கருடா 22
ராஜ நடையில் நடந்து வருபவளின் சத்தத்தை வைத்தே அது ரிதுசதிகா என்று கண்டு கொண்ட ரவி, சுற்றி நிற்கும் காவல் துறையினரை மிரண்டு பார்த்தான். அனைவரும் அவனைக் கண்டு சிரித்தனர். கம்பீரத்திற்குப் பேர் போனவள், சற்றும் குறையாத கர்வத்தோடு அவன் முன்பு அமர்ந்து கால் மீது கால் போட்டாள்.
“உன்னை அவ்ளோ சீக்கிரம் விட்டிடுவேன்னு பார்த்தியா? எங்க போனாலும் என் கழுகுப் பார்வை உன்னைத் துரத்திக்கிட்டே இருக்கும்.”
“தயவுசெஞ்சு என்னை விட்டிடுங்க மேடம். என்னைக் காணாம என் பொண்டாட்டியும், பிள்ளைங்களும் அழுதுட்டு இருப்பாங்க. என்கிட்ட இருந்த காசு, பணம் எல்லாத்தையும் வாங்கிக்கிட்டிங்க. இதுக்கு மேல என்ன மேடம் வேணும்? சத்தியமா இங்க நடந்த எதையும் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். இந்த ஊரை விட்டு ஓடிப் போயிடுறேன். என்னை உயிரோட விட்டிடுங்க. எந்த மாதிரிச் சூழ்நிலையிலும் உங்க முன்னாடி வரமாட்டேன்.”
“இந்த ஒரு வார்த்தையை உன் வாயில இருந்து வர வைக்கிறதுக்குள்ள, எவ்ளோ போராட வேண்டியதாய் போச்சு.” எனச் சலிப்பாகக் கூற, அவளையும், அவள் வார்த்தையும் புரியாது பார்த்துக் கொண்டிருந்தான் ரவி.
“இதுக்கு மேல உன் சாப்டரைக் கொண்டு போக முடியாது. நீ ஊரை விட்டு ஓடுவியோ, இல்ல தூக்கு மாட்டிக்கிட்டு சாவியோ, அது உன்னோட விருப்பம். ஆனா, கருடன் கண்ணுல மட்டும் சிக்கிடக் கூடாது. ஒருவேளை, அவனா தேடி வந்தாலும் எந்த உண்மையும் அவனுக்குத் தெரியக் கூடாது. இன்னைக்குத் தப்பிச்சுப் போய் நாளைக்குப் பழி வாங்க வரலாம்னு தப்புக் கணக்குப் போடாத. போதைப் பொருள் கேஸ்ல உன்னைப் பிடிச்சிருக்காங்க. போதாக்குறைக்கு, உன் வீடு முழுக்கப் பொருளை எடுத்து இருக்காங்க.” என்றவள் ஒரு திரையை விலக்க, அவன் மனைவி அமர்ந்திருந்தாள்.
“உன் ஒயிஃபை அரெஸ்ட் பண்ணி ரெண்டு நாள் ஆகுது. இந்தக் கேஸ்ல உள்ள போனா வெளிய வரது கஷ்டம். எந்தப் பொண்ணுங்களுக்காக அடுத்தவங்க வயித்துல அடிச்சியோ, அந்தப் பொண்ணுங்க வாழ்க்கை நாசமாப் போயிடும். வழக்கை நடத்த இப்போ உன்கிட்டச் சல்லிப் பைசா இல்லை. உதவி பண்ணா நமக்கும் பிரச்சினை வரும்னு உன் சொந்தக்காரங்க முதல் கொண்டு, யாரும் உதவ முன் வர மாட்டாங்க. ஒழுங்கா நான் கொடுக்கிற கடைசி ஆப்ஷனை யூஸ் பண்ணிக்க. உன்னையும், உன் பொண்டாட்டியையும் தப்பிக்க விடுறேன். எங்கயாவது மொழி தெரியாத இடத்துக்கு ஓடிப் போயிடுங்க. எந்த ஜென்மத்திலும் உன்னை நான் பார்த்திடக் கூடாது.”
“சத்தியமா நீங்க இருக்க பக்கமே வரமாட்டேன் மேடம். என்னையும், என் குடும்பத்தையும் விட்டிடுங்க. நாங்க எங்கயாவது போயி பிழைச்சிக்கிறோம்.”
“இனியாவது யாருக்கும் துரோகம் பண்ணாம, சுயமாக உழைச்சுக் குடும்பத்தைக் காப்பாத்து. உன்னை உள்ள வச்சுக் கடைசி வரைக்கும், உன் குடும்பத்தைக் கஷ்டப்படுத்த என்னால முடியும். பெத்தவங்க பாசத்தை இழந்து வாழுறதோட வலி எனக்குத் தெரியும். அந்தக் கஷ்டத்தை உன் பொண்ணுங்களுக்குக் கொடுக்க விரும்பல. அதுவுமில்லாம, யாருமே இல்லாத இருட்டுல நின்னுட்டு இருந்த எனக்கு, வாழ்க்கை முழுக்கக் கூட வர ஒரு துணையைக் கொடுத்திருக்க. அந்த ஒரே ஒரு காரணத்துக்காக, உன்னைச் சும்மா விடுறேன்.” என அமைதியாகப் பேசிக் கொண்டிருந்தவள் கொடூரமாக முகத்தை மாற்றி,
“அந்த ஒரு காரணத்துக்காக உன்னை சும்மா விடத் தெரிஞ்ச எனக்கு, அதே ஒரு காரணத்துக்காக உயிரை எடுக்கவும் தெரியும். ரெண்டாவது ஆப்ஷனை யூஸ் பண்ண விடாமல் பார்த்துக்க.” என்றவள் காவல் துறையினரை அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.
அவளுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறியவள், ரவி கதையைச் சரியாக முடிக்கும்படி கூறிவிட்டு வெளியேறினாள். இத்தோடு எல்லாப் பிரச்சினையும் முடிந்தது என நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். கருடனைப் பொறுத்தவரை காணாமல் சென்றவன், காணாமலே சென்று விட்டான். மாமியாரை வைத்து வீட்டுப் பத்திரத்தைக் கொடுத்து அங்கு நிலவரத்தைச் சரி செய்தவள், தேடிக் கொண்டிருப்பதாக நடித்துக் கருடனையும் சமாளித்து விட எண்ணிக் கொண்டிருக்கிறாள்.
எல்லாம் சரியாக நடந்து அவன் குடும்பத்தோடு சேர்ந்து விட்டால், ரவியைப் பற்றி எண்ண மாட்டான் என்ற தப்புக் கணக்கைப் போட்டவள் மிகுந்த மனமகிழ்வோடு நடந்து வர, காரில் சாய்ந்து கொண்டு கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு நின்றிருந்தான் கருடேந்திரன்.
அவனை அங்குச் சற்றும் எதிர்பார்த்திடாத ரிதுவின் மூச்சு நின்றது. பூமி வெடித்து அந்த வெப்பத்தின் உமிழ் தாங்காது சாம்பல் ஆனது போல் இருந்தது. உச்சி மண்டைக்குள் சுத்தியல் கொண்டு அடித்தது போல் நடுங்கிப் போனவள் பேச முயற்சிக்க நாக்கு சதி செய்தது.
மேல் அன்னத்தோடு ஒட்டிக் கொண்ட நாக்கை விடுவிக்கத் திராணி இன்றி நின்றவளை அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் கருடன். அவன் பார்வை, கொதிப்பை அதிகரித்தது. கண்ணால் பொசுக்கும் அவன் அனலைத் தாங்க முடியாது, முதல் முறையாகத் தலை குனிந்தாள். புடைத்துக் கொண்டிருக்கும் கை நரம்புகளை வைத்தே அவன் கோபத்தின் அளவை உணர்ந்தவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
எப்போது அவன் கட்டிய தாலியை ஏற்க ஆரம்பித்தாளோ, அப்போதே அவனோடு தான் முழு வாழ்வும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். வெளிப்படையாக, மனத்தில் இருக்கும் விருப்பத்தைச் சொல்லி அவனோடு இணைந்து இருக்கலாம். இந்தப் பந்தத்திற்குக் காரணமான பிரச்சினையைப் பிடித்துக் கொண்டு, உறவை வளர்க்க நினைத்தது தான் அவள் செய்த மிகப்பெரிய தவறு. தவறே செய்யாதவள், வாழ்க்கை முழுவதும் தன் மீது தவறு இருக்கும்படியான வேலையைச் செய்து விட்டாள்.
காதல் ஒரு மனிதனை என்ன வேண்டுமானாலும் செய்யும். அதற்கு மேலும் ஒரு உதாரணம் ரிதுசதிகா! பாலைவனக் காட்டில் தடுமாறிக் கொண்டிருந்தவளுக்கு, கையளவு ஊற்று நீராக வந்தவன் மெல்ல அவளைப் பிடுங்கிக் கொள்ளும் சுனாமியாக உருவெடுத்தான். அவன் நேர்மையும், தன்னிடம் காட்டும் கோபமும், எப்போதாவது வந்து மறையும் அன்பும் அவன் பக்கம் இழுத்துக் கொண்டது.
“சோ… என் தம்பியோட பிரச்சினைக்கு நீதான் முழுக்காரணம்!” என அருவருப்பாகப் பார்த்தான்.
“கருடா… ப்ளீஸ்!”
“என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? நீ ஆட்டி வைக்கிற பொம்மையா நான்… கடைசி வரைக்கும், யாரு தப்புப் பண்ணாங்கன்னு தெரியாம அலைஞ்சுகிட்டு இருக்கணுமா?”
“நான் எந்தத் தப்பும் பண்ணலன்னு தெரிஞ்சா, காயப்படுத்தித் தாலி கட்டுனதுக்காக ரொம்ப வருத்தப்படுவ. உன் வீட்ல இருக்கறவங்களும் உன்னை மன்னிக்க மாட்டாங்க. உனக்கும், எனக்குமான பயணம் அத்தோடு முடிஞ்சிடும்.” என்றவள் ரவி தொடர்பான அனைத்தையும் தெரிவித்து மன்னிப்பைக் கண்ணீராக ஏந்தி நின்றாள்.
இவை அனைத்தையும் கேட்ட பின்பு கூட, கருடேந்திரன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அப்படியே அசையாது நிற்கும் அவனைக் கண்டு நொடிக்கு நொடி பயம் அதிகரிக்க, “சாரி!” என்றாள்.
“சாரி சொல்லித் தப்பிக்கப் பார்க்காத.” எனச் சிடுசிடுக்க, அவள் தலை பூமியைப் பார்த்தது.
அவளை நெருங்கியவன் முகம் உயர்த்தி, “உன்னோட ஒவ்வொரு செயலையும் நான் கண்காணிச்சுட்டுத் தான் இருந்தேன். ரவியப் பிடிச்சது முதல் கொண்டு, எங்க அம்மாகிட்டப் பத்திரத்தைக் கொடுத்தது வரைக்கும் எல்லாமே தெரியும்.” என அதிரவிட்டான்.
உப்பு நீருக்கு நடுவில் ஊற்று நேர் புகுந்தால், எம்மாதிரியான சுவை இருக்குமோ அப்படியான மகிழ்வில் இருந்தாள் ரிது. மகிழ்வும், கண்ணீரும் சரிசமமாகப் போட்டி போட்டு அவளை ஒரு வழி செய்ய, “எனக்காக இவ்ளோ பண்ணும்போது, வேண்டாம்னு சொல்ல நான் என்ன மடையனாடி? இந்த விஷயம் தெரிஞ்சதும் குற்ற உணர்ச்சில துடிச்சேன். உன்னை விட்டுப் போகலாம்னு முடிவு பண்ணேன். அடுத்த நிமிஷம் உடம்பு பதறித் துடிக்க ஆரம்பிச்சுது. எதையோ இழக்கப் போற வலி. அழுகை முட்டிக்கிட்டு நின்னுச்சு. எதுவா இருந்தாலும், பேசித் தீர்த்திடலாம்னு தேடி வந்தவன் உன்னைக் கொஞ்ச ஆரம்பிச்சிட்டேன். அந்த நிமிஷம் தான், உன்னைத் திட்டிக்கிட்டே லவ் பண்ணி இருக்கேன்னு புரிஞ்சுது. நீ வேணாம்னு ஓராயிரம் முறை சொல்லிட்டு, வேணும்னு ஆசைப்பட்டு இருக்கேன்.” என்றது எல்லாம் கனவாகத் தெரிந்தது அவளுக்கு.
கண்ணீருக்கு நடுவில், அடிக்கடி சிரிக்கும் தன்னவளைக் கண்டு கண் கலங்கியவன், கை இரண்டையும் நீட்டி வாவென்று அழைக்க, வேகமாக ஓடி அவனுக்குள் புதைந்து கொண்டாள். இறுக்கி அணைத்தவன் கிடைக்கும் இடத்தில் எல்லாம் முத்தம் வைக்க, அணைப்புதான் ஆறாத மருந்தென்று அதிலேயே நின்று கொண்டாள்.
“சாரி!” என அவள் நெற்றியில் முத்தம் பதிக்க, “சாரிப்பா!” என்றாள்.
இருவருக்குள்ளும் இருந்த கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்தது. மனமகிழ்வோடு ஒன்றாக வீட்டிற்கு வந்தவர்கள், என்ன செய்வதென்று தெரியாமல் தனித்தனியாக நின்றிருந்தார்கள். சில நேரம், மனம் அளவுக்கு அதிகமாக நிறைந்து விட்டால் இப்படித்தான்… செய்வதறியாது குழம்பிப் போகும். அப்படியான நிலையில் இரண்டு மணி நேரத்தைக் கடத்தினார்கள்.
தன்னைவிட அதிகமாக நெளிந்து கொண்டிருக்கும் தன்னவளைச் சரி செய்யும் நோக்கோடு, “அந்த ரவியைத் தேடிட்டு வரேன் முதலாளி… எங்க போனான்னே தெரியல. இந்த ஜென்மத்துல கண்டு பிடிக்க முடியாது போல. கடைசி வரைக்கும் உன்கிட்டச் சிக்கிதான் சின்னாபின்னம் ஆகணும்னு விதியோ!” எனப் பெரிதாக அழுத்துக்கொண்டு மெத்தையில் படுத்தான்.
ஓடிச் சென்று அவன் நெஞ்சோடு சேர்ந்து கொண்டவள், “ரவியைக் கண்டு பிடிக்கிற வரைக்கும், உன்னைக் கொஞ்சம் யூஸ் பண்ணிக்கிறேன்.” எனப் போர்வையை இருவருக்கும் சேர்த்துப் போர்த்தி விட்டாள்.
வரும் சிரிப்பை அடக்கப் போராடியவன், தன்னவளைத் தன் கைவளைவுக்குள் சேர்த்துக் கொண்டு, “அப்போ நானும் உங்களை யூஸ் பண்ணிக்கலாமா முதலாளி?” கண்ணடித்தான்.
“அதெல்லாம் முடியாது!”
“இது போங்கு.”
“ப்ச்! அப்போ அந்த ரவியைச் சீக்கிரம் கண்டுபிடி. அப்பத்தான் நீ ஆசைப்பட்ட மாதிரி என்கிட்ட இருந்து தப்பிச்சு நல்ல பொண்ணாய் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்க முடியும்.”
“அவனை, எந்த ராட்சசி என்ன பண்ணாளோ தெரியல முதலாளி. துண்டக் காணோம், துணியக் காணோம்னு ஓடிட்டான். அம்சமான பொண்டாட்டியா கட்டி வாழலாம்னு ரொம்பக் கனவு கண்டேன். அது எல்லாம் கனவாவே போயிடும் போல.”
“அது உன் தலைவிதி மகனே!”
போலியாக அழுவது போல் முகத்தை வைக்க, “நடக்கத்தான் வாய்ப்பு இல்லன்னு ஆகிடுச்சு. அட்லீஸ்ட் உன் ஆசையச் சொல்லி மனசைத் தேத்திக்க கருடா…” என்றவளுக்கு அவன் விருப்பத்தைத் தெரிந்து கொள்ள ஆசை.
****
இருட்டைக் கிழித்துக்கொண்டு பறந்தது கருடேந்திரனின் மூன்று சக்கர வாகனம். முன்னால் அமர்ந்து வந்தவளுக்குக் குஷியோ குஷி. இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டு வீட்டின் முன்பு நின்றனர். கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவள், “ம்ம்!” என உத்தரவு கொடுக்க, கதவைத் தட்டினான்.
நல்ல உறக்கத்தில் இருந்த சரளாவை எழுப்பிய சத்யராஜ், கதவைத் திறக்கச் சொன்னார். மகனை நினைத்துக் கொண்டு உறங்கியவர் அவன் நினைப்போடு கதவைத் திறக்க, “பிறந்தநாள் வாழ்த்துகள் அத்தை!” பளிச்சென்று புன்னகைத்தாள் ரிதுசதிகா.
அடிக்கடி கற்பனையில் நினைத்துப் பார்க்கும் காட்சியை, நேரில் கண்டவருக்கு நா எழவில்லை. புன்னகை ததும்ப நின்று கொண்டிருந்த மகனையும், அவன் கைப்பிடித்துக் கொண்டு நிற்கும் மருமகளையும் கண்டு உச்சி குளிர்ந்து போன அந்தப் பெற்றவள், “வா… நீங்க… அய்யோ…” என உளற ஆரம்பித்தார்.
“என்னம்மா, நாக்குல கிச்சுக்கிச்சா…”
“அதெல்லாம் ஒன்னும் இல்லண்ணா, மருமகளைப் பார்த்த சந்தோஷம்!”
நதியாவும், மூர்த்தியும் தந்தையோடு நின்று கொண்டு அன்னையைக் கேலி செய்ய, “எல்லாரும் சேர்ந்து பிளான் பண்ணீங்களா?” மகிழ்வோடு கேட்டார்.
“சர்ப்ரைஸ் எப்படி இருக்கு அத்தை?”
“என்ன சொல்லறதுனே தெரியலம்மா. ஒரு மாதிரி மயக்கம் வர மாதிரி இருக்கு. இப்பக் கூடப் பார்க்குறது கனவோன்னு சந்தேகமா இருக்கு.”
கட்டியணைத்து அவர் கன்னத்தில் இதழ் பதித்தவள், “இப்ப நம்புறீங்களா?” கேட்க வானத்தையே கைக்குள் அடக்கி விட்டார் சரளா.
“உள்ள வாடா…” அன்பொழுக அழைத்தவர் மகனை மறந்து விட்டார்.
முதல்முறையாகக் கணவன் வீட்டிற்குள் நுழைகிறாள். உள்ளே வந்தவளின் பார்வை அந்த வீட்டை நோட்டமிட்டது. மருமகள் பார்வையில் நெளிந்தவர்,
“உன் வீடு மாதிரிப் பெருசா இருக்காதும்மா.” கூறினார்.
“சின்னதா இருந்தாலும் ரொம்ப அழகா இருக்கு.”
“உட்காருமா…” என்றவர் சோபாவில் இருக்கும் துணிகளை எல்லாம் அள்ளி வீசி இல்லாத தூசியைத் தட்டி விட்டார்.
அவர் நடவடிக்கைகளைக் கண்ட அனைவரும் தங்களுக்குள் பார்த்துக் கொள்ள, அந்தோ பரிதாபமாக வாசலிலேயே நின்று கொண்டிருந்தான் கருடேந்திரன். மருமகள் பக்கத்தில் அமர்ந்தவர் அவள் கையைத் தன் உள்ளங்கையில் வைத்து, “ரொம்பச் சந்தோஷமா இருக்கும்மா… என் புள்ள இல்லாம இந்த நாளை எப்படித் தள்ளுறதுன்னு தெரியாம பயத்துல இருந்தேன். என் குலசாமியா வந்து என் பயத்தைப் போக்கிட்ட. நீ செஞ்சதை என்னைக்கும் மறக்க மாட்டேன்.” என்றார்.
“ஆக்சுவலா ரெண்டு நாளைக்கு முன்னாடியே வரலாம்னு சொன்னேன். உங்க பையன் தான் இப்படி ஒரு பிளானைப் போட்டாரு.” என்றவளுக்கு அப்போதுதான் உடன் வந்தவன் ஞாபகம் வந்தது.
வெளியே எட்டிப் பார்த்தவள், “ஏன் அங்க நிக்கிற?” கேட்க, கடுமையாக முறைத்துக் கொண்டிருந்தான் அன்னையை.
அவனின் பார்வையில் செய்த உதாசீனம் புரிய, “ஈஈஈ… வாடா.” மழுப்பலாகக் கூப்பிட்டார்.
“இப்பத்தான் நான் உன் கண்ணுக்குத் தெரியுறேன், இல்ல.”
“ஆமான்னு சொல்லிட்டா ரொம்ப அசிங்கமாகிடும் அண்ணா… கண்டுக்காம உள்ள வந்துரு.”
“ஆமா அண்ணா, நதியா சொல்ற மாதிரிக் கண்டும், காணாமலும் உள்ள வந்துரு. இப்போதைக்கு அம்மாவோட பார்வை உன் மேல விழாது.”
“அவளை இங்க கூட்டிட்டு வர்றதுக்கு நான் எவ்ளோ போராடி இருக்கேன் தெரியுமா? உங்க அம்மா என்னடான்னா, அசால்ட்டா மருமகளுக்குச் சொம்பு தூக்கிட்டு இருக்காங்க.”
“இப்படி ஒரு மகாலட்சுமிக்கு எவ்ளோ போராட்டம் பண்ணாலும் தகும். என் மருமகளுக்கு நான் சொம்பு தூக்காம, வேற யாருடா தூக்குவா… எவ்ளோ அழகா இருக்கா பாருடா.” என்றவர் மருமகளின் கன்னத்தைப் பிடித்து,
“என் வம்சத்துலயே இப்படி ஒரு அழகான பொண்ண யாரும் பார்த்திருக்க மாட்டாங்க. என் மருமகள் தேவதை! அத்தை மேலே எவ்ளோ பாசம் இருந்தா நடுராத்திரின்னு கூடப் பார்க்காம ஓடி வந்திருப்பா.” எனக் கொஞ்சினார்.
“அவ ஓடி வந்ததை நீ பார்த்தியாம்மா…” கேட்டுக் கொண்டே உள்ளே வந்தவன் சோபாவில் அமர்ந்து, “நான் தான் ஆட்டோல கூட்டிட்டு வந்தேன்.” என அன்னையை முறைத்தான்.
“ஏன்டா, அந்த ஓட்டை வண்டிலயா கூட்டிட்டு வந்த…” என்றதற்கு அங்குச் சிரிப்பலைகள் நிறைய, “நீ ஏம்மா அந்தத் தகர டப்பால வந்த. இனி அதுலலாம் வராத. தூசு அழுக்கெல்லாம் பட்டா முகம் கருப்பாகிடும்.” என்றவரை ரசித்துக் கொண்டிருந்தாள் மருமகள்.
அதற்கு எதிராக அவளின் கணவன் தான் முறைத்துப் பஸ்பமாக்கிக் கொண்டிருந்தான். மருமகளை விட்டு எங்கும் நகராது, பிடித்த கையைப் பிடித்தபடி வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தவர் கவனத்தைக் கலைத்தார்கள் பிள்ளைகள். பிறந்தநாள் கேக்கை வைத்து வெட்டச் சொல்ல,
“இந்தத் தடவை என் மருமகள் வெட்டட்டும்.” எனப் பிள்ளைகளின் முறைப்பை வாங்கிக் கொண்டார்.
சம்பந்தப்பட்டவளுக்கு, சொல்லில் அடங்காத ஆனந்தம். ராதா, இதுபோன்ற அன்பைத்தான் தன் மகளுக்குக் கொடுத்து வளர்த்தார். அதை இழந்தவள், சரளா மூலம் பெற்றுக் கொண்டிருக்கிறாள். கேக்கை வெட்டச் சொல்லிக் கை தட்டும் மாமியாரைத் தன் பக்கம் இழுத்தவள், அவரோடு சேர்ந்து பிறந்தநாளை இனிதே துவங்கி வைத்தாள்.
முதல் துண்டு கேக்கை மருமகளுக்கு ஊட்டியவர், “டேய்! கர்சீப் எடுத்துட்டு வாடா.” என்றார் இதழின் ஓரம் ஒட்டி இருந்ததைக் கண்டு.
“வேண்டாம் அத்தை!” என்று விட்டுக் கையால் துடைக்க முயலும் மருமகளைத் தடுத்தவர் தானே ஓடிச்சென்று எடுத்து வந்து துடைத்து விட, “இப்படி ஒரு கண் கொள்ளாக் காட்சியைப் பார்க்கத்தான் ஓடோடி வந்தியா அண்ணா…” உடன்பிறப்புகள் வெறுப்பேற்றினார்கள் கருடேந்திரனை.
ஏற்கெனவே அக்னி குண்டத்தின் மீது அமர்ந்திருந்தவன், தலை மீதும் குண்டத்தைத் தூக்கி வைத்தது போல் கொதித்தான். அவனையும், சரளாவையும் பார்த்தவளுக்குப் பெருத்த ஆனந்தம். எத்தனையோ முறை அவனை வெறுப்பேற்றி வெற்றி கண்டதாக மிதந்தவளுக்கு, இந்த நிமிடம் தான் உண்மையான வெற்றி கிடைத்தது போல் மாமியாரோடு கூட்டணி வைத்தாள்.
சரளாவின் பிறந்தநாள் என்பதற்கு, எந்த அறிகுறியும் இல்லாமல் போனது ரிதுவின் வரவால். அவளோடு ஐக்கியமாகி விட்டார். சுற்றி இருந்த நால்வரும் அவ்விருவரையும் ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தனர். எதார்த்தமாக, அவர்கள் மீது பார்வையைத் திருப்பிய ரிது வாயை மூடிக்கொள்ள,
“இவங்க கண்ணே பொல்லாத கண்ணும்மா… எப்படிப் பார்க்குறாங்க பாரு. நாளைக்கு முதல் வேலையா முனீஸ்வரன் கோவிலுக்குப் போய் சுத்திப் போடணும்.” என்றவரை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்தார்கள் அங்கிருந்தவர்கள்.
பேசித் தீர்த்த சரளா, உறங்க அனுப்பி வைத்தார் மருமகளை. இரு படுக்கை அறை, சின்ன நடுக்கூடம், பொதுவாகக் கழிப்பறை, இரண்டு பேர் நிற்கும் அளவிற்குச் சமையலறை. இதுதான் அந்த வீட்டின் அமைப்பு. தன்னவன் அறைக்குச் சென்றவள் பேந்த முழித்தாள்.
“என்ன?”
“பாத்ரூம் இல்லையா?”
“வெளிய கிச்சனுக்கு முன்னாடி இருக்கு.”
“ஓ…”
“பாத்ரூம் போகணுமா?”
“இல்ல. போற மாதிரி இருந்தா எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்கக் கேட்டேன்.”
“என்னை எழுப்பு, நான் கூட வரேன். இல்லன்னா பக்கத்து ரூம்ல அம்மாவும் தங்கச்சியும் இருப்பாங்க கூப்பிட்டுக்க.”
“ம்ம்…”
“என்ன முகம் ஒரு மாதிரி இருக்கு.”
“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா.”
“வீடு பிடிக்கலையோ?”
“சேச்சே…”
“உனக்குப் புடிக்கலன்னு உன் முகமே சொல்லுது. இதுக்குத்தான் அம்மாக்கு விஷ் பண்ண கையோட கிளம்பலாம்னு சொன்னேன். நீதான் ரெண்டு நாள் இருந்துட்டுப் போகலாம்னு வந்த.”
“விஷ் பண்ண உடனே போனா அவங்க சங்கடப்பட மாட்டாங்களா?”
“இப்ப நீ சங்கடப்படுறல்ல!”
“அப்படின்னு யாரு சொன்னது?”
“தனியா சொல்லணும்னு இல்ல ரிது. இந்த வீட்டுக்குள்ள வந்ததுல இருந்து உன் முகத்தை நான் கவனிச்சுட்டுத் தான் இருக்கேன். ஹால்ல உட்கார்ந்துட்டு இருக்கும்போது அவ்ளோ வேர்த்துக் கொட்டுது. தொடச்சா அம்மா கஷ்டப்படுவாங்கன்னு ரொம்ப அட்ஜஸ்ட் பண்ணி உட்கார்ந்துட்டு இருந்த. இந்த ரூம் கூட உனக்குப் புடிக்கல. உன் கண்ணு முதல்ல ஏசிய தான் தேடுச்சு.” என அவள் எண்ணத்தைச் சரியாகப் புட்டுப் புட்டு வைக்க,
“நீ தப்பா புரிஞ்சுகிட்டப்பா. இந்த வீடு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. சின்னதா இருந்தாலும் அழகா இருக்கு.” எனச் சமாளித்தாள்.
“உன் பேச்சு ஒன்னு சொன்னாலும், கண்ணு ஒன்னு சொல்லுது ரிது.” என்றதும் பெருமூச்சோடு மெத்தையில் அமர்ந்தவள்,
“ஃபர்ஸ்ட் டைம் இந்த மாதிரி இருக்கிறதால கொஞ்சம் அன்கம்ஃபர்டபிளா இருக்கு. ஒரு ரெண்டு நாள் போச்சுன்னா சரியாகிடும். எப்படியும் நான் இங்க இருந்து தான ஆகணும்.” என்றவளை மனம் நோகப் பார்த்துக் கொண்டிருந்தான் கருடேந்திரன்.
அதை உணர்ந்தவள் கைநீட்டி அழைத்துத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு, “அப்படி ஒன்னும் கஷ்டம் இல்ல. அங்கப் பெருசா இருக்கற ஒரு பொருள் இங்க சின்னதா இருக்கு. அவ்ளோதான் ரெண்டு வீட்டுக்கும் இருக்கற வித்தியாசம். அவ்ளோ பெரிய வீடா இருந்தாலும், அங்க எனக்குக் கிடைக்காத சந்தோஷம் இந்த வீட்ல கிடைக்கும்னு நம்பி வந்தேன். அந்த நம்பிக்கையை இங்க இருக்கற யாரும் பொய்யாக்கல. மூணு மணி நேரம் எப்படிப் போச்சுன்னு கூட எனக்குத் தெரியலப்பா. அவ்ளோ சந்தோஷமா இருந்தேன். அந்தச் சந்தோஷத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்ல. அதுவுமில்லாம, எங்க போனாலும் ஏசியத் தலை மேல தூக்கிட்டுப் போக முடியுமா? நம்ம சென்னை, வருஷத்துக்கு ஒரு தடவை கரண்ட் இல்லாம வாழச் சொல்லிக் கொடுத்திருக்கு.” தோள் மீது சாய்ந்து கொண்டாள்.
மனம் முழுவதும் சங்கடம் நிறைந்திருந்தாலும், அவள் சமாளிப்பில் சற்று மனம் தேறியவன், “இதுவரைக்கும் இந்த வீட்டை மாத்துறதுக்கான தேவை வந்ததில்ல. இனி உனக்காக எல்லாத்தையும் மாத்தணும். கொஞ்ச நாள் மட்டும் எனக்காக வெயிட் பண்ணு ரிது. உன் வீடு அளவுக்கு இல்லனாலும், ஓரளவுக்கு உன்ன வசதியா வச்சிருக்கேன்.” என்றவனோடு நெருக்கமாக அமர்ந்தாள்.
என்ன இருப்பினும், தாலி கட்டியவளோடு தன் வீட்டில் இருக்கும் சுகத்தை முழுதாக அனுபவித்தான் கருடன். கட்டியவளின் மடியில் தலை வைத்தவன், மனத்தில் இருக்கும் காதலை வார்த்தைகளாய் காட்டிக் கொண்டிருக்க, அறையின் புழுக்கம் அதைச் சரியாகக் கவனிக்க விடவில்லை.
காற்று வசதிக்குச் சிறு ஜன்னல் கூட இல்லாத அந்த அறை மூச்சு முட்ட வைத்தது. தன்னவனுக்கும், உடலுக்குமான போராட்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் அவளைக் கவனித்தவன் உறங்குவது போல் நடிக்க, அதைக் கவனித்தவள் வேர்த்துக் கொட்டிய முகத்தைத் துடைத்துவிட்டு வெளியே செல்லக் கதவைத் திறந்தாள். நடுக்கூடத்தில் சத்யராஜூம், மூர்த்தியும் உறங்கிக் கொண்டிருக்க, பலத்த பெருமூச்சோடு அறைக் கதவைச் சாற்றிக் கொண்டு தன்னவனோடு படுத்தவள் புழுக்கத்திற்கு நடுவில் உறங்கி விட்டாள்.