24. சிந்தையுள் சிதையும் தேனே..!

4.8
(12)

தேன் 24

நிவேதாவை கொல்ல முயற்சிப்பவர்கள் யார் என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியாமல், கார்த்திகேயன் மனம் கடலில் மிதக்கும் படகைப் போல ஆடித்திரிந்தது.

ஒருபுறம் “இது கருணாகரனுக்கு எதிரியாக இருக்கும் யாரோ செய்த வேலைதான்” என்ற எண்ணம்.

மறுபுறம் “இல்லை, நிவேதாவுக்கென்று தனியாகவே ஒரு எதிரி இருக்கலாம்” என்ற சந்தேகம்.

நிவேதாவின் பழைய கோபத் தாபங்களும், குணச் சுழல்களும், நேர்மையற்ற வார்த்தைகளும் நினைவுக்கு வந்தபோது, “அவளை வெறுப்பவர்களை உருவாக்குவது அவ்வளவு கடினமில்லை” என்று அவனது மனத்தில் நிழல்கள் ஆடியது.

அந்த எண்ணம், புயலுக்கு முன் வானத்தில் கருமேகமாய் அலைபாய்ந்தது.

இந்நேரத்தில் வைத்தியரும், நிவேதாவின் உடல் நலம் சீராகிவிட்டதால் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று அறிவித்தார்.

ஆனால், அது காயத்ரிக்கு வருத்தமான செய்தியாகவே அமைந்தது.

ஏனெனில், காயத்ரியை தலைமை வைத்தியர் இன்னும் மூன்று நாட்கள் மருத்துவமனையில் வைத்து சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

இதனால், அடுத்த மூன்று நாட்களுக்கு வைத்தியசாலையில் கருணாகரன் தங்கி காயத்ரியைக் கவனித்துக் கொண்டனர்.

கார்த்திகேயன் மூன்று நாட்கள் தானே பகல் பொழுது நான் நிவேதாவை பார்த்துக் கொள்கிறேன் என்று நிவேதாவை அன்புடன் பொறுப்பேற்றான்.

மூன்று நாட்களும் நிவேதாவிற்கு நேரத்துக்கு நேரம் உணவு, மாத்திரைகள் என அவளுடன் பகல் பொழுதை மிக இனிமையாகக் கழித்தான்.

அவள் பழைய விடயங்களை மறந்து போனதால் அந்த வீடு அவளுக்கு மிகவும் புதியதாகவே தோன்றியது.

அதனால் அவள் கேட்கும் சிறு பிள்ளைத்தனமான கேள்விகள் அனைத்திற்கும் சலிக்காமல் கார்த்திகேயன் பதில் கூறிக் கொண்டே இருந்தான்.

மூன்று நாட்கள் எப்படி கழிந்தது என்று இருவருக்கும் தெரியாது அவ்வாறு அவர்களுக்குள் சிறு ஈர்ப்பு உருவாகத் தொடங்கியது.

மூன்று நாட்கள் முடிந்து, காயத்ரி வீடு திரும்பியபோது, அவரது முகத்தில் பழைய ஒளி, உடலில் பழைய உற்சாகம் மீண்டும் மலர்ந்தது.

வீட்டு வாசலில் கால்வைத்த அந்தக் கணமே, மனத்தில் ஓர் இனிமையான உயிர்ப்புக் காற்று வீசியது போல உணர்ந்தார்.

ஆனால், நிவேதா இன்னும் மாறவில்லை.

அவள் பழைய நினைவுகளை மீட்டுக் கொள்ள முடியாமல், எதையோ உள்ளுக்குள் யோசித்தபடி, ஒரு மூலையில் அமர்ந்து கொண்டிருந்தாள்.

அவளது பார்வை, எப்போதும் எங்கோ தூரத்தில் யாருக்கும் தெரியாத ஒரு பிம்பத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே தோன்றியது.

இதனைக் கவனித்த கருணாகரனும், காயத்ரியும், மனதில் கவலைகள் நிறைந்த யோசனையுடன்,

‘காயத்ரியின் நிறுத்தப்பட்ட திருமணத்தை மீண்டும் நடத்திவிட்டால் எப்படி இருக்கும்..?’ என்ற எண்ணமும் இருவருக்குள்ளும் தோன்றியது.

திருமணச் சடங்குகள், குடும்பச் சேர்க்கைகள், மகிழ்ச்சியான சூழ்நிலை இவை எல்லாம் நிவேதாவின் மனநிலையை சில வேலைகளில்  மாற்றக் கூடுமோ?’ என்று எண்ணினார்கள் இருவரும்.

இந்த யோசனையை கார்த்திகேயனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் காத்திருந்தனர்.

அந்த சமயம், கார்த்திகேயன் வேலை விஷயமாக அடிக்கடி வீட்டுக்கு வருவது வழக்கமாயிருந்ததால்,  அன்றே சில கோப்புகள் கையில் எடுத்தபடி வந்து நின்றான்.

காயத்ரி, கருணாகரனை நோக்கி, கண் சைகையால் “இப்போ சொல்லுங்க” என்று உந்தினார்.

கருணாகரன், சற்று குரலைச் செருமிக் கொண்டு, “கார்த்திகேயா, அந்த பைல்ஸ் எல்லாம் இங்க வச்சிருங்க… பிறகு செக் பண்ணிட்டு நான் கொடுத்து விடுறேன் ஆனால், உங்ககிட்ட கொஞ்சம் தனியாக பேச வேண்டி இருக்கு” என்று சொல்லி, விட்டு அருகில் இருந்த இருக்கையில் அமரும்படி அதனை நோக்கிக் கை காட்டினார்.

கார்த்திகேயன் புருவத்தைச் சுருக்கி, வார்த்தையின்றி அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்தான்.

“சொல்லுங்கள், கேட்கிறேன்” என்ற அமைதியான தோரணை முகத்தில் தெரிந்தது.

ஒரு சில வாரங்களுக்கு முன்பு, ‘இந்த மனிதன் என் ஸ்டேட்டஸுக்கு பொருத்தமில்லாதவன்… என் மகளுக்கு இவர் மாப்பிள்ளை ஆக முடியாது” என்று எண்ணிய கருணாகரனின் மனதில், இப்போது முற்றிலும் வேறொரு எண்ணம் தோன்றியிருந்தது.

இந்த சில வாரங்களில், விபரீதமான தருணங்களில் தோளுக்கு தோளாகவும், நிழல்போல் துணையாகவும் இருந்து, தன்னம்பிக்கையைக் கொடுத்தவன் கார்த்திகேயன்.

“இப்படிப்பட்ட மனிதரை எங்க தேடியாலும் காண முடியாது… நல்ல மாப்பிள்ளை, நல்ல மனிதன்” என்ற நம்பிக்கை, கருணாகரனின் மனதில் வேரூன்றி விட்டது.

கருணாகரன் சற்று நேரம் கார்த்திகேயனை அமைதியுடன் பார்த்தார்.

அந்த பார்வையில், நன்றி, நம்பிக்கை, சிறிது தயக்கம் மூன்றும் கலந்து இருந்தன.

காயத்ரி அருகே அமர்ந்து, இருவரையும்  கவனித்துக் கொண்டிருந்தாள்.

“கார்த்திகேயா…” என்ற கருணாகரனின் குரல் மெதுவாக இருந்தாலும், அதில் ஒரு பாரம் இருந்தது.

“நிவேதாவை பற்றி உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அதோட நாங்க ஒரு முடிவு எடுத்திருக்கோம் அதை உன்கிட்ட எப்படி கேட்கிறது என்று தெரியல்லை. நிவேதாவோட இந்த சிட்டுவேஷன்ல எங்களுக்கு வேற ஒரு…” என்று கருணாகரன் வார்த்தைகளை மென்று முழுங்க,

கார்த்திகேயன் புருவத்தைச் சுருக்கி,

“தயங்காம சொல்லுங்க, சார்…”

கருணாகரன் சிறிது இடைவெளி விட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு ஒரு முறை காயத்ரியை திரும்பிப் பார்க்க, காயத்ரி கண்களை மெதுவாக மூடித் திறந்து ‘தயங்காமல் பேசுங்க..’ என்பது போல சைகை காட்டினார்.

“நிவேதாவைப் பற்றி… அவளுடைய திருமணத்தைப் பற்றி தான்.” என்று நேராக விடயத்தை போட்டு உடைக்க,

அந்த வார்த்தையை கேட்டவுடன், கார்த்திகேயனின் பார்வை திடீரென மாறியது.

கண்களில் ஒரு சின்ன அதிர்ச்சி, பின்பு குழப்பம்.

அவன் மெதுவாகக் கேட்டான்.

“நிவேதாவுக்கு கல்யாணம்னா..?”

உடனே காயத்ரி,

“நிவேதா இப்படி நினைவிழந்ததிலிருந்துஅவள் மனநிலையை மாற்றக்கூடிய எதாவது பெரிய மகிழ்ச்சி தேவைப்படுது.

நாங்க யோசிச்சோம்… அவளுடைய நிறுத்தப்பட்ட திருமணத்தை மீண்டும் நடத்தினால், அந்த உற்சாகம், அந்த சந்தோஷம்… அவளுக்கு நல்ல மாற்றம் தரும்னு..” என்று கூற,

கருணாகரனும் அதனை ஆமோதிப்பதாக,

“இந்த முடிவுக்கு வந்து நிற்கும் முன், நாங்க நிறைய யோசிச்சோம், கார்த்திகேயா

நீங்க… இந்தக் குடும்பத்துக்காக இவ்வளவு நாட்களா எவ்வளவு செய்தீங்க, எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கீங்க..”

“என்ன சார் இது அதுக்காகவா..?” என்று சற்று கோபத்துடன் கேட்டான் கார்த்திகேயன்.

“ச்சே ச்சே அப்படி இல்ல நின்ன கல்யாணம் நடந்தா இந்த குடும்பத்துக்குள்ளையும் நிவேதாவிற்கும் இழந்தது திரும்பி வரும் என்று நாங்க நம்புறோம்..” என்று காயத்ரி கூறினார்.

அந்தக் கணமே, அறையில் ஒரு கனமான அமைதி நிலவியது.

கார்த்திகேயன் சற்றே சிந்தித்துபடி இருக்கும்போது அவனது இதயத் துடிப்பு அதிகரித்தது, கைகளில் வைத்திருந்த கோப்புகளின் பிடி சற்றே வலுத்தது.

“நான்…” என்று அவன் மெதுவாகத் தொடங்கினான், ஆனால் வார்த்தைகள் பாதியிலேயே நின்றுவிட்டது.

அவனது கண்களில் நிவேதாவின் முகம், அந்தப் பிள்ளைத்தனமான சிரிப்பு, அந்த நிர்பந்தமில்லாத பார்வை நிழல்போல தோன்றி மறைந்தது.

கருணாகரன் அவன் கையை மெதுவாகத் தொட்டு,

“நல்லா யோசி கார்த்திகேயன் நாங்க எந்த விதத்திலும் உன்னைய கட்டாயப்படுத்த மாட்டோம் ஆனா நீ ஒரு நல்ல பதில் சொல்லுவானு நாங்க நம்புறோம்..

இந்தத் திருமணம்… உனக்கும், அவளுக்கும், நம்ம எல்லாருக்கும் ஒரு புதிய வாழ்க்கை தரும்…”

காயத்ரி மெல்ல சிரித்து,

“நீங்க தான் நிவேதாவை உண்மையிலேயே புரிந்துகொண்டவர்…” என்று காயத்ரியின் குரல் அங்கு தங்க, கார்த்திகேயன் மறுப்பாகத் தலையசைத்தான்.

அந்த ஒரு தலை அசைப்பு காயத்ரி, கருணாகரன் இருவருக்கும் மின்னல் போன்ற அதிர்ச்சியைத் தந்தது.

அவர்கள் இதுவரை நினைத்ததெல்லாம் ஒரு கணத்தில் முறியடிக்கப்பட்டது.

“இவன் நிச்சயம் ஒப்புக்கொள்வான்… திருமணத்தை விரைவாக முடித்து வைப்போம்” என்ற கனவுகள், கையில் பிடித்திருந்த கண்ணாடி சில்லுகள் போல சிதறின.

ஏற்கனவே ஒருமுறை நிச்சயிக்கப்பட்டு, திருமண நாளிலேயே நிறுத்தப்பட்ட அந்த உறவு…

அது அவர்களுக்கு பெரும் கவலையாக இருந்தது.

இப்போதாவது அந்தக் கவலை நீங்க, நிவேதாவை மீண்டும் மகிழ்ச்சியான சூழலுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம்.

ஆனால், கார்த்திகேயனின் மனநிலை முற்றிலும் வேறு.

அவன் காயத்ரியையும் கருணாகரனையும் தனது மனநிலையை எடுத்துக் கூற அவர்களுக்கு பிரமிப்பாக இருந்தது.

அப்படி எதைத் தான் அவன் கூறியிருப்பான்..? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!