Home Novelsவிடிய மறுக்கும் இரவே27. விடிய மறுக்கும் இரவே 🥀

27. விடிய மறுக்கும் இரவே 🥀

by ஸ்ரீ வினிதா
4.9
(57)

விடியல் – 27

நான்கு நாட்களில் மொத்தமாக துவண்டு போயிருந்தாள் வர்ணா.

அவளுடைய ஸ்பைடர் மேன் அவளைத் தேடி வரவே இல்லை.

அவனைப் பார்க்காமல் அவளால் நிம்மதியான உறக்கத்தைத் தழுவவே முடியவில்லை.

மனதில் தாங்க முடியாத சுமை ஏறி அமர்ந்து கொண்டது போல இருந்தது.

எப்போதும் சிரித்த முகமாக கல்லூரியில் சுற்றித் திரிந்தவள், கடந்த நான்கு நாட்களாக வாடிய மலராகவே அனைவரின் கண்களுக்கும் தெரிந்தாள்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து அவனுடைய அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். ஆனால் அவனிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

பதில் வரும் எனக் காத்திருந்து ஏமாந்து போய் அவனுக்கு அழைப்பு எடுத்துப் பார்த்தவள், அந்த எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதை அறிந்ததும் பதறித்தான் போனாள்.

ஏனோ அனைத்தும் வெறுமையாகிய உணர்வு.

முதல் இரண்டு நாட்கள் பல்லைக் கடித்துக் கொண்டு தாங்கியவளால் மூன்றாவது நாள் தாங்கிக் கொள்ளவே முடியாமல் போனது.

நான்காவது நாளும் கடந்துவிட, எங்கே இனி தன்னவன் ஒருபோதும் வரவே மாட்டானோ என்ற ஏக்கம் அவளை ஆக்கிரமித்து அவளைத் துடிக்கச் செய்தது.

இப்போது இரவு மணி 12 ஆகிவிட்டது.

அவளுடைய விழிகளில் சிறிதளவு கூட தூக்கம் கலக்கவில்லை.

அவனை ஒரு தடவை பார்த்தால் போதும் என்ற அளவுக்கு அவளுடைய மனம் ஏக்கத்தின் உச்சத்தில் தவித்துக் கொண்டிருந்தது.

தன் விழிகளைத் துடைத்துக் கொண்டவள் பல்கனிக்கு வந்து நின்றாள்.

இந்த இடத்தில்தானே அவனுடன் பல மணி நேரங்கள் செலவழித்திருக்கிறாள்.

பழைய நினைவுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அவளுக்குள் மின்னின.

அந்த நேரத்தில் கூட அவளுடைய உதடுகளில் புன்னகை தவழ்ந்தது.

அவனுடைய அன்பான வார்த்தைகளும் அக்கறையும் அவளை சிலிர்க்க வைத்தன.

இறுதியாக சந்தித்தபோது அவன் கொடுத்த முத்தம் அவளை சுனாமிப் பேரலையாகத் தாக்கியது.

எத்தனையோ முறை தனிமையில் இரவு நேரத்தில் அந்த முத்தத்தை நினைத்துப் பார்த்து மகிழ்ந்திருக்கிறாள்.

அந்த ஈர இதழ் முத்தத்தை நினைக்கும் போதெல்லாம் எங்கிருந்தோ வெட்கம் ஓடிவந்து அவளை ஒட்டிக் கொள்ளும்.

அதே போல இப்போதும் அழையாத விருந்தாளியாக வெட்கம் வந்து விட.

சில நொடிகள் அந்த முத்தத்தை நினைத்து அதில் திளைத்து ஏங்கியவள், பின் மீண்டும் அவனுடைய நினைவில் கண்ணீர் சிந்தினாள்.

“எங்கடா போய்ட்ட..? என்ன ஒரேடியா மறந்துட்டியா.. இனி உன்னை என்னால பாக்கவே முடியாதா..” என முணுமுணுத்துப் பார்த்தவளுக்கு நெஞ்சம் எங்கும் வேதனையே.

நேரம் ஒன்றைத் தொட்டு விட.

அதன் பின்னர் ஸ்பைடர்மேன் வரமாட்டான் என்ற நிதர்சனம் அவளுடைய முகத்தில் அறைந்தது.

அளவு கடந்த வேதனையில் பல்கனி கம்பியைப் பிடித்தவாறு தலை குனிந்து கண்ணீரைச் சிந்திக் கொண்டிருந்தாள் அவள்.

அக்கணம் கீழே திடீரென ஒரு ஒளிவெள்ளம் பாய, அங்கே என்ன வெளிச்சம் தெரிகிறது என்பது போல கூர்ந்து பார்த்தாள் வர்ணா.

கீழே யாரோ ஒருவரின் ஃபோன் டார்ச் லைட் திடீரென அந்த நள்ளிரவு நேரத்தில் ஒளிர்ந்தது.

அவள் பார்த்த அடுத்த நொடியே அந்த ஒளிவெள்ளம் மறைந்து விட்டது.

அவள் விழிகளை விரித்தவாறு அந்த ஒளி வந்த இடத்தைப் பார்த்தாள்.

மீண்டும் ஒளிர்ந்த அந்த டார்ச் லைட் நிதானமாக மறுபக்கம் திரும்ப.

அது திரும்பிய திசையில் தெரிந்த முகத்தைப் பார்த்தவளுக்கு இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

“ஸ்பைடர் மேன்…” என மெல்ல முணுமுணுத்தன அவளுடைய உதடுகள்.

ஆம்.. அவளுடைய ஸ்பைடர் மேன்தான் அங்கே நின்றிருந்தான்.

அவனுடைய ஃபோன் டார்ச்சின் மூலம் அவனுடைய முகத்தைப் பார்த்தவளுக்கு அத்தனை ஆனந்தப் படபடப்பு.

தன்னையே அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

வேகமாக கீழே இறங்கிச் சென்று அவனைக் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் போல கரங்கள் பரபரத்தன.

ஆனால் கண்ணீரை மட்டும் துடைத்தபடி அப்படியே அவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பாவை.

அவளுடைய கவனத்தை ஈர்க்காமல் அவளுடைய முகத்தை மட்டும் பார்த்து விட்டுச் சென்று விடலாம் என அங்கே காத்து நின்றவன் வாடிய மலர்க் கொடி போல பல்கனிக் கைப்பிடியில் சாய்ந்து நின்றவளின் முகத்தை நிலா வெளிச்சத்தில் கண்டதும் அப்படியே அசைவற்று நின்று விட்டான்.

அவளுடைய முகத்தில் தெரிந்த ஏக்கமும் கண்ணீரும் தனக்கானது என்பது புரிந்ததும் அப்படியே அவளை சோகத்தில் ஆழ்த்தி விட்டுச் செல்ல அவன் தயாராக இல்லை.

ஆதலால்தான் இங்கே அவன் நிற்பதை அவளுக்குக் காட்டும் நோக்கத்தில் தன்னுடைய அலைபேசியின் டார்ச் லைட்டை ஆன் செய்து தன்னுடைய முகத்தை அவளுக்கு வெளிச்சத்தில் காட்டினான் அவன்.

அவனைப் பார்த்ததும் அவளுடைய முகத்தில் வந்து போன உணர்வைக் கண்டு கொண்டவனுக்கு உள்ளம் நெகிழ்ந்து போனது.

இதற்கு மேலும் அவளுடைய காதலை அவனுக்கு உணர்த்த வார்த்தைகள் தேவை இல்லை அல்லவா..?

அவனோ டார்ச்சை அணைத்து தன் பாக்கெட்டில் ஃபோனைப் போட்டவன், அடுத்த இரண்டு நிமிடங்களில் வேகமாகக் குழாய் மூலம் ஏறி அவளுடைய பல்கனிக்கு வந்து விட்டான்.

தன் முன்னே வந்து நின்றவனை இமைக்காமல் ஆழ்ந்து பார்த்தாள் வர்ணா.

இமை சிமிட்டினால் அவனுடைய முகம் மறைந்து விடுமோ என்ற‌ பயம் அவளுக்கு.

அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

இருவருடைய பார்வையும் ஒருவருடன் ஒருவர் கலந்து பிணைந்தது.

அவனோ அவளை மெல்ல நெருங்கியவன்,

“இவ்வளவு நேரமாச்சு தூங்காம இங்க நின்னு என்ன பண்ற..” என அவர்களுக்கு இடையேயான மௌனத்தை முதலில் உடைத்தான்.

அவளோ தடுமாறிப் போனாள்.

“சும்மாதான்.. தூக்கம் வரல..” என்றவளின் குரல் நடுங்கியது.

“பொய் சொல்லாத குல்பி.. உனக்கு இது சூட் ஆகல என்னத் தானே தேடிட்டு இருந்த..” என அவன் கேட்க,

தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் தன் புறங்கையால் துடைத்துக் கொண்டவள், “நான் எதுக்கு உன்னைத் தேடணும்..” என்றாள் வீம்பாக.

“அப்போ சரி நான் கிளம்புறேன்..” என்றவன் பல்கனி கம்பியில் கை வைத்தவாறு வெளியே பாய முயன்ற கணம், அவனுடைய முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தாள் வர்ணா.

நடுமுதுகில் விழுந்த அடியில் சன்னமான குரலில் அலறியவன், “அடிப்பாவி என்னடி அடிக்கிற..” என்றவாறு அவளை அதிர்ந்து பார்த்தான்.

“இவ்ளோ நாளும் எங்கடா போய் தொலைஞ்ச..” என்றாள் அழுகை கலந்த குரலில்.

“ஐயோடா மேடம் சொன்னத மறந்துட்டீங்களா..? நீங்கதானே மெசேஜ் பண்ணாதீங்க.. கால் பண்ணாதீங்க.. என்ன பாக்க வராதீங்கன்னு ரூல்ஸ் போட்டீங்க.. இப்போ ஏன் வரலன்னு என்கிட்ட கேட்டா நான் என்ன சொல்றது..?” என அவன் அழுத்தமாகக் கூற, அவளுடைய முகம் மேலும் வாடிப் போனது.

“ஹேய் பேபி கேர்ள்.. உண்மைய மட்டும் சொல்லு..” என்றான் அவன்.

“என்னால உன்ன பாக்காம இருக்க முடியல ஸ்பைடர் மேன்.. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. உன்னை எவ்வளவு மிஸ் பண்ணினேன்னு தெரியுமா..?” என்றாள் நலிந்த குரலில்.

அவனுடைய பார்வை மென்மையாக மாறியது.

அவளைத் தன் பார்வையால் அன்பாக வருடியவன்,

“உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியல குல்பி..” என்றான்.

“சாரி அன்னைக்கு கொஞ்சம் இல்ல இல்ல ரொம்ப ரூடாவே பேசிட்டேன்..” என்றாள் அவள்.

“இட்ஸ் ஓகே பேபி.. நானும் அன்னைக்கு உன்ன உன்னோட பர்மிஷன் இல்லாம கிஸ் பண்ணிட்டேன்.. என்னோட தப்புதான் சாரி..” என்றான் அவன்.

அவளிடமோ மௌனம்.

அவன் அந்த முத்தத்தைப் பற்றி பேசியதும் அவனுடைய கன்னங்கள் சிவந்து விட்டன.

“உள்ள வா குல்பி.. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்..”

அவளுக்கோ அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது.

மறப்பேதும் கூறாமல் அவனைத் தன் அறைக்குள் அழைத்துச் சென்றாள் வர்ணா.

“இப்போ உனக்கு கால் சரியாயிடுச்சா ஸ்பைடர்மேன்..? அன்னைக்கு வீங்கி இருக்குன்னு சொன்னல்ல.. இப்போ ஓகேவா..” என அவள் மெல்லிய குரலில் அக்கறையாக விசாரித்தாள்.

“ஆம்..” என தலையசைத்தான் அவன்.

அவளுடைய அக்கறையில் அவனுள்ளம் தித்தித்தது.

“உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் குல்பி..”

“என்ன விஷயம்..?”

“மேட்ரிமோனில என்னோட ப்ரொபைல் ஆட் பண்ணி இருந்தேன்.. மூணு நாளைக்கு முன்னாடி ஒரு ரெக்வஸ்ட் வந்துச்சு.. அந்த பொண்ணுக்கு என்ன ரொம்ப புடிச்சி இருக்காம்.. எனக்கும் அவள பிடிச்சிருக்கு.. அதனாலதான் அந்த பொண்ண நேர்ல பார்த்து மீட் பண்ணி பேசலாம்னு இருக்கேன்..” என அவன் கூறியதும் அவளிடமோ அதிர்வு.

“அடப்பாவி.. என்ன லவ் பண்றேன்னு சொன்னியே..”

“ஆமாம் குல்பி.. ஆனா நீதான் நமக்கு லவ் செட் ஆகாதுன்னு சொல்லிட்டியே.. அடிக்கடி உன்கிட்ட லவ் பத்தி பேசி உன்னோட வெறுப்பை சம்பாதிக்கிறதுல எனக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல.. அதனாலதான் நீயும் நானும் கடைசி வரைக்கும் நல்ல ஃப்ரண்ட்ஸாவே இருப்போம்னு முடிவெடுத்துட்டேன்..

அந்தப் பொண்ணு உன்ன விட அழகா வேற இருக்கா.. அதனாலதான் எதுக்கு அந்த அழகியை மிஸ் பண்ணணும்னு தோணுச்சு.. என்ன இருந்தாலும் நீ என்னோட பெஸ்ட் பிரண்ட் இல்லையா.. சோ இந்த விஷயத்தை உன்கிட்ட சொல்லிட்டு அதுக்கப்புறம் அந்தப் பொண்ண போய் பார்க்கலாம்னு இருக்கேன்..” என அவன் கூறி முடித்ததும் அவளோ பத்திரகாளியாக மாறியே விட்டாள்.

அருகே இருந்த தலையணையை எட்டி எடுத்தவள், அவனை அந்த தலையணையால் மொத்து மொத்தென்று மொத்த, சிரித்துக் கொண்டே அவளுடைய அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டான் அவன்.

“வாய மூடுடா.. சிரிக்காத.. சிரிச்சா உன்ன அடிச்சே கொன்னுடுவேன்..” எனக் கோபத்தில் அவனைத் திட்டினாள் வர்ணா.

‘அழகியாமே..’ அவளுக்கோ வயிறு பற்றி எரிந்தது.

அவன் மேலும் சிரிப்பதைப் பார்த்து, இந்த தலையணை எல்லாம் இவனுக்கு வலியைத் தராது என்பதைப் புரிந்து, அடிப்பதற்கு வேறு ஏதாவது கிடைக்குமா எனத் தீவிரமாகத் தேடத் தொடங்கினாள் அவள்.

அவளுடைய கரங்களைப் பற்றி இழுத்து தன் அருகே நெருக்கியவன், “நான் யாரை கல்யாணம் பண்ணா உனக்கு என்னடி..?” என விசமமாகக் கேட்டான்.

அதிர்ந்து நின்று விட்டாள் அவள்.

இப்போது அவனுக்கு என்ன பதில் கூறுவது என்று அவளுக்குப் புரியவில்லை.

ஆனால் அவன் மீது அளவு கடந்த கோபம் பொங்கியது.

“எவளையாவது போய் பார்த்த அவ்வளவுதான்..” விரல் நீட்டி மிரட்டினாள் மாது.

“ஹா ஹா.. மேடம் என்ன பண்ணுவீங்க..?”

“ஹாங்.. டெய்லி என் ரூமுக்கு வந்து என்கிட்ட தப்பா நடந்துட்டு என்ன ஏமாத்திட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிட்டேன்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்..” என்றவளை அதிர்ந்து பார்த்தவன் மீண்டும் சிரிக்கத் தொடங்கி விட்டான்.

அவளுக்கோ விழிகள் கலங்கி விட்டன.

அவளுடைய கலங்கிய விழிகளைக் கண்டதும் தன் விளையாட்டை கை விட்டவன், அவளுடைய கரங்களைப் பற்றிக் கொண்டான்.

“விளையாடுனது போதும்டி.. இப்போ கொஞ்சம் சீரியஸா பேசலாமா..”

கலங்கிய விழிகளுடன் அவனைப் பார்த்து “சரி..” என தலையை அசைத்தாள் அவள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!