தொல்லை – 24
அஞ்சலியின் மனம் உறுத்திக்கொண்டே இருந்தது.
வாயிலில் யாரோ நின்றதை அவள் பார்த்தது அவளுடைய கற்பனையா?
அவளுக்கு தெளிவாகத் தெரியவில்லை.
குழப்பமாக இருந்தது.
“என்னடி அம்மு.?”
“ம்ஹூம்.. ஒன்னும் இல்ல மாமா.. அக்கா கீழே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கா… வாங்க… போகலாம்…” என கதிரை அழைத்துக்கொண்டு கீழே வந்தாள் அவள்.
அங்கே அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தாள் மதுரா.
ஜோடியாக நடந்து வரும் இருவரையும் பார்த்தவளுக்கு தான் ஏமாற்றப்பட்டதாக தோன்றியது.
சற்று முன்னர் அஞ்சலியைத் தேடி அவளுடைய அறைக்குச் சென்றவள் அங்கே கதிரும் அஞ்சலியும் ஒருவருடன் ஒருவர் பாம்பு போல பிணைந்து நின்றதைக் கண்டு அதிர்ந்து விட்டாள்.
அசைவற்று அப்படியே அவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றவள் அஞ்சலி சட்டென திரும்பியதும் வேகமாக இறங்கி கீழே வந்திருந்தாள்.
இருவருடைய நெருக்கமும் அவளை எரிச்சலடைய வைத்தது.
கதிரைக் கண்டதும் எழுந்தவள் “ஓகே கதிர்… இன்னொரு நாள் மீட் பண்ணலாம்… நான் கிளம்புறேன்… டைம் ஆயிடுச்சு…” என்றாள்.
“நானே உன்னை டிராப் பண்றேன்… வா…” என அழைத்தான் கதிர்.
“தேங்க்ஸ்…” என்றவள் அஞ்சலியைப் பார்த்து புன்னகைத்தவாறு “பை அஞ்சு…” என்றாள்.
“பத்திரமா போய்ட்டு வா அக்கா…” என்று கூறிய அஞ்சலியின் முகத்தில் புன்னகை தோன்றவில்லை.
சிரிக்க முயன்றும் அவளால் சிரிக்க முடியாமல் அமைதியாக நின்றாள்.
சற்று நேரத்தில் காரில் கதிருடனான மதுராவின் பயணம் ஆரம்பமானது.
“உன்னோட ரூம் எங்க இருக்கு மதுரா…?” என கதிர் கேட்க, தன்னுடைய முகவரியைக் கூறினாள் அவள்.
“எதுக்கு மதுரான்னு ஃபுல் நேம் சொல்லி கஷ்டப்படுறீங்க…? மதுன்னு சொல்லுங்க…” என சிரித்தவாறு கூறினாள் அவள்.
“மூணு எழுத்து பேர் சொல்றது என்ன அவ்வளவு கஷ்டமா…?” என சிரித்தான் கதிர்.
அவனுடைய கரங்களில் இலாவகமாக கார் தரையில் வழுக்கிக்கொண்டு ஓடியது.
இன்னும் அரை மணி நேரத்தில் தான் தங்கியிருக்கும் அறைக்கு சென்றுவிடலாம் என்பதை உணர்ந்தவள், தன்னுடைய திட்டம் நிறைவேற வேண்டுமெனில் எப்படியாவது அங்கே செல்லும் நேரத்தை தாமதமாக்க வேண்டும் என எண்ணினாள்.
அவளுடைய மனம் வேகமாக சிந்திக்கத் தொடங்கியது.
சட்டென கதிரின் கரத்தைப் பற்றியவள் “ப்ளீஸ் ஸ்டாப் தி கார்… எனக்கு வாமிட் வர்ற மாதிரி இருக்கு…” என்றாள்.
சட்டென காரை நிறுத்தியவன் “ஏய்… என்னாச்சு…? ஆர் யூ ஓகே…?” என பதறியவாறு கேட்டான் கதிர்.
அவள் பதில் கூறாமல் காரைவிட்டு வேகமாக இறங்கி, வீதியோரத்தில் குனிந்து நின்றவள் ஓங்கரிப்பது போல செய்தாள்.
கதிரும் காரிலிருந்து வேகமாக இறங்கினான்.
அவனுடைய கரத்தில் தண்ணீர் பாட்டில் இருந்தது.
“ஓ மை காட்… வாமிட் வர்ற மாதிரி இருந்துச்சு… ஆனா இப்போ வரலை… ஐ ஆம் ஓகே…” என்றவள், கதிரின் கரத்தில் இருந்த நீரை வாங்கி குடித்துவிட்டு மீண்டும் அவனிடம் பாட்டிலை நீட்டினாள்.
“ரொம்ப முடியாம இருந்தா சொல்லு… ஹாஸ்பிடல் போகலாம்…” எனக் கேட்டான் அவன்.
“ஐயோ… அப்படியெல்லாம் இல்ல… இப்போ நான் ஓகே தான்… இன்னைக்கு சாப்பாடு நல்லா இருந்துச்சு… ரொம்ப அதிகமா சாப்பிட்டேன்… அதனால தான் இப்படி பீல் ஆகுது போல…” என அவனைச் சமாளித்தவள் மீண்டும் காரில் ஏறி அமர்ந்துகொண்டாள்.
அதே நேரம் அவளுடைய அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.
அதைப் பார்த்ததும் அவளுடைய முகம் சட்டென மலர்ந்தது.
கதிரோ மீண்டும் காரை செலுத்தத் தொடங்கினான்.
சற்று நேரத்தில் அவளுடைய அறை வந்துவிட, “உள்ள வாங்க…” என அழைத்த மதுராவிடம் மறுத்து தலையசைத்தான் அவன்.
“இல்ல மதுரா… இன்னொரு நாள் கண்டிப்பா வரேன்… இப்போ நான் வீட்டுக்கு கிளம்பணும்…” என்ற கதிரை,
“ஃபர்ஸ்ட் டைம் வந்திருக்கீங்க… உள்ள வராம போனா எப்படி…? நீங்க கூப்பிட்டதும் உங்க வீட்டுக்கு நான் வந்தேன்ல…? நான் கூப்பிடும்போது நீங்க என்னோட ரூமுக்கு வர்றது தானே நியாயம்…? உள்ள வாங்க…” என வற்புறுத்தி அழைக்க, அதற்கு மேல் மறுக்க முடியாமல் காரிலிருந்து இறங்கியவன் அவளைப் பின்தொடர்ந்து சென்றான்.
சட்டென அவள் நெஞ்சில் கைவைத்தபடி பதறியவாறு முன்னோக்கி ஓட, “என்னாச்சு மது…?” எனக் கேட்டவாறு அவனும் வேகமாக அவளைப் பின்தொடர்ந்து ஓடினான்.
“என்னோட ரூம் கதவு திறந்திருக்கு… நான் இதைப் பூட்டிட்டு தான் வந்தேன்…” எனப் பதறியவாறு கூறியவளுக்கு விழிகளில் கண்ணீர் நிறைந்து விட்டது.
“பயமா இருக்கு கதிர்… நான் இல்லாத நேரம் யாரோ உள்ள வந்திருக்காங்க… என்னோட பாஸ்போர்ட்… சர்டிஃபிகேட்ஸ்… எல்லாம் இங்கதான் இருக்கு… கொஞ்சம் பணம் வேற வச்சிருந்தேன்… எப்படி கதவை திறந்தாங்கன்னு தெரியலையே…” என அவள் பதற,
அவளுடைய கரத்தைப் பற்றி அந்த அறையைவிட்டு வெளியே அழைத்து வந்தவன், “நீ இங்கே இரு பதட்டப்படாதே… நான் பார்த்துக்குறேன்…” எனக் கூறிவிட்டு வேகமாக அந்த அறைக்குள் நுழைந்து ஆராய்ந்தான்.
அவளுடைய ஆடைகள் தொடங்கி அனைத்தும் தரையில் கொட்டிக்கிடப்பதைக் கண்டவனின் புருவங்கள் சுருங்கின.
குளியலறையைப் பரிசோதித்தவன், அந்த அறைக்குள் யாரும் இல்லை என்பது உறுதியானதும், வெளியே நின்ற மதுராவை உள்ளே அழைத்தான்.
அவளோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
“யாரோ அத்து மீறி உள்ள வந்திருக்காங்க… எப்படி இந்த கதவை திறந்தாங்கன்னு தெரியல… மதுரா… போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா…?” என அவன் கேட்க,
“ஐயோ வேணாம்… அப்புறம் போலீஸ் அடிக்கடி இங்க வந்துட்டு இருப்பாங்க… நானே தனியா இருக்கேன்… எப்படி இதெல்லாம் சமாளிப்பேன்…? இன்னைக்கு நைட் எப்படி இங்க தனியா தங்குறது…? பூட்டிட்டு இருந்த கதவை திறந்து உள்ள வந்திருக்காங்கன்னா… நைட் நான் தனியா இருக்கும்போதும் உள்ள வர முடியும்தானே…? எனக்கு பயமா இருக்கு கதிர்…” என அவள் தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட, அவனுக்கோ பாவமாகிப் போனது.
“இல்ல… நீ இன்னைக்கு நைட் இங்க தங்க வேணாம்… நம்ம வீட்டிலேயே இன்னைக்கு நைட் தங்கிக்கோ… இப்படி சேஃப் இல்லாத இடத்துல உன்ன விட்டுட்டு போனா எனக்குமே நிம்மதியா இருக்க முடியாது… அஞ்சலியும் என் மேலதான் கோபப்படுவா… உன்னோட முக்கியமான திங்க்ஸ் ஏதாவது இருந்தா அதை மட்டும் எடுத்துட்டு வா… நம்ம வீட்டுக்கு போகலாம்… அதுக்கப்புறம் உனக்கு என்னோட மத்த வீட்டை அரேஞ்ச் பண்ணி கொடுக்கிறேன்…” என கதிர் கூற,
தன் விழிகளைத் துடைத்துக்கொண்டவள் அவனுடைய கைகளைப் பற்றிக் கொண்டாள்.
“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் கதிர்… இது எனக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் தெரியுமா…? ரொம்ப தேங்க்ஸ்…” என உணர்ச்சிபூர்வமாக கூறினாள்.
“ஏய்… இதுக்கு எதுக்கு இவ்வளவு எமோஷனல் ஆகுற…? கூல்…” என்றவன்,
“உன்னோட ட்ரஸ் எல்லாம் எடுத்துட்டு வா… நான் கார்ல வெயிட் பண்றேன்…” எனக் கூறிவிட்டு வெளியே சென்றுவிட, அவளுடைய அழுத முகம் இப்போது சிரிப்புக்கு தாவியது.
‘பரவாயில்லையே… சொன்ன பத்து நிமிஷத்திலேயே கச்சிதமா இந்த அர்ஜுன் வேலையை முடிச்சிட்டானே… எப்படியோ இன்னைக்கு நம்ம பிளான் சக்ஸஸ் ஆயிடுச்சு…’ என எண்ணிக்கொண்டவள்,
தனக்குத் தேவையானவற்றை ஒரு பையில் எடுத்து வைத்துவிட்டு, தன்னுடைய முகத்தை சோகமாக மாற்றிக்கொண்டு வெளியே கதிரைத் தேடிச் சென்றாள்.
“முக்கியமான எல்லாத்தையும் எடுத்துட்டியா…?”
“ம்ம்… எடுத்துட்டேன் கதிர்…”
“எனக்கு தெரிஞ்ச போலீஸ்ல சொல்லி வைக்கிறேன்… இந்தப் பக்கம் சந்தேகப்படுற மாதிரி யாராவது வந்து போயிருந்தா… விசாரிப்பாங்க…” என்றான் அவன்.
“வேணாம்… எப்படியும் இதுக்கு மேல இந்த ரூம்ல நான் தங்கப் போறதில்ல… அதனால எந்தப் பிரச்சனையை போலிஸ் வரைக்கும் கொண்டு போய் டென்ஷன் பண்ண வேணாம்… போலீஸ் ஸ்டேஷனுக்கு எல்லாம் என்னால அலைய முடியாது கதிர்… ப்ளீஸ்…” என அவள் கூற,
பெருமூச்சோடு “சரி…” என்றவன் மீண்டும் காரை தன்னுடைய வீட்டை நோக்கி செலுத்தத் தொடங்கினான்.
சற்று நேரத்தில் அவள் சீட்டில் சாய்ந்து உறங்கிவிட, அவளைத் திரும்பிப் பார்த்த கதிரின் விழிகளில் வியப்பு தெரிந்தது.
‘அஞ்சலிக்கும் இவளுக்கும் சிறிதளவு கூட வித்தியாசமே தெரியவில்லையே…’ என எண்ணியவன் தன் பார்வையைத் திருப்பிக்கொண்டான்.
சற்று நேரத்தில் அவள் உறக்கத்தில் அவனுடைய தோளில் தலை சாய்த்துவிட,
காரை ஓரமாக நிறுத்தியவன் அவளுடைய தலையை மெல்ல தன் தோளிலிருந்து எடுத்து சீட்டில் வைத்தவன் மீண்டும் காரை செலுத்தத் தொடங்கினான்.
சற்று நேரத்தில் அவளுடைய தலை மீண்டும் கதிரின் தோளின் மீது சாய்ந்தது.
ஒரு கணம் எரிச்சல் அடைந்தாலும், உறங்கிக் கொண்டிருப்பவளை எழுப்புவது தவறு என எரிச்சலை அடக்கிக் கொண்டு அப்படியே வண்டியை செலுத்தினான் அவன்.
உறங்குவது போல நடித்துக் கொண்டிருந்த மதுராவின் மனமோ குதூகலித்தது.
சற்று நேரத்தில் தன்னுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான் அவன்.
அஞ்சலியோ அவனுக்காக காத்திருந்தவள், அவனுடைய காரின் சத்தம் கேட்டதும் வேகமாக வெளியே ஓடி வந்தாள்.
அங்கே தன்னுடைய கணவனின் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த மதுராவைக் கண்டதும், அவளுடைய முகம் அதிர்ச்சியைத் தத்தெடுத்துக் கொண்டது.
சட்டென இதயத்தில் ஒரு விதமான வலி உண்டாக, தவித்துப் போனாள் அந்தப் பேதை.
இறங்கி இருந்த காரின் கண்ணாடியூடாக உள்ளே இருந்தவாறே தன் மனைவியைப் பார்த்த கதிருக்கு அவளுடைய முகம் சட்டென வாடியது தெரிந்து போனது.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்