29. சிந்தையுள் சிதையும் தேனே..!

5
(5)

தேன் 29

நள்ளிரவு பன்னிரண்டு மணி.
சாலையில் வாகன ஓசைகள் அரிதாகவே கேட்கின்றன. மெதுவாக வீட்டின் முன்பு சத்தம் எழுப்பாமல் நிவேதா காரை நிறுத்தினாள்.

கண்ணாடிக்குள் தெரியும் அவரது முகத்தில் பதட்டம் பளிச்சிட, காரின் கதவை திறந்து அவசரமாக வெளியே வந்தாள்.

அந்த நேரத்தில் கைப்பேசியில் ஒரு  குறுஞ்செய்தி ஒளிர்ந்தது. அதனை வாசித்தவள் திகைப்புடன் ஒரு நிமிடமும் தாமதிக்காமல், அந்த எண்ணுக்கு அழைப்பு எடுத்தாள்.

“ஹலோ டாக்டர்… எனிதிங் எமர்ஜென்சி?” என்று நிவேதாவின் குரலில் கவலை, ஆவல் இரண்டும் கலந்திருந்தது.

அந்தப் பக்கம் இருந்து சோர்வான குரல்
“இல்லம்மா… இன்னும் அதே நிலைமையில்தான் இருக்காங்க நீங்க சொன்ன மாதிரி இரண்டு நாளுக்கு ஒருமுறை அப்டேட் பண்ணுறதுக்காகத்தான் இந்த மெசேஜ் இன்னும் கோமா ஸ்டேஜ்ல தான்…”

நிவேதாவின் மூச்சு கனமாகியது. “எத்தனை நாள்ல ரெக்கவர் ஆகுவாங்க?” என்று கவலை தோய்ந்த குரலில் கேட்டாள் நிவேதா.

“அது இன்னும் சரியா சொல்ல முடியலம்மா ஆனா… கொஞ்சம் கொஞ்சமா இம்ப்ரூவ்மெண்ட் தெரிகிறது சீக்கிரமே நினைவு திரும்பும்..”

“சரி டாக்டர்… தேங்க்யூ வெரி மச் நாளைக்ககு வந்து உங்களை நேரில் சந்திக்கிறேன்…” என்று மெதுவாகக் கூறி, அழைப்பை துண்டித்தவள்,  தொலைபேசியில் இருந்து முகத்தை நேரே உயர்த்த, அந்தச் சிறிய நொடியே அவளது இதயம் வெளியே வந்து விழுந்தது போல உணர்ந்தாள்.

வீட்டின் வாசலில் கருணாகரனும் காயத்ரியும், கைகளை முன் கட்டிக்கொண்டு, கூர்மையான பார்வையுடன் நின்று கொண்டிருந்தனர்.

நிவேதா உள்ளுக்குள் உறைந்து போனாள்.
‘இப்போ நான் பேசினதை கேட்டு இருப்பாங்களோ! ச்சே.. ச்சே.. இருக்காது சரி பார்ப்போமே என்னதான் நடக்குதுன்னு எப்படியும் சமாளித்து விடலாம்..”  என்று மனதினுள் எண்ணியவள் சிறிது கூட பயத்தை வெளிக் காட்டாமல் தைரியத்தினைத் தேடி மெதுவாக முன் வந்தாள்.

“என்னம்மா… இன்னும் தூங்கலையா? சாப்பிட்டிங்களா? டேப்லெட் போட்டிங்களா? உடம்பு சோர்வா இருந்தா சீக்கிரமா தூங்கணும்…” என்று அன்போடு, மென்மையான குரலில் கூறினாள் கள்ளத்தனம் கொண்ட நிவேதா.

ஆனால் காயத்ரி முகத்தில் பார்வை மாறாமல் அதே கோணத்தில் இருந்தது.

“பாருங்க உங்க பொண்ணு எப்படி சமாளிக்கிறாள்னு பாருங்க திருட்டுத்தனமா வீட்டுக்குள்ள வர்ற மாதிரி, ஒவ்வொரு நாளும் நேரம் கெட்ட நேரத்தில்தான் வீடு திரும்புறா இன்று கையும் களவுமா மாட்டிட்டதும் அம்மா மேல பாசம் பொத்து கொண்டு வந்துட்டு..!” என்று வார்த்தைகள் அம்பு வேகத்தில் பாய்ந்தன.

நிவேதா அதிர்ச்சியுடன், “அப்பா… ஒரு ப்ரண்டுக்கு உடம்பு சரியில்லாம இருந்தது ஹாஸ்பிடல் போய் பார்த்துட்டு வந்தேன் அதனால்தான் லேட் ஆயிடுச்சு…” என்று கூறினாள்.

ஆனால் காயத்ரி நம்பாமல்,

“ஒவ்வொரு நாளும் இதே மாதிரி கதைதான்காலை சாப்பிட மாட்டே, மதியம் வரமாட்டே, இரவும் இப்படித்தான்! ஏன் உன் அம்மா சாப்பாடு உனக்கு வர வர பிடிக்குதில்லையா இல்லன்னா அம்மாவையே பிடிக்கலையா..?” என்று கண்களில் கண்ணீர் கசிய கேட்டாள் காயத்ரி.

அவர்கள் தகராறைப் பார்த்துக் கொண்டிருந்த கருணாகரன் சற்று முன் வந்து,

“போதும் காயத்ரி. இனிமே அவ லேட்டா வரமாட்டா நான் அவளோட சொல்லுக்கு கேரண்டி இனி லேட்டா வந்தான்னா நாமே பெரிய பனிஷ்மென்ட் கொடுப்போம்.”

“வாவ்! அப்படியா? நீங்க பழையபடி உங்க பொண்ணுக்கே சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா? பெண் பிள்ளையோட பிரச்சனை தெரியாம, இப்படி செல்லம் கொடுத்ததால்தான் இவ்வளவு தைரியம் வந்திருக்குது  நாளைக்கு கல்யாணம் ஆன பிறகு கூட இவளோட பழக்கவழக்கம் இப்படியே இருந்தா நம்மள தான் குற்றம் சொல்லுவாங்க..?” என்று கத்திவிட்டு கோபத்தில் காயத்ரி அறைக்குள் சென்றுவிட்டாள்.

அவள் சென்ற பின்பு, கருணாகரன்  நிவேதாவை பார்த்து,
“உன் அம்மாவுக்கு உடம்பே சரியில்லை அவள் டென்ஷனாகாத மாதிரி நீ தான் கவனிச்சுக்கணும் இனிமே இப்படிச் செய்யாதேம்மா நேரத்துக்கு வந்துடு, ப்ளீஸ் இந்த அப்பாவுக்காக..” என்று அன்புடன் கேட்டார்.

நிவேதா தலையசைத்து, “சரி அப்பா… இனிமே நான் கவனிச்சுக்கறேன்.. இப்படி எல்லாம் செய்ய மாட்டேன்..” என்று கூறினாள்.

அந்தச் சமயத்தில், பின்புறத்திலிருந்து கார்த்திகேயனின் குரல்.
“நிவேதா…!”

அவன் அங்கே நின்றது, அனைவரும் எதிர்பாராத ஒன்று.
கருணாகரனும், நிவேதாவும் அதிர்ச்சி அடைந்தனர்.

கார்த்திகேயன் மெதுவாக முன் வந்து,
“நான் வீட்டுக்கு கிளம்பும்போது உன்னை அங்க பார்த்தேன். அங்கிருந்து எங்கே போகிறாய் என்று தெரிந்துகொள்ள பின்தொடர்ந்து வந்தேன் எல்லாம் நிவேதாவோட பாதுகாப்புக்காகத்தான்… போன முறை நடந்த மாதிரி இந்த முறை நடக்க நம்ம விடக்கூடாது…” என்ற அவனது குரலில் மென்மையும், கூர்மையும் கலந்திருந்தது.

கருணாகரன் அதனைக் கேட்டதும்,

“அதுவும் சரிதான் நாம ஜாக்கிரதையாக தான் இருக்கணும் நிவேதா பார்த்தியாம்மா கார்த்திகேயனுக்கு உன்மேல இவ்வளவு அக்கறைனு இனிமே இப்படி எல்லாம் செய்யாதே சரி உங்க அம்மா கோவிச்சுக்கிட்டு போயிட்டா நான் என்னனு போய் பார்க்கிறேன் நீயும் போய் தூங்கு..” என்று கூறியதும்,

“சரி சார் நானும் கிளம்புறேன்..” என்றான் கார்த்திகேயன்.

அதனை கேட்டு தலையசைத்து விட்டு அங்கிருந்து விலகிச் சென்ற கருணாகரனைப் பார்த்தபடி நின்ற நிவேதா தானும் தனது அறைக்குச் செல்ல எத்தனிக்கும் வேளையில், கார்த்திகேயன் கேட்ட ஒரு கேள்வியில் அதே இடத்தில் ஆணி அடித்தாற் போல் கால்கள் அசையாமல் சிலையென நின்றாள்.

“நிவேதா உங்ககிட்ட தான் கேட்கிறேன் யார் அந்த டாக்டர் யாரைப் பத்தி டாக்டர் கிட்ட பேசிட்டு இருந்தீங்க..?” என்று அவன் மீண்டும் ஒவ்வொரு வார்த்தைகளாக அழுத்திக் கூற,

அதே இடத்தில் அசையாமல் என்ன பதில் கூறுவது என்று புரியாமல் விழி பிதுங்கியபடி உதடுகள் தந்தியடிக்க,

“அ..து அது… வந்..வந்து..” என்று உளறிக் கொண்டிருந்தாள்.

கார்த்திகேயன் அவள் முன்னே வந்து கடினமாக,
“நிவேதா… இப்போ என்ன பொய் சொல்லலாம் என்று யோசிச்சுக் கொண்டிருக்கிறீங்களோ..! ம்ம்.. சீக்கிரம்  உண்மையைச் சொல்லு..”

அவளது உதடுகள் நடுங்கின. சொல்ல வேண்டிய வார்த்தை தொண்டையில் சிக்கிக் கொண்டது.
அவளது கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்தன.

வராத புன்னகையை தனது வதனத்தில் கடினப்பட்டு போலியாக வரவைத்தவள்,

“அது கார்த்திகேயன்… நீங்க சந்தேகப்படுற மாதிரி எதுவும் இல்ல நான் ஏன் உங்க கிட்ட பொய் சொல்ல உண்மையிலேயே என் பிரெண்டோட அம்மாக்கு  நீண்டநாளா உடம்பு சரியில்லாமல் ஹாஸ்பிடல்ல இருந்தாங்க அதுதான் அவ்வப்போது விசாரிக்கிறேன். வேற எதுவும் இல்லை…” என்று கூறியவளது குரலில் உறுதியைக் காட்ட முயன்றாலும், தொண்டையின் நடுக்கம் குறையவில்லை.

கார்த்திகேயன் அவளது கண்களை நேராகப் பார்த்தான். அந்த பார்வை கத்தியைப் போலக் கூர்மையாய் இருந்தது. அவன் எதுவுமே பேசவில்லை ஆனால் அவனது பார்வையை கூறியது ‘நீ சொல்வது நம்பும்படி இல்லை..’ என்று,

நிவேதா உள்ளுக்குள் ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள்.

“சரி நிவேதா ரீனா இறந்து போனதை பற்றி உனக்குத் தெரியுமா..?”

“ரீனாவா.. அது யாரு..?”

“சரி விடு.. நான் போயிட்டு வரேன்..”

“அப்பா தப்பிச்சேன்…” என்று மனதில் நினைத்துக்கொண்டவள், சரி என தலை அசைத்து அவனை வழி அனுப்பி வைத்தாள்.

ஆனால் கார்த்திகேயனின் மனதில் சந்தேகத்துக்கான விதை விதைக்கப்பட்டுவிட்டது.
“நிவேதா ஏதோ பெரிய ரகசியத்தை மறைக்கிற மாதிரி இருக்கு

அவளோட அம்மா, அப்பாகிட்ட யாரோ ஃப்ரெண்டுக்கு உடம்புக்கு முடியலன்னு சொன்னா ஆனா என்கிட்ட ஃப்ரெண்டோட அம்மாக்கு உடம்புக்கு முடியலன்னு சொல்றா அப்படி இருக்கும்போது அவளோட நெருங்கின நண்பி ரீனாவோட இறப்பு ஞாபகம் இல்லையாம்

இத எப்படி நம்புறது நிவேதாவுக்கு உண்மையிலேயே நினைவு திரும்பி விட்டதா இல்லன்னா எங்ககிட்ட நடிக்கிறாளா கூடிய சீக்கிரம் எல்லாத்துக்கும் பதில கண்டுபிடிக்கிறேன்..” என்று சிந்தித்தவன் உடனே அவ்விடத்தை விட்டு காரில் ஏறி வீட்டுக்குச் சென்றான்.

நிவேதா தனியாக மாடியில்  நன்றி கார்த்திகேயன் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தவளது உள்ளம் முழுதும் குழம்பியிருந்தது.
“இன்னும் எவ்வளவு நாள்தான் இப்படி பொய் சொல்லிக்கிட்டே இருப்பேன்? உண்மையை ரொம்ப நாள் மறைத்து வைத்திருக்க முடியாதே..!” என்று உளைக்களத்தில் நிற்பவள் போல மனதிற்குள் மறுகினாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!