முள் – 24
தாங்க முடியாத வேதனையை அடக்கப் போராடிக் கொண்டிருந்தவனைத் தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டாள் சாஹித்யா.
அவன் துடித்தால் இவளுக்கும் உயிர் துடிக்கின்றதே.
அவன் நேத்திரங்களில் உவர் நீர் வழிந்தால் இவளுக்கு உதிரமல்லவா நெஞ்சில் பெருக்கெடுக்கின்றது.
என்ன செய்வது உயிருக்கு உயிராக நேசித்து விட்டாளே.
அவள் உயிர் கண் முன்னே துடித்துக் கொண்டிருக்கும் போது அவளால் வேடிக்கைதான் பார்க்க முடியுமா..?
அவன் வலியில் துடிப்பதைத் தாங்க முடியாது தாய்மை பெருக்கெடுக்க, சோபாவின் அருகே நின்றவாறே அவனுடைய தலையைப் பற்றி தன் வயிற்றில் சாய்த்தவள் அப்படியே அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
“ப்ளீஸ் அம்மு அப்படியே இருங்க.. ரெண்டே ரெண்டு நிமிஷம் ப்ளீஸ்..”
அதிர்ந்து விலக முயன்றவனை அவளுடைய வார்த்தைகள் கட்டிப் போட்டன.
“அழுதது கவலைப்பட்டது எல்லாமே போதும்.. இவ்வளவு நாளும் மத்தவங்களுக்காக வாழ்ந்துட்டீங்க.. அவங்களுக்கு உண்மையா இருந்தீங்க.. அவங்களுக்காக பணத்தை சேமிக்க வேலை பின்னாடி ஓடினீங்க.. இப்போ அவங்கள நினைச்சு மீள முடியாத வலியில தவிக்கிறீங்க.. எல்லாமே போதும்.. இந்த வலி வேதனை தவிப்பு துடிப்பு ஏக்கம் இது எல்லாமே போதும்..
தயவு செஞ்சு இதுல இருந்து வெளியே வாங்க அம்மு.. உங்களோட எல்லா கவலையையும் இல்லாம பண்ணிடலாம்.. மனச அழுத்துற வேதனைய மறந்து போயிடலாம்..
உங்களுக்காக பாப்பா இருக்கா.. நா.. நான் இருக்கேன்.. கடைசி வரைக்கும் நாங்க இருப்போம்.. நடந்து முடிஞ்சத நினைச்சு நீங்க இப்படி உடைஞ்சு போனா உங்களோட உடல்நிலதான் மோசமாகும்.. எங்களுக்கு இப்போ நீங்க மட்டும் தானே இருக்கீங்க… நீங்க நல்லா இருந்தா தானே நாங்க நல்லா இருப்போம்.. எங்களுக்காகவாவது கொஞ்சம் மாறலாமே..” என அவள் மெல்லிய குரலில் கூற அக்கணம் அவளுடைய வார்த்தைகள் அவனுக்கு மருந்தாகித்தான் போயின.
“க.. கஷ்டமா இருக்கு சாஹிம்மா..”
“எல்லாருக்கும் வாழ்க்கப் பாத பூவால நிறைஞ்சி இருக்காதுங்க.. முள் எல்லாத்தையும் கடந்து போறது தானே வாழ்க்கை.. பாதியிலேயே நின்னு இந்த பாதைல போறது ரொம்ப கஷ்டமா இருக்குன்னா எப்படி நம்மளால நம்ம வாழ்க்கையோட இலக்கை அடைய முடியும்..?
எல்லாத்தையும் கடந்துதான் ஆகணும் அம்மு.. எல்லா வலிகளும் ஏதோ ஒரு புள்ளியில் சரியாயிடும்.. கண்டிப்பா முள்ளுல கூட ஏதாவது ஒரு நாள் தேன் சுரக்கத்தான் செய்யும்.. வெளிய வாங்க.. எல்லாத்தையும் மறந்து புது மனுஷனா உங்களுக்காக வாழ ஆரம்பிங்க..” என்றவளின் கரம் தன் வயிற்றில் முகம் புதைத்திருப்பவனின் கேசத்தை கோதி விட்டது.
இருவருக்கும் இடையே மௌனம்.
அவளோ நெகிழ்ந்து போயிருந்தாள்.
அவனோ அவளுடைய அணைப்பில் தன் வலியைப் போக்க முயன்று கொண்டிருந்தான்.
அவர்களுக்கு இடையே இருந்த ஒதுக்கம் முதல் முறையாக உடைந்த தருணம் அது.
அதே கணம் குழந்தை அழத் தொடங்கி விட சட்டென அவளிடமிருந்து விலகியவனுக்கோ ஒரு மாதிரியாகிப் போனது.
கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக அவளுடைய வயிற்றில் முகம் புதைத்திருக்கிறோம் என்பது புரிய தடுமாறிப் போனவன் அவளுடைய முகத்தைப் பார்க்க முடியாது வேறு புறம் பார்த்துக் கொண்டே “சாரி சாஹித்யா..” என்றான்.
அவளோ வேகமாக தொட்டிலை நோக்கி ஓடியவள் அழுது கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.
“என்னடி தங்கப்பட்டு..? எதுக்கு அழுதீங்க..? எங்க தங்க மயிலுக்கு பசி வந்துருச்சா..?” என கைகளில் தூக்கி வைத்தவாறு அவள் கொஞ்சத் தொடங்கி விட குழந்தையோ அவளுடைய கொஞ்சலில் சிரித்தது.
“அம்மு..” குழந்தையை பார்த்தவாறே அவனை அழைத்தாள் அவள்.
அம்மு என்ற அழைப்பில் அவன் திகைத்து நிமிர,
“உங்க பொண்ணு இருக்காளே செம கேடி.. கொஞ்ச நேரம் பெட்லையோ தொட்டில்லையோ படுத்துக்கவே மாட்டா… நாம யாரவது பக்கத்துல இருக்கோம்னு தெரிஞ்சா உடனே அழ ஆரம்பிச்சிடுவா.. அவளுக்கு எப்பவுமே நாம தூக்கி வச்சிருந்தா மட்டும்தான் பிடிக்கும்.. இப்ப பாருங்க தூக்கினதும் சிரிக்கிறத..” என அவனிடம் கூறியவாறு குழந்தையைக் காட்ட அவனுக்கும் உதடுகளில் சிரிப்பு தவழ்ந்தது.
“என்ன சிரிக்கிறீங்க..? நான் சொன்னத நம்பலையா..?” எனக் கேட்டாள் அவள்.
இல்லை என்பது போல அவன் தலையசைக்க அவனை முறைத்துப் பார்த்தவள்,
“இப்போ பாருங்க..” எனக் கூறிவிட்டு,
“ஓகேடா தங்கமயிலு.. நீங்க கொஞ்ச நேரம் சமத்தா தூங்குங்க…” என்றவள் வேண்டுமென்றே குழந்தையைத் தொட்டிலில் போட்டுவிட்டு தள்ளி நிற்க இவ்வளவு நேரமும் சிரித்துக் கொண்டிருந்த குழந்தையோ மீண்டும் அழத்தடங்கி விட்டது.
சிரித்தவாறு தொட்டிலை நெருங்கியவன் தன் மகளைத் தன் கரங்களில் அள்ளிக் கொண்டான்.
“அடடா இதுக்குத்தான் அடிக்கடி அழறாளா..?” எனக் கேட்டவனின் முகம் இப்போது நன்றாகவே மலர்ந்திருந்தது.
“ம்ம்… நான் காலேஜ் விட்டு வரும்போது பெட்ல படுத்திருப்பா.. ட்ரெஸ் மாத்தலாம்னு அவளத் தாண்டி உள்ள போனா போதும்.. அவளைத் தூக்காமா நம்மளால நகரவே முடியாது.. அந்த அளவுக்கு அழ ஆரம்பிச்சிருவா. இப்போ எல்லாம் அவளுக்கு நல்லாவே பேசுறது புரியுது… அவளால முடிஞ்ச அளவுக்கு தெரிஞ்ச வார்த்தையை வச்சு பதில் சொல்ல ஆரம்பிக்கிறா..” என பூரித்தபடி பேசியவளை அருகே அழைத்தான் அவன்.
திடீரென அவன் தன்னை கண்களால் அழைக்கவும் திகைத்து நின்று விட்டாள் அவள்.
“எ… என்ன..?”
“இங்க வா..” என மீண்டும் அழைத்தான் அவன்.
அவனுடைய ஆழ்ந்த பார்வையில் அவளுக்கு தேகம் படபடத்து விட்டது.
இவ்வளவு நேரமும் சிரித்துச் சிரித்து பேசிக் கொண்டிருந்தவள் அப்படியே சிரிப்பை விழுங்கிவிட்டு அவன் அருகே வந்து நின்று அவனை என்ன என்பது போல பார்க்க,
அவளுடைய தலையை பாசமாக வருடி விட்டவன் “யூ ஆர் அன் ஏஞ்சல்..” என்றான்.
அவளுக்கு விழிகள் விரிந்தன.
அவளுடைய செவிகளில் விழுந்த வார்த்தைகளை சட்டென அவளால் நம்ப முடியவில்லை.
புரியவில்லை என்பது போல தலை அசைத்து “என்ன சொன்னீங்க..?” என இமை சிமிட்டாவது கேட்க அவனுக்கோ மேலும் உதடுகள் புன்னகையில் விரிந்தன.
“நீ ஒரு தேவதைன்னு சொன்னேன்..”
“நா.. நானா ஆனா நான் ஏன்..?” அவனைப் பார்க்க முடியாது தன் பார்வையை சற்றே அவனுடைய மார்புக்கு தாழ்த்தியவள் திணற,
“உனக்கு தேவதை கதை தெரியாதா..?” எனக் கேட்டான் அவன்.
இல்லை என மறுப்பாக தலை அசைத்தவளுக்கு உள்ளுக்குள்ளே உள்ளம் பூரிக்கத் தொடங்கி விட்டது.
“தேவதைகள் எப்பவுமே சுயநலம் இல்லாதவங்க… அடுத்தவங்க நல்லத பத்திதான் அடிக்கடி சிந்திப்பாங்க.. எல்லாருக்குமே உதவுவாங்க.. ரொம்ப நல்ல மனசு படைச்சவங்க.. இதெல்லாம் தேவதையோட குணங்கள்னு நான் சின்ன பையனா இருக்கும்போது எங்க அம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க…” என சிரிப்போடு கூறினான் அவன்.
“சின்ன வயசுல கதை எல்லாம் கேட்பீங்களா..?” என அவனை தலை சரித்து பார்த்தாள் அவள்.
“கேட்கக் கூடாதா என்ன..? கதை கேட்டாதான் எனக்கு தூக்கமே வரும்.. அடிக்கடி அம்மாகிட்ட ஏதாவது கதை சொல்லச் சொல்லி கேட்டுகிட்டே இருப்பேன்.. அதெல்லாம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.. டைனோசர் கதை தேவதை கதைன்னு இப்படி நிறைய..” என்றவனுக்கு எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் நடந்த தன்னுடைய சிறுவயது நினைவுகள் எழ தலையசைத்து சிரித்துக் கொண்டான் அவன்.
அவனுடைய சிரிப்பை அவன் அறியாது ரசித்தாள் அவள்.
“அந்தக் கதைல கேட்ட தேவதையோட எல்லா குணமும் உன்கிட்ட இருக்கு..” என்றவன்
“நீ எப்பவும் நல்லா இருக்கணும்..” எனக் கூறிவிட்டு குழந்தையுடன் அவளைத் தாண்டிச் சென்றுவிட அந்த நொடியை விட்டு வெளியே வர விருப்பம் இன்றி அப்படியே உறைந்து போய் நின்று விட்டாள் அவள்.
துள்ளிக் குதிக்க வேண்டும் போல இருந்தது.
ஆனந்தத்தில் கூச்சலிட்டு கத்தவேண்டும் போல இருந்தது.
மனதுக்குப் பிடித்தவன் தேவதை எனப் பாராட்டி விட்டுச் சென்றால் ஆனந்தமாகத் தானே இருக்கும்.
ஆனந்தம் என்று மட்டும் சொல்ல முடியாது. அது வார்த்தைகளால் வடிக்க இயலாத அளவிற்கு பேரானந்தம்.
உள்ளம் முதல் உடல் வரை தித்தித்த தருணம் அது.
கன்னங்கள் சிவந்தன.
ஏதோ ஆயிரக்கணக்கான மக்களின் கூட்டம் அங்கேயே நின்று அவளுடைய முகத்தையே உற்றுப் பார்ப்பது போல வெட்கம் கொண்டு தன் கரங்களால் முகத்தை மூடிக்கொண்டு சிரித்தாள் அவள்.
பின் சட்டென சுதாரித்து தன் கையை கீழே இறக்கியவள் ‘நல்ல வேள அவர் பாக்கல..’ என நினைத்தவாறு வேகமாக தன்னுடைய அறைக்குள் ஓடிச் சென்று படுக்கையில் தொப்பென விழுந்தாள்.
அந்த நொடி அவளுடைய கால் வலி கூட அவளுக்கு மறந்து தான் போனது.
மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் போது கால்களின் வலி என்ன தெரியவா போகின்றது..?
அருகே இருந்த தலையணையை அணைத்து அதில் தன் முகத்தை புதைத்துக் கொண்டவள் மீண்டும் மீண்டும் அவன் கூறிய வார்த்தைகளை நினைத்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள்.
அவளுடைய அம்முவின் அந்த ஒற்றைப் பாராட்டு அவளுக்கோ வானத்தின் எல்லை அளவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.
Super sis 💞