யாஷ்வினின் முயற்சியால் நன்றாகப் படித்து நன்றாகவே பரீட்சையை எழுதி முடித்திருந்தாள் சாஹித்யா.
இன்று மாலை அவளை ஐஸ்கிரீம் பாருக்கு அழைத்துச் செல்வதாக அவன் கூறியிருக்க அவளுக்கோ அத்தனை ஆனந்தம்.
குளிர்களி என்றால் அவளுக்கு அலாதிப் பிரியம்.
என்ன ஆடை அணிந்து செல்லலாம்..?
என்ன ஃப்ளேவர் ஐஸ்கிரீமை வாங்கி உண்ணலாம்.?
என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க அவளுடைய அத்தனை திட்டங்களையும் நொறுக்கி விடுவது போல அவள் முன்னர் சற்றே பதற்றமான முகத்துடன் வந்து நின்றான் யாஷ்.
“எனக்கு ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கு.. நான் இப்பவே ரெடியாகட்டுமா..?” எனக் கேட்டவளைப் பார்த்து மறுப்பாக தலையை அசைத்தவன்,
“சாரி பாப்பா.. தப்பா எடுத்துக்காத.. எனக்கு முக்கியமான வேலை ஒன்னு வந்துடுச்சு..” என்றான் அவன்.
“வேலையா என்ன வேலை..?” எனக் கேட்டாள் அவள்.
“ஆக்சுவலா இந்த முறை நான் வேலை செஞ்ச கப்பல்ல பயர் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு, அதனாலதான் பத்தே பத்து நாள்தான் லீவு கிடைச்சுதுன்னு இங்கே வந்தேன்.. இப்போ லீவு முடிஞ்சிடுச்சு.. இன்னும் வரலையான்னு கேப்டன் கால் பண்ணாரு..
இங்கு நடந்த பிரச்சனைல நான் அத மறந்தே போயிட்டேன் பாப்பா.. நிலமைய சொல்லி என்னால வேலைக்கு வர முடியாதுன்னு சொன்னேன். பட் சில பொறுப்பு இன்னும் என்கிட்டயேதான் இருக்கு.. என்னோட திங்ஸ், சில ரூம்சோட கீஸ் அப்புறம் என்னோட வேலைய பொறுப்பா ஒருத்தருக்கு சொல்லிக் கொடுக்கணும்.. அதனால நான் போயாகணும் சாஹிமா..”
அவளோ பதறி விட்டாள்.
“ஐயோ.. நான் தனியா இருக்கவே மாட்டேன்… எனக்கு பயமா இருக்குமே.. நானும் பாப்பாவும் எப்படி தனியா இருக்கிறது..?” என பதறிப் போய் கேட்டாள் அவள்.
“ஹேய் உன்ன தனியா விட்டுட்டுப் போவேனா..? இன்னைக்கு உன்னையும் பாப்பாவையும் உங்க ஊர்ல கொண்டு போய் உங்க அம்மா வீட்ல விட்டுவிட்டு அதுக்கப்புறம்தான் நான் போகப் போறேன்.. நான் திரும்பி வர நாலு நாளாவது ஆகும்.. அதுவரைக்கும் பாப்பாவ பத்திரமா பாத்துப்பதானே..?” எனக் கேட்டான் அவன்.
அவளுக்கு முகம் வாடிப் போனது.
“பாப்பாவ நான் நல்லா பாத்துப்பேன்.. பட் இந்தப் பாப்பாவ யார் பார்த்தப்பா..?” என அவள் தன்னைக் காட்டி கேட்க அவனுக்கோ உள்ளம் உருகிப் போனது.
“இப்படி எல்லாம் பேசினா என்னால எப்படி போக முடியும் சாஹிம்மா.. நாலே நாலு நாள்தான் சீக்கிரமா வந்துருவேன்..’
“நான் ஒன்னு கேட்டா தப்பா நினைப்பீங்களா..?”
“என்னம்மா கேளு..?”
“நானும் பாப்பாவும் உங்க கூடவே வந்துரட்டுமா..? நாலு நாள்ல ஊருக்கு திரும்பிடுவோம்தானே..? ப்ளீஸ் எங்களையும் கூட்டிட்டுப் போங்களேன்.. ப்ளீஸ் எக்ஸாம் நல்லா பண்ணா நான் என்ன கேட்டாலும் செய்வேன்னு சொன்னீங்கல்ல..? என்னையும் கூட்டிட்டுப் போங்கப்பா ப்ளீஸ்..” என விழிகளை சுருக்கிக் கெஞ்சத் தொடங்கி விட்டாள் அவள்.
“ஏய் நான் என்ன ட்ரிப்பா போறேன்..? அது வேலை பார்க்கிற கப்பல்மா.. நான் போய் சில பொறுப்புகள ஒப்படைச்சிட்டு உடனே திரும்பி வந்துடுவேன்..”
“கிட்டத்தட்ட 10 மணி நேரம் ட்ராவல் பண்ணனும்.. பிளைட்ல இருந்து இறங்கினதும் டாக்ஸில 4 மணி நேரமாவது ட்ராவல் பண்ணனும்.. அதோட முக்கியமா உன்கிட்ட பாஸ்போர்ட் கிடையாது.. பாப்பாவையும் உன்னையும் இவ்வளவு பெரிய லாங் டிராவல் கூட்டிட்டு போறது நல்லதில்லம்மா சொன்னா புரிஞ்சுக்கோ..”
“ஹ்ம்ம்..” என்றவள் அதன்பின் அவனை வற்புறுத்தாது சிறு தலையசைப்போடு குழந்தையைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றுவிட இவனுக்குத்தான் மீண்டும் வேலைக்கு செல்லவே பிடிக்கவில்லை.
மீண்டும் ஒருமுறை கேப்டனுக்கு அழைப்பை எடுத்தவன் தன்னுடைய நிலையை விளக்கிக் கூறி இங்கிருந்தே போனின் மூலம் தன்னுடைய நண்பனுக்கு தகவலை வழங்குவதாகக் கூற சற்று நேரம் அமைதியாக இருந்த கேப்டனோ பின் அதற்கு ஒப்புக் கொண்டார்.
அவனுடைய நிலையைப் புரிந்து சரி என்றவர் முடிந்தால் மீண்டும் வேலைக்கு வந்து விடு என்ற வேண்டுகோளோடு அழைப்பைத் துண்டித்து விட அதன் பின்னர்தான் இவனுக்கு நிம்மதியாக இருந்தது.
அதன் பின்னர் தன்னுடைய நெருங்கிய நண்பனான கமலுக்கு அழைப்பை எடுத்தவன் தன்னுடைய முக்கியமான சில பொறுப்புகளை மட்டும் அவனுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு சாவிகள் இருக்கும் இடத்தையும் சில டாக்குமென்ட்கள் இருக்கும் இடத்தையும் கூறியவன் இப்போதைக்கு தன்னால் அங்கே வரமுடியாத நிலையையும் சுருக்கமாகக் கூறி முடித்தான்.
கிட்டத்தட்ட அவனுக்கு தகவல்களை கூறிவிட்டு அவன் அழைப்பை துண்டிக்கவே ஒரு மணி நேரம் தாண்டி இருந்தது.
பெருமூச்சோடு அறைக்குள் நுழைந்தவன் தியாவும் சாஹித்தியாவும் எதையோ கைகளை அசைத்து அசைத்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அப்படியே சத்தம் இன்றி நின்று விட்டான்.
“இதோ பாரு பட்டுமா.. நீ என்ன பண்ணுவியோ தெரியாது உன்னோட அப்பா நம்மள விட்டுட்டுப் போகவே கூடாது..”
“ஙே..” என விழித்தது குழந்தை.
“நீ உங்க அப்பாகிட்ட போய் அழுவியோ சிரிப்பியோ எனக்குத் தெரியாது.. ஏதாவது பண்ணி அவரைப் போக விடாம பண்ணனும்.. ஓகேவா..?”
அதற்கு குழந்தையோ டங்கு டங்கு என்று தலையை ஆட்ட இவனுக்கோ சிரிப்பு வந்துவிட்டது.
பத்தாததுக்கு தியா வேறு தன்னுடைய இரண்டு கைகளையும் ஆட்டி ஆட்டி விழிகளை விரித்து தலையை அசைத்துக் கொண்டிருப்பது கொள்ளை அழகாக இருந்தது.
ஏதோ எதிரி நாட்டுக் கப்பலை பிடிப்பது போலத்தான் இருவருடைய உரையாடும் விதமும் இருக்க அதற்குமேல் சிரிப்பை அடக்க முடியாது சத்தமாகவே சிரித்து விட்டான் அவன்.
அவனுடைய சிரிப்புச் சத்தம் கேட்டதும் கப்பென தன் வாயை மூடிக்கொண்டவள் அமைதியாகிவிட,
தியாவோ தன்னுடைய தந்தை அருகே வந்ததும் அவனைத் தூக்கு என்பது போல தன் கரத்தை தன் தந்தையை நோக்கி நீட்டியவள்,
“ப்பா போ..” எனக் கூறிவிட்டு வேணாம் என்ற வார்த்தையை சொல்லத் தெரியாமல் தலையை அசைக்க அத்தனை அழகாக இருந்தது அந்தக் குழந்தையின் செய்கை.
அதே கணம் பக்கத்து வீட்டில் யாரோ அலறும் சத்தம் கேட்க குழந்தையை சாஹித்யாவிடம் கொடுத்துவிட்டு வேகமாக வெளியே ஓடினான் யாஷ்வின்.
சாஹித்யாவும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி ஓட பக்கத்து வீட்டு மலர் அக்காவோ கதறிக் கொண்டிருந்தார்.
“ஐயோ… யாராவது வாங்க.. உதவி பண்ணுங்க… ஐயோ யாரவது வாங்களேன்..” என்ற அவருடைய அலறலில் சாஹித்யாவுக்கோ உள்ளம் பதறியது.
“மலரக்கா என்ன ஆச்சு..? ஏன் இப்படி அழுறீங்க..?”
“என்னாச்சு அக்கா..? என்ன உதவி வேணும் சொல்லுங்க..?” என்றான் யாஷ்மின்.
அவரோ அவனை கூட்டிக்கொண்டு கிணற்றின் அருகே வந்தவர் “தம்பி என்னோட ஜிம்மி கிணத்துக்குள்ள விழுந்துட்டான் தம்பி.. எப்படி அவனை காப்பாத்துறதுன்னே தெரியலை. இவ்வளவு நேரம் துடிச்சுக்கிட்டே இருந்தான்.. கயிறு எல்லாம் போட்டு தூக்க பாத்தேன்.. என்னால முடியல.. இப்போ தண்ணிக்கு மேல அவனைக் காணோம்.. பயமா இருக்கு.. அவர் வேற வீட்ல இல்ல… யார்கிட்ட உதவி கேட்கிறதுன்னு தெரியலை..” என அழத் தொடங்கிவிட,
அவர் வளர்க்கும் ஜிம்மி எனும் நாய்தான் கிணற்றுக்குள் விழுந்து விட்டது என்பதை புரிந்து கொண்டாள் சாஹித்யா.
அவளுடைய மென் மனமோ அந்த நாய்க்குட்டிக்காக பதறியது.
“அச்சோ.. கவலைப்படாதீங்க அக்கா.. பெரிய ஏணி ஏதாவது இருந்தா அதைக் கிணத்துக்குள்ள வச்சு யாரையாவது உள்ளே இறக்குவோம்..”
“கிணறு ரொம்ப ஆழம்டாம்மா.. ஏணி பத்தாது..” என்றவர் தான் வளர்க்கும் செல்லப் பிராணிக்காக மீண்டும் அழத் தொடங்கி விட,
அடுத்த நொடியே சிறிதும் தயங்காது அந்த கிணற்றுக்குள் தொப்பென குதித்து விட்டான் யாஷ்வின்.
தன் கண்முன்னே நடந்த சம்பவத்தைக் கண்ட சாஹித்யாவுக்கு உடல் நடுநடுங்கி விட்டது.
“அம்மூஊஊஊஊஊ…” என அலறினாள் அவள்.
அவளுடைய உயிரே போய்விட்டாற் போல இருந்தது.
மிகவும் ஆழமான கிணறு என்றல்லவா சொன்னார்.
உடம்பு மொத்தமும் கிடுகிடுவென ஆட எங்கே தலைசுற்றி கீழே விழுந்து விடுவோமோ எனப் பயந்தவள் கதறலோடு தன் கரத்தில் இருந்த குழந்தையை மலரக்காவிடம் கொடுத்துவிட்டு கிணற்றின் அருகே வந்து உள்ளே எட்டிப் பார்த்தவளுக்கு தண்ணீரே தெரியவில்லை.
அடியில் இருளாகத் தெரிய தலை சுற்றிக்கொண்டு வந்தது.
“அம்மூஊஊஊ… உங்களுக்கு எதுவும் ஆகல இல்ல..? உள்ள இருக்கீங்க தானே..? ஏதாவது சொல்லுங்க..?” எனப் பதறி அலறியவள் அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்றதும் சற்றும் யோசிக்காமல் அப்படியே அந்த கிணற்றுக் கட்டில் ஏறி தானும் உள்ளே குதித்து விட குழந்தையை வைத்துக் கொண்டிருந்த அந்த அக்காவிற்கோ தூக்கி வாரிப் போட்டது.
பயந்து போனார் அவர்.
அதற்குள் அக்கம் பக்கத்தில் இருந்த சிலரும் அங்கே கூடி விட சில ஆண்களோ கயிற்றை எடுத்து உள்ளே கயிற்றை இறக்கத் தொடங்கினர்.
முதலில் உள்ளே பாய்ந்த யாஷ்வினுக்கோ நீரிற்கோ ஆழத்திற்கோ எதற்கும் பயமே இல்லை.
அவன்தான் கப்பலில் ஏதாவது பிரச்சனை என்றாலே நடுக்கடலில் தண்ணீருக்குள் குதித்து பிரச்சனையை மூச்சடக்கி சரி செய்துவிட்டு மேலே வருபவன் ஆயிற்றே,
அவனுக்கு இந்தக் கிணறு எல்லாம் பெரிய விடயமா என்ன..?
முதலில் அந்த சிறிய நாய்க்குட்டியைத் தூக்கி தன் கரத்தில் வைத்துக் கொண்டவன் மேலே சாஹித்தியா அலறும் சத்தம் கேட்டதும் தன்னையே நொந்து கொண்டான்.
முதலிலேயே அவளிடம் சொல்லிவிட்டு குதித்திருக்கலாம் என எண்ணியவன் குரல் கொடுக்க முயல,
அதற்கு முன்னரே தொப்பென அவள் உள்ளே குதித்து விட இவனுக்கோ ஒரு கணம் மூச்சே நின்று போனது.
கிணற்றுக்குள் விழுந்த வேகத்தில் அலறி அப்படியே தண்ணீரின் ஆழத்திற்கு சென்றவளின் கூந்தலைப் பிடித்து இழுத்து தன் கைவளைவுக்குள் அவளைக் கொண்டு வந்தவன் அவள் அப்படியே மயங்கிச் சரிந்ததைக் கண்டதும் படபடத்துப் போனான்.
“முட்டாள்…” என்ற அவனுடைய திட்டோ அவளுக்கு கேட்காமலேயே போனது.
💜💜
கமெண்ட்ஸ்ல வெறும் ஸ்டிக்கர் போடாமல் கதை பற்றி ஓரிரு வார்த்தைகள் கூறினால் இன்னும் வேகமா எழுத எனக்கு உற்சாகம் வரும் அல்லவா..?