22. நேசம் நீயாகிறாய்!

5
(5)

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎

நேசம் 22

 

“டேய் துருவா” எனும் அழைப்போடு தனது வீட்டினுள் நுழைந்த தேனுவிற்கு அங்கு தம்பியோடு உரையாடிக் கொண்டிருந்தவனைக் கண்டதும் விழிகள் விரிந்தன.

“வெளியே எங்கேயும் போயிருப்பீங்கனு நெனச்சா இங்கே என்ன பண்ணுறீங்க?” என்று கேட்டவளுக்கு, “என் மாமியார் வீட்டுக்கு நான் வந்தேன். உன் கிட்ட பர்மிஷன் கேட்டுத் தான் வரனுமோ?” புருவம் உயர்த்தினான் அவளது கண்ணாளன்.

“அங்கே வரப் போனவரை நான் தான் உள்ளே இழுத்துட்டு வந்தேன். ஒரு சுவாரசியமான டாபிக் பேசிட்டு இருக்கோம்” கண் சிமிட்டினான் துருவன்.

“அப்படி என்ன டாபிக்? எனக்கும் சொன்னா நானும் ஒன்னு ரெண்டு விஷயம் எடுத்துத் தருவேன்ல” இருக்கையில் அமர்ந்து கொண்டு வெகு ஆவலாய்ப் பார்த்தாள் அவள்.

அவளைப் பார்த்த இருவரின் விழிகளும் நகைப்போடு மின்னின.

“தலைப்பு என்ன தெரியுமா? தேன் நிலாவின் தேனூறும் காதல்” சிரிப்போடு சிலாகித்தான் சினேகன்.

“என்னோட காதலா?” வாயில் கை வைத்தவளிடம், “எஸ் சிஸ்டர். அண்ணா இல்லாத டைம்ல நீங்க எப்படி இருந்தீங்கனு விளக்கம் கொடுத்துட்டு இருந்தேன்” என்று தலையசைத்தான் துருவன்.

“டேய் டேய்” அவனைக் கடுமையாக முறைத்துப் பார்த்தவள், “இல்ல தெரியாம தான் கேட்கிறேன். நீ என் கூட பிறந்தவனா அவன் கூட பிறந்தவனா?” எனக் கேட்க,

“இவளைப் பார்த்தீங்களாண்ணா? நீங்க இல்லாத நேரம் அவர் இவர்னு சொல்லிட்டு இப்போ மறுபடி மரியாதையை மூட்டை கட்டி வெச்சிட்டா” ராகவ்வின் சொன்னான் துரு.

“அது கூடப் பரவாயில்லை. அதுக்கு மேலயும் உங்கக்கா என்னை திட்டுவா. அதைக் கேட்டா ஓடுவ துருவா”

“சும்மா என்னை குற்றம் சொல்லாதீங்க. நான் என்னவோ எப்போவும் திட்டிட்டு இருக்கிற மாதிரி” அவனது தோளில் அடிக்க, “ஏய் தேனு” என்றவாறு வந்தார் சுசீலா.

“ராகவ் தம்பியை ஏன் அடிக்கிற? புருஷன் மேல கை வைக்கலாமா?”

“என் புருஷன் மேல தானே கை வைக்கிறேன். இதுல என்ன தப்பும்மா?” என்று கேட்டவளை அவர் முறைக்க, “இப்படித் தான் அத்தை. என்னை தினமும் அடிச்சுத் துவைச்சு காயப் போடுறா” பாவமாகப் பார்த்தவனின் முகத்தில் லிட்டர் கணக்கில் பால் வடிந்தது.

“கலர் கலரா பொய் சொல்லாதீங்க. நான் எப்போ அடிச்சேன்? இப்படி பொய் சொன்னா நெஜமா அடி வாங்குவீங்க” என சண்டைக்குச் செல்ல, “என்னவோ பண்ணு டி” என்றவாறு சென்று விட்டார் சுசீலா.

“அம்மா கிட்ட பச்சப் பிள்ளையா நடிக்காதீங்க. தாங்க முடியல” என்று முறைத்ததும் இருவரும் சிரித்தனர்.

“துரு! உன் கூட நான் பேசவே மாட்டேன். என்னை விட்டுட்டு இந்தாள் கூட சேர்ந்துக்கிட்டல்ல? இனிமே அக்கானு கூப்பிட்டு வருவல்ல அப்போ இருக்கு உனக்கு” என்று சொல்ல, “ஏய் அப்படில்லாம் சட்டுனு சொல்லிடக் கூடாது. அவர் கூட சேர்ந்தாலும் நான் உன் சைடு தான். யூ ஆர் மை பெஸ்ட் சிஸ்டர்” அவளது தோளில் கை போட்டுக் கொள்ள,

“டேய் துருவா! என்னை அம்போனு விட்டுட்டியே” அலறிய ராகவ்வின் தோளில் மறு கையைப் போட்டு, “நாங்க மூனு பேருமே ஒரு கட்சி‌. இனி எங்கள் வீட்டில் எல்லா நாளும் பொங்கல்” என்று அவன் பாட்டுப் பாட,

“அடேய் பொங்கல் இல்ல, கார்த்திகைனு வரும்” என திருத்தினாள் தேனு.

“அது எனக்குத் தெரியாதா? உன்னைப் பொங்க வைக்கனும்னு அப்படிச் சொன்னேன்” என்றவனுக்கு தலையில் கொட்டு வைத்தாள்.

“நீங்க ரெண்டு பேரும் எப்போவும் அடிச்சிட்டு தான் இருப்பீங்களா?” ராகவ் புன்னகையைச் சிந்த, “நாங்களும் அடிச்சுப்போம். தேவைப்பட்டா ரெண்டு பேருமா சேர்ந்து மத்தவங்களையும் அடிப்போம்” என்றாள் தேனு.

“எங்க ஸ்கூல்ல ஒரு பையன் என்னைத் தள்ளி விட்டுட்டான். எங்கக்கா போய் யார்டா அவன் என் தம்பி மேல கை வெச்சவன்? தைரியம் இருந்தா என் மேல கையை வைடானு கேட்டா. அந்தப் பையன் உடனே என் கிட்ட மன்னிப்பு கேட்டு அழுதுட்டான்” துருவன் ராகவ்வுக்கு கதை கூற,

“நான் கூட இவளை என்னவோனு நெனச்சேன். தைரியமான ஆளு தான்” என்று பாராட்டித் தள்ளினான் கணவன்.

“போதும்டா சும்மா இரேன்” தம்பியிடம் கெஞ்சியே ஓய்ந்து போனாள் அவள்.

இருவரும் கதையளந்து விட்டு தமது வீட்டிற்குச் சென்றனர். அவர்களை இப்படிப் பார்க்கும் போது மரகதத்திற்கு மகிழ்வாக இருந்தது.

“தேனு மா! நாளைக்கு ரேஷ்மா விருந்துக்கு வர சொல்லி இருக்கா” என அவர் அறிவிக்க, “ஆமா அத்தை. அங்கே போகலயேனு நெனச்சிட்டு இருந்தேன். நாளைக்கு போகலாம்” என்றாள் தேனு.

“நீங்க ரொம்ப மோசம். மாமியார் கொடுமை நடத்தி டெரரா இருப்பீங்கனு பார்த்தா இவ்ளோ ஸ்வீட்டா இருக்கீங்க. இவ தலை மேல ஏறி மிளகா அரைக்க ஆரம்பிச்சிருவா” என்று ராகவ் சொல்ல,

“எல்லா மாமியாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. டெரரா இருந்து என்னத்த சாதிச்சிட போறேன்? எங்களை நம்பி வந்த பொண்ண அவங்க வீட்டுல வாழ்ந்த மாதிரி இல்லேனாலும் நம்மளால முடிஞ்சளவு சந்தோஷமா பார்த்துக்கனும் டா” என்று கூறினார் மரகதம்.

“தட்ஸ் க்ரேட் மா! அப்படி மட்டும் மாமியார் கொடுமை பண்ணுனா நானே போலீஸ்ல கேஸ் போட்றுவேன்” என்று அவன் மிரட்டல் விடுக்க, “அடப்பாவி! பொண்டாட்டிக்காக என்னை உள்ளே தள்ளுவியா?” என அவர் வாயில் கை வைக்க,

“நோ நோ! தப்புக்கு எதிரா குரல் கொடுப்பேன். அவ்ளோ தான்” என்றான் அவன்.

“என் அத்தை ரொம்ப நல்லவங்க‌. அப்படி எதுவும் பண்ண மாட்டாங்க” என்று தேனு கூற, “ஆனா உன்னைத் தான் காலத்துக்கும் களி தின்ன வெச்சிருவேன், இனி ஒரு நாள் என் மருமகளை விட்டுட்டுப் போனா” அவன் யூ.எஸ் சென்றதைச் சுட்டிக் காட்டினார் மரகதம்.

“நான் இனிமே எங்கேயும் போறதா இல்லமா. அப்படியே போனாலும் உங்க அருமை மருமகளையும் சேர்த்து தான் கூட்டிட்டுப் போவேன்” என்றவனைப் புன்னகையோடு நோக்கினர், பெண்கள் இருவரும்.

சிறிது நேரத்தில் அவனுக்கு ஹாஸ்பிடலில் அழைப்பு வரவே சென்று விட்டான். தேனு துணியை எடுத்துத் தைக்கலானாள். ப்ரீத்திக்காக அழகான கவுன் ஒன்றை அழகு பார்த்துத் தைத்தாள்.

ராகவ்வுக்காக காத்திருந்தவளுக்கு அழைத்து, “நான் வர கொஞ்சம் லேட்டாகும் நிலா. நீ சாப்பிட்டு தூங்கு” என்று விட்டான்.

“சரி” மெதுவாக சொல்லி விட்டு வைத்தவளுக்கு மனம் சோர்ந்து போனது.

சாப்பாட்டை எடுத்தாலும் சாப்பிடத் தோன்றவில்லை. அரை மனதாக அதைக் கொறித்து விட்டு அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்தாள்.

ராகவ் வீட்டிற்கு வரும் போது இரவு பதினொன்று நாற்பதாகி விட்டது. சோர்வுடன் வந்தவன் அந்நேரத்தையும் பொருட்படுத்தாமல் குளிக்கவே அலுப்பு தீர்ந்தது போலிருந்தது.

குளியலறையை விட்டு வந்தவனது விழிகள் கட்டிலில் மனையாளைக் காணாமல் தேடின. பல்கோணிக்குச் சென்று பார்த்த போது அங்கு அமர்ந்த வாக்கில் உறங்கிக் கொண்டிருந்தாள்.

“நிலா! ஹேய் நிலா” அவளது கன்னம் தட்ட, “நான் கோவம் உன் கூட. ரஷ்யாக்காரன் ரொம்ப மோசம்” தூக்க கலக்கத்தில் குழறினாள் காரிகை.

அவளருகே சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு, “ஏன் மோசமாம்?” என்று கேட்க, “என்னை விட்டு அடிக்கடி போயிடறான். நானும் எவ்ளோ பாவம் தெரியுமா? அவன் கிட்டவே இருக்கனும்னு ஆசையா இருக்கு. ஆனால் ஹாஸ்பிடலுக்கு ஓடிடறான். லேட்டாகி தான் வர்றான்” என்றவாறு அவன் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள்.

“அது என் வேலை டா. ஹாஸ்பிடல்ல சும்மாவா இருந்துட்டு வர்றேன்? மருந்து போடனும், ஆப்பரேஷன் பண்ணனும், அங்கே இருக்கிற குட்டி குட்டி பசங்க கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணனும்” அவள் தலையை வருடிக் கொடுத்தவாறு கூற, சட்டென எழுந்து கொண்டாள் தேனு.

உறக்கம் கலைந்து எழுந்தவளுக்கு அவன் எப்போது வந்தான் என்று தோன்ற, அவள் நிலை உணர்ந்தவனோ “நான் இப்போ தான் வந்தேன். நீ இப்படி சாஞ்சுக்கோ” என்றிட, அவன் மடியில் தலையை வைத்துக் கொண்டாள்.

“உனக்கு ஒன்னு தெரியுமா டா? இன்னிக்கு ஒரு பிரசவம் நடந்துச்சு. ஆனால் அந்த குழந்தை பிறக்கும் போதே இறந்து பிறந்துச்சு. அதை தெரிஞ்சு அந்தம்மா கதறின கதறல் இன்னுமே என் காதுக்குள்ள ஒலிச்சுட்டே இருக்கு” அவன் கண்களும் லேசாகக் கலங்கின.

அதைக் கேட்ட தேனுவிற்கு மனம் கலங்கியது. அவளும் ஒரு பெண் அல்லவா? பத்து மாதம் எத்தனை கனவுகள் கண்டு, எத்தனை வலிகளைத் தாங்கி அந்தக் குழந்தையைச் சுமந்திருப்பாள்? திடீரென்று இறந்து போனால் எப்படித் தாங்க முடியும்?

“ஆனால் ஒரு அதிசயம் நடந்துருச்சு. அதே டைம் ஒரு விதவைப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்தம்மா செத்துட்டாங்க. அவக்கு யாருமே இல்ல. அவ குழந்தைக்கு குழந்தையை இழந்த அம்மா பால் கொடுத்தாங்களாம். நான் உள்ளே போகும் போது அந்த பிள்ளையை நெஞ்சோட சேர்த்து அணைச்சுட்டு கண்ணீரோட சிரிச்சாங்க” ராகவ் உணர்வுபூர்வமாக கூறியதைக் கேட்டவளோ,

“அந்தக் குழந்தையை அவங்க தத்தெடுக்கப் போறாங்களா?” கண்ணீர்த் துளிர்க்க தேனு வினவிய போது அவனும் தலையசைத்தான்.

“நாம ஒன்ன இழந்தா அது ஏதோ காரணமாக இருக்கும். பார்த்தீங்களா கடவுளே அந்தம்மாவோட காயத்துக்கு மருந்தா அந்த குழந்தையை கொடுத்துட்டாங்க” என்று அவள் சொல்ல,

“எஸ்! ஆனால் அது ஒன்னும் அவ்ளோ ஈசி இல்ல. தத்தெடுத்தாலும் அந்த குழந்தையை இவங்க வீட்டுல நல்லா பார்த்துக்கனும். எல்லாரும் ஏத்துக்கனும். அதற்காக நிறைய போராடனும். அந்தப் பொண்ணுக்கு அவங்க ஹஸ்பண்ட் துணையா இருந்தால் போதும், போராட்டமா இருந்தாலும் சந்தோஷமா வாழ்வாங்க” என்றுரைத்தான் ராகவ்.

அவன் இப்படித் தான். தன் ஹாஸ்பிடலில் என்ன நடந்தாலும் அதைத் தேனுவிடம் பகிர்ந்து கொள்வான். அது எப்படிப்பட்ட விடயமாக இருந்தாலும் சரியே.

கணவன் மனைவி உறவுக்கிடையில் ஒளிவு மறைவுகள் இருக்கக் கூடாது. அன்று என்ன நடந்தது என்பதை அன்றைய நாள் மனம் விட்டுத் தன் இணையிடம் பகிர்ந்து கொள்வது அவ்வுறவை வலுப்படுத்தும்.

“அன்ட் இன்னொரு விஷயம். நான் உன் கூட இருக்கனும்னு நீ விரும்புற. ஆனால் என் வேலை அதற்கு சில நேரம் தடையா இருக்குது. என்னால முடிஞ்சளவு உன் கூட இருப்பேன். உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுவேன். ஆனால் அப்படி பண்ணலனா அது என்னால முடியாத விஷயம்னு புரிஞ்சுக்கிட்டு இப்படி கஷ்டப்பட்டு இங்கே வந்து தூங்காம சிட்டுவேஷனை ஏத்துக்கனும்” என்றுரைத்தான் அவன்.

“எனக்குப் புரியுதுங்க. இன்னிக்கு நீங்க இல்லனு தூங்கவே முடியல. இனிமே இப்படி பண்ண மாட்டேன்” என்று உறுதியளிக்க, “தட்ஸ் மை கேர்ள்” அவளது நெற்றி முட்டினான்.

அன்றைய நாள் அவ்வாறு கழிய, மற்றைய நாள் விடியலில் ராகவ்வுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

 

தொடரும்…….!!

 

ஷம்லா பஸ்லி

2024-11-24

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!