🤎 நேசம் நீயாகிறாய்! 🤎
எபிலாக்
ஐந்து வருடங்களின் பின்,
ராகவ் வீட்டில், வழமைக்கு மாற்றமாய் அன்றைய விடியல் பரபரப்பாக இருந்தது.
“என் செல்லக்குட்டி! வா வா” மரகதம் ஒரு பக்கமும், பாஸ்கர் ஒரு பக்கமும் நின்று தம் பேத்தியை நடை பயில வைத்துக் கொண்டிருந்தனர்.
மெதுவாக அடி எடுத்து வைத்து நடந்து தாத்தாவிடம் செல்லாமல், வலது பக்கமாக திரும்பி தன் முன் வந்து நின்ற ஒரு வயது மகளைத் தூக்கிக் கொண்டான் ராகவேந்திரன்.
“பப்பா….!!” தந்தையின் கன்னங்களில் கைகளைத் தட்டிச் சிரித்தாள் ரதீஷனா.
“ரதி குட்டி! என் செல்லமே” அவளது கன்னத்தில் முத்தமிட்டவனின் முன்னால் கோபமாக வந்து நின்றாள் மனைவி.
“உங்க கிட்ட என்ன சொல்லி அனுப்பினேன்? என்ன வேலை பண்ணிட்டு இருக்கீங்க?” யாருக்கும் கேட்காமல் அவனது காதைக் கடித்தாள் தேன் நிலா.
“நான் என் பொண்ணு கூட கொஞ்சிட்டு இருந்தா பொறுக்காதே. வேணும்னா வா உன்னையும் கொஞ்சுறேன்” அவளது கன்னம் கிள்ள,
“இன்னிக்கு நம்ம பையனுக்கு நர்சரி ஃபர்ஸ்ட் டே. அவனைக் காணோமேனு தேடிட்டு வர சொன்னா வேற என்னவோ பண்ணுறீங்க. அவனைத் தேடிக் கண்டு பிடிச்சு ரெடியாக்கி எவ்ளோ வேலை இருக்கு?” பரபரவென பறந்தாள் அவள்.
“வீடு முழுக்க தேடியாச்சு. அவனைக் காணோம் டா” மரகதம் கையை விரிக்க, “டேய் அமி” என அழைத்தவாறு ரேஷ்மா மற்றும் மாதவனுடன் வந்து சேர்ந்தாள் ப்ரீத்தி.
“அமி எங்கே மா?” ரேஷ்மா, தம்பி மகனைத் தேட, “நர்சரி போக களவு பண்ணி எங்கேயாச்சும் ஒளிஞ்சுட்டானா?” எனக் கேட்டான் மாதவன்.
“லேடீஸ் அன்ட் ஜென்டில்மன்! அய்ம் ஹியர்” என்ற சத்தத்தில் அனைவரும் வாயில் புறம் நோக்க, தேனுவின் குடும்பம் அங்கு நின்றது, மீராவும் கூட. மீராவும் துருவனும் திருமணம் செய்து இரண்டு வயது மகன் உள்ளான்.
“அக்கா! உன் அருமை மைந்தன் இங்கே இருக்கான்” என்று துருவன் சொன்னதும், அவனது கழுத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த மகனை முறைத்துத் தள்ளினாள் தேனு.
“ம்மா! நான் என் பார்ட்னரை பார்க்கப் போனேன்” என்றவாறு துருவனின் மகன் மாயனோடு ஹைபை கொடுத்தான் அவன்.
தேன் நிலா ராகவேந்திரனின் மூத்த புதல்வன் அமிர்தன்!
“உன் வயசுக்கு உனக்கு பார்ட்னர் கேட்குதா டா?” ராகவ் மகனை முறைத்துப் பார்க்க, “அமிக்கு மாயன்னா உயிரு. இன்னிக்கு நர்சரி போக முன்னால அவனைப் பார்க்கனும்னு ஓடி வந்துட்டான்” நெகிழ்வோடு பதிலிறுத்தினார் சுசீலா.
“ரெண்டும் ஒட்டிப் பிறந்த ரெட்டையர் மாதிரி. விட்டா மாயனையும் நர்சரி கூட்டிட்டுப் போயிடுவான்” என துருவன் கூற, “அப்படியே நம்மளை மாதிரி இல்லயாக்கா?” என அக்காளிடம் வினவ,
“போடா! உன்னைப் போல வாயாடுறான். அமியைக் கெடுத்து வெச்சிருக்க நீ” தம்பியின் தோளில் அடித்தாள் தேனு.
“மீரா! உன் புருஷனை இவ அடிக்கிறா. என்ன ஏதுன்னு கேட்க மாட்டியா நீ?” என ராகவ் மீராவை ஏற்றி விட, “இவங்க நடுவில் போனா நான் சம்பல் ஆயிடுவேன். அதுக்கு மூடிட்டு இருக்கிறதே பெட்டர் ணா” என்றாள் மீரா.
“சரி சரி வாடா. ரெடியாக்குறேன்” என்றவாறு தேனு மகனை அழைத்துச் சென்று, உடைமாற்றி அழகாக ரெடியாக்கி விட்டாள்.
“ம்மா! நான் எப்படி இருக்கேன்?” என அமிர்தன் கேட்க, “அழகா இருக்க டா என் அப்புக்குட்டி” அவனது கன்னத்தில் முத்தமிட்டவளுக்கு அவனைச் சுமந்த நாட்கள் நினைவூஞ்சலில் ஆடலாயின.
அவளை அத்தனை அன்போடு பார்த்துக் கொண்டான் ராகவ். அவளது ஆசைகளை பார்த்துப் பார்த்து ஈடு செய்தான். தலையில் வைத்துத் தாங்கினான்.
அவனால் முடிந்தளவு அவளுடன் நாட்களைக் கழித்தான். கடற்கரைக்கு அழைத்துச் சென்று சேர்ந்து நடந்தான். அவளது கால்களைத் தன் மடியில் வைத்து முத்தமிட்டு எண்ணெய் தடவி விடுவான். ஆண் என்ற கர்வமின்றி தன்னை அன்பால் அரவணைக்கும் அன்பானவன் மீது காதல் அதிகரித்தது அவளுக்கு.
அவளுக்கு அவளது கண்ணாளனே பிரசவம் பார்த்தான். தன் கண்களால் அவளது வேதனையைக் கண்டவனுக்கு உயிர் வரை வலித்தது. அவளது கைகளைப் பற்றிக் கொண்டதும், அவள் அவனை மட்டுமே நோக்கி குழந்தையை ஈன்றதும் மறக்க இயலா தருணங்கள்.
தேன் நிலா தனக்குப் பிடித்தவாறு அவனுக்கு அமிர்தாவின் ஞாபகமாக அமிர்தன் எனும் நாமத்தை சூட்டினாள். அவள் கருவுற்றதை அறிந்த தருணம் அவளோடிருந்த அமிர்தா அவளது நோயின் காரணமாக உயிரிழந்தாள். ஆனால் தேனு மற்றும் ராகவ்வின் வாழ்வில் அவள் ஓர் அங்கமாக மாறி இருந்தாள்.
“என்னம்மா? அமிர்தாக்கா ஞாபகமா?” என்று கேட்ட அமிர்தனிடம் தேனு அவளைப் பற்றிக் கூறியிருந்தாள்.
இப்படித் தான்! நம் வாழ்வில் சிலர் சலனமே இல்லாமல் வருவர். ஆனால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி நீங்கா நினைவுகளைத் தந்து செல்வர். அவ்வாறு தான், அந்த அமிர்தாவும் இவர்களுக்கு.
“ஆமா கண்ணா. அவளை என்னால மறக்க முடியாது” அவனை அணைத்துக் கொள்ள, அவளது கன்னத்தில் முத்தமிட்டான் மைந்தன்.
“என்னையும் என் பொண்ணையும் விட்டுட்டு என்ன பேச்சு உங்களுக்கு?” ரதீஷனாவோடு அறையினுள் வந்தான் ராகவ்.
அது ராகவ் ஆசைப்பட்டு வைத்த பெயர். அந்நேரம், “ரஷ்யாங்குற நேம் வர்ற மாதிரி ரதீஷனானு வெக்கப் போறான் ரஷ்யாக்காரன்” என செல்லமாக சிலுப்பிக் கொண்டாள் தேனு.
“எனக்கும் என் பையனுக்கும் ஆயிரம் இருக்கும். உங்களுக்கு எதுக்கு?” என்று கேட்டவளிடம் தாவினாள் மகள்.
“என் செல்ல ரதி” அவளை அள்ளிக் கொண்ட தேனுவை அன்பு கனிய நோக்கினான் கணவன்.
அவர்கள் திருமணம் செய்து ஆறு வருடங்களாகின்றன. அவள் மாறவே இல்லை, அந்த அழகும், பேச்சும், குணமும், அன்பும் கொஞ்சமும் மாறாமல் இருக்கின்றன.
“நான் அமியை நர்சரி விட்டு வர்றேன்னு சொன்னதும் மாயனும் ஆசைப்படுறான். அவனையும் கூட்டிட்டுப் போறேன் நிலா”
“கூட்டிட்டுப் போங்க. என் கிட்ட எதுக்கு சொல்லுறீங்க?” அவள் வேண்டுமென்றே சண்டைக்கு வர, “என் பொண்டாட்டி கிட்ட நான் சொல்லுறேன். உனக்கென்ன வந்துச்சு?” பதிலுக்கு அவனும் வாக்குவாதம் செய்தான்.
“உங்களுக்கு சண்டை பிடிக்கனுமா இப்போ?”
“அடியே வாயாடி! உனக்கு தான் சண்டை பிடிக்கனும். எனக்கில்ல” என்று சொல்ல, “நெஜமாங்க. சண்டை போட ஆசையா இருக்கு” என நெளிந்தவளைப் பார்த்து,
“சண்டை போடலாமே. ஆனால் அப்பறமா வர்றேன். இப்போ கிளம்பனும் டோலி” அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு ஓடினான் ராகவ்.
…………………
தோட்டத்தில் வீற்றிருந்த மர இருக்கையில் அமர்ந்திருந்தாள் தேன் நிலா. இப்போது அவனது வீட்டுத் தோட்டத்திலும் பூச்செடிகள் பூத்துக் குலுங்கின.
அவளுக்கு மலர்கள் என்றால் அத்தனை பிரியமாயிற்றே. அவன் தான் ஒரு நாள் கடைக்கு அழைத்துச் சென்று பூச்செடிகள் வாங்கிக் கொடுத்தான்.
இருவருமாகச் சேர்ந்து அவற்றை நட்டார்கள். அதன் பின் நிலா அதனைப் பராமரித்து வளர்த்தாள். இப்பூக்களின் வாசனையும் அழகும் அவர்களுக்கு மகிழ்ச்சியளித்திடும்.
ப்ரீத்தியும் வந்து பூச்செடிகளை அவளது வீட்டில் நடுவதற்காக எடுத்துச் செல்வாள். அத்தோடு தேன் நிலா வீட்டிலேயே சிறிதாக கடை வைத்து தையல் ஆர்டர்களை எடுத்து தைக்கிறாள்.
ஒரு கம்பனியில் சேர்ந்து இதனைச் செய்யலாமே என்று ராகவ் கூறிய யோசனையை அவள் மறுத்தாள்.
“எனக்கு ஒருத்தங்க கீழே வேலை செய்ய எண்ணம் இல்லை. எனக்குப் பிடிச்ச வேலை தைக்கிறது. அதை எனக்கு தோணுற நேரம், நான் எனக்காக நேரம் ஒதுக்கி சந்தோஷமா சுதந்திரமா தைக்கனும்னு ஆசைப்படுறேன். பெருசா சம்பாதிக்க தேவல. ஆனால் கிடைக்கிற சொற்ப வருமானமும் நான் முழுசா என் உழைப்பால் எடுக்கிறதா இருக்கனும்” எனக் கூறியவளின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்ட கணவனுக்கு அவளை நினைத்து அபரிமிதமான பிரம்மிப்பு.
“ஓய் தேன் மிட்டாய்” எனும் அழைப்போடு வந்து அவளருகில் அமர்ந்தான் ராகவ்.
“ரதி கூட இருந்தீங்களே. அவ எங்கே?” அவள் மகளைத் தேட, “தூங்கிட்டா. ரதியை வெச்சுட்டு என் மதியைத் தேடி வந்துட்டேன்” அவளின் முகத்தைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.
“அடடா! ரைமிங்க்ல பின்னுறீங்களே டாக்டர் சார்” கிளுக்கிச் சிரித்தாள் தேனு.
“ரைமிங் இல்ல, ஒத்த கருத்து. மதி என்றால் நிலா. என்னோட தேனான நிலா. பொன்னான நிலா” அவளது மடியில் தலை சாய்த்தான்.
‘ரஷ்ய பீஸ் ரொமான்டிக் ரோமியோவா மாறிட்டானே. இனி என் நிலமை அவ்ளோ தான்’ மனதினுள் பேசிக் கொண்டவள் அவனைப் பார்த்தவாறு சிந்தனையில் ஆழ்ந்திட,
“என்ன யோசனை?” எனும் அவனது வினாவுக்குப் பதில் சொல்லத் துவங்கினாள் தாரகை.
“வாழ்க்கையோட வேடிக்கையை யோசிக்கிறேன். எனக்குனு இப்படி ஒருத்தர் வரனும்னு நான் வகுத்து வெச்சிருந்தேன். கல்யாணம் நடந்தப்போ நீங்க எனக்கானவர் இல்லைனு நெனச்சேன்.
ஆனால் உங்களைப் பிடிச்சதுக்கு அப்பறம், என் இலக்கணங்கள் எல்லாமே உங்களுக்காக மாறிருச்சு. எனக்கு எல்லாமுமா நீங்க மாறிட்டீங்க. லவ் மேரேஜ் வேணும்னு ஆசைப்பட்டிருக்கேன். ஆனால் அர்ரேன்ஜ் மேரேஜ்ல அளவில்லாத சந்தோஷத்தை அனுபவிக்கிறேன்” அவனது நெற்றியில் முத்தமிட்டாள் அவள்.
“நம்ம ஒன்னு நெனச்சுப்போம். ஆனால் எவ்ளோ கஷ்டம் வந்தாலும், உடைஞ்சு போனாலும் வாழ்க்கை நமக்காக சரியான தெரிவை எப்போவும் தரும். நாம நினைக்கிற மாதிரி ஒருத்தர் கிடைக்கிறது பெரிய விஷயம் இல்ல. ஆனால் நமக்குக் கிடைச்சவங்களுக்காக, நம்மைப் பிடிச்சவங்களுக்காக நாம அவங்க நெனக்கிற மாதிரி மாறுவது தான் வாழ்க்கையோட யதார்த்தம்” அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்டான்.
“காதல் வேணும். ஆனால் அது மட்டும் இருந்தா கூட போதாது. புரிதல், விட்டுக் கொடுப்பு, மத்தவங்க மனசறிஞ்சு நடக்கிறது, பிரச்சினை வரும் போது சேர்ந்து ஃபேஸ் பண்ணுறது, சண்டை வந்தாலும் சீக்கிரமே சமாதானம் ஆகிடறது, எந்தக் கஷ்டத்திலும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கிறது இதெல்லாம் இருந்தா காதலையும் சேர்த்து சந்தோஷமான வாழ்க்கையை நாம வாழலாம்” என்று அவன் சொன்னதை அவளும் ஏற்றுக் கொண்டாள்.
“நான் வேண்டானு சொன்னதை நீங்க கேட்டிருந்தா, கல்யாணத்துக்கு அப்பறம் கூட நமக்குள்ள வந்த சண்டைகளால நீங்க விலகி இருந்தா இப்போ நான் இவ்ளோ அன்பான ஒருத்தரை மிஸ் பண்ணிருப்பேன். இந்த சந்தோஷத்தை இழந்திருப்பேன்.
நான், நீங்க, நமக்காக ரெண்டு குழந்தைங்கனு என் வாழ்க்கை எவ்ளோ அழகா மாறியிருக்குனா அதுக்கு காரணம் நீங்க மட்டும் தான்” அவனைக் காதலுற பார்த்து ரசித்தாள்.
“ஹனிமூன்” என்று சொல்ல, “என்னங்க?” தன்னை அழைப்பதாக நினைத்துக் கேட்க,
“இந்த ஹனி மூன் இல்ல, அந்த ஹனிமூனை சொல்லுறேன். டேக் இட்” என்றவாறு அவளிடம் எதையோ கொடுக்க, விமான டிக்கெட்களைக் கண்டு புருவம் சுருக்கினாள்.
அவளது காதருகே சென்று, “உன்னோட ரஷ்ய பீஸ் உன்னை ரஷ்யா கூட்டிட்டு போகப் போறேன். ஹனிமூன் போகலாமா மை டியர் ஹனி மூன்?” என்றான், ரகசியம் கொஞ்சும் குரலில்.
“ரஷ்யாவா? வாவ் சூப்பர் ரோஸ் மில்க்” அவனது கழுத்தைக் கட்டிக் கொள்ள,
அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டு “ரஷ்யா போய் ரோஸ் மில்க் வாங்கி தர்றேன் உனக்கு. ஆனால் எனக்கு இப்போவே தேன் மிட்டாய் வேணும்” அவளது கன்னங்களைக் கிள்ளி முத்தமிட்டான்.
அம்முத்தத்தில் சிலிர்த்துப் போனவளோ தனக்குப் பிடித்த பாடல் வரிகளைப் பாடலானாள்.
🎶 சிநேகமோ……பிரேமமோ……
ஈடிலா நேயமோ
பேரிலா மாயமோ
கேள்வியே சுகமோ….. 🎶
அதைக் கேட்டு, “நிச்சயமா நேயம் தான்! உன் மேல் ஈடிலா நேயம் எனக்கு. ஓஓ அன்பே! என் நேசம் நீயாகிறாய்” என மொழிந்து ரோஜா மலரொன்றைக் கொய்து அவள் முடியில் சொருகினான் அந்நேசன்.
“நானும் உங்களை நேசிக்கிறேன். என் நேசம் நீயாகிறாய் ரஷ்யாக்காரா!” சிரிப்பும், வெட்கச் சிவப்புமாக அவன் மார்பில் முகம் புதைத்தாள் ராகவேந்திரனின் நேச நாயகி!
அவள் நேசம் அவனாக! அவன் நேசம் அவளாக! இருவரையும் இணைக்கும் பாலமாக நேசம்!
ராகவேந்திரன் – தேன் நிலாவின் நேசம் என்றென்றும் நீடிக்கட்டும்….!!
என் வாசம் நீயாகிறாய்!
என் சுவாசம் நீயாகிறாய்!
தேன் சிந்தும் தேசமே!
என் நேசம் நீயாகிறாய்!
முற்றும்.
ஷம்லா பஸ்லி
2024-11-26
Wowwwwwwww superb story lovlyyyyyyyyyy ❤️❤️❤️❤️❤️ cutee couples……………..