அக்கணம் அவள் மீது பொங்கிய காதலை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
இந்தக் காலத்தில் எந்தப் பெண்தான் இந்த நள்ளிரவில் தன்னைப் போல ஒருவனைத் தேடி வருவாள்..?
அதுவும் எந்த நம்பிக்கையில் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்தாள்..?
தன் மீது அவள் வைத்திருக்கும் உயிரான நேசத்தை உணர்ந்து கொண்டவனுக்கு தன் உணர்வுகளை அடக்க முடியாமற் போனது.
தன்னவளை அள்ளி அணைத்து தன்னுடைய அத்தனை காதலையும் இதழ் முத்தத்தின் வழியாக அவன் கொட்டி விட வர்ணாவோ திகைத்து விட்டாள்.
எப்போதும் எல்லை மீறி நடக்காதவன் இன்று தன்னை இழுத்து இறுக அணைத்தது மட்டுமல்லாமல் அவளுடைய இதழ்களில் அழுத்தமாக முத்தமும் இட்டுவிட அவளுக்கோ அதிர்ச்சியில் மயக்கமே வந்து விடும் போல இருந்தது.
ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே உடல் சிலிர்த்து உள்ளம் உருகிக் கரைய தொடங்கியது அந்த மாதுவுக்கு.
சுதாரித்து அவனை விட்டு அவள் விலகுவதற்கு முன்பே அவளை தன்னுடைய அணைப்பிலிருந்து விடுவித்தான் அவன்.
அவனுக்கோ அதரங்கள் தித்தித்தன.
மென்மையாக அவளுடைய முகத்தைத் தாங்கியவனுக்கு அவளுடைய அதிர்ந்த தோற்றத்தையும் கலங்கிய கண்களையும் பார்த்ததும் ஒரு மாதிரியாகிப் போனது.
“ஓ மை காட்.. சாரி பேபி கேர்ள்.. ஐ ஆம் ரியலி சாரி..” என்று அவன் அவஸ்தையோடு கூற அவளுக்கோ கன்னங்கள் சிவந்து விட்டன.
அந்த அழகிய கன்னங்கள் கோபத்தில் சிவந்தனவா இல்லை வெட்கத்தில் சிவந்தனவா என்று அவனுக்குப் புரியவே இல்லை.
அவளுக்கோ அவனுடைய முகத்தைப் பார்க்கவே கூச்சமாக இருந்தது.
வயிற்றுக்குள் என்னவோ எல்லாம் உருளும் உணர்வு.
படத்தில் காதல் நாவல்களில் எல்லாம் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு என்று அவள் படித்தது பார்த்தது எல்லாம் நினைவுக்கு வந்தது.
அந்த உணர்வை இப்போது அவளும் உணர்ந்து கொண்டாள்.
படபடவென பேசித் தள்ளுபவளால் இப்போது அவனிடம் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.
இத்தனை நாட்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தவன் ஒரு நொடியில் தன் முழுக் கட்டுப்பாட்டையும் தளர்த்தி விட்டோமே என உள்ளம் உறுத்தியது.
பெரு மூச்சுடன் “குல்பி டைம் ஆயிடுச்சு.. கிளம்பலாம் வா..” என அவளை அழைத்தான் அவன்.
சரியென தலையசைத்தவள் அவனைப் பின் தொடர அவளுடைய ஸ்கூட்டியை தான் செலுத்தியவன் அவளைப் பின்னால் ஏற்றிக் கொண்டு செல்ல ஆரம்பித்தான்.
அவளோ அவனுடன் பேசவே இல்லை.
“சாரி டி.. என் மேல கோபமா இருக்கியா..?”
“…..”
“எனக்காக நீ இவ்வளவு தூரம் தனியா வந்ததும் என்னால என்னோட பீலிங்க்ஸ்ஸ எப்படி எக்ஸ்போஸ் பண்றதுன்னு தெரியலடி.. ரொம்ப எமோஷனலா பீல் பண்ணினேன்.. எப்பவுமே உன் பக்கத்துல வரும்போது கண்ட்ரோலாதான் இருப்பேன்.. இன்னைக்கு எனக்கே தெரியாம என்னோட கண்ட்ரோல் மிஸ் ஆயிடுச்சு பேபி கேர்ள்.. பயந்துட்டியா..?” என்று அவன் ஸ்கூட்டியை செலுத்தியவாறு கேட்க மெல்ல அவனுடைய முதுகில் தன் முகத்தைப் பதித்துக் கொண்டாள் வர்ணா.
வேகமாக ஸ்கூட்டியை செலுத்திக் கொண்டிருந்தவனோ அவளுடைய அணைப்பை உணர்ந்து ஸ்கூட்டியை நிறுத்தியே விட்டான்.
அவளோ அதை உணரும் நிலையில் இல்லை. அவன் முதுகில் தன் முகத்தைப் புதைத்து அவனுடைய வயிற்றில் தன்னுடைய கரங்களைக் கோர்த்து பின்பக்கம் இருந்தவாறு அவனை அணைத்துக் கொண்டவள் அமைதியாக விழிகளை மூடி விட சில நொடிகள் அவனும் விழி மூடி அப்படியே வீதியில் நின்றிருந்தான்.
அவளுடைய அந்த அணைப்புக்கு என்ன அர்த்தம் என்று அவனுக்குப் புரியவில்லை.
நீ முத்தமிட்டதால் நான் உன்னைத் தவறாக நினைக்கவில்லை.. என்கிறாளா இல்லை என்னுடைய காதலுக்கு சம்மதம் கூறி என்னைத் தஞ்சம் அடைந்துவிட்டாளா..?
எதுவாக இருந்தாலும் அந்த நொடி அவளுடைய அணைப்பு அவனுக்கு அவசியமாக இருந்தது.
மெல்ல அவளுடைய கரத்தில் தன் ஒற்றைக் கரத்தால் அழுத்தம் கொடுத்தவன் மீண்டும் அந்த ஸ்கூட்டியை செலுத்தத் தொடங்கினான்.
விழிகளை மூடி அவனுடைய முதுகில் முகம் புதைத்திருந்தவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது.
இக்கணமே ‘நானும் உன்னைக் காதலிக்கிறேன்.. உடனடியாக இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா..?’ என அவளுக்கு வாய்வரை வார்த்தைகள் வந்து முட்டி நின்றன.
அவன் சொல்வது உண்மைதான். அவளுக்கும் அவன் மீது கொள்ளை கொள்ளையாக காதல் இருந்தது. ஆனால் அந்தக் காதலை வெளிப்படுத்தும் நிலையில்தான் அவள் இல்லை.
அதுவும் அவன் அவளை அணைத்து முத்தமிட்ட நொடிக்குப் பிறகு அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.
ஏற்கனவே மனதளவில் அவனைத் தன்னவனாகப் பார்ப்பவளுக்கு இன்று அவனுடைய அதீத நெருக்கம் அவளுடைய காதலை இன்னும் அதிகரித்துவிட்டிருந்தது.
சிறு பெண்ணவளுக்கு உணர்வுகளைக் கட்டுப்படுத்தத் தெரியவில்லை.
கண்ணீரோடு அவனுடைய முதுகில் முகம் புதைத்து அணைத்துக் கொண்டவளுக்கு இப்படியே வாழ்க்கை முழுவதும் இருந்தால் கூட போதும் என்று தோன்றியது.
சற்று நேரத்தில் ஸ்கூட்டி நின்று விட அவளோ அவனைத் தன் அணைப்பிலிருந்து விடுவிக்கவே இல்லை.
அவளுடைய இறுகிய அணைப்பில் பனி போல உருகிப் போயிருந்தவன் “வீடு வந்துருச்சு பேபி கேர்ள்..” என்று கூற அதன் பின்னர்தான் அவனை விட்டு விலகி நின்றாள் அவள்.
அவனோ எதுவும் பேசவில்லை. ஸ்கூட்டியில் இருந்து இறங்கியவன் சற்றுத் தள்ளி இருந்த அவளுடைய வீடு வரை ஸ்கூட்டியை உருட்டத் தொடங்க அவளும் அவனுடன் இணைந்து நடக்கத் தொடங்கினாள்.
வீட்டு வாசல் வரை வந்ததும் ஸ்கூட்டியை அவளிடம் கொடுத்தான் அவன்.
“பத்திரமா உள்ள போடி.. இனி இந்த மிட் நைட்ல நீ வெளியே வரவே கூடாது.. எதைப் பத்தியும் யோசிக்காம தூங்கு…” என்றவன் அவளுடைய கூந்தலை வருடினான்.
“இனி என்னைப் பாக்க வராத..” என்றாள் வர்ணா.
அதிர்ந்து விட்டான் ஸ்பைடர் மேன்.
அவளுடைய விழிகளை அவனோ அழுத்தமாகப் பார்க்க அந்த விழிகளின் கூர்மையைத் தாங்க முடியாமல் தடுமாறி தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள் அவள்.
“என்னாச்சு குல்பி..?”
“ப்ளீஸ் ஸ்பைடர் மேன்.. இனி என்னைப் பார்க்க வராத.. நாம காதலிக்க முடியாது.. இந்தக் காதல் நமக்கு சரியா வராது.. சொன்னா புரிஞ்சுக்கோ.. வேற யாராவது நல்ல பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ..” என்றவளின் கரத்தை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டவனுக்கு கோபம் கோபமாக வந்தது.
“இதோ பாரு பேபி கேர்ள்.. என்னோட பொறுமையை நீ ரொம்ப சோதிக்கிற.. நிஜமாவே உனக்கு என்னைப் பிடிக்கலைன்னா நானே விலகிப் போயிருவேன்.. பிடிக்காத ஒரு பொண்ண டார்ச்சர் பண்ற அளவுக்கு நான் ஒன்னும் கேவலமானவன் கிடையாது.. டீசன்ட்டா நானே விலகிப் போயிருப்பேன்.. ஆனா உனக்கு என்னைப் பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்.. உன்னோட கண்ணுல எனக்கான காதலை நான் எத்தனையோ தடவை பார்த்துட்டேன்.. அதுவும் இந்த மிட்நைட் எனக்காக தனியா வந்தியே இதெல்லாம் காதல் இல்லாம வேற என்னடி..? எதுக்குடி என்னை ஏமாத்துற..? மனசு முழுக்க காதல் வச்சுட்டு எதுக்கு மறைக்கிற..? நமக்குள்ள செட் ஆகாதுன்னு எதுக்கு சொல்ற..? நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கும் பேபி.. நான் உன்னைக் குழந்தை மாதிரி பாத்துக்குவேன்.. என் மேல நம்பிக்கை இல்லையா..?” என்று ஆதங்கமாகக் கேட்டான் அவன்.
அவளுக்கோ விழிகளில் இருந்து கண்ணீர் பொல பொலவென வழிந்து விட்டது.
“ப்ச்.. அழாத குல்பி.. நீ அழுதா எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல..” என அதற்கும் கோபம் கொண்டான் அவன்.
“சொன்னா புரிஞ்சுக்கோடா.. எனக்கு உன்னைப் புடிக்கல.. நீயும் நானும் லவ்வர்ஸா இருக்க முடியாது.. நீ வேற யாராவது பொண்ண பார்த்துக்கோ..” என்று சொன்னதையே திருப்பிக் கூறினாள் அவள்.
“பிடிக்கலையா..?”
அவனுக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபம் வந்தது..
“இப்ப நீ ஏதோ டென்ஷன்ல இப்படிப் பேசுறன்னு தோணுது.. பரவால்ல.. நீ போய் தூங்கு.. காலைல நான் மெசேஜ் பண்றேன்..” என்றான் அவன்.
“இதோ பாரு ஸ்பைடர் மேன்.. இனி நீ என்னைப் பாக்கவோ எனக்கு மெசேஜ் அனுப்பவோ கூடாது..” என்றாள் அவள்.
“ஓஹோ மேடம்.. அந்த அளவுக்கு வந்துட்டீங்களா..” என்றவனின் முகத்தை அமைதியாகப் பார்த்தாள் வர்ணா.
பெண்கள்தான் அழகு என்று யார் சொன்னது..?
இதோ அவள் முன்பு இருக்கும் இந்த ஆண்மகன்தான் எத்தனை அழகானவன்.
கம்பீரமும் அழுத்தமும் நிறைந்த அவனுடைய முகத்தில் தன்னுடன் பேசும் போது மட்டும் கனிவும் காதலும் பொங்குவதை அவள் எத்தனையோ முறை உணர்ந்திருக்கிறாள்.
இதோ இப்போது கூட அவள் பேசிய வார்த்தைகளின் விளைவால் அவனுடைய விழிகளில் அவ்வளவு கோபம் தெரிந்தாலும் அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு தன்னிடம் முடிந்த அளவு பொறுமையாகப் பேசுபவனை எண்ணி உள்ளம் கசிந்தது.
ஆனால் இப்போது அவளுக்கு வேறு வழி இல்லை.
இதற்கு மேல் அவனைத் தன்னை நெருங்க விடக் கூடாது.
அவனுடைய மனதில் ஆசையை வளர்த்து ஏமாற்றி விடக் கூடாது. எப்படியாவது அவனைத் தன்னிடம் இருந்து முழுமையாக அகற்றி விட வேண்டும் என்று எண்ணியவள் “குட் பை ஸ்பைடர் மேன்..” என்றாள்.
“அடியே.. அடிச்சு பல்ல ஒடச்சிடுவேன்.. நில்லுடி..” என்று அதட்டினான் அவன்.
“என்ன..” என்பது போல பார்த்து வைத்தாள் அவள்.
“இனி உன்னை நான் பார்க்க வரக் கூடாதா..?” என்று அவன் அழுத்தமாகக் கேட்க இல்லை என்று தலையசைத்தாள் அவள்.
“ஃபைன்..” என்றவன் அடுத்த நொடியே அங்கே நில்லாமல் திரும்பி நடக்கத் தொடங்க இவளுக்கோ உள்ளம் நொறுங்கிப் போனது.
உடைந்த மனதோடு ஸ்கூட்டியைச் சத்தமின்றி உள்ளே வைத்தவள் வேகமாக உள்ளே சென்று தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவனை இனி பார்க்க வராதே என்று கூறியது அவள்தான்.
ஆனால் இனி அவன் பார்க்க வரமாட்டானோ என்று வேதனை கொள்வதும் அவள்தான்.
அவளுடைய இரு வேறுபட்ட மனங்களின் முடிவு அவளைப் பாடாய்ப் படுத்தியது.
வெகு நேரம் அழுது கரைந்தவள் தன்னை அறியாமலேயே தூங்கிப் போனாள்.
அடுத்த நாள் வழக்கம்போல காலேஜுக்கு சென்றவளுக்கு எதிலும் கவனம் பதியவில்லை.
நூறு தடவைக்கு மேலாக அவளுடைய போனை எடுத்துப் பார்த்து விட்டாள்.
ஸ்பைடர் மேனிடம் இருந்து சிறு குறுஞ் செய்தி கூட வரவில்லை.
நேற்று பேசிய பேச்சில் நிஜமாகவே தன்னை வெறுத்து ஒதுக்கி விட்டானோ என்ற பயம் வேறு அவளுக்குள் இருந்தது.
தன்னை எண்ணியே நொந்து கொண்டாள் அவள்.
அவனை விரட்டி விட்டு இப்போது அவன் வரவில்லையே என்று கவலை கொள்வது எல்லாம் அநியாயம் அல்லவா.
பித்துப் பிடித்தவள் போலத்தான் கல்லூரியில் தன்னுடைய நேரத்தைச் செலவழித்தாள்.
இரவு வந்ததும் அவளைக் கொல்லாமல் கொல்லும் வேதனையும் அவளைத் தழுவியது.
அன்றைய இரவு ஸ்பைடர் மேன் அவளைப் பார்ப்பதற்கு வரவில்லை.
உடைந்து போய் விட்டாள் அவள்.
இவர்களுக்கிடையே எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லாமற் போயிற்று.
அவன் குறுஞ் செய்திகள் அனுப்புவதில்லை.
அவளும் அனுப்புவதில்லை.
இருவருக்கும் இடையே அதீத காதல் இருந்தும் பெரிய இடை வெளி உண்டானது போல இருந்தது.