அயலவர்களின் உதவியுடன் முதலில் சாஹித்யாவை கிணற்றுக்குள் இருந்து வெளியே கொண்டு வந்தவன் மீண்டும் உள்ளே இறங்கி நாய்க்குட்டியையும் கொண்டு வந்து சேர்த்திருந்தான்.
உடனடியாக சாஹித்யாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் எனக் கூறியவர்களிடம் மறுத்தவன்,
அவளுக்கான முதல் உதவியை உடனே செய்ய சில நிமிடங்களிலேயே இருமியவாறு கண்களைத் திறந்தாள் அவள்.
விழிகளைத் துறந்த போதும் கூட அவளுக்கு நிதானம் திரும்பவே இல்லை.
சாஹித்யாவைக் கண்டு தியாவோ வீறிட்டு அழத் தொடங்கிவிட்டிருந்தாள்.
பயந்து நடுங்கியவளை நொடியும் தாமதிக்காது தன்னுடைய கரங்களில் பூமாலை போல ஏந்திக் கொண்டான் யாஷ்வின்.
“அக்கா பாப்பாவை தூக்கிட்டு வந்து வீடு வரைக்கும் கொடுக்க முடியுமா..?” என மலர் அக்காவிடம் அவன் கேட்க,
“எனக்கு எவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்கீங்க.. உங்களுக்கு இதைக் கூட பண்ண மாட்டேனா..? சாரி தம்பி.. என்னாலதான் உங்க ரெண்டு பேருக்கும் கஷ்டம்..” என்றவர் தியாவைத் தூக்கிக் கொண்டு அவன் பின்னே அவனுடைய வீட்டிற்குள் நுழைந்தார்.
“நீங்க கிணத்துல குதிச்சதும் அந்தப் பொண்ணு கொஞ்சம் கூட யோசிக்காம கிணத்துக்குள்ள குதிச்சிட்டாளே.. ஒரு நிமிஷம் நான் ஆடிப் போயிட்டேன் தம்பி.. நல்ல வேளை யாருக்கும் எதுவும் ஆகலை…” என்றவர் குழந்தையை அங்கிருந்த தொட்டிலில் கிடத்திவிட்டு சாஹித்யாவைப் பார்க்க,
“தேங்க்ஸ் அக்கா இனி நான் பாத்துக்குறேன்..” எனக் கூறி அவரை அனுப்பினான் அவன்.
அவளோ மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல நடுங்கிக் கொண்டிருந்தவள் உள்ளே நுழைந்த யாஷ்வினைக் கண்டதும் அடுத்த நொடி “அம்மூஊஊஊ..” என்ற கதறலோடு அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
உறைந்து போய் விட்டான் யாஷ்.
“எதுக்கு இப்படி பண்ணீங்க..? கொஞ்ச நேரத்துல நான் எப்படி பயந்து போயிட்டேன்னு தெரியுமா..? உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் என்ன பண்ணுவேன்..? வேற யாராவது வந்து அந்த நாய்க்குட்டிய காப்பாத்தி இருப்பாங்கதானே..? நீங்க எதுக்கு அவ்ளோ ஆழமான கிணத்துல குதிச்சீங்க..?” என அவனைத் திட்டிக் கொண்டிருந்தவள்,
அவன் உடல் கொஞ்சம் கொஞ்சமாக இரும்பைப் போல இறுகுவதைக் கண்டு சட்டென தன் பேச்சை நிறுத்திவிட்டு அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.
தன்னை மறந்து அவனை அணைத்து விட்டோம் என்பது அப்போதுதான் அவளுக்கே புரிந்தது.
அவளுடைய இதயம் மிக வேகமாக துடிக்கத் தொடங்கியது.
அவனை விட்டு விலகிய பின்பும் கூட அவளுடைய விழிகள் அவனுக்கு ஏதேனும் அடிபட்டு இருக்கிறதா என வேகமாக ஆராய அடுத்த நொடி அவளுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் யாஷ்வின்.
மொத்தமாக நொறுங்கிப் போனாள் அவள்.
“உன்னோட நடவடிக்கை கொஞ்சம் கூட சரியில்ல சாஹித்யா..” என அவளை விரல் நீட்டி எச்சரித்துவிட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவனுக்கு அவனுடைய கரங்களின் நடுக்கம் இன்னும் நின்ற பாடில்லை.
எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம் இது..?
கன்னத்தில் கை வைத்தவாறு அதிர்ந்து அமர்ந்திருந்தவளை சோபாவில் இருந்தவாறே பார்த்தவன்,
அவன் அடித்ததையே நம்ப முடியாது அதிர்ந்து போயிருந்தவள் அவன் கேள்விகளை அடுக்கவும் திணறித்தான் போனாள்.
“சொல்லு உன்கிட்டதான் கேட்கிறேன்.. எதுக்கு அப்படி பண்ண..?”
“உ… உங்களுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயந்துட்டேன்.. அ.. அதனாலதான் உங்கள காப்பாத்தலாம்னு..” என்றவளை அழுத்தமாகப் பார்த்தவனுக்கு தன் தலையைக் கொண்டு போய் எங்காவது சுவற்றில் மோதிக் கொள்ளலாம் போல இருந்தது.
“நிஜமாவே உனக்கு அறிவே இல்லையா சாஹித்யா..? நான் கப்பல்ல வேலை செய்றவன்.. நடுக்கடல்ல கூட குதிச்சுருக்கேன்.. அரை மணி நேரத்துக்கு மேல கடலுக்குள்ள இருந்திருக்கேன்.. என்னால இந்த கிணத்துல இருந்து வெளியே வர முடியாதா..? என்னால முடியாதுன்னு நினைச்சிருந்தா நான் உள்ள குதிச்சிருப்பேனா..? நீ எதுக்கு உள்ள வந்த..? ஏதாவது அடிபட்டு இருந்தாலோ இல்ல உனக்கு ஏதாவது ஆகி இருந்தாலோ என்ன பண்றது..?* எனப் பதறியவனுக்கு இன்னும் நெஞ்சுத் துடிப்பு அடங்கவே இல்லை.
“ஆமாங்க எனக்கு அறிவே இல்லைதான்.. நான் பைத்தியக்காரியாவே இருந்துட்டுப் போறேன்… எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல.. நான் செத்தாலும் கூட பரவாயில்லை.. ஆனா உங்களுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு நினைச்சேன்.. அதனாலதான் அந்த நேரத்துல நீங்க நடுக்கடல்ல கப்பல்ல வேலை பார்த்தத மறந்து யோசிக்காம குதிச்சுட்டேன் போதுமா..?” என அழுகையோடு கூறினாள் அவள்.
அந்த வார்த்தைகளில் ஒரு நொடி அவன் அசைவற்றுப் போனான்.
தன் உயிரைக் கொடுக்கும் அளவிற்கு அப்படி என்ன அன்பு..?
அவளுடைய வார்த்தைகள் அவனைத் திகைக்கச் செய்தன.
அப்போதுதான் அவன் கிணற்றின் உள்ளே குதித்ததும் வெளியே நின்று அவள் “அம்மு..” என்று அலறியது நினைவில் வர,
“என்ன ஏன் அம்முன்னு கூப்பிட்ட..?” என அடுத்த கேள்வியைக் கேட்டான் அவன்.
அவளுக்கோ தலை வெடிப்பது போல இருந்தது.
அந்தப் பயத்தில் சற்றும் சிந்திக்காது அவள் தன்னை மறந்து நடந்து கொண்ட விதம்தான் இந்த நிலைக்குக் காரணம் என்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.
“உன்கிட்ட பாப்பாவ ஒப்படைச்சிட்டுதானே போனேன்..? அவளைப் பத்தி கூட யோசிக்காம கிணத்துல குதிக்கிற அளவுக்கு என் மேல என்ன அக்கறை உனக்கு..?”
“பொய் சொல்லாத சாஹித்யா.. நீ எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிற.. உன் நடவடிக்கை எதுவுமே நார்மலா இல்ல..” என்றவனுக்கு அவளுக்கு நீச்சல் தெரியாது என்பதும் தெரிந்திருந்தது.
அனைத்தையும் மறந்து விட்டுத் தன் உயிரே போனால் கூட பரவாயில்லை என அந்தப் பெரிய கிணற்றுக்குள் அவள் குதித்ததற்கான காரணம் அவனுக்கு இப்போது தெரிந்தே ஆக வேண்டும்.
இப்போதும் அவள் அம்மு எனக் கதறி அழுதது அவனுடைய செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
இதோ சற்று நேரத்திற்கு முன்பு தன்னை இறுக அணைத்து தன் மார்பில் முகம் புதைத்து கோபமாக அக்கறையில் திட்டிய வார்த்தைகளும் அவனுக்கு அப்படியே நினைவில் இருந்தது.
அவளுடைய இறுகிய அணைப்பிற்கு என்ன காரணம்..?
சட்டெனத் திரும்பி அவளுடைய விழிகளை ஆழ்ந்து பார்த்தவன்,
“நீ காதலிச்ச பையன் கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு சொன்னேல்ல..? அவன் பெயர் என்ன..?” என அழுத்தமாகக் கேட்க,
இவளுக்கோ கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.
“சொல்லு சாஹித்யா அவன் பேர் என்ன..?”
“சா… சாரி என்னால சொல்ல முடியாது…” மறுத்தாள் அவள்.
“உன்னோட அந்த பாய்பிரண்ட் நான் கிடையாதுல்ல..?” என அவன் கேட்டே விட,
துடிதுடித்துப் போனவள் முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுத் தொடங்கி விட்டாள்.
“பாப்பா அது நான் இல்லைல..?” எனக் கேட்டவன் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த தன்னுடைய மகளைக் காட்டி
“இப்போ சொல்லப் போறியா இல்லையா…?” அந்த அறையே அதிரும் வகையில் கர்ஜித்தான் அவன்.
“ஆமா… ஆமா… ஆமா… அது நீங்கதான்.. அது நீங்க மட்டும்தான்.. அப்போ இருந்து இப்போ வரைக்கும் என்னோட மனசுல இருக்குற ஒரே ஒருத்தர் நீங்க மட்டும்தான் போதுமா..?”
“சாஹித்யாஆஆ..!?” அதிர்ந்து போனான் அவன்.
“உங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா என்னால எப்படி பார்த்துக்கிட்டு இருக்க முடியும்னு நினைக்கிறீங்க..? என்னோட உசுரே போனாலும் பரவால்ல. என் உசிரைக் கொடுத்தாவது உங்கள காப்பாத்துவேன்.. ஏன்னா நீங்கதான் என்னோட காதல்..” என்றதும் இவனுக்கோ தலை வெடிப்பது போல இருந்தது.
அதன் பின்னர் அவளுடன் ஒற்றை வார்த்தை கூட அவன் பேசவே இல்லை.
அன்றிலிருந்து இன்று வரை அவள் கூறிய அத்தனை பொய்களுக்கான காரணமும் இப்போது அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.
“சொல்லு இந்தக் காதல் வான்மதி செத்ததுக்கு அப்புறமா வந்துச்சா இல்ல அவ உயிரோடு இருக்கும்போதே வந்துடுச்சா..?” என ஒவ்வொரு வார்த்தையாக அவன் அழுத்திக் கேட்க அவனை வலியோடு பார்த்தவள் “மு.. முன்னாடியே வந்துடுச்சு..” என்றதும் அருவருப்பில் சீ என தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான் அவன்.
அந்த வார்த்தையில் அவளுக்கு சகலதும் அடங்கி ஒடுங்கிப் போனது.
“எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்க..? இது பாவம் சாஹித்யா.. சொந்த அக்காவோட புருஷனா நான் இருக்கும்போது என் மேல எப்படி உனக்கு காதல் வரலாம்..? அசிங்கமா இல்லையா..?” என அவன் கோபத்தில் கத்த தன் காதுகளைப் பொத்திக் கொண்டவளுக்கு இன்னும் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என்றுதான் தோன்றியது.
அதே கணம் அவனுடைய குற்றச்சாட்டை ஏற்க முடியாது வலியோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“நான் ஸ்கூல் படிக்கிற காலத்துல இருந்து உங்கள காதலிக்கிறேன்.. அதுக்கு அப்புறம்தான் நீங்க அக்காவை பொண்ணு பார்க்கவே வந்தீங்க… அக்காவோட புருஷனை நான் காதலிக்கல.. பிரின்சிபல் என்னோட கிளாஸ்மேட்கிட்ட தப்பா நடந்துகிட்டபோது அவளுக்காக நின்னு போராடின என்னோட தமிழ் வாத்தியைத்தான் நான் காதலிச்சேன்..
சத்தியமா சொல்றேன் நீங்க அக்காவோட வாழ்க்கைல வந்ததுக்கு அப்புறமா நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்.. உங்கள மாமாவா மட்டும்தான் பார்த்தேன்.. என்ன இப்படி அருவருப்பா பாக்காதீங்க.. நான் ஒன்னும் அவ்வளவு கேவலமான பொண்ணு கிடையாது..” என்னவளின் உடல் அழுகையில் குலுங்கியது.
Super vini sis