26. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜

4.7
(103)

முள் – 26

விக்ரமுக்கு தலை உடைந்து ரத்தம் சொட்டத் தொடங்கியது.

அத்தனை பேர் சுற்றி நின்றும் கூட யாரும் அவனுக்கு உதவ வராமல் போக பயந்தே போனான் விக்ரம்.

இதற்கு முன்னர் யாஷ்வினுடைய வீட்டில் அவனுடைய மனைவியுடன் ஒன்றாக இருந்த போதே எதுவும் செய்யாதவன் இப்போது மட்டும் என்ன செய்து விடப் போகின்றான் என்ற தைரியத்தில்தான் சாஹித்யாவின் மீது கை வைத்தான் அவன்.

ஆனால் அன்று அமைதியாக இருந்தவன் இன்று தன்னைப் போட்டு புரட்டி எடுக்கத் தொடங்கியதும் உயிர் பயத்தில் மிரண்டு போனான் அவன்.

அவனால் எவ்வளவோ முயன்றும் யாஷ்வினின் வேகத்தையும் பலத்தையும் எதிர்த்து போராட முடியவில்லை.

இப்படி ஒரு அவதாரத்தில் இதற்கு முன்னர் யாஷ்வினை சாஹித்யா கூட பார்த்ததே இல்லை.

வான்மதியின் துரோகத்தை அறிந்த பின்னர் கூட அவன் இந்த கோபத்தை வெளிப்படுத்தவே இல்லையே.

இன்று ருத்ர மூர்த்தியாக விக்ரமை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தவனைக் கண்டதும் பயந்து போனாள் அவள்.

ஆடை வேறு கிழிந்திருக்கின்றது. இப்படியே அவளால் வெளியே போக முடியாதே.

வேகமாக உள்ளே ஓடிச் சென்று இருக்கையில் கிடந்த யாஷ்வினின் டீசர்ட் ஒன்றை எடுத்து சுடிதாருக்கு மேலே அணிந்தவள் மீண்டும் வெளியே ஓடி வந்தாள்.

“அம்மு வேணாம்.. ப்ளீஸ் விட்ருங்க… அவனுக்கு ஏதாவது ஆயிடப்போகுது.. எல்லாரும் பாக்குறாங்க.. உள்ள வாங்க..” பதறி அழைத்தாள் அவள்.

“எவன் பார்த்தாலும் எனக்கு கவலை இல்ல.. எவ்ளோ தைரியம் இருந்தா என்னோட வீட்டுக்கு வந்து உன் மேலயே கை வைப்பான்..” என அடங்காத சிங்கமாய் கர்ஜித்தான் அவன்.

“ஸ்ஸ்… இவ என்ன உன் பொண்டாட்டியாடா? உன் பொண்டாட்டி மேலயே கை வெச்சுட்டேன்.. அதுக்கே சும்மா தானே இருந்த.. இப்ப மட்டும் உனக்கு கோபம் ஏன் பொத்துகிட்டு வருது..?” என அவ்வளவு அடி வாங்கியும் தரையில் கிடந்தவாறு விக்ரம் கத்த,

“ஆமாடா இவ என்னோட பொண்டாட்டிதான்..” என்றவன் அவனுடைய கரத்தை பின்பக்கமாக வளைத்து உடைத்து விட,

வலி தாங்க முடியாது அலறினான் விக்ரம்.

பிரச்சனையின் பாரதூரத்தை உணர்ந்து ஓடி வந்து யாஷ்வினின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டவள்,

“ஐயோ.. ப்ளீஸ் உள்ள வாங்க..” என பதறினாள் அவள்.

சாஹித்யா அவனைப் பிடித்துக் கொண்டதும் சற்றே மிரண்டு போய் நின்றிருந்த இரு ஆண்களும் அதன் பின்னர் அவனைப் பிடித்துக் கொள்ள,

“உன்ன சும்மா விடமாட்டேன் டா.. இதுக்கு நீ அனுபவிச்சே தீருவ..” என உதிரம் சொட்டும் தலையை ஒற்றைக் கையால் அழுத்தியவாறு எழுந்து கொள்ள முடியாமல் எழுந்தவனுக்கு உடல் முழுவதும் நடுக்கம்தான்.

எத்தனையோ பெண்கள் கூடி நின்று தான் அடி வாங்குவதைப் பார்ப்பதை பார்த்தவனுக்கு அவமானமாக இருந்தது.

அவனை இந்த அளவிற்கு யாரும் இதுவரை அடித்ததோ அசிங்கப்படுத்தியதோ இல்லை.

வாயில் இருந்து உதிரம் வழிய எச்சியோடு சேர்ந்து அந்த உதிரத்தை துப்பியவன் அந்த வழியால் வந்த ஆட்டோவை மறித்து அதனுள் ஏறிச் சென்றுவிட அவனுடைய பைக்கோ அநாதையாக தெருவில் கிடந்தது.

யாஷ்வின்தான் அவனுடைய ஒரு பக்க கையை உடைத்து விட்டிருந்தானே.

இன்னும் ஒரு மாதத்திற்கு அந்த கையால் பைக்கை மட்டுமல்ல சிறு கரண்டியை கூட அவனால் தூக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.

அங்கிருந்த கூட்டமோ அவர்களைப் பற்றி கிசுகிசுக்கத் தொடங்க அவர்கள் அனைவரையும் அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் தன்னைப் பிடித்தவர்களின் கரத்தை உதறித் தள்ளிவிட்டு அழுது கொண்டிருந்த சாஹித்யாவின் கரத்தைப் பிடித்து அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

அவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவளுடைய கரத்தை விட்டு விட வேகமாக அவர்களுடைய வீட்டின் கதவைப் பூட்டியவளுக்கு இதயம் வாய் வழியே வெளியே வந்து விழுந்து விடுமோ என அச்சமாக இருந்தது.

நிதானத்திற்கு வர முயன்று கொண்டிருந்தாள் அவள்.

தன் முன்னே கோபமே உருவாக அப்படியே மாறிப் போய் நின்ற யாஷ்வினைப் பார்க்கவே அச்சம் கொண்டு அந்தக் கதவின் மீது சாய்ந்து விழி மூடி நின்று கொண்டாள் சாஹித்யா.

உடலின் நடுக்கம் சிறிதும் குறையவில்லை.

“எதுக்கு என்கிட்ட முதலே சொல்லல..?” அவளிடம் கோபமாகக் கேட்டான் அவன்.

அவனுடைய கோபக் குரலில் தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு.

“உன்கிட்டதான் கேட்கிறேன் சாஹித்யா.. வாய்க்குள்ள என்ன கொழுக்கட்டையா வெச்சிருக்க..? வாயைத் திறந்து பதில் சொல்லு.. உள்ள வந்து உன்கிட்ட அத்துமீறி உன்னத் தொட்ருக்கான்.. நான் வந்ததும் நீ அதைத் தானே என்கிட்ட முதல்ல சொல்லி இருக்கணும்.. எதுக்கு மறைச்ச.. எதுக்குடி அமைதியா இருந்த..?” அவன் கோபத்தில் கத்த,

அவளுக்கு அழுகைதான் அதிகரித்தது.

அவன் கோபத்தில் டி போட்டு அவளிடம் பேசியதை கவனிக்கத் தவறிவிட்டாள் அவள்.

“ப… பயமா இருந்துச்சு.. உங்ககிட்ட நான் நடந்ததை சொன்னா காலேஜ் போயிட்டு வர்ற வழியில என்னை ஏதாவது பண்ணிடுவேன்னு மிரட்டினான்.. அ… அதனாலதான் எதுவுமே சொல்லல..” என கண்களில் கண்ணீர் வழியக் கூறினாள் அவள்.

“என்ன மீறி அந்த நாயால உன்னை என்ன பண்ணிட முடியும்..? யார் என்ன சொன்னாலும் உடனே பயந்துடுவியா..? அவனைஐஐஐ அவனக் கொன்னாதான் எனக்கு ஆத்திரம் அடங்கும்..” என்றவன் மீண்டும் அந்தக் கதவை திறக்க முயல பாய்ந்து அவனுடைய கரங்களைப் பிடித்துக் கொண்டவள்,

“அம்மூஊஊ ப்ளீஸ்… ப்ளீஸ்.. இப்படி நடந்துக்காதீங்க.. எ.. எனக்கு பயமா இருக்கு… அமைதியா இருங்க ப்ளீஸ்..” கெஞ்சினாள் அவள்.

“உன்கிட்ட அவன் வேற ஏதாவது…” என கழுத்து நரம்பு புடைக்க அவன் சந்தேகத்துடன் கேள்வியை இழுக்க,

அவன் கேட்டு முடிப்பதற்கு முதலே இல்லை என அழுத்தமாக தலை அசைத்தவள்,

“என்னை பிடிக்க வந்தான்.. ஆனா என்னோட ட்ரெஸ் அவன் கையில சிக்கி கிழிஞ்சிடுச்சு.. நல்ல வேளை நீங்க வந்துட்டீங்க.. வேற எதுவும் நடக்கல.. இந்த விஷயத்தை இப்படியே விட்டுருங்க ப்ளீஸ்..” என்றவள் அவனுடைய கரங்களில் இருந்த உதிரத்தைக் கண்டதும் பதறி

“ஐயோ பிளட் வருது..” என்றாள்.

“இது என்னோட பிளட் கிடையாது..” என அலட்சியமாகக் கூறியவனை அதிர்ந்து பார்த்தவள்,

“கு… குளிச்சிட்டு வாங்க..” என்க தன்னுடைய விழிகளை மூடித் திறந்தவன்,

“உனக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் நான் இருக்கேன்… நான் எப்பவும் உன் கூட இருப்பேன்.. என்ன மீறி எவனாலையும் உன்னை எதுவும் பண்ண முடியாது.. இப்படி யாராவது உன்கிட்ட வால் ஆட்டினா முதல்ல என்கிட்ட சொல்லு… நான் நல்லவன்தான்.. அதுக்காக கையாலாகாத கோழை இல்ல.. புரிஞ்சதா..?” என அவளிடம் அழுத்தமாகக் கேட்க மௌனமாக தலையை அசைத்தாள் அவள்.

இன்னும் அவளுடைய முகம் மிரட்சியாக இருப்பதைக் கண்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன்,

“சாஹிம்மா எதுவும் ஆகலைல..? டென்ஷன் ஆகாத ரிலாக்ஸ்..”

“ம்ம்..” மெல்ல முனகினாள் அவள்.

“பயந்துட்டியா..?” கனிவான குரலில் கேட்டான் அவன்.

“கொஞ்ச நேரத்துல உசுரே போயிருச்சு தெரியுமா.. அவன் பண்ணத விட நீங்க அடிச்சதை பார்த்துதான் ரொம்பவே பயந்துட்டேன்.. இங்க பாருங்க என்னோட கை இப்பவும் நடுங்கிக்கிட்டே இருக்கு..” என மெல்லிய குரலில் கூறியவளுக்கு விழிகள் மீண்டும் கலங்கிவிட்டன.

ஆழமாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டவன் அவளுடைய நடுங்கிக் கொண்டிருந்த மென்மையான கரங்களை தன்னுடைய கரங்களால் பற்றிக் கொண்டான்.

“ஈஸி.. ஈஸி..” எனக் கூறியவாறு அவளுடைய மென் கரங்களை அவன் வருடத் தொடங்க, அந்தக் கரங்களின் நடுக்கமோ மட்டுப்பட்டது.

“சாரி நான் கொஞ்சம் ஓவரா டென்ஷன் ஆயிட்டேன்.” என்றான் அவன்.

“உங்களுக்கு சண்டை எல்லாம் போடத் தெரியுமா..?” வியப்பாகக் கேட்டாள் அவள்.

பதில் கூறாமல் சிரித்தான் அவன்.

அவனுடைய சிரிப்பே அவள் கேட்ட கேள்வி எவ்வளவு அபத்தமானது என்பதை அவளுக்கு நொடியில் உணர்த்திவிட்டது.

சண்டை போடத் தெரியாமலா விக்ரமைப் போட்டு அப்படி புரட்டி எடுத்தான்.

“முதுகுல காயம் ஏதாவது இருக்கா..?”

“சே.. இல்ல..”

“ரொம்ப நல்லாவே சண்டை போடுறீங்களே.. அப்போ எதுக்கு அன்னைக்கு அவன அடிக்காம விட்டீங்க..?” எனக் கேட்டாள் அவள்.

“அன்னைக்கு அவன் மேல மட்டும் தப்பு இல்லையே.. வான்மதியும் அவன் கூட சேர்ந்துதானே தப்பு பண்ணா.. அப்போ அவனை மட்டும் குற்றம் சொல்லி அடிக்கிறது எந்த விதத்துல நியாயம்..? அதனாலதான் அப்போ நான் அமைதியா இருந்தேன்… ஆனா இன்னைக்கு நடந்த விஷயத்துல அவன் மேல மட்டும்தான் தப்பு.. ராஸ்கல் எவ்வளவு தைரியம் இருந்திருந்தா உன்கிட்ட அத்துமீறி நடந்திருப்பான்..

என்ன நம்பி இப்போ நீயும் குழந்தையும் இருக்கீங்க.. அதனால மட்டும்தான் இவ்வளவு பொறுமையா இருக்கேன்.. இல்லன்னா அவனோட தலையை சீவிட்டு ஜெயிலுக்குப் போய் இருப்பேன்..” என்றான் இறுகிய குரலில்.

‘ஐயோ ரொம்ப கோவக்காரரா இருக்காரே..’ மனதிற்குள் புலம்பினாள் அவள்.

“நல்லவேளை இந்த பிரச்சினைல பாப்பா எந்திரிக்கவே இல்ல.. அவ எழுந்து அழுறதுக்குள்ள சமையல முடிக்கணும்..” என்றான் அவன்.

“ம்ம்…”

“சரி நீ போய் ட்ரெஸ் மாத்தும்மா.. நான் போய் குளிச்சிட்டு வந்துடுறேன்..” என்றவன் அவளுடைய தலையை பாசமாக வருடி விட்டான்.

அவனுடைய போலியற்ற அன்பில் நெகிழ்ந்து போனாள் அவள்.

“அம்மு..”

அவளுடைய அழைப்பில் ஒரு கணம் உடல் இறுகினாலும் “சொல்லும்மா..” என்றான் அவன்.

அவளுக்கோ ஆச்சரியமாக இருந்தது.

முதல் முறையாக அம்மு என்ற அழைப்பிற்கு கோபப்படாமல் பதில் சொல்கின்றான்.

“எல்லார் முன்னாடியும் என்ன பொண்டாட்டின்னு சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்..”

பதில் பேசவில்லை அவன்.

அவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்துவிட்டு பெருமூச்சோடு குளிப்பதற்காக அவன் வெளியே செல்லத் தொடங்க சட்டென அவனுடைய கரத்தைப் பிடித்து நிறுத்தினாள் அவள்.

“என்ன சாஹிம்மா ஏதாவது வேணுமா..?” என அவளுடைய முகத்தைப் பார்த்தவாறு அவன் கேட்க,

தன்னுடைய கால் பெரு விரல்களை நிலத்தில் ஊன்றி எம்பி உயர்ந்தவள்,

அவனுடைய வலது பக்க கன்னத்தில் மென்மையாக முத்தம் ஒன்றைப் பதித்துவிட்டு அவனுடைய முகத்தைப் பார்க்காமல் அவளுடைய அறைக்குள் அவள் ஓடி விட அதிர்ந்து விட்டான் அவன்.

அவளுடைய இதழ்கள் தீண்டிய அவனுடைய தாடி அடர்ந்த கன்னம் குறுகுறுக்கத் தொடங்கியது.

💜💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 103

No votes so far! Be the first to rate this post.

1 thought on “26. முள்ளெல்லாம் முல்லைத் தேனே 💜”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!