26. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

5
(15)

வரம் – 26

ஷர்வாவின் அறைக்குள் எதற்காக நுழைந்தோம் என நொந்து போனாள் அவள்.

அவனுடைய அறைக்குள் வெறும் இருபது நிமிடங்கள்தான் இருந்திருப்பாள் அதற்குள் அவனுடைய கரங்கள் அத்துமீறி தன்னை எங்கெல்லாம் தொட்டுவிட்டன என எண்ணியவளுக்கு மனம் வேதனை கொண்டது.

அதீத கோபமும் எழுந்தது.

அதுவும் குங்குமம் இல்லை என்றதும் தன்னுடைய கரத்தைக் காயப்படுத்தி உதிரத்தால் அவன் வைத்த பொட்டு நெற்றியை தகிக்கச் செய்ய என்ன விதமான உணர்வு இது என தவித்துப் போனாள் அவள்.

தன்னுடைய கரத்தை உயர்த்தி அவனுடைய உதிரத்தை அழிக்க முயன்றவள் உதிரம் காய்ந்ததன் காரணமாக அழியாது போக அவளுக்கோ எரிச்சல் கூடியது.

கண்ணாடியின் முன்பு வந்து நின்று தன்னுடைய முகத்தைப் பார்த்தவளுக்கு நெற்றியில் திலகம் வைத்தாற் போலவே இருந்தது அவனுடைய காய்ந்து போன உதிரம்.

அவன் வெளியே எடுத்து விட்ட தாலியும் நெற்றியில் அவன் வைத்த பொட்டும் அவளை பலவீனமாக மாற்ற முகத்தை மூடிக் கொண்டாள் அவள்.

இதோ அரவிந்தனோடு பேசி நான்கு நாட்களாகி விட்டது.

எத்தனை முறை அழைப்பை எடுத்தும் அவன் அவளைத் தொடர்பு கொள்ளவே இல்லையே..

தந்தை இறந்ததன் பின்னர் ஒரு வார்த்தை கூட அதைப்பற்றி அவன் தன்னிடம் பேசவே இல்லை என எண்ணி அதீத வேதனையில் மூழ்கினாள் மோஹஸ்திரா.

‘உனக்கு ஒரு கால் கூட பண்ணனும்னு தோணலையா அர்வி…? இவ்வளவுதான் என் மேல உனக்கு இருக்கிற அக்கறையா..? எத்தனை தடவை உனக்கு கால் பண்ணிட்டேன்… இன்னையோட நாலு நாள் ஆயிருச்சு… நான் என்ன பண்றேன்… எப்படி இருக்கேன் எனக்கு என்ன ஆச்சுன்னு ஒரு கேள்வி கூட நீ கேட்கவே இல்லையே… நீதான் கால் பண்ணல நான் பண்ணின காலையாவது அட்டென்ட் பண்ணி இருக்கலாமே..? என்ன மறந்துட்டியா…? இல்ல என்ன பிடிக்கலையா…? இல்ல என்ன விட அந்த வைரத்த கண்டுபிடிக்கிறதுதான் முக்கியமா…?

ரொம்ப வலிக்குது… இத நான் உன்கிட்ட இருந்து கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை… இந்த பிரச்சனைல நீ எனக்கு ஆறுதலா இருப்பேன்னு நினைச்சேன்… இப்போ யாருமே இல்லாத அனாதை மாதிரி தனியா நின்னு தவிச்சுக்கிட்டு இருக்கேன்…” என்றவள் அருவி போல வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு குளியலறைக்குள் சென்று தண்ணீரை அள்ளி முகத்தைக் கழுவினாள்.

தண்ணீர் பட்டதும் ஷர்வா வைத்துவிட்ட உதிரக் குங்குமமோ கரைந்து அவளுடைய முகத்தில் வழிய அவளுக்கோ உணர்வுகள் மரத்துப் போனது.

வேக வேகமாக தண்ணீரை அள்ளி முழுவதுமாக கழுவி அவனுடைய உதிரத்தை தன் முகத்திலிருந்து அகற்றியவள் அப்படியே குளியலறையின் சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.

அவன் கட்டிய தாலியைக் கழற்றி எறிந்து விட்டுப் போடா என சொல்லிவிட்டு இங்கிருந்து செல்ல அவளுக்கு ஒரு நொடி கூட ஆகாது ஆனால் ஏன் அவளுடைய மனம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது அவளுக்கே புரியவில்லை.

எதற்கு இந்தத் தயக்கம்..?

சிந்தித்துச் சிந்தித்து தனக்குள் சோர்ந்து போனாள் அவள்.

தனியாக அவளால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை.

அரவிந்திடம் கலந்துரையாடி ஏதாவது ஒரு முடிவை எடுக்கலாம் என்றால் அவனுடைய தொடர்பு சிறிதும் அற்றுப்போக பைத்தியம் பிடித்து விடுமோ என்பதைப் போல இருந்தது அவளுக்கு.

சற்று நேரத்தில் ராமு வந்து சாப்பிடுவதற்காக அழைத்தும் கூட அவள் உணவை தவிர்த்து விட்டு தன்னுடைய அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்க சற்று நேரத்தில் இரவு உணவை எடுத்துக்கொண்டு அவளுடைய அறைக்குள் நுழைந்தான் ஷர்வா.

அவள் வந்ததைப் போலவே அவனும் அவளுடைய அறைக் கதவைத் தட்டாமல் உள்ளே நுழைய அவளுக்கோ சுர்ரென கோபம் ஏறியது.

“அங்கேயே நில்லுங்க…”

“வை…?” என ஒற்றை வார்த்தையில் கேள்வியைக் கேட்டவாறு தன்னுடைய புருவத்தை உயர்த்தியவன் அவளை நெருங்கி வர அவளுக்கோ இன்னும் இன்னும் சினம் அதிகரித்தது.

“ஒரு பொண்ணோட ரூமுக்கு வரும்போது கதவைத் தட்டிட்டு வரணும்னு கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா…?” எனக் கோபமாகக் கேட்டாள் அவள்

“ஒரு பொண்ணோட ரூமுக்குள்ள வர்றதுன்னா கதவைத் தட்டிட்டு வரணும்கிற மேனர்ஸ் எல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்… பட் பொண்டாட்டியோட ரூமுக்கு வர்றதுக்கு எந்த மேனர்ஸும் பார்க்க தேவையில்லைன்னு நினைக்கிறேன்…” என அழுத்தமாகக் கூறியவன் அங்கிருந்த மேஜையில் அவன் கொண்டு வந்த உணவுத் தட்டை வைத்துவிட்டு,

“சாப்பிடு…” எனக் கூற,
உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்பதைப் போல அலட்சியமாக அவனைப் பார்த்தாள் அவள்.

“உன்னத்தான் சாப்பிடுன்னு சொன்னேன்….” என அவன் இன்னும் அழுத்தமாகக் கூற,

“ஸ்டே யுவர் லிமிட்…” என்றாள் அவள்.

“ப்ச்… எல்லாத்துக்கும் அடம்பிடிக்காத மோஹி… நைட் முழுக்க நான் தூங்கவே இல்லை.. உங்க பிஸ்னஸ்ல அவ்வளவு குளறுபடி இருக்கு…. நிறைய பண மோசடி நடந்திருக்கு… ஒவ்வொன்னா கண்டுபிடிச்சு நான் தூங்கவே விடியற்காலை நாலு மணி ஆகிடுச்சு…
இந்த நேரத்துல என்னால உன் கூட ஆர்கியு பண்ண முடியாது…. ஐ அம் சோ டயட், நீ சாப்பிட்டீன்னா நானும் சாப்பிட்டு தூங்கிடுவேன்…” எனக் கூற ஒரு கணம் இதயம் இளகிப் போனாள் அவள்.

தனக்காகத்தான் தன்னுடைய தந்தையின் தொழிலுக்காகத்தான் அவன் இவ்வளவும் செய்து கொண்டிருக்கிறான் என்பது புரிய அதற்கு மேல் மறுக்காமல் அவன் கொண்டு வந்திருந்த உணவை எடுத்து உண்ணத் தொடங்கினாள்.

சுயநலமாக சிந்திக்கின்றோமோ என எண்ணத் தொடங்கியிருந்தது அவளுடைய மனம்.

என்னதான் உண்டு முடிக்க வேண்டும் என முயன்று உணவை வாய்க்குள் தள்ளினாலும் கூட உணவு தொண்டைக்குள் இறங்க மாட்டேன் என்பதைப் போல இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் உண்ண முடியாது உணவுத் தட்டை வெறித்துப் பார்க்கத் தொடங்கியிருந்தாள் அவள்.

“என்னடி…?”

“என்னால சாப்பிட முடியல.. போதும்..” என அவள் கூற அவளுடைய கரத்தில் இருந்த உணவுத் தட்டை வாங்கியவன் அவள் மீதி வைத்த உணவை அவன் உண்ணத் தொடங்க அவளுக்கோ ஒரு மாதிரியாகிப்போனது.

“நான் சாப்பிட்ட சாப்பாட்டை எதுக்கு நீங்க சாப்பிடுறீங்க…? நான் வேணும்னா வேற எடுத்துட்டு வரட்டுமா..?”

“ஏன்டி இதுல என்ன இருக்கு..?” என அவளைப் பார்த்து புன்னகைத்தவன் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவளின் வாயிலும் ஒரு கவளம் உணவை ஊட்டிவிட்டு நிமிர அவளோ அதிர்ச்சி நீங்காமலேயே அவன் ஊட்டி விட்டதை உண்டு முடித்திருந்தாள்.

தட்டு காலியாகியதும் அதை எடுத்துக்கொண்டு அவன் வெளியே சென்றுவிட அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதி பறிபோவதைப் போல இருந்தது.
இவன் காட்டும் அக்கறை தன்னை நிலை தடுமாறச் செய்து விடுமோ எனப் பயந்து போனாள் அவள்.

கடந்த சில நாட்களாக நடந்த அனைத்து சம்பவங்களும் அவளை மிகவும் குழப்பி விட்டிருக்க கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலையை இழந்து கொண்டிருந்தாள் அவள்.

இன்று எப்படியும் நிம்மதியாக உறங்கவே முடியாது என்பது அவளுக்குத் தெரிந்து போக சலிப்போடு எழுந்து இரவு ஆடையை மாற்றிக் கொண்டவள் மீண்டும் அவளுடைய அலைபேசியை எடுத்து அரவிந்தனிடம் இருந்து ஏதாவது அழைப்பு வந்திருக்கிறதா என ஆவலாகப் பரிசோதித்தாள்.

மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது அவளுக்கு.

அப்படி என்ன வேலை..?
ஒரு குறுஞ்செய்தி கூட அனுப்ப முடியாதா..?

மனம் மிகவும் சோர்ந்து போனது.
இப்போது இருக்கும் நிலையில் எதையாவது சிந்தித்து அரவிந்தனை வெறுத்து விடுவோமோ என்ற அச்சம் வேறு அவளுக்குள் எழுந்து விட மிகச் சிரமப்பட்டு தன்னுடைய மனதை கட்டுப்படுத்திக் கொண்டாள் அவள்.

என்னதான் முயன்றும் அரவிந்தனின் மீது வைத்திருந்த நம்பிக்கை சற்றே ஆட்டம் காண்பது போல இருந்தது.

தந்தை இறந்த செய்தி அறிந்து ஒரு வார்த்தை கூட அவன் கூறாதிருந்தால் அவளுக்கு எப்படி இருக்கும்..?

இந்த உலகத்தில் தனக்காக இப்போது இருக்கும் ஒரே ஜீவன் அரவிந்தன் மட்டுமே என அவள் எண்ணி இருக்க அவளுடைய நம்பிக்கையை தவிடு பொடியாக்கும் படி இருந்தது அரவிந்தனின் நடவடிக்கை.

பெருமூச்சோடு படுக்கையில் படுத்துக் கொண்டவள் போர்வையை கரத்தில் எடுத்து போர்த்திக் கொள்ள முயன்ற கணம் அந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் ஷர்வா.

அவன் மீண்டும் தன் அறைக்குள் நுழைவதைக் கண்டதும் அவளுக்கோ நொடியில் உள்ளம் பதறியே விட்டது.

அதிர்ச்சியில் அசையாது அவனையே வெறித்துப் பார்த்த வண்ணம் அவள் படுத்திருக்க அவனோ அவளுடைய வெறித்த பார்வையை அலட்சியப்படுத்திவிட்டு அவளின் அருகே படுக்கையில் படுத்துக்கொள்ள அடுத்த நொடி துள்ளிக் குதித்து படுக்கையில் இருந்து எழுந்து நின்றாள் மோஹஸ்திரா.

“ஷர்வாஆஆஆ…”

“எஸ்…?”

“முதல்ல இங்கிருந்து வெளியே போங்க… இல்லன்னா உங்களுக்குத்தான் அசிங்கமா போயிரும்…” என அவள் கோபத்தில் கத்த,

தன்னுடைய காதுக்குள் சுண்டு விரலை நுழைத்து குடைந்து கொண்டவன் காது கேளாதவன் போல அவளுடைய போர்வையைத் தன் பக்கம் இழுத்து எடுக்க அவளுக்கோ முகம் சிவந்து கோபத்தில் கைவிரல்கள் நடுங்கத் தொடங்கின.

“கெட் அவுட் நவ்….”

“பச்… திரும்பத் திரும்ப என்னால உனக்கு எக்ஸ்பிளைன் பண்ணிட்டு இருக்க முடியாது… இப்போ நீயும் நானும் கணவன் மனைவிங்கிறத மறந்துட்டுப் பேசாத… நாளைக்கு இந்தியா போகணும்… அதுக்கு ரெடியாயிரு…” என அவன் கூற
உடைந்து போனாள் அவள்.

“ஷர்வா ப்ளீஸ்… நானே ரொம்ப மனக்குழப்பத்தில் இருக்கேன்.. நீங்க வேற என்ன இப்படி படுத்தி எடுக்காதீங்க… நீங்களும் நானும் ஒரே ரூம்ல இருக்கக் கூடாது… தயவு செஞ்சு இங்கிருந்து வெளியே போங்க… இல்லன்னா ராமு அங்கிளைக் கூப்பிடுவேன்…”

“கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் எதுக்காக தம்பி வேற ரூம்லையே தங்குறீங்க..? பாப்பாவோட ரூம்ல படுத்துக்கோங்கன்னு சொன்னதே உன்னோட ராமு அங்கிள்தான்…” என்றான் அவன்.

ஒரு தாலியைக் கட்டி விட்டால் மட்டும் அனைத்து உரிமையும் சடுதியில் வந்துவிடுமா என்ன..?

என்னுடைய மனதைப் பற்றி யாருக்கும் எந்தக் கவலையும் இல்லையா என வருந்தியவள் தன்னுடைய தலையணையை எடுத்துக்கொண்டு சோபாவை நோக்கி நடக்கத் தொடங்க சட்டென எழுந்து அவளுடைய ஒற்றைக் கரத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவன் அடுத்த நொடியே அவளைத் தன் கையில் ஏந்தி படுக்கையில் படுக்க வைத்திருந்தான்.

உச்சகட்ட அதிர்ச்சியில் அவள் விழி விரித்து அவனைப் பார்க்க அவளுக்கு அருகே தானும் படுத்துக்கொண்டவன் அவளின் இடை மீது தன்னுடைய கரத்தை அழுத்தமாக போட்டுக்கொள்ள சத்தமாக அலறியே விட்டாள் நம் நாயகி.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

1 thought on “26. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!