கூர்மையான ஒளி, மந்தமான காற்றோட்டம் நிறைந்த அந்த அறையில் ஒரு குரலின் அதிர்வில் நிவேதா விழித்துக் கொண்டாள்.
அது வேறு யாரும் இல்லை கருணாகரனே தான். இதுவரையில் உயிருக்கு உயிரான தனது ஒரே மகள் காணவில்லை என்று பரிதவித்த இதயம் இனி ஒரு பொழுதும் அவளை விட்டு நீங்காது என்று அடம் பிடித்து அவள் அருகே அவள் சுகநலத்தை ஏங்கி நின்று மன்றாடியது.
அவள் விழிகள் மெதுவாக திறந்தன. வெள்ளை விளக்குகளும், மருந்தின் வாசனையும், தூரத்தில் இசைக்கும் இயந்திரத்தின் ஒலியோடும் கலந்து வந்தது. அவளது உணர்வில். அசைய முடியாத உடல். மூச்சை அடக்கிக்கொண்டு, கண்களில் ஒரே குழப்பம்.
நிவேதாவிற்கு அனைத்தும் புதுமையாகப் பட்டது.
“அப்பா…?” என்ற மெல்லிய அதிர்வுடன் அவளது உதடுகள் அசைந்தன.
அவள் அந்த வார்த்தையை முதன்முறையாகப் பேசுகிறாள் போல. அதில் குழப்பமும், மெதுவாக ஏற்கும் உணர்வும் கலந்து இருந்தன.
எதனையும் ஏற்கவும் முடியாமல், நம்பவும் முடியாமல் மன சஞ்சலத்துடன் நடக்கும் விடயங்களை அவளது கண்கள் உள்வாங்கிக் கொண்டது.
ஒரு கணம் கருணாகரனின் இரு கண்களும் அதில் நெகிழ்ந்தன. நிவேதாவின் கண்களில் தந்தையை உணர்ந்த தருணம் அது.
அந்த ஒரு கணம், காலம் முழுதும் போதும் என எண்ணியது தந்தை பாசம்.
அவளுக்கு இது ஒரு புது பிறவி போன்றே தோன்றியது.
அதே நேரத்தில், அறைக்கு வெளியில் கார்த்திகேயன் ஓர் ஆழ்ந்த சுவாசத்துடன் நின்று கொண்டிருந்தான். அவனது பார்வை ஆழமான அமைதியோடு, அன்பும் முடிவும் கலந்து காட்சியளித்தது.
‘நிவேதா உயிரோட இருக்குறா அதுவே போதும் இதுதான் அவளைப் பார்க்கிறது கடைசியா இருக்கணும் இனிமே அவளிடமிருந்து முழுவதுமாக விலகிப் போய்டனும்..’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு இருக்கும் போதே,
கருணாகரன் அந்த அறையில் இருந்து வெளியே வந்து கார்த்திகேயனை அழைத்துக்கொண்டு வைத்தியரின் அறைக்குள் அவசரமாகச் சென்றார்.
அவருக்காக காத்திருந்த வைத்தியர் அவரைக் கண்டதும்,
“வாங்க மிஸ்டர் கருணாகரன், நிவேதா உடல்நிலையை நாம் கண்காணிச்சுக் கொண்டுதான் இருக்கின்றோம் எடுத்த ரிப்போர்ட்டுக்கு எல்லாம் ரிசல்ட் வந்துடுச்சு
மூளை அதிர்வுகள் சீராக உள்ளன. ஆனாலும், கடந்த தாக்கத்தில் சில மூளைத்திசுக்கள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது பேசுவதிலும் நினைவுகளிலும் சிறிய குழப்பங்கள் ஏற்படலாம் ஆனால் உங்கள் ஆதரவு, அதுவே நிவேதாவிற்கு பெரிய மருந்து..”
“நான் உயிரோட இருக்கற வரைக்கும் என் மகளுக்காக நான் என்ன வேணுமென்றாலும் பண்ணுவேன் டாக்டர் சொல்லுங்க இப்போ நான் என்ன செய்யணும்…”, என்று மிக ஆர்வத்துடன் கேட்டார் கருணாகரன்.
“அவங்களுக்கு அமைதியான சூழலும், அன்பும், ஆதரவான பேச்சும், நம்பிக்கையான துணையும் வேண்டும் அதோடு மெதுவாக பழைய ஞாபகங்களை கூறி அவரது மனது பாதிக்காத வகையில் சிறு சிறு சந்தோஷமான நினைவுகளை பகிர்ந்து கொண்டு வர சிலவேளை சீக்கிரமே பழைய ஞாபகங்கள் திரும்பிவிடும்..” என்று டாக்டர் கூற கருணாகரனுக்கும் கார்த்திகை இணைக்கும் மனதில் ஒரு புது தெம்புடன் நம்பிக்கையும் பிறந்தது.
நிவேதா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மூன்று நாட்கள் கடந்தன.
நிவேதா சிறுவயதில் இருந்து கருணாகரனுடன் எடுத்த புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள், டயரி என அவள் சிறுவயதிலிருந்து பாவித்த ஒவ்வொரு பொருட்களையும் காட்டி அது பற்றிய சிறு சிறு கதைகளை கூறி பழைய ஞாபகங்களை அவளிடம் இருந்து புதுப்பிப்பதற்காக பெரிதும் முயற்சி செய்தார் கருணாகரன். அதற்கு ஏற்றது போல் கார்த்திகேயன் அவருடன் இருந்து அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தான்.
ஆனால் எதுவுமே நிவேதாவுக்கு ஞாபகத்திற்கு வந்த பாடில்லை. அனைத்தும் பலனின்றிப் போக மனதளவில் கருணாகரன் மிகவும் சோர்ந்து போனார்.
அருகில் மகள் வந்த உணர்வலைகளாலோ என்னவோ தெரியவில்லை காயத்ரியின் உடல்நிலை பாதிப்பு கட்டத்திலிருந்து மிக வெகுவாக குணமடைய தொடங்கியது.
காயத்ரி தூங்கிக்கொண்டிருக்க, கருணாகரன் மெதுவாக அறைக்குள் நுழைந்து, அவர் அருகில் போய் அமர்ந்தார். காயத்ரியின் அழகான வதனத்தில் சோர்வும், வாட்டமும் நிறைந்திருந்தது.
அவரது கையை மெதுவாகத் தொட, காயத்ரியின் கண்கள் உணர்வு பெற்றது போல அசைந்தன. பின்பு கருணாகரன் அவரது கரத்தை அழுத்திப் பிடிக்க கண்கள் மெதுவாக திறந்து கொண்டன.
அந்த உயிர் பெற்ற கண்களில் ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் ‘எனது மகள் எங்கே ..?’ என வினவியது போல கருணாகரனுக்குத் தோன்றியது.
அதை உண்மை எனப் பறைசாற்றும் வண்ணம் முதல் முதலாக காயத்ரியின் உதடுகளில் இருந்து எழுந்த வார்த்தைகள்,
“என்னங்க… நிவேதா…?” என்றபடி என்னதான் உதடுகளில் இருந்து அந்த வார்த்தைகள் வெளி வந்தாலும் அவரது கண்களில் அதற்கான பதிலுக்கான எதிர்பார்ப்பும், பதற்றமும் நிரம்பி வழிந்தது.
“உயிரோட இருக்கா காயுமா… நம்ம பொண்ணு நம்ம கிட்ட தான் திரும்பி வந்துட்டா…” என்று புன்னகையுடன் கருணாகரன் கூற,
காயத்ரியின் கண்களில் பேரானந்தத்துடன் புன்னகையும் தோன்றியது. அந்த சிரிப்பில் மீண்டுவந்த உயிரும், மகிழ்வும் கலந்து இருந்தது.
“எங்கங்க நிவேதா நான் இப்படி உடம்பு சரியில்லாமல் இருக்கன்னு தெரிந்தும் என்னை பார்க்க வராமல் அவ எங்க போயிட்டா ஒரு வேலை நீங்க எனக்காக மறுபடியும் பொய் சொல்றீங்களா அப்படின்னா நீங்க நிவேதாவ என்கிட்ட கூட்டி வந்து இருக்கலாம் தானே..” என்று தாயுள்ளம் பரிதவித்து பல கேள்விகளை அடுக்கிக் கொண்டு போக,
“அது வந்து காயுமா நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா பதட்டப்படாம கேளு..”
“என்னங்க மறுபடியும் ஏதாவது..?”
“ ச்சே.. ச்சே.. ஆக்சிடென்ட் ஆனது இல்ல தலையில சின்ன அடி பட்டு இருக்கு அதனால பக்கத்து ரூம்ல தான் அவள வெச்சிருக்கோம்..” என்றதும் தாயுள்ளம் அல்லவா பரிதவிக்காமல் இருக்குமா..?
உடனே எழுந்து கொண்ட காயத்ரி, “பக்கத்து ரூம்ல தான் இருக்கா வாங்க போய் பார்த்துட்டு வந்துருவோம்..” என்று எழ முயற்சி செய்தார்.
“என்ன காயத்ரி என் மேல நம்பிக்கை இல்லையா..?”
“ஒரு தடவை நம்பி ஏமாந்ததே போதுங்க என் கண்ணால என் பொண்ண பார்க்கும் வரைக்கும் எனக்கு நிம்மதியே இல்லை ப்ளீஸ் என்னை கூட்டி போங்க..”
இதற்குமேல் வேறு வழி தெரியாமல் கருணாகரன் தாதியை அழைத்து அவருக்கு போடப்பட்டிருந்த மருத்துவ சாதனங்களை தற்காலிகமாக கழற்றி வைத்துவிட்டு,
“சார் உங்களுக்காக மட்டும் தான் நான் இதை செய்கிறேன் பெரிய டாக்டர் வர்றதுக்குள்ள சீக்கிரமா வந்துடுங்க இதெல்லாம் நான் கழட்டி வச்சிட்டேன்னு தெரிஞ்சிருச்சுன்னா என்னோட வேலைக்கு ஆபத்து சார்..” என்று தாதி பயத்துடன் கூறினாள்.
அந்த நிமிஷம் மிகவும் நுணுக்கமான, ஆனால் ஆழமான உணர்ச்சிகளை பரப்பியது. தாதி மற்றும் கருணாகரனின் உதவியோடு காயத்ரி மெதுவாக தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்தார்.
உடல்நிலை இன்னும் முழுமையாக நிவர்த்தியாகாத நிலையில் இருந்தாலும், அந்த தாயுள்ளத்தின் ஆவல் எல்லாவற்றையும் மீறியது.
கருணாகரன் தனது ஒரு கையினால் அவளைத் தாங்கிக் கொண்டு மெதுவாக வெளியே அழைத்து வந்தார். அந்த நொடி, மனதுக்குள் கலந்திருந்த பயமும், நம்பிக்கையும் அவரது கண்களில் ஒளிர்ந்தது.
வைத்தியசாலை நிசப்தமாக இருந்தது. மெல்லிய காலடி சப்தத்தோடு அவர்கள் இருவரும் அந்த பக்கத்து அறைக்குச் சென்றனர். அந்த அறையின் கதவு அருகில் வந்தபோது, காயத்ரியின் சுவாசம் வேகமாகியது.
உள்ளே இருப்பது தான் நிவேதா என்பதைத் தெரிந்தும், அந்த தரிசனத்தை எதிர்பார்த்தபடி விழிகள் கலங்கின.
“உண்மையா… அவ தான் உள்ளே இருக்கா?” என்ற விசும்பும் பதற்றமும் கலந்த ஓசையினால் காயத்ரி கருணாகரனிடம் கேட்டாள்.
“ஆமாம்… நம்ம நிவேதா தான்… நம்ம பொண்ணு… சின்னக் குழந்தையை மாதிரி தூங்கிட்டு இருக்கா…” என்ற கருணாகரனின் மெளனப் புன்னகை, காயத்ரியின் உள்ளத்தில் ஒரு நிம்மதியான நம்பிக்கையை ஊட்டியது.
அவர் கதவை மெதுவாகத் திறந்தார்.
அறையினுள் ஒளிரும் மிதமான வெளிச்சத்தில், நிவேதா படுக்கையில் மெதுவாக சுவாசிக்கிறாள். அவள் முகத்தில் ஒரு அமைதியும், புன்னகையின் ஓரளவான சாயலும் தெரிந்தது. அவள் கண்கள் மூடியிருந்தாலும், அந்த முகம் தாய்க்கு அந்த நேரத்தில் கிளர்ந்து எழும் அன்பின் இருப்பிடமாகவே தெரிந்தது.
காயத்ரி அறைக்குள் நுழைந்ததும், கால்கள் நிலத்தில் நிலை தடுமாறி நிற்காமல் தவித்தன.
“நிவேதா… என் கண்ணே… என் பட்டு…” என்ற வார்த்தைகள் அவளது வாய் வழியே வழிந்தன.
அந்த ஒலி நிவேதாவின் செவிகளை எட்டியது போல, அவளது கண்கள் மெதுவாக அசைந்தன. காயத்ரியின் குரலை அறிந்த அந்த உள்ளம், ஒரு புன்னகையுடன் கண்களை திறந்தது.
காயத்ரிக்குக் கிடைத்த மீளவந்த வாழ்வின் பரிசாக இருந்தது அவளது புன்னகை. கண்களில் கண்ணீர் பீலியாக வழிந்து, நிவேதாவை கட்டி அணைத்தார். முத்த மழையை அவள் மீது கொட்டித் தீர்த்தார்.
அவள் நடப்பவை அனைத்தையும் விசித்திரமாக பார்க்க,
“என்னமா பாக்குற..?” என்று கேட்க,
கருணாகரன் உடனே நிலைமையை சுதாரித்து,
“நிவேதா இதுதான் உன்னோட அம்மா காயத்ரி..” என்று அறிமுகப்படுத்த,
காயத்ரி கருணாகரனை புரியாத பார்வை பார்த்து வைத்தார்.
“என்னங்க இது யாரோ எவரையோ அறிமுகப்படுத்துற மாதிரி என்னை என் மகளுக்கு அறிமுகப்படுத்துறீங்க என் பொண்ணுக்கு என்னத் தெரியாதா..?” என்று மிடுக்காகக் கேட்டார்.
சிறு சங்கடத்துடன்
“ஆமா காயத்திரி அவளுக்கு தலையில் அடிபட்டதால பழைய நினைவுகள் எல்லாமே மறந்துடுச்சு சீக்கிரமாகவே திரும்பிடும் என்று டாக்டர் சொல்லி இருக்காங்க..” என்று கூற,
மகள் கிடைத்து விட்டால் என்று சந்தோசப்படுவதா அல்லது என்னை யாரென்று தெரியாது என்ற குழப்பத்தில் யாரோ தெரியாதவரைப் பார்ப்பது போல பார்த்து விழிக்கின்றாளே என்று கவலைப்படுவதா என்று புரியாமல் அந்தத் தாய் உள்ளம் பரிதவித்து நின்றது.
நிவேதா குழப்பமாக இருந்தாலும், தாயின் நேசம் உணர்ந்தவள் போல மெதுவாக அவரது தோளில் சாய்ந்தாள்.
தற்போதைக்கு அவளது இந்த ஒட்டுதலே காயத்ரிக்கு போதுமானதாக இருந்தது.
அந்த அறையில் திடீரென ஒரு அமைதி பரவியது. அது இறந்துவிட்ட நேரங்களை மீண்டும் உயிர்த்தெழச் செய்த அன்பின் அமைதி.
அந்த நிமிடம் மட்டும் நின்றுவிட்டது போல. அதில், கடந்த காலம், இன்று, எதிர்காலம் அனைத்தும் ஒன்றாக வந்து கலந்து ஒரு புனிதமான கணமாக மாறியது.
கருணாகரன் அந்த துல்லியமான தருணத்தை அமைதியாக நின்று பார்த்தார். பெரும் மூச்சுவிட்டு புன்னகைத்தார்.
அவர் மனதில் ஒரே ஒரு வார்த்தை மட்டும் தோன்றியது:
‘இப்ப தான் நம்ம வாழ்க்கை நிஜமா திரும்பத் தொடங்குது…’
*******************************
கார்த்திகேயன், தன் அதிகார அடையாள அட்டையை காட்டி நேராக மரணப் பதிவு பிரிவிற்கு சென்றான்.
அங்கிருந்த உதவியாளர், ஆச்சரியத்துடன்,
“அந்த பெண்ணா? நிவேதா! ஏற்கனவே அவளோட போஸ்ட்மார்ட்டம் பண்ணியாச்சே நம்ம டாக்டர் சஞ்சீவ் தான் செய்தாரு…”
கார்த்திகேயன் ரௌத்திரத்துடன் கண்களில் கோபம் பொங்க,
“அது தான் தான்! உயிரோட இருக்குறவங்க மேல எப்படிங்க அந்த மாதிரி ரிப்போர்ட் எழுதுவீங்க? இது முற்றிலும் போலியான, தவறான அறிக்கை எனக்கு அதோட காப்பி வேணும்,” என்று சிறிது கடுமையாகக் கூறினான்.
அஞ்சிய முகத்துடன் அந்த ஊழியர் ஒரு பழைய கோப்பைப் பார்த்து, அதிலிருந்து மடிப்பில் மடிக்கப்பட்ட காகிதத் தாள்களை எடுத்தான்.
அதனை பிடுங்காத குறையாக அவனிடமிருந்து பறித்து எடுத்தான்.
‘இவங்க யாரா இருந்தாலும் என்கிட்ட இருந்து தப்ப முடியாது..’ என்று மனதிற்குள் கருவிக் கொண்டான்.