🤎 நேசம் நீயாகிறாய்! 🤎
நேசம் 24 (இறுதி அத்தியாயம்)
பல்கோணியில் நின்ற கணவன் கோபமாக இருப்பதைக் கண்ட தேன் நிலாவுக்கு எதுவும் புரியவில்லை. வந்ததில் இருந்து இப்படி இருப்பதற்கு என்ன காரணம் என நினைத்து ஓய்ந்து போனாள்.
“இப்போ என்ன தான் உங்க பிரச்சினை?” அவனைப் பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்துக் கொண்டே அவள் கேட்க, “எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல. வாயை மூடிட்டு வா” கடுகடுத்தான் ஆடவன்.
“சிரிச்சுட்டு சொன்னா சரி. கடாயில் ஊத்தின எண்ணெய் மாதிரி கொதிச்சா என்னனு கேட்கனும்ல?”
“எனக்கு என்னவானா உனக்கு என்ன? எந்தப் பிரச்சினை வந்தாலும் கமுக்கமா இருப்ப. நான் மட்டும் உன் கிட்ட எல்லாமே சொல்லனும்ல” அவன் தலையைக் கோதிக் கொண்ட போது, அவளுக்கு திக்கென்றது.
“என் கிட்ட எதையும் மறைக்கலனு முகத்தைப் பார்த்து சொல்லு” என்றதும் அவள் மௌனமாக தலை குனிந்தாள்.
“என்னைப் பார்க்க சொன்னேன்” அவளது தாடை பற்றி தன் முகம் நோக்கி உயர்த்த, காற்றாடியாய் படபடக்கும் இமைகள் சொல்லியது அவளிடம் ஏதோ உள்ளது என்று.
“நேற்று மார்கெட் போனப்போ ஒருத்தன் என் கிட்ட வம்புக்கு வந்தான். என் மேல கை வைக்கப் போனான்” தரையைப் பார்த்துக் கொண்டு அவள் திணறியவாறு கூற, “அதை ஏன் மறைச்ச?” எனக் கேட்க, அமைதியாக நின்றாள்.
“நா.. நான் அத்தை கிட்ட சொன்னேன்”
“உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது நான் தானே? அப்போ நீ யார் கிட்ட சொல்லனும்?” சற்று கடுமையாகக் கேட்க, அவளுக்கு கண்கள் கலங்கின.
“உங்க கிட்ட சொல்லனும். நான் அவனுக்கு பளார்னு அடிச்சிட்டு வந்தேன். அங்கிருந்த ஆட்கள் அவனை அடிச்சு துவைச்சுட்டாங்க. எனக்கு உங்க கிட்ட சொல்ல பயமா இருந்துச்சு. நீங்க டென்ஷனாகிடுவீங்கனு” என்றவள், “சாரிங்க. தப்பு தான்” அவனது கையைப் பிடிக்க,
கையைத் தட்டி விட்டவன், “யாரோ சொல்லி எனக்கு தெரிய வேண்டியிருக்கு. ரொம்ப கன்ட்ரோல் பண்ணிட்டு இருந்தேன். ஆனால் எனக்கு இந்த தகவல் புதுசுனு சொன்ன ஆளுக்குத் தெரிஞ்சு அவன் என்னை ஒரு மாதிரி பார்க்கிறான்.
எனக்கு மத்தவன் என்ன நெனக்கிறான்னு தேவையே இல்ல. ஆனால் நீ சொல்லி இருக்கனும். ஹாஸ்பிடல்ல ஒரு பொண்ணு என்னைப் பார்த்து சிரிச்சா கூட உன் கிட்ட சொல்லுவேன். நீயும் என் கிட்ட எதையும் மறைக்கக் கூடாதுன்னு நெனச்சேன். ஆனால் நீ மறைச்சுட்டல்ல” அவன் குரலில் கோபத்தின் சம அளவைக் கவலையும் பெற்றிருந்தது.
“நான் உங்க கிட்ட மறைச்சது தப்புத் தான். ப்ளீஸ்ங்க! என்னை மன்னிச்சிருங்க” அவன் கையைத் தட்டியதில் கண்ணீர் திரையிட்டது தையலுக்கு.
“போ நிலா” என அங்கிருந்து சென்று விட, அவளுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை.
கவலையோடு அவன் சென்ற திசையைப் பார்த்திருந்தவள், மறு புறம் திரும்பிக் கொள்ள, இரண்டே நிமிடங்களில் அங்கு வந்தான் ராகவ்.
அவளோ அவனது பராமுகத்தில் உதட்டைக் கடித்துக் கொண்டு நிற்க, அவள் கை மீது கை வைத்து அழுத்திப் பிடித்து, “தேன் மிட்டாய்” என்றழைக்க,
அவ்வளவு தான். அவனை அணைத்துக் கொண்டு கதறியழுதாள் தேனு.
“அழாத நிலா. இங்கே பார்” என்று அவள் முகத்தைப் பார்க்க, “சாரிங்க. நான் இனிமே அப்படி பண்ண மாட்டேன். எதையுமே உங்க கிட்டிருந்து மறைக்க மாட்டேன். என்னை நம்புங்க” அவளது கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது.
“ஓகே ஓகே. ரிலாக்ஸ்” அவளது தலையைத் தடவ, அவள் ஏங்கி ஏங்கி அழுதாள்.
“நான் தப்பு பண்ணுறேன்ல?” என்று அவள் கேட்க, “அப்படி இல்லை தங்கம். நீ எதுவும் தெரிஞ்சே தப்பு பண்ணல. எனக்கு அது இவ்ளோ ஹர்ட் ஆகும்னு நீ நெனச்சிருக்க மாட்ட. அப்படி நெனச்சிருந்தா நீ இப்படி அழுது இருக்க மாட்டியே. எல்லாம் சரியாகிடுச்சு. ஆனால் இனி எதையும் மறைக்காத. அது போதும்” அவளது கண்களைத் துடைத்து விட்டான் கணவன்.
“நான் இனி எதையும் மறைக்க மாட்டேன். ப்ராமிஸ்!” அவன் அணைப்பிலேயே சரணடைந்திருந்தாள் பெண்ணவள்.
நாட்கள் மெல்லமாக நகர்ந்து சென்றன. சில சண்டைகள் வந்தன. ஆனால் ஒருவருக்கொருவர் சமாதானம் செய்து கொண்டனர்.
இருவர் சேர்வது இலகு. ஆனால் சண்டைகள், சறுக்கல்கள், மனஸ்தாபங்கள் என்று எது வந்தாலும், அவற்றை முறையாகக் கையாண்டு அவ்வுறவின் வலிமையை இழந்து விடாமல் காக்க வேண்டும். அதுவே முக்கியம்.
இப்படியாக நாட்கள் நகர ஒரு நாள் அவசரமாக வெளியில் செல்ல வேண்டும் என்று அழைப்பெடுத்துக் கூறினான் ராகவ். அவளும் ஆயத்தமாகி நிற்க, பைக்கில் வந்திருந்தான் அவன்.
“என்ன சார் பைக்ல வந்திருக்கீங்க?” ஆச்சர்யமாக பார்த்தாள். அவன் இப்படி வருவது அதிசயமே.
“என் வைப் கூட பைக்ல போகனும்னு ஆசைப்பட்டேன். நாம எங்கே போறோம்னு நீ கேட்கவே கூடாது. ஏன்னா நானே சொல்லிடறேன். ஹாஸ்பிடல் தான் போறோம்” அவனே அனைத்தையும் சொல்லி விட, “ஹாஸ்பிடலுக்கு எதுக்கு திடீர்னு? ஏதும் விசேஷமா?” என வினவினான்.
“நந்திங் ஸ்பெஷல். இன்னிக்கு சைல்ட் வார்டுக்கு புதுசா ஒரு குட்டிப் பொண்ணு வந்திருக்கா. அவளையும் பார்க்கலாம்னு” என்றதும் ஆவலுடன் தலையசைத்தாள்.
சில நேரம் அவளை இப்படியாக அந்த வார்டிற்கு அழைத்துச் செல்வான். சின்ன வயதில் ஒவ்வொரு நோயால் பாதிக்கப்பட்ட அக்குழந்தைகளைப் பார்த்து நெஞ்சுருகிப் போவாள். அவர்களைச் சிரிக்க வைத்து, சந்தோஷப்படுத்திப் பார்ப்பதில் தேனுவுக்கு அலாதி இன்பம்.
சைல்ட் வார்டிற்குச் சென்ற போது புதிதாக வந்திருந்த குழந்தை அவளைச் சிறு பயத்தோடு நோக்க, “ஹேய் ஏஞ்சல்! நான் சொன்ன தேன் ஆன்ட்டி இவங்க தான்” அவளது கன்னங்களைப் பிடித்துக் கூற,
“ஹனி ஆன்ட்டி! அய்ம் அமிர்தா” என்று அழைத்தாள் குட்டிச் சிறுமி.
அவளுக்கு ப்ளட் கேன்சர் என்று தெரிந்த போது தேனுவுக்கு அழுகை வெடித்தது. உலகைப் பார்க்கவே துவங்காத வயதுள்ள பாலகிக்கா இந்த நிலை என மனம் குமைந்தது.
“உங்களை விட ஷார்ப் இந்த பாப்பா. நீங்க தேன் ஆன்ட்டினு பாதி தமிழ் மீதி இங்கிலீஷ்ல சொன்னதை, அவ முழுசா ட்ரான்ஸ்லேட் பண்ணிட்டா” கணவனின் காதில் கிசுகிசுக்க, புன்னகைத்து விட்டு “சைடு கேப்ல நான் ஷார்ப் இல்லனு சொல்லுறல்ல” என முறைக்கவும் செய்தான்.
“மத்த பசங்க எல்லாம் எங்கே?” என்று அவள் தேட, “சாப்பிட்டு வர போனாங்க. வருவாங்க நிலா” என்றதும் புதிதாக வந்தவளைப் பார்த்தாள்.
“எனக்குப் பசிக்கவே இல்ல ஆன்ட்டி. டாக்டர் அங்கிள் கிட்ட நான் சொன்னேன்” அவளது கேள்வியை உணர்ந்து பதிலளித்தாள் அமிர்தா.
“நான் ஊட்டி விடட்டுமா பாப்பா?” என்று கேட்ட போது அவளும் சமத்தாக தலையசைத்தாள்.
அவளுக்கு கதை சொல்லி, பாட்டுப் பாடி ஊட்டி விட்டாள் தேனு. அனைத்தையும் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தவன், “நமக்கும் ஒரு பேபி இருந்தா நல்லா இருக்கும்ல?” என்று வினவ,
“ஆமாங்க. எனக்கும் ஆசையா இருக்கு” அவளது கண்களில் ஆசையும் ஏக்கமும் நிறைந்திருந்தன.
சிறிது நேரம் அங்கிருந்து விட்டுச் செல்ல எத்தனிக்கும் போது, மேசையில் இருந்த கார்ட்ஸை பரப்பி வைத்து, “இதுல ஒன்ன சிலெக்ட் பண்ணி கொடுங்க ஆன்ட்டி” என்றுரைத்தாள் சின்னவள்.
ஒவ்வொன்றாக பார்த்தவள் சிவப்பு நிறத்தில் இருந்த ஒரு கார்டை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். உள்ளே சிவப்பு நிற ஆடை அணிந்த குழந்தையின் ஃபோட்டோ இருந்தது.
“இது வேண்டாம். வேற கார்ட்” என்று அவள் சொல்ல, மஞ்சள் கார்ட் எடுத்தாள். அதனுள் மஞ்சள் நிற ஆடையணிந்த குழந்தை.
இப்படியாக அமிர்தா ஒவ்வொன்றையும் மறுக்க, தேனுவும் ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தாள். ஊதா, சாம்பல், கறுப்பு, நீலம், செம்மஞ்சள் என ஒவ்வொரு நிற கார்டிலும் அந்நிறத்தில் உடுத்தியிருந்த குழந்தைப் படங்கள் இருந்தன.
“ஒன்னுமே வேணாமா செல்லம்?” என்று தேனு முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு கேட்க, “இந்த கார்ட் பாரு” என ஒரு கார்டை நீட்டினான் ஆடவன்.
அதைப் பிரித்துப் பார்த்தவளுக்கு தன் கண்களை நம்ப இயலவில்லை. அதனுள் ப்ரெக்னன்சி கிட் வரையப்பட்டு இரண்டு சிவப்பு நிற கோடுகள் அடையாளமிடப்பட்டிருந்தன.
“ரா..ராகவ்” கண்களில் நீர் துளிர்க்க அவனைக் கேள்வியாக நோக்க, அவளைக் கட்டிலில் அமர வைத்து, மணிக்கட்டைப் பிடித்துப் பார்த்தவனோ முட்டியிட்டு அமர்ந்து, “நீ அம்மா, நான் அப்பா. நமக்குனு ஒரு அழகான பேபி இங்கே இருக்கு” அவளது வயிற்றைக் காட்டி சொன்னான்.
தனது வயிற்றில் கை வைத்த தேன் நிலாவுக்கு உடலில் மெல்லிய நடுக்கம். ஆனந்தக் கண்ணீர் கண்ணோரம் கசிய, அவனைக் கட்டிக் கொண்டவளுக்கு உதடுகள் துடித்தன.
“நான் இதை சத்தியமா எதிர்பார்க்கல. வழக்கமா பொண்ணுங்க ஹஸ்பண்ட் கிட்ட சொல்லி பார்த்திருக்கேன். ஆனால் நீங்க எனக்கு சொன்ன விதம்.. இந்த நிமிஷம், இந்த சந்தோஷம் என் வாழ்க்கையில் என்னிக்கும் மறக்க முடியாது” சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனாள் பாவை.
“என்னை மாதிரி ஒரு பாப்பா வரப் போகுதா அங்கிள்?” என்று அமிர்தா கேட்க, “ஆமாடா கியூட்டி. உன்னைப் போலவே அழகு குட்டி வரும்” அவளது மூக்கைப் பிடித்து ஆட்டினான்.
“தாங்க் யூ டா அமி குட்டி. இந்த ஸ்பெஷலான தருணத்தில் நீ எங்க கூட இருக்கே. நீயும் எனக்கு ஸ்பெஷலாகிட்ட” அவளது நெற்றியில் முத்தமிட்டாள் தேனு.
“அப்போ எனக்கு” ராகவ் கேட்ட போது, “உங்களுக்கு இல்லாததா?” அவனது இரு கன்னங்களிலும் இதழ் பதித்தாள் மனைவி.
“காலையில் உன்னைப் பார்க்கும் போது எனக்கு புரிஞ்சுருச்சு நீ ப்ரெக்னன்டா இருக்கேனு. அப்போ சொல்லல. சின்னதா சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நெனச்சேன். ரொம்ப ஹேப்பி டி பொண்டாட்டி” அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் காதல் கணவன்.
வரும் வழியில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்க, மகிழ்வோடு அதனைச் சாப்பிட்டாள். அவளின் ஒவ்வொரு மகிழ்வையும் மனநிறைவோடு பார்த்தான்.
🎶 வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக ஏதும் செய்வேன்
நீ எனக்கென செய்வாயோ 🎶
🎶 இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் தொழுவேன் தவறாது 🎶
“நான் நிறைய ப்ளான் பண்ணிட்டேன் நிலா. உன்னை ரொம்ப சந்தோஷமா வெச்சுக்கனும். நீ ஆசைப்படுற இடங்களுக்கு கூட்டிட்டு போகனும். கேட்கிறதை மட்டுமல்ல, நீ கேட்காததைக் கூட வாங்கித் தரனும்.
உனக்காக நான் நிறைய விஷயங்கள் பண்ணனும். உன்னை சந்தோஷக் கடல்ல மூழ்கடிக்கனும். என் காதலை உன் மேல மழையா பொழியனும்” என நிறைய லிஸ்ட் போட,
“நீங்க என் பக்கத்தில் இருக்கனும். அது மட்டும் போதும் எனக்கு” என்றவாறு அவனது தோளில் சாய்ந்தாள்.
“கண்டிப்பா. என்னால முடிஞ்சளவு உன் கூட இருப்பேன்” அவளது கழுத்தில் கை போட்ட ராகவேந்திரனின் விழிகள் தன் மனையாளோடு ரசனையுடன் உறவாடின.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி
2024-11-26