நெஞ்சம் – 28
மலர் ஊருக்கு சென்று ஐந்து நாட்கள் ஆகி விட்டது. தந்தையை மட்டும் அழைத்து அவர்கள் சென்றதை உறுதிப் படுத்திக் கொண்டான் அர்விந்த். அவன் உள்ளம் காதல் வலியில் தவித்து துடிக்க, அந்த ரணத்தை தந்தவளின் மீது ஆத்திரமாக வந்தது அவனுக்கு. நான் இவளை எவ்ளோ லவ் பண்றேன், ஆனா அவ என்னை எவ்ளோ கேவலமா பேசிட்டு போய்ட்டா என்றே பிடிவாதமாக அவளிடம் பேசாமல் இருந்தான்.
அவன் தான் அவளிடம் பேசாமல் இருந்தான், ஆனால் அவன் மனம் அவளை தேடியது, அவளை பற்றி புலம்பியது, அவளிடம் பேசியது அவளை மிகவும் மிஸ் செய்தான் அர்விந்த். மலர் இல்லாமல் அவனால் அவன் அறையில் தனித்து இருக்கவே முடியவில்லை. நாளெல்லாம் அறையிலேயே பூட்டிக் கொண்டு இருப்பவன், இப்போது அறைக்கு வெளியிலேயே இருந்தான். ஒர்க் ப்ரம் ஹோம் அன்று கூட ஆபிஸ் சென்றான்.
அன்று ஏனோ மலர் நியாபகம் அதிகமாக இருக்க, அவர்களின் காதல் ஸ்தலமான அவர்கள் சென்ற மாலிற்கு சென்றான் அர்விந்த். அங்கு இருந்த புட் கோர்ட் சென்று அமர்ந்தான். பழைய நியாபகத்தில் மூழ்கி போனான். நினைக்க நினைக்க தெவிட்டாத நியாபகம் அவனுக்கு அவை. அவளின் தயங்கி தவிக்கும் பார்க்கும் விழி, வெட்கம், குழப்பம் என அனைத்தையும் அவன் ரசித்திருந்த நாள் அது. இப்போது கூட அதை நினைத்ததும் அவள் மேல் இன்னும் அதிகமான காதல் பொங்கி பெருகியது.
விழி…. மெல்லமாக சொல்லிகொண்டான் அர்விந்த். அவளை பிரிந்து இருக்கும் தாபம் அவனை வாட்டியது. அவளை பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று மனம் துடித்தது. ஆனாலும் மனதை இறுக்கினான் அர்விந்த்.
அவன் எண்ணத்தில் மூழ்கி இருந்தவனை ஒரு பெண்ணின் குரல் கலைத்தது. காதலர்கள் போல், அவனுக்கு பின்னால் அமர்ந்திருந்தனர். அவர்களுக்குள் ஏதோ வாக்குவாதம், பழைய அர்விந்தாக இருந்தால் கண்டுக்கொள்ளாமல் எழுந்து போய் இருப்பான், இப்போது இருக்கும் அர்விந்த், இவங்களுக்கும் நம்மளை மாதிரி பிரச்சனை போல் என்று அதில் கவனம் வைத்தான்.
“சொல்ல போறியா இல்லையா?” அந்த பெண் கோபமாக கேட்க.
“நான் தான் ஒன்னும் வாங்கலைனு சொன்னேனே….” அந்த பையன் சிரித்துக் கொண்டே அவளின் கோபத்தை பொருட்படுத்தாமல் கூலாக பேசினான்.
“பொய்! நீ வாங்கி இருப்பே, எனக்கு சர்ப்ரைஸ் எல்லாம் வேண்டாம், ப்ளீஸ் சொல்றா….” காதலன் பற்றி தெரிந்தவளாக அந்த பெண் கேட்டாள்.
“நிஜமா ஒன்னும் வாங்கலை, ஏன் உன் எல்லா பர்த்டேவுக்கும் கிப்ட் வாங்கி கொடுக்கணுமா? அப்படினா தான் நான் உன்னை லவ் பண்றேன்னு நம்புவியா? இல்லைனா விட்டுட்டு போய்டுவியா?” அவன் விளையாடுகிறான் என்று அர்விந்திற்கு புரிந்தது. அவன் மனதில் ஏன் இந்த பொண்ணு ஓவர் ரியாக்ட் பண்ணுது. பர்த்டே வரப்போகுது போல், வெயிட் பண்ணா என்ன? என்று சிந்தித்தான்.
“நீ கிப்ட் பண்ணலைனா கூட நான் சந்தோஷம் தான் படுவேன், ஆனா நீ எப்போதும் உன் இஷடத்துக்கு தான் எல்லாம் செய்வேன்னு பிடிவாதமா இருக்கே பாரு, அது தான் எனக்கு கஷ்டமா இருக்கு…. நாம பழக ஆரம்பிச்சு மூணு வருஷம் ஆச்சு, எத்தனயோ தடவை எனக்கு என்ன எக்ஸ்பெக்ஸ்டேஷன்னு உனக்கு சொல்லி இருக்கேன், உனக்கும் தெரியும், ஆனாலும் நீ எனக்காக அதை செஞ்சதே இல்லை….”
“நான் நானா தான் இருப்பேன்…. எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கும் போது தான் எனக்கு ஹாப்பி யா இருக்கு…. உனக்கு பிடிச்ச மாதிரி நீ தான் செய்யணும்….”
“உன் குணத்தை நான் மாற சொல்லலை, ஆனா லவ்னா என்னனு தெரியுமா? சில நேரம் நம்மளை நாம முன்னிருத்தி பார்க்காத அளவு, நாம லவ் பண்றவங்களோட சந்தோஷம் பெரிசா தெரியணும்…. நம்மளை இழக்கணும்….”
“என்னோட சுயத்தை எப்படி இழக்க முடியும்?”
“எனக்கான முடிவுகளை உன்னை ஏன் எடுக்க விடுறேன் நான் தெரியுமா? உன் மேல இருக்க லவ்…. ஆனா நீ எனக்காக ஒரு சின்ன விஷயம் கூட செய்யலை…. நான் உனக்கு எந்த அளவிற்கு உரிமை கொடுத்து இருக்கேன்னு கூட உனக்கு தெரியலை…..”
அந்த பெண்ணிற்கு டென்ஷன் ஏறுகிறது என்று அர்விந்திற்கு தெரிந்தது. இவனுக்கே தெரியும் போது அந்த காதலனுக்கு புரியாதா? இந்த பையன் என்ன லூசா? அந்த பெண் எதிர்பார்க்கும் சந்தோஷத்தை செய்ய முடியாதா இவனால்? முடிந்ததை செய்ய முடியாமல் என்ன பிடிவாதம் பிடிக்கிறான் என்று இப்போது அந்த பையன் மேல் கோபம் கொண்டான் அர்விந்த். அவர்கள் பேசிக் கொண்டு இருந்தது அவனுக்கு ஒரு கண் திறப்பாக இருந்தது. அந்த பெண்ணை இந்த பையன் சந்தோஷப்படுத்த ஏன் இவ்வளவு அடம் பிடிக்கிறான் என்று தோன்றிய அந்த நொடி, தான் தன் மனம் கவர்ந்தவளுக்கு என்ன செய்துக் கொண்டு இருக்கிறோம் என்று புரிந்தது அவனுக்கு.
அவன் நினைக்கும் போதே, சேரை வேகமாக சத்தமிட நகர்த்திய பெண்,
“நீ என்னை லவ்வே பண்ணலை டா, இப்போதைக்கு உன்னை தான் நீ லவ் பண்றே, இனிமே நாம சேர்ந்து இருகிறதில அர்த்தம் இல்லை! குட் பை…. உன்னை விட, உன் ஆசையை விட, உன் சந்தோஷத்தை விட, இன்னொரு ஆளோட சந்தோஷம், ஆசை, கண்ணீர் எல்லாம் உன்னை பாதிக்கும் போது, அவங்களுக்காக நிறைய செய்யணும்னு தோணும் போது உனக்கு உண்மையான லவ்வோட அர்த்தம் புரியும்! அப்போ என்னை நினைப்பே…. பை டா….” என்றவாறு விரக்தியாக பேசிவிட்டு அவனின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் விறுவிறுவென்று கிளம்பி விட்டாள் அவள்.
அந்த பையனை வேகமாக திரும்பி பார்த்தான் அர்விந்த். அந்த பெண்ணின் செய்கையை கொஞ்சமும் அவன் எதிர்ப்பார்க்கவில்லை என்று அவனின் திகைத்த முகமும், திக்ப்ரமை பிடித்த தோற்றமும் சொல்லியது. வேகமாக அவனை உலுக்கினான் அர்விந்த்.
“என்னடா இப்படி சொதப்பிட்டே, ஓடு உன் ஆளை சமாதானம் செய்”
“ஐயோ, அவளுக்கு கோவமே வராது ப்ரோ, நான் என்ன செஞ்சாலும் ஓகே தான் சார் சொல்லுவா…. அவ மனசில இப்படி ஒரு எண்ணம் இருக்கிறதே தெரியாது ப்ரோ, நான் அவளை ரொம்ப ஈஸியா எடுத்துகிட்டேன் ப்ரோ….” காதலியின் அதிரடியில், யார் என்ன என்று தெரியாத அரவிந்திடம் புலம்பினான் அந்த பையன்.
“போய் கால்ல விழு….” என்ற அர்விந்த் மனதினில் என் பொண்டாட்டியும் பெரிசா எதுவும் எனக்கு ஆப்பு வைக்கிறதுக்கு முன்னாடி நானும் போய் அவ கால்ல விழுறேன் என்று சொல்லிக்கொண்டான்.
இன்றே செய், நன்றே செய் என்பது போல், கொஞ்சமும் தாமதிக்காமல் கடந்த ஐந்து நாள் போல் அல்லாமல், உடனே மலரை அழைத்தான் அர்விந்த்.
கடந்து போன நாட்களில் கையிலேயே போனை வைத்துக் கொண்டு அவ்வப்போது அவர்களின் திருமணப் புகைப்படம், அர்விந்தின் தனி புகைப்படம் பார்த்துக் கொண்டு இருப்பாள் மலர். வீட்டினில் எந்நேரமும் போனா என்று கேட்டால், அவருடன் மெசேஜ் செய்கிறேன் என்று பொய் சொல்லுவாள். அவன் அழைக்கவே இல்லை என்று அவர்களுக்கு சந்தேகம் வரக்கூடாதே.
ஐந்து நாள் ஐந்து யுகமாக போனது அவளுக்கு. கண்ணகி, கனிமொழி, இருவருமே அவளிடம் பேச்சு கொடுத்து தோற்று போயினர். மசக்கை என்ற போர்வையில் படுத்தே கிடப்பாள். அவ்வளவு மனச்சோர்வு அவளுக்கு. இந்த ஒற்றை அழைப்பு முன்பே வந்து இருந்தால் அத்தனை கவலையையும் அடித்து விரட்டி இருக்கும். ஆனால் இப்போது அவன் அழைப்பை ஏற்க முடியாத அளவு இருந்தது அவள் நிலை.
அவள் ஏற்கவில்லை எனவும் சற்று நேரம் கழித்து அழைக்கலாம், தூங்குகிறாளோ என்னவோ என்று நினைத்தான் அர்விந்த். அவன் மலர் குடும்பத்தில் இதுவரை யாருக்கும் அவனாக அழைத்ததே இல்லை. அதனால் தயங்கினான்.
ஆனால் சிறிது நேரத்திலேயே அருணா அவனை அழைத்தார். “இப்போ தான் மலர் அம்மா பேசினாங்க அர்வி, மலருக்கு உடம்பெல்லாம் புல்லா தடிச்சு, சிவப்பா இருக்காம். டாக்டர் கிட்டே அழைச்சிட்டு போய் இருக்காங்களாம். டாக்டர் என்ன சொல்றாங்கனு திரும்ப அழைச்சு சொல்றேன்னு சொன்னாங்க” என்றார்.
ஓ! விழி…. அவன் இதயம் படப்படக்க, அவளிடம் பேச முடியாத, பார்க்க முடியாத அந்த சூழலை வெறுத்தான் அர்விந்த். அவள் அங்கு கஷ்டப்படுகிறாள் என்ற வலி இங்கு அவனின் கண் வழியே வெளி வந்தது. தன் மனைவியின் கஷ்டத்தை உணர்ந்த அந்த அழும் ஆண்மகன் இனி அவளை எந்த கஷ்டமும் பட விடமாட்டான்.
உடனே தாமதிக்காமல், மாமனாரை அழைத்து விட்டான் அர்விந்த். அத்தனை நாள் இருந்த தயக்கம் இருந்த தடம் தெரியாமல் காணாமல் போனது.
“ஹலோ நான் அர்விந்த் பேசுறேன் மாமா, விழி எப்படி இருக்கா? நான் பேசணுமே அவகிட்டே….” என்றான் வேகமாக.
அத்தனை நாள் இல்லாமல் முதல் முறையாக மாப்பிள்ளை அழைத்ததும் இல்லாமல் பதட்டமாகவும் பேச, அவனிடம் எதுவும் பேசாமல் போனை மகளிடம் நீட்டினார் மாணிக்கவாசகம்.
“ஹலோ….” என்ற அவளின் தீனமான குரல் அவன் நெஞ்சை பிசைந்தது.
“விழி, எப்படி இருக்கே, தைரியமா இரு…. ஒன்னும் ஆகாது….” என்றான்.
அவளின் பலமும் பலவீனமும் அவன் தானே? அவன் குரல் கேட்டதும் அவள் லேசாக விசும்ப இங்கு அவன் இன்னும் துடித்து போனான். அந்நேரம் டாக்டர் வந்து விட சட்டென்று அழைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்நேரம் அவளுடன் தான் இருக்க வேண்டும் என்று அவன் உடலும் உள்ளமும் துடிக்க, அப்போதே வீட்டிற்கு சென்று இரண்டு நாட்களுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு காரில் கிளம்பினான்.
அவன் வீட்டில் இருந்து கிளம்பும் முன்னரே மாணிக்க வாசகம் அவனை அழைத்து, “மலரை சென்னைக்கு அழைத்து போக சொல்றாங்க மாப்பிள்ளை. அங்க போய் பார்த்துக்க சொல்றாங்க. மாசமா இருக்காதால பயப்படுறாங்க” என்றார்.
டாக்டரிடம் கொடுங்க என்றவன், இப்போ மலரும் பேபியும் நல்லா இருக்காங்க தானே? உடனே காட்டுற அளவு எமர்ஜென்சியா என்று கேட்டான்.
“இது கர்ப்பக்கால ஹார்மோன் பிரச்சனை மாதிரி தான் சார் இருக்கு, ஆனா அவங்களுக்கு சிக்கன் பாக்ஸ் வந்ததால ஸ்கேன் ஏதும் செய்யணும்னா சென்னை தான் சார் பெஸ்ட்” என்றார் அந்த ஊர் டாக்டர்.
மாமனாரிடம், இப்போதைக்கு சென்னை போக முடியாது. நீங்க வேலூர்ல இருக்க அந்த ஹாஸ்பிடல் அழைச்சுட்டு போங்க, நானும் வந்துடுறேன். அப்பறம் என்னனு முடிவு பண்ணிக்கலாம் என்றான்.
அவன் சொன்னது போல், அவர்களும் அங்கே தங்க நேரிட்டால் அதற்கும் தயாராக வேலூர் கிளம்பி சென்றனர். அவர்கள் சென்று சேர்ந்து பின் அடுத்த இரண்டு மணி நேரத்தில் அங்கு இருந்தான் அர்விந்த். பெங்களூரில் இருந்து காரை விரட்டிக் கொண்டு மூன்றரை மணி நேரத்தில் வந்து சேர்ந்து இருந்தான்.
அவனை கண்டதும், அவன் மார்பில் ஒண்டினாள் மலர். முகம் வயிறு கைகள் என தடித்து சிவந்து இருந்ததை பார்க்கவே வேதனையாக இருந்தது அர்விந்திற்கு. அவளை அணைத்துக் கொண்டு, “எல்லாம் சரி ஆய்டும், நான் இருக்கேன்” என்றான்.
அவன் வருகை கண்ணகிக்கும் மாணிக்கவாசகத்திற்கும் பலமும் ஆறுதலும் தந்தது.
அங்கு இருந்த மருத்துவர், “அவங்களுக்கு அரிப்பு எதுவும் இல்லை. ஆனா இது சிக்கன் பாக்ஸ் போட்டதால வந்த சைடு எபெக்ட்டா இருக்கலாம்… ஹார்மோன்ஸ் கர்ப்பத்தில எப்படி வேணா ட்ரிக்கர் ஆகும். குழந்தை பிறக்கிற வரை கொஞ்சம் பொறுமையா தான் இருக்கணும். இந்த தடிப்பு ரொம்ப அதிகமாக ஆகி, அவங்களுக்கு அரிப்பு வந்தாலோ, இல்லை வேற பிரச்சனை வந்தாலோ இந்த கர்ப்பத்தை நீங்க கண்டினியு பண்ணாம இருக்கிறது தான் நல்லது” என்று தெளிவாக சொல்லிவிட்டு போனார். மலரையும் வைத்துக் கொண்டு தான் கூறினார் மருத்துவர்.
“நான் விழியை பெங்களூர் அழைச்சிட்டு போறேன்” என்றான் அர்விந்த்.
டாக்டரின் பேச்சில் அலமலந்து போய் இருந்தவள்,
“நான் போக மாட்டேன், இவர் என்னை அங்கே அழைச்சிட்டு போய் அபார்ஷன் செய்ய வைச்சுடுவார்” என்றாள் மலர் வேகமாக.
“மலர்! என்ன பேச்சு இது?” ஒரே நேரத்தில் கண்ணகியும் மனிக்கவாசகமும் அவளை அதட்டினார்கள்.
“நீங்க அதுக்கு தானே வந்தீங்க? சொல்லுங்க? இந்த காரணம் தேடி தானே இவ்ளோ வேகமாக வந்தீங்க?” உணர்ச்சிவசப்பட்டு அர்விந்தை பார்த்து கத்தினாள் மலர்.
தனிமையில் கூட அவளிடம் தன் மனதை உரைக்காதவன், பெரிதாக ப்ரைவசி பார்ப்பவன், இன்று மாமனார் மாமியார் முன்னிலையில் மனைவி அவனை மோசமாக குற்றஞ்சாட்டியும் கொஞ்சமும் கோபப்படாமல்,
“நான் வந்ததுக்கு ஒரே காரணம் நீதான். நான் விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட என் விழி தான்! சந்தோஷத்தில மட்டுமில்லை, கஷ்டத்திலும் நான் உன் கூடவே இருக்கணும், அது தானே கல்யாணத்துக்கு அர்த்தம்?” என்றான் பொறுமையாக.
பேசுவது அர்விந்தா? என்று விழி விரித்து பார்த்தாள் அவனின் விழி!
Oh marupadiyum malar mudhalerndhu arambikrale