முள் – 23
பரீட்சை முடிந்ததால் அவளுக்கு கல்லூரியில் இருந்து விடுப்பு கிடைத்திருந்தது.
எப்போதும் கல்லூரி லீவு விட்டாலே மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பவள் இன்றோ தான் இருந்த மனநிலையில் கல்லூரி லீவு விடாமலேயே இருந்திருக்கலாம் என எண்ணத் தொடங்கி விட்டாள்.
உடலில் அடிபட்டதை விட அவளுடைய மனம்தான் மிகவும் காயப்பட்டிருந்தது.
அதன் பின்னர் யாஷ்வினுடன் அவள் பேசவே இல்லை.
அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.
குழந்தையை மட்டும் அவ்வப்போது வந்து கொஞ்சி விட்டுச் செல்வாள்.
தியாவை பார்க்காமல் பேசாமல் அவளால் இருந்துவிட முடியாது அல்லவா..?
அன்று காலையில் எழுந்தது தொடக்கம் மதியம் வரை அவள் பாராமுகமாகவே இருக்க, அவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கோ பாவமாக இருந்தது.
நேற்றைய தினம் நடந்ததை அவனால் நம்பத்தான் முடியவில்லை.
அவனுக்கு நீச்சல் நன்றாகத் தெரியும்.
அதுவும் நீருக்குள் எவ்வளவு நேரம் என்றாலும் மூச்சடக்கித் தாக்குப் பிடிக்கவும் தெரியும்.
அனைத்தும் அவனுக்கு கைவந்த கலையாக இருந்ததால் மட்டும்தான் சட்டென அந்த கிணற்றுக்குள் சிந்திக்காமல் குதித்திருந்தான் அவன்.
ஆனால் இது எதுவுமே தெரியாத ஒரு பெண் தன்னுடைய உயிரைக் கூட துச்சமாக மதித்து விட்டு நொடியும் தாமதிக்காமல் கிணற்றுக்குள் குதித்ததுதான் அவனைப் பெரும் வியப்பில் தள்ளியது.
நடந்தது கனவோ என்று கூட எண்ணத் தோன்றியது.
இந்த காலத்தில் இப்படி எல்லாம் யார் தான் செய்வார்கள்..?
அப்படி என்னிடம் என்னதான் இருக்கின்றது..?
என் மீது எதற்கு இத்தனை காதல்..?
ஏன் இந்தக் காதலை அவள் முன்னரே சொல்லவில்லை..?
சங்கடமாக இருந்தது அவனுக்கு.
அவனால் தானே அவளுக்கு இத்தனை சிரமம்.
நாளை ஒரு நாள் பார்த்துவிட்டு அப்போதும் அவளுக்கு வலி குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரிடம் அவளை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்துக் கொண்டவன் தானே சமைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
சமைப்பதற்கு தேவையான கறியை சென்று வாங்கி வந்து விடலாம் என்ற எண்ணத்தோடு குழந்தையின் தொட்டிலைப் பார்த்தவன் அங்கே குழந்தை இல்லை என்றதும் நிம்மதியாக புன்னகைத்துக் கொண்டான்.
மெல்ல அவளுடைய அறையின் வெளியே வந்து நின்றவன் அங்கே குழந்தையோடு கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த சாஹித்யாவைக் கண்டதும் அவனுக்கோ மனம் சற்றே அமைதி அடைந்தது.
நேராக பைக்கை எடுத்தவன் வெளியே சென்று சிறிது நேரத்தில் கறியையும் வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் வந்துவிட குழந்தையோ தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள்.
“அதுக்குள்ள தூங்கிட்டாளா..?” என முணுமுணுத்தவாறு தொட்டிலை எட்டிப் பார்த்துவிட்டு கறியை ஃப்ரிட்ஜில் வைத்தவன் பின்பக்கம் தண்ணீர் சத்தம் கேட்டதும் புருவம் சுருக்கியவாறு பின்னே சென்றான்.
அங்கே கிணற்றுக்கட்டில் அமர்ந்திருந்து ஆடைகளை அலசிக் கொண்டிருந்தாள் சாஹித்யா.
“ப்ச்.. இப்போ எதுக்கு இதெல்லாம் நீ பண்ற..? உனக்குத்தான் உடம்பு முடியலைல..?”
அவனுடைய குரலில் இவன் எப்போது வந்தான் என்பதைப் போல அதிர்ந்து பார்த்தவள் “இல்ல பரவால்ல..” என மென்மையாகக் கூறினாள்.
“எழுந்துரு.. நானே வாஷ் பண்ணிடுறேன்..”
“ஐயோ பரவால்ல.. இப்போ எவ்வளவோ வலி குறைஞ்சிடுச்சு..” என்றவள் கரத்தில் வைத்திருந்த தியா பாப்பாவின் ஆடையைக் கசக்கி விட்டு அவளுடைய தாவணியை கசக்க ஆரம்பிக்க, அவள் கசக்கி வைத்திருந்த ஆடைகளை நீரில் அலசத் தொடங்கினான் அவன்.
*ஐயோ நீங்க ஏன் இதெல்லாம் பண்றீங்க..? நானே பண்ணிடுவேன்..” தடுமாறினாள் அவள்.
“இதுல என்ன இருக்கு..?” என்றவன் அவள் தன்னுடைய ஆடைகளையும் கழுவி இருக்கிறாள் என்பது புரிந்ததும் ஒரு கணம் விழிகளை மூடித் திறந்தான்.
“இதோ பாரு சாஹித்யா.. எனக்கு ரெண்டு கை திவ்யமா நல்லாவே இருக்கு.. என்னோட ட்ரஸ்ஸ என்னாலேயே கழுவிக்க முடியும்.. இதெல்லாம் நீ பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லை..”
“புருஷனோட ட்ரெஸ்ஸ பொண்டாட்டிதானே வாஷ் பண்ணலாம் தப்பில்ல..” மெல்லிய குரலில் ஆனால் அழுத்தமாக பதில் உரைத்தாள் அவள்.
“ப்ச்.. இப்படி பேசாத சாஹித்யா..”
“இப்ப எதுக்கு இங்க வந்தீங்க…? என் கூட சண்டை போடவா வந்தீங்க..?” சீறினாள் அவள்.
“முதல்ல நீ எந்திரிச்சு உள்ள போ.. இது எல்லாத்தையும் நானே வாஷ் பண்ணிடுறேன்.”
“இதுல என்னோட ட்ரெஸ்ஸும் இருக்கு.. உங்களோட ட்ரஸ்ஸ நான் வாஷ் பண்ணக் கூடாதுன்னா என்னோட ட்ரஸ்ஸ நீங்க வாஷ் பண்ணக் கூடாது.. எனக்கும் ரெண்டு கை திவ்யமா நல்லாவே இருக்கு..” என அவனைப் போல் சொல்லிக் காண்பித்தாள் அவள்.
“அதெல்லாம் பண்ணலாம்..” என்றவன் நீல நிற வாளியில் அவள் வைத்திருந்த மற்றைய ஆடைகளையும் கசக்குவதற்காக கையில் எடுக்க பதறி விட்டாள் சாஹித்யா.
அதற்குள் அவளுடைய உள்ளாடைகள் இருந்தன.
“அச்சச்சோ வேணாமே..” எனப் பதறியவளுக்கு முகம் சிவந்து போனது.
எங்கே கையில் எடுத்து விடுவானோ எனப் பதறியவள் கிட்டத்தட்ட வாளியை பறிக்காத குறையாக தன்னருகே பிடுங்கி வைத்துக் கொள்ள அவளை அதிர்ந்து பார்த்தான் அவன்.
“இப்போ என்னதான் உனக்கு பிரச்சனை..?”
“ஒன்னும் இல்லையே..”
“அப்போ பக்கெட்டை என்கிட்ட கொடு…”
“ஐயோ சொன்னா புரிஞ்சுக்கோங்க..”
“சரி சொல்லு புரிஞ்சுக்கிறேன்…”
அவளிடம் இருந்தோ பெருமூச்சு வெளிவந்தது.
“அ.. அதுல என்னோட இ.. இன்னர்ஸ் எல்லாம் இருக்கு..” என அவள் தரையைப் பார்த்துக் கொண்டே கூற,
ஒரு உஷ்ணப் பெருமூச்சுடன் “என்னோட பொண்ணுக்கு நான் செய்ய மாட்டேனா..?” என்றான் அவன்.
அவ்வளவுதான் எங்கிருந்துதான் அவளுக்கு கோபம் வந்ததோ “பொண்ணு பூண்டுன்னா அவ்வளவுதான்.. பொண்டாட்டிக்கு செய்யணும்னு நினைச்சா செய்ங்க.. இல்லன்னா போயிருங்க..” என கோபத்தில் அவள் திட்டியே விட, அவனோ திகைத்துப் போனான்.
அவளுடைய பேச்சை மறுத்துப் பேச முயன்றவனின் பார்வை அவள் ஆடை கசக்கும் போது அவளுடைய ஆடைக்கு வெளியே வந்து மார்போடு உரசிக் கொண்டிருந்த அவன் கட்டிய தாலியில் படிந்தது.
அதைப் பார்த்ததும் மறுத்துக் கூற முயன்றவனின் பேச்சு தானாகவே நின்று போனது.
அந்தத் தாலியின் மூன்று முடிச்சைப் போட்டவன் அவன் தானே.
மறுத்து எதுவும் கூற முடியாது அவளுடைய விழிகளை ஆழ்ந்து பார்த்தவன்,
“உனக்கு ஹெல்ப் பண்ணனும்னுதான் நினைச்சேன்.. சரி விடு.. வேற ஏதாவது பண்ணனுமா..?” என அவன் கேட்க,
“அக்காவோட ரூம்ல பாப்பாவோட ட்ரெஸ் கொஞ்சம் இருக்கு.. எனக்கு அதுக்குள்ள போகவே பயமா இருக்குங்க.. மூச்சு அடைக்கிற மாதிரி இருக்கு.. உங்களால முடிஞ்சா பாப்பாவோட ட்ரெஸ்ஸ மட்டும் வெளியே எடுத்து தர்றீங்களா..?” என அவள் கேட்டு விட,
அவனுக்கு அவர்கள் ஒரு காலத்தில் ஒன்றாக வாழ்ந்த அந்த படுக்கை அறைக்குள் நுழையவே கசப்பாக இருந்தது.
தன்னுடைய மனக்கசப்பை வெளியே காட்டிக் கொள்ள விரும்பாதவன் “சரி..” என்றான்.
எத்தனையோ நாட்களுக்குப் பின்னர் மீண்டும் அந்த படுக்கை அறைக்குள் நுழைந்தான்.
உள்ளே நுழையும் போதே அங்கே மறைந்து இருந்த விக்ரமின் தோற்றமே நினைவு வர வான்மதியின் துரோகமும் அழையாத விருந்தாளியாக அவன் நினைவில் வந்து வதைத்தது.
அவனுடைய உதடுகளோ “உன்னை எவ்வளவு நம்பினேன்.. எனக்கு துரோகம் பண்ணிட்டியே பாவி..” என வேதனையுடனும் கோபத்துடனும் முணுமுணுத்தன.
அவளுடைய எண்ணங்களை தன்னிடம் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என எண்ணிக் கொண்டவன் வேகமாக உள்ளே வந்து அங்கே ஒரு ஓரமாக மடித்து வைக்கப்பட்டிருந்த தியா பாப்பாவின் ஆடைகளை மட்டும் வேகமாக எடுத்துவிட்டு திரும்பியவனின் விழிகளிலோ அன்று போலீஸ் பரிசோதித்து விட்டு வைத்து விட்டுப் போன வான்மதியின் அலைபேசி தென்பட்டது.
கரங்கள் நடுங்க அந்த அலைபேசியை எடுத்தவன் மூச்சடைப்பது போல இருந்த காரணத்தால் வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்து ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்.
அவளுடைய அலைபேசிக்கு பேட்டர்ன் லாக் போட்டிருந்தாள் வான்மதி.
இதுவரை இத்தனை வருடங்களில் அவன் ஒருபோதும் அவளுடைய அலைபேசியை வாங்கி ஆராய்ந்ததே கிடையாது.
ஆனால் அவள் வழமையாக போடும் பேட்டன் நினைவில் இருக்க அலைபேசியின் தொடுதிரையில் அதே பேட்டனை போட்டுப் பார்த்தவன் லாக் திறந்ததும் பெருமூச்சுடன் அந்த கையடக்கத் தொலைபேசிக்குள் நுழைந்தான்.
வாட்ஸாப்பில் விக்ரமுடன் அவள் பேசியிருந்தது தான் அதிகமாக இருந்தது.
மனமோ வேண்டாம் அதையெல்லாம் பார்க்காதே எனத் தடுத்தும் விக்ரமின் சாட்டினுள் நுழைந்தவன் அவர்கள் இருவரும் தங்களது அந்தரங்கப் புகைப்படத்தை பரிமாறி இருப்பதைக் கண்டு அருவருத்துப் போனான்.
அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
சருக்கென வலித்தது.
உடலுறவு பற்றி கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இன்றி ஏதோ நகைச்சுவை போல பேசி இருப்பதையும் கண்டு துவண்டு போனான்.
இடையில் ‘ஐயோ இம்சை கால் பண்றான்.. எப்படியாவது நாலு வார்த்தை பேசி அவனை சமாளிச்சுட்டு வந்து உன்கிட்ட பேசுறேன்டா பட்டு..’ என அவள் அனுப்பி இருந்த குறுஞ்செய்தியைப் படித்ததும் அந்த இம்சை தான்தான் என்று நன்றாகவே புரிந்தது.
மீண்டும் மனம் வலித்தது.
விழிகளில் இருந்து கண்ணீர் அருவி போலத்தான் வழியத் தொடங்கியது.
அங்கே அவன் வேலை செய்து கொண்டிருக்கும்போது கிடைக்கும் சொற்ப நேரத்தில் கூட ஓடி வந்து அவளுக்காக அழைப்பை எடுக்கும் அவன் அக்கணம் முட்டாளாகிப் போனானே.
அவனுடைய அப்பழுக்கற்ற எல்லை இல்லாத அன்பு அங்கே ஏமாந்து போனது.
தன்னை இப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கிறாளே என்பதை உணர்ந்து கசப்பாக சிரித்துக் கொண்டான் அவன்.
எவ்வளவு கேவலமாக கீழ்த்தரமாக அவர்கள் பேசி இருக்கிறார்கள் என்பதை எல்லாம் பார்த்தவனுக்கு நெஞ்சமெல்லாம் வலித்தது.
அதற்கு மேல் அவர்களின் உரையாடலை பார்க்க முடியாது அப்படியே கண்களை மூடி இருந்தவனுக்கு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோபம்.
சோபாவை இறுகப் பற்றியவனின் கரமோ நடுங்கிக் கொண்டே இருந்தது.
அதே நேரம் வெளியே அவள் கொண்டு வந்திருந்த அனைத்து ஆடைகளையும் அலசி காயப்போட்டு விட்டு எழுந்தவள் ‘பாப்பாவோட ட்ரெஸ்ஸ எடுத்துட்டு வர்றேன்னு போனவருக்கு என்ன ஆச்சு..? இன்னும் வரவே இல்லையே…’ என நினைத்தவாறு கைகளைக் கழுவி விட்டு உள்ளே வந்தவள் உடல் இறுகிப்போய் விழிகளில் கண்ணீர் வழிய வேதனை தாங்கிய முகத்தோடு அமர்ந்திருந்த யாஷ்வினைக் கண்டதும் திகைத்துத்தான் போனாள்.
வேகமாக அவன் முன்னே வந்து நின்றவள் “என்னாச்சுங்க..?” எனப் பதறிக் கேட்டதும் மெல்ல அவளுடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தவன்,
“ரொம்ப மோசமா ஏமாந்துட்டேன்ல..?” என அடிபட்ட பார்வை பார்த்தவாறு கேட்க அருகே இருந்த தன்னுடைய சகோதரியின் ஃபோனைப் பார்த்தவளுக்கு அதில் எதையோ யாஷ் பார்த்து விட்டான் என்பது புரிந்து போனது.
“எத்தனையோ தடவை என்னோட கால அவாய்ட் பண்ணிருக்கா.. வீடியோ கால லேட்டாதான் ஆன்சர் பண்ணுவா.. கேட்கும்போதெல்லாம் குளிச்சிட்டு இருந்தேன் ட்ரெஸ் பண்ணிட்டு இருந்தேன் பாப்பாவுக்கு பீட் பண்ணிட்டு இருந்தேன்னு சொல்லி இருக்கா.. நான் அவளை கொஞ்சம் கூட சந்தேகமே படல சாஹித்யா…
அவ்வளவு நம்பினேன்… பைத்தியக்காரன் மாதிரி இருந்திருக்கேன்ல.. அவங்க ரெண்டு பேரும் என்ன அடி முட்டாள்னு நினைச்சிருப்பாங்கள்ல..?” என்றவனின் குரல் தழுதழுத்தது.
உடைந்து போய் அழுதவனை தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டாள் சாஹித்யா.
💜💜
உணர்ச்சிகள் நிறைந்த வரிகள்… சூப்பர் 👌
ரொம்ப ரொம்ப நன்றி தங்கமே
Unakku thahudhi illadhavalaipatthi yedhukkudaa kavalai paduraa