தேன் 28
மகிழ்மதி தப்பி ஓடிய குற்றவாளி இருந்த அறையை ஒவ்வொரு அங்குலமாக ஒவ்வொரு மூலையையும் கண்களால் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
எங்காவது மறைந்து கிடக்கும் சிறிய குறிப்பு கூட அவளுக்குப் பெரிய வழிகாட்டுதலாக மாறும் என்று உள்ளம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தது.
‘ஒரு துரும்பே போதும்… அது தான் இந்த கேஸின் கதவைத் திறக்கும் சாவி..’ என்று அவள் மனதுக்குள் புனைந்தாள்.
அவள் விரல்கள் அங்கு இருக்கும் கோப்புக்களை ஒவ்வொன்றாகத் தொட்டு எடுத்து பார்த்தபோது, மார்புக்குள் உள்ள இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது.
‘இவ்வளவு கொடூரமாக, இவ்வளவு துணிச்சலாக இந்தக் குற்றவாளிகள் செயல்படுகிறார்களே நாம் காவல்துறை அதிகாரிகள், அப்போ அதைவிட பத்து மடங்கு துணிச்சலுடனும் விவேகத்துடனும் இருக்க வேண்டியது ரொம்ப அவசியம்..” என்று தன்னம்பிக்கையோடு நினைத்தாள்.
அவளது விடாமுயற்சியை பார்த்த ரகுவரன்,
“மகிழ்மதி, தப்பி ஓடிய குற்றவாளியை நீங்க பார்த்தீங்களா..?” என்று கேட்டார்.
மகிழ்மதி கவலை தோய்ந்த முகத்துடன்,
“இல்ல சார்… மழையில ஒழுங்கா அவனோட முகம் தெரியல ஆனா… அந்த ஆளோட கையில ஏதோ வித்தியாசமா இருந்தது என்னன்னு மட்டும் ஞாபகம் வரல…” என்றாள்.
“பரவாயில்லை இவங்க எவ்வளவு பிளான் பண்ணினாலும், இனி நம்ம கிட்ட இருந்து தப்ப முடியாது அதோட இன்னொரு பொண்ணு இனிமே காணாம போகக் கூடாது.. நீங்க ரூம்ல இன்னும் சர்ச் பண்ணுங்க ஏதாவது முக்கிய தடைகள் சிக்குதான்னு பார்ப்போம்….,” என்றவரது கண்கள் சுவற்றின் அருகில் உள்ள தரையில் எரிந்த சாம்பல் சுவட்டில் நிலைத்து நின்றது.
“அவங்க ஆதாரங்களை அழிக்கனும் என்று தான் நினைச்சி பெட்ரோல் ஊத்தி எரிக்க ட்ரை பண்ணியிருக்காங்க அதுக்குள்ள நாம வந்துட்டோம் இல்லன்னா…” என்று ரகுவரன் கூற,
“சார், இந்த பைல்ல இருக்க பெண்களைத்தான் அடுத்ததா டார்கெட் பண்ணி இருக்காங்க சம் டைம் அந்த பிளான் சேஞ்ச் ஆகலாம் ஆனால் அவங்க எதையும் ஈஸியா விட்டு விட மாட்டாங்க ஒவ்வொரு பெண்ணும் இப்போ அபாயத்தில இருக்காங்க அந்த பைலில் இருக்கிற ஒவ்வொரு பொண்ணுங்களையும் சீரியஸா வாட்ச் பண்ண சொல்லி ஒவ்வொருத்தர நியமிங்க நாம தாமதிக்காமல் உடனே இதை செய்தாகணும்..” என்றாள்.
ரகுவரன் அவளது உறுதியைக் கண்டு மனதிற்குள் பாராட்டியபடி,
“சரி, இதைப் பற்றிக் கமிஷ்னருடன் பேசறேன்,” என்று கூறி அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
அவள் தனியாக நின்று, மீண்டும் அறையைச் சுழற்றிப் பார்த்தாள். திடீரென்று மூலையில் இருந்த பழைய குப்பைத் தொட்டி அவளது பார்வைக்குள் சிக்கியது.
‘எப்போதுமே நல்ல விஷயங்களைவிட கெட்ட விஷயங்கள்தான் குப்பைத் தொட்டிகளில் இருக்கும்..’ என்று மனதில் நினைத்தவள், குப்பைத் தொட்டியை கவிழ்த்து கீழே கொட்டினாள்.
பழைய காகிதங்கள், சிதைந்த புகைப்படங்களின் துண்டுகள் அவற்றின் நடுவே ஒரு சிறிய கார்ட் கிடைத்தது. அதை எடுத்துப் பார்த்தவுடன் அவளது நெற்றியில் வியர்வைத் துளிகள் தெரிந்தன.
V.M. Traders – பிரபல மருந்து தயாரிக்கும் நிறுவனம் என்று அச்சிடப்பட்டிருந்தது.
‘மருந்து தயாரிக்கும் கம்பெனிக்கும் இந்த கடத்தல் கும்பலுக்கும் என்ன சம்பந்தமாக இருக்கும் எப்படி அவங்களோட விசிட்டிங் கார்டு இங்கு வந்தது..?’ என்று குழம்பினாள்.
அதை யாருக்கும் தெரியாமல் தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டவள், ‘இந்த கார்டு… ஒரு நாளைக்கு பெரிய சாவியாக மாறும்..’ என்று மனதில் எண்ணிக் கொண்டவள் அங்கிருந்து அமைதியாக வெளியேறினாள்.
அன்றைய நாள் விசாரணைகள், பத்திரிகையாளர்களுக்கு விளக்கம், கமிஷ்னரிடம் ரிப்போர்ட் என் எல்லாமே ஒரே ஓட்டமாகக் கடந்து போயின.
இரவு, வீட்டில் படுக்கையில் படுத்தபோது, அவளது பார்வை அந்த விசிட்டிங் கார்டில் மட்டுமே நிலைத்து நின்றது.
அதை திருப்பித் திருப்பி பார்த்தவளுக்கு மனதில் ஒரு நெருடல் போன்ற உணர்வு ஏற்பட்டது.
“இது எங்கோ பார்த்த மாதிரி இருக்கு… யாரோ சொன்ன பேரு மாதிரி இருக்கு… ஆனா எங்கே? யார்? எப்போ..?” என்று தலையைக் குடைந்து சிந்தித்தாள்.
அவளது மூளை முழுவதையும் கசக்கி சிந்தித்து பார்த்தவளது மனமோ அந்த பெயருடன் ஒரு பழைய நினைவைக் கொண்டுவர முயன்றது ஆனால் எதுவும் சரியாக தெளிவாகவில்லை.
முடிவில் சோர்வால் அவளது கண்ணிமைகள் கனத்தன. ஆனால் அந்த “V.M. Traders” என்ற வார்த்தைகள் மட்டும் அவளது மனதில் ஆழமாக பதிந்து விட்டன.
அது வருங்காலத்தில் ஒரு புயலை எழுப்பப்போகிறது என்பதைக் கூட மகிழ்மதி உணராமல் உறக்கத்தைத் தழுவிக் கொண்டாள்.
**********************************
காயத்ரி வீட்டு வாசலில் நின்றவாறு, கன்னத்தில் கையைத்தாங்கி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தாள்.
முகத்தில் ஏதோ குழப்பம், மனதில் பல ஆயிரம் கேள்விகள். அவள் கண்களில் தெரிந்தது கவலையும், அன்பும் கலந்த உணர்வே.
அந்தத் தருணத்தில், வீட்டுக்குள் கருணாகரனும், கார்த்திகேயனும் ஏதோ பிசினஸ் விஷயமாக பேசிக்கொண்டே வந்தார்கள்.
ஆனால் காயத்ரியின் அசைவற்ற முகத்தைப் பார்த்தவுடன், இருவரும் சற்றே நிறுத்திக் கொண்டு, ஒருவரை ஒருவர் அர்த்தமுள்ள பார்வையால் நோக்கினர்.
‘ஏதோ பிரச்சனை இருக்கிறது…’ என்று கருணாகரனின் மனதில் தோன்றியது.
முகம் சோர்வாகத் தெரிந்தது. அந்த நிலையைக் கண்ட கருணாகரன் உடனே முன்வந்து, அவளது அருகே அமர்ந்து மெதுவாக கையைப் பிடித்தவன், அவளது வதனத்தை நோக்கி,
“என்ன காயத்ரி… வாசலில் இப்படி உட்கார்ந்து என்ன யோசிச்சிட்டு இருக்க? உடம்பு சரியில்லையாம்மா? போய் கொஞ்சம் ஓய்வெடு.. சாப்பிட்டியாம்மா டேப்லெட் போட்டியா? உன் முகம் ரொம்ப வாடிப் போய் இருக்கே ஏதாவது பிரச்சனையா?” என்ற கருணாகரனின் குரல் பாசத்தால் நிரம்பி இருந்தது.
காயத்ரி ஒரு ஆழ்ந்த சுவாசம் ஒன்றை இழுத்து விட்டவள்,
“ஒன்னுமே இல்லங்க… ஆனா இந்த நிவேதா பொண்ணு நினைச்சா தான்… என் மனசுக்கு ரொம்ப கவலையா இருக்கு..” என்று மெதுவாகக் கூறினாள்.
அவளது வார்த்தைகளைக் கேட்ட கருணாகரன் சற்று சிரித்து விட்டு,
“காயுமா முன்ன விட இப்போ நிவேதா ரொம்பவும் முன்னேறி இருக்கா அது உனக்கு நல்லாவே விளங்குது பழைய நிவேதா மாதிரி எப்பவுமே ஊர் சுத்திக்கிட்டே இருக்கா அது நல்லது தானே அவ கொஞ்சம் கொஞ்சமா பழைய நிவேதாவா மாறிட்டா அது உனக்கு நல்லா தெரியுது பிறகு என்ன கவலை..” என்றான்.
கருணாகரனின் பேச்சைக் கேட்டு காயத்ரி மறுப்பாகத் தலையசைத்தவள்,
“இல்லங்க… இப்போ நிவேதாவை பாக்குறதே ரொம்ப அரிதா இருக்கு காலைல போனா, இரவிலே லேட்டா தான் வந்து சேர்றா எனக்கு மனசுக்கு ஏதோ மாதிரி இருக்கு நான் அவளை அப்படியே விட முடியாது இரண்டு நாளா அவளை பார்க்கவே இல்லை..” அவளது குரல் அன்பில் நடுங்கியது.
அதனை உணர்ந்த கருணாகரன் அவளது கையை இறுக்கமாகப் பற்றிப் பிடித்து,
“சரி, நீ கவலைப்படாதே நாளைக்கே அவளை கூப்பிட்டு உன் முன்னாலேயே உனக்கு என்ன சந்தேகம் இருக்கிறதோ அதை நேர்ல கேட்போம் அது உன் பொண்ண நாளைக்கு உண்டு இல்லைன்னு பண்ணுறேன் சரியா கொஞ்சம் சிரிக்கலாமே..!” என்றதும்,
அந்தச் சொற்களில் இருந்த உறுதியும், அன்பும் காயத்ரியின் உள்ளத்தைத் தொட்டது.
அவள் நெஞ்சில் சுமந்திருந்த பாரம் சிறிது குறைந்தது. முகத்தில் ஒரு சின்ன புன்னகை மலர்ந்தது.
அந்தப் புன்னகையைக் கண்ட கருணாகரனும் சிரித்தான். அவளது கண்கள் நிம்மதியுடன் ஒளிர்ந்தன.
அந்த ஒளியைப் பார்த்தவன், “இதுதான் எனக்கு வேணும்… என் காயத்ரி சிரிச்சா தான் என் வீடு வீடாக இருக்கும்” என்று கூற,
அந்தப் புன்னகை மேலும் அதிகரித்தது. அவர்களது அன்பான உரையாடலை பார்த்த கார்த்திகை எனக்கு மனதின் ஓரம் சிறு சந்தேகம் துளிர்விடத் தொடங்கியது.
இந்த சந்தேகம் ஒரு பேரடியாக தனது மனதை தாக்கும் என்று அந்நேரம் பாவம் கார்த்திகேயனுக்குத் தெரியவில்லை.