2. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

4.8
(26)

வரம் – 02

திவாகருக்கோ அடுத்த நாள் காலை விடியப் போகும் விடியலை எண்ணி இப்போதே உடல் உதறத் தொடங்கியிருந்தது.

எத்தனை இலட்சங்கள் எத்தனை கோடிகள் செலவானாலும் பரவாயில்லை அந்தப் பெண் மாத்திரம் நாளைய விருது வழங்கும் நிகழ்விற்கு வரவே கூடாது என ஷர்வா கட்டளையாகக் கூறிச் சென்று விட்டிருக்க பல முறை மோகஸ்திராவோடு தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனான் திவாகர்.
கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து அவளை இலகுவாக நிகழ்விற்கு வரவிடாது தடுத்துவிடலாம் என நம்பிக்கை கொண்டிருந்த அவனுடைய மனமோ நேரம் செல்லச் செல்ல ஆட்டம் காணத் தொடங்கியது.

இறுதியில் அவள் ஒருபோதும் அழைப்பை ஏற்று தன்னைப் போன்றவர்களுடன் பேச மாட்டாள் என்பதை தாமதமாக உணர்ந்து கொண்டவன் அவளுடைய பிஏ குருவிற்கு அழைப்பை எடுத்து தன்னுடைய நிபந்தனையைக் கூற குருவோ பட்டாசு போல பொரியத் தொடங்கி விட்டிருந்தான்.

“யோவ் லூசு மாதிரி பேசாத… கோடி இல்ல நீ இந்த உலகத்தையே அவங்களுக்கு எழுதிக் கொடுத்தாக் கூட அவங்க தன்னோட முடிவுல இருந்து எப்பவுமே மாற மாட்டாங்க.. நீங்க என்ன பண்ணாலும் எங்க மேடத்தை தடுத்து நிறுத்த முடியாது… தயவு செஞ்சு முட்டாள் தனமா எதுவும் முயற்சி பண்ணாதீங்க… எங்க வழியில குறுக்க வராம ஒதுங்கிப் போயிருங்க.. அதுதான் உங்களுக்கும் உங்களோட பாஸுக்கும் நல்லது..” என சற்றே கெத்தான குரலில் குரு கூறினான்.

“ஏய் லிசின்… பிரச்சனை பண்ணாம இத ஈசியா முடிக்கலாம்னு பார்த்தேன்.. இப்ப நான் கொடுக்கிறது நல்ல ஒரு ஆஃபர் அதை எடுத்துக்கிட்டு நாங்க சொல்றத செஞ்சீங்கன்னா உங்களுக்கு ரொம்ப நல்லது… இல்லைன்னா விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.. இன்னும் ஒரு மணி நேரத்துல எங்க ஆஃபரை நீங்க எடுத்துக்கிட்டிங்களா இல்லையான்னு முடிவு சொல்லியாகணும்..” என எச்சரிக்கும் குரலில் கூறிவிட்டு திவாகர் அழைப்பைத் துண்டித்து விட குருவுக்கு சீற்றத்தை அடக்க முடியாது போனது.

திவாகரின் தலையெழுத்தை எண்ணி நொந்து கொண்டவன் நடந்த அனைத்தையும் அஞ்சியவாறே மோகஸ்திராவிடம் கூற, கத்த பதற்றப்படவோ கோபப்படவோ இல்லை.

நிதானமாக சற்று நேரம் தன்னுடைய நகங்களை ஆராய்ந்த வண்ணம் அமர்ந்திருந்தவள்,

“அவன் கிட்ட நீ என்ன பதில் சொன்ன..?” என அதீத அலட்சியம் நிறைந்த குரலில் கேட்டாள்.

குருவோ தன் நெஞ்சை நிமிர்த்தி “லூசுப் பயலே நீ என்னதான் கோடியைக் கொட்டிக் கொடுத்தாலும் இந்த உலகத்தையே கொடுக்கிறதா இருந்தாக் கூட எங்க மேடம் அதை ஏத்துக்கவே மாட்டாங்க‌.. அவங்கள உன்னால தடுக்கவே முடியாது டா அப்படின்னு சொல்லிட்டேன் மேடம்..” என சிரித்தவாறு பெருமிதமாகக் கூற அவனை புருவம் உயர்த்திப் பார்த்தவள்,

“அந்த பீஏக்கு கால் பண்ணி எங்களுக்கு டீல் ஓகேன்னு சொல்லு…” என அவள் கூற இப்போது குருவுக்கோ பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

‘அடங்கொய்யால என்னடா இது..?’ மனதிற்குள் அலறினான் அவன்.

அவனுடைய மேடம் ஒரு போதும் விலை போக மாட்டாள் அல்லவா..?

தன் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு அவன் அமைதியாக நிற்க,

“நாளைக்கு அந்த அவார்ட் ஃபங்ஷனுக்கு நான் வரக்கூடாதுன்னா பிஃப்டி லேக்ஸ் எனக்கு வேணும்னு சொல்லு… இன்னைக்கு நைட்குள்ள என்னோட அக்கவுண்டுக்கு பணம் ட்ரான்ஸ்ஃபர் ஆச்சுன்னா நாளைக்கு நான் அந்த அவார்ட் ஃபங்ஷனுக்கு போகாம இருக்கேன்னு சொல்லிரு..” என சிறு சிரிப்போடு கூறினாள் அவள்.

அவளுடைய சிரிப்பு குருவுக்கு வேறு எதையோ உணர்த்த உடனடியாக அவளுடைய வார்த்தைகளுக்கு உடன்பட்டவன் திவாகரை அழைத்து தங்களுடைய நிபந்தனையைக் கூற அடுத்த பத்தாவது நிமிடத்திற்குள் அவள் கேட்ட பணம் மொத்தமாக அவளை வந்தடைந்திருந்தது.

திவாகர் பெருமகிழ்ச்சியோடு தன்னுடைய பாஸ் சொன்ன காரியத்தை செய்து முடித்த திருப்தியில் உறங்கச் சென்றுவிட குருவோ நாளை நிச்சயம் பெரிய பிரச்சனை ஏற்படப் போகின்றது என எண்ணியவாறு தூங்காமல் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தான்.

*****
தன்னுடைய ஒளிவெள்ளத்தைப் பரப்பி பூமிக் காதலியை தழுவிட ஆதவன் முயன்ற கணம் பூமி மீது ஒருதலைக் காதல் கொண்ட மேகங்களோ சூரியனின் ஒளி பொருந்திய பொற்கரங்களை பூமி மீது படிய விடாது தடுத்து மறைத்துக் கொள்ள ஒளி படர்ந்தும் படராமலும் இருந்த அதிகாலைப் பொழுதே அது.

தன்னுடைய ஜாக்கிங்கை முடித்துவிட்டு உள்ளே வந்தவனின் கரத்தில் அவன் எப்போதும் விரும்பிக் கொடுக்கும் கிரீன் டீயை கொடுத்தார் ஷர்வாவின் அன்னை.

“தேங்க்ஸ் மாம்..” என்றவன் தன்னுடைய கால்களில் அணிந்திருந்த ஷூவை சற்று தளர்த்தி விட்டு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தவன் கிரீன் டீயை ரசித்துக் குடிக்க அவனைப் பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய அன்னையின் முகமோ அஷ்ட கோணலாக மாறிப் போனது.

“அப்படி எதுல என்ன டேஸ்ட் இருக்குன்னு இப்படி ரசிச்சுக் குடிக்கிற..? எப்படி குடிச்சாலும் கசப்பா தானடா இருக்கு…. இதுக்கு நான் கொடுக்கிற ஃபில்டர் காப்பி ரொம்ப நல்லா இருக்குமே.. வேணும்னா மசாலா டீ ஒன்னு போட்டுத் தரவா…?” எனக் கேட்ட அன்னையைப் பார்த்து முறைத்தவன்
“நீங்க கொடுக்கிற டீ அன்ஹெல்திமா… நீங்களும் அதெல்லாம் குடிக்கிறத முதல்ல நிறுத்துங்க…” எனக் கூற கப்பென தன் வாயை மூடிக்கொண்டார் சிவகாமி.

அவரால் காபியோ டீயோ குடிக்காமல் அந்த நாளை நகர்த்தவே முடியாது.
‘எதற்கு வம்பு கசக்கும் இந்த கசாயத்தை இவன் மட்டுமே குடிக்கட்டும். எனக்கெல்லாம் வேண்டாம்பா…’ என எண்ணியவர் அவனைப் பார்த்துச் சிரிக்க அவனோ புரிந்தது என்பதைப் போல வெளிவந்த சிரிப்பை இதழ்களுக்கிடையே அடக்கியவன் தன்னுடைய டீயை அருந்தியவாறு இன்று நடக்கவிருக்கும் விருது நிகழ்வைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினான்.

தன்னிடமிருந்து 50 லட்சத்தை வாங்கிவிட்டு அந்த விருது விழாவிற்கு வரமாட்டேன் என அவள் கூறியது அவனுக்கு சற்றே ஆச்சரியத்தை வரவழைத்திருந்தது.

‘புத்திசாலி தான்.. பணம்தான் முக்கியம்னு முடிவு எடுத்துட்டா போல..’ என எண்ணிக்கொண்டவனின் இதழ்கள் இகழ்ச்சிப் புன்னகையில் துடித்தன.

“ஷர்வா நம்ம கிரீடம் பத்தி ஏதாவது தெரிஞ்சிதாடா..?” என சற்றே கவலை மிகுந்த குரலில் கேட்டார் சிவகாமி.
கிரீடம் பற்றி அன்னை கேட்டதும் அவனுக்கோ முகம் இறுகிப்போனது.
எத்தனையோ ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த வைர கிரீடம் இந்த வருடம் தங்களிடமிருந்து பறிபோனதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“சாரிமா எத்தனையோ ஆபீஸர்ஸ் நம்ம ரெட் ரீபெல்ல கண்டுபிடிக்க ட்ரை பண்ணிக்கிட்டுதான் இருக்காங்க… சீக்கிரமே கண்டுபிடிச்சுடுவாங்க… இந்தியால அந்த கிரீடத்தை எவனாலும் விற்க முடியாது… எல்லா இடத்திலும் லாக் பண்ணி வச்சிருக்கேன்… பார்க்கலாம் திருடியவன் கூடிய சீக்கிரமே வெளிய வந்துதானே ஆகணும்..” என அவன் பற்களைக் கடித்த வண்ணம் வார்த்தைகளைத் துப்ப சிவகாமியின் முகமோ சோகத்தை அப்பிக் கொண்டது.

கிட்டத்தட்ட அது ஒரு பொக்கிஷம் அல்லவா..?

விலை மதிக்க முடியாத அவர்களுடைய குடும்ப பாரம்பரிய பொக்கிஷத்தை தொலைத்து விட்டு நிம்மதி இழந்து தவித்துக் கொண்டிருந்தார் அவர்.

“ப்ச்… நான்தான் சொல்றேன்ல எப்படியாவது அதை மறுபடியும் கண்டுபிடிச்சு நம்ம வீட்டுக்கு கொண்டு வந்துடுவேன்… நீங்க இத நினைச்சு கவலைப்படாதீங்க…. இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள நம்மளோட கிரீடம் நம்ம கிட்டயே வந்துரும்.. இது ரொம்ப சீக்ரெட்டா இருக்கணும்மா… நம்மகிட்ட இப்போ கிரீடம் இல்லைன்னு தெரிஞ்சா விஷயம் வேற மாதிரி டேஞ்சர் ஆகிடும்… எப்பவுமே யார்கிட்டயும் இந்த விஷயத்தை பத்திப் பேசாதீங்க… இதை நானும் அப்பாவும் மட்டும் பார்த்துக்கிறோம்…” என்றான் ஷர்வா.

“உங்க அப்பாதான் அமெரிக்காவே கதின்னு கிடக்குறாரே… சரிடா அவரும் நீயும் சேர்ந்து என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது… கூடிய சீக்கிரமே நம்மளோட பரம்பரை பொக்கிஷத்தை கண்டுபிடிச்சிடுங்க…” என்றவர் அவன் குடித்து முடித்த கப்பை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட தன்னுடைய நெற்றியை அழுத்தமாக தேய்த்து விட்டவன் இனி ஒருபோதும் செல்லவே கூடாது என முடிவெடுத்திருந்த அந்த விருது விழாவிற்கு தயாராகத் தொடங்கினான்.

என்னைத் தவிர்த்து யாருக்கு விருது கொடுக்க வேண்டும் என எண்ணினார்களோ அந்தப் பெண் விருது வாங்க வராமல் போனதும் அந்த இடமே எப்படி மாறிப் போகும் என்பதைக் காண அவனுக்கோ ஆவல் மிகுந்தது.

அந்த ஆவலின் உந்துதலில் எப்போதும் போல உயர்ரகமான ஆடையை அணிந்து தன்னுடைய ஆடையின் நிறத்துக்கேற்ப காரை தேர்ந்தெடுத்தவன் திவாகரை அழைத்துக் கொண்டு அந்த நிகழ்வு நடக்கவிருக்கும் இடத்தை நோக்கி காரை வேகமாக செலுத்தத் தொடங்கினான்.

“பாஸ் கன்பார்மா அந்த மேடம் பங்ஷனுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க… இருந்தாலும் 50 லட்சம் ரொம்ப அதிகம் தான் பாஸ்..” என்றான் திவாகர்.

“இது பணப் பிரச்சனை இல்ல திவாகர்… இது என்னோட கௌரவம்.. 50 லட்சம் இல்ல 50 கோடியே கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பேன்.. என்ன பொறுத்த வரைக்கும் எனக்கு கிடைக்காத அந்த அவார்ட் வேற யாருக்கும் கிடைக்கவே கூடாது…” என ஷர்வா அழுத்தமாகக் கூற திவாகருக்கோ ஏன் இவ்வளவு வன்மம் என்ற எண்ணம் உள்ளே எழத்தான் செய்தது.

இருந்தாலும் அதை வெளிப்படையாக கேட்டு விட முடியாது அல்லவா தன்னுடைய வாயை இறுகமூடிகா கொண்டவன் அதன் பின்னர் வாயைதா திறக்கவே இல்லை.

சற்று நேரத்தில் மிகப்பிரமாண்டமான அந்த அரங்கிற்குள் நுழைந்தவன் விஐபி இருக்கையில் அமர்ந்து தன்னுடைய அலைபேசியில் கவனத்தைப் பதிக்கத் தொடங்கினான்.
ஷர்வாவின் இருக்கைக்கு பின்னிருக்கையில் திவாரகரோ அமர்ந்து வேடிக்கை பார்க்கத் தொடங்க நிகழ்ச்சியோ ஆரவாரமாக வரவேற்பு நடனத்துடன் இனிதே ஆரம்பமாகத் தொடங்கியது.

நிகழ்வு ஆரம்பமாகி அடுத்த சில நிமிடங்களில் அங்கே சலசலப்பு அதிகமாக அனைவருடைய பார்வையும் தன்னுடைய காவலாளிகளுடன் ஒய்யாரமாக நடந்து வந்த அந்த மாடர்ன் மங்கையின் மீது நிலைத்தது.

வெள்ளையர்களே தோற்கும் அளவிற்கு உடலோடு ஒட்டிய இறுக்கமான ஸ்லீவ்லெஸ் ப்ளாக் நிற பிளவுஸ் அணிந்து வெங்காய நிறத்தில் மெல்லிய புடவையை உடுத்தி அங்கே அமர்ந்திருந்த அனைவரின் நேத்திரங்களையும் தன்னை நோக்கி திருப்ப வைத்த கர்வப் புன்னகையுடன் ஸ்டைலாக நடந்து வந்து ஷர்வாவிற்கு அருகே இருந்த வி ஐ பி இருக்கையில் அமர்ந்தாள் மோகஸ்திரா.

அவளைப் பார்த்த கணம் திவாகருக்கோ மாரடைப்பு வந்துவிடும் போல இருந்தது.

‘அடிப்பாவி அம்பது லட்சத்தை வாங்கிட்டு வரவே மாட்டேன்னு சொல்லிட்டு இவ்வளவு ஸ்டைலா வந்து எங்க பாஸுக்கு பக்கத்துலயே உட்கார்ந்துட்டாளே… அய்யய்யோ ஆண்டவா…’ என மனதுக்குள் புலம்பித் தள்ளினான் திவாகர்.

உடல் இறுகி விறைத்துப் போய் இருக்கையை விட்டு எழுந்தான் ஷர்வா.

“எனக்காக எழுந்து நின்னுல்லாம் மரியாதை கொடுக்கணும்னு எந்த அவசியமும் இல்லை மிஸ்டர் ஷர்வாதிரன்.. ப்ளீஸ் சிட்…” என்றவள் தன் கால் மீது காலைப் போட்டவாறு இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொள்ள அவனுக்கோ திகதிகுவென உடல் முழுவதும் தீப்பற்றிக் கொண்டு எரிவதைப் போல இருந்தது.

💜🔥💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!