நெஞ்சம் – 21
என்னை கல்யாணம் பண்ணிக்கோடா என்றவளை அள்ளிக் கொள்ள பரபரத்தது அரவிந்தனின் மனம். ஆனாலும் நிதானித்தான் அர்விந்த். அவன் காதலை சொல்ல, அவளுடன் மனம் விட்டு பேச இப்போது நேரமில்லை, அவள் வீட்டிற்கு செல்லட்டும், அதன் பின்னர் நடக்க வேண்டியதை பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.
திட்ட போறானோ என்று கண்களை மூடிக்கொண்டு இருந்தவளிடம்,
“சரி ஊருக்கு போய்ட்டு வா, கல்யாணம் பத்தி பேசலாம்” என்றான் சிரிப்புடன்.
“நிஜமாவா சார், ஆசையாக கண்களை விரித்தவளிடம், ஆமா உன்னை பொண்ணு பார்க்க வராங்க, அப்போ அடுத்து உன் கல்யாணம் தானே! அதை சொன்னேன்” என்றான் மிகுந்த கேலியும் கிண்டலுமாக.
“சார்….” சிணுங்கியவள், “அதெல்லாம் சும்மா, நான் சமாளிச்சுடுவேன், நீங்க வம்பு பண்ணாம உண்மையை சொல்லுங்க சார், ப்ளீஸ்” என்றாள்.
“முதல்ல நீ இந்த சாரை விட்டுட்டு என்னை வேற மாதிரி கூப்பிடு, மத்தது அப்பறம் பார்க்கலாம்” என்றவனிடம்,
“நீங்க பேசுவீங்கனு எனக்கு தோணலை…. நான் ஊருக்கு போன அப்பறம் பழைய மாதிரி என்னை அம்போனு விட்ற போறீங்க” அவள் குரலில் அவன் மேல இருந்த அவநம்பிக்கை நன்றாக வெளிப்பட்டது. அவனிடம் இருந்து உறுதியான வார்த்தைகள் எதிர்பார்த்த அவள் மனம் அத்தனை நாள் ஏமாற்றத்தை கொட்டியது.
“என்னை லவ் பண்றேன்னு சொல்றே! ஆனா உனக்கு என் மேல் நம்பிக்கையும் இல்லை, என்னை பத்தி தெரியவும் இல்லை! என்ன லவ் இது?” சட்டென்று கோபம் ஆனான் அர்விந்த். அதே கோபத்தோடு,
“உனக்கு என் மேலே வெறும் ஆசை தான் இருக்குனு நினைக்கிறேன்…. இது ரொம்ப நாளைக்கு நிலைக்காது…. எதுக்கும் நல்லா யோசிச்சுக்க” என்று சொல்லிவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினான் அர்விந்த். அவன் சென்றதும் கலங்கிய கண்களுடன் வெளியேறினாள் மலர். இறுக்கமான முகத்துடன் செல்லும் மகனையும், கலங்கிய கண்களுடன் வெளிவரும் மலரையும் கண்டு பெரியவர்கள் இருவருக்கும் ஒன்றும் புரியாத நிலை.
“உன்னை பஸ் ஏற்றி விடவா மலர்?” என்று கேட்ட தியாகுவிடம், அர்விந்தின் கோபத்தில், அவன் பேச்சில் பதட்டம் ஆனவள், என்ன பேசுகிறோம் என்று புரியாமல் உளறினாள்.
“சார், என்னால அவருக்கு எந்த கஷ்டமும் வராது, எனக்கு பெரிசா எந்த உரிமையும் வேண்டாம். நான் இந்த வீட்டில இருக்கணும், என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க சார்” என்றாள்.
சற்று தள்ளி நின்று கொண்டு இருந்தவனுக்கு அவள் பேசியது காதில் விழ, வெகுண்டான் அர்விந்த்.
“இந்த லூசை முதல்ல பஸ் ஏத்தி ஊருக்கு அனுப்புங்க பா, இடியட் என்ன பேசுறதுனு இல்லாம ஏதோ உளர்றா!”
“நான் ஒன்னும் லூசு இல்லை, நீங்க தான் என்னை லூசு ஆக்குறீங்க! என்கூட நல்லா…..”
“இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசினே….” அவள் மேலும் உளற போகிறாள் என்று உணர்ந்து அவள் அருகில் வந்து அவளை மிரட்டினான் அர்விந்த்.
ஆனால் அதை தவறாக புரிந்துக் கொண்டார் தியாகு. “அர்விந்த், நீ மலர் கிட்ட மிஸ்பிஹேவே பண்ணியா? என்ன சொல்லவிடாம நிறுத்தினே…. சொல்லு டா….”
“அப்பா!! நான் வில்லன் இல்லைப்பா….”
“என்னங்க நம்ம பிள்ளையை பார்த்து இப்படி கேட்கிறீங்க?” அருணாவும் திகைத்து போனார்.
அவனின் பதிலில் அழுத்தமாக அவன் செய்யவே இல்லை என்ற மறுப்பு இல்லை, வேறு மாதிரியான பதில் தான் கொடுக்கிறான் என்பதை உணர்ந்த தியாகு, அவர்களின் இந்த சகஜ பாவத்திற்கு அவர்களின் நெருக்கம் தான் காரணம் என்று ஊகித்து, அர்விந்தை விடுத்து, மலரிடம் சென்றவர்,
“நான் கேட்கிறதுக்கு உண்மையான பதில் வேணும்….” என்றார்.
அர்விந்த் ரத்தமென சிவந்த முகத்துடன், ஆத்திரம் கொப்பளிக்க நிற்பதை ஒரவிழியில் கண்டவளுக்கு, தன் மேலேயே கோபம் வந்தது. என்ன ஆனது நமக்கு, ஏன் இப்படி பெரியவர்களிடம் உளறினோம் என்று காலம் தாழ்ந்து வருந்தினாள். அவள் அமைதியாக நிற்பதை கண்ட தியாகு, மீண்டும் அவளிடம்,
“சொல்லுவியா இல்லையா மலர்?” என்றார்.
சொல்றேன் சார்…. திக்கி திணறினாள் மலர். ஏதோ பெரிதாக வரப்போகிறது, அர்விந்த் தன்னை ஒருவழி செய்யப் போகிறான் என்று தெரிந்து விட்டது அவளுக்கு.
“என் பையன் உன்கிட்ட உரிமை எடுத்துக்கிட்டானா? சிறிதோ பெரிதோ அதெல்லாம் எனக்கு வேண்டாம். உண்டா இல்லையா? நீ கல்யாணம் பண்ணிக்க துடிக்கிறது அதுக்கு தானா?”
“சார், அது….” அவள் விளக்கம் அளிப்பது போல் ஏதோ பேச வர,
“அப்பா!!!!! திஸ் இஸ் டூ மச்….” என்று கத்தினான் அர்விந்த்.
அவனிடம் “ஷ்ஷ்ஷ்” என்றவர்,
“ஆமாவா? இல்லையா? அதை மட்டும் சொல்லு என்றார் மலரிடம்.
அர்விந்தை திருமணம் செய்ய இதை விட வேறு நல்ல வாய்ப்பு கிடைக்காது என்று புரிந்து அவர்கள் அந்தரங்கத்தை வெளியிட்டு விட்டாள். ஆம் என்று தலையாட்டி விட்டு விட்டாள்.
வேகமாக மகனின் அருகில் வந்த அருணா, அவனை ஓங்கி அறைந்து விட்டார். ஒரு நிமிடம் அவரின் வேகத்தில் அனைவரும் ஸ்தம்பித்து விட்டனர். மிகுந்த அவமானத்துடன் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான் அர்விந்த்.
அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நின்றனர் மற்ற மூவரும். கொஞ்சம் தன்னை சுதாரித்துக் கொண்ட மலர்,
“என் மேலேயும் தப்பு இருக்கு அம்மா, என்னையும் அடிங்க” என்றாள் அழுதுக்கொண்டே அருணாவிடம்.
“நீ இப்போ ஊருக்கு கிளம்பு மா, நாங்க மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று முடிவு பண்ணி சொல்றோம். நீ அர்விந்தை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறது சரிதான், ஆனா அவன் இஷ்டமில்லாமல் செஞ்சு வைச்சு உங்க ரெண்டு பேர் வாழ்க்கையையும் வீணடிக்க முடியாது. அதனால் பேசி ஒரு முடிவுக்கு வருவோம்” என்று சொல்லி அவளை ஊருக்கு அனுப்பி வைத்தார் தியாகு. அர்விந்திடம் சொல்லிக் கொள்ளாமலே ஊருக்கு கிளம்பி சென்றாள் மலர்.
தியாகுவும் மலரும் கிளம்பியதும், ஜனனியை அழைத்து புலம்பினார் அருணா. அவள் அரவிந்திற்கும் மேல் குதித்தாள்.
“அவன் என்ன சின்ன பையனா? அவன் பெர்சனல் எல்லாம் கேட்டு அவனை இப்படி அசிங்கப்படுத்தி இருக்கீங்க? அந்த பொண்ணு அவன் மேல கம்பெளையின் பண்ணுச்சா இல்லைல, அப்பறம் ஏன் மா?” அவளும் போனை கட் பண்ணி விட்டாள். அதோடு நிற்காமல் இருந்த கோபத்தில், மலருக்கு அழைத்து,
“ஏய்! என் தம்பி என்ன உன்னை பலவந்தப்படுத்தினானா? நீ எதுக்கு அவன்கிட்டே போனே? அவன் கிட்டே வந்து இருந்தா கத்த வேண்டியது தானே? நீ ரொம்ப நல்லவ, இப்போ என் தம்பி கெட்டவனா?” என்று மலரை பேச விடாமல் திட்டினாள்.
தியாகு அப்போது மலரின் அருகில் தான் இருந்தார். ஜனனி பேசுவது வெளியில் கேட்க, போனை வாங்கியவர்,
“போதும் நீ பேசினது. இப்போ உன் தம்பிக்கும் போன் பண்ணி திட்டு” என்று அழைப்பை துண்டித்தார்.
தேம்பி தேம்பி அழுத மலர், “நான் தான் உங்க பையனை லவ் பண்ணேன் சார். அவரா எதுவும் ஆரம்பிக்கலை சார்! எல்லாத்துக்கும் நான் தான் காரணம். அவர் மேல எந்த தப்பும் இல்லை சார். எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க. சார் கிட்டேயும் நான் மன்னிப்பு கேட்டதா சொல்லிடுங்க!!” என்றவள் ஊருக்கு போய் விட்டாள்.
அப்போதே அப்பா சொன்னது போல் தம்பியை அழைத்த ஜனனி, அவன் எடுக்கவில்லை என்றதும், வாய்ஸ் மெசேஜ் போட்டாள்.
“நம்ம வீட்டில யாருக்கும் அறிவே இல்லை, நீ கிளம்பி மும்பை வாடா, கொஞ்ச நாள் இங்க இரு! அப்பா கேட்டாராம், அந்த பொண்ணு சொன்னுச்சாம், அம்மா அடிச்சாங்களாம்! நல்லா கேட்டேன் அவளை! இடியட், நல்ல பொண்ணுனு பார்த்தா சரியான லூசா இருப்பா போல்! நீ இதெல்லாம் கண்டுக்காத டா” என்று பேசி அனுப்பி இருந்தாள். அதை கேட்டவன், உடனே தமக்கையை அழைத்து,
“எதுக்கு நீ அவளுக்கு எல்லாம் கால் பண்ணே? பண்ணதும் இல்லாம திட்டி இருக்கே! அவளை பேச உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு…. நான் உன்னை கேட்டேனா? இல்லை உன்கிட்ட வந்து அழுதேனா? இல்லை என் சார்பா பேச சொன்னேனா?” என்றான் காட்டமாக.
“இல்லைடா… என்னடா இப்படி பேசுற? அப்பா உன் பெர்சனல்….” ஜனனி மிகவும் அப்செட்டாக பேச, உடனே தணிந்தான் தம்பி.
“அப்பாவை விடு, நீ பேசினதுக்கு என்ன சொன்னா?”
“நான் திட்டிட்டு வைச்சுட்டேன்…. அழுதா நினைக்கிறேன்…”
“அழுதாளா! வேறென்ன செய்யும் அந்த பாப்பா….? சரி இனிமே உனக்கு தேவையில்லாததுல எல்லாம் தலையிடாதே…. ஏதோ என் மேல் இருக்க அன்புனு விட்டுடுறேன்….” என்றான்.
“ஹான்…. டேய்…. அப்படினா, நீ அந்த பொண்ணை….”
“இப்போதானே சொன்னேன் உன்கிட்ட….”
இவன் நல்லவனா கெட்டவனா என்பது புரியாமல் முழித்தாள் ஜனனி.
ஒன்றரை மாதம் கழித்து,
சென்னை
விடிந்தால் திருமணம். திருமண மண்டபத்தின் மொட்டை மாடி,
“எனக்கு இந்த கல்யாணத்தில கொஞ்சமும் இஷ்டம் இல்லை” – அர்விந்தன்.
“இதைச் சொல்ல தான் கூப்பிட்டீங்களா? புதுசா ஏதாவது சொல்லுங்க….இதையே தானே போன்ல கூப்பிடுற நேரமெல்லாம் சொல்றீங்க!”
“ரொம்ப திமிருடி உனக்கு! ரெண்டு பேர் வாழ்க்கையையும் நாசம் பண்ண போறே! பெரியவங்களை கைக்குள்ள வைச்சுக்கிட்டு கல்யாணம் வரை வந்துட்டே!”
“நீங்க இந்த குடியை விட்டாலே நாசமா இருக்கிறது நல்லா ஆய்டும்”
“ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது. என்ன நினைச்சு இந்த கல்யாண வாழ்க்கைக்குள்ள வர்றேனு தெரியலை!”
“உங்களை நினைச்சு தான்! உங்களோட வாழ தான்!!”
வாழ்வியா?
சிறப்பா!
Y this kolaveri