நந்தினி தவறு செய்த சிறுமி போல பதறிக் கொண்டிருந்தாள்.
“போச்சு போச்சு யாரோ வந்துட்டாங்க..”
யுகேஷ் வர்மாவோ அவளை நெருங்கியவன்,
“இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற..” எனக் கேட்டான்.
“என்ன இப்படி கேக்குறீங்க யாரோ கதவைத் தட்டுறாங்க..” என அவள் கைகளை உதறினாள்.
“ஏய் இடியட்.. நான் உன் புருஷன்டி.. நீ என் கூட தானே இருந்த.. ஏதோ கள்ளக் காதலன் கூட இருந்த மாதிரி எதுக்கு இவ்வளவு பதட்டம்..?” என அவன் கேட்டதும், அவளுக்கோ அப்போதுதான் அது புத்தியில் உறைத்தது.
“என்ன இருந்தாலும் சங்கடமா இருக்காதா..?” எனக் கேட்டாள் நந்தினி.
அவளால் சட்டென நிதானத்திற்கு வர முடியவில்லை.
“ரிலாக்ஸ்.. நீ இங்கேயே இரு.. நான் பாக்குறேன்..” என்றவன், அவளை விட்டு நகர்ந்து சென்று கதவைத் திறந்தான்.
அவள் மறுத்து கூறுவதற்கு முன்பே, “சீக்கிரமா போம்மா.. போய் உன் திங்க்ஸை எடுத்துட்டு வா.. மாப்பிள்ளைக்கு லேட் ஆகுதுல்ல.. நாளைக்கு காலையில டியூட்டிக்கு வேற போகணும்..” என்றார் நிர்மலா.
‘ரைட்டு.. நம்ம மம்மி சந்துல சிந்து பாடுறாங்க..’ என புரிந்து கொண்டவள், பாவமாக தன் தந்தையைப் பார்த்தாள்.
“என்னடாம்மா.. சீக்கிரமா போ..” என அவளுடைய தந்தையும் கூற, இனி மறுத்து எதுவும் கூற முடியாது என உணர்ந்தவள், வர்மாவைப் பார்த்தாள்.
அவனுடைய பார்வை அவளை அழுத்தமாக அளவெடுத்துக் கொண்டிருந்தது.
‘ஐயோ பெருமாளே.. இவன் பாக்குற பார்வையே சரியில்லையே.. இவன் கூட நைட் போனா நம்மை சும்மா விடுவானா..?’ என எண்ணியவளுக்கு கழுத்தோரம் வியர்க்க ஆரம்பித்தது.
“நந்து சீக்கிரம்..” என அழுத்தமாக கூறினார் நிர்மலா.
“சரி போறேன்..” என்றவள், தன் அறைக்குள் சென்று அத்தியாவசிய பொருட்களை எடுத்துக் கொண்டு, தன் ஆடையைப் பார்த்தாள்.
இப்படியே அங்கு செல்ல முடியாது என்பது புரிந்தது.
பெருமூச்சுடன் சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டவள், கீழே வந்த போது, தன் அலைபேசியைப் பார்த்தவாறு சோபாவில் அமர்ந்திருந்தான் வர்மா.
அவள் சுடிதார் அணிந்து வந்ததும், அவனுடைய விழிகளில் ஒரு நொடி ஏமாற்றம் தோன்றி மறைந்தது.
“கிளம்பலாம்..” என்றான் ஒற்றைச் சொல்லாக.
வேகமாக தன் தந்தையை அணைத்தவள்,
“நான் போயிட்டு மறுபடியும் ரெண்டு நாள்ல திரும்பி வரேன்பா..” என்றாள்.
வர்மாவின் பற்கள் நறநறத்தன.
“நாங்க உன்னை பாக்க வர்றோமா..” என அழுத்தமாக கூறினார் நிர்மலா.
அதே கணம் அவளை நோக்கி ஓடி வந்த டோராவைத் தூக்கிக் கொஞ்சியவள், அவனுடன் அங்கிருந்து புறப்பட்டாள்.
“மாப்ள நீங்க இந்த காரை எடுத்துட்டு போங்க.. நாளைக்கு நம்ம ட்ரைவர அனுப்பி எடுத்துக்கறேன்..” என்றார் நந்தினியின் தந்தை.
“தேங்க்ஸ்..” என்றவன், சிறு தலையசைப்புடன் காரில் ஏறிக் கொள்ள, அவன் அருகே அமைதியாக ஏறி அமர்ந்து கொண்டாள் நந்தினி.
இவ்வளவு நேரமும் அவளுடைய வீட்டில் இருந்த சுதந்திரம் அவளை விட்டுச் சென்றது போலிருந்தது.
அவளது வீட்டில் அவளுடைய பெற்றோருக்கு அவள்தான் இளவரசி.. இங்கே அப்படி இல்லையே.
காரில் ஏறியதும் இறுகிப் போனாள்.
காரை செலுத்திக் கொண்டிருந்தவன், தண்ணீர் போத்தலை எடுத்து அவளிடம் நீட்டினான்.
அவளோ புரியாமல் அவனைப் பார்த்தாள்.
“டாக்கை தடவினா ஹேண்ட் வாஷ் பண்ற பழக்கம் இல்லையா..” என்று கேட்டான் அவன்.
அவளுக்கோ சுர்ரென கோபம் வந்தது.
“டாக்னு பேசாதீங்க.. அவ எனக்கு குழந்தை மாதிரி..” என்றாள் கோபமாக.
“குழந்தை பெத்துக்கிற வயசுல இருந்துகிட்டு நாயைக் குழந்தைன்னு சொல்றியே..” என்று கேட்டான் அவன்.
“அவ பேரு டோரா..” என அழுத்தமாகக் கூறினாள் நந்தினி.
“இருந்துட்டுப் போகட்டும்..” என்றவன், அவளிடம் தண்ணீர் போத்தலை திணிக்க, அவள் அதை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டாள்.
அவளுக்கு சலிப்பாக இருந்தது..
மீண்டும் இவனுடன் போராட வேண்டுமோ..?
இவ்வளவு நேரமும் தன்னை அவன் கை நீட்டி அடித்ததற்கு அவளிடம் மன்னிப்புக் கேட்கவே இல்லை.
முத்தம் கொடுத்தால் மட்டும் எல்லாம் சரியாகி விடுமா..?
தன்னைப் பற்றி சிறு சிந்தனையும் இல்லாமல் இருந்தவன் இப்போது எதற்கு அவனுடைய வீட்டிற்கு தன்னை அழைத்துக் கொண்டு செல்கிறான் என்று புரியவில்லை.
அங்கு சென்ற பின்னும் முத்தம் கேட்டு தொல்லை செய்வானோ..?
அவளுடைய மனசாட்சியோ ‘ஏதோ உனக்குப் பிடிக்காத மாதிரி பாவ்லா பண்ற.. அவன் கிஸ் பண்ணும் போது உருகி கரைஞ்சத மறந்து போயிட்டியா..?’ எனக் குத்திக் காட்ட, மனசாட்சியின் தலையில் கொட்டி உள்ளே உறங்கும்படி அனுப்பி வைத்தாள் நந்தினி.
அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் யுகேஷ் வர்மாவின் வீடு வந்து சேர்ந்தது.
மௌனமாக அவனைப் பின் தொடர்ந்து சென்றாள் நந்தினி.
ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சுஜாதாவும் நாதனும், தன் மகனுடன் உள்ளே நுழைந்த மருமகளைக் கண்டு அதிர்ந்து போனார்கள்.
ஆனால் அடுத்த நொடியே அவர்களுடைய முகம் மகிழ்ச்சியால் ததும்பியது.
“நந்தினி வா.. வா.. யார் கூட வந்த..” என ஆவலாகக் கேட்டார் சுஜாதா.
“அவ பக்கத்துல வர்ற நான் உங்க கண்ணுக்கு தெரியலையா..” என அவரைப் பார்த்துக் கேட்டான் வர்மா.
“இல்லப்பா.. நீ டியூட்டிக்கு தானே போன..”
“எங்க போனாலும் இவ கூட தானே வந்திருக்கேன்..”
இவனுடன் பேசினால் வார்த்தைகளால் தன்னை சின்னா பின்னமாக்கி விடுவான் என உணர்ந்து, தலையை அசைத்தார் சுஜாதா.
அவனோ அழுத்தமான பார்வையுடன் அவர்களைக் கடந்து சென்று விட, அவன் சென்ற அடுத்த கணமே, “என்னம்மா ஆச்சு.. இவன் கூட வந்திருக்க..” என விசாரித்தார் அவளுடைய மாமியார்.
“ஆமா அத்தை.. விருந்து கூட சாப்பிட்டாரு..” என்றாள் சிரித்தபடி.
சுஜாதாவுக்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது.
“ஏங்க உங்க பையன் முதன் முறையா வெளியே சாப்பிட்டு வந்திருக்கான்..” என அதிசயமாக அவர் கூற, நாதனுக்கோ ஆச்சரியமாகத்தான் இருந்தது.
அவர்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்குத் தானே அவனை சாப்பிட வைக்க என்னவெல்லாம் செய்தாள் என்று தெரியும்.
“சரிமா சரி.. ரொம்ப தூரம் டிராவல் பண்ணி வந்திருப்பீங்க.. நீ சாப்பிட்ட தானே..”
“ஆமா அத்தை.. சாப்பிட்டேன்..”
“சரிம்மா.. போய்த் தூங்கு.. நாளைக்கு காலைல பேசலாம்..” என அவர் கூற, அவரிடம் தலை அசைத்து விட்டு, மாமனாரையும் பார்த்து சிறு புன்னகையை உதிர்த்தவள், தயங்கித் தயங்கி படிகளில் ஏறினாள்.
மீண்டும் சிங்கத்தின் குகைக்குள் நுழைவது போலிருந்தது.
இப்போது என்ன செய்வது..?
இயல்பாக அவனை எதிர்கொள்ள வேண்டுமா.?.
அன்று அவளைத் தொட மாட்டேன் என்று அல்லவா கூறினான்.
ஆனால் இன்று அவளுடைய வீட்டில் சற்று எல்லை மீறித் தானே நடந்து கொண்டான்.
அவளுடைய அன்னை மட்டும் அந்த நேரத்தில் கதவைத் தட்டவில்லை என்றால் நிச்சயம் தன்னை முழுவதும் ஆண்டு முடித்த பின்னரே விலகியிருப்பான் என்பது அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது.
மீண்டும் அவன் தன்னை நெருங்கினால் என்ன செய்வது..?
தாம்பத்தியம்தான் கணவன் மனைவியை இணைக்கும் நெருங்கிய பாலம் என்று யாரோ கூறியது நினைவில் வந்தது.
இப்போது மனம் ஒப்பாமல் இருக்கும் கணவன், அவளுடன் இயல்பாக சேர்ந்து வாழ ஆரம்பித்தால் மாறி விடுவானோ என்ற எண்ணம் பிறந்ததும் அவன் தன்னை நாடினால் தடுக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தாள் நந்தினி.
அவளும் சாதாரண பெண் தானே..
கணவனுடன் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையை வாழவே விரும்பினாள்.
ஏதேதோ சிந்தித்து, அவனுடைய அறையின் முன் வந்தவள், கதவைத் தட்டி விட்டு உள்ளே சென்றாள்.
அவனோ ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து அறையில் நின்றிருந்தான்.
அவளோ அவனைப் பார்க்காமல், தன் ஹேண்ட் பேக்கை மேசையில் வைத்தவள் திரும்பிய போது தனக்கு மிக அருகே நின்ற வர்மாவைக் கண்டு அதிர்ந்து போனாள்.
“எ.. என்ன..” என திக்கித் திணறி கேட்டவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன்,
“ஐ நீட் யு நந்தினி..” என்றான்.
அவளோ இவ்வளவு வெளிப்படையான அழைப்பை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
“ஆனா..” என அவள் எதையோ கூற முயற்சிக்க,
தன்னுடைய ஆட்காட்டி விரலை அவளுடைய உதடுகளில் பதித்து எதுவும் பேசாதே என்பது போல தலையை இரு பக்கமும் அசைத்தவன்,
இன்னொரு கையால் அவளுடைய கழுத்தை மென்மையாக வருடினான்.
அவளுக்கோ உடல் முழுவதும் சிலிர்த்தது.
முகம் சிவக்க தலை குனிந்தாள் மாது.
நந்தினியின் வீட்டில் வைத்து பேயாட்டம் போட்ட உணர்வுகளை மிகவும் சிரமப்பட்டு சில மணித்துளிகளுக்கு அடக்கி வைத்திருந்தவன் அவளைத் தன்னுடைய அறையில் தனிமையில் சந்தித்ததும் வெடிக்கத் தயாராகும் நிலையில் இருந்தான்.
“எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம் நந்தினி.. இந்த ஃபீலிங்ஸ் எனக்கு ரொம்ப புதுசு..” என்றவனின் கரம் அவளுடைய இடையை வளைத்துக் கொண்டது.
அவனுடைய விருப்பத்திற்கு மெல்ல இணங்கினாள் அவள்.
வெறும் உடல்களின் சேர்க்கையால் திருமண வாழ்க்கை மகிழ்ந்து விடாது என்பது அக்கணம் நந்தினிக்குப் புரியவில்லை.
1 comment
Super super super super super super super super super super super