வைத்தியசாலை வளாகத்தில் நிவேதாவின் அறையிலிருந்து வெளியே வந்த கார்த்திகேயன் மெதுவாக நடைபாதையில் நடந்துகொண்டிருந்தான்.
அவனது மனதில் நிவேதாவின் புதிய இயல்பு பசுமையாகத் தாக்கியது. ஏன் என்று தெரியாமலேயே அவனது முகத்தில் புன்னகை மலர்ந்து இருந்தது. அந்த உணர்வு அவனுக்கு மிகவும் புதிதாக தான்.
‘அவளுடைய பார்வை, பேச்சு, நடத்தை எல்லாமே ஏதோ மாயம் போல் உள்ளது. ஆனா இதுவும் நல்லாத்தான் இருக்கு பழைய நிவேதாவாக தோன்றும் எண்ணங்கள், நினைவுகள் இனி வேண்டாம்
அவளின் கோபம், முரட்டுத்தனம், சுயநலம் இவை எல்லாம் கடந்த காலத்தின் நிழலாக மறைஞ்சிட்டா நல்லா இருக்கும்
அவளிடம் இருக்கும் மென்மை, பயம், தடுமாற்றம் அவளை ஒரு முற்றிலும் புதிய பெண்ணாக மாற்றியிருக்கிறது ..’ என்று மனதளவில் நிவேதாவை எண்ணி கார்த்திகேயன் புரியாத ஒரு இன்ப உணர்வுக்குள் மாட்டிக் கொண்டிருந்தான்.
அதே நேரத்தில் தனியார் வைத்தியசாலையில் மிகவும் பதற்றமாக தனது பிரத்தியேக அறையில்
டாக்டர் சஞ்சீவ், நிவேதாவின் போலி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் கையெழுத்து வைத்தை எண்ணி அழுத்தம் நிறைந்த வதனத்துடன் உட்கார்ந்திருந்தான்.
அவனது கண்கள் இடைவேளையில்லாமல் கதவையும் கைப்பேசியையும் பார்த்துக்கொண்டிருந்தன.
பதற்றம், பயம், குற்றவுணர்வு என்று மூன்றும் சேர்ந்து அவனை மீறி அவனது உடலில் நடுக்கத்தை உண்டாக்கியது.
“ட்ரிங்… ட்ரிங்…” என்று அவனது கைபேசி முழங்கியது.
எதிர்பார்த்த அழைப்பு வந்ததும் அதிர்ந்து எழுந்தவன், அதனை கையிலெடுத்தான். திரையில் அழைப்பு எடுப்பவரின் பெயரும், நம்பரும் தென்படவே இல்லை.
அவன் பதைத்தவாறே அழைப்பை எடுத்தான்.
“நீ அங்க இருக்கிறதை யாருக்கும் சொல்லக்கூடாது… உன்னை தேடி வரட்டும். நம்ம ப்ளான் இப்பதான் விறுவிறுப்பா நடக்கப்போகுது.” என்று மறுமுனையில் இருந்து வந்த அந்தக் குரல் மிகவும் அமைதியாக இருந்தாலும், அதில் இருந்த ஆணையோடும், பயமுறுத்தலும் நெஞ்சை பிசைந்தது.
அவனது முகம் வியர்வையால் நனைந்தது.
“நீ..நீங்க சொல்ற மாதிரி என்னால நடந்துக்க முடியாது ப்ளீஸ் என்னை விட்டுடுங்க..”
“ஏய் உனக்கு பயம் விட்டு போச்சுல்ல நிவேதாவுக்கு போட்ட பிளான் மிஸ் ஆயிடுச்சு ஆனா அந்த பிளான திரும்பவும் உன் பொண்ணுக்கு போட வெச்சுராத உன் பொண்ணு கானா பொணமா அனாதையா ரோட்ல கிடக்கிறத நீ பார்க்க ஆசைப்படுறியா..? ஒரு கால்லயே எல்லாத்தையும் முடிச்சுருவேன் என்ன சஞ்சீவ் கண்ணா நீ ரொம்ப அடம் புடிச்சின்னா பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் ஜாக்கிரதை..” இன்று அந்தக் குரல் பிடித்து உரைக்க,
டாக்டர் சஞ்சீவின் கை நடுக்கத்துடன் அந்தக் கைப்பேசியைக் கீழே வைத்தது. அந்த மறுமுனை குரல் கூறிய வார்த்தைகள், அவனது உடலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
‘நிவேதாவுக்காக போட்ட திட்டத்திற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லையே..!’ என்று மனம் கதறி அழுதது.
என்னது சம்பந்தம் இல்லையா..? அப்படி என்றால் இந்த அழைப்பிற்கும், சஞ்சீவிக்கும், அந்த போஸ்மார்ட்டம் ரிப்போர்ட்டிற்கு ஏதோ ஒரு பிணைப்பு இல்லாமல இப்படி எல்லாம் நடக்கின்றது.
அது மட்டும் இல்லாமல் இப்போது தனது மகளுக்கு ஏதும் நடக்கும் என்ற பயம் அவனை முழுவதுமாக ஆட்டிப்படைக்க காரணமாய் அமையும் விடயம் தான் என்ன..?
நடந்த உண்மை என்னவென்றால் அந்த குரல் யார் என்றே சஞ்சீவுக்கு தெரியாது ஒரு நாள் திடீரென்று சஞ்சீவின் தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வர, அதனை கையில் எடுத்து அழுத்த,
“ஹலோ சஞ்சீவ் டாக்டரா ..?’
“ஆமா நீங்க யாரு..?”
“டாக்டர் எனக்கு உங்களோட உதவி வேணும்..”
“முதல் நீங்க யாருன்னு சொல்லுங்க ஏதும் உடம்புக்கு முடியலையா..?”
“உடம்புக்கு ஒன்னும் இல்ல டாக்டர்..”
“ஹலோ யார் நீங்க சும்மா கால் பண்ணி இரிட்டேட் பண்ணிட்டு இருக்கீங்க..” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டிக்க,
மீண்டும் மீண்டும் அழைப்பு வந்தது. ஆனால் சஞ்சீவ் அழைப்பை எடுக்கவே இல்லை. ஆப்ரேஷன் தியேட்டருக்குள் சென்றவன் தனது தொலைபேசியை சைலண்டில் போட்டுவிட்டு தனது வேலையில் தனது கவனத்தைச் செலுத்தினான்.
சிறிது நேரத்தின் பின் வைத்தியசாலையில் அவனது வேலை நேரம் முடிவடைந்ததும் பின் வீடு திரும்புவதற்காக காரில் ஏற, அப்பொழுது காரின் அருகே வந்து முகமூடி போட்டிருந்த ஒரு மர்ம நபர் கையில் இருக்கும் தொலைபேசி சஞ்சீவின் கையில் திணித்துவிட்டு,
“ஏய் மரியாதையா கால் வரும் அட்டென்ட் பண்ணி பேசு இல்லன்னா சாவடிச்சிடுவேன்..” என்று கையில் சிறு கத்தியை வைத்துக்கொண்டு மிரட்டினான்.
சுற்றும் முற்றும் பார்த்தால் பார்க்கிங்கில் யாருமே இல்லை. வாசலில் நிற்கும் செக்யூரிட்டி கூட எங்கோ சென்று விட்டான்.
மனதில் பயபந்து உருள வேறு வழி தெரியாமல் அழைப்பை எடுத்து காதில் வைக்க அதே குரல்,
“ஏய் உனக்கு நான் கால் பண்ணினா முதல் காது கொடுத்து என்ன சொல்ல வர்றேன்னு கேளு அதுக்கு கூட உனக்கு டைம் இல்லையா..?” என்று கர்ச்சித்தது அந்தக் குரல்.
“இல்ல எனக்கு முக்கியமான ஆப்ரேஷன் ஒன்னு இருந்துச்சு..”
“இன்னைக்கு நீ கால் ஆன்சர் பண்ணி இருக்காட்டி நாளைக்கு உனக்கு முக்கியமான ஆப்பரேஷன் பண்ண வேண்டி வந்திருக்கும்..”
“நீங்க யாரு எதுக்கு இப்படி என்னை தொல்லை பண்றீங்க உங்களுக்கு என்ன வேணும்..”
‘இப்போதான் விஷயத்துக்கே வந்து இருக்க எனக்கு உன் மூலமாக ஒரு போலி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தேவை
நாளைக்கு மதியம் பாடி உங்க ஹாஸ்பிடலுக்கு தான் வந்து சேரும் அதுக்கான ஏற்பாடெல்லாம் நான் பண்ணிட்டேன் அந்த பாடி கருணாகரன் நிவேதா தான் என்று பெயர் போட்டு நீ கொடுக்கணும் அவ்வளவுதான் சின்ன வேலை முடிச்சிடு..”
“முடியாது இதெல்லாம் போர்ஜரி இப்படி செஞ்சா கடைசியா நான் போலீஸ் கிட்ட மாட்டிகிட்டு கம்பி தான் எண்ணணும் இதுக்கு நீங்க வேற ஆளை பாருங்க இப்படியான வேலை எல்லாம் நான் என்னோட முப்பது வருஷ சர்வீஸ்ல செய்ததே இல்லை..”
“ஆஹ்.. எனக்குத் தெரியும் செல்லம் நீ ரொம்ப நேர்மையான டாக்டர் என்று ஆனா என்ன பண்றது எனக்கு உன்ன தானே புடிச்சிருக்கு நீ தான் இந்த வேலையை செய்து ஆகணும் இல்லன்னா உன் முன்னுக்கு நிக்கிறான் பாரு அவன் ரொம்பச் சுட்டி பையன் நான் ம்ன்னு சொன்னா உன் கழுத்தை வெட்டி கையில தந்துருவான் எப்படி வசதி..?”
“ப்ளீஸ் என்ன விட்டுடுங்க என்னால முடியாது சமூகத்துல எனக்கு ஒரு நல்ல பெயர் இருக்கு அத கெடுத்துறாதீங்க..”
“நீ செய்ய மாட்டல்ல ஓகே செல்லம் போன வச்சுடுறேன்..” என்று கூறிவிட்டுப் அழைப்பை துண்டிக்க அப்போதுதான் சஞ்சீவுக்கு சீராகவே மூச்சு விட முடிந்தது.
அதுக்குப் பின் தான் பெரிய மர்மமே நடந்தது. சஞ்சீவின் பெயரை வைத்து இன்னொரு டாக்டர் மூலமாக அவனது கையெழுத்தை போட்டு அந்தப் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை சஞ்சீவ் டாக்டர்தான் தயாரித்தது என்று நம்ப வைத்து விட்டார்கள்.
செய்ய மாட்டேன் என்று சொன்னதற்காக இப்படி தன்னை இந்த சிக்கலுக்குள் வம்பாக மாட்டி விட்டார் அந்த குரலுக்குரிய சொந்தக்காரர்.
போலீஸிடமும் போக முடியாமல், கருணாகரனிடமும் உண்மையை சொல்ல முடியாமல் சஞ்சீவ் தவியாய் தவித்துப் போனான்.
‘இப்போ என்னன்னா அவன் என்ன வச்சு ஒரு பெரிய பிளானே போடுறான் என்னால எப்படி இந்த வலைக்குள்ள இருந்து தப்பிக்க முடியும் யார் எனக்கு உதவி செய்வாங்க யார்கிட்ட போய் நான் உண்மைய சொல்றது என்ன எப்போதுமே அவன் கண்காணிச்சிட்டு இருக்கானே இப்போ என் பொண்ண வேற கொன்னுடுவேன்னு மிரட்டுறான் இதுக்கு என்னதான் வழி..’ என்று புரியாமல் அவர் உடைந்து போய் அமர்ந்திருந்தார்.
சிறிது நேரத்தில் பின் சிந்தனைக்குள் இருந்து வெளியே வந்தவர்.
“இல்லை… இது போதும்… நான் இதிலிருந்து வெளியே வரவேண்டும்…” என்று அவன் மனதுக்குள் கத்தினார். ஆனால் அந்த குரல் சொன்னதுபோல், இது ஒரு பிளான் அல்ல இது ஒரு சூட்சும வலையம். ஒருமுறை அதில் மாட்டினால் வெளியேற முடியாதது.
சஞ்சீவ் இதிலிருந்து தப்பிப்பாரா..?
அப்படி நிவேதாவை கொல்லும் அளவுக்கு குரோத எண்ணம் கொண்ட விரோதி யாராக இருக்கும்..?