தன் கையைப் பிடித்து நிறுத்தியவள் முக்கியமான விடயத்தைப் பற்றி ஏதோ கூறப் போகிறாள் போலும் என அவன் நினைத்திருக்க அவளோ திடீரென முத்தத்தைக் கொடுத்து விட்டுச் சென்றதும் அவனுக்கு ஒரு கணம் எதுவுமே புரியவில்லை.
சில நொடிகள் அதிர்ந்து நின்றவன் சுயம் அடைந்ததும் கோபத்தோடு அவளுடைய அறையைப் பார்த்தான்.
இப்போது என்ன செய்வது..?
அவளை அழைத்துக் கண்டித்து வைப்பதா..?
இல்லை எச்சரிப்பதா..?
ஏற்கனவே மிரண்டு போய் இருப்பவளை இப்போது நானும் திட்டினால் இன்னும் பயந்து போய் விடுவாளோ என எண்ணியவன் எதுவுமே செய்யாது நேரே குளிப்பதற்குச் சென்று விட்டான்.
ஆனாலும் கூட அவனுடைய ஒரு பக்க கன்னம் உணர்ந்து கொண்டே இருந்த தித்திப்பை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
அவளுடைய மெல்லிய உதடுகளுக்கு ஏன் இந்தத் தித்திப்பு என எண்ணிக் கொண்டவன் அதிர்ந்து அமைதியாகிப் போனான்.
சங்கடம் அதிகரித்து.
அவனுடைய வலிமையான ஒற்றைக் கரம் அவள் முத்தமிட்ட கன்னத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டது.
தெளிவாக இருந்தவனைக் குழப்பி விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது.
எந்த தைரியத்தில் அவனுக்கு முத்தத்தைக் கொடுத்து விட்டு வந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.
தன்னுடைய அறைக்குள் ஓடி வந்து சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டவளுக்கு உடல் முழுவதும் கிடுகிடுவென நடுங்க ஆரம்பித்து விட்டது.
இப்போது அறைக்குள் வந்து திட்டுவானோ..?
என் மீது கோபப்படுவானோ..?
இந்த அறையே அதிரும் வண்ணம் கர்ஜிப்பானோ என்றெல்லாம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தவள் கிட்டத்தட்ட பத்து நிமிடங்களாகியும் அவன் வராது போக நிம்மதிப் பெரு மூச்சை வெளியேற்றினாள்.
அவன் அன்பாகத் தலையை வருடியதும் அம்மு என்ற அவளுடைய அழைப்புக்கு கோபப்படாது பதில் சொன்னதும் அவளை நெகிழச் செய்து விட்டது.
உணர்ச்சி வசப்பட்டு முத்தத்தைக் கொடுத்து விட்டு வந்து விட்டாள்.
ஆனால் இனி எப்படி அவனுடைய முகத்தில் விழிப்பது..?
என்னைப் பற்றி தவறாக நினைத்து இருப்பானோ..?
ஐயோ என்றாகிப் போனது அவளுக்கு.
இப்படியே சிந்தித்துக் கொண்டே நின்றால் எதுவும் ஆகிவிடாதே சமைக்க வேண்டும் அல்லவா என எண்ணியவள் மெல்லக் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.
ஹாலில் எங்கேயும் அவன் இல்லை.
இன்னும் குளித்து முடிக்கவில்லை போலும் என நிம்மதியாக எண்ணிக் கொண்டவள் வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்து சமையலைத் தொடங்கிவிட,
சற்று நேரத்தில் சமையல் அறைக்குள் வந்தவன் அவள் உள்ளே நின்று சமைப்பதைக் கண்டதும் உடனடியாக வெளியேறிச் சென்று விட்டான்.
அவன் எதுவும் பேசாது சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டு அந்த சமையல் அறையில் இருந்து வெளியேறிச் சென்றதும் இவளுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.
அவன்தானே சமைப்பதாகக் கூறினான்.
இப்போது எதற்கு இப்படி முகத்தைத் திருப்பிக் கொண்டு வெளியே செல்ல வேண்டும் என மனதிற்குள் குமுறியவள் அவனிடம் சென்று கேட்கும் தைரியம் இல்லாததால் அமைதியாக சமையலை முடித்துவிட்டு பாத்திரங்களை கழுவி அடுக்கி வைத்துவிட்டு வெளியே வந்தாள்.
ஹாலில் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த தன்னவனைப் பார்த்ததும் அவளுக்கு வதனம் மலர்ந்தது.
இனி இவர்கள் தானே அவளுடைய உலகம்.
அவளுடைய ஒட்டுமொத்த சந்தோஷமும் இவர்களைச் சுற்றித் தானே இருக்கின்றது.
தரையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த இருவரின் அருகே தானும் சென்று அமர்ந்தவள்,
“பாப்பா எப்போ எந்திரிச்சா..?” என யாஷ்வினிடம் கேட்க,
அவனோ காதே கேட்காதவன் போல குழந்தையுடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான்.
அவனுடைய செயலில் ஒரு கணம் திகைத்தவள் தான் கேட்டது அவனுடைய செவிகளில் விழவில்லையோ என நினைத்தவாறு அவனைப் பார்த்து மீண்டும் அதே கேள்வியைக் கேட்க அப்போதும் அங்கே அவள் ஒருத்தி இருப்பதையே கருத்தில் கொள்ளாதவன் போல தன் குழந்தையுடன் பேசிச் சிரிப்பதில் கவனமாக இருந்தான் அவன்.
அப்போதுதான் அவன் தன்னைப் புறக்கணிக்கின்றான் என்பதே அவளுக்குப் புரிந்து போனது.
நொடியில் நொறுங்கிப் போனாள் அவள்.
சட்டென விழிகள் கலங்கி விட்டன.
தந்தையும் மகளும் தன்னைக் கவனியாது அவர்களுடைய உலகத்தில் மூழ்கி இருக்க,
ஏனோ தன்னை ஒதுக்கி வைத்தாற் போல துடித்துப் போனவள் விழிகளில் கண்ணீர் வழியாமல் கட்டுப்படுத்திக் கொண்டவாறு அந்த இடத்தை விட்டு அகல மூயன்றாள்.
அவள் அங்கிருந்து செல்லப் போகின்றாள் என்றதும் சட்டென தியாவோ “ம்மா.. ம்மா வ்வாஆ..” என அவளையும் அவர்களுடைய உலகத்திற்குள் அழைக்க அவ்வளவுதான் அவளுக்கு பொல பொலவென விழிகளில் கண்ணீர் வழிந்து விட்டது.
அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்து குழந்தையைத் தூக்கி இறுக அணைத்துக் கொண்டவள்,
“எங்க நீயும் பேச மாட்டியோன்னு பயந்துட்டேன்…” என அழுகைக் குரலில் கூறியவள் குழந்தையைக் கொஞ்சத் தொடங்கி விட பெருமூச்சோடு அங்கிருந்து எழுந்து சென்று விட்டான் யாஷ்வின்.
அதன் பின்னர் சற்று நேரத்தில் குழந்தைக்கு உணவைப் பிசைந்து ஊட்டிவிட்டு யாஷ்வினுக்கு தட்டில் உணவை வைத்தவள் அதை எடுத்துக்கொண்டு அவனை நெருங்கிச் சென்றாள்.
“சாப்பிடுங்க..”
“………”
அமைதியாக தட்டை வாங்கிக் கொண்டவன் ஒற்றை வார்த்தை கூட அவளிடம் பேசவே இல்லை.
அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.
அப்படி என்ன பெரிய தவறை நான் செய்து விட்டேன்..?
இப்படி என்னுடன் ஒற்றை வார்த்தை கூட பேசாது முகத்தைத் திருப்பும் அளவிற்கா தவறு இழைத்து விட்டேன்..?
அன்பாக முத்தம் கொடுத்தது தவறா?
என் பாசத்தை உணர்த்தியது தவறா..?
அக்கணம் நான் நெகிழ்ந்து போனதை தெரியப்படுத்தியதுதான் தவறாகிப் போனதோ..?
இல்லை எனக்குத்தான் அவர் மீது உரிமை இல்லையா..?
நெஞ்சம் பொருமியது.
சாப்பிடும் நேரத்தில் அவனுடைய மனநிலையை குழப்பி விடக் கூடாது என எண்ணியவள் கலங்கிய மனதோடு அந்த இடத்தை விட்டு அகன்று விட்டாள்.
அதன் பின்னர் அவனிடம் வழியச் சென்று பேசி தன்னுடைய மூக்கை உடைக்க அவள் சற்றும் விரும்பவில்லை.
அவன் பேசாவிட்டால் அவமானம் என்பதை விட இதயம் நொறுங்கிப் போகின்ற வலியை அல்லவா அவள் உணர்கின்றாள்.
அந்த வலியை மீண்டும் உணர்வதற்கு அவளுக்கு மனதில் சற்றும் திடமில்லை.
அமைதியாக ஒதுங்கிக் கொண்டாள்.
இரவு நேரமும் வந்தது.
வீடே அமைதியாக இருந்தது.
தியாவோ ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தாள்.
தியாவின் அருகே படுத்திருந்த சாஹித்யாவின் அருகே வந்தவன் “உன் கூட கொஞ்சம் பேசணும்..” என்றான்.
“இப்போதான் உங்களுக்கு என்கிட்ட பேசத் தெரியுதா..?” என ஆதங்கமாகக் கேட்டாள் அவள்.
“இப்போதான் பேசுறதுக்கான அவசியம் வந்திருக்கு..” என பதில் கொடுத்தான் அவன்.
“ஓஹ்..”
“இங்க வச்சு ஆர்க்யூ பண்ண வேணாம் சாஹித்யா.. வெளிய வா.. இல்லன்னா பாப்பா எழுந்துருவா..” என அவன் கூற அவளுக்கும் அதுவே சரியென பட்டது.
மெல்ல படுக்கையில் இருந்து எழுந்து கொண்டவள் ஹாலுக்குஞ் சென்றாள்.
அங்கே சோபாவில் அமர்ந்திருந்தவன் தனக்கு எதிரே இருந்த சோபாவை கண்களால் காட்டி அவளை அமரும்படி சொல்ல மறுத்துக் கூற முடியாது அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் அமர்ந்தவளின் பார்வை அவன் மீது கேள்வியாகப் பதிந்தது.
“இன்னும் சில மாசத்துல உன்னோட படிப்பு முடிஞ்சிடும்ல..?”
“ம்ம்…”
“நானே உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்க்கலாம்னு இருக்கேன்..” என தெளிவான குரலில் அவளுடைய இதயத்தில் இடியை இறக்கினான் யாஷ்வின்.
அவளுக்கோ சினத்தில் முகம் சிவந்துவிட்டது.
எதுவுமே கூறாது சட்டென சோபாவில் இருந்து எழுந்து கொண்டாள் சாஹித்யா.
“உன்கிட்டதான் பேசிட்டு இருக்கேன் சாஹித்யா.. இப்படி பாதியில எழுந்து போனா என்ன அர்த்தம்..?”
“அர்த்தமில்லாத பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லணும்னு அவசியம் இல்லைன்னு அர்த்தம்..” என அவள் அழுத்தமாகக் கூற அவனுக்கோ பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.
“இப்போ நான் என்ன அர்த்தம் இல்லாம பேசிட்டேன்..?” எனக் கேட்டான் அவன்.
“நீங்க பேசுறது பூராவுமே அர்த்தமே கிடையாதுதான்.. இந்தத் தாலி நீங்க கட்டினது.. எனக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆயிடுச்சு.. இதுக்கு அப்புறமும் நான் இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்கணுமா..? நீங்க என்ன நினைச்சு இப்படி எல்லாம் பேசுறீங்க எனக்கு புரியல..” என்றாள் அவள்.
“ப்ச்… என்னோட வாழ்க்கை முடிஞ்சு போச்சு சாஹித்யா.. நான் பட்ட மரமா மாறிட்டேன்.. இதுல எப்படி உன்னால என்கூட வாழ முடியும்..? உனக்கான நல்ல வாழ்க்கைய நான் தேடிக் கொடுக்கிறேன்.”
“நான் உங்ககிட்ட கேட்டேனா..? எனக்கு நல்ல வாழ்க்கை வேணும்.. வேற வாழ்க்கை வேணும் மாப்பிள்ளை பாருங்கன்னு நான் கேட்டேனா..? எனக்கு நீங்கதான் வேணும்.. பட்ட மரமா இருந்தாலும் சரி பாலைவனமா இருந்தாலும் சரி எனக்கு நீங்க மட்டும்தான் வேணும்.. இன்னொருத்தர நான் எப்பவுமே கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்..” மிகவும் உறுதியாக வெளிவந்தன அவளுடைய வார்த்தைகள்.
அவனுக்கோ கோபம் வந்துவிட்டது.
“இதோ பாரு சாஹித்யா… இப்போ நீ சின்ன பொண்ணு.. நான் சொல்ற எதுவும் இப்போ உனக்குப் புரியாது.. கொஞ்ச வருஷம் போனாதும் நீயே ஃபீல் பண்ணுவ..”
“தயவு செஞ்சு என்னை தியா பாப்பா மாதிரி நடத்தாதீங்க.. நான் ஒன்னும் சின்ன பொண்ணு கிடையாது.. எனக்கு எல்லாமே புரியுது..”
“இல்ல.. உனக்கு எதுவுமே புரியல சாஹித்யா.. சரி விடு.. என்னை எதுக்கு கிஸ் பண்ண..?” என அவன் நேரடியாகக் கேட்டதும் திணறி விட்டாள் அவள்.
அவனுடைய விழிகளை அவளால் சந்திக்க முடியவில்லை.
“நீ வாழ வேண்டிய பொண்ணு.. உனக்கு நிறைய ஆசைகள் இருக்கும்னு எனக்குப் புரியுது.. ஆனா அது எல்லாத்தையும் என்னால நிறைவேத்த முடியாது.. உன்னோட வயசுக்கேத்த மாதிரி ஒரு நல்ல பையனா நானே பார்க்கிறேன்..” என்றதும் அதிர்ந்து அவனுடைய முகத்தைப் பார்த்தவள்,
“நான் உங்களுக்கு கிஸ் பண்ணதால என்ன தப்பா நினைக்கிறீங்களா? எனக்கு உடல் ரீதியா தேவை இருக்கும்னு நினைச்சுத்தான் இன்னொரு மாப்பிள்ளை பாக்கிறீங்களா..?” எனக் கேட்டவளுக்கு விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தே விட்டது.
அவனோ ஆமென தலையசைத்தான்.
“நான் அத தப்புன்னு சொல்ல வரல சாஹிம்மா.. உன்னோட வயசுக்கு ஏத்த ஆசைகள் கண்டிப்பா உன்கிட்ட இருக்கும்.. ஆனா அதெல்லாம் என்னால நிறைவேத்த முடியாது.. உனக்குன்னு ஒரு வாழ்க்கை துணை..” என அவன் கூறிக் கொண்டிருக்கும்போதே தன்னுடைய கரத்தை அவனை நோக்கிப் போதும் என்பது போல நீட்டியவள்,
“ஒருத்தர மனசுல நினைச்சதால இப்போ வரைக்கும் கல்யாணமே வேணாமுன்னு இருந்தவ நான்… ஒருவேளை அக்கா உங்களை ஏமாத்தாம நீங்க அக்கா கூட நல்ல சந்தோஷமா வாழ்ந்திருந்தா கூட உங்க ரெண்டு பேரையும் சந்தோஷமா பார்த்துகிட்டே என்னோட வாழ்க்கைய தனிமையிலேயேதான் கழிச்சிருப்பேன்.. இன்னொருத்தனை என்னோட வாழ்க்கைத் துணையா நான் ஒருநாளும் ஏத்துக்கிட்டு இருக்கவே மாட்டேன்..
நீங்க என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க..? நான் இதுவரைக்கும் எந்த ஆம்பளையும் சந்திக்கவே இல்லைன்னா..? ஸ்கூல் முடிச்சதுக்கு அப்புறமா காலேஜ்ல தினம் தினம் எத்தனையோ பேரை நான் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன் அம்மு… அவங்க எல்லாரும் நீங்களா ஆகிட முடியாது.. அதே மாதிரி அவங்க யாராலையும் என்னை நெருங்கவும் முடியாது.. நெருங்கவும் நான் விடமாட்டேன்.. இந்த உடம்புல உங்களைத் தவிர வேற ஒருத்தரோட கை படுமா இருந்தா அது நான் இறந்ததுக்கு அப்புறமாதான் இருக்கும்..” என்றவளின் வார்த்தைகள் அவனை அதிரச் செய்தன.
Super sis