சிறிய பூச்சி ஒன்று சிலந்தி வலையில் சிக்கிக் கொள்ளுமே அந்த நிலையைப் போலத்தான் இருந்தது நம் நாயகனுக்கு.
அடுத்து என்ன செய்வது எப்படி இந்தப் பிரச்சினையை நகர்த்திச் செல்வது என்று அவனுக்குப் புரியவில்லை.
வேலையில் பிரச்சனையாக இருந்தால் அதற்கான தீர்வை நொடியில் கண்டு உடனடியாக தீர்த்துவிடும் வல்லமை அவனுக்கு உண்டு.
ஆனால் பிரச்சனை முழுவதும் அவனுடைய வாழ்க்கையில் அல்லவா வரிசையாக வருகின்றது.
அதனைத் தீர்க்கும் வல்லமையை கடவுள் தனக்கு கொடுக்கவில்லையோ என ஏங்கிப் போனான் அவன்.
சாஹித்யாவை எப்படிக் கையாள்வது என்றே அவனுக்குப் புரியவில்லை.
பள்ளிக் காலத்தில் இருந்தே அவள் தன்னைக் காதலித்திருக்கிறாள் என்பது அவனுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இன்று வரை என்னை மறக்க முடியவில்லை எனக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கும் அளவிற்கு காதல் என்றால் அப்போதே என்னிடம் நேரடியாகவே இந்தக் காதலைக் கூறியிருக்கலாமே.?
இல்லையென்றால் அவளுடைய அக்காவிடமாவது இந்த விடயத்தைப் பற்றிக் கூறியிருக்கலாமே..?
வாழ்க்கையை விட்டுக் கொடுத்துவிட்டு காலம் சென்ற காலத்தில் வந்து காதலிக்கிறேன் என்றால் என்ன செய்வது..?
அவளுடைய காதலை ஏற்றுக் கொள்ளும் நிலையிலா அவன் இருக்கின்றான்..?
முதலில் அவளைக் காதலியாக வைத்து அவனால் பார்க்க முடியுமா..?
மனம் தவித்தது.
அவள் அறைக்குள் இருந்து அழுது கொண்டிருந்தாள் என்றால் அவனோ அறைக்கு வெளியே தலையில் கை வைத்த படி சோபாவில் அமர்ந்திருந்தான்.
தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையோ எழுந்து அழத் தொடங்கிவிட தத்துமது சிந்தனையில் மூழ்கி இருந்த இருவரும் பதறி எழுந்து ஒரே இடத்திற்கு விரைந்து வந்தனர்.
முதலில் வந்த யாஷ்வினோ குழந்தையைத் தூக்கிக் கொண்டான்
குழந்தை அழும் சத்தம் கேட்டு நடக்க முடியாமல் ஒற்றைக் காலை சிரமப்பட்டு எடுத்து வைத்தவாறு குழந்தையைத் தேடி வந்தவளை விழிகள் சுருங்கப் பார்த்தான் அவன்.
நனைந்த ஈர ஆடைகளை மாற்றி விட்டிருந்தாள் அவள்.
அவளுடைய ஒற்றைக் கரமோ, ஒரு பக்க இடுப்பை வருடிவிட்டவாறு இருக்க அவளுடைய புருவங்களோ வலியில் சுருங்கிப் போயிருந்தன.
அதே கணம் அவளுடைய ஒற்றைக் கன்னம் சிவந்து வீங்கி இருப்பதைக் கண்டதும் அப்போதுதான் அவளை அடித்ததே அவனுக்கு நினைவில் வந்தது.
குற்ற உணர்ச்சி பேரலையாய் அவனைத் தாக்க தன்னையே நொந்து கொண்டான் அவன்.
எவ்வளவு கோபம் வந்தாலும் நிதானத்தை கடைப்பிடிப்பவன் எதற்கு சாஹித்யாவிடம் மட்டும் அவசரப்பட்டு கைநீட்டினான் என்பது அவனுக்கு புரியாத புதிர்தான்.
அவள்தான் சிறு பெண் புரியாமல் நடந்து கொள்கின்றாள் என்றால் நானும் விடலைப் பையன் போல கோபப்பட்டு அடித்து விட்டேனே.
ஏன் இப்படி வலியைத் தாங்கி நடப்பது போல நடக்கின்றாள்..?
உடலில் வேறு எங்கேயும் அவளுக்கு காயம் ஏற்பட்டிருக்கக் கூடுமோ என சிந்தித்தவன் குழந்தையைத் தன் தோளில் போட்டு சற்று நேரம் தட்டிக் கொடுத்து உறங்க வைத்துவிட்டு மீண்டும் தொட்டிலில் போட்டு ஆட்டத் தொடங்கினான்.
அவளோ மீண்டும் அறைக்குள் சென்று விட்டாள்.
தியா ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றதை உறுதி செய்த பின்பு கதவைத் தட்டி விட்டு அறைக்குள் நுழைந்தவன் கண்ணீரோடு படுத்திருந்த சாஹித்யாவை நெருங்கிச் சென்றான்.
“சாஹித்யா.. சா.. சாரி… என்னதான் இருந்தாலும் நான் உன்னை கைநீட்டி அடிச்சிருக்கக் கூடாது.. அது என்னோட தப்பு தான்.. உன்னை ஹர்ட் பண்ணதுக்கு ரொம்ப சாரி..” என அவன் பணிவான குரலில் மன்னிப்பைக் கூற, அவனைப் பற்றிதான் அவளுக்கு நன்றாகத் தெரியுமே.
ஈகோவே இல்லாத மனிதன் இவன்.
தன் மீது தவறு என்றால் மன்னிப்பு கேட்கவும் தயங்காதவன்.
தவறைத் தட்டிக் கேட்பதற்கும் அஞ்சாதவன்.
ஆதலால் தானே அன்றே அவனை அவளுக்கு மிகவும் பிடித்தது.
“சரி நீ இப்படியே படுத்துக்கோ.. நான் கொஞ்சம் சுடுதண்ணி எடுத்துட்டு வரேன்.. ஒத்தடம் கொடுத்தா சரியாயிடும்..” என்றவன் வெளியே சென்று அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஒரு பாத்திரத்தில் சுடுநீரையும் துணி ஒன்றையும் எடுத்து வர இவளுக்கோ தேகம் படபடத்து விட்டது.
இவரிடம் எப்படி இடையை காண்பிப்பது..?
அந்த நினைவே இவளுக்கு பெரும் தடுமாற்றத்தை உண்டு பண்ண அவன் வந்ததும் “நா.. நானே ஒத்தடம் கொடுக்கிறேன்..” எனக் கூறி அந்தத் துணியை தன்னிடம் தருமாறு தன் கையை நீட்டினாள் அவள்.
“உன்னால எப்படி முடியும் பாப்பா..? இந்த கொதிக்கிற தண்ணில துணிய உள்ள விட்டு பிழிஞ்சு எடுத்து சுடச் சுட வீங்கின இடத்துல வச்சாதான் வீக்கம் குறையும்.. இந்த சூட்டை நீ தாங்குவியா..?” என அவன் கேட்க அவளுக்கு விழிகள் அச்சத்தில் விரிந்தன.
“என்னது சுடுதண்ணிக்குள்ள கைய விட்டு துணியை பிழிஞ்சு எடுக்கணுமா..?”
“ம்ம்.. கால காமி.. நானே ஒத்தடம் கொடுத்துடுறேன்..” என்றவன் அவளுக்கு அருகே அமர்ந்து அவளுடைய கால்களைப் பற்றித் தன் மடி மீது வைத்து விட,
இவளுக்கோ அவன் தொட்ட பாதங்கள் கூசத் தொடங்கின.
“வே.. வேணாம்..” பலவீனமாக முணுமுணுத்தாள் அவள்.
அவள் சொன்னது அவளுக்கே கேட்காத போது அவனுக்கு எப்படி கேட்டிருக்கக் கூடும்…?
அவனோ சொன்னது போலவே அந்த சுடுநீருக்குள் துணியை அமிழ்த்தி பின் அந்தத் துணியில் இருந்த தண்ணீரை சற்றே பிழிந்து விட்டு சுடச் சுட வீங்கி இருந்த அவளுடைய முழங்கால்களில் அவன் அந்தத் துணியை ஒத்தி ஒத்தி எடுக்க அந்த சூட்டையே தாங்க முடியாது தன் விழிகளை இறுக மூடிக் கொண்டாள் அவள்.
“ஸ்ஸ்.. ஹீட்டா இருக்குங்க..”
“கொஞ்சம் பொறுத்துக்கோ பாப்பா… சுடச் சுட வச்சாதான் நல்லது.. நாளைக்கும் வீக்கம் குறையலன்னா ஹாஸ்பிடல் போயிடலாம்..” என்றவன் சற்று நேரம் முழங்கால்களுக்கு ஒத்தடத்தை கொடுத்துவிட்டு மீண்டும் அந்த பாத்திரத்தை கையில் ஏந்தியவன் வெளியே கொண்டு சென்று அந்த நீரை ஊற்றிவிட்டு மறுபடியும் வேறு நீரை கொதிக்க வைத்து சுடச்சுட எடுத்து வந்து அவளின் அருகே அமர அவளுக்கோ உடல் வியர்த்துப் போனது.
“பெட்ல படுத்துக்கோ..” என்றவன் துணியை சுடுநீருக்குள் அமிழ்த்த நடுங்கிய கரங்களால் தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டை வயிற்றுக்கு மேலே உயர்த்தியவள் அடிபட்ட இடத்தை கூச்சத்தோடு அவனுக்குக் காட்ட,
இனி அவனுக்கு ஒன்று என்றாலும் அவள்தான் பார்க்க வேண்டும். அவளுக்கு ஒன்று என்றாலும் அவன்தானே பார்க்க வேண்டும்.
“நோ…” அக்கணமே மறுத்து விட்டான் அவன்.
“என்ன ஆச்சு..? இவ்வளவு நேரமும் நீங்க தானே கொடுத்தீங்க.. இப்போ ஏன் முடியாதுன்னு சொல்றீங்க..?”
“ஏன்னா இவ்வளவு நேரமும் நீ என் கண்ணுக்கு என் மனைவியோட தங்கச்சியா உறவுக் காரியா சின்ன பொண்ணாதான் தெரிஞ்ச.. ஆனா நீ அம்முன்னு கூப்பிடும் போது என்னைக் காதலிக்கிற பொண்ணாதான் தெரியுற.. உன்னோட மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்கும்போது என்னால எப்படி இதெல்லாம் பண்ண முடியும்..? தப்பாயிடும் சாஹித்யா..” என்றான் அவன்.
“என்ன சொன்னீங்க எனக்கு புரியல.. இன்னும் என்ன பாத்தா உங்க மனைவியோட தங்கச்சி மாதிரிதான் தெரியுதா..? நான் உங்களோட மனைவி.. அத மறந்துடாதீங்க.. நான் ஒன்னும் உங்களுக்கு உறவுக்காரியோ சின்ன பொண்ணோ கிடையாது.. நீங்க தொட்டுத் தாலி கட்டின பொண்டாட்டி..” என்றவளுக்கு கண்ணீர் வந்துவிட்டது.
“என்னால அப்படி நினைக்க முடியல சாஹித்யா..”
“உண்மைய ஏத்துக்க முடியலையா அம்மு..?” என அவள் கேட்டதும்
“அம்முவா..? வாங்கின அடி உனக்குப் பத்தலையா..?” என அதட்டலாகக் கேட்டான் அவன்.
மிரண்டு விட்டாள் அவள்.
கலங்கிய கண்களில் நிறைந்திருந்த கண்ணீரோ அவளுடைய கன்னத்தில் வழிந்தே விட, ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளி விட்டவன்,
“இனி என்னை அப்படிக் கூப்பிடாத..” விரல் நீட்டி எச்சரித்தான்.
அதிர்ந்து விட்டாள் அவள்.
“ப.. பயமா இருக்கு..” என அவள் தழுதழுத்த குரலில் கூற சட்டென அவனுக்கு மனம் இளகிப் போயிற்று.
“சாரி..” என்றான் மீண்டும்.
“ம்ம்…” அவளுக்கோ அழுகை அதிகரிக்கத்தான் செய்தது.
“ஹாஸ்பிடல் போகலாம் கிளம்பு..” என்றான் அவன்.
“சுடுதண்ணில துணிய முக்கி பிழிஞ்சு கொடுங்க.. நானே ஒத்தடம் கொடுத்துக்கிறேன்..” என அவள் கூற, அவனுக்கும் அதுவே சரி என்று பட்டது.
வேகமாக துணியை சுடுநீரினுள் அமிழ்த்தி அதைப் பிழிஞ்சு அவளுடைய கரத்தில் கொடுக்க, அவளோ அதை வாங்கி தன்னுடைய இடுப்பில் அடிபட்ட இடத்திற்கு ஒத்தடம் கொடுத்து முடித்தாள்.
Super sis 💞