முள் – 28
“இந்த உடம்புல உங்களைத் தவிர வேற ஒருத்தரோட கை படுமா இருந்தா அது நான் இறந்ததுக்கு அப்புறமாதான் இருக்கும்..” என அழுகையோடு கூறிவிட்டு வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தவள் அங்கே பெரிதாக வளர்ந்து நின்ற வேம்பு மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டாள்.
யாஷ்வினுக்கு தன்னை எப்படிப் புரிய வைப்பது என்றே தெரியவில்லை.
அழுகைதான் வந்தது.
அவளைத் தேடி வெளியே வந்தான் யாஷ்வின்.
“சாஹி உள்ள வா.. ஒன்பது மணி ஆகுது.. வந்து தூங்கு..” என்றான் அவன்.
அவள் கண்கலங்கிய வண்ணம் அமர்ந்திருப்பதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அவளோ அவனை நிமிர்ந்தும் பார்த்தாள் இல்லை.
அதே கணம் பக்கத்து வீட்டு மலர் அக்காவோ அவர்களுடைய வீட்டை நோக்கி வர தன்னுடைய முக பாவத்தை இயல்பாக மாற்றிக் கொண்டவன்,
“வாங்க அக்கா.. என்ன இந்த நேரத்துல வந்திருக்கீங்க ஏதாவது வேணுமா..?” எனக் கேட்டான்.
“இல்ல தம்பி.. அவர் பையன கிளாஸ்ல இருந்து கூட்டிட்டு வர போயிட்டாரு.. வீட்ல தனியா இருக்க ஒரு மாதிரி இருந்துச்சு அதுதான் நம்ம சாஹித்யா கூட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்ன்னு வந்தேன்.. உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..?” எனக் கேட்டார் அவர்.
“அப்படியெல்லாம் இல்லக்கா..” என உடனே மறுத்தான் அவன்.
“அக்கா நான் இங்கதான் இருக்கேன் வாங்க…” என வேம்பு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தவள் மலர் அக்காவை அழைக்க அவரும் சிரித்தவாறு அவளின் அருகே சென்று அமர்ந்து கொள்ள இருவரும் பேசட்டும் என நினைத்தவன் மௌனமாக வீட்டிற்குள் வந்து விட்டான்.
இந்த இரவு நேரத்திலும் டியூஷன் நடக்கின்றதா என எண்ணியவனுக்கு சலிப்பாக இருந்தது.
சிறுவர்களுக்கு படிப்பு அவசியம்தான். அதற்காக எல்லா நேரத்திலும் அவர்களை படி படியென படுத்தி எடுக்கக் கூடாது அல்லவா..?
அவர்களுக்கு ஓய்வும் அவசியமான ஒன்று என நினைத்தவன் அமைதியாக தன் குழந்தையின் அருகே சென்று அமர்ந்து கொண்டான்.
சாஹித்யாவின் முகம் வாடி இருப்பதைக் கண்ட மலரோ “என்ன சாஹி.. ஏன் உன்னோட முகம் இவ்வளவு டல்லா இருக்கு..?” எனக் கேட்டார் அவர்.
“அ… அப்படியெல்லாம் இல்லையே..” என அவசரமாக மறுத்தாள் சாஹித்யா.
“அக்கா இப்போ உன் கூட இல்லையேன்னு கவலைப்படுறியா….? அது எல்லாத்தையும் மறந்து உன்னோட வாழ்க்கையை வாழ ஆரம்பி..”
“ஹ்ம்ம்…”
“புதுசா கல்யாணம் வேற பண்ணி இருக்கீங்க… இந்த நேரத்துல நான் வந்து உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..?” என சங்கடமாகக் கேட்டார் அவர்.
அவள் இருக்கும் நிலை புரியாது இவர் வேறு என எண்ணிக் கொண்டவள் மறுப்பாகத் தலையசைத்தாள்.
“ஐயோ… நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எங்களுக்கு நடுவுல எதுவுமே இல்லை..” என்றவள் பின் எதையோ கூற வந்து பின் சட்டென அதைத் தன் வாய்க்குள்ளேயே மென்று விழுங்க,
“எனக்கும் சில பிரச்சனைகள் தெரியும் சாஹித்யா.. நீ காலேஜுக்கு போனதுக்கு அப்புறமா வான்மதியைத் தேடி அடிக்கடி அந்த விக்ரம் பையன் இங்க வர்றது எனக்குத் தெரியும்… ரெண்டு பேரும் உள்ள போனதுக்கு அப்புறமா கதவைப் பூட்டினாங்கன்னா வெளியே வரவே நாலு மணி நேரத்துக்கு மேல ஆகும்…” என்றதும் அதிர்ந்து அவரைப் பார்த்தாள் அவள்.
“பக்கத்து வீட்ல இருக்க எனக்கு தெரியாதா..? ஆனா என்ன இருந்தாலும் வான்மதி உங்க விட்டு பொண்ணுல்ல… உங்க வீட்டு பொண்ண பத்தி எப்படி நான் உங்ககிட்டயே குறை சொல்ல முடியும்..? அதனாலதான் எதுவுமே பேசிக்கல.. அப்புறம் அவளோட தற்கொலை… உன்னோட திடீர் கல்யாணம் எல்லாம் அடுத்தடுத்து நடக்கும் போதே உங்க எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சு இருக்கும்னு நினைச்சேன்..” என்றார் அவர்.
அவளுக்கோ அழுகை வந்துவிட்டது.
“யாஷ் ரொம்ப நல்லவருக்கா.. அவரோட வாழ்க்கை இப்படி ஆகி இருக்கவே வேணாம்.. எங்க அக்கா மேல உயிரையே வெச்சிருந்தாரு.. ஆனா அவ இப்படி துரோகம் பண்ணுவான்னு நாங்க நினைச்சுக் கூடப் பாக்கவே இல்ல..”
வேதனை தாங்க முடியாமல் அவள் உடல் அழுகையில் குலுங்கியது.
“சரிடாம்மா அதெல்லாம் முடிஞ்சு போச்சு.. அதைப் பத்தி இனி பேசி எந்த பயனும் இல்லையே.. இனி நீ அவரை நல்லா பாத்துக்கோ..”
“எப்படி அக்கா பாத்துக்குறது..? கட்டாயத்துலதான் என் கழுத்துல தாலி கட்டினாரு.. எங்க அக்கா தற்கொலை பண்ணிக்கறதுக்கு முன்னாடி என்னையும் அவரையும் பத்தி தப்பா சொல்லிட்டு செத்துப் போயிட்டா.. எல்லாமே பெரிய பிரச்சனை ஆயிடுச்சு.. அம்மா அப்பா வந்து என்ன செருப்பாலயே அடிச்சாங்கன்னா பாத்துக்கோங்க.. என்னை அவங்க நம்பவே இல்லை..” என்றவளுக்கு கண்ணீர் பொல பொலவென வழிய அதிர்ந்து போனார் மலர்.
“என்னம்மா சொல்ற..? இது அநியாயமால்ல இருக்கு… இவளே தப்பு பண்ணிட்டு உங்க மேல தப்பு சொல்லிட்டு போயிருக்காளே.. எனக்கு மட்டும் இல்ல பக்கத்து தெருவில இருக்க பார்வதி அக்கா வரைக்கும் அந்தப் பையன் உங்க வீட்டுக்கு வந்து போறது தெரியும்.. நாங்க வேணும்னா உண்மைய உங்க வீட்டு எடுத்துச் சொல்லட்டுமா.”
“அதெல்லாம் வேணாம் அக்கா.. ஹாஸ்பிடல்ல வெர்ஜினிட்டி டெஸ்ட் பண்ணி என் மேல எந்தத் தப்பும் இல்லைன்னு எங்க அப்பா அம்மாகிட்டயே நிரூபிச்சேன்.”
மலரோ விக்கித்துப் போனார்.
இந்தப் பெண்ணுக்கு நடந்தது அனைத்தும் கொடுமை அல்லவா..?
“எப்படி இவ்வளவு அமைதியா இத சொல்ற..? உனக்கு கோபமே வரலையா..?”
“விடுங்க அக்கா.. எனக்கு என் வாழ்க்கைல என்ன நடக்குதுன்னே புரியல..”
“அப்போ உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா.? உன் பேரு கெட்டுப் போயிட்டுங்குறதாலதான் நம்ம யாஷ் தம்பியை கல்யாணம் பண்ணியா..?” எனக் கேட்டார் அவர்.
சட்டென தலையை வேகமாக மறுத்து அசைத்தாள் அவள்.
“அ.. அப்படி இல்லக்கா.. எனக்கு அவர ரொம்பப் பிடிக்கும்… ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. அவரை சந்தோஷமா வச்சுக்கணும்னு ஆசைப்படுறேன்.. தியாவை என் குழந்தையா வளர்க்கணும்னு நினைக்கிறேன்.. இனி அவங்களுக்கு எல்லாமுமா நான் இருக்கணும்.. அது மட்டும்தான் என்னோட ஆசைக்கா…
ஆனா நான் சின்ன பொண்ணு.. அவர் கூட வாழ்ந்தா என் வாழ்க்கை நாசமா போயிரும். எனக்கு வேற நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு இப்போ வரைக்கும் அவர் சொல்லிக்கிட்டே இருக்காரு.. அவரோட மனசை எப்படி மாத்துறதுன்னே எனக்குத் தெரியல..”
“இந்த காலத்துல இப்படி ஒரு பையனா..?” என வியந்தார் அவர்.
“ஆமாக்கா அவருக்கு கொஞ்சம் கூட சுயநலமா சிந்திக்கவே தெரியாது.. எப்போ பார்த்தாலும் அவரைத் தவிர மத்தவங்களோட நல்லத பத்தி மட்டும்தான் யோசிக்கிறாரு.. நான் இப்படியே அமைதியா இருந்தா கண்டிப்பா இன்னொரு பையனா பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு அனுப்பிடுவாரு..
எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலக்கா.. எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.. உண்மைய சொல்லணும்னா நான் அ.. அவரை விரும்புறேன்கா. என்ன தப்பா நினைக்காதீங்க.. பட் என்னோட மனச எப்படி உங்களுக்கு புரிய வைக்கிறதுன்னே தெரியல..” என தடுமாறினாள் அவள்.
“சரி பரவால்ல விடு… காதல் இல்லாமையா தம்பிக்காக கிணத்துக்குள்ள குதிச்ச..? எனக்கு புரியுதும்மா… உன்னோட காதல அவர்கிட்ட சொல்லு..”
“ம்ம்.. சொல்லிட்டேனே.. பட் அவர்தான் என்ன பாப்பா பாப்பான்னு கூப்பிட்டு சின்ன பொண்ணாவே பாக்குறாரு..” என சோகமாக சோக கீதம் வாசித்தாள் அவள்.
“எதே பாப்பாவா..? அடப்பாவமே..”
“ஹ்ம்ம்….”
“ஹா… ஹா.. தள்ளி நின்னு காதலை சொன்னா சின்ன பொண்ணாதான் தெரியும்.. கொஞ்சம் நெருங்கிப் பழகிப் பாரு..” என்றதும் அவளுக்கு சிரிப்புதான் வந்தது.
“ம்க்கும்.. அப்படியே பழகிட்டாலும் நொடித்துக் கொண்டாள் சாஹித்யா.
“ஏன்டிமா இப்போ எதுக்கு இவ்வளவு சலிச்சுக்கிற..?”
“இன்னைக்கு ஏதோ ஒரு அவசரத்துல அவர் கன்னத்துல கிஸ் பண்ணிட்டேன்கா.. அதுக்குத்தான் இவ்வளவு நேரம் எனக்கு லெக்சர் எடுத்தாரு..”
“அடியேய் பைத்தியக்காரி கன்னத்துல கிஸ் பண்ணா எப்படி பீலிங்ஸ் வரும்… உதட்டுல கிஸ் பண்ணி இருக்கலாம்ல..?” என அவர் கிசுகிசுப்பான குரலில் கூற அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
“ஐயோ..” என சன்னமான குரலில் அலறியவள் பதறித்தான் போனாள்.
கன்னத்தில் முத்தமிட்டதற்கே இப்படி என்றால் உதட்டில் முத்தமிட்டால் அவ்வளவுதான் அவள் சோலி முடிந்து விடும்.
“ஐயோ என்னக்கா நீங்க..? அப்படி மட்டும் நான் நடந்துக்கிட்டா நேரா என்ன கூட்டிட்டுப் போய் வேற ஒருத்தன் கையில புடிச்சுக் கொடுத்து அனுப்பியே விட்ருவாரு.. ஆள விடுங்க..” என்றாள் அவள்.
“ப்ச்… இனி என்ன நடந்தாலும் அவன்தான் உன்னோட புருஷன்.. நீ எதுக்கு தள்ளி நிக்கிற..? உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. அவர்கிட்ட கொஞ்சம் நெருங்கிப் பழகிப் பாரு… நீ நெருங்கிப் பழகினாதானே அவருக்கு பொண்டாட்டிங்கிற எண்ணமே வரும்… இப்படி தள்ளியே நின்னா பாப்பாவாதான் தெரிவ..”
“ம்ம்.. நெ… நெருங்கிப் பழகணும்னா என்னக்கா பண்ணனும்..?” என தன் இரு விழிகளையும் சாசர் போல விரித்தபடி அவரிடம் கேட்டாள் சாஹித்யா.
“அடிப்பாவி இது கூட உனக்குத் தெரியாதா..? அத நான் எப்படி சொல்றது..?” என சில நொடிகள் தயங்கியவர் பின் அவளுக்கு நிஜமாகவே புரியவில்லை என்பதை உணர்ந்து பெருமூச்சு விட்டார்.
“இதோ பாரு ட்ரெஸ் பண்ணிட்டு அவர்கிட்ட போய் ட்ரெஸ் அட்ஜஸ்ட் பண்ணி விடச் சொல்லு..”
“அய்யய்யோ என்ன அடி பின்னிடுவாரு..”
“அப்போ நீ கடைசி வரைக்கும் உன் புருஷனுக்கு பாப்பாவாவே இருந்துக்கோ..” என்றார் அவர்.
“என்னக்கா நீங்களும் இப்படி சொல்றீங்களே..” என சிணுங்கியவளை அவருக்கு மிகவும் பிடித்துக் கொண்டது.
“ஹேய் உன்னால பண்ண முடியலன்னு சொல்லி அவர்கிட்ட ஹெல்ப் கேளுடி.. ஷிப் போட்டு விட சொல்லு.. அவருக்கு பிடிச்சதெல்லாம் சமைச்சுப் போடு.. அன்பா பாத்துக்கோ.. தூங்கும்போது ஒன்னாவே தூங்கு.. தலை வலிக்குது தைலம் தேச்சு விடுங்க இடுப்பு வலிக்குது மசாஜ் பண்ணி விடுங்க இப்படின்னு ஏதாவது பண்ணி அவரை உன் பக்கம் இழுத்துக்கிட்டே இரு… கூடிய சீக்கிரம் நீ அவர் கண்ணுக்கு பொண்டாட்டியா தெரிஞ்சிடுவ..” என சிரித்தவாறு அவர் கிசுகிசுப்பான குரலில் கூற இவளுக்கு வெட்கத்தில் கன்னங்கள் சிவந்தன.
“அக்கா இதெல்லாம் ஒர்க் அவுட் ஆகுமா அக்கா..?”
“எல்லாம் நல்லாவே ஒர்க் அவுட் ஆகும்.. நான் இப்போ கிளம்புறேன்.. நான் சொன்னத ட்ரை பண்ணிப் பாரு… ஏதாவது ஐடியா வேணும்னா சொல்லு.. நாம சேர்ந்து பிளான் பண்ணலாம்..” எனக் கூறி இமை சிமிட்டிச் சிரித்தவர்,
“ஹேய் என்னோட புருஷன் வந்துட்டாருடி.. நான் கிளம்புறேன்..” எனக் கூறிவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட இவளுக்கு இன்னும் கன்னங்கள் சூடேறிச் சிவந்தன.
💜💜
Super and intresting sis