சும்மா சின்ன விசயத்திற்கும் டென்சனாகி எல்லோரையும் பயமுறுத்திடுவாங்க.”

“நான் ஏன்கா சொல்லப்போறேன். அம்மாவோட நிலைமை எனக்கும் தெரியும் தானே…!”
“மம்ம் ஹேமி வீட்ட எல்லோரையும் கேட்டேன்னு சொல்லு”

“சரிக்கா நீ ஸ்டடியா இரு. மாமா நம்மளை விட்டுப் போய்ட்டாரு. நீ உன் உடம்பைப் பார்த்துக்கோ” என அக்கறையுடன் கூறியவாறு அழைப்பைத் துண்டித்தாள் ஹேமா.

ஃபோனை மார்போடு அணைத்துக் கொண்டவளின் மனம் வீட்டைச் சுற்றி வந்தது.

‘நான் வேலை தேடுவதும் வேலைக்காக இவ்வளவு தூரம் வந்ததும்  அப்பாவுக்கு துளியும் இஸ்டமில்லயே…. அப்பாவை சம்மதிக்க வைக்க அம்மா பட்ட பாடு…. கடவுளே நான் அதை மறந்து விட்டேனா? சூழ்நிலை என்னை மறக்கச் செய்துவிட்டதா??’

இது அவளுக்கு மிகப் பிடித்த வேலை. இதற்காக அவள் இரண்டு வருடம் கடினமாக போராடியிருந்தாள். அவள் ஏழு மொழிகளை கரைத்துக் குடித்திருந்தாள். ஏழு மொழிகளிலும் அவளுக்கு எழுத, வாசிக்க முடியும்.

சொல்லப்போனால் அவள் ஏழு பெண்களுக்கு சமமானவள். இவ்வளவும் வேலைக்காக, அவளுக்கு மிக பிடித்த துறையில்  வேலையை பெற்று விட வேண்டும் என்பதற்காகத்தானே.
“எனது கனவு உடையக் கூடாது” என மனதில் எண்ணிக் கொண்டாள் அவள்.

நாளை ஆபீஸ்க்கு செல்ல வேண்டும் அங்கு சென்றாலும் என் மனம் திடமாக இருக்க வேண்டும்.

“நான் யாரோ அவன் யாரோ….!”

அவன் அந்நியன்..!!

எனக்கு உரிமையானவன் அல்லன்…!!

என் விழிகள் கூட அவனைத் தீண்டக் கூடாது இறைவா. என பிரார்தித்தவள் இறந்து போன தன் கணவன் வருணுடைய புகைப் படத்தை தன்னுடைய அலைபேசியில் பார்த்தாள்.

அவன் மீது தீராக் காதல் கொண்ட அவளுக்கோ விழிகள் குளமாகிப் போயின.

கமெண்ட் ப்ளீஸ் 🫂😍

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!