கருடா 20
மடிக்கணினியில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தாள் ரிதுசதிகா. அவளை முறைத்துக் கொண்டு எதிரில் அமர்ந்திருந்தான் கருடன். எதற்கு முறைக்கிறான் என்று அவன் மனைவிக்குத் தெரியும். தெரியாதது போல் நடித்துக் கொண்டிருக்கிறாள். இன்னும் கேட்ட கேள்விக்குப் பதில் தராததால்,
“ஏன்டி, காது செவிடாகிடுச்சா?” குரல் கொடுத்தான்.
“வேலையா இருக்கேன்.”
“ஓங்கி மிதிச்சேன்… பல்லு மொத்தமும் கழண்டு விழுந்துடும்.”
“பரவால்ல, தங்கப்பல் செட் பண்ணிக்கிறேன்.”
“பணக் கொழுப்பு!”
“தெரிஞ்சிருச்சா?”
அருகிலிருந்த தலையணையை எடுத்து அவள் மீது வீசியவன், “பிசாசு! நல்லா நேரம் பார்த்துப் பழி வாங்கிட்ட. என்கிட்ட வரும்போது எட்டி மிதிச்சி இருக்கணும். சும்மா நின்னுட்டு இருந்தேன் பாரு, அதுக்கு எனக்கு நல்ல கூலி குடுத்துட்ட.” என்றான்.
அதுவரை அவனை நிமிர்ந்து பார்க்காமல் தலை குனிந்து இருந்தவள், “முதல்ல என்கிட்ட வந்தது நீ தான்…” என்றாள் தெனாவட்டாக.
“அ…அது சும்மா பேசலாம்னு வந்தேன், நீதான் ஏதோ பண்ணிட்ட.”
“இந்த வார்த்தையை நான் சொல்லணும். போயும் போயும் உன்னப் போய் கிஸ் பண்ணேன் பாரு, ச்சீ…”
“என் மேல எவ்ளோ நாள் ஆசைன்னு தெரியல.” எனக் கண்ணடிக்கும் கணவனைப் போலியாக முறைத்தவள், “ஆசையும் இல்ல, ஒரு மண்ணும் இல்லை. அது எதோ ஆக்சிடென்டா நடந்திருச்சு.” என்றாள்.
“ஹான் ஹான்… ஆக்சிடென்ட் ஆக்சிடென்டாவே இருக்கட்டும். இனி என்னைத் தொடணும்னு கனவுல கூட நினைக்காத. நானே என் வருங்காலப் பொண்டாட்டிக்குத் துரோகம் பண்ணிட்டோம்னு மன வருத்தத்துல இருக்கேன்.”
“நல்ல மூடுல இருக்கேன், ஒழுங்கா போயிடு.”
“ஹாஹா… அப்படி இருக்கக் கூடாது, தப்பாச்சே.”
“உனக்குச் சனி நாக்குல நாட்டியம் ஆடுதுன்னு நினைக்கிறேன்.”
“ப்ச்! அதையும் பார்த்திடுவோம்.” என்றவன் அவள் வேலை செய்து கொண்டிருந்த மடிக்கணினியை மூட, “பைத்தியக்காரா! வேலை பார்த்துட்டு இருக்கேன், கண்ணுத் தெரியல.” கத்தத் தொடங்க, “தெரியல!” பல்லைக் காட்டினான்.
“உன் அம்மாக்கு போன் பண்ணவா?”
“பண்ணு!”
“அய்ய… அவங்க இன்னும் உன் மேல கோபத்துல தான் இருக்காங்க, மறந்துடாத.”
“தெரியும். நீ என்ன சொன்னாலும் இனி நம்ப மாட்டாங்க.”
“ஏன்?”
“மேடம் பண்ண பர்பாமென்ஸ் அந்த மாதிரி!”
“நான் என்ன பண்ணேன்?” என்றவளை உரசிக்கொண்டு அமர்ந்தவன், தோள் மீது கை போட்டு, “என்ன பண்ணன்னு உனக்குத் தெரியாது, அப்படித்தான…” என்று விட்டு அவள் உதட்டைக் குறுகுறுவென்று பார்த்தான்.
அதன் வீச்சுத் தாங்காது, பற்களுக்கிடையே உதட்டை ஒளித்து வைத்தவள், நகருமாறு கண்ணால் சைகை செய்தாள். அதற்கு எதிர்மறையாக இன்னும் நெருங்கினான். ஒரு அடி எடுத்து வைத்தால் உரசிக்கொள்ளும் அதரங்கள். அத்தனை அருகில் இருந்தான் கருடேந்திரன்.
“கிஸ் பண்ணதுல பசி எடுத்துடுச்சுன்னு இழுத்துட்டுப் போயிட்டு, ஒண்ணுமே பண்ணாத மாதிரி நான் என்ன பண்ணன்னு கேக்குற? அதோடவாவது விட்டு இருக்கணும். உன் இஷ்டத்துக்குச் சாப்பாடு போட்டு, அவங்க எல்லார் முன்னாடியும் ஊட்டி விடுற. சுத்தி இருக்கிறவங்க என்ன நினைப்பாங்கன்னு கொஞ்சம் கூடப் புத்தி இல்லையாடி. அவங்க முன்னாடி நிக்க முடியல. நதியாவும், மூர்த்தியும் அடப்பாவின்னு பார்த்தாங்க. உன் மாமனாருக்கு முகமே இல்லை. உங்க அப்பா தான்டி இருக்கறதுலயே ரொம்பப் பாவம்…” என்பதைக் கேட்டவள் சத்தம் வராமல் சிரித்துக் கொண்டிருக்க,
“சிரிக்காத…” கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவன், “உன் மாமியார் வேற போகும்போது என்னைப் பார்த்து நக்கலாச் சிரிக்குது. தனியாச் சிக்கிட்டன்னு வை, செஞ்சுடுவாங்க என்னை.” புலம்பினான்.
“என்னமோ விருப்பமே இல்லாம இருந்த மாதிரிப் பேசுற. சட்டையைப் பிடிக்கும் போது தள்ளி விட்டுட்டு, அதெல்லாம் இல்லன்னு சொல்ல வேண்டியது தான. ஊட்டும் போது ‘ஆ’ நானா காட்டுனேன்.”
“உன்ன அசிங்கப்படுத்தக் கூடாதுன்னு நான் அசிங்கப்பட்டுட்டேன்!”
“ஹா ஹா…”
“இனி என் வீட்டு ஆளுங்க பக்கமே தலை வச்சுப் படுக்க மாட்டேன்.”
“அவ்ளோ பயமா?”
“நீ வேற ரிது. சும்மாவே என் வீட்ல இருக்கற எல்லாருக்கும் கிண்டல் பண்றது அல்வா கிண்டுறது மாதிரி. ஒருத்தர மாத்தி ஒருத்தர் கலாய்ச்சிட்டுச் சிரிச்சுட்டு இருப்போம். அதுவும் ஞாயிற்றுக் கிழமை எல்லாம், அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க வந்து திட்டிட்டுப் போற அளவுக்கு ரகளை பண்ணுவோம். மதியம் சாப்பிட உட்கார்ந்தா, குறைஞ்சது ரெண்டு மணி நேரமாவது ஆகும். அவ்ளோ அரட்டையும், பேச்சும் ஓடும். எப்படிச் சாப்பிட்டோம்? என்ன சாப்பிட்டோம்னு கூட ஞாபகம் இருக்காது.
அதுலயும் என் தங்கச்சிதான் ரொம்பப் பாவம். நானும், மூர்த்தியும் சேர்ந்து ஒரு வழி ஆக்கிடுவோம். அழுதுகிட்டே எங்க அம்மா, அப்பாவைச் சப்போர்ட்டுக்குக் கூப்பிடுவா… அவங்களும் சப்போர்ட் பண்ற பேர்ல சேர்ந்து கலாய்ப்பாங்க. அப்பப்பா, என் வீடு அவ்ளோ ஜாலியா இருக்கும்.”
மகிழ்விற்குப் பஞ்சம் இல்லாத பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டவன், நினைவோடு பயணிக்க ஆரம்பித்து விட்டான். உடன் பிறந்தவர்களோடும், பெற்றோர்களோடும் வாழ்ந்த இனிமையான தருணங்கள் வரிசையாக நினைவில் வந்தது. எதைச் சொல்வது, எதை விடுவது என்று தெரியாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்ல ஆரம்பித்தவன் நேரம் கடந்ததைக் கவனிக்கவில்லை.
முதலில் சாதாரணமாகக் கேட்க ஆரம்பித்த ரிது, கட்டியவன் முகத்தில் தாண்டவம் ஆடிய உற்சாகத்தில் தன்னையும் மறந்து கேட்க ஆரம்பித்தாள். கதை கதையாக அளந்தவன், “இதுக்கு நடுவுல அம்மா, அப்பா லவ் ட்ராக் ஓடும் பாரு… பார்க்க ரெண்டு கண்ணு போதாது. அம்மா முகம் கொஞ்சம் வாடிடக் கூடாது. அம்மாக்கு உடம்பு முடியாமல் போனதுக்கு அப்புறம், நாங்க தான் லீவு நாள்ல சமைப்போம். அம்மாவும், நதியாவும் இது வேணும்… அது வேணும்னு ஆர்டர் மட்டும் போடுவாங்க. வேர்க்க விறுவிறுக்கச் சமைச்சு சாப்பாடு போடுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும்.” என்றவனுக்கு மூச்சு வாங்கியது.
அவ்வளவு வார்த்தைகளை வரிசையாகக் கொட்டினான் கருடேந்திரன். மேஜை மீதிருந்த தண்ணீரை எடுத்துப் பருகி, “ஒரு நாள் நம்ம வீட்டுக்கு உன்னைக் கூட்டிட்டுப் போறேன்.” என்றிட, வலியோடு சிரித்தாள்.
“என்ன?”
“ஒன்னும் இல்ல.”
“சொல்லு?”
“உனக்கும், எனக்கும் ஸ்டேட்டஸ் மட்டும் தான் வித்தியாசம். என்னென்ன சந்தோஷத்தை எல்லாம் நீ அனுபவிச்சியோ, அது எல்லாத்தையும் நானும் ஒரு காலத்துல அனுபவிச்சிட்டு இருந்தேன். அது எல்லாத்தையும் நானே அழிச்சிட்டேன்.”
உற்சாகத்தில் இருந்தவனின் மனநிலை மாறியது. மௌனமான அவள் சிரிப்புக்குப் பின், இருக்கும் வலியை உணர்ந்தவனால் சற்றென்று எதையும் பேச முடியவில்லை. பழைய நினைவுகளோடு சென்று கொண்டிருந்தாள் ரிது. செல்லமாக வளர்ந்தவள். குறையே இல்லை என்று மகிழ்ந்தவள். இன்று அனைத்தையும் தொலைத்துவிட்டு அரக்கியாக இருக்கிறாள்.
வாய் வழி ஆறுதலை விட, மனவழி ஆறுதலே தன்னவளைச் சரிசெய்யும் என்றுணர்ந்து ஆரத்தழுவி விலகியவன் கன்னம் பிடித்து, “அழியல, உனக்குள்ள மறைஞ்சு இருக்கு. நீ நினைச்சா அதை வெளிய எடுத்துட்டு வர முடியும்.” என நெற்றியில் இதழ் பதித்தான்.
ரிது அமைதியாக இருக்க, “என் வீட்டுக்கு வரியா, எதைத் தொலைச்சியோ, அது அங்க கிடைக்கும். உனக்கான தாய்ப்பாசத்தை எங்க அம்மா தருவாங்க. அப்பப்ப அப்பா கண்டிப்பாரு. ஆனா முடிஞ்ச வரைக்கும் நீ கேட்ட எல்லாத்தையும் வாங்கித் தருவாரு. வீட்ல ரெண்டு குரங்கு இருக்கு. நீ ஆட்டி வைக்கிற மாதிரி ஆடிட்டு இருக்குங்க. அப்பப்ப நம்ம சண்டைக்குப் பஞ்சாயத்துப் பண்ண உங்க அப்பாவைக் கூப்பிட்டுக்கலாம். முடிஞ்சா உங்க அம்மாவையும். உன் இஷ்டத்துக்கு ஜாலியா இருக்கலாம். மனசு விட்டுச் சிரிக்கலாம். பிடிச்ச மாதிரி உன் வாழ்க்கையை வாழலாம்.” என்றவனைக் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
அரிதாகப் பூக்கும் பிரம்ம கமலம் பூ போல், சில தருணங்களில் அவளையும் அறியாமல் கருடனோடு அடங்கி விடுகிறாள். அந்நேரம் அவள் பார்க்கும் பார்வையில் ஓராயிரம் எண்ணங்கள் நிறைந்திருக்கும். அவனைச் சுற்றியே அனைத்தும் வலம் வரும். பிடிக்க முடியாத வானத்தை எட்டிப் பிடித்தது போல் உணரும் ரிதுவின் எண்ணத்தை அழகாகப் பிரதிபலிக்கும் அந்தக் கண்கள்.
அதில் இதழ் பதித்து விலகியவன், “நான் இருக்கேன்…” என்றிட, அவனோடு ஒன்றிப் போனாள்.
எத்தனை நேரம் அதே நிலையில் இருந்தார்களோ தெரியவில்லை. அவர்களாகவே சுயம் பெற்று விலகும் வரை அப்படியே இருந்தார்கள். முதலில் பிரிந்தவள், நெருங்கிச் செல்லாதது போல் மடிக்கணினியை நிமிர்த்தி வேலைகளைக் கவனிக்க, ஆறுதல் அளிக்காதது போல் ஃபோனை நோண்ட ஆரம்பித்து விட்டான் கருடேந்திரன்.
இந்தக் கண்ணாம்பூச்சி ஆட்டத்தை எத்தனை நாள்கள் நடத்தத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்களோ!
***
கருடேந்திரனின் ஏரியாவில் இருக்கும், அம்மன் கோவில் வாசலில் நின்றிருக்கிறாள் ரிது. கையில் இருக்கும் கடிகாரத்தைப் பார்ப்பதும், தெருவைப் பார்ப்பதுமாக இருந்தவளை வாய் பிளந்து பார்த்துவிட்டுச் சென்றனர் அங்கிருந்தவர்கள். அவர்களை எல்லாம் கருத்தில் கொள்ளாது மாமியார் எப்போது வருவார் என்று தவம் கிடந்தாள்.
மருமகளிடம் எப்போதும் இறங்கி வரும் சரளா, இந்த முறை அவருக்கே தெரியாமல் ஜெயித்து விட்டார். எப்போதும் வரும் நேரத்திற்கு வராமல் தாமதமாக வந்தவர், தன் வீட்டுக் குலவிளக்கைக் கண்டு உறைந்தார். ஒரு நிமிடம் இது நிஜம்தானா என்றெல்லாம் யோசித்து விட்டார். மாமியாரின் அதிர்வைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டவள் நெருங்கி வரும் வரை காத்திருந்தாள்.
வேகமாக ஓடி வந்தவர், “என்னடா, இங்க நின்னுட்டு இருக்க, கருடன் எங்க?” அன்பாகக் கன்னம் பிடித்து விசாரித்தார்.
உதட்டை வளைத்து அவர் கையைத் தட்டி விட்டவள், “நான் மட்டும்தான் வந்தேன்.” என்றாள்.
கையைத் தட்டி விட்டதில் முகம் சுருங்கியவர், “வேலையா வந்தியாமா?” விசாரிக்க, “உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.” என அவரைச் சிரிக்க வைத்தாள்.
சரளாவின் மகிழ்விற்கு எல்லையே இல்லை. சாதிக்க முடியாத எதையோ சாதித்தது போல் பரவசமாகி, “வீட்டுக்கு வந்திருக்க வேண்டியது தானடா… இப்படியா நடுரோட்ல நிக்கிறது. பாரு, எல்லார் கண்ணும் உன் மேல தான் இருக்கு.” என திருஷ்டி கழித்துப் போட, “நல்லா ஐஸ் வைக்கிறீங்க.” என்றாள்.
“மருமகளைப் பகைச்சிக்கிட்டா, கடைசிக் காலத்துல நல்லபடியா வாழ முடியாது.”
அதுவரை பிடித்து வைத்திருந்த சிரிப்பைப் பட்டென்று அவிழ்த்து விட, முதல்முறையாக மருமகள் சிரிப்பதைப் பார்க்கிறார் மாமியார். மனதார அதை ரசித்தவர், “சிரிச்சா ரொம்ப அழகா இருக்க…” என்றதும் ஒரு புருவத்தைத் தூக்கினாள்.
“முறைச்சால் கூட!”
கை இரண்டையும் கட்டிக் கொண்டவள் காரில் சாவகாசமாகச் சாய்ந்து, “உங்களுக்கு என் மேல கோபமே இல்லையா?” என ஆழமாகப் பார்த்துக் கேட்க,
“எல்லாத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கு. என் பக்கம் இருந்து பார்த்தா நீ தப்பு… உன் பக்கம் இருந்து பார்த்தா நான் தப்பு… வலியும், வேதனையும், அனுபவிக்கிறவங்களுக்கு மட்டும்தான் தெரியும். சும்மா பார்க்குற நான் எதுக்குக் கோபப்படனும்? ஆயிரம் சொன்னாலும் என் மகன் பண்ணது தப்பு. அப்ப திருத்துறது தான தாயோட கடமை!”
“நீங்க திருத்தாம என்கிட்ட எதுக்கு விட்டீங்க?”
“பொண்டாட்டி தாம்மா, கடைசி வரை கூட வரப்போற தாய்!” என்றவரை உயர்ந்த இடத்தில் வைத்தாள்.
காரில் இருந்த காகிதங்களை எடுத்து அவரிடம் கொடுக்க, அடமானம் வைத்த வீட்டுப் பத்திரத்தை மருமகள் கையில் கண்டதும் புருவத்தைச் சுருக்கினார் சரளா.
“இதைக் கொடுத்துட்டுப் போகலாம்னு தான் வந்தேன்.”
“இது எங்களுக்கு வேண்டாம் மா. திருப்பி அடமானம் வச்சு மீட்ட காச எடுத்துக்க.”
“இதை என் காசுல மீட்கல. நியாயமா உங்களுக்கு வரவேண்டிய பணத்துல மீட்டுட்டு வந்திருக்கேன்.”
“புரியலமா…”
“எல்லாருக்கும் தெரிஞ்சு கொடுத்தா, விளக்கமா பதில் சொல்ல வேண்டியதா இருக்கும்னு தான் உங்களை மட்டும் தனியா சந்திச்சு இதைக் கொடுக்கிறேன். எப்படிச் சமாளிப்பிங்களோ தெரியாது. எனக்காக எல்லாரையும் சமாளிச்சுக்கோங்க. ஆனா, சத்தியமா இது என்னோட பணம் இல்லை.”
மருமகள் வார்த்தையில் இருக்கும் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள முடியாது, பலத்த சிந்தனையில் இருந்தவரின் கைப்பிடித்தவள், “சத்தியமா உங்க பையனுக்கு நடந்ததுக்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல. எதிர்பாராம நடந்திருந்தாலும், அதுல எனக்கு நல்லதுதான் நடந்திருக்கு.” என்றவளின் முகத்தை இன்னும் குழப்பமாகப் பார்க்க,
“உங்களை மாதிரி ஒரு மாமியார் கிடைச்சிருக்காங்களே!” அவள் சிரிக்க, குழப்பங்கள் அனைத்தும் நீங்கி சரளாவும் சிரித்தார்.
“இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காதீங்க. என் மேல நம்பிக்கை இருந்தா இதை வாங்கிக்கோங்க.”
மனநிறைவாக மருமகள் கொடுத்ததை வாங்கிக் கொண்டவர், “கருடனுக்குக் கூட இந்த விஷயம் தெரியக் கூடாதா?” கேட்டதும் அமைதியாகத் தலையசைத்தாள்.
“மாமியார் மேல அவ்ளோ நம்பிக்கையா?” என்றதற்கும் அதே போல் தலையசைக்க, “என் மாமனாருக்குக் குடிப்பழக்கம். நான் கல்யாணம் பண்ணிட்டு வந்த புதுசுல சொல்லிக்கிற அளவுக்குச் சொத்து இருந்தது. எல்லாத்தையும் குடிச்சே அழிச்சாரு. என்னோட சேர்த்து அந்த வீட்டில நாலு மருமகள். அவரோட கடைசிக் காலத்துல யாரும் கூட நிக்கல. நான்தான் எல்லாமே செஞ்சேன். அதுல திருந்தி மிச்சம் இருந்த அந்த வீட்டை என் பேர்ல எழுதி வச்சார். அன்னைக்கு எனக்குத் தெரியாது, இது மூலமாதான் இப்படி ஒரு மருமகள் கிடைக்கப் போறான்னு. அன்னைக்கு அவர் கையில் இருந்து வாங்கும்போது ரொம்பச் சங்கடமா இருந்துச்சு. இன்னைக்கு ஒரு துளி கூட உன்கிட்ட இருந்து வாங்கும்போது இல்ல. மண்ணோட சேர்ந்து பொண்ணையும் கொடுத்திருக்க கடவுளுக்கு நிறைய நன்றி சொல்லனும்.” என்றார் பெருமிதமாக.
“உங்களுக்கு தான் நான் நிறைய நன்றி சொல்லணும். எல்லார் கண்ணுக்கும் தப்பா தெரிஞ்ச நான், உங்களுக்கு மட்டும் எப்படி நல்லவளா தெரிஞ்சன்னு தெரியல. இந்த வாழ்க்கையை ஏத்துக்கிறதுக்கான வழிய நீங்கதான் அமைச்சுக் கொடுத்தீங்க. நீங்க மட்டும் இல்லன்னா, என்ன வேணாலும் நடந்திருக்கும். நிச்சயம் உங்களுக்கு எந்த இழப்பும் இருந்திருக்காது. எனக்கு தான் இருந்திருக்கும். எதையும் இழக்க வைக்காம, எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்ததுக்காக தேங்க்ஸ் அத்தை!” என்றவளை உச்சி முகர அணைத்துக் கொண்டார்.
***
“எதுக்குடா அப்படிப் பார்த்துட்டு இருக்க?”
“என் கண்ணு! நான் பார்க்குறேன்! உனக்கு என்னடி?”
கண்ணாடி முன் அமர்ந்து அலங்காரம் செய்து கொண்டிருந்தவள், தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் தன்னவன் பார்வை வீச்சைத் தாங்க முடியாது கண்ணாடி வழியாகப் பார்த்துக் கேட்க, அவன் சொன்ன பதிலில் கடுப்பாகிச் சீப்பைத் தூக்கி அடித்தாள். அழகாக அதைத் தாவிப் பிடித்தவன்,
“பளிச்சுன்னு இருக்கியே… சுமார் எத்தனை கோட்டிங் மூஞ்சில போடுவ…” புருவம் உயர்த்தினான்.
“ஒரிஜினல் கலர்டா கருவாயா…”
“கருப்புதான் அழகு!”
“இப்படியே பீத்திக்கிட்டு இரு.”
“ம்ம்… கருப்புக் கண்ணன் மா உனக்குத் தாலி கட்டுனவன்!”
“வாயில எதாச்சும் வந்துடும்.” என்றதும் மெத்தையை விட்டுத் தாவியவன் அவளுக்குப் பின்னால் நின்று வார்த்தையை விட்ட உதட்டைப் பிடித்தான்.
தன் உதட்டைச் சிறைப் பிடித்த அவன் விரல்களுக்கு, ஒரு அடியைப் பரிசு கொடுத்தவள், “லிப்ஸ்டிக் கலைஞ்சிடும், விடு!” என்றிட, “அழகா இருக்கற உதட்டை ஏன்டி இப்படி அசிங்கப்படுத்துற.” இதழை லேசாக அசைத்தான்.
வார்த்தைகளுக்குப் பஞ்சமாகியவள் கண்ணாடி வழியாக அவன் முகம் பார்க்க, அதே கண்ணாடி வழியாக இரு விரல்களுக்கு நடுவே மின்னிக் கொண்டிருக்கும் இதழைப் பார்த்துக்கொண்டு, அதில் ஒட்டி இருந்த சாயத்தைத் துடைத்தான். குளிர்ப் பெட்டிக்குள் தூக்கி வைத்தது போல் உடலெல்லாம் சில்லிட்டது. பூசிய சாயத்தை அழித்த பின்னும், விலகாத அவன் விரல் வருடலில் கிறங்கிப் போனவள், லேசாகப் பின் இருக்கும் அவன் வயிற்றோடு தலை சாய்க்க,
“இப்பத்தான் அழகா இருக்கு!” என உதட்டை இழுத்தான்.
“ஸ்ஸ்ஆ…”
“அவ்ளோ சாஃப்டா…”
பிடித்தவனுக்குத் தெரியாதா, மயிலிறகு எப்படி என்று. இருந்தும் கேள்வி கேட்டு மீண்டும் விரலை அங்கு வைத்தான். பதமாக வருடி விட்டு முகத்தை அவள் கழுத்தோடு ஒட்டி வைத்தான். கூச்சம் தாங்காது வளைபவளை இதமாகப் பிடித்தவன், “நம்ம பிளாக் அண்ட் வொயிட் காம்பினேஷன் தூக்குதுல்ல.” என உதட்டைக் கழுத்து வளைவுக்குள் நுழைத்து ஊர்வலம் செல்லத் தொடங்கினான்.
அவன் உதடு விளையாடும் விளையாட்டைத் தாங்க முடியாது, நெளிந்து கொண்டிருப்பவளைத் தன்னோடு நன்றாகச் சாய்த்துக் கொண்டவன், “வாசனை மயக்குது! என்ன தான்டி போடுவ… சும்மா இருந்தவன உசுப்பி விட்டு விளையாடச் சொல்லுது.” என்றதைச் செயலில் காட்டினான்.
“ஏய்!” என்ற வார்த்தை அவளுக்குள் அடங்கிப் போக, அவளைத் தனக்குள் அடக்கி வைக்கும் வழியைத் தேடிக் கொண்டிருந்தான்.
பின்பக்கம் கை உயர்த்தி அவன் பின்னந்தலையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டவள் ஏதேதோ உளறத் தொடங்கினாள். அனைத்தும் அவனைத் தள்ளி வைப்பதற்காக இருந்தாலும், ஒன்று கூடத் தெளிவாக அவன் காதில் விழவில்லை. வெண்ணெய்க் கட்டியில் முகம் நுழைத்து விளையாடுவது போல், அவளோடு விளையாடித் தீர்த்தவன் முத்தமிட லேசாகத் திருப்பினான். அதுவரை கிறங்கி ஒத்துழைப்புக் கொடுத்துக் கொண்டிருந்தவள் நெஞ்சில் கைவைத்துத் தள்ளி விட,
“குடுத்தா பசிக்கும், நல்லாச் சாப்பிடலாம்.” கண்ணடித்தான்.
முகம் சிவக்கத் தயாரானாலும் கட்டுப்படுத்தி, “தேவையில்லை!” கழுத்தை வளைக்க, “எனக்குத் தேவை!” எனச் சிறு பிள்ளை போல் முகத்தைச் சுருக்கிக் கொண்டு கை கால்களை வீசினான்.
“மயில் வாகனத்தை ஓட்டப் போலயா?”
“பேச்ச மாத்தாத!”
“ப்ச்! அன்னைக்கு ஏதோ ஆக்சிடென்ட்ல நடந்திருச்சுன்னு சொன்னேன்ல. அப்புறம் என்னடா கிட்ட வர… இன்னொரு தடவை இந்த மாதிரி நடந்துக்கிட்ட, அவ்ளோதான்.”
“திரும்பவும் ஒரு ஆக்சிடெண்ட் நடந்தா நல்லா இருக்கும்.”
“சான்சே இல்ல!”
“இப்பக் குடுப்பியா மாட்டியா?”
“ப்ச்! பெரிய இவனாட்டம் ஆட்டோ கேட்டு அவ்ளோ பேச்சுப் பேசின. இப்ப என்னடான்னா, பேருக்குக் காலைல கொஞ்ச நேரம் ஓட்டிட்டு மாமனார் தூக்கிக் குடுத்த இன்ஸ்டியூட்டுக்குப் போயிடுற.”
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
“இருக்க வேலைய முதல்ல பாருன்னு அர்த்தம்.”
“கடைசியா கேட்கிறேன், முடியுமா முடியாதா?”
“முடியாது போ…”
அதுதான், அவள் வாயிலிருந்து வந்த கடைசி வார்த்தை. மீதி வார்த்தைகளைத் தன் உதட்டு வழியாக உறிஞ்சி உணவாக்கிக் கொண்டான். முதலில் முரண்டு பிடித்து, உதட்டை இழுத்துக் கொள்ள முயற்சித்தவள் அவனோடு அடங்கிப் போனாள் அவன் வேகத்தில். அமர்ந்திருந்தவளை விட்டு விலகாமல், கையோடு தூக்கிக் கொண்டவன் தன் இஷ்டத்திற்கு வைத்து விளையாடும் பொம்மை போல் கேட்டுக் கொடுக்காததை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டான்.
அவன் பின்னந்தலையைப் பற்றிக் கொண்டிருந்த உள்ளங்கை வேர்வையில் குளித்தது. கழுத்தோடு பின்னிக்கொண்ட கைகளில், நரம்புகள் புடைத்து அவள் உணர்ச்சியைத் தூண்ட, குண்டுக் கட்டாகத் தூக்கிக் கொண்டவன் முழு மோகத்தில் உதட்டு ரேகைகளை அழித்துக் கொண்டிருந்தான்.
ஒளிந்து கொண்டிருந்த பெண்மையை, எச்சிலை அனுப்பி வெளிவர வைத்தான். ஒவ்வொரு முறையும் நெருங்கி வந்து தாக்குப்பிடிக்க முடியாமல் விலகும், அவள் நிலையில் ஆண்மையை உணர்ந்தவன் இரக்கம் என்ற சொல்லை ஒதுக்கி வைத்தான். முத்தம் விடுவதாக இல்லை இருவரையும். மறுத்தவள் கூடத் தன்னை மறந்து விரும்ப ஆரம்பித்து விட்டாள். அவள் இழுத்துப் பிடித்ததில் சட்டைப் பட்டன்கள் உயிரை விட, அவள் இடை தான் பெரிதாகப் பாதிக்கப்பட்டது.
ஆடையைத் தாண்டி அவளது தேகத்திற்குள் கை நுழைத்தவன், அவனுக்கான உரிமைகளை எடுத்துக் கொண்டான். அவளுக்கென்று இருந்த அவள் அங்கங்கள் அவன் வசமானது. தொட்டால் விடாது கருப்பு என்பதற்கு முழு அர்த்தம் அவனானான். மோகத்தில் பற்றி எரியும் ஜோதி அவளானாள். உதட்டு வழியாக உயிரை உருவி எடுக்கும் முயற்சியில் இருவரும் சரிசமமாகப் போட்டி போட ஆரம்பித்தனர். எல்லாம் அவர்கள் வசம் அழகாக இருக்கத் தூக்கிப் பிடித்திருந்த அவன் கைகள் தான் வலுவிழந்து கதறியது. தன் நிலை உணராத சொந்தக்காரன் மீது கோபம் கொண்ட கை, முறுக்கிக் கொண்டு வலியைக் கூட்ட, வேறு வழியே இல்லாததால் அவளை விட்டுப் பிரிந்தான்.
கைவலியில், மோகத்தைத் தள்ளி வைத்து முகம் சுருக்கியவனைத் தன் பக்கம் இழுத்தவள், “பசிக்குது!” என்றிட, பற்களைப் பளிச்சிட்டுக் காட்டிச் சிரித்தான் கருடேந்திரன்.
கழுத்தோடு கைகளைச் சுற்றிக்கொண்டு, “சாப்பிடணும்!” என்றவள் பார்வை தோரணமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் மீசைக்குக் கீழ் இருக்கும் அதரங்களின் மீது இருந்தது. கட்டியவள் பார்வையில் கை வலி காணாமல் போனது. இடையில் கை நுழைத்தவன் ஆடைக்குள் ஊடுருவி பின் முதுகை இறுக்கிப் பிடித்து, “போய்ச் சாப்பிடு!” என்றான்.
“ம்ம்… சாப்பிடதான் போற.” என்றுவிட்டு இதழை இழுத்து அவனை ஆளத் தொடங்க, கிறங்கி நிற்பது கருடேந்திரன் முறையானது.
மீண்டும் அங்கு ஒரு போர் தொடங்கியது. அவன் சிறைப்பிடித்த போது உணர்வுகளை அடக்க முடியாது போராடிக் கொண்டிருந்தவள், தன் பலத்தை வெளிப்படையாகக் காட்ட, பெண்ணால் ஆளப்படும் ஆணுக்கு உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை முதல் முறையாக உணர்ந்தான் கருடன்.
அவன் முறைக்கு இடமளிக்காது, அனைத்தையும் தனதாக்கிக்கொண்டு முழு வீச்சில் பசிக்கான உணவை எடுத்துக் கொண்டே இருக்க, அவள் வேகத்தைத் தாங்க முடியாத அந்த முரட்டு உடம்பு தள்ளாடியது.
விலகப் பார்ப்பவனைச் சுருட்டித் தனக்குள் வைத்துக்கொண்டு, முத்தத்தைத் தொடர்ந்து கொண்டிருக்க மீண்டும் விலகப் பார்த்தான். சாப்பாட்டு ருசியை இழக்க விரும்பாது, விலக நினைத்தவன் உதட்டைக் கவ்விப் பற்களுக்கு விருந்தாக்கினாள்.
“ஸ்ஸ்ஆ… வலிக்குது!”
மூடிக்கொண்டிருந்த விழிகளைத் திறந்தவள், சுருங்கி இருக்கும் கண்களை வைத்து இதமாக இதழைக் கையாள, அவள் கொடுத்த காயம் அவளால் மறையத் தொடங்கியது. சுகமாகக் கண்மூடும் தன்னவனை, உதட்டால் உசுப்பிக் கண்ணடித்தாள். அவ்வளவுதான்! அவளுக்குள் அடங்கிப் போனான் ரிதுவின் ஆட்டோக்காரன்.