அத்தியாயம் 2
“டாடி கதவை திறங்க ப்ளீஸ்” என்று கெஞ்சும் குரலோடு வெற்றிவேலின் அறைக்கதவை வேகமாக தட்டினாள் தியா.
வெற்றிவேலோ கதவை திறக்கவில்லை. கதவின்மேல்தான் சாய்ந்து கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு நின்றான். மகள் தன்னிடம் கெஞ்சுவது காதில் விழக்கூடாதென காதுக்குள் விரலை வைத்து அடைத்துக்கொண்டான் அந்த பாசக்கார தந்தை.
மாதவியோ “வெற்றி கதவை திறங்க என்ன இது விளையாட்டு உங்களுக்கு தியா இந்தியா போறது பிடிக்கலைனா அனுப்ப முடியாதுனு அவகிட்ட பொறுமையா சொல்லுங்க அதை விட்டு இப்படி கதவை மூடிக்கிட்டா என்ன அர்த்தம்” என்றாள் பதைபதைப்போடு.
அவனது மகள் நான் இந்தியா போகவில்லை என்றும் கூறும் வரை அவன் கதவை திறக்கமாட்டானென்று மாதவிக்கு தெரியும்தானே.
“வெற்றி ஒரு பிஸ்னஸ்மேன் இப்படியா சின்ன குழந்தையாட்டம் பிஹேவ் பண்ணுவாங்க கதவைத்திற” என்று நிர்மல் ராஜும் கை ஓயும் அளவிற்கு கதவை தட்டிப்பார்த்தான்.
ம்ஹும் அவன் யார் குரலுக்கு மசிவதாக தெரியவில்லை.
வெற்றி கல்லாய் மாறி அப்படியேதான் நின்றிருந்தான்.
“தியா உன்கிட்ட எத்தனை முறை சொல்லியிருக்கேன் இந்தியாவுல படிக்கப்போறேனு டாடிக்கிட்ட கேட்காதேனு இப்ப பாரு என்னாச்சுனு டாடிக்கு கோபம் வந்துடுச்சு” என்று மகளை முறைத்தாள்.
“நான் இந்தியாவுல படிக்கத்தானே போறேன்னு சொல்றேன் அங்கேயே ஓரேயடியா தங்கிக்குறேன்னு சொல்லலையேமா” என்றாள் இறைஞ்சும் விழிகளோடு.
“உன்னை விட்டு உன் அப்பாவுல இருக்க முடியாது தியாமா” என்றாள் ஆற்றாமையோடு.
“அப்போ அப்பாவும் நீங்களும் என்கூட இந்தியாவுக்கு வந்துடுங்க”
‘ஓ காட் எப்படி இவளுக்கு புரிய வைக்குறது மககிட்ட உண்மையை சொல்லக்கூடாதுனு சத்தியம் வாங்கியிருக்காரே…’ கணவனுக்கும் மகளுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு மாதவிக்கு தலை வலித்தது.
“புரிஞ்சுக்க தியாமா அப்பாவோட பிஸ்னஸ் முழுக்க மலேசியாவுல இருக்கு அதைவிட்டு உன் படிப்புக்காக உன்கூட இந்தியாவுக்கு வரமுடியுமா… உன் அப்பாவை நம்பி பல குடும்பம் இருக்கு… நீ இன்னும் சின்னப் பிள்ளை கிடையாது புரிஞ்சு நடந்துக்கோடா” என்று மகளிடமும் கோபத்தை காட்ட முடியாமல் இருதலைக்கொள்ளியாக தவித்தாள் மாதவி.
“தியா நீ மலேசியாவுல தங்கி படிக்குறேன்னு சொல்லிப்பாரு அங்கிள் உடனே கதவை திறந்துடுவாரு” என்றான் ரியான்.
“நீங்க எனக்கும் அப்பாவுக்கும் இடையில வராதீங்க ரியான் சாரி ” என்று அவள் தந்தை கதவை திறக்கவில்லையே என்று கோபத்தை ரியானிடம் காண்பித்தாள்.
“இந்த பொண்ணுக்கு இவ்ளோ பிடிவாதம் கூடாது பெத்தவங்க காரணம் இல்லாம சொல்லமாட்டாங்கனு புரிஞ்சுக்கத்தெரியாதா” மகனை மதிக்காமல் பேசிய தியாவை எரிச்சலாக பார்த்தாள் எஸ்தர்.
“ரியான் நாம கிளம்பலாம் அப்பா இருந்துட்டு வரட்டும்”
“அம்மா இருங்க இந்த நேரம் நாம போனா நல்லாயிருக்காது” என்றவனை முறைத்த எஸ்தரோ
“இவ்வளவு பிடிவாதம் தியாவுக்கு இருக்க கூடாது. இவ இந்தியா போறேன்னு சொன்னதும் வெற்றி அண்ணா கோபத்துலதான் கதவை சாத்தியிருக்காரு தியா உண்மையிலும் வெற்றி அண்ணா மேல பாசமா வைச்சு இருந்தானா இந்நேரம் அப்பா நான் இந்தியா போகல உங்க பேச்சை கேட்குறேன் கதவை திறங்கப்பானு சொல்லியிருப்பா அதை விட்டு இப்படி அடவாதமா நின்னுக்கிட்டு இருக்காமாட்டா” என்றாள் கடுப்போடு.
நிர்மல் ராஜ்க்கு எஸ்தர் பேசுவது காதில் விழவும் “ஏய் சும்மா வாயை வச்சிட்டு இரு அப்பா மகள் இன்னும் கொஞ்ச நேரத்துல கொஞ்சிப்பாங்க உனக்கு எதுவும் தெரியலைனா வாயை மூடிக்கிட்டு நில்லு. நான் பிஸ்னஸ்ல ஜீரோவாகி நின்ன நேரம் நம்ம சொந்தக்காரவங்க யாரும் என்னை திரும்பிக்கூட பார்க்கல வெற்றிதான் என்பக்கம் நின்னு உதவி செய்தான் இப்ப அவனை விட்டு போனா என்னை விட நன்றிக் கெட்டவன் இந்த உலகத்துல யாரும் இருக்கமாட்டாங்க” என்று சிறு கண்டனத்துடன் மனைவியை அடக்கினான். எஸ்தர் வாய் பசைப்போட்டது போல் ஒட்டிக்கொண்டது.
நான் இந்தியா போகல டாடி என்று தியா வாய் திறந்து சொல்லவில்லை. தன் கல்லூரி படிப்பு இந்தியாவில் தான் என்று முடிவு பண்ணி வைத்திருந்தாள். அதற்கு காரணமும் இருக்கிறது. அவளது வகுப்புத்தோழி தர்ஷினி கடைசி தேர்வு முடிந்த அன்று “நான் இந்தியாவுல என் பாட்டி வீட்ல தங்கி ஃபுட் டெக்னாலஜி படிக்கப்போறேன். என் பாட்டி சமையல் டிப்ஸ் நிறைய கொடுப்பாங்க எனக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் என் சொந்தக்காரவங்க, அத்தை, மாமா, சித்தி சித்தப்பா இந்தியாவுல இருக்காங்க அவங்க கூட ஜாலியா இருக்கப்போறேன்” என்று கண்ணைவிரித்து முகத்தில் ஆரவாரத்தோடு சொல்லவும்
‘எ.எனக்கு யாரும் சொந்தம் இல்லையா தாத்தா பாட்டினு அத்தை மாமா சித்தி சித்தப்பா பேச்சு எடுத்தாலே அப்பா வேற ஏதாவது பேசி என் மைண்டை திருப்பிடுவாரு ஒருவேளை நம்ம சொந்தக்காரவங்க யாராவது இந்தியாவில் இருப்பாங்களா அப்பாவும் அம்மாவும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்னு அம்மா சொன்னாங்களே! தாத்தா அப்பாமேல கோபப்பட்டு விரட்டி விட்டுட்டாங்களா அச்சோ என் மண்டையே வெடிக்குதே! அப்போ நான் இந்தியா போனேன்னா என் சொந்தம் எங்காவது இருக்காங்களானு கண்டுபிடிச்சுருவேன்’ என்று பேராவலில் இந்தியா போக திட்டம் போட்டு விட்டாள் தியா. அவளது பிடிவாதம் அவளது ரத்தத்தில் ஊறியது அல்லவா. இப்போது தந்தையும் மகளும் ஆளுக்கு ஒரு பக்கம் முறுக்கிக்கொண்டு நின்றனர்.
கண்ணில் கண்ணீர் வழிவதை துடைத்துக்கொண்டு கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு தந்தையின் அறைக்கதவையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். வெற்றியும் கதவை திறந்த பாடில்லை.
“அண்ணா நீங்க கிளம்புங்க அப்பாவும் பொண்ணும் எப்படியோ சமாதானம் ஆகிப்பாங்க” என்றாள் மாதவி.
“இல்லம்மா வெற்றி முகம் சரியில்ல கண்ணெல்லாம் இப்படி சிவந்து நான் பார்த்ததில்லை” என்றார் வருத்தமாக.
ரியானும் எஸ்தரும் கால் வலிக்க நின்றவர்கள் எண்ணெய்க்கு எள் காயலாம் எலி புழுக்கை எதுக்கு காயணும் என்ற விதமாக ஹாலில் போட்டிருந்த நீள சோபாவில் உட்கார்ந்து கொட்டாவி விட்டு சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டார்கள்.
கண்கள் சொருகி நின்ற நிர்மல் ராஜை பார்த்த மாதவியோ “அண்ணா இவங்க சமாதானம் ஆகறது இப்போதைக்கு நடக்காது நீங்க ஏன் தூக்கத்தை கெடுத்துட்டு இருக்கணும் கெஸ்ட் ரூம்ல படுத்துக்கோங்க”
“நான் இந்த நாற்காலியில உட்காருந்திருக்கேன்” என்றவன் பெரிய ஒற்றை நாற்காலியில் அமர்ந்தவருக்கு கண்கள் சொருக அவனும் அயர்ந்து விட்டான்.
மகளின் பிறந்தநாள் முடியும் வேளையில் கண்ணீருடன் நிற்கிறாளே என்ற கவலையுடன் பெரும்மூச்சு விட்ட மாதவியோ “தியா இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல நான் இந்தியா போகலைனு சொல்லு அப்பா கதவை திறந்துடுவாரு” என்றாள் கெஞ்சும் குரலோடு.
“நா.நான் இந்தியாவுலதான் படிப்பேன்” என்ற வார்த்தை உட்புற கதவில் சாய்ந்து நின்றுக் கொண்டிருப்பவனின் காதில் அச்சு பிசறாமல் கேட்டு விட்டது. கையை முறுக்கி சுவற்றில் குத்திக்கொண்டு அவனுக்கு தண்டனை கொடுத்துக்கொண்டான்.
‘ஏன் புஜ்ஜிமா இந்தியாவுக்கு போகணும்னு அடம் பண்ணுற அங்க இருக்கற யாரும் நமக்கு நல்லது நடக்க விடமாட்டாங்க… நம்ம நிம்மதியில மண்ணை அள்ளி போடுவாங்க முழுக்க விஷத்தை முழுங்கி வாழுறவங்க அவங்க நாம இந்தியா போனோம்னா விஷத்தை நம்ம மேல கக்குவாங்க ப்ளீஸ் புஜ்ஜிமா இந்தியா போகலனு சொல்லுடா அப்பாவுக்கு உன்னோட விருப்பத்தை நிறைவேத்தலனா தூக்கம் வராது நீ விசும்பறதை என்னால கேட்க முடியல இதயத்தை யாரோ அழுத்தி பிடிக்குறது போல இருக்கு தங்கம்’ என்று நெஞ்சை பிடித்துக் கொண்டு குலுங்கியவன் கண்ணில் கண்ணீர் துளியும் எட்டிப்பார்த்தது.
**
இறுதி தேர்வு எழுதி முடித்து வந்தததும் ஃப்ரெஷாகி வந்த தியா மாதவி கொடுத்த பூஸ்டை குடித்துவிட்டு வெற்றிக்கு போன் செய்தாள்.
வெற்றி மீட்டிங்கில் முடியும் தருவாயில் இருக்க அவன் பக்கம் இருந்த போனில் மகளின் எண்ணை கண்டதும் “மீட்டிங் ஓவர்” என்று எழுந்து விட்டான். மீட்டிங்கில் அவன் கொடுத்த வேலையை பற்றி கேட்டுக்கொண்டிருந்தான். ஒரு பெண்ணோ ‘சாரோட பொண்ணு போன் பண்ணனும் சார் உடனே கிளம்பிடுவாரு நானும் என் வேலையை இன்னிக்கு முடிச்சி நாளைக்கு கொடுத்துடுவேன்’ என்று வேண்டிக்கொண்டிருந்தாள். கடவுள் அந்த பெண்ணின் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டார்.
மகளை காண வேக எட்டுக்கள் வைத்து வீட்டுக்குள் வந்த வெற்றியை கண்டதும் “டாடி” என்று முகம் முழுக்க புன்னகையுடன் அவனது கையை பிடித்துக்கொண்டாள்.
மகள் முகத்தை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவன் “புஜ்ஜிமா எப்படி எக்ஸாம் எழுதினீங்க ஈசியா இருந்துச்சா எக்ஸாம்” என்று மகளுடன் சோபாவில் அமர்ந்தான்.
“நான் உங்க பொண்ணு டாடி எக்ஸாம் ஃபர்ஸ்ட்கிளாஸா எழுதியிருக்கேன் கன்ஃபார்மா ஆல் சப்ஜக்ட்லயும் சென்டம்தான்” என கண்ணை சிமிட்டிய மகளின் நெத்தியில் முத்தம் கொடுத்துவிட்டு “இந்த ஹாலி டேஸ்ல நாம எந்த நாட்டுக்கு போகலாம்” என்றான் மகளின் நெற்றியில் ஆடிய முடியை சரியாய் ஒதுக்கி விட்டு.
“எல்லா நாட்டுக்கும் என்னை கூட்டிட்டு போய்ட்டு வந்துட்டீங்க நான் பார்க்காத நாடுனா அது” என்று தாடையில் கை வைத்து யோசித்தவளை சிரித்தபடியே மகளை பார்த்திருந்த வெற்றியிடம் “இ.இந்தியா” என்றாள் கண்ணை விரித்து தந்தையின் பதிலை ஆசையோடு எதிர்பார்த்தாள்.
இந்தியா என்ற பேர் மகள் வாயில் வரக்கூடாது என்று அவன் நினைக்காத நாள் கிடையாது. இன்று வந்துவிட்டதே என்று பெரும்மூச்சு விட்டவன் மகளின் கன்னத்தை பிடித்து “என் புஜ்ஜிக்குட்டி இந்தியாவுக்கு போகலாம்னு என்னை கேட்கக்கூடாது” என்று மகளிடம் முதன் முறையாக கண்டிப்பு குரல் வந்தது.
“நோ டாடி நான் இந்தியாவுல உள்ள பிளேஸ் எல்லாம் கூகிள்ல சர்ச் பண்ணினேன்” அங்க இருக்க தாஜ்மஹால் முதல் கொல்லிமலை வரைக்கும் சொல்லி முடித்தவள் “எனக்கு இந்தியாவுல ஒரு இடம் விடாது சுத்திப்பார்க்கணும் டாடி ஏன் என்னோட அடுத்த ஸ்டடிஸ் கூட இந்தியாவுலதான் ஸ்டார்ட் பண்ணனும்” என்று தலையை ஆட்டி அவள் அடுத்த வார்த்தை பேசும் முன்
“நோ இந்தியாவுக்கு உன்னை போக விடமாட்டேன்” என்று அந்த வீடே அதிரும் படி கத்தியிருந்தான் வெற்றி.
வெற்றியின் இந்த கோப முக அவதாரத்தை தியா பார்த்ததில்லையே! தந்தையும் மகளும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று மகள் குடித்த பூஸ்ட் கப்பை எடுத்துக்கொண்டு சமையல்கட்டிக்குச் சென்ற மாதவி கிரைண்டரில் மாவை வழித்துக்கொண்டிருந்தாள்.
பலநாட்கள் கழித்து வெற்றியின் உயர்குரலை கேட்ட மாதவியோ சிங்கில் கைகளை கழுவிக்கொண்டு அவசரமாக ஹாலுக்கு ஓடிவந்தவள் கருப்பசாமியை போல கண்ணை உருட்டி சிவந்த விழிகளுடன் நிற்கும் வெற்றியை கண்டதும் மாதவிக்கு தொண்டைக்குள் பயப்பந்து உருண்டோடியது.
தந்தை விழிகள் கனலை கக்கிக்கொண்டிருக்க தாய் மடி தேடாமல் “டாடி எ.எனக்கு பயமா இருக்கு ஏன் இப்படி கோபப்படுறீங்க” என்று வெற்றியை அணைத்துக்கொண்டதும் அவனது கோபம் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையில் நெருப்பு அணைத்தது போல அவனது கோபம் தடயம் இல்லாமல் எங்கே சென்று விட்டது.
“சா.சாரி புஜ்ஜிமா அ.அப்பாவை மன்னிச்சிடு” என்று “அப்பா உன்னை திட்டினேன்ல அப்பாவை அடிச்சிடு” என்று மகளின் கைகளை பிடித்து அவனது கன்னத்தை அடிக்க செய்தான்.
தியாவோ “ஏ.ஏன் டாடி நா.நான் இந்தியா போறேன்னு சொன்னதும் உங்களுக்கு கோபம் வந்துச்சு நா.நான் பயந்து போய்ட்டேன் தெரியுமா” என்று தந்தையின் நெஞ்சை கண்ணீரில் ஈரமாக்கினாள்.
“அச்சோ தங்கம் அழாத சாமி” என்று மகளை சோபாவில் அமர வைத்து மகளின் முகத்தை கையில் ஏந்தி “அப்பா இனி கோபப்படமாட்டேன் சரியா” என்று மகளின் கண்ணீரை துடைத்துவிட்டான்.
மாதவியோ தந்தையும் மகளும் சமாதானம் ஆனதும்தான் நிம்மதியாக மூச்சை இழுத்துவிட்டாள்.
அன்றைக்கு இரவு வெற்றிதான் மகளுக்கு உணவு ஊட்டிவிட்டு மகளை இன்னும் குழந்தையாக பாவித்து தன் நெஞ்சில் போட்டு தலையை வருடிக்கொடுத்தான். அவளோ தந்தையை நிமிர்ந்து பார்த்து “உனக்கு தூக்கம் வருதா டாடி நான் இப்படியே தூங்கினா உனக்கு நெஞ்சு வலிக்கும்ல” என்று கண்ணை சிமிட்டி கேட்டதும்.
“நீ இப்படி கேட்கறதுதான் அப்பாவுக்கு வலிக்குது புஜ்ஜிமா நீ எனக்கு எப்பவும் சுமை கிடையாது தங்கம் தூங்கு” என்று மகளின் தலையை வாஞ்சையாக மீண்டும் வருட ஆரம்பித்தான்.