அறையின் சுவற்றில் கடிகார ஊசி மெதுவாக நகரும் ஒலி மட்டும் கேட்டது.
கருணாகரனும், காயத்ரியும் கார்த்திகேயன் கூற போகும் பதிலுக்காக அமைதியாக அவனது முகத்தை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
கார்த்திகேயன் மனதில் ஆயிரம் எண்ணங்கள் அலைமோதின.
மெல்ல அவன் குரலைச் செருமிக் கொண்டு,
“முதலில் இப்படி மறுத்துப் பேசுறதுக்காக மன்னிச்சுக்கோங்க உங்களோட விருப்பத்திற்கு மாறாக பதில் சொல்வது எனக்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்கு ஆனா உண்மையை சொல்லணும்னா இப்ப நிவேதா ஒரு சின்னக் குழந்தை மாதிரி அவளுக்கு எதுவுமே ஞாபகம் இல்ல இப்படி இருக்குற நேரத்துல நான் அவளை எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்..?”
அவன் அப்படிக் கூறியதும், காயத்ரி கண்களில் சிறிய அதிர்ச்சி தெரிந்தது.
கருணாகரன் சற்றே முன்வந்து,
“கார்த்திகேயா நின்னு போன கல்யாணத்த தானேப்பா நடத்த நாங்க நினைக்கிறோம் அதோட ஏற்கனவே அவள் சுயநினைவோடு இருக்கும்போதே உன்னை கட்டிக்கிறேன்னு சம்மதிச்சவதானே பிறகு என்ன..?” என்று தனது பக்க நியாயத்தினைக் கூறினார்.
“அப்போ இருந்த நிவேதா வேற இப்போ இருக்கிற நிவேதா வேற அந்த நேரம் நிவேதா எதற்காக கல்யாணத்துக்கு சம்மதிச்சான்னு உங்க ரெண்டு பேருக்கும் நல்லாவே தெரியும் அதுல வந்த குழப்பத்தால தான் கல்யாணமே நின்னு போச்சு இதை சொல்றேன்னு கோவிச்சு கொல்லாதீங்க நினைவு திரும்பி, நிதானமா இருக்கும் போது, அவளே சம்மதிச்சா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் இல்லன்னா… அது அவளோட முடிவு.” என்று உறுதியாக வெளி வந்தது கார்த்திகேயனின் வார்த்தைகள்.
“ஆனா… நிவேதாவுக்காக உன்னால காத்திருக்க முடியுமா? அவளுக்கு பழைய நினைவுகள் திரும்ப எத்தனை நாள், மாதம், வருடம் ஆகுமோ தெரியாது…” என்று தளர்ந்த குரலில் கூறினார் காயத்ரி.
கார்த்திகேயன் மெதுவாகச் சிரித்தான்.
அந்த சிரிப்பில் சோகமும், பாசமும் கலந்து இருந்தது.
“எத்தனை வருடமா இருந்தாலும்… நான் காத்திருகிறேன் நிவேதாவுக்காக காத்திருக்கிறேன் ஒருவேளை நான் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு நாளைக்கு அவள் நினைவு திரும்பியதும் ‘நீங்க என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணீடிங்க என்று குற்றம் சாட்டிக் கேட்கும்போது நான் அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாம திக்கித் திணறி அப்படி ஒரு குற்ற உணர்ச்சியான வாழ்க்கை எனக்கு வேண்டாம்..”
அந்த ஒரு வாக்கியம், காயத்ரி மற்றும் கருணாகரன் இருவரின் மனதையும் ஆழமாகத் தொட்டது.
சொத்தை அபகரித்து, ஏமாற்றி கவர்ந்து செல்லும் மனிதர்களை வாழ்நாளில் பார்த்தவர்களுக்கு, இது ஒரு புதுவிதமான உணர்ச்சி.
கார்த்திகேயன் மெதுவாக எழுந்து, இதுதான் என்னோட தீர்க்கமான முடிவு என்ற தோரணையுடன் இருவருக்கும் தலை அசைத்து விட்டு வீட்டில் இருந்து வெளியேறினான்.
அவன் செல்லும் வழியை இமைக்காமல் பார்த்தபடி இருந்த காயத்ரி,
“இன்னும் இந்த உலகத்துல இப்படி மனதில் கருணையும், சொற்களில் நேர்மையும், செயல்களில் நற்பண்பும் கொண்டு,
அனைவரிடமும் அன்பையும் மரியாதையையும் பகிர்ந்து, தன் வாழ்க்கையை மட்டும் அல்லாமல்,
தன்னைச் சுற்றியுள்ளோரின் வாழ்க்கையையும் உயர்த்தி
சோதனைகளில் மனம் தளராமல், வெற்றிகளில் அகம்பாவம் கொள்ளாமல்,
எப்போதும் எளிமையோடும், நேர்மையோடும் வாழ்ந்து
மற்றவர்களின் துயரத்தை தன் துயரமாகக் கருதி,
அவர்களுக்கு ஆறுதலும், ஆதரவுமாக இருக்கும் கார்த்திகேயனைப் போன்றவர்களை பார்க்கும்போதே மனதில் ஒரு புது எனர்ஜி வருதுங்க..” என்று கூறியதும் அதை ஆமோதிப்பது போல கருணாகரன் சிறிதாக புன்னகைத்தவன்,
“நம்ம கண்முன்னே ஒரு நல்ல மனிதனோட சான்று.” என்று அந்த ஒரு வார்த்தையினுள் அத்தனை அர்த்தங்களையும் அடக்கிக் கொண்டார்.
அந்த தருணத்தில், அவர்களுக்குள் கார்த்திகேயனைப் பற்றி மரியாதை, நன்றியுணர்வு, நெகிழ்ச்சி மூன்றும் கலந்திருந்தது.
அந்த நேரம் மேல்மாடி அறையிலிருந்து நிவேதா மெதுவாக படிகளில் இறங்கி வந்தாள்.
காலடி சப்தம் கூட செய்யாமல், மெலிதாகப் பாதம் பதித்து வந்த அவளைப் பார்த்த காயத்ரிியின் விழிகள் அன்பைப் பொழிந்தன.
“என்னம்மா முகம் வாடிப் போய் இருக்கு உடம்புக்கு முடியலையா இங்க வாடாக் கண்ணா,” என்ற சிறிய, அமைதியான குரலில் அருகில் இருந்த கருணாகரன் கூற, காயத்ரியின் முகம் சிறிது பிரகாசமடைந்தது.
“வாம்மா இங்க உட்காரு,” என்று பாசமுடன் கையை நீட்டி அருகில் இருக்கையைக் காட்டினாள் காயத்ரி.
நிவேதா, ஓரளவு தயக்கத்துடனும், ஆனால் தாயின் அன்பின் ஈர்ப்பால் மெல்லிய புன்னகையுடன் அருகில் வந்து பதுமை போல அமர்ந்தாள். உடனே காயத்ரி அவளது தலைமுடியை மெதுவாக வருடி, அன்பும் நம்பிக்கையும் கலந்து,
“ஏற்கனவே கார்த்திகேயனுக்கும் உனக்கும் கல்யாணம் செய்து வைக்க முடிவு எடுத்திருந்தோம்மா ஆனா, சில சிக்கல்கள் வந்ததால அது நிறுத்தப்பட்டுடுச்சு. இப்போ… மீண்டும் அதைச் செய்யலாம்னு நாங்க நினைக்கிறோம் நீ என்னம்மா சொல்ற..?” என்று மகளின் மனதை புரிந்து கொள்வதற்காக மிக மென்மையாக காயத்ரி நிவேதாவின் வதனம் பார்த்துக் கேட்டாள்.
நிவேதா ஒரு நொடி எதுவுமே பேசாமல் தாயின் முகத்தை ஆழமாகப் பார்த்தாள். அவளது கண்களில் குழப்பமும், உள்ளுக்குள் கலங்கிய மனநிலையும் தெளிவாகத் தெரிந்தது.
“அம்மா… இப்போதைக்கு எதுவுமே வேண்டாமே எனக்கு எல்லாம் மறந்துபோச்சு… நினைவுகளும், உணர்வுகளும், எல்லாமே குழப்பமா இருக்கு இப்படி இருக்கும்போது இந்த நிலைமையில கல்யாணம் பண்ணிக்கிறது சரியா வரும் என்று எனக்கு தோணல கொஞ்சம் டைம் கொடுங்கம்மா எனக்கு எல்லாம் சரியானதுக்கு அப்புறம் இதைப் பத்தி யோசிச்சிட்டு நிச்சயமாக ஒரு முடிவு சொல்லுறேன். ஆனா இப்போ கல்யாணம் வேண்டாம்… ப்ளீஸ்மா..” என்று நிவேதாவின் குரல் மெதுவாகக் குலைந்தது.
அவளது பதிலைக் கேட்டு இருவரும் உறைந்து போயினர்.
சில நொடிகள் அங்கு அமைதியே நிலவியது.
அந்த அமைதியை குலைக்க எண்ணம் கொண்ட நிவேதா,
“என்னென்னவோ என் மனசுக்குள்ள வந்து போகுது… என்னன்னு புரியல மனசும் உடம்பும் ரொம்ப டயர்டா இருக்குமா நான் கொஞ்சம் ஓய்வெடுக்கணும்… கொஞ்ச நேரம் தூங்கிப் பார்க்கிறேன் அப்படி செய்தாலாவது பெட்டரா பீல் ஆகுதா என்று பார்ப்போம்” என்று சொல்லி இருக்கையை விட்டு எழுந்தாள்.
காயத்ரி அவளைத் தடுக்காமல், மெதுவாக,
“சரிமா… முதல்ல சாப்பிடு பிறகு டேப்லட் போட்டு தூங்கு,” என்றாள்.
நிவேதா சிரிக்க முடியாத முகத்தோடு, ஆனால் தாயின் வார்த்தையை ஏற்றுக் கொண்டபடி, மெதுவாக நடந்து அறைக்குச் சென்றாள்.
அவள் போனதும், காயத்ரி மனம் சற்று கனத்தது. கணவனை நோக்கி,
“என்னங்க… இப்படி சொல்லிட்டு போறா..?” என்று கேட்க,
“அவளே சொல்லிட்டாளே கொஞ்சம் டைம் தாங்கன்னு நாம ஏதோ அவசரப்படுறோமோன்னு எனக்குத் தோணுது ரெண்டு பேரும் சொல்றது சரிதான் அவங்களுக்கே அவங்களோட தற்போதைய நிலை புரியுது… அதுக்கேத்த மாதிரி நாம நடந்துக்கணும் சின்னவங்களே எவ்வளவு பக்குவமா பேசுறாங்க நாம தான் சின்ன பிள்ளை மாதிரி அவசரப்படுறமோன்னு தோணுது விடு காயத்ரி எப்படியும் கொஞ்ச நாள் போனா நிவேதா சொல்ற மாதிரி நம்ம பொண்ணோட கல்யாணத்து சந்தோசமா ஜாம் ஜாமுன்னு செய்து முடித்து விடலாம் இப்போ அவசரப்பட்டு எதுவுமே செய்ய வேண்டாம்” என்றார்.
“நம்ம பிள்ளைகள் சந்தோஷமா இருக்கணும் என்பதற்காகத்தான் நாம கல்யாணம் பண்ண நினைக்கிறோம் சரி அவங்களுக்கே அது பிடிக்கல நான் ஏன் கட்டாயப்படுத்த..?” என்றார் காயத்ரி.
அப்போதுதான் இதுவரது மனமும் ஓரளவு அமைதி கண்டது.
இன்னும் சில நிமிடங்களில் அந்த அமைதி காற்றோடு காற்றாக பறக்கப்போவது பாவம் அவர்களுக்கு அந்நேரத்தில் தெரியவில்லை. அந்த அமைதியை இரசித்தப்படியே அவர்களது அந்த நிமிடம் இனிமையாகக் கழிந்தது.
அப்படி என்னவாக இருக்கும் கண்டுபிடிங்கள் பார்ப்போம்..