24. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

4.9
(16)

வரம் – 24

“ஏய் நான் எதுவும் திருடலடி… இவர் ஏதோ அட்ரஸ் மாறி வந்து இங்கே கேட்டுகிட்டு இருக்காரு..” என அப்போதும் தெனாவட்டாக வீரா கூற அடுத்த நொடியே அந்த பிரம்பு நாற்காலியில் இருந்து எழுந்தவன் வீராவின் வயிற்றில் எட்டி உதைத்தான்.
அரவிந்தன் உதைத்த வேகத்தில் அப்படியே அவன் தரையில் விழ அவனை நெருங்கி அவனுடைய நெஞ்சின் மீது தன் காலைப் பதித்தவன்,

“டேய் ரெண்டு கொலைய அசால்டா பண்ணிட்டு எதுவுமே தெரியாதவன் மாதிரி நடிக்கிறியா..?” என அரவிந்தன் கோபத்தில் கத்த,

இலகுவாக தன் நெஞ்சில் பதிந்திருந்த அவனுடைய காலை அகற்றியவன் அரவிந்தனுக்கு நேர் எதிரே துணிவாக எழுந்து நின்றான்.

“உன்கிட்ட என்ன ஆதாரம் இருக்கு..?” என வீரா எகிற,

பளார் என மீண்டும் வீராவின் கன்னத்தில் அறை விழுந்தது.

“இந்த சிம் கார்டுடா… அன்னைக்கு நீ பார்ட்டில கழட்டி போட்ட உன்னோட ட்ரெஸ்ல இது இருந்துச்சு… இது நீ யூஸ் பண்ணது தானே..?” என அந்த சிம் கார்டை எடுத்து வீராவிடம் காட்ட அவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

“எப்படியும் நீ கழட்டி போட்ட ட்ரெஸ்ஸ வச்சு உன்னோட சரித்திரத்தையே போலீஸால கண்டுபிடிக்க முடியும்.. நீ என்ன பொய் சொல்லி நடிச்சாலும் நாளைக்கு ரிப்போர்ட் வந்ததும் எல்லா உண்மையும் தெரியதான் போகுது…” என்றான் அரவிந்தன்.

எப்போதும் எந்தத் தவறு செய்தாலும் ஆதாரத்தை மிக அவதானமாக அழித்து விடுபவன் அன்று மட்டும் முட்டாள் தனமாக தன் ஆடையை அங்கேயே கழற்றி விட்டு வந்ததை எண்ணி நொந்து போனான்.

அன்று அவனுடைய சிந்தனை முழுவதும் வைரம் விற்பதிலேயே குறியாய் இருக்க ஆதாரங்களை அகற்ற அவன் மறந்தே போனான் போலும்.

‘சே… சிக்கிட்டேன்…’ என அச்சத்தோடு மனதுக்குள் எண்ணியவன் அரண்டு போய் அரவிந்தனைப் பார்க்க அரவிந்தனின் முகத்திலோ கேலி புன்னகை படர்ந்தது.

“ஐயோ.. ஐயா நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் அவர் கிடையாது… வேலைக்கு போக மாட்டாரே தவிர மத்தபடி அவர் மேல எந்த தப்பும் இருக்காதுய்யா… கொலை பண்றது திருடுறது எல்லாம் அவர் நினைச்சுக் கூடப் பாக்க மாட்டாரு… இவரு அப்பாவிங்க.. விட்ருங்க.. நாங்களே ரொம்ப கஷ்டத்துல இருக்கோம்.. நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு வந்து பேசுறீங்கன்னு தோணுது…” என அழுகையோடு வீராவின் மனைவி கூற,

“யாரு இவனா அப்பாவி..? சைக்கோ கில்லர் இவன்… எங்களுக்குத் தெரிஞ்சு இப்போதைக்கு ரெண்டு கொலை பண்ணி இருக்கான்… இன்னும் எத்தனை பேர்ன்னு இனித்தான் கண்டுபிடிக்கணும்…”

“இல்லைய்யா நிச்சயமா நீங்க சொல்ற மாதிரி இருக்காது..”

“ஏய்… உஷ்ஷ்… அதான் நான் சொல்றேன்ல மறுபடியும் மறுபடியும் என்னை எதிர்த்து பேசுறியா.. இதுக்கு மேல ஏதாவது பேசின பொம்பளைன்னு கூட பார்க்க மாட்டேன்..” என்றவன் அந்த வீடு முழுவதையும் சல்லடை போட்டுத் தேட ஆரம்பிக்க வீராவுக்கு உடல் வியர்த்துப் போனது.

ஒவ்வொரு இடமாகக் தேடிக் கொண்டே வந்தவன் சாக்குப் பையை நெருங்க வீராவோ சட்டென இடை புகுந்தான்.

“சார் நீங்க தப்பு மேல தப்பு பண்றீங்க… அதுதான் இங்கே எதுவும் இல்லைன்னு நான் சொல்லிட்டேன்ல…. அதுக்கு அப்புறமா எப்படி நீங்க எங்க வீட்ல வந்து இப்படி நடந்துக்கலாம்..?” என வீரா நல்லவன் போல அவனுடைய தேடுதல் வேட்டையை இடைநிறுத்திப் பேச,

ஒற்றைக் கையால் அவனைத் தள்ளி விட்டவன் சாக்குப் பையை நெருங்கி அதைத் தூக்கி கவிழ்த்துக் கொட்ட அதற்குள் இருந்து தரையில் விழுந்தது அந்த ரெட் ரீபெல் வைரத்தை தாங்கிய அழகிய கிரீடம்.

“சோ நீதான் அந்தத் திருடன்.. நைஸ்..” என சிரித்த அரவிந்தனோ கீழே விழுந்த வைரத்தைப் பார்த்தான்.

அரவிந்தனின் விழிகள் கூட ஒரு கணம் அதிர்ச்சியில் அசைய மறுத்தன.

இத்தனை நாட்களாக புகைப்படத்தில் மாத்திரம் பார்த்த அந்த வைரத்தை முதன்முறையாக தன்னுடைய கையில் ஏந்திக் கொண்டான் அரவிந்தன்.

அவனுக்கோ உடல் சிலிர்த்தது.

உலகின் மிகப்பெரிய பழமையான விலை மதிப்பில்லாத வைரங்களில் இதுவும் ஒன்று அல்லவா..?

அரவிந்தன் தன்னை மறந்து வைரத்தைப் பார்த்த வண்ணம் நிற்க அடுத்த கணம் பாய்ந்து அரவிந்தனின் முகத்தில் குத்திய வீராவோ அவனைக் கீழே விழுத்தி விட்டு தன்னுடைய கூரான ஆயுதத்தைத் தேட,

அரவிந்தனின் துப்பாக்கியோ கீழே விழுந்தது.

அதற்குள் நொடியில் அவனை சமாளித்து விட்டு எழுந்த அரவிந்தனோ வீராவின் கரங்களை மடக்கி அவனைத் தரையில் வீழ்த்தினான்.

அடுத்த கணம் அரவிந்தனின் கரங்கள் கீழே விழுந்து கிடந்த வீராவின் முகத்தில் வேகமாக குத்துக்களை தொடர்ந்து வழங்கின.

வீராவின் மூக்கு உடைந்து உதிரம் கொடகொடவென கொட்டத் தொடங்க,
இவ்வளவு நேரமும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்த அவனுடைய மனைவியோ கீழே விழுந்து கிடந்தவனின் பனியனை இறுக்கிப்பிடித்து,

“யோவ் என்னய்யா இது…? இத நீதான் திருடினியா..?” எனப் பதறியவாறே கேட்டாள்.

அக்கணம் அரவிந்தனின் கவனம் அவள் மீது பதிய நொடியில் தன்னுடைய கால்களால் அரவிந்தனை எட்டி உதைத்து விட்டு எழுந்து நின்றவன் கீழே விழுந்து கிடந்த துப்பாக்கியைத் தன் வசமாக்கிக் கொண்டான்.

“ஆமாடி நான்தான்டி திருடினேன் தே******யா எத்தனை மாசமா என்கிட்ட காசு வாங்கி தின்னியே அது எல்லாமே திருடினது தான்.. இப்போ அதுக்கு என்னடி…? என்ன பண்ணப் போற….?” என அவளைப் பார்த்துக் கத்தியவன் இப்போது அரவிந்தனைப் பார்த்தான்.

“நீ இந்த சின்ன சிம் கார்ட வச்சு என்ன கண்டுபிடிச்சதெல்லாம் சரிதான்… ஆனா இப்படி ஒத்தையா வந்து தப்பு பண்ணிட்டியே மச்சி..” என்றவன் தன்னுடைய கூரான கத்தியை வெளியே எடுத்தான்.

அந்த ஆயுதத்தைப் பார்த்ததும் அரவிந்தனின் விழிகளோ விரிந்தன.

“சோ கொலை பண்ணதும் நீதான்..”

“ஆமாடா நான்தான் கொலை பண்ணேன்… ரெண்டு இல்ல இதுவரைக்கும் ஏழு கொலை பண்ணிருக்கேன்… இதுவரைக்கும் எவனும் என்ன கண்டு பிடிக்கவே இல்லை.. நீதான் கண்டுபிடிச்சு வந்து தப்பு பண்ணிட்ட..” என்றவன் அரவிந்தனின் கழுத்தில் அந்த கத்தியை அழுத்தமாகப் பதித்தவாறு வாய்விட்டுச் சிரித்தான்.

“இதுவரைக்கும் ஏழு கொலையா இருந்திச்சு… இப்போ உன்னோட சேர்த்து எட்டாவது கொலையா மாறப்போகுது..” என வீரா வில்லன் சிரிப்பு சிரிக்க நிலைமை கை மீறியது.

**********

நான்கு நாட்களுக்குப் பிறகு..!!

தன்னை ஆட்கொண்ட மிகப்பெரும் துயரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருந்தாள் மோஹஸ்திரா.

தந்தையின் பிரிவொன்றும் அவ்வளவு சாதாரணமல்லவே..!

அந்த வேதனை அவளுடைய மனதை மட்டும் அல்லாமல் உடலையும் சேர்த்தே உருக்கியது.

அவர்களுடைய வீட்டிற்கு முன்புறம் அமைக்கப்பட்டிருந்த சிறிய தோட்டத்திற்கு மத்தியில் இருந்து ஊஞ்சலில் பலத்த சிந்தனையோடு அமர்ந்திருந்தாள் அவள்.

வாழ்க்கையே குழப்பிப்போனது போல இருந்தது.

அனைத்தையும் எப்படி சரி செய்வது என்று கேள்வி அவளைத் தினம் தினம் வாட்டி வதைத்தது.

ஷர்வாதிகரனோ மோஹஸ்திராவின் பிஸ்னஸ் லாஸ் ஆனதுக்கான காரணத்தை அடி முதல் நுனிவரை கண்டுபிடித்திருந்தவன் அவற்றை சரி செய்வதற்கான ஆரம்ப அடித்தளங்களை செய்து முடித்திருந்தான்.

லேப்டாப்பை மூடிவிட்டு பால்கனியில் வந்து நின்று தன் கரங்களை நீட்டி சோம்பல் முறித்தவன் அங்கே ஊஞ்சலில் பதுமை போல அமர்ந்திருந்த தன்னவளைக் கண்டதும் அவளுக்கோ கண்கள் பணித்தன.

வெண்ணிற டிஷர்ட் ஒன்றையும் கறுப்பு நிறத்தில் பையாமா ஒன்றையும் அணிந்து சோகப் பதுமை போல தோட்டத்தில் அமர்ந்திருந்தவளை அள்ளி அணைக்க வேண்டும் போல எழுந்தது பேரார்வம்.

அடுத்த கணமே அவளை நோக்கி தோட்டத்திற்குச் சென்றான் அவன்.

அவளுடைய சிந்தனைகளை இடைநிறுத்தும் வண்ணம் அவள் அமர்ந்திருந்த ஊஞ்சலைத் தன் கைகளால் பற்றிக் கொண்டான் ஷர்வாதிகரன்.

“ஹாய்…” என்ற அவனுடைய மென்மையான குரலில் வந்திருப்பது யாரெனத் தெரிந்து கொண்டாற் போல தலையை மெலிதாக அசைத்தவள் அவனைத் திரும்பி பார்த்தாள்.

“ஆர் யு ஓகே நவ்..?”

“தெ… தெரியல ஷர்வா…” என்றாள் அவள்.

அவனோ ஊஞ்சலைச் சுற்றி வந்து அவளுக்கு அருகே மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டவன் அவளுடைய ஒற்றைக் கரத்தைப் பற்றித் தன் கரங்களுக்குள் பொதித்துக் கொண்டான்.

“இப்படித்தான் நடக்கணும்னு இருக்கிற சில விஷயங்களை நம்மளால மாத்தவே முடியாது… முக்கியமா கடந்த காலத்தை நம்மளால மாத்த முடியாது மோஹி… நடந்த முடிஞ்சத கடந்து வரணும்… இப்படியே நீ சோகமா இருக்கிறத உங்க அப்பா பாத்தா நிச்சயமா வருத்தப்படுவார்… இதுல இருந்து வெளியே வா..” எனக் கூறியவாறே அவளுடைய கரத்தில் அழுத்தம் கொடுக்க அவளுக்கு அந்த நேரம் அவனுடைய ஆறுதல் மிகப்பெரும் பலத்தைக் கொடுப்பது போல இருந்தது.

தன்னை மீறி அவனுடைய கரத்தில் முகத்தை புதைத்துக் கொண்டவள் கண்ணீரை சிந்தத் தொடங்க தன் கரத்தில் மலர்கொத்தைப் போல வந்து விழுந்த அவளுடைய முகத்தை அள்ளி எடுத்து தன் மார்பில் புதைத்துக் கொண்டான் அவன்.

“ஐ அம் ஆல்வேஸ் வித் யூ… எத நினைச்சும் நீ கவலைப்படணும்னு அவசியம் கிடையாது.. உனக்காக நான் இருக்கேன்…” என அர்த்தமான வார்த்தைகளை அவன் கூற சட்டென அவனுடைய மார்பிலிருந்து தன்னுடைய முகத்தை பதறி விலக்கினாள் அவள்.

“சா..சாரி..” என படபடப்போடு அவள் உரைக்க,

“நீ எதுக்கு சாரி சொல்ற..? நீ என்கிட்ட சாரி சொல்லணும்னு எந்த அவசியமும் கிடையாது…” என்றான் அவன்.

“இல்ல நான் உங்கள ரொம்ப தொல்லை பண்ணிட்டேன்னு தோணுது.. பிஸ்னஸ்ல ஹெல்ப் பண்றேன்னு வந்தவரை கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்துட்டேன்… உங்களுக்கும் உங்க வாழ்க்கை பத்தி ஆசை இருந்திருக்கும்… உங்க குடும்பத்துக்கு இதெல்லாம் தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்கதானே… சாரி ஷர்வா.. நான் இது எதையுமே எதிர்பார்க்கல. கூடிய சீக்கிரமே உங்கள என்னோட பிரச்சனையிலிருந்து ரிலீஸ் பண்ணிடுறேன்…”

“ஆரம்பத்துல சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க… பட் இப்போ புரிஞ்சுகிட்டாங்க… நாளைக்கு நம்மள அங்க வர சொல்லி இருக்காங்க.. நான் பிஸ்னஸ்ல ஹெல்ப் பண்ணனும்னு வந்ததே உனக்காகத்தான்… உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு எந்த வருத்தமும் கிடையாது… ஏன்னா நான் உன்ன உயிருக்கு உயிரா நேசிக்கிறேன்…” எனக் கூறியவன் அதிர்ந்து பார்த்தவளின் கன்னத்தில் அழுத்தமாக தன் அதரங்களைப் பதித்து விட்டு நிமிர இவளுக்கௌ உடல் நடுங்கத் தொடங்கியது.

என்ன வார்த்தை சொல்லிவிட்டான்..? என அதிர்ந்து பதறியவளுக்கு அப்போதுதான் அவன் தன்னுடைய கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டது புரிந்தது.

சட்டென வேகமாக தன்னுடைய கன்னத்தை துடைத்துக் கொண்டவள்,

“எ… என்ன பேசுறீங்க..? இதெல்லாம் ஜஸ்ட் நாடகம்தானே…? நமக்கு நடந்தது போலி கல்யாணம்தானே…? இதை எதுக்கு வீட்ல சொன்னீங்க…?” என அவள் பதறிப் போய் கேட்க,
அடுத்த நொடி அவனுடைய முகம் பாறை போல இறுகியது.

“போலிக் கல்யாணம்… நாடகம்னு நான் சொன்னேனா…?” என அவன் கர்ஜனையோடு கேட்க அவள் உடலோ தூக்கி வாரிப் போட்டது.

பயந்து போய் சட்டென ஊஞ்சலில் இருந்து கீழே இறங்கி நின்றவள் பெரும் அதிர்ச்சியோடு அவனைப் பார்க்க அவளை நெருங்கி வந்து அவளுடைய கன்னத்தை ஒரு கரத்தால் அழுத்தமாக பற்றிக் கொண்டவன்,

“எனக்கு கல்யாணம் நடந்தா அது ஒரு தடவைதான் நடக்கும்… அந்தக் கல்யாணம் இப்போ நடந்து முடிஞ்சிருச்சு… இனி நீ தான் என்னோட மனைவி… இதை யாராலும் மாற்ற முடியாது…” என்றவன் அவளுடைய கன்னத்தில் தட்டி விட்டு அங்கிருந்து சென்று விட இவளுக்கோ சற்று நேரத்தில் எதுவுமே புரியவில்லை.

உலகமே தன் சுழற்சியை நிறுத்தினாற் போல அசைவற்று அப்படியே சிலை போல நின்று விட்டாள் அவள்.

💜💜💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

1 thought on “24. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!