25. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜

4.9
(97)

முள் – 25

தியாவுடன் பேசியவாறு பிரிட்ஜில் இருந்த கறியை எடுத்தவன் சமைப்பதற்கு ஆயத்தம் ஆகிவிட சற்று நேரத்தில் அங்கே வந்த சாஹித்யாவோ “நானே சமைக்கிறேன்…” என்றாள்.

“உன்ன ரெஸ்ட் எடுக்கத்தானே சொன்னேன்.. நான் சொல்றத கேட்கவே கூடாதுன்னு இருக்கியா பாப்பா..?” என கண்டிப்புடன் கேட்டான் அவன்.

‘மறுபடியும் பாப்பாவா..?’ என மனதிற்குள் சலித்துக் கொண்டவள்,

“எனக்கு இப்போ எவ்வளவோ வலி குறைஞ்சிடுச்சு.. நீங்களே பாருங்க நல்லா தானே நடந்து வந்தேன்..” என்றாள் அவள்.

“ஹ்ம்ம்..” என்றவன்,

“ஓகே அப்போ எனக்கு ஹெல்ப் பண்ணு.. அந்த கேரட்டை வெட்டு..” என்றதும் தியாவோ தன் தந்தையுடன் மழலையில் பேசத் தொடங்கி விட்டாள்.

அவளுடைய சிணுங்கலுக்கு கூட பதில் சொல்பவன் “ப்பா..” என அழைத்து எதையோ கூற முயன்ற குழந்தையை கொஞ்சிக் கொண்டே நின்றுவிட,

“இன்னைக்கு அப்பாவும் பொண்ணும் சேர்ந்து சமைக்கிறேன்னு சொல்லி என்ன பட்டினி போட்ருவாங்க போல இருக்கே..” என முணுமுணுத்துக் கொண்டவள் அவனுடைய கரத்தில் இருந்த கறியை இழுத்து எடுத்துக்கொண்டு அதனைக் கழுவத் தொடங்கி விட அவளைப் பார்த்து அசட்டுச் சிரிப்பை சிரித்தவன்,

“பாப்பா ரொம்ப அழகா பேசுறால்ல..?” என்றான்.

“நீங்க பண்றத பாத்தா இன்னைக்கு சமையல் முடியும்கிற நம்பிக்கையே எனக்கு இல்லை..” எனச் சிரித்தவள்,

“அச்சச்சோ பச்சை மிளகாய் வெங்காயம் எதுவுமே இல்லையே..” என்றாள்.

“சரி இவளைப் பிடி.. நான் போய் வாங்கிட்டு வர்றேன்..” என்றவன் குழந்தையைக் கொடுத்துவிட்டு வீட்டில் வேறு என்னென்ன இல்லை என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதை வாங்குவதற்காக சென்றுவிட,

அவன் சென்ற அடுத்த சில நிமிடங்களிலேயே அவர்களுடைய வீட்டுக் கதவு தட்டப்பட்டது.

‘இப்பதானே போனாரு.. அதுக்குள்ள வந்துட்டாரா..? ஆனா இவரு கதவைத் தட்ட மாட்டாரே..’ என நினைத்தவாறு வாயிற் கதவைத் திறந்தவள் அங்கே நின்ற விக்ரமைக் கண்டதும் அதிர்ந்து போனாள்.

பயந்து போனவள் சட்டென கதவை மூட முயல,

அதற்குள் அந்தக் கதவில் தன் கரத்தை அழுத்தமாகப் பதித்து கதவை மூடாமல் செய்தவன் நிதானமாக வீட்டிற்குள் நுழைய,

அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

“இப்போ இதுக்கு உள்ள வரீங்க..? முதல்ல வெளியே போங்க..”

“அட ஏம்மா வந்ததுமே துரத்துற..? உன்னோட மாமாவைக் கூப்பிடு.. அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றான் அவன்.

“அவர் வீட்ல இல்ல.. கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா வாங்க..” எனத் திக்கித் திணறி கூறியவள் எப்படியாவது அவனை வெளியேற்ற முயற்சிக்க,

“ஓஹ் சார் வீட்ல இல்லையா..?” என்றவனின் பார்வை இப்போது தைரியமாக அவள் மீது பதிந்தது.

அவனுடைய பார்வை தன்னுடைய மேனி முழுவதும் வேகமாக ஊர்வதை உணர்ந்து அருவருத்துப் போனவள்,

“எதுவா இருந்தாலும் அப்புறமா வாங்க… முதல்ல வெளியே போங்க..” எனக் கோபத்தில் சீறினாள்.

“இதோ பாரு உன்னோட மாமனுக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை..? நானும் அவ பொண்டாட்டியும் ஒன்னா இருந்தது உண்மைதான்.. அதையெல்லாம் எதுக்கு போலீஸ்ல சொல்றான்..? இதனால அவனோட குடும்ப மானம் தானே போகுது.. இவனால போலீஸ் எங்க வீட்ட வந்து விசாரிக்குறானுங்க.. இதுக்கு அப்புறமா உங்க அக்கா விஷயமா போலீஸோ இல்ல வேற யாராவது என்னைத் தேடி எங்க வீட்டுக்கு வரக்கூடாது.. வந்தா நடக்கிறதே வேற…” என சிறு பெண்ணிடம் அவன் தன் பலத்தைக் காட்டும் எண்ணத்தில் மிரட்டிப் பேச இவளுக்கோ உடல் வெடவெடத்துப் போனது.

விட்டால் அழுது விடுபவள் போல நின்றவளை அவன் நெருங்க பதறிப் போய் பின்னால் நகர்ந்தவள்,

“ச.. சரி.. நான் சொல்லிடுறேன்.. நீங்க கிளம்புங்க..” என்றாள்.

“உங்க அக்காவுக்கு என்ன ரொம்ப பிடிக்கும் தெரியுமா..?” என்றவன்

“நீ வேணும்னா என்கூட பழகிப் பாரு.. உனக்கும் என்ன ரொம்ப பிடிக்கும்…” என அவளை ஆழ்ந்து பார்த்தவாறு அவன் கூற அவளுக்கோ சட்டென கோபம் வந்துவிட்டது.

“உன்ன மாதிரி அசிங்கம் புடிச்சவன் கூட எல்லாம் நான் எதுக்கு பழகணும்..? மரியாதையா இங்கிருந்து வெளியே போயிரு.. இதுக்கு மேல ஏதாவது பேசினா நானே போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்..” என அவள் மிரட்ட அவனுக்கோ அத்தனை ஆத்திரம் அவள் மீது வந்தது.

வான்மதியுடனான தொடர்பு வெளியே தெரியவே வராது என அவனோ நம்பி இருக்க போலீஸ் வரை விடயத்தை போட்டு உடைத்த யாஷ்வின் மீது அவனுக்கோ கொலை வெறியே எழுந்தது.

காவல்துறை அவனுடைய வீடு வரை தேடிவந்து அவளுடனான தொடர்பு பற்றி விசாரிக்க தாயின் முன்பு அவமானம்தான் மிஞ்சியது அவனுக்கு.

இப்படியே விட்டால் தன்னுடைய பெயர் இன்னும் தவறாக ஊர் முழுவதும் பரவிவிடும் எனப் பயந்தவன் இனி இந்தப் பிரச்சனையில் என்னை இழுக்க வேண்டாம் எனக் கூறுவதற்காகவே இங்கே வந்தான்.

ஆனால் வந்த இடத்தில் வான்மதியை விட அழகாக இருக்கும் அவளுடைய தங்கையைக் கண்டதும் அவனுடைய குறுக்கு புத்தியோ இவளையும் முயற்சி செய்து பார்த்தால் என்ன என சிந்திக்கத் தொடங்கி விட்டது.

இவள் சிக்கினால் அவனுக்கு லாபம் தானே.

ஆனால் சாஹித்யாவோ போலீஸில் கூறி விடுவேன் என்பதைப் போல மிரட்ட அவனுக்கு கோபம் வந்துவிட்டது.

“ஓஹோ அவ்ளோ தைரியம் இருக்கா..?” என்றவன் தள்ளி நின்றவளின் தோளைப் பிடிக்க முயற்சிக்க சட்டென பயந்து பின்னால் திரும்பி அறைக்குள் ஓட முயன்றாள் அவள்.

அதற்குள் பின்புற முதுகுப் பக்கத்தில் அவளுடைய சுடிதார் அவன் கரத்தில் சிக்கி கிழிந்து விட பதறித் திரும்பியவளுக்கு உடல் விதிர்விதிர்த்துப் போனது.

அதே கணம் யாஷ்வினின் பைக் சத்தம் கேட்க,

சாஹித்யாவைப் பார்த்து உதடுகளில் விரலை வைத்து “உஷ்ஷ்..” என்றவன்

“இப்போ இங்க நடந்த எதுவுமே அவனுக்குத் தெரியக்கூடாது.. மீறி சொன்னா உன்னால நிம்மதியா காலேஜுக்கு போயிட்டு வீடு திரும்ப முடியாது.. பார்த்து பத்திரமா இருந்துக்கோ..” என எச்சரித்தான் அவன்.

அரண்டு விட்டாள் அவள்.

வேகமாக விழிகளைத் துடைத்துவிட்டு அப்படியே சுவரோடு சாய்ந்து நின்று கொண்டாள் சாஹித்யா.

தேகம் நடுங்கிக் கொண்டிருந்தது.

அதே கணம் வீட்டின் உள்ளே நுழைந்தான் யாஷ்வின்.

அங்கே நின்ற விக்கிரமைக் கண்டதும் முதலில் அதிர்ந்தவனுக்கு உடல் கோபத்தில் இறுகியது.

சாஹித்யா பயந்து போய் சுவரோடு ஒன்றி நிற்பதைக் கவனித்தவன்,

“சாஹிம்மா நீ ஓகே தானே..?” எனக் கேட்டான்.

அவளோ கீழே விழுந்து சிதறி விடுவேன் என்ற கண்ணீர்த் துளிகளை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு ஆமெனத் தலையசைத்தாள்.

“ஏய் உனக்கு இங்க என்ன வேலை..?” என விக்ரமிடம் உறுமலாகக் கேட்டான் யாஷ்வின்.

“இதோ பாருங்க உங்களுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் கிடையாது.. உங்க வைஃப் கூட நான் தொடர்புல இருந்தது உண்மைதான்.. அது அவங்களும் ஆசைப்பட்டுதான் என்கூட இருந்தாங்க.. இதெல்லாம் நீங்க எதுக்கு போலீஸ் கிட்ட சொன்னீங்க..? ஏதோ அவங்களோட சாவுக்கு நான்தான் காரணம் மாதிரி எங்க வீட்டுக்கு வந்து விசாரிக்கிறாங்க.. இதெல்லாம் எங்களுக்கு தேவையில்லாத பிரச்சனை.. அவ விருப்பப்பட்டுதான் சூசைட் பண்ணிக்கிட்டான்னு கேஸை முடிக்கப் பாருங்க.. தயவு செஞ்சு எந்தப் பிரச்சினைலயும் என்ன இழுக்காதீங்க… எனக்கு அடுத்த மாசம் நிச்சயதார்த்தம்..” என அவன் கூற யாஷ்வினுக்கோ அவனைப் பார்க்கவே அசிங்கமாக இருந்தது.

“லிசின் மிஸ்டர் தப்பு பண்ணா பிரச்சனையை ஃபேஸ் பண்ணிதான் ஆகணும்.. உன்னோட பிரச்சனையை நீ பாத்துக்கோ.. நான் என்ன பண்ணனும் என்ன பண்ணக் கூடாதுன்னு நீ சொல்லாத… இன்னொரு தடவை இப்படி வீட்டு பக்கம் வர்றதைப் பார்த்தா காலை உடைச்சிடுவேன்.. கெட் லாஸ்ட்..” கர்ஜித்தான் அவன்.

முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று விட்டால் அவனை அடித்து விடுவது போல பார்த்துக் கொண்டிருந்த யாஷ்வினைக் கண்டதும் அவனுடைய வீரம் எல்லாம் அப்படியே உள்ளுக்குள் பதுங்கிக் கொண்டது.

பெண்ணைக் கண்டால்தான் வீரம் கூட வெளியில் வரும் போல.

அப்படியே பம்மியவன் சாஹித்யாவை ஒரு அழுத்தமான பார்வை பார்த்துவிட்டு வெளியேற முயற்சிக்க,

“டேய் எதுக்கு அவளை முறைச்சுட்டு போற..?”

எனக்கேட்ட யாஷ்வினுக்கு கோபம் வந்துவிட்டது.

“இ.. இல்லையே நான் எதுக்கு சார் முறைக்கப் போறேன்..?” தடுமாறினான் அவன்.

“சாஹிம்மா என்ன ஆச்சு..? நீ எதுக்கு பயப்படுற..? அழுதியா என்ன..?” என அவன் கேட்க உடைந்து போனவள் தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டாள்.

“ஹேய் என்ன ஆச்சும்மா..? இவன் உன்கிட்ட ஏதாவது ரூடா பிஹேவ் பண்ணானா..?”

“ஹலோ சார் எனக்கு என்ன வேற வேலையே இல்லையா..? நான் இத சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்.. நான் ஒன்னும் பண்ணல..” என வேகமாக மறுத்தான் விக்ரம்.

அவன் வீட்டிற்குள் வந்ததால்தான் சாஹித்யா பயந்து விட்டாள் போலும் என நினைத்துக் கொண்டவன் “கெட் லாஸ்ட்…” என அவனைத் திட்டி விட்டு சாஹித்யாவை நெருங்கினான்.

அவன் வெளியே சென்றதும் தன்னருகே வந்து நின்றவனைப் பார்த்தவள் “அம்மு.. அவ.. அவன்..” என்றவள் கதறலோடு அவனுடைய மார்பில் தன் முகத்தைப் புதைத்துக் கொள்ள அதிர்ந்து போனான் அவன்.

“ஹேய் என்னம்மா..?” எனப் பரிவாக கேட்டவனுடைய கரமோ ஆதரவாக அவளை அணைத்துக் கொள்ள அப்போதுதான் அவளுடைய முதுகில் இருந்த ஆடை கிழிந்திருப்பது அவனுக்குப் புரிந்தது.

பதறி தன்னுடைய கரத்தை விலக்கிக் கொண்டவன் அவளைத் திருப்பி அவளுடைய முதுகைப் பார்த்தான்.

ஆடையை பிடித்து இழுத்ததால் முதுகுப்பக்கம் கிழிந்திருப்பது புரிந்ததும் கொதித்துப் போனான் அவன்.

“இத அந்த பொறம்போக்கு நாய்தான் பண்ணானா..?” என அவன் கர்ஜனையாய் கேட்க ஆமென தலையை அசைத்தாள் அவள்.

அவ்வளவுதான் எங்கிருந்துதான் அவனுக்கு அவ்வளவு கோபம் வந்ததோ சுற்றிப் பார்த்தவன் வீட்டின் ஓரத்தில் சாய்த்து வைத்திருந்த உலக்கை ஒன்று இருப்பதைக் கண்டதும் நொடியும் தாமதிக்காது அதைத் தன் கரத்தில் எடுத்துக் கொண்டவன் வெளியே பைக்கில் அமர்ந்து கீயை திருப்பிக் கொண்டிருந்த விக்ரமை வேகமாக நெருங்கி அந்த உலக்கையால் அவனுடைய முதுகில் ஓங்கி அடிக்க,

நிலைகுலைந்து பைக்கோடு சரிந்து வீதியில் விழுந்தான் விக்ரம்.

அந்த இடத்தை அவனுடைய “ஆஆஆஆ‌..” என்ற அலறல் சத்தம் நிறைத்தது.

விழுந்த உடனேயே எழ முயன்று தோற்றுப் போனவன் தரையில் விழுந்தவாறே பின்னால் நகர்ந்து “டேய் எதுக்குடா என்னை அடிச்ச..?” எனக் கத்த அடுத்த வார்த்தை பேச முடியாதவாறு அவனுடைய வாயின் மீதே மிதித்தவன்

“எதுக்குடா சாஹி மேல கை வெச்ச..?” என உறுமியவன் அடி வெளுத்து விட்டான்.

அக்கம் பக்கத்தில் எல்லாம் கூடி வந்து அவனைத் தடுக்க முயற்சிக்க யாஷ்வினின் “ஏய்ய்ய்.”. என்ற கர்ஜனையும் தன்னைத் தடுக்க வந்தவர்களை கைநீட்டி “எவனும் என்கிட்ட வரக்கூடாது..” என அவன் எச்சரித்த விதத்தையும் கண்டு ஆடிப் போனாள் சாஹித்யா.

சாது மிரண்டால் காடு கொள்ளாது.

💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 97

No votes so far! Be the first to rate this post.

1 thought on “25. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!