21. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

5
(14)

வரம் – 21

தந்தை கூறியதை எவ்வளவோ மறுத்துக் கூற முயன்றும் முடியாது பரிதாபகரமாக தோற்றுப் போனாள் மோஹஸ்திரா.

அவளுக்கோ அந்த ஏசி அறையிலும் வியர்த்து வழியத் தொடங்கியது.

உடல் நிலை இவ்வளவு மோசமாக இருந்த போதும் கூட தன்னுடைய திருமணத்தைப் பார்த்து விட வேண்டும் என தந்தை கெஞ்சிக் கேட்டது அவளுடைய மனதை கசக்கிப் பிழிந்தது.

நிஜமாகவே அரவிந்தன் அவளோடு வந்திருந்தால் அக்கணமே அவருடைய மன நிம்மதிக்காக திருமணத்தை அவரின் முன்பு முடித்திருப்பாள் அவள்.

ஆனால் அவளுடைய மனம் நேசிக்கும் காதலன்தான் இங்கு வரவே இல்லையே.
பின் எப்படி அவருடைய ஆசையை நிறைவேற்றுவது..?

இன்னொருவனுடன் திருமணமா..?
அவளுக்கோ உள்ளம் பதறியது.

அவருடைய மன நிம்மதிக்காக அரவிந்தன்தான் வந்திருக்கிறான் எனப் பொய் கூற அந்தப் பொய்யே அவளுக்கு மாபெரும் ஆயுதமாக மாறியதைப் போல இருந்தது.

இங்கே வந்து தன்னருகில் நிற்பது தன்னுடைய காதலன் அரவிந்தன் அல்ல எனக் கத்த வேண்டும் போல இருந்தது அவளுக்கு.

தவிப்போடு ஷர்வாவை நெருங்கியவள்,

“ஏ… ஏதாச்சும் பண்ணுங்களேன் ப்ளீஸ்… அப்பா இப்படி சொல்லவாருன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சே பார்க்கல…” என அவள் பதற்றத்தோடு கூற,

“சரி அப்பாகிட்ட நான் பேசுறேன்.. நீ பயப்படாதே..” என அவளுக்கு நம்பிக்கை கொடுத்தான் ஷர்வா.

“எப்படி பயப்படாம இருக்க முடியும்..? மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஷர்வா.. நான் சொன்னா அப்பா கண்டிப்பா கேக்க மாட்டாரு… இதுக்கு முன்னாடியே நிறைய தடவை கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஃபோர்ஸ் பண்ணினாரு.. முடியாதுன்னு சொல்லிட்டேன்.

அதனாலதான் இப்போ இப்படி கடைசி ஆசைன்னுல்லாம் சொல்லி சம்மதிக்க வைக்கப் பார்க்கிறாரு.. நீங்க எப்படியாவது சொல்லி புரிய வைங்க ஷர்வா… நான் அரவிந்தன்கிட்ட பேசிட்டு வரேன்..” என அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் மெதுவாகக் கூறியவள் அடுத்த கணமே தன்னுடைய அலைபேசியை எடுத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே சென்று விட அவனோ பெருமூச்சோடு அவளுடைய தந்தையை நெருங்கினான்.

“அங்கிள் நான் உங்க கூட கொஞ்சம் பேசணும்… இப்போ பேசலாமா..?” என அவன் கேட்க,

இப்போது கண்களைத் திறந்து அவனைப் பார்த்தார் அவளுடைய தந்தை.

“சொ… சொல்லுப்பா..” அவருடைய குரலில் தெரிந்த தடுமாற்றம் அவனைத் திகைக்கச் செய்தது.

“நீங்க ஓகேவா அங்கிள்.? உங்களால இப்போ பேச முடியுமா..? இல்லன்னா நான் அப்புறமா பேசறேன்..” எனக் கேட்டான் அவன்.

அவரோ இப்போதே பேசு என்பதைப் போல விழிகளை மூடித் திறந்து கையை ஆமோதிப்பது போல அசைக்க பெருமூச்சோடு தன் பேச்சைத் தொடர்ந்தான் அவன்.

“இப்போ உங்களோட ஹெல்த்தும் நம்ம பிஸ்னஸ்ஸும்தான் முக்கியம்… பிஸ்னஸ் பத்தி நீங்க எந்தக் கவலையும் படாதீங்க… அத நான் பாத்துக்குறேன்… இன்னும் ஒரு வாரத்துக்குள்ள எல்லாத்தையும் சரி பண்ணி உங்களோட கைல ஒப்படைக்க வேண்டியது என்னோட பொறுப்பு..” என்றான் அவன்.

“ம்ம்…” என்றவரின் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.

“இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்..? இங்க இந்த நிலைமைல நாலு சுவத்துக்குள்ள எதுக்கு கல்யாணம்..? நீங்க உடம்பு சரி ஆகி வாங்க… அதுக்கப்புறமா உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்…” என அவரை சமாதானப்படுத்தும் நோக்கத்தோடு அவன் மென்மையாக எடுத்துக் கூற அவளுடைய தலையோ மறுப்பாக அசைந்தது.

“ரா… ராமை வரச் சொ…ல்..லு..” என்றார் அவர்.

ஷர்வாவோ வெளியே நின்ற ராமை உள்ளே அழைக்க ராம் உள்ளே வந்ததும்,

“நம்…ம லா.. லாயரை இ.. இப்பவே வரச் சொல்லு… இ.. ன்னை…க்கு உயில் எழுதியே ஆ.. ஆகணும்…

எ…ல்லாத்தையும் ஆல்…ரெடி ஏற்பாடு பண்ண சொல்..லிட்டேன் நீ… நீ அ… அவரை வரச் சொல்லு..” எனத் திணறியவாறு கூறி முடித்தவர் ராமை வெளியே அனுப்பிவிட்டு ஷர்வாவின் முகத்தைப் பார்த்தார்.

“நீங்க அவசரப்படுறீங்கன்னு தோணுது அங்கிள்..”

“இ.. இந்த வாய்…ப்ப வி.ட்டா இதைவிட வே.. வேற நல்ல வாய்ப்பு எ…னக்கு கி.. கிடைக்காதுன்னு தோணுது… கடவுளே எனக்காக பார்த்து அமைச்சுக் கொடுத்த இந்த வாய்ப்ப நான் கைவிட த… தயாரா இல்லை….”

“என்ன அங்கிள் சொல்றீங்க புரியல…” என குழப்பமாகப் பார்த்தான் அவன்.

“பட் எ… எனக்கு எல்லாமே புரியுது….” என்றவர் அடுத்து கூறிய வார்த்தையில் அவனுடைய விழிகளோ விரிந்தன.

அதிர்ச்சியில் அவன் உறைந்து போய் நிற்க, தன் மனதில் இருந்தவற்றை அவனிடம் கொட்டத் தொடங்கினார் மோஹஸ்திராவின் தந்தை.

*********
தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் படுத்திருந்த திவாகருக்கோ இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளிவர முடியாமல் இருந்தது.

‘இவ்வளவு நாளும் நம்ம பாஸ் கூட இருந்தும் கூட நம்மளால எதையுமே கண்டுபிடிக்க முடியலையே …
எப்படி பக்காவா நடிச்சிருக்காங்க… நான் கூட எங்க யாராவது ஒருத்தரை ஒருத்தர் கொலையே பண்ணிடுவாங்களோன்னு நினைச்சேன்…’ என ஷர்வாவையும் மோஹஸ்திராவையும் பற்றி எண்ணி பெரும் வியப்பில் ஆழ்ந்து கொண்டிருந்தான் அவன்.

பின்னே உலகப் போரைப் போல அல்லவா இருவரும் சண்டை பிடித்தார்கள்..

அவை அனைத்தும் தொலைந்த வைரத்தை கண்டுபிடிப்பதற்கான நாடகம் என்பது இறுதியில் தானே அவனுக்கே தெரியவந்தது.

அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் அவன்.

அதே கணம் அவனுடைய வீட்டு வாயிலில் கார் ஒன்று வேகமாக வந்து நிற்கும் சத்தம் கேட்க மொட்டை மாடியில் படுத்திருந்தவன் எழுந்து மேலே இருந்து கீழே எட்டிப் பார்த்தான்.
காரில் இருந்து அரவிந்தன் இறங்குவதைக் கண்டதும் இவனுக்கோ புருவங்கள் சுருங்கின.

‘இந்த நேரத்துல எதுக்காக இவர் என்னைத் தேடி எங்க வீட்டுக்கே வந்திருக்கிறாரு…?

என்னவாயிருக்கும்…?” என எண்ணியவாறு அவன் அவரையே பார்த்துக் கொண்டிருக்க அரவிந்தனோ மேலே நின்றவாறே அவன் தன்னைப் பார்ப்பதைக் கண்டவன் அடுத்த கணம் அவனுடைய வீட்டிற்குள் கடகடவென நுழைய இவனுக்கோ எதுவும் புரியவில்லை.

கீழே இறங்கிச் செல்லலாம் என எண்ணியவன் திரும்ப அசுர வேகத்தில் அவன் முன்னே வந்து நின்றான் அரவிந்தன்.

“சார் என்ன சார் இந்த நேரத்துல எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க…? ஏதாவது பேசணும்னா என்ன கூப்பிட்டு இருக்கலாமே… நானே வந்து இருப்பேன்..” என அவன் கூற
அடுத்த நொடி அரவிந்தனின் கரமோ திவாகரின் கன்னத்தில் பலமாக மோதியது.

அவன் அடித்த அடியில் அப்படியே மொட்டை மாடியின் ஓரத்தோடு கட்டப்பட்டிருந்த கட்டில் மோதி நின்றவன் அரவிந்தனை அதிர்ந்து பார்த்தான்.

“சாஆஆஆர்.. இப்போ எதுக்காக என்ன அடிக்கிறீங்க…? நான் என்ன தப்பு பண்ணினேன்…? எதுவா இருந்தாலும் முதல்ல பேசுங்க.. பேசாம இப்படி கை வைக்கிற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க…” என திவாகர் கோபமாகக் கூற எட்டி அவனுடைய பனியனைப் பிடித்து தன்னருகே இழுத்தவன்,

“எங்கடா அந்த டைமண்ட்…?” என கர்ஜிக்க இவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

சட்டென குழப்பம் நீங்கி,
“சார் மோஹஸ்திரம் மேடமும் ஷர்வா சாரும் நடிச்சது மாதிரி நீங்களும் இப்போ வைரத்துக்காக நடிக்கிறீங்களா..? அப்படின்னா நான் உங்க பக்கம்தான் சார்… சத்தியமா எனக்கு அதெல்லாம் எங்க இருக்குன்னு தெரியாது..” என எதுவும் புரியாது அப்பாவியாக பதில் கூற மீண்டும் அவனுடைய கன்னத்தில் பலமாக விழுந்தது அடுத்த அடி.

அதில் பொறி கலங்கி விழிகளை மூடித் திறந்தவனுக்கு விழிகளில் கண்ணீர் கோர்த்து விட “சாஆஆர்ர்…” என நடுங்கிய குரலில் அவனைப் பார்த்தான் அவன்.

ஏதோ பிரச்சனை பெரிது என்பது புரிந்து போக “நான் ஷர்வா சார்கிட்ட பேசணும்..” என நடுங்கிய குரலில் கூறினான் திவாகர்.

“இது மட்டும் உன்னோட ஷர்வா சாருக்கு தெரிஞ்சா முதல்ல அவர்தான் உன்னைக் கொல்லுவாரு. எவ்வளவு தைரியம் இருந்தா ஷர்வா கூடவே இருந்துட்டு அவனோட டைமன்ட்டையே நீ திருடி இருப்ப…?” என அரவிந்தன் கூற இவனுக்கோ உடல் நடுங்கியே விட்டது.

“ஐயோ நான் திருடல… சத்தியமா நான் திருடல… வேணும்னா எங்க வீடு முழுக்க செக் பண்ணிப் பாருங்க…” எனப் பதறியபடி கூறினான் அவன்.

“ஏய் நடிக்காதடா… நீதான் அந்த திருடன்னு என்கிட்ட ஆதாரம் இருக்கு… திருடினது மட்டுமில்லாம எத்தனை உயிர்களை கொன்னு இருக்க… ச்சை உன்ன மாதிரி ஆளுங்கள சும்மாவே விடக்கூடாது…” எனக் கூறியவன் திவாகரின் தலையைப் பிடித்து சுவற்றோடு மோத “ஆ…” என்ற அலறலோடு மயங்கிச் சரிந்தான் அவன்.

திவாகரின் வீட்டிற்கு வெளிப்புறமாக இருந்த படிகளாலேயே அரவிந்தன் மொட்டை மாடிக்கு ஏறி வந்திருந்தான்.
வந்தது போலவே அதே வழியால் திவாகரை தூக்கிக்கொண்டு தன்னுடைய காரில் கிடத்தியவன் வீட்டில் இருந்தவர்களை எழுப்பி திவாகரை விசாரிக்க அழைத்துச் செல்வதாகக் கூற அவனுடைய வீட்டினரோ பதறிப் போயினர்.

திவாகரின் அன்னையோ தன் மகனைக் காணாது அழத் தொடங்கி விட அரவிந்தனோ எதைப் பற்றியும் கவனத்தில் கொள்ளாது வீடு முழுக்க பரிசோதித்து அந்த வீட்டில் வைரம் இல்லை என்பதை எரிச்சலோடு உணர்ந்து கொண்டவன் விசாரணை முடிந்ததும் திவாகரை ஒப்படைப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட திவாகரின் குடும்பமோ கதி கலங்கிப் போனது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் மயக்கம் தெளிந்து தன் விழிகளைத் திறந்த திவாகருக்கோ உடல் முழுவதும் பாறையால் மோதுண்டதைப் போல வலிக்கத் தொடங்கியது.

மிகச் சிரமப்பட்டு தன் கால் கையை அசைக்க முயன்றவன் தன் உடலைக் கூட அசைக்க முடியாது போக விழிகளைக் கீழே இறக்கிப் பார்த்தான்.
அவனுடைய உடலில் உள்ளாடையைத் தவிர வேறு எந்த ஆடையும் இல்லாது இருக்க அடிபட்ட தழும்புகள் அதிகமாக தன் உடலில் இருப்பதைக் கண்டு அவனுக்கோ விழிகளில் கண்ணீர் வடியத் தொடங்கியது.

எந்தத் தவறும் செய்யாத தனக்கு ஏன் இந்தத் தண்டனை என மிகுந்த வேதனையோடு எண்ணியவன் மறுபக்கம் தலையை திருப்ப அங்கே இருக்கையில் அமர்ந்து அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்தன்.

“எ.. என்ன விட்ரு..” வலியோடு முனகினான் திவாகர்.

“எங்கடா அந்த டைமண்ட்..?” என அரவிந்தன் அதட்டிக் கேட்க கதறவே ஆரம்பித்து விட்டான் திவாகர்.

“சார் தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க… ச… சத்தியமா நான் அந்த டைமண்ட்டை எடுக்கல… பசியே வந்தாலும் சாப்பாட்டைக் கூட திருடி தின்ன மாட்டேன் சார்.. நான் போய் எங்க பாஸுக்கு துரோகம் பண்ணுவேனா..? ச.‌..சத்தியமா நான் திருடவே இல்லை… எதுக்காக என்ன இப்படி கூட்டி வந்து கொடுமை படுத்துறீங்க…? ரொம்ப வலிக்குது சார்… தயவு செஞ்சு என்ன போக விடுங்க ப்ளீஸ்…” என தாங்க முடியாத வலியில் கதறி அழுதான் திவாகர்.

அவனுடைய உடல் நடுக்கமும் பதற்றமும் அரவிந்தனுக்கு எதையோ உணர்த்த சற்றே நிதானித்தவன் தன்னுடைய பாக்கெட்டில் இருந்த சிம் கார்டை எடுத்து அவனுடைய முகத்திற்கு முன்பு காட்டினான்.

“இந்த சிம் கார்ட் உன்னோட பேருல தான் ரிஜிஸ்டர் ஆயிருக்கு… அன்னைக்கு கொலை நடந்த இடத்தில இந்த சிம் கார்ட் கிடைச்சுது…
இதுக்கு மேலயும் அந்தத் திருடன் நீ இல்லைன்னு பொய் சொல்லி என்கிட்ட அடி வாங்கியே செத்துறாத… மரியாதையா உண்மைய ஒத்துக்கிட்டு அந்த டைமண்ட் எங்கே இருக்குன்னு சொல்லு…” எனக் கூறியவன் திவாகரின் கழுத்தை உடைப்பது போல அழுத்தமாக இறுக்க தன் உடலை உதறியவன் அரவிந்தனின் கரத்தின் அழுத்தம் தாங்காது விழிகள் சொருக துடிதுடித்தான்.

எந்தத் தவறும் செய்யாத அப்பாவி திவாகரோ உயிர் வலியை அனுபவிக்க அனைத்து தவறையும் செய்த வீராவோ தன் மனைவியின் மார்பில் முகம் புதைத்து அவளோடு இணைந்து இழைந்து கொண்டிருந்தான்.

💜💜💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!