23. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

4.6
(16)

வரம் – 23

என்னதான் போலியாக திருமணம் செய்து கொள் என அரவிந்தன் கூறியிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது தவிப்புடனேயே நேரத்தை செலவழிக்கத் தொடங்கி இருந்தாள் மோஹஸ்திரா.

அமெரிக்காவில் வளர்ந்தாலும் வாழையடி வாழையாக வரும் பண்பாட்டு கலாச்சாரங்கள் அவளுடைய இரத்தத்தில் ஊறி இருக்க விளையாட்டுக்கு திருமணம் என்பதை அவளால் நினைத்துப் பார்க்கவே முடியாது போனது.

தந்தையின் உடல் நிலையை கவனிப்பதா..?

இல்லை உடைந்து போன தன்னுடைய மனநிலையை சரி செய்வதா..?

அங்கே இருக்கும் அரவிந்தனுக்காக ஏக்கம் கொள்வதா..?

இல்லை தனக்காக இங்கே வந்து இந்த திருமணத்திற்கும் சம்மதம் கூறியிருந்த ஷர்வாவைப் பற்றி எண்ணுவதா..?
எதுவும் புரியாது குழம்பிப் போனாள் அவள்.

தனிமையில் இருந்தால் புத்தி சற்று தெளிவாக சிந்திக்க கூடும் என எண்ணியவள் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

அவள் சென்ற ஒரு மணி நேரத்தில் அவளுடைய கதவு படபடவென வேகமாக தட்டப்பட என்னவோ ஏதோ என பதறி அடித்துக் கதவைத் திறந்தவள் வெளியே நின்ற ஷர்வாவைப் பார்த்து,

“என்ன ஆச்சு..?” எனப் பதற்றத்துடன் கேட்டாள்.

“அப்பாவை பாக்கணும் வா..” எனக் கூறியவன் அவளுடைய கரத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாக கீழே செல்ல அவளுக்கோ உடல் நடுங்கிப் போயிற்று.

“அ..ப்பாவுக்கு என்ன ஆச்சு..? அப்பா நல்லா தானே இருக்காரு..” என கேட்டவாறே அவனோடு இணைந்து வேகமாக கீழே சென்றவள் அங்கே விழிகள் பாதியாக மூடிய நிலையில் படுக்கையில் பேச்சற்றுக் கிடந்த தந்தையைக் கண்டு விக்கித்துப் போனாள்.

முகத்தில் ஏதோ மாஸ்க் மாட்டப்பட்டிருந்தது.

கைகளில் ஏதோ மருந்து வேறு ஏறிக் கொண்டிருப்பதைக் கண்டு பதறியவள் வைத்தியரைப் பார்க்க அவரோ,

“இன்னும் கொஞ்ச நேரம் தான்..” எனக் கூறி தலையை மறுப்பாக அசைக்க அவளுக்கோ தலை சுற்றுவது போல் இருந்தது.

“ஐய்யோ அப்பா..” என கதறிக்கொண்டு அவருடைய கரங்களைப் பற்றி அழத்தொடங்க, தன்னுடைய நடுங்கிய கரத்தை மெல்ல உயர்த்தி தன் மகளின் தலையில் மெல்ல வைத்தவர் ஷர்வாவை விழிகளால் அழைத்து தன் கரத்தில் வைத்திருந்த தாலியை அவனிடம் கொடுக்க அவரை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தான் அவன்.

அந்தப் பார்வையில் ஓராயிரம் அர்த்தம் பொதிந்து இருந்தது.

அவனுடைய பார்வையை அவரும் இமைக்காது பார்க்க அடுத்த நொடி அழுது கொண்டிருந்தவளின் கழுத்தில் தாலியை கட்டி அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டவன் விக்கித்து நிமிர்ந்தவளை தன் விழிகளாலேயே அமைதிப் படுத்தினான்.

அவளுக்கோ தன் கழுத்தில் தாலி ஏறியதை விட எங்கே தந்தை தன்னை விட்டு விட்டுச் சென்று விடுவாரோ என்ற பயமே அதீதமாய் ஏற்பட்டிருந்தது.

அவளோ ஹாஸ்பிட்டல் போகலாம் எனக் கதறியழ,

“ஹாஸ்பிடல்ல ஆல்ரெடி டைம் கொடுத்துதான் இங்க வீட்டுக்கு கொண்டு வந்தோம்..” என வேதனையுடன் கூறினார் ராம்.

அவளோ அதிர்ந்து போய்விட்டாள்.
எவ்வளவு பெரிய விடயத்தை தன்னிடமிருந்து மறைத்திருக்கிறார்கள்.

சாதாரண மைல்டு அட்டாக் எனக் கூறிவிட்டு இப்போது காலக்கெடு கொடுத்து தந்தையை வீட்டுக்கு அனுப்பி வைத்திருப்பதைக் கூட இறுதி நேரத்தில் தான் சொல்கிறார்களே என எண்ணி துடித்துப் போனவள் தன் தந்தையின் கரத்தைப் பற்றியவாறு அவருடைய கரத்தில் தன்னுடைய முகத்தைப் புதைத்து தேம்பியழ “பா… பாப்பா…” என்றவாறு திணறினார் அவர்.

சற்று நேரத்தில் அவருடைய உயிரோ உடலை விட்டுப் பிரிந்திருந்தது.

“ப்பாஆஆ…?”

“ப்பாஆஆஆஆ….? ஐயோ…” என விம்மி வெடித்துக் கதறியவளை இழுத்து தன்னருகே நிறுத்திக் கொண்டான் ஷர்வா.

“அப்பா ப்ளீஸ் பா என்னப் பாருங்கப்பா… இ.. இப்படி பண்ணாதீங்கப்பா ப்ளீஸ்… நீங்களும் அம்மாவை மாதிரி என்னைத் தனியா விட்டுட்டு போயிடாதீங்க… உங்கள விட்டா வேற யாருப்பா எனக்காக இருக்காங்க..?

ப்ளீஸ் பா… கண்ணைத் திறந்து பாருங்கப்பா… உங்களுக்கு எதுவும் ஆ…காது.. வேற ஹாஸ்பிடல் கொண்டு போகலாம்… வேற டாக்டரை வர வைக்கலாம்…

ப்பாஆஆ… ஒரே ஒரு தடவை எனக்காக கண்ணைத் திறந்து பாருங்களேன்… ப்ளீஸ்…. இ… இப்படி பண்ணாதீங்கப்பா… ரொம்ப வலிக்குது பா… நெஞ்செல்லாம் வலிக்குதுப்பா… தயவு செஞ்சு கண்ணைத் திறந்து பாருங்கப்பா..” என அவள் கதற கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிக் கொண்டிருந்தான் ஷர்வாதிகரன்.

அவளோ அழுது அழுது மயங்கி விட ஷர்வாவின் விழிகளில் இருந்தும் ஒரு துளிக் கண்ணீர் அவளுக்காய் வடிந்தது.

மயங்கி தந்தையின் மீது சரிந்து கிடந்தவளை தன்னுடைய கரத்தில் ஏந்திக் கொண்டவன் பக்கத்து அறையில் அவளைப் படுக்க வைத்து விட்டு சில நொடிகள் அவளையே பார்த்தவாறு நின்றான்.

அவளுடைய அழுது சிவந்து வீங்கிப் போயிருந்த முகத்தைப் பார்க்கவே அவனுக்கு மனம் வலித்தது.

மெல்ல அவளை நெருங்கி அவளுடைய முகத்தை தன் கரத்தால் துடைத்து விட்டவன்,

“இனி நான் பண்ணப் போற எதுவுமே உனக்குப் பிடிக்காது மோஹி… ஆனா எல்லாத்தையும் நீ தாங்கித்தான் ஆகணும்..” என அவளுடைய காதில் கூறியவன் சற்று நேரத்தில் அந்த அறையை விட்டு வெளியே வந்து அடுத்தடுத்த வேலைகளில் தீவிரமாக இறங்கினான்.

சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தவளோ அதன் பின்னர் கதறி அழவில்லை.

வீட்டின் ஒரு மூலையில் ஓரமாக முடங்கிக் கொண்டாள்.

அன்றைய நாள் எப்படிக் கழிந்தது எனக் கேட்டால் சத்தியமாக அவளுக்கு அதைப்பற்றி எள்ளளவும் தெரியாது.
பொறுப்பாக அனைத்தையும் ஷர்வா ராமின் துணையோடு நடத்தி முடித்திருந்தான்.

*************
கிட்டத்தட்ட 5 மணி நேரத்தின் பின்பு மீண்டும் திவாகரின் முன்பு வந்து நின்றான் அரவிந்தன்.

இதற்கு மேல் அடித்தால் அவன் இறந்து போய் விடுவான் என்பதால்,

“இப்போதாவது உண்மைய சொல்லுடா..” என திவாகரிடம் கூற திவாகருக்கோ பேசவே முடியவில்லை.
சிம் கார்டைக் காட்டி அரவிந்தன் இதற்கு முதல் கேட்டபோது வாயைத் திறந்து அவன் பதில் கூற முடியாத அளவுக்கு அவனை அடித்து காயப்படுத்தி இருந்தான் அரவிந்தன்.

மீண்டும் வந்து அரவிந்தன் கேள்வி கேட்க அவனுக்கோ சர்வ நாடியும் அடங்கி ஒடுங்கியது.

அச்சத்தில் கிடுகிடுவென நடுங்கிய பற்களில் தன்னுடைய கீழுதட்டை பதித்து நடுக்கத்தை நிறுத்தியவன்,

“இ…ந்த சிம் கார்டு நான் யூஸ் பண்ணவே இல்ல… என்னோட பிரண்டுக்கு ஒரு தடவை வாங்கிக் கொடுத்தேன் அந்த சிம் தான் இது..” என அவன் மெது மெதுவாக வாயைத் திறந்து பதில் கூற அரவிந்தனின் புருவங்களோ சுருங்கின.

“அந்த ஃப்ரண்டை பத்திப் சொல்லு..” என அழுத்தமாக அடுத்த கேள்வியை எழுப்பினான் அவன்.

“அவன் பேரு வீரா.. அவனோட போன் தொலைஞ்சு போச்சு… அதனால நான் யூஸ் பண்ண பழைய ஃபோனை அவன்கிட்ட கொடுத்துட்டேன்… அதுல தான் இந்த சிம்கார்டு இருந்துச்சு.. இதத் தவிர எனக்கு வேற எதுவுமே தெரியாது சார்… தயவு செஞ்சு என்னை விட்ருங்க..” எனக் கூறியவனின் விழிகளோ வேதனையிலும் சோர்விலும் மூடிக்கொள்ள,

“அவனைப் போய் மீட் பண்ணிட்டு வந்து உன்னை வெச்சிக்கிறேன்… உன் மேல எந்தத் தப்பும் இல்லைன்னா நீ நாளைக்கு காலையிலேயே வீட்டுக்குப் போகலாம்..” என்பது போல கூறிவிட்டு அவன் அங்கிருந்து சென்றுவிட திவாகருக்கோ வாழ்க்கையே வெறுத்துப் போனது.

விடியற்காலை என்றும் பாராமல் சிறிது நேரம் கூட ஓய்வு எடுக்காது திவாகர் கூறியதை வைத்து வீராவைத் தேடிச் சென்று கொண்டிருந்தான் அரவிந்தன்.

ஒரு நாளை தாமதப்படுத்தினால் கூட எங்கே அந்தத் திருடன் தப்பித்துச் சென்று விடுவானோ என்ற அச்சம் அவனுக்குள் வேரூன்றி இருக்க இனியும் ஒரு நொடி கூட காலத்தை தாமதப்படுத்தக் கூடாது என எண்ணியவன் அப்போதே தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.

திவாகர் கூறியதை வைத்து வீராவின் வீட்டிற்கு முன்பு தன்னுடைய காரை நிறுத்தியவன் அந்தச் சிறிய ஓட்டு வீட்டை பார்த்து புருவம் சுழித்தான்.
சாதாரண பணபலமும் படை பலமும் இல்லாத ஒருவனால் அந்த விலை உயர்ந்த வைரத்தை அவ்வளவு பாதுகாப்புக்கு மத்தியில் திருடி இருக்க முடியுமா என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது.

எதுவாக இருந்தாலும் விசாரித்துப் பார்த்து அறிந்து கொள்ளலாம் என்ற முடிவோடு அந்த ஓட்டு வீட்டு கதவைத் தட்ட சற்று நேரத்தில் அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடிந்தவாறு கதவைத் திறந்தாள் வீராவின் மனைவி.

“ஏய் இந்த நேரத்துல யாருடி வந்து இருக்கா..? நீ எதுக்கு கதவைத் திறக்கிற..?” எனக் கேட்ட வாறே வீராவோ எழுந்து வந்தவன் வெளியே நின்ற அரவிந்தனைக் கண்டதும் அதிர்ந்து போனான்.

“கொஞ்சம் உன் கூட பேசணுமே பேசலாமா..?” எனச் சிரித்தபடியே அந்த சிறிய வீட்டிற்குள் அரவிந்தன் நுழைய பதறிப்போய் வீராவின் பின்பு மறைந்து கொண்டாள் அவனுடைய மனைவி.

“சார் எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம் இப்போ வெளியே போங்க..” என்றான் அவன்.

அடுத்த கணம் தன்னுடைய பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவனுடைய நெற்றியில் பதித்தான் அரவிந்தன்.

“அந்த டைமண்ட் எங்கன்னு சொல்லு..?”

“டைமண்டா எந்த டைமண்ட்..? எனக்குத் தெரியாது..” என அழுத்தமாகக் கூறினான் வீரா.

வீராவின் மனைவியோ வாயில் கரத்தை பதித்து பதறிப் போய் விலகி நிற்க,

“உனக்கு ரெண்டே ரெண்டு ஆப்ஷன் தான் தருவேன்… ஒன்னு நீயே அந்த டைமண்ட்ட கொண்டு வந்து என்கிட்ட கொடுக்கணும்… இல்லன்னா நீ செத்துப் போகணும்… இந்த ரெண்டுல எத வேணும்னாலும் நீ சூஸ் பண்ணிக்கலாம்..” என்றவாறு அந்த வீட்டில் இருந்த சிறிய பிரம்பு நாற்காலியில் சாய்ந்து அரவிந்தன் அமர்ந்து கொள்ள,

“என்னையா பண்ணி வச்சிருக்க..?” என அவனுடைய சட்டையைப் பற்றி உலுக்கினாள் வீராவின் மனைவி.

💜💜💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!