தொல்லை – 25
கதிரோ காரின் கதவை மெதுவாகத் திறந்தவன் மதுராவை மெல்ல எழுப்ப முயன்றான்.
“மதுரா… மதுரா… வீடு வந்துடுச்சு… எழுந்திரு…” என அவன் மென்மையாக அழைக்க, மதுராவோ உறக்கத்தில் இருந்து மெதுவாக விழித்தவள் போல நடித்து, கண்களைத் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.
“ஓ… வந்துட்டோமா?” என்றவள், கதிரின் தோளில் இருந்து தன் தலையை பதறியவாறு விலக்கிக் கொண்டவள்,
“ஐயோ சாரி கதிர்… எப்போ தூங்கினேன்னு தெரியல…” எனக் கூறி தன் முகத்தில் ஒரு அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தினாள்.
“பரவால்ல… வா.. உள்ள போகலாம்…” என்றவாறு காரிலிருந்து இறங்கினான் அவன்.
அஞ்சலி இன்னும் வாசலில்தான் நின்றிருந்தாள்.
அவளுடைய முகத்தில் கோபம், குழப்பம், தவிப்பு என கலவையான உணர்வுகள் தெரிந்தன.
“என்னாச்சு அக்கா? திரும்பி வந்திருக்க?” எனக் கேட்டாள் அஞ்சலி.
“என்ன அஞ்சு, இப்படி கேக்குற? நான் திரும்பி வந்ததுல உனக்கு இஷ்டம் இல்லையா?” என மதுரா புருவங்களை உயர்த்தியவாறு கேட்க,
“ஐயோ, அப்படி இல்லக்கா..” எனப் பதறிவிட்டாள் அஞ்சலி.
“மதுராவோட ரூம்ல யாரோ அத்து மீறி நுழைஞ்சிருக்காங்க அம்மு. திருடன்னு நினைக்கிறேன். அவ ரூம் கதவு திறந்திருந்துச்சு… ரொம்ப பயந்துட்டா. அவ அங்க தனியா இருக்கிறது சேஃப் இல்லைன்னு நான்தான் இங்க கூட்டிட்டு வந்தேன். நம்மளோட மத்த வீட்டை அரேஞ்ச் பண்ணி மதுராவை அங்க தங்க வைக்கலாம். அதுவரைக்கும் அவ இங்கயே இருக்கட்டும்..” எனக் கதிர் கூற, அஞ்சலிக்கோ உள்ளம் பதறிவிட்டது.
“அடக் கடவுளே… பூட்டியிருந்த கதவை எப்படி திறந்தாங்க?” என அதிர்ந்து கேட்டாள் அவள்.
“பொய்ச்சாவி ஏதாவது செஞ்சிருப்பாங்க போல..” என்றான் கதிர்.
“அக்கா நீ இங்க வந்தது நல்லதாப் போயிருச்சு… நீ இங்கயே இரு..” என்றாள் அஞ்சலி.
“இங்க நான் இருக்கிறதுல உங்களுக்கு சிரமம் இல்லையா..?” எனத் தயங்குவது போல நடித்தாள் மதுரா.
“சே சே.. இதுல எங்களுக்கு என்ன சிரமம் இருக்கப் போகுது..? நீ இங்கே இருக்கிறதுதான் நல்லதுன்னு தோணுது..
அம்மு நீ உங்க அக்காவுக்கு ஏதாவது ஒரு ரூமை அரேஞ்ச் பண்ணிக் கொடு. நான் பிரஷ் ஆகிட்டு வந்துடுறேன்,” என்றவன் தன்னுடைய அறைக்குள் சென்று விட்டான்.
அஞ்சலியோ தன் சகோதரியை அழைத்துக்கொண்டு அருகே இருந்த அறைக்குள் நுழைந்தாள்.
“அஞ்சு, இந்த ரூம் எனக்கு வேணாம்.. நீங்க இருக்க ஃப்ளோர்ல ஏதாவது ரூம் குடு, அப்பதான் எனக்கும் கம்ஃபர்ட்டபிளா இருக்கும்..” என்றாள் மதுரா.
“சரிக்கா வா..” என அவர்கள் தங்கியிருக்கும் தளத்திற்கு மதுராவை அழைத்துச் சென்றவள் அங்கே இருந்த ஒரு அறையைக் காண்பித்தாள்.
மதுராவின் விழிகள் வியப்பில் விரிந்தன.
“இந்த வீட்ல எல்லாமே ரொம்ப ஆடம்பரமா இருக்கு..” என்றாள் அவள்.
அஞ்சலியோ மௌனமாக சிரித்தாள்.
அவளுக்கு இந்த ஆடம்பரத்தில் எல்லாம் துளி அளவும் ஈடுபாடு இல்லை.
“இப்போ எதுக்கு சிரிக்கிற..?” எனக் கேட்டாள் மதுரா.
“சும்மாதான்கா… அம்மாகூட பேசினியா அக்கா..? நீ வந்ததுல இருந்து அம்மா ரொம்ப கவலைப்பட்டு அழுதாங்க..” என்றாள் அஞ்சலி.
“பேசணும்… இப்ப பேசினா என்னோட வாழ்க்கை நாசமாப் போயிடுச்சுன்னு அழுது புலம்புவாங்க. அதனாலதான் பேசாம இருக்கேன்..” என்றாள் மதுரா.
“ஏன் அக்கா அப்படி சொல்ற..?”
“எப்படி இருந்தாலும் என்னோட கல்யாண வாழ்க்கை அழிஞ்சு போயிடுச்சுதானே. இனி என்ன யாரு கல்யாணம் பண்ணிப்பா..?” என்ற மதுரா வேண்டுமென்றே சோகக் கீதம் வாசித்தாள்.
அவளுடைய வார்த்தைகளில் விக்கித்துப் போனாள் அஞ்சலி.
“நீதானே இப்போ உனக்கு கல்யாணம் வேணாம்னு சொன்ன? இப்போ இப்படி சொன்னா என்னக்கா அர்த்தம்?”
“அவசரப்பட்டு முடிவெடுத்துட்டேன்டி… நான் பண்ணது ரொம்ப பெரிய தப்பு. என்னோட வாழ்க்கையைப் பத்தி யோசிச்சிருக்கணும். படிப்பு படிப்புன்னு வாழ்க்கையை விட்டுட்டு இங்க வந்து இப்போ கஷ்டப்படுறேன். கொஞ்சம் யோசிச்சு பொறுமையா முடிவெடுத்திருந்தா இப்போ உன்னோட இடத்துல நான்தான் இருந்திருப்பேன்..” என மதுரா பட்டென்று கூற, அஞ்சலியின் முகம் அப்படியே மாறிப்போனது.
“அக்கா இதெல்லாம் நீ விளையாட்டுக்குத் தானே சொல்ற..? இப்போ நீ பேசினதெல்லாம் நிஜம் இல்ல தானே?” எனக் கேட்ட அஞ்சலியின் இதயமோ தாறுமாறாகத் துடித்தது.
அஞ்சலியை நெருங்கி அவளுடைய தோள்களைப் பற்றிக்கொண்ட மதுராவோ “எப்படி அஞ்சு, உன்னால இப்படி கேட்க முடியுது? என்னோட வாழ்க்கையை நீ பறிச்சுட்ட! நான்தான் யோசிக்காம தப்பான முடிவு எடுத்தேன்னா உனக்கு எங்க போச்சு அறிவு..? என்னோட முடிவு பிழைன்னு சொல்லி என்னத் திருத்தாம என் வாழ்க்கைய இப்படி பறிச்சுட்டியே.. உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா..?” எனச் சீறினாள்.
அஞ்சலியோ அவளை அடிபட்ட பார்வை பார்த்தாள்.
“உனக்கும் கதிருக்கும் ஏணி வச்சா கூட எட்டாது… அவரோட படிப்பு என்ன.. உன் படிப்பு என்ன..? இந்த சென்னை வாழ்க்கை கூட உனக்கு செட் ஆகாது.. இது எல்லாமே எனக்குத்தான் பொருத்தமா இருக்கும்.. அதனாலதான் கடவுளா பார்த்து எனக்கு கதிரை கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காரு..
அத புரிஞ்சுக்காம நான்தான் எல்லாத்தையும் சொதப்பிட்டேன்… ப்ளீஸ் அஞ்சலி தயவு செஞ்சு என் வாழ்க்கைய எனக்குக் கொடுத்துடு.. இது என்னோட வாழ்க்கை.. இத மறுபடியும் எனக்கே கொடுத்துடு ப்ளீஸ்..” என மதுரா கண்ணீரோடு கேட்டதும், அஞ்சலிக்கு உயிரை உருவி எடுத்தது போல இருந்தது.
“எப்படிக்கா உன்னால இப்படி பேச முடியுது?” உடைந்த குரலில் கேட்டாள் அஞ்சலி.
“என்னோட வாழ்க்கைக்காக நான் பேசாம வேற யார் பேசணும்னு நீ நினைக்கிற?”
“போதும்.. நிறுத்துக்கா.. வாழ்க்கைன்னா உனக்கு விளையாட்டா தெரியுதா..? நான் ஒன்னும் உன்னோட வாழ்க்கைய பறிக்கல.. இந்த வாழ்க்கை வேணாம்னு தூக்கிப் போட்டுட்டு போனது நீ..” என அடக்க முடியாத கோபத்தில் கத்திய அஞ்சலியோ சட்டென தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.
“அ.. அக்கா.. நா.. நான் மாமாவை உயிருக்கு உயிரா நேசிக்கிறேன்கா… அவரும் என்ன விரும்புறார்.. நாங்க ரெண்டு பேரும் வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டோம்.. இப்போ வந்து இப்படி கேட்டா நான் என்னக்கா பண்றது..? எங்க கல்யாணம் முறைப்படி பதிவாகியிருக்கு.. புரிஞ்சுக்கோ ப்ளீஸ்!” என்றவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென வழிந்தது.
“அவர் ஒன்னும் உன்னை லவ் பண்ணல அஞ்சு… வேற வழி இல்லாம ஏத்துக்கிட்டாரு.. அவர் தாலி கட்டினது எனக்குத்தான்.. மதுரான்னு நினைச்சுத்தான் உன்கூட பழகினாரு.. கடைசில அது நான் இல்லைன்னு உண்மை தெரிஞ்சதும் வேற வழி இல்லாம உன்னை ஏத்துக்கிட்டாரு.. இதுதான் உண்மை.. இத காதல் கீதல்னு உளராத அஞ்சலி..
இதுவரைக்கும் நீங்க எப்படி இருந்தீங்களோ எனக்கு அது தெரியாது… அதப் பத்தி எனக்கு கவலையும் இல்லை.. ஆனா இனி நீ இவர்கூட ஒன்னா இருக்கக் கூடாது.. எனக்காக விட்டுக்கொடுத்துடு அஞ்சலி.. இதுவரைக்கும் நான் கேட்ட எல்லாத்தையும் எனக்காக கொடுத்திருக்க.. இதையும் கொடுத்திரு ப்ளீஸ்..
இனி உன்கிட்ட எதையுமே நான் கேட்க மாட்டேன்… எனக்காக கதிரை மட்டும் என்கிட்ட கொடுத்துடு…” என மதுரா கண்ணீர் வழியக் கூற,
“நானும் அவரும் வாழ்ந்துட்டோம்னு சொல்றேன்ல.. உனக்கு அது புரியுதா இல்லையா அக்கா?” என வெடித்தாள் அஞ்சலி.
அவள் உடல் நடுங்கியது.
அவளால் மதுராவின் வார்த்தைகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இதயம் வெடித்துவிடும் போல இருந்தது.
“அதனால என்ன? நீங்க ரெண்டு பேரும் எப்படி வாழ்ந்திருந்தாலும் எனக்கு அதைப் பத்தி கொஞ்சம் கூட கவலை இல்லை.. எனக்கு கதிர் மட்டும் போதும்… நீ இல்லைனா இந்த வாழ்க்கையை நான் அவர்கூட சந்தோஷமா வாழுவேன்..” என்ற மதுராவின் கன்னத்தில் கோபத்தை அடக்க முடியாமல் ஓங்கி அறைந்துவிட்டிருந்தாள் அஞ்சலி.
ஆடிப் போனாள் மதுரா.
“ச்சீ.. நிறுத்து… இப்படி பேசுறதுக்கு உனக்கு வாய் கூசலையா..? என் முன்னாடியே அவர்கூட வாழ்வேன்னு சொல்றியே? நீ எல்லாம் ஒரு அக்காவா? இதுவரைக்கும் உனக்காக எல்லாத்தையும் விட்டுக் கொடுத்திருக்கேன். இல்லைன்னு சொல்லல! அதுக்காக, என்னோட புருஷனையும் நான் விட்டுக் கொடுத்துடுவேன்னு நினைச்சியா..? தயவு செஞ்சு இங்க இருந்து போயிருக்கா.. நீ நினைக்கிறது எப்பவுமே நடக்காது… எங்களை விட்டுத் தள்ளிப் போயிடு…
இந்த வாழ்க்கையை நான் ஒன்னும் உன்கிட்ட இருந்து பறிச்சு எடுக்கல.. நீ வேணாம்னு விட்டுட்டு போன வாழ்க்கைதான் இது… அப்பவும் நான் வேணாம்னுதான் சொன்னேன். மாமாதான் என்னைப் புடிச்சிருக்குன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு… முறைப்படி பதிவும் பண்ணிக்கிட்டோம்.. இப்போ வந்து இது உன்னோட வாழ்க்கை, கதிர் வேணும்னு சொன்னா என்ன அர்த்தம்? இதெல்லாம் என்னால காது கொடுத்து கேட்க முடியல.. என்னால சகிக்கவே முடியல..” எனக் கதறினாள் அஞ்சலி.
அஞ்சலி தன்னை அடித்ததில் உறைந்து போய் நின்றவள் அவளை அழுத்தமாகப் பார்த்தாள்.
“ஏய்… உன்னத் திருப்பி அடிக்கிறதுக்கு எனக்கு ஒரு நிமிஷம் கூட ஆகாது.. ஆனா உன்னக் காயப்படுத்துறது என்னோட நோக்கம் கிடையாது. உனக்கும் கதிருக்கும் செட் ஆகாதுன்னு சொன்னா புரிஞ்சுக்கோ… கதிர் எனக்கானவர்… என்ன இனி நீயே நினைச்சாலும் இந்த வீட்டை விட்டு அனுப்ப முடியாது… இந்த வீட்டை விட்டு மட்டுமில்ல கதிரோட வாழ்க்கையை விட்டுகூட நான் வெளியே போறதா இல்ல..
அப்படி போறதா இருந்தா நீதான் இங்க இருந்து போகணும்..” என்றாள் மதுரா.
அஞ்சலிக்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது.
கரங்கள் நடுங்கத் தொடங்கின.
கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது.
வேறு வழியின்றி மதுராவின் கைகளைப் பற்றிக் கொண்டவள், “நான் எதுக்குமே இதுவரைக்கும் ஆசைப்பட்டதில்லக்கா.. உ.. உனக்கே என்னப் பத்தி நல்லா தெரியும்ல..? நா.. நான் மாமா மேல உசுரே வச்சிருக்கேன்… அவரைப் பிரிஞ்சு என்னால சத்தியமா வாழ முடியாதுக்கா ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.. எனக்காக இதை மட்டும் பண்ணு.. எங்க வாழ்க்கையை விட்டு போயிரு.. இப்படி எல்லாம் பேசி என்னை பயமுறுத்தாதக்கா.. என் மேல உனக்கு கொஞ்சமாவது பாசம் இருக்கும்ல..?” என அழுதவாறு கேட்டாள்.
“அதைத்தான் நானும் உன்கிட்ட கேக்குறேன்.. உனக்கு என் மேல பாசம் இல்லையா..?” என்றதும் திணறிப் போனாள் அஞ்சலி.
“சரி விடு என்னைப் பிடிக்கலைன்னு கதிரே சொல்லட்டும். அதுக்கப்புறமா நானே இங்க இருந்து மொத்தமா போயிடுறேன்.. போதுமா..?” என்றாள் மதுரா.
சடாரென மதுராவை நிமிர்ந்து பார்த்தாள் அஞ்சலி.
“மாமா உன்னைப் பிடிக்கலைன்னு சொன்னா, நீ இங்க இருந்து போயிருவியா?”
“ம்ம் அப்படி சொன்னா கண்டிப்பா போறேன்.. பட் கதிர் அப்படி சொல்லவே மாட்டாரு.. இதோ பாரு தங்கச்சி என் கூட மோதி உன்னால வின் பண்ண முடியாது.. நான் நெனச்சா கதிரை உனக்கு எதிரா திருப்ப முடியும்.. அவரே உன்ன சந்தேகப்பட்டு நடு வீட்ல வச்சு கேள்வி கேட்கிற மாதிரி பண்ண முடியும்.. விட்டுக் கொடுத்துட்டு போயிரு.. அதுதான் உனக்கு நல்லது..” என எச்சரித்தாள் மதுரா.
“மாமா எப்பவுமே என் மேல சந்தேகப்பட மாட்டாரு..”
“பார்க்கலாமா..? கதிர் என்ன பிடிக்கலைன்னு சொன்னா நீ சொன்ன மாதிரி நான் இந்த வீட்டை விட்டு போயிடுவேன்.. அதே மாதிரி உன் புருஷன் உன் மேல சந்தேகப்பட்டா அப்போவே அந்த நிமிஷமே நீ இந்த வீட்டை விட்டு போயிரணும்.. போயிடுவேன்னு நம்ம அம்மா மேல சத்தியம் பண்ணு..” என தன் உள்ளங்கையை அஞ்சலியின் முன்பு நீட்டினாள் மதுரா.
மதுராவின் ஒப்பந்தத்தில் அஞ்சலிக்கோ முதுகுத்தண்டு சில்லிட்டது.
“என்ன அஞ்சலி அமைதியா இருக்க..? உன் புருஷன் மேல உனக்கு அவ்வளவுதான் நம்பிக்கையா..?” எனக் கேட்டாள் மதுரா.
தன் விழிகளை வேகமாகத் துடைத்துக் கொண்டவள்,
“சரி.. மாமா எப்பவுமே என்னை சந்தேகப்பட மாட்டாரு.. மீறி என்ன தப்பா நினைச்சா நான் இங்க இருந்து போயிடுறேன். அதே மாதிரி அவர் உன்னைப் பிடிக்கலைன்னு சொன்னா அடுத்த நிமிஷமே நீயும் இந்த வீட்டை விட்டுப் போயிடணும்..” என்றாள் அஞ்சலி.
“ஓகே டீல்… இங்க நடந்த எதுவுமே கதிருக்குத் தெரியக் கூடாது. இது நமக்குள்ள மட்டுமே இருக்கணும். கதர்கிட்ட உண்மையை சொல்லி அவரை நீ எனக்கு எதிரா திருப்பினா இந்த டீல் கேன்சல் ஆயிடும்.. அதுக்கப்புறம் நான் எப்பவுமே கதிரை விட்டுக் கொடுக்கவே மாட்டேன்..” என்றவள் அஞ்சலியின் கன்னத்தில் தட்டிவிட்டு அந்த அறையில் இருந்த படுக்கையில் அமர்ந்து கொண்டாள்.
அஞ்சலிக்கோ உள்ளம் உடைந்து நொறுங்கியது.
💜💜
Pavan anjali